பானுபாரதியின்(நோர்வே) உன்னத சங்கீதம்! - நடேசன் -
நோர்வே மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட பானுபாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்தபோது ஒவ்வொரு கவிதையையும் வாசித்து விட்டு கண்ணை மூடியபடி ஆழ்மனத்தில், ஓர் ஆணாகச் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் உலாவிவிட்டே மீண்டும் அடுத்த கவிதையை வாசித்தேன். மிகவும் ஆழமான, ஆனால் நமக்குச் சமீபமான விடயங்களை அந்தக் கவிதைகள் பேசுகின்றன.
மூலக்கவிதைகளை நான் படிக்காதபோதும், மொழிமாற்றம் மிகவும் அழகாக, அமைதியாக மனதில் வந்து குளத்தின் கரையின் அலையாக ஈரலிப்பைத் தருகின்றன. பெண்களின், பெண்களுக்கே உரிய காதல் , தாய்மை உணர்வுடன் எழுதப்பட்ட கவிதைகள், அதாவது அகத்தின் வெளிப்பாடுகள் என்றாலும் சில பட்டினி, போர் எனும் புறவய வெளிபாட்டை பேசுபவையாக உள்ளன. அவை பெண் குரலாக நமக்குக் காதில் ஓங்கி அறைகின்றது. ஒரு குறுகிய இனமோ நாடோ அற்று மொத்தமான மனித வாழ்வின் தேறலை பிளிந்து நமக்குத் தருகின்றன. ஆண்கள் சிந்திக்காத கோணத்தில் இருந்து அவைகள் வருவதே எனக்குப் பிடித்தது.
முதல் கவிதையே சிறு குழந்தைக்குத் தலையில் ஊற்றிய ஒரு குடம் வெந்நீர்போல் என்னைத் திக்கு முக்காடப்பண்ணியது.