'தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (4 -9) - ஜோதிகுமார் -
4
வேறு வார்த்தையில் கூறுவோமானால், வரலாறு வரலாறாக–அதாவது ஆதிக்க சக்திகளால், தந்திரோபாய ரீதியாக, களமிறக்கி விடப்பட்ட மேற்படி நகர்வுகளால், இலங்கையின் அரசியல் சுவாத்தியமே சீர்குலைந்து மாற்றமுற்ற ஒரு நிலையில், இனவாத ஒடுக்குமுறைக்கான சுவாத்தியங்களும் அதன் பதில் விளைவான தேசியத்திற்கான முகிழ்ப்புகளும், களமிறக்கப்பட்ட நிலையில், இவை பொறுத்த மார்க்சிய நிலைப்பாடுகள் யாவை என்பதுவே கேள்வியானது.
சிறுபான்மை தேசிய முதலாளிகளும், பெருந்தேசிய முதலாளிகளும் (அல்லது ஒடுக்கும் சமூகத்தின் ஆதிக்க சக்திகளும் ஒடுக்கப்படுவோர் சமூகத்தின் ஆதிக்க சக்திகளும்) கைக்கோர்த்திருப்பதை தன் வாழ்நாள் முழுவதும், (தன் பல்கலைக்கழக வாழ்நாள் முடிந்ததிலிருந்து) நாள்தோறுமாய் பார்த்து வந்த ஒரு மனிதர், ஒரு பொழுது முடிய மறுநாள் காலை, தன் விதிமுறைகளை மாற்றியமைத்துக் கொள்வார் என எதிர்ப்பார்ப்பது–சற்றே அதிகமானது. இங்கேயே டானியலின் மேற்படி பத்திரிக்கை குறிப்புகள் முக்கியத்துவப்பட்டு போகின்றன.
இருந்தும் கார்ல்மாக்ஸ்–எங்கெல்ஸ்–லெனின் ஆகியோரின் விடயங்களில், இவ்வகை மாற்றங்கள், சடுதியாக, அதிலும் தக்க தருணங்களில் கைப்பற்றப்பட்டது என்பதும் உண்மையே. அதாவது, ஆட்சியாளர்களின் நடைமுறை தந்ரோபாயங்களை, மிக நுணுக்கமாக பின்தொடர்ந்து, அதற்கூடு உய்த்தெறியும் கூரிய அறிவுத்திறன் கொண்டு, வரலாற்று அனுபவங்களிலிருந்து தம் நகர்வுகளை வகுத்த மேதைமை அவர்களுடையது. இதனுடன் கூடவே, தத்துவம்-அரசியல் விஞ்ஞானம்-பொருளாதாரம் ஆகிய அனைத்து துறைகளையும் அரவணைக்கும் விசாலித்த பார்வையையும் அவர்கள் பின்புலமாகவே கொண்டிருக்க செய்தனர் என்பதும் குறிக்கத்தக்கதே. மறுபுறம், 1971ஐ அடுத்து வந்த காலப்பகுதியில், தூவப்பட்ட இந்நச்சு விதைகளின் மொத்த அறுவடை 1977 ஆகியது. இதன் பரிமாணங்கள் - இருந்த மிச்ச சொச்ச, இடதுசாரி சிந்தனைகளையும் நிர்மூலமாக்குவதாகவே அமைந்திட்டன.