`முள்ளும் மலரும்’ திரைப்படம் – பிளாஷ்பேக்! - கே.எஸ்.சுதாகர் -
முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆயினும் 1980 மட்டில் தான் எனக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தெல்லிப்பழை துர்க்கா தியேட்டருக்கு அப்பொழுதுதான் முள்ளும் மலரும் வந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் மனதை ஒரு உலுப்பு உலுப்பி உறங்கவிடாமல் செய்த திரைப்படம் இது. இல்லாவிட்டால் துர்க்கா சினிமாத் தியேட்டரின் அருகேயிருந்த நூல்நிலையத்திற்கு ஒரு பைத்தியக்காரன் போல அடிக்கடி சென்றிருப்பேனா? நூல்நிலையத்தையும் தியேட்டரையும் பிரித்து நிற்கும் வேலிக்குள்ளால் பாய்ந்து வரும் பாடல்களையும், திரைக்கதையை நினைவூட்டும் இசைவெள்ளத்தையும் காது குடுத்துக் கேட்பதில் ஒரு அலாதி இன்பம் பிறக்கும். அடிக்கடி வேலிக்கருகே நின்றால் பைத்தியம் பிடித்துவிட்டதென ஆக்கள் நினைத்துவிடுவார்கள் என்பதற்காக இடையிடையே லைபிறறிக்குள் சென்று பேப்பரைப் புரட்டுவேன். ஆனால் மனம் திஜேட்டருக்குள் குதித்து நிற்கும். உறி அடிக்கும் காட்சி, விஞ் இயங்கும் காட்சி, உறக்கத்தில் இருக்கும் வள்ளிக்கு காளி மருதாணி இடும் காட்சி என இசைவெள்ளம் என்னை மீளவும் வெளியே கொண்டுவந்துவிடும். அது நடிகர்களின் தனித்தன்மை வாய்ந்த குரல், அவர்களின் தோற்றத்தை என் மனக்கண் முன் கொண்டுவந்துவிடும்.
`முள்ளும் மலரும்’ கல்கி இதழ் நடத்திய வெள்ளிவிழா நாவல் போட்டியில் உமாசந்திரன் எழுதி முதல் பரிசு பெற்ற நாவல். இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் ரஜனிகாந்(காளியண்ணன்/திரைப்படத்தில் காளி), சரத்பாபு(குமரன்), ஷோபா(வள்ளி), படாபட் ஜெயலட்சுமி(மங்கா) போன்றோர் முன்னணிக் கதாபாத்திரமேற்று நடித்தார்கள். நாவலில் முனியாண்டி, மாயாண்டி, அங்காயி என்ற பாத்திரங்கள் வருகின்றன. திரைப்படத்தில் குழப்பம் வருவதைத் தவிர்க்கும் முகமாக முனியாண்டிக்கு முருகேசன் என்ற பெயர் குடுக்கப்பட்டுள்ளது. முருகேசனாக வெண்ணிறாடை மூர்த்தி நடித்திருப்பார். படத்தை பாலு மகேந்திராவின் கமராவும், இளையராஜாவின் இசையும் உச்சிக்கு எடுத்துச் சென்றன.