வாசிப்பும் , யோசிப்பும்: முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி... - வ.ந.கிரிதரன் -
பதிப்பு விபரம் நாடகம் நான்கு. சி.மௌனகுரு, இ.முருகையன், இ.சிவானந்தன், நா.சுந்தரலிங்கம். கொழும்பு: நடிகர் ஒன்றியம் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம். மட்டுவில்) xxiv + 182 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 21*14 சமீ.
முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் ஈழத்துக் கவிதையுலகில் முக்கியமானதொரு நாடகம். 'நாடகம் நான்கு' என்னும் நூலில் இடம் பெற்றுள்ள நாடகங்களிலொன்று. இதனை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி.
இந்நாடகத்தின் முதல் மேடையேற்றம் 01-04-1969 அன்று கொழும்பு ஹவ்லொக் நகர் லும்பினி அரங்கில் , மெளனகுருவின் இயக்கத்தில் மேடையேறியது.
இந்நாடகத்தின் முக்கியமான கரு: மானுட வரலாற்றில், ஆதிச்சமுதாய அமைப்பில் பொதுவுடமை சமுதாய அமைப்பு முறை நிலவியது. ஆனால் காலப்போக்கில் அவ்விதம் நிலவிய அமைப்பு வர்க்கம், சாதி, இனபேதம் மற்றும் நிறபேதம் போன்ற பிரிவுகளாகப் பிளவுண்டுவிடுகின்றது. இவ்விதம் பிளவுண்டு கிடக்கும் மானுட சமுதாயத்தை மீண்டும் அந்தப்பொதுவுடமை சமுதாய அமைப்பு நோக்கி, உழைக்கும் மானுடர் வழி நடத்திச்செல்வர் என்பதை மையமாக வைத்துப்பின்னப்பட்ட நாடகமே 'சங்காரம்'.