மணிமேகலையின் பௌத்த துறவின் பின்புல அரசியல் - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வுச் சுருக்கம்
தன்னுடைய காதலன் கோவலன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட மாதவி தான் துறவு மேற்கொண்டதோடு தன்னுடைய மகள் மணிமேகலையையும் துறவியாக மாற்றினாள். வைணவம், சைவம், சமணம் எனப் பல மதங்கள் இருந்த நிலையில் குறிப்பாக கோவலன் சமண சமயத்தைப் பின்பற்றுபவனாக இருந்த நிலையில் ஏன் அவள் துறவிற்குப் பௌத்தத்தைத் தேர்வு செய்தாள் என்ற வினா இங்கு எழுகிறது. அத்துடன், மாதவி பௌத்த துறவியாக மாறினாள் பௌத்த சமயத்தினுடைய கருத்துக்களைத் தெரிந்து கொண்டாள். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு பௌத்த துறவியாகவே வாழ்ந்து இறந்து (அல்லது முக்தி அடைந்தாள்) போனாள் என்று இல்லாமல் அவள் பௌத்த துறவியாக மாறிய பின்னணியில் அவளிடம் ஏன் அமுதசுரபி என்ற பாத்திரம் வந்து சேருகிறது? அந்தப் பாத்திரத்தைக் கொண்டு அவள் ஏன் மக்களுடைய பசிப்பிணியைப் போக்குகிற அறப்பணியை மேற்கொண்டாள்? என்ற கேள்விகளும் எழுகின்றன.
மேலும், அமுதசுரபி என்ற பாத்திரம் பார்ப்பனர்களால் ஆபுத்திரனது உணவுப் பாத்திரத்தில் கல் போட்டுத் துரத்தப்பட்ட பின்னர் அவனுக்கு சிந்தாதேவி என்ற பெண் தெய்வத்தால் கொடுக்கப்பட்டது என்பதும், அப்படிக் கிடைத்த அந்தப் பாத்திரந்தான் மணிமேகலைக்கு மணிபல்லவத் தீவில் உள்ள கோமுகிப் பொய்கையில் கிடைத்தது என்பதும் முக்கியமாக கவனிக்கத்தக்கன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கிறபொழுது ஏன் இந்த தொடர்ச்சியான செயல்பாடுகள் எல்லாம் நிகழ்ந்தன என்பதும் அவற்றைக் காப்பிய ஆசிரியர் கூறுவதற்கான நோக்கம் என்ன? என்பது குறித்தும் நாம் விரிவாக ஆராய வேண்டி உள்ளன. அத்தகைய ஒரு விரிவான தேடலை முன்வைக்கிறது இக்கட்டுரை.