நனவிடை தோய்தல்: போட்ஸ்வானா - கே.குருபரன் -
நான் ஆப்பிரிக்காவில் 17 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். அதில் 16 ஆண்டுகள் போட்ஸ்வானாவில். எனது வாழ்க்கையின் வசந்த காலம் அது. எனது இளமைக்காலமாக அமைந்தது மட்டுமல்லாது குறிப்பிடத்தக்க சேமிப்பு, நல்ல ஓய்வு நேரம், உயர்ந்த வாழ்க்கைத்தரம், நட்புறவான மக்கள், சட்டம் ஒழுங்கோடு கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை, மோசமில்லாத காலநிலை என்று நாம் வாழ்ந்த சூழலும் அதற்கு பெரும் பங்கு வகிக்கிறது. எமக்கே இந்த நிலைமை என்றால், ஐரோப்பியர் பற்றி சொல்லத் தேவையில்லை. அங்கு அவர்கள் முதல்தர குடிமக்கள் என்பதோடு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு போட்ஸ்வானா ஒரு சொர்க்கபூமி. அவர்களைப் பற்றி உள்ளூர் வாசிகள் சுவாரசியமாக ஒன்று சொல்வார்கள். குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின் "ஊருக்கு போகப்போகிறேன், இனியும் உங்களோடு இருந்து மாரடிக்க என்னால் முடியாது" என்று கூறி விட்டு செல்லும் அவர்கள், இரண்டு மாதத்தில் பெட்டி படுக்கையுடன் திரும்ப வந்து நிற்பார்கள் . ஏன் எனக் கேட்டால், "இங்கு வாழ்ந்த எம்மால் அங்கே போய் வாழ முடியாது" என்பார்களாம்.
போட்ஸ்வானாவின் நிலப்பகுதி, ஒண்டாரியோவிற்கு சமனானது. ஆயினும் சனத்தொகை 2.5 மில்லியன் மட்டுமே. கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 1000 m உயரத்தில் உள்ள சமவெளி பூமியான அதன் சராசரி மழை வீழ்ச்சி 500-700 mm. இங்கு சாரீரப்பதன் மிகவும் குறைவு என்பதால் மிகவும் வறண்ட பூமியாக காட்சி தரும். அரசியல் பொருளாதார நிலை பற்றிக் கூறுவதானால் இதனை ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் எனலாம். சிங்கப்பூருக்கு மனித வளம் போல், போட்ஸ்வானாவிற்கு Diamond, Nickel, Copper போன்ற கனிம வளங்கள் உதவுகின்றன. 1966 இல் சுதந்திரம் பெறும்போது தனிநபர் வருமானத்தில் உலகத்தின் கடை நிலையில் இருந்த போட்ஸ்வானா, இப்போது ஆப்பிரிக்காவின் உச்சியில் உள்ளது.