சிறுகதை: அடர் இருள் என்செயும் - ஶ்ரீரஞ்சனி -
- ஓவியம் - AI -
அவசரமாகக் குளித்துவிட்டு வினோ வெளியில் வந்தாள். ஆசைதீரக் குளிப்பதற்கோ, ஆற அமரவிருந்து சாப்பிடுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை என்ற நினைவில் கசிந்த கண்ணீர்த் துளிகள் அவளின் முகத்திலிருந்த நீர்த்திவலைகளுடன் சேர்ந்துகொண்டன. ஈரமாயிருந்த முகத்தையும் உடலையையும் துவாயினால் உலர்த்தியபடி, குளியலறைக் கண்ணாடியில் முன் நின்றவளுக்கு தான் வரவர அழகில்லாமல் போவதாகத் தோன்றியது. கன்னங்கள் மேலும் உட்குழிந்தும், கண்களின் கீழிருந்த கருவளையங்களின் அளவு பெருத்துமிருந்தது. சர்மிக்கு வரவர என்னைப் பிடிக்காமல் போவதற்கு இவையும் காரணமோ என மனதிலெழுந்த எண்ணம் அவளை மேலும் அழுத்தியது.
அன்றையப் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக, வினோ வேலையிலிருந்து ஒரு மணிநேரம் முன்னதாக வந்திருந்தாள். சர்மி வகுப்புக்கு நேரத்துக்கு வரவில்லை எனப் பாடசாலையிலிருந்து இந்த மாதம் இரண்டு தடவை அழைப்பு வந்திருந்தது. அவளின் இந்தத் தவணைத் தேர்ச்சியறிக்கையும் திருப்தியாக இருக்கவில்லை. இன்றைய சந்திப்பு நிறைய அசெளகரியம் தருவதாக இருக்கப் போகிறதென்ற யதார்த்தம் அவளின் மனதை நெருடியது கூடவே சர்மியுடன் முதல் நாளிரவு நடந்த வாக்குவாதமும் அவளின் நினைவுக்கு வந்தது. சர்மியுடனான பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வுகாணலாம் என்பது உண்மையிலேயே அவளுக்குத் தெரியவில்லை. தகப்பன் இல்லாத பிள்ளை என்ற என அவள் கேட்டதையெல்லாம் நிறைவேற்றி அவளைச் செல்லமாக வளர்த்ததுதான் பிழையா?
“பத்தாம் வகுப்புக்கு வந்திட்டாய். கொஞ்சமெண்டாலும் பொறுப்பு வேண்டாமே? ஒழுங்காய்ப் படிச்சால்தானே யூனிவசிற்றிக்குப் போகலாம், ஒரு நல்ல வேலையைத் தேடலாம். அல்லது என்னைப்போல பஃற்ரரி வேலையிலைதான் மாயவேண்டியதுதான்!” சர்மி பற்றிய கரிசனையுடன்தான் அவள் சொன்னாள்.
“அம்மா, என்னால முடிஞ்சதைத்தான் நான் செய்யலாம். உங்களுக்குக் கெட்டித்தனம் இருந்தாதானே, அதை என்னட்டை நீங்க எதிர்பாக்கலாம்?” கொம்பியூட்டரில் விளையாடிக் கொண்டிருந்த சர்மி, அதிலிருந்த கண்களை விலக்காமல் எள்ளலாகப் பதிலளித்தாள்.
வேலைமுடிந்த களைப்புடன் வந்திருந்த வினோவுக்குச் சர்மியின் எதிர்வாதம் கோபத்தைக் கொடுத்தது. சடாரென்று அவளின் தோளில் எட்டித் தட்டினாள். “யோசிச்சுக் கதை. பொம்பர் போடுற குண்டுகளுக்கேயும், செல்லடிகளுக்குள்ளேயும் வாழ்ந்துகொண்டு நாங்க நிம்மதியாய்ப் படிச்சிருக்கேலுமே. எவ்வளவு கஷ்டப்பட்டனாங்க எண்டது உனக்கு விளங்கினால்தானே. உன்னைச் சொகுசா இருக்கவிட்டிட்டு எல்லாத்தையும் நான் செய்யிறன். கவனமாய்ப் படி எண்டதைத் தவிர வேறை என்னத்தை நான் உன்னட்டைக் கேட்கிறன்? மேக்கப் போட்டுக்கொண்டு சுத்துறதிலைதான் உனக்கு அக்கறையே தவிர, படிப்பிலை இல்லை,” சிவந்துபோன வினோவின் முகத் தசைகள் துடித்தன. மூச்சு வாங்கியது. ஒரு நிமிடம் ஆழமாக மூச்செடுத்தவள், தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, “எழும்பு, பிள்ளை. முதலிலை வீட்டுப் பாடங்களைச் செய். இந்த அறையை ஒதுக்கு. பிறகு விளையாடலாம்,” சர்மியைப் பார்த்துக் கனிவாகக் கூறினாள்.