அமரர் காரை. சுந்தரம்பிள்ளை- 11.11.2017 அன்று ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற அமரர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வின் போது ஆற்றிய நினைவுப் பேருரை -

அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை (20.5.1938-21.9.2005) அவர்களின் நினைவேந்தலும், அவரது மகள் மாதவி சிவலீலனின் கவிதை நூலான இமைப்பொழுது என்ற படைப்பின் வெளியீடும் இணையப்பெற்ற இந்த இனிய நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வந்து அவையில் அமைந்திருக்கும் பெரியோர்களே, இங்கு மேடையில் வீற்றிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் பணிவான வணக்கம். அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவுரையை வழங்குவதற்காக என்னைத் தேர்ந்தெடுத்துள்ள சகோதரி மாதவிக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர்-தங்கம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், அமரர் சுந்தரம்பிள்ளை அவர்கள். தனது ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பின்னாளில் பெற்றார். அவரை கலாநிதி செ.சுந்தரம்பிள்ளை என்பதைவிட, கவிஞர் காரை. சுந்தரம்பிள்ளை என்றழைப்பதையே தமிழ் உலகம் வழக்கமாக்கிக்கொண்டது. இன்னும் நெருக்கமாக, ‘காரை” என்ற அடைமொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிமனிதனான அமரர் காரை சுந்தரம்பிள்ளையைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரின் பெயரைத் தனக்கான அடையாளமாகக் கொண்ட பலரை நாம் ஈழத்துப் படைப்புலகில் காண்கின்றோம். தான் மதிக்கும் ஊரைக் குறிப்பதன் காரணமாக, அந்த ஊரின் வழியாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் எம்மவரின் மத்தியில், தன் பெயரின் முன்னால் காரைநகரைச் சேர்த்துக்கொண்ட காரை சுந்தரம்பிள்ளையால் காரைநகர் அன்னையே ‘சான்றோன் எனக் கேட்ட தாயாகிப்” பெருமிதம் கொள்வாள். காரை மண் இவரது அடையாளமாகக் கொண்டபோதிலும், இவர் காரைமண்ணுக்கு மாத்திரம் உரியவரல்ல. அந்த மண்ணுக்கு மாத்திரம் உரியவராக இவரை இனம்காண முடியாத அளவிற்கு இவரது பன்முக ஆளுமையால், உலகளாவி விகாசித்து நிற்கிறார். இவர் கற்பித்த பாடசாலைகள், நிறுவனங்கள்,ஆசிரிய கலாசாலைகள், வாழ்ந்த பிரதேசங்கள் யாவும் இவர் நம்மவர் என்று உரிமைகொள்வதில் பெருமிதம் கொள்வதை இன்றும் நாம் காண்கிறோம்.

காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோரும்; விளங்கினார்கள். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, சிங்களம் ஆகிய மொழிகளிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.

1960 ஆம் ஆண்டில் இருந்து கொழும்பு, சென் யோசேப் கல்லூரி, கேகாலை, ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கேஃமாவனல்ல சாகிரா கல்லூரி, யாழ்ப்பாணம், தேவரையாளி இந்துக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகவும், பின்னர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், தலைவாக்கலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் இவர்  பணியாற்றினார்.

இவற்றைவிட திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்), யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்), யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்) ஆகியவற்றில் இடைவரவு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். இவர் மொத்தம் 37 ஆண்டுகள் ஆசிரிய சேவையில் பணியாற்றினார். இவற்றுள் 15 ஆண்டுகள் கல்வி நிருவாக சேவையும் அடங்கும்.

யாழ்ப்பாண மாநகரசபை மன்றக் கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டன. பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார். இது தவிர யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டதாகும்.

எழுத்துத்துறையில் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் ஈடுபாடு பற்றிப் பார்க்கும்போது, ‘புகைவண்டி” என்ற இவரது முதலாவது கவிதை தமிழகத்திலிருந்து அழ. வள்ளியப்பாவின் பூஞ்சோலை என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 'பூஞ்சோலை”யிலும் 'கண்ணன்” எனும் சிறுவர் சஞ்சிகையிலும் இவரது பல கவிதைகள் அந்நாளில் வெளிவரத்தொடங்கின. தமிழகத்தைத் தொடர்ந்து இலங்கைப் பத்திரிகைகளிலும் இவர் படைத்த கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரலாயின.

எனது இன்றைய உரை அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நூல்வழித் தடங்களைப் பதிவு செய்வதாகவே பெரும்பாலும் அமைகின்றது. 

தேனாறு என்ற கவிதைத்தொகுதியே காரை.செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் முதல் நூல்வெளியீடாகும். யாழ். இலக்கிய வட்டம் தனது ஒன்பதாவது வெளியீடாக ஏப்ரல் 1968இல் இந்நூலை வெளியிட்டது. அவரது முதலாவது நூலே இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இயற்கை (ஞாயிறு, திங்கள், மழை, மலையருவி, ஆறு, விண்மீன்கள்), தமிழ் (தமிழ்க் காதல், ஒரு மணி, தமிழருக்கு, பூம்புகார், முப்பால்), சமூகம் (எண்ணியெண்ணிப் பார்த்தேன், எங்கள் ஞானம், ஏன் பிறந்தாரோ?, நடிப்பு, யார் ஏழை, தேயிலைத் தோட்டத்திலே, முயற்சி, திருநாள், தேசமே வீடு, நீதி, மனிதனும் பறவையும்), காதல் (காதல் இசை, நியாயமா, இன்னலைத் தராNது, உனக்காதல், பிஞ்சு வயது, துறையா செரும், இன்னல் களைந்தவிடு, காவல்), பல்சுவை (பக்தி, நிலையாமை, கவிதைப்பெண், பெருமரமாக்கி வைப்பாய், பழையன கழிதல், காலம் என்னும் காட்டாறு, பேராசைக் கனல், அன்னை, மழலைச் செல்வம், சம்பள வாழ்வு, தரகர், உதைபந்தாட்டம், ஈழமிதுவே, தேனாறு), ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் 44 மரபுக்கவிதைகளும், காவியம் என்ற இறுதிப்பிரிவில் சிற்பியின் காதல் என்ற காவியமும் இடம்பெற்றுள்ளன.

சங்கிலியம் என்ற இரண்டாவது நூல் ஒரு காவியமாகும். யாழ்ப்பாணம், ஈழநாடு வெளியீடாக, ஏப்ரல் 1970இல்  இந்நூல் வெளிவந்தது. யாழ்ப்பாணத்தை இரண்டு சங்கிலி மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர் என்றும், முதலாவது சங்கிலியன் 1519 தொடக்கம் 1561 வரை ஆட்சிசெய்ததாகவும் அவனே இக்காவியத்தின் நாயகன் என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது சங்கிலி மன்னன் 1615 தொடக்கம் 1619வரை யாழ்ப்பாணத்தை ஆண்டுவந்தவன். இவனே யாழ்ப்பாணத்துக் கடைசித் தமிழ் மன்னன் சங்கிலி குமாரனாவான் என்றும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இந்த நூலும் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. அதே வேளை ஈழநாடு தினசரி 1970இல் நடத்திய அகில இலங்கை காவியப் போட்டியில் முதற்பரிசையும் பெற்றது.

இவ்விரு நூல்களையும் தொடர்ந்து தவம் என்ற கவிதை நூல் 1971இல் வெளிவந்ததாகவும், உறவும் துறவும் என்ற கவிதை நூல் 1985 இல் வெளிவந்ததாகவும் தகவல் உள்ள போதிலும், இவ்விரண்டு நூல்களையும் நூல்தேட்டத்தில் ஆவணப்படுத்துவதற்காக இன்றுவரை என்னால் பார்வையிட முடியவில்லை.

பாதை மாறிய போது என்ற குறுங்காவியம், யாழ்ப்பாணம், வரதர் வெளியீடாக, மே 1986இல் அவளிவந்திருந்தது. ஏழைக் கடற்தொழிலாளியின் மகனான தருமன், பொருளாதாரக் கஸ்டத்தின் மத்தியிலும் திறமையுடன் படித்து, அரசின் தரப்படுத்தலால் பல்கலைக்கழகம் புகமுடியாது, வெளிநாடு செல்ல முயன்று, முகவர்களால் ஏமாற்றப்பட்டு, விவசாயம்செய்ய முனைந்து அங்கும் அரசின் இறக்குமதிக் கொள்கைகளால் நட்டமடைந்து, காவல் படையின் கெடுபிடிகளால் ஆத்திரமுற்று விடுதலைப் போராளியாக மாறும் கதையே இக்காவியமாக 1986இல் வடிக்கப்பட்டது.

இன்று 2017இல் சரியாக 31 ஆண்டுகளின் பின்னரும் கூட, ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையிலும், பாதை மாறிய போது என்ற குறுங்காவியத்தின் கதைக்கரு சிறிய மாற்றத்துடன் இன்றைய பத்திரிகைச் செய்திகளாக வந்தவண்ணம் உள்ளன. காவல் படையின் கெடுபிடிகளால் ஆத்திரமுற்று விடுதலைப் போராளியாக மாறும் கதை முடிவு இன்றைய காலத்திற்கேற்ப மாற்றமுற்று, இளைஞர்களின் தற்கொலைகளிலும், பாதாளக் குழுக்களின் கைகளில் இளைஞர்கள் சென்றடைவதிலும் முடிகின்றன.

காரை. செ.சுந்தரம்பிள்ளை  அவர்கள் தொகுப்பாசிரியராக இருந்து வெளிவந்த நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவு வெளியீடான நாடக தீபம் என்ற நூல் காங்கேசன்துறை, வி.வி.வைரமுத்து நினைவுதின வெளியீடாக ஓகஸ்ட் 1989 இல் வெளிவந்தது. நடிகமணி வைரமுத்துவின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட இந் நூலில் அவர் பற்றி மட்டுமல்லாது, சமகால நாடக அரங்கு பற்றிய பல தகவல்களையும் உள்ளடக்கியதான பல்வேறு தமிழ் அறிஞர்களின் இரங்கலுரைகள் இடம்பெற்றிருந்தன. சு.வித்தியானந்தன், கா.சிவத்தம்பி, அ.சண்முகதாஸ், சி.மௌனகுரு, ம.சண்முகலிங்கம், குறமகள்- வள்ளிநாயகி இராமலிங்கம், சட்டத்தரணி அ.குமரகுரு, காரை.செ.சுந்தரம்பிள்ளை, வி.ரி.செல்வராசா (வசந்தகான சபா), செ.சின்னத்துரை (ஆர்மோனிய வித்துவான்), நடிகர் வி.மார்க்கண்டு, கவிஞர் வே.ஐயாத்துரை, சொ. இன்பம், ந.மகேந்திரராசா (நாடகக் கலாமன்றம்), பொ.கணேசமூர்த்தி, ஏ.ரி.பொன்னுத்துரை ஆகியோரின் நினைவுப் பதிகையுடன் ஈழநாடு (11.7.1989), உதயன் (11.7.1989), மல்லிகை (ஜுன் 1989) ஆகிய பத்திரிகைகளின் நினைவஞ்சலிகளும், உதயசு10ரியன் சனசமூக நிலையம், ஐக்கிய விளையாட்டுக் கழகம் அகிய அமைப்பகளின் இரங்கலுரைகளும், பின்னிணைப்பாக தினகரன் நாடக விழா மலரில் (1966) இடம்பெற்ற மயானகாண்டம் வெற்றியளித்ததேன் என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

காவேரி என்ற தலைப்பிலான அமரர் ‘காரை” அவர்களின் மற்றொரு காவியம், யாழ். இலக்கிய வட்ட வெளியீடாக ஒக்டோபர் 1993இல்  வெளிவந்தது. வன்செயலாலும் சீதனப்பிரச்சினையாலும் பாதிக்கப்பட்ட ஓர் இளம்பெண் காவேரியின் கதை இது. மருத்துவக் கல்லூரி மாணவியான அவளை சக மாணவன் அருண் காதலிக்கிறான். சிங்களப் பிரதேசத்தில் வர்த்தகராக இருந்த காவேரியின் தந்தை இனக்கலவரத்தில் குடும்பத்துடன் பலியாகிறார். தனிமரமாகும் காவேரியிடம் சீதனம் பெற வாய்ப்பின்றி அருணின் பெற்றோரால்; அவள் ஒதுக்கப்;படுகின்றாள். காவேரி பின்னர் தனித்து நின்று உயர்ந்து சமூகசேவகியாகி மதிப்புறுகிறாள். கால ஓட்டத்தில் மீண்டும் அவளது வளம் கண்டு அவளை நாடும் அருணையும் பெற்றோரையும் உதறித் தள்ளிவிட்டுக் காவிய நாயகியாகிறாள். சமூகக்கட்டுக்களை அறுத்தெறிந்து வீறுகொண்டெழும் ஒரு பெண்ணின் காவியமாக காவேரி என்ற காவியம் படைக்கப்பட்டுள்ளது.  பின்னையிட்ட தீ, பேரழகுச் சுந்தரியாள், கல்வியும் காதலும், பயணம் பாடியது, அண்ணலவன் சென்ற வழி, கண்ணன், அபஸ்வரம், துன்ப இரவு, வேலியே பயிர் மேயலாகுமா?, எழுந்தனள் காவேரி, தூய தொண்டினள், சுருதி பேதம், வெற்றி காணுவோம் ஆகிய இயல்களில் இக்காவியம் விரிகின்றது.

1990இன் பின்னர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் கவிதைத் துறையிலிருந்து தனது தீவிர கவனத்தை ஆய்வுத்துறையின் பால் செலுத்தியதற்கான சான்றுகளைக் காணமுடிகின்றது. ஈழத்து இசை நாடக வரலாறு என்ற இவரது முதலாவது ஆய்வுநூல், யாழ். இலக்கிய வட்டத்தினரால் ஜனவரி 1990இல் வெளியிடப்படுகின்றது.

இசைநாடக வருகையின் போது ஈழம், ஈழத்தில் இந்தியக் கலைஞர்களும் இசைநாடகமும், இசைநாடகமும் இலங்கைக் கலைஞர்களும், இசைநாடகத்தின் மறுபக்கம், இசைநாடக அரங்கம், சிங்கள இசை நாடகங்கள், ஆகிய ஐந்து இயல்களில் ஈழத்து இசைநாடக வரலாறு இங்கு ஆராயப்பட்டுள்ளது. இந்நூலும்; இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காரை. செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் மாணவர் உலகிற்காகவும் அவர்களது பாடம் சார்ந்த சில நூல்களையும் எழுதியிருக்கிறார்.  இந்து நாகரீகத்திற் கலை கொழும்பு குமரன் புத்தக இல்ல வெளியீடாக ஐப்பசி 1994இல் வெளிவந்துள்ளது. இந்நூலும் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினையும் வடக்கு கிழக்கு மாகாண சாகித்தியமண்டலப் பரிசினையும்; பெற்றது.

இந்தியப் பெருங்கண்டத்தில் சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்து வளர்ச்சிபெற்றுவந்த கலைகள் பற்றி ஆராயும் இந் நூல், சமயம் சார்ந்தும், சமயம் சாராமலும் வளர்ச்சி பெற்ற இக்;கலைகளில் இந்து நாகரிகத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சமயஞ்சார்ந்த கலைகள் சிறப்பாக ஆராயப்பட்டுள்ளதுடன், சமண, பௌத்த சமயத்தவர்களின் பங்களிப்பும் அவதானிக்கப்பட்டுள்ளது. சி;ந்துவெளி நாகரீகக்காலம் தொடங்கி, மௌரியர், குப்தர், சாளுக்கியர், ஹொய்சாளர், பல்லவர், சோழர். பாண்டியர், நாயக்கர் காலம் ஈறாக அனைத்துக் கால கட்டத்திலும் கலைகளில் ஏற்பட்ட வளர்ச்சியினையும் இந்நூல் விபரிக்கின்றது. சிந்துவெளி நாகரிகம், மௌரியருக்கு முற்பட்ட கலை, மௌரியர் கலை, இந்தியக் கலை, குப்தர் காலக் கலை, முற்காலச் சாளுக்கியர் கலை, எல்லோரா எலிபந்தா குகைகள், சோளங்கிக் கலை, ஹொய்சாளர் பாணி, தமிழகக் கலைகள், பல்லவர் காலம், அதியமான் கோயில்கள், சோழர் காலம், பாண்டியர் காலம், விஜயநகரர் காலம், நாயக்கர் காலம், உலோகத் திருமேனிகள், ஓவியங்கள், இசைக் கலை, நடனக் கலை, நாடகக் கலை, தமிழகமும் நாடகமும், நிறைவுரை ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

விவேக சிந்தாமணி உரைநடை, உளவியல், கல்வியியல், இந்த சமயம், புள்ளிவிபரவியல் ஆகிய துறைகளிலும் மாணவர்களுக்கான இவரது உப பாடநூல்கள் வெளிவந்துள்ளன.

காரை. செ.சுந்தரம்பிள்ளை  அவர்கள் தொகுப்பாசிரியராக இருந்து ஓகஸ்ட் 1989 வெளிவந்த நாடக தீபம் என்ற நூலைத் தொடர்ந்து அவர் வி.வி.வைரமுத்து: வாழ்வும் அரங்கும் என்ற ஆய்வு நூலை, ஜுலை 1996 இல் வெளியிட்டிருந்தார்.

நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் வாழ்வும் அரங்கும்; என்ற இந்த நூல் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்ந்த தமிழர் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் வாழ்வைத் தெட்டத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது. அதே வேளை அங்கு இசை நாடகம் வளர்ந்து வந்த வரலாற்று நெறியையும் விளக்கிக் காட்டுகின்றது. சாதி அமைப்பின் கொடிய மரபுகளின் விளைவான மனித ஏற்றத்தாழ்வுக் கெடுபிடிகளுக்கு நடிகமணி எவ்வாறு துணிச்சலாக முகம்கொடுத்து கலையுலகை வசப்படுத்தினார் என்பதை யதார்த்த நிலையில் நின்று அமரர் காரை அவர்களால் 23 இயல்களில் எழுதி வெளியிடப்பட்டது.

அமரர் காரை அவர்களின் மற்றுமொரு ஆய்வு நூலான சிங்களப் பாரம்பரிய அரங்கம் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக, ஜுலை 1997இல வெளிவந்தது. சிங்களப் பாரம்பரிய நாடகங்கள், சமயக் கரணங்கள் பற்றியதொரு விரிவான தமிழ் ஆய்வாக இந்நூல் இன்றும் போற்றப்படுகின்றது. தமிழ் அரங்குகளுக்கும் சிங்கள அரங்குகளுக்கும் இடையே காணப்படும் தொடர்புகளும் இந்நூலில் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் கா. சிவத்தம்பியின் வழிகாட்டலில் பாரம்பரிய நாடகங்களை ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் காரை. செ. சுந்தரம்பிள்ளையவர்கள். இலங்கையில், தமிழ் மக்களிடையேயுள்ள முன்னணி நாடகவியல் ஆய்வாளர்களுள் ஒருவராகத் திகழும் நூலாசிரியர், சிங்கள நாட்டில் வாழ்ந்து அவர்களுடைய கலை கலாசாரம், பண்பு, பண்பாடு என்பனவற்றை நன்கு அறிந்து கொண்டவர். சிங்களக் கலைஞர்களிடம் நாடகக் கலையைக் கற்றுத் தேர்ந்தவர். சிங்களப் பிரதேசங்களிலும் மலைநாட்டிலும் பணிபுரிந்து வந்த காலங்களில் சிங்களப் பாரம்பரிய நாடகங்களையும், சமயக் கரணங்களையும் நேரிற் பார்க்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் நாடகமும் அரங்கியலும் எனும் பாடநெறியை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பாக (P.பு.னுip.in-னுசயஅய) கற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது. இக்காலப் பகுதியில் சிங்கள நாடகக் கலைஞர்களாகிய பேராசிரியர் ஈ. ஆர். சரச்சந்திரா, பேராசிரியர் ஏ. ஜே. குணவர்த்தனா, ஹென்றி ஜயசேனா, தம்ம யாகொட, பொன்சேகா ஷெல்ரன் பிரேமரட்னா, அமரதேவ் ஆகியோரிடம் கற்கவும் நெருங்கிப் பழகவும் சந்தர்ப்பம் கிட்டியது.

யாழ். பல்கலைக்கழகத்தில் தன்னிடம் நாடகமும் அரங்கியலும் பயின்ற மாணவர்களும் இத்துறையில் ஈடுபாடுள்ள ஏனைய மாணவர்களும், சிங்களப் பாரம்பரிய நாடகங்கள் பற்றிய நூல் எதுவும் தமிழில் இல்லாத குறையை உணரவைத்தமையால், இப் பாடத்தைக் கற்பிக்கும் பொழுது அவ்வப்போது தேடிய தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இந்நூலை ஆக்கியுள்ளதாக நூலில்  குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகைப்பலத்தில் நின்றே இவரால் இத்தகைய விரிவான பார்வையினை இந்நூலில் வழங்கமுடிந்தள்ளது என்று கருதுகின்றேன். இந்நூலில் சிங்களப் பாரம்பரிய நாடகங்கள் பற்றியே ஆய்ந்துள்ளார்;. நவீன சிங்கள நாடகங்கள் பற்றி ஆய்வுக்குட்படுத்தவில்லை. இயன்றவரை தமிழ் அரங்குக்கும் சிங்கள அரங்குக்கும் உள்ள தொடர்பினை ஒப்புநோக்கியுள்ளார்.

அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் வட இலங்கை நாட்டார் அரங்கு என்ற ஆய்வுநூல் சென்னை,குமரன் பதிப்பகத்தினால் ஏப்ரல் 2000 இல் வெளியிடப்பட்டுள்ளது.

வட இலங்கை கூத்துக்களின் மூலவேர்களையும், இசை மரபுகளையும் ஆடல் நுணுக்கங்களையும் ஆழமாக  இதில் ஆய்வு செய்துள்ளார். இக்கூத்துக்களை ஆடிவந்த சமூகப் பொருளாதாரப் பின்னணிகளையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் ஒவ்வொரு சாதியினரும் பேணிவந்த நாடகங்களைக் குறிப்பிடும் இந்நூல் அச்சாதியினரிடையே ஏற்பட்ட முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் ஒரு சமூகவியல் நூலாகவும் விளங்குகின்றது. இந்நூல் லண்டன் ஸ்டட்பரி பாடசாலை மண்டபத்தில் கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதையும் இன்று மீண்டும் நினைவுகூர விரும்புகின்றேன். ஐபீ.சீ சிவரஞ்சித், மாதவி, திரு.மு.நித்தியானந்தன் ஆகியோருடன் அன்றைய நிகழ்வில் காரை சுந்தரம்பிள்ளை அவர்களும் மேடையில் வீற்றிருந்தமையும் மனதில் நிழலாடுகின்றது.

2000இல் வெளிவந்த மற்றுமொரு நூல் பூதத்தம்பி (இசை நாடகம்) என்பதாகும். நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் துணைவியார் திருமதி இரத்தினம் அம்மையார் (05-11-1928-13.08.2000) அவர்களின் நினைவாக 11.09.2000 அன்று கல்வெட்டுப் பதிப்பாக இந் நூல் வெளியிடப்பட்டது. பூதத்தம்பி நாடகம் ஒல்லாந்தர் ஆட்சியின்போது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகனின் கதையைக் கூறுகின்றது. யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாயிருந்த ஒல்லாந்த அட்மிறல் அந்தோனி என்பவனின் கீழ் யாழ்ப்பாணப் பிரதம அமைச்சராகவிருந்த அந்திராசியின் உதவி அமைச்சராகப் பணியாற்றியவர் பூதத்தம்பி. பூதத்தம்பியின் மனைவி அழகவல்லியின்மீது கொண்ட காமம் காரணமாக எழுந்த பல சம்பவங்களினால், பூதத்தம்பியும் அழகவல்லியும் அந்திராசியால் பழிவாங்கப்படுகின்றார்கள். இந்நாடகம் முதன்முறையாக நடிகமணி வி.வி.வைரமுத்துவினால் இசை நாடகமாக 1966ஆம் ஆண்டு காங்கேசன்துறையில் மேடையேற்றப்பட்டது.

காரை.செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் 2005 இல் வெளிவந்த இறுதிப் படைப்பாக ஈழத்து மலையகக் கூத்துக்கள் என்ற ஆய்வுநூல் அமைகின்றது. யாழ்ப்பாணம் பாரதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருந்தது. லண்டனில் அவரது மறைவின் முதலாம் ஆண்டு நிறைவில் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது. மலையகக் கூத்துக் கலைஞர்களுடனும், அதுபற்றி ஆராய்கின்ற மலையக அறிஞர்களுடனும் கலந்துரையாடிப் பெற்ற அனுபவங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. ஈழத்து மலையகக் கூத்துக்களுடன் தென்னகக் கூத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வினை மேற்கொண்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும். காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், காத்தவராயன் கூத்து ஆகிய கூத்துக்கள் ஆழமாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன.

அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை (20.5.1938-21.9.2005) அவர்களின் நினைவுப்பேருரையின் இறுதியில் அவரது வாழ்நாள் விருதுகள் பற்றிக் குறிப்பிடாமல் விடுவது எனது உரையைமுழுமையாக்காது என்று கருதுகின்றேன். பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தங்கப் பதக்கமும் இவருக்குக் கிடைத்த முதல் கௌரவமாகும். தொடர்ந்து யாழ் மாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, 'சுதந்திரன்” நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு, யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்ற கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசும் விருதும், ஈழநாடு தினசரி பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் 'சங்கிலியம்' முதற்பரிசு, யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக் கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது என்பவற்றை இங்கு பதிவுக்காகக் குறிப்பிடலாம்.

அமரர் காரை. சுந்தரம்பிள்ளையின் இன்னுமொரு ஆளுமைச் சிறப்பாக நாடகங்கள் மீது அவர் கொண்ட ஈடுபாட்டைக் கூறலாம். நடிகனாக, நாடகப் பிரதியாளனாக, நாட்டுக்கூத்து நெறியாளனாக, இவர் தன்னை விரிவுபடுத்தியிருந்தார். இவரால் மேடையேற்றப்பட்ட நாடகங்களை நான்கு பிரிவுகளுக்குள் வகுத்துத் தரலாம்.

1. சமூக நாடகங்கள். (தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமா மோகம், சித்திரமே சித்திரமே)
2. இதிகாச புராண நாடகங்கள் (பக்த நந்தனார், கர்ணன், சகுந்தலை, தமயந்தி, வில் ஒடித்த விதுரன், சிற்பியின் காதல்)
3. ஆட்டக் கூத்துகள் (பாஞ்சாலி சபதம், மூவிராசாக்கள், முத்தா மாணிக்கமா, காமன் கூத்து)
4. சிறுவர் நாடகங்கள் (மூத்தோர் சொல் வார்த்தை அமுதம், பாவம் நரியார்)

இவை அனைத்தும் தொகுக்கப்பெற்று ஒரு நூலுருவில் ஆவணப்படுத்தப்பட்டதாக தகவல் இல்லை. குடும்பத்தினர் இதில் கவனம் எடுக்கவேண்டும்.

மேலும் இன்று உலகளாவிய ரீதியில் ஆய்வாளர்களால் இலகுவில் ஈழத்து நூல்களை அடையத்தக்க பொறிமுறை ஒன்றினை ழேழடயபயஅ.ழசப என்ற இணையத்தளம் கொண்டுள்ளதை அறிவீர்கள். படைப்பாளியின் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் ஈழத்தவரின் நூல்களை இங்கு மின்வருடல் முறையால்  Pனுகு உருவில் எவரும் பார்வையிட முடியும். துர்அதிர்ஷ்டவசமாக அமரர் காரை. சுந்தரம்பிள்ளையின் தேனாறு, சங்கிலியம், காவேரி, இந்து நாகரீகத்திற் கலை, நடிகமணி வி.வி.வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும், சிங்கள பாரம்பரிய அரங்கம், வட இலங்கை நாட்டார் அரங்கு, பூதத்தம்பி இசை நாடகம் ஆகிய எட்டு நூல்கள் மாத்திரமே பதிவுக்குள்ளாகியுள்ளன.

எமது காலத்தில் வாழ்ந்த மறைந்த ஒரு ஆளுமையை காலத்தக்குக் காலம் நினைவு கூர்தலுடன் மட்டும் எமது பணி முடிவடைந்து விடுவதில்லை. நாம் இல்லாத எதிர்காலத்தில் அவர்பற்றிய கதையாடல்களுக்கும் ஆய்வுகளுக்கும் வசதியாக, இன்றைய காலத்திலேயே அவரது ஆக்கங்கள் அனைத்தும் ஆவணமாக்கிப் பேணை வைக்க வேண்டும். அடுத்த தலைமுறையினர் அதனைச் செய்வார்கள் என்ற எமது முன்னோரின் சோம்பேறித்தனத்தால் தான் இன்று எமது வரலாற்றையே தொலைத்து, அன்னியன் எழுதித் திணித்த வரலாற்றை நம்முடையதாகப் பாவனை பண்ணி வாழ்கின்றோம். இனியாவது நாங்கள் விழித்துக்கொள்ள வேண்டாமா? என்ற பெருங்கேள்வியுடன் எனது உரையை நிறைவுசெய்கின்றேன். வாய்ப்பினை நல்கிய காரை செ.சுந்தரம்பிள்ளை குடும்பத்தினருக்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.

(11.11.2017)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R