மே 29,2022 அன்று அமரர் சண்முகம் சபேசன் ( 1954 – 2020 ) இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் ! - முருகபூபதி -
எழுத்தாளர் – ஊடகவியலாளர் – தமிழ்த்தேசிய பற்றாளர் சண்முகம் சபேசன் அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்து நாளை மே 29 ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றது. அதனை முன்னிட்டு, நாளைய தினம் மெய்நிகரில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியா, கன்பரா தமிழ் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த மெய்நிகர் அரங்கில் மூத்த ஊடகவியலாளர் திரு. இரா. சத்தியநாதன் ஏட்டுச்சுவடி முதல் எண்ணிம ஊடகங்கள் வரையில் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.
சண்முகம் சபேசன் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான சபேசன், அவுஸ்திரேலியா மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவாறு, மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிய தமிழ்த் தேசிய பற்றாளர். 3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பினார். அவ்வாறு எழுதி ஒலிபரப்பிய ஆக்கங்கள் நூற்றுக்கணக்கானவை. அவுஸ்திரேலியாவில் 1989 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்தவர். அற்பாயுளில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மெல்பனிலேயே மறைந்துவிட்டார்.