ஆரோக்கியமான செயற்பாட்டினை வரவேற்போம்! -நந்திவர்மப்பல்லவன் -
அமைச்சர் விஜித ஹேரத்
அண்மையில் இலங்கையின் பாராளுமன்றத்தில் வடகிழக்கில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை மையமாக வைத்து தென்னிலங்கை அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர் ஆகியோர் மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுத்து அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசைக் கடுமையாகச் சாடினர். அநுரவின் அரசு தமிழர் சார்பான அரசு என்பது போன்றதொரு தோற்றப்பாட்டினை எழுப்புவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைப்பதற்குக் கடும் முயற்சியெடுத்தனர். இதனை அநுர அரசு முளையிலேயே கிள்ளி எறிந்தது வரவேற்கத்தக்கது.
இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனேயே இனவாத அரசியல்வாதிகளை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுத்தார். இவ்விதம் இனவாதத்தைத் தூண்டியவர்களை இனவாதிகள் என்றார். நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக நடைபெறும் நினைவு கூரல்களைச் செய்யும் உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. அவற்றைத் தடுக்க முடியாது. சட்டங்களை மீறுபவர்களைக் காவல்துறை கையாளும் என்று அவர் தனது பதிலடியில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் இனவாத அரசியல்வாதிகளின் திட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டது.