சிறுகதை: கொடியின் நிழல் - டானியல் ஜீவா -
* ஓவியம் AI
கடந்த கால கசப்புகளை மனதிற்குள் விழுங்கியிருந்த சைமனுக்கு கொஞ்ச நாட்களாகத்தான் அவனிடமிருந்து அந்த எண்ணங்களும் நினைவுகளும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி இருந்தன. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அவன் கொடியின் மீது கொண்ட அளவற்ற பிரியமே. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்ற சைமனுக்கு ;ஓய்வு நேரம் என்பது மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மேசன் வேலைக்கும், தச்சு வேலைக்கும் போய் வருவான். அப்படிப் போய் வருகிற வருமானத்தில் பெரும் பகுதியை அவனுடைய அம்மாவிடம் கொடுப்பான். ஒரு குறிப்பிட்ட தொகையை அவனுடைய கைச் செலவுக்கு வைத்துக் கொள்வான். இவ்வளவு பிரச்சனையும், சிக்கலும் நிறைந்து இருக்கின்ற அவனுடைய வாழ்க்கையில் மலர்க்கொடி மீது தீராக் காதல் எப்படியோ வளர்ந்து உறைந்து கிடக்கிறது. எப்போது அவளைப் பார்க்கின்றானோ அப்போதெல்லாம் தன் உயிரில் அவள் உயிர் உரசியது போல் உணர்வான். அலையற்ற பெண் கடலின் மீது ஒரு சருகொன்று மிதந்து தன் உடல் முழுவதும் ஊர்ந்து செல்வது போல் தோன்றும். அவள் அவனைக் கடந்து செல்லும் போகும் போதெல்லாம் தன்னுள் ஊறும் உயிர் ஒன்று எப்படி தன்னிடம் இருந்து விலகிப் போகும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான். காலத்தையும் நேரத்தையும் கடந்து செல்ல முடியாமல் அவள் நினைவில் ஊறிக் கிடந்தது அவனுடைய உணர்வும் உடலும் .
அவன் ஒவ்வொரு நாளும் அதிகாலை ஐந்தரை மணிக்கு தொழிலுக்கு எழுந்து விடுவான். அதனால் அவனது. கண்களில் தூக்கக் கலக்கமும் எரிச்சலும் கலந்த உணர்வே எப்போதும் ஏற்படும். உடல் முழுவதும் சோர்வாக உணர்வான். கண்களின் கீழே கரு வளையம் படர்ந்திருந்தது.
புருவங்களின் இடையே இருக்கும் மென்மையான இடத்தில் தோல் தடித்து கண்டல் காயத்துடன் ஒரு வீக்கம் தோன்றியிருந்தது. அந்த வீக்கம் முகத்தில் பரவியதால் அவன் வேறு ஒருவன் போல் காணப்பட்டான். முந்தைய நாளில் காலையில் களங்கட்டி தொழிலுக்குப் போகும் போது வள்ளத்தில் நின்று மரக்கோலை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு தாங்கும் பொழுது சமநிலை இழந்து விழுந்து, அடிபட்ட காயம் அது. அவனுக்கு இப்படி அடிக்கடி விழுந்து காயப்படுவது அவனுக்கு ஒரு சாதாரண விடயமாகவே மாறிவிட்டது. யாழ்ப்பாணத்துக் கடலோரக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த சைமனுக்கு, கடல் மீது தீராத பற்று ஏற்படுவது சாதாரண விஷயம்தான். ஆனால் கடலின் அலைகள், அவற்றில் மறைந்திருக்கும் மர்மங்கள், கடல் சுழிகளில் காணாமல் போகும் மனிதர்கள், கடல் சுணை நீர் உடலில் படும் போது ஏற்படும் வலி இவற்றைப் பற்றித் தானாகவே அவன் எண்ணும் போது அவனது மனதில் அவனை அறியாமலே ஒரு பயம் தோன்றி மறையும். ஆயினும் மீன்களின் பாடலும், பறவைகளோடு பேசுவதும் கடலுடன் கூடி வாழ்வதும் அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான மகிழ்ச்சி தரும் விடயங்களாகவே இருந்தன.