நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

ஆண், பெண் ஈர்ப்பு ஒரு மனித வாழ்வியலை உருவாக்கித் தந்துள்ளது. இதன் ஊற்றால் அவர்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கிக் குடும்ப வாழ்வைத் தொடங்கி, உற்றார் உறவினர் என்று குடும்பமாகச் சுற்றியிருந்து வாழ்வர். ஒருவரை ஒருவர் நேசித்து, அன்பு சொரிந்து, பாசம் காட்டி, உதவு கரம் கொடுத்து, அறநிலை நின்று வாழ்வதையே விரும்பினர். அவர்கள் எட்டச் சென்று தனித்து வாழார். இவ்வண்ணம் வாழ்ந்து பழகியவர்கள் ஒரு சில நாட்கள்தானும் பிரிந்து சென்று வாழவிரும்பமாட்டார். இனித் தொல்காப்பியu; காட்டும் பிரிவிற்குரிய நிமித்தங்களையும் காண்போம்.

தொல்காப்பியம்.
இடைச் சங்ககாலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியம் என்ற நூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) எனும் புகழ் பூத்த புலவர் யாத்துத் தந்தனர். அதில் அவர் பிரிவொழுக்க முறைகளையும்,  பிரிவுக்குரிய நிமித்தங்களையும் காட்டியுள்ளார். கல்வி கற்பதற்காகப் பிரிதல், பகை காரணமாகப் பிரிதல், தூது போவதற்காகப் பிரிதல் ஆகிய மூவகைப் பிரிதல்களுக்கும் தொல்காப்பியச் சூத்திரம் அமைத்துதுத் தந்துள்ளார்.

'ஓதல் பகையே தூதுஇவை பிரிவே.' – (பொருள். 27)

மேற் காட்டிய மூவகைப் பிரிதலில், கல்வி கற்பதற்காகப் பிரிதலும், தூது செல்வதற்காகப் பிரிதலும் ஆகிய இரு பிரிதல்களும் உயர்ந்தோராகிய மக்களுக்கே உரியனவாமென்றும் கூறியுள்ளார். குணம், ஒழுக்கம், செல்வம், கல்வி, ஞானம் முதலியன நிறைந்த மக்களே உயர்ந்தவர்களாகக் கணிக்கப்பட்டனர்.

'ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன.' – (பொருள். 28)

மன்னன், மக்களைக் காப்பவனென்ற முறையில், பகை காரணமாகப் பிரியுமிடத்துத் தான்மட்டும் போதலும் உண்டு. தன்னொடு கூடிய படையுடன் போதலும் உண்டு. தான் தலைமையேற்றுச் செல்வதை 'பகை தணிவினைப் பிரிவு' எனவும், பிறர் தலைமையின்கீழ்ப் போதல் 'வேந்தர்க்குற்றுழிப் பிரிவு' என்றும் கூறப்படும்.

'தானே சேறலும் தன்னொடு சிவணி
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.' -  (பொருள். 29)

 

மேற்காட்டிய சூத்திரங்களில் மூவகைப் பிரிதல் பற்றிக் கண்டோம். மேலும், குறிஞ்சி, முல்லை, மருதம். நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் நிலைகொண்ட தெய்வங்களின் திருவிழாக் காரணமாகவும், இந்நால்வகை நிலங்களில் வாழ்கின்ற மக்களின் அறநெறி குன்றியவிடத்து, அவற்றை நீக்கி அறத்தை நிலைநாட்டுவதற்காகவும், வாழ்வதற்குப் பொருளீட்டுவதற்காகவும் தலைமகன் பிரிவு அமையலாமென்றும் சூத்திரம் வகுத்துள்ளார் தொல்காப்பியர்.

'மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பpழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே.' – (பொருள். 30)


தொல்காப்பியர் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை மக்கள் வாழ்ந்துள்ளனர். இவர்களில் அரசரைவிட அந்தணர் முதலிடத்தில் வைக்கப்பட்டு, மதிக்கப்பட்டும் உள்ளனர். தெய்வ வழிபாட்டை நிலைநிறுத்தற் பொருட்டான பிரிவில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகையினரும் பங்குபற்றலாமென்று சூத்திரம் அமைத்தார் தொல்காப்பியர்.

'மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே.' – (பொருள். 31)

மன்னன் செய்தற்குரிய காவல் தொழிலை அவனுக்கு உறுதுணையாக ஏவல் வழி நின்று வரும் வணிகரும், வேளாளரும் செய்வதற்கு உரிமையுடையோராவர். இதில் அந்தணர் விதிவிலக்குப் பெற்றுள்ளனர். அவர்கள் அறநெறி வாழ்முறைகளில் ஈடுபடுவர்.

'மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப.' – (பொருள். 32)

வணிகர், வேளாளர் ஆகிய இருவரில், உயர்ந்தோராகிய வணிகர் கல்வி கற்றல் நிமித்தம் பிரிதலும் உண்டாம் என்றும் சூத்திரம் அமைத்துள்ளார் தொல்காப்பியர்.

'உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான.' – (பொருள். 33)

தூதுபோதல் தொழில் வேந்தனுக்குரியது. ஆனால், வேந்தனால் வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் அதற்குரியவராக்கப்படின் அவர்களும் தூது போகலாம் என்று சூத்திரம் கூறுகின்றது. உரியவராக்கப்படல் என்பது அவர்கள் அமைச்சராக்கப்படல் என்பதாகும்.

'வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்திடன் உடைத்தே.' – (பொருள். 34)

மனித வாழ்வுக்குப் பொருள் இன்றியமையாதது. நாடுவிட்டு நாடுசென்று பொருள் தேடி வருவது அந்நாள் வழக்கம். வணிகரும், வேளாளரும் தம் குடும்பத்தாரிடமிருந்து பிரிந்து வேறு நாடுகள் சென்று பொருள் தேடி மீண்டும் வருவரென்று தொல்காப்பியம் கூறும்.

'பொருள்வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே.' – (பொருள். 35)

அந்தணரும் பொருள் தேடல் தொடர்பில் பிரியலாம். ஆனால் அவர்கள் தம் ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தி அதிலிருந்து வழுவாது இருத்தல் வேண்டும். ஆசாரமும், கல்வியும் அவர் தேடும் பொருளாகும்.

'உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான.' – (பொருள். 36)

களவொழுக்கத்தில் இருக்கும் பொழுது தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் வழக்கம் இல்லை. இல்வாழ்க்கையில் இணைந்தபின் தலைவன் தலைவியை  விட்டுப் பிரிந்து பரத்தையை நாடிச் செல்லும் வாய்ப்புகளும் ஏற்படும். இனி, அகப்பொருள் நூல்களில்  ஆறு வகைப்பட்ட பிரிவுகள் காட்டப்பட்டுள்ளன.  இறையனார் களவியல் என்னும் நூலில் அவ்வாறு தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.

'ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென;(று)
ஆங்க ஆNற அவ்வயிற் பிரிவே.' – (நூற்பா. 35)

1.கல்வியின் பொருட்டும், 2. நாடு காத்தற் பொருட்டும், 3. சமாதானம் செய்யும் பொருட்டும், 4. அரசன் கட்டளைப்படி ஏதாவதொரு நிமித்தத்தின் பொருட்டும், 5. பொருள் ஈட்டுதற் பொருட்டும், 6. பரத்தை காரணமாகப் பிரியும் பொருட்டும் ஆகிய ஆறு நிலைகளிலும் தலைவன் தலைவியை உடன் அழைத்துக்கொண்டு செல்லும் வழக்கம் இருந்ததில்லை.

உலகியல் வழுவாகிய பரத்தமை நான்கு இனத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வர்க்கும் உரித்து என்றும், அவ்வழிப் பிரியும் பிரிவு, நிலம் பெயர்தல் இல்லை என்றும் தொல்காப்பியமும், இறையனார் களவியலும் கூறும்.

'பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே
நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்.' -  (பொருள். 220)


'காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்தே.' – (இறையனார் களவியல்)

மேற்காட்டிய ஆறு வகையான பிரிவுகள் தொடர்பில் தொல்காப்பியர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகக் கால எல்லைகளை வரையறுத்துக் கூறியுள்ளமை போற்றற்குரியதாகும். கல்வி கற்றல் தொடர்பான பிரிதல் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாது அமைய வேண்டுமென்று சூத்திரம் அமைத்தார் தொல்காப்பியர்.

'வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது.’ - (பொருள் 186)

வேந்தன் தொழிலாகிய தூதுபோதல், நாடு காத்தல், பகைதணிவினை ஆகிய பிரிவுகள் ஓராண்டுக்கு உட்பட்டதாய் அமையுமென்று கூறப்பட்டுள்ளது. இன்னும், பொருளீட்டல் தொடர்பான பிரிதலுக்கும் ஓராண்டுக்கு மேற்படாத கால எல்லையே காட்டப்பட்டுள்ளது.

'வேந்துறு தொழிலே யாண்டினது அகமே.' – (பொருள். 187)

'ஏனைப் பிரிவும் அவ்வியல் நிலையும்.' – (பொருள். 188)

பரத்தையை நாடிச் சென்றான் தலைவன். தலைவி பூப்பெய்திய செய்தி அறிந்து, அவளை நாடி வந்து, பூப்புத் தோன்றி நிகழும் மூன்று நாளும் அவள் சொற்படி நடந்து, அதன் பின்னான பன்னிரண்டு நாளும் அவளுடன் மருவிக் கூடி நின்று, அவளைப் பிரியாது இன்புற்றிருப்பான். இப்படி மாதத்தில் பதினைந்து நாட்கள் அவளைப் பிரியாதிருப்பான். மறு பதினைந்து நாளும் பரத்தைபாற் பிரியும் வாய்ப்பும் உண்டாம். இச் சூத்திரத்தில் மக்கட்பேற்றின் பெருமை பேசப்படுவதையும் காண்கின்றோம்.

'பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான.' -  (பொருள். 185)


தலைவன், தலைவியுடனும் காமக்கிழத்தியுடனும் இல்லாக்கத்தின் புறத்தே சென்று, ஆற்றிலும் குளத்தினும் நீர்குமைந்தாடுதலும், இளமரக்காவிற் சென்று விளையாடுதலும் ஆகிய நிகழ்ச்சிகளால் இன்பம் நுகர்தலும் உண்டென்று சூத்திரம் வடித்துள்ளார் தொல்காப்பியர். தலைவியானவள் மனம் ஒத்து இவ்வாறு காமக்கிழத்தியுடன் சேர்ந்து சென்று இன்பம் அனுபவித்திருப்பhளோ?  என்பது ஒரு நெருடலைத் தருகின்றது.

'யாறுங் குளனும் காவும் ஆடிப்
பதிஇகந்து நுகர்தலும் உரிய என்ப.'  -  (பொருள். 189)


இன்னும், தலைவன் போர் முனைக்குப் போகும் பொழுது தலைவியையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு போகும் வழக்கம் அன்று இருக்கவில்லை என்று தொல்காப்பியம் கூறும்.

'எண்ணரும் பாசறைப் பெண்ணொடும் புணரார்.'  - (பொருள். 173)

ஆனால், போர்முனைப் பாசறையில் தலைவன் புறப்பெண்டிருடன் (பரத்தையர்) பரத்தமையில் ஈடுபடுவதும் உண்டாம் என்கிறார் தொல்காப்பியர்.

'புறத்தோர் ஆங்கண் புணர்வ தாகும்.' -  (பொருள். 174)

வpனை காரணமாகத் தலைவியைப் பிரிந்த சென்ற தலைவன், அவ் வினையை முடித்துத் திரும்பி வரும் பொழுது, நீண்ட வழியாயினும் இடையில் தங்கி இளைப்பாறி வருவதென்பது கிடையாதாம். இதற்கு அவன் உள்ளத்திலும் இடமில்லை. ஏனெனில், அவன் உள்ளம் தலைவிமேல் நிலைத்து நிற்கின்றது. இதற்கேற்றவாறு, சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அவன் தேரானது விரைந்து சென்று அவன் உள்ளத்து நினைவை நிறைவேற்றும் என்றவாறு.

'வினைவயிற் பிரிந்தோன் மீண் டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்ளியற் கலிமா உடைமை யான.'  -  (பொருள். 192)

முடிவாக
இதுகாறும், அந்தணர், மன்னர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகைக் குலத்தினரும் தெய்வ வழிபாடு, கல்வி கற்றல், தூது போதல், காவல் தொழில், பெருளீட்டல், பகை, பரத்தையிற் பிரிவு ஆகியவை தொடர்பில் தமது குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து சென்று வந்துள்ளனர்  என்பதையும், அவற்றிற்கான பிரிவின் கால எல்லைகளை வுகுத்துள்ளதையம் தொல்காப்பியச் சூத்திரத்திலிருந்து அறிந்து கொண்டோம்.

இதில், தெய்வ வழிபாடு தொடர்பான பிரிதலில் நால்வகைக் குலத்தினரும், கல்வி கற்றல் தொடர்பான பிரிதலில் வணிகரும், தூது போதல் தொடர்பான பிரிதலில் வணிகர், வேளாளரும், காவல் தொழில் தொடர்பான பிரிதலில் மன்னர், வணிகள், வேளாளரும், பொருளீட்டல் தொடர்பான பிரிதலில் வணிகர், வேளாளரும், அந்தணர் பொருளீட்டல் தொடர்பில் பிரிவதாயின் அது ஆசாரம், கல்வி தொடர்பில் அமையவேண்டுமென்றும், பகை தொடர்பான பிரிதலில் மன்னரும் பங்கேற்றிருந்தனர் என்பதும் தெளிவாகின்றது.

இன்னும், அந்தணருக்குத் தெய்வ வழிபாடு, ஆசாரம், கல்வி போன்றவற்றைக் கொடுத்து அவர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கல்வி கற்றல் தொடர்பான பிரிதலில் வணிகர் மாத்திரம் பங்கேற்கலாமென்பதும், வேளாளருக்குக் கல்வி மறுக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூறப்படவில்லை. வேளாண்மைத் தொழில் குன்றி விடுமோ என்ற அச்சத்தால் வேளாளருக்குக் கல்வி மறுக்கப்பட்டிருக்கலாம்.  இன்று இந்நிலை மாறி யாவரும் கற்கலாம் என்றாகி விட்டது.

மக்களின் சீரும், சிறப்பும், குதூகலமும், இணைப்பும் அமைந்த குடும்பத்தில் பிரிவு ஏற்படுத்த விரும்பாத பண்டைத் தமிழ் ஆன்றோனாகிய தொல்காப்பியர் மேற் காட்டிய வரையறைகளை வகுத்துத் தந்துள்ளதையும், அவர் பின்னவரின் வாழ்வியல் மேலும் சீர்பெற்றமைய வேண்டுமென்ற அவர் வேட்கை உந்தலையும் நினைந்து, நாம் அனைவரும் அகமகிழ்வோமாக!.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R