- தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா -பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய உடலை கட்டிப் பிடித்து முத்தமிட எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வருகிறது.

2) நடிகை நாடாளலாமா வென ஆணாதிக்க அறங்களைப் பேசிய சனாதனிகளின் மூஞ்சியில் ஓங்கி அறைந்த ஒரு திரை நட்சத்திரம் செல்வி ஜெயலலிதா. தனது இரண்டு வயதிலேயே அப்பா ஜெயராமனை பறிகொடுத்தார். தாயார் வேதவல்லி என்ற சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அம்மு என்று அன்பால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா தனது இருபத்துமூன்றாம் வயதில் தாயையும் இழந்தார்.மைசூரில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் திருச்சி சிறீரங்கமாக இருந்தது.சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் பள்ளி படிப்பை கற்ற ஜெயலலிதா தனது பனிரெண்டாவது வயதிலேயே நடன அரங்கேற்றம் செய்தார். இசைத்துறையிலும் தேர்ச்சிமிக்கவராக இருந்தார்.2016 ஆகஸ்டில் எழுத்தாளர் வாஸந்தி எழுதிய Amma: Jayalalithaa's Journey from Movie Star to Political Queen என்ற நூல் ஜெயலலிதாவின் பூர்வீகம் பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளன.

3)முதல்தடவையாக இயக்குநர் சிறீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகம் ஆனார். இது 1965 இல் நடந்தது.அன்றுமுதல் 1980 வரையில் முதன்மை கதாநாயகிப் பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என 127 திரைப்படங்களில் நடித்திருந்தார்.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு 28 படங்களில் இணைந்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படம் துவங்கி அடிமைப் பெண், கன்னித்தாய், காவல்காரன், அரசக்கட்டளை, தலைவன் , ராமன்தேடிய சீதை என தனது திரையுலக முத்திரையை பதித்துக் கொண்டார். நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,எஸ்.எஸ்.ஆர் போன்ற பிரபலங்களோடு இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாயின.

4)புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபரில் திமுகவை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ( அதிமுக) கட்சியை எம்.ஜி.ஆர்.துவங்கினார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக உருவாகினார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1984 இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். 1989 இல் அதிமுக பொதுச் செயலாளரானார். பல்வேறு அரசியல் சமூக நெருக்கடிகளைத் தாண்டி 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழக முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதா 2015 மே 13 இல் ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வந்தார். இறுதியாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்தார். தமிழக மக்களின் இதயத்தில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட தமிழகமுதல்வருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். 5) தமிழக முதல்வர் 11.30 மணிக்கு மரணமடைய அன்றிரவு இரண்டு மணியளவிலே தமிழக முதல்வராக ஓ.பி.எஸ். பன்னீர் செல்வம் பதவியேற்றார். அவரோடு 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். புதிய தலைமுறை, தந்திடிவி, நியூஸ் 7, சன்நியூஸ் உள்ளிட்ட பெரும்பான்மை தொலைக்காட்சி ஊடகங்களும் விடிய விடிய இச் சம்பவங்களை நேரலைகளாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.

6) தமிழக முன்னாள் முதல்வர் மறைவை ஒட்டிய இறுதிச் சடங்குகளில் அரசு மரியாதையோடு கூடிய நல்லடக்கம் என்பதாக மட்டுமல்லாமல், ஜெயலலிதா சார்ந்திருந்த சமயத்தின் சடங்குகளும் இணைத்து நிகழ்த்தப்பட்டன. இந்த சடங்கியல் நிகழ்வுகளை அர்ச்சகர் ஒருவரின் வழிகாட்டுதலில் ஜெயலலிதாவின் இணைபிரியா தோழியான சசிகலா முன்நின்று நடத்தினார். ஆனால் அவரோடு ஒரு புதிய அறிமுகமற்ற இளைஞரும் சடங்கியல்களில் பங்கு கொண்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அவரது ரத்த உறவு குடும்பம் சார்ந்த உறவினராக அவர் முதன் முறையாக தெரிய வருகிறார்.ஜெயலலிதாவின் சகோதரரான ஜெயக்குமாரின் மகன் தீபக் ஜெயக்குமாரே அந்த இளைஞர்.வாழ்ந்த போது ஒட்டாத ரத்த உறவுகள் மரணத்தின் போது வந்து ஒட்டியிருப்பது ஒரு துயரத்தின் சலனமே.

ஜெயலலிதா அவர்கள் ஐயங்கார் பிராமின் சமூகத்தைச் சேர்ந்தவர். அச் சமூக வழக்கத்தின் படி இறந்த உடலை எரியூட்டுவதுதான் வழக்கம். ஆனால் இந்த மரபுக்கு மாற்றாக ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும்.திராவிட கலாச்சார புராதன மரபில் இறந்த உடலை பெரிய தாழியில் பாதுகாப்பாய் வைத்து புதைப்பது வழக்கம் . அந்த திராவிட மரபே பேணப்பட்டுள்ளது என்ற கருத்தும் உள்ளது. இந்து மரபில் புனிதர்கள், துறவிகள், மூன்றுவயதுக்கு குறைவான குழந்தைகளை எரிப்பதில்லை பத்மாசன நிலையில் வைத்து புதைப்பதன் மரபும் உண்டு என்பதும் மற்றொரு கருத்தாக உள்ளது. இதனை ஏற்கெனவே மெரீனாவில் அடக்கப்பட்டிருக்கிற பேரறிஞர் அண்ணா,புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வரிசையில் புரட்சித் தலைவியின் உடலும் புதைக்கப்பட்டிருப்பதாகவும் உணர்ந்து கொள்ளலாம்.

7) ஜெயலலிதாவின் மரணச்செய்தியைக் கேட்டு இதுவரை தமிழகம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் அதிர்ச்சியால் இறந்தவர்களும் ,தற்கொலை செய்தவர்களும் அடங்கும். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவெங்கும், உலமெங்கும் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் பெருந்துயரமாக இம்மரணச் செய்தி பெருக்கெடுத்துள்ளது.
தமிழகத்தை ஆறுதடவை முதலமைச்சராக ஆட்சி நடத்திய தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயல்லிதா தமிழக மக்களின் இதயத்தை தொட்டது எப்படி..? தமிழகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டு வளர்ச்சிக்கு என்ன விதமான பங்களிப்பை ஆற்றியுள்ளார் என்பதான கேள்வி எழாமல் இல்லை

அ)ஏழை எளிய மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள்
மிக முக்கியமாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தின் பட்ஜெட்டில் முப்பத்தி ஏழு சதவிகிதம் ஏழை எளியமக்களுக்கான இலவச உதவித் திட்டங்களுக்காகவே செலவழிக்கப்படுகிறது. இருபது கிலோ இலவச அரிசி, உணவுப்பொருட்கள், பள்ளிப்பிள்ளைகளுக்கு சத்துணவு, சீருடைகள், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணிணி, என இத்திட்டப் பயன்பாடுகள் மவுனமாக மக்கள் உளவியலில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை உருவாக்கி உள்ளன.

பெண்சார்ந்த பாதுகாப்பிற்கான செயல்பாடுகளாக பெண்குழந்தைகளை பாதுகாக்கும் பெண் சிசு கொலையைத் தடுக்கும் தொட்டில் குழந்தை திட்டம், திருமணத்தின் போது தாலிக்கு தங்கம், முதியோர்களுக்கான ஓய்வுத் தொகை, கணவனை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்குமான உதவித் தொகை , பெண்களுக்கான சுய உதவிக்குழுக்கள், மகளிர் காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 வகை பொருட்களுடன் பெட்டகம், என்பதாகவும் இது விரிகிறது. பெண்ணிய நோக்கில் இவை சாதக அம்சங்களையே அதிகம் கொண்டுள்ளன.

ஏழை கூலி உழைப்பாளர்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதும், வேலையின்மையிலிருந்து விடுபடவும், குறைந்த விலையில் பொருட்களை வாங்கி நுகர்வுக்கு பயன்படுத்த உருவாக்கிய அம்மா திட்டங்கள் மிகவும் குறிப்பானவை. இந்த வகையில் இலவச மிக்ஸி கிரைண்டர், இலவச ஆடுகள்,அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், உடல்நல மருத்துவ காப்பீடு,என்பதான பன்முகப்பரிமாணம் சர்ர்ந்த மக்கள் நல திட்டங்கள் வெல்பேர் ஸ்டேட் எனப்படும் அரசின் சமூக நலத்திட்டங்களின் சிறப்புகளாகும். தமிழகத்தின் இத்திட்டங்கள் பிற மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு திட்டங்களுக்கும் முன்மாதிரியாகவே திகழ்கின்றன.

ஆ)நீர் வளத் திட்டங்கள்
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம் (Rain Water Harvesting Scheme) மண்ணின் நீர்வள ஆதாரத்தை பெருக்கும் ஒரு நோக்கை இலக்காக கொண்டு இருக்கிறது. இதுபோல் மாநிலத்தின் நீர் உரிமைகளுக்கான குரலையும் இணைத்துப்பார்க்கலாம். கர்நாடகாவின் நிலைபாடுகளிலிருந்து காவிரிநீர் உரிமையை மீட்டெடுப்பது, கேரளமாநிலத்தோடான முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையை சீர்படுத்துவது, சென்னை வறட்சியை நீக்க வீராணம் திட்டம் என்பதான எல்லைகளில் தமிழகத்தின் நீர்வளம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

இ) தொழில் முதலீடுகளின் பெருக்கம்
உலகநாடுகளிலிருந்து பெரும் முதலீடுகளை கொண்டுவரும் திட்ட அடிப்படையில் சென்ற ஆண்டில் நடைபெற்ர குலோபல் இன்வெஸ்டேர்ஸ் சப்மிட் 2.43 லட்சம் கோடி முதலீட்டை திரட்டியதைக் குறிப்பிடலாம். தொழில் உற்பத்தி நிறுவனங்களின் உருவாக்கம் மொபைல் தொடங்கி கார்தொழிற்சாலை வரை நீள்கிறது..பன்னாட்டு நிறுவனங்களான போர்டு, ஹுன்டாய்,டைம்லர், ரெனொல்ட், நிஸ்ஸான் உள்ளிட்ட நிறுவன்ங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 13, 80,000 கார்களும், 3,61,000 வணிக வாகனங்களும் உற்பத்தி செய்வதற்கான திட்டமிடுதல்களும், இவை உருவாக்கும் வேலைவாய்ப்புகளையும் இங்கே கவனத்தில் கொள்ளலாம்.

ஈ)மின் உற்பத்தி
தொழிற் வளர்ச்சிக்கான அடிப்படையே மின் உற்பத்திக்கான திட்டமிடலைச் சார்ந்ததாகும்.காற்றாலை ( வின்ட் மில் ) மின் உற்பத்தியிலிருந்து சூரிய ஆற்றலிருந்து ( சோலார் எனர்ஜி)உற்பத்தி என்பதான செயல்வழி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.Central Electricity Authority வெளியிட்டுள்ள அறிக்கை Load Generation Balance Report 2016-17 இன்படி நடப்பு நிதியாண்டில் 11,649 மில்லியன் யூனிட்ஸ் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. உ) வேளாண்மை துறையில் உணவு மற்றும் உணவல்லா பயிர்களின் உற்பத்தி, ஊட்டச்சத்து, மருத்துவம் மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சி, குடிநீர் மற்றும் துப்புரவு,நகர்புற வளர்ச்சி என பல்துறை வளர்ச்சியின் குறியீட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

பண்பாட்டு நிலைபாடு
ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு நிலை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கு தொடர்பாக பாக 24 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிக்கும் பேரறிவாளன், நளினி,முருகன் உள்ளிட்ட எட்டு பேர்களுக்கான விடுதலை , இலங்கை கடற்படை பிடித்துச் செல்லும் தமிழ் மீனவர்களுக்கான பாதுகாப்பு என்பதான களங்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.இட ஒதுக்கீட்டு அரசியலை பாதுகாக்கும் குரலும், தேர்தல் காலத்தில் கூட இந்துத்துவ அரசியலை மையப்படுத்தாத நிலைபாடும் தமிழக மக்களின் மனோபாவங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த ஆதரவு மனநிலையை உறுதி படுத்தி இருக்கக் கூடும்.

டஸ்மார்க் காயங்கள், இடைநிலை சாதிகளின் மேலாண்மை அரசியல், பன்னாட்டு முதலாளித்துவத்தின் வேட்டை, என்பதான பாதிப்புகளை விட மக்களால் நான் மக்களுக்காகவே நான் என ஒலித்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் குரல் அனைத்து மக்களையும் ஏதோ ஒருவிதத்தில் ஈர்ப்பு விசையாக தன் பக்கம் இழுத்திருக்கிறது என்று மதிப்பிடலாமா?


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R