
மாற்றம்:
“முதல் மரியாதை படப்பிடிப்பை மைசூரில் நிகழ்த்தினேன். மூன்று நதிகளும் சங்கமிக்கும் அந்த இடம்… அந்த சூழல்… செடி, மரம், கொடி, மண், ஆகாயம் - அனைத்தையுமே நான் மனம்விட்டு காதலித்தேன்…இது போலத்தான், நடிகர் திலகம் சிவாஜியும். இறுதி நாள்… நாங்கள் மூட்டை முடிச்சுடன் கிளம்பிக் கொண்டிருக்கின்றோம்… சிவாஜி கணேசன் அவர்கள் முன்னாடியே சென்று விடுவதாகவும்,இறுதி படப்பிடிப்பை நான் மற்றவர்களுடன் இருந்து, முடித்து, இரண்டொரு நாட்களில் பின்னாடி வந்து சேர்ந்து விடுவதாகவும் ஏற்பாடு… சிவாஜி கணேசன் இறுதியாக வெளியே வந்த போது…அவரது கண்கள் சிவந்து கலங்கி இருந்தன… அண்ணே… எதுக்கு… இது என்றேன்… தெரியல ராசா… இங்க உள்ள சூழல என்னால விட்டு பிரிய முடியாம இருக்கு… இங்குள்ள மரம்
செடி, கொடி, அத்தனையும் என்னோட பேசுற மாதிரி இருக்கு… அவரது நா தழுதழுத்தது… இவன் கலைஞன், மகத்தான கலைஞன் என தீர்மானித்துக் கொண்டேன்”.
இப்படித்தான் - தான் சந்திக்கும் அனைத்து மனிதர்களிடையேயும், அவர்களின் பங்களிப்புகளை,சரியாக அடையாளம் கண்டுபிடித்து வரவேற்கும் மனிதர்களில் பாரதிராஜாவும் ஒருவரானார். ஒருவேளை சிவாஜி சம்பந்தமான இவரது கூற்று, ஓர் மிகை கூற்றாகக் கூட இருக்கலாம்… ஆனால் விடயம்… பொதுவில், தங்களின் வெற்றிகளை, இவ்வகை மனிதர்கள், தங்களில் அடையாளப்படுத்திக் கொள்வதை விட, பிற மனிதர்களில் அவற்றை ஏற்றி விடுவதை, தமது மைய புள்ளியாகக் கொண்டுள்ளார்கள். கார்க்கி கூறுவான்: “பாருங்கள் நண்பர்களே… எத்தனை மகா கவிகளை, ‘நான்’ என்ற இந்த பிலிஸ்டைன் உணர்வு சிதைத்தழித்து விட்டது” என. உண்மைத்தான். பெரிய மனிதர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வழியில் இந்த அதால பாதாளத்தை ஏதோ ஒரு வகையில் கடக்கவே செய்கின்றனர். வெற்றியும் கொள்கின்றனர். இது, அவர்களின் சுவாசத்தை போன்றது -அவர்கள் இந்த ஆகாசத்தை மனம் விட்டு காதலிப்பதை போன்றது.
பாரதிராஜாவை பொறுத்தவரை, தனது வெற்றியை, இப்படியாய் பிறரிடம் தந்து விடுவதில் மிகுந்த சமர்த்தகராக விளங்கினார் எனலாம். எனது திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமே பாக்கியராஜாவின் திரைப்பட வசனம்தான் என நா கூசாமல் சொல்லி விடுவார் மனிதர். “அவனைப் போல திரைகதை வசனம் எழுத யாருக்கு வரும்…” என்பார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் “எனது திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமே இளையராஜாவின் இசைத்தான்” “என் படங்களுக்கு, அவன் ஒரு புது மரியாதையை, புது பரிமாணத்தை ஏற்படுத்தினான்…” என்பார்.
இவற்றை எல்லாம் வெறும் வார்த்தைகள் என்று கொள்வதற்கில்லை. அவரது மனதில் இருந்து, மனதோடு ஊறி வெளிவரும் பண்பிது. இளையராஜாவின் வார்த்தைகளில் கூறுவோமென்றால்: “முதல் மரியாதை படம் எனக்கு மொத்தமாய் பிடித்ததாய் இருக்கவில்லை… அதை வெளிப்படையாக பாரதிராஜாவிடமே, நான் கூறி இருந்;தேன்…. இருந்தும் படத்திற்கு இசையமைத்தேன்… இறுதி காட்சி… நான் அமைத்திருந்த இசையை போட்டுப் பார்க்க அவனை அன்று அழைத்திருந்தேன்… பார்த்தான்… பின், ஒன்றுமே பேசாது என் கைகளை கட்டிப் பிடித்தவாறே கண்ணீர் உகுத்தான்… பிடிக்காமலேயே இப்படி இசை போட்டிருக்கியே என்று சொல்லி அழுதான் அவன்..”. நடித்து வேறு காட்டினார் மனிதர்.