வட திருமுல்லைவாயல் சோழபுரீசுவரர் சோழபுரீசுவரம் என்னும் சிவத்தலம் சென்னை அம்பத்தூரை அடுத்து அமைந்த வட திருமுல்லைவாயலில்  இடம் கொண்டுள்ளது.  இங்கிருந்து  புழல் ஏரி 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற மாசிலாமணி ஈசுவரர், கொடியிடை அம்மன் கோவில் வளாகத்தினுள் வடதிசையில் அமைந் துள்ளது. சோழவுரீசுவரர் கோவில் பண்டு சோழர் கட்டிய தொடக்க நிலைக்  கோவிலாகவே இன்றளவும்  உள்ளது.  ஏனென்றால் மாசிலாமணீசுவரர் கோயில் அதனினும் பழமையானது புகழ் மிக்கது என்பதால்  இக்கோவிலை மேலும் வளர்த்தெடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்  எனக் கொள்ளலாம் . கோவில்கள் பண்டு தொடக்கத்தே எவ்வாறு இருந்தன என்பதை அறிய விரும்புவோர் இங்கு வந்து அறியலாம். 

வேந்தர்கள், மன்னர்கள் சதுர்வேதி மங்கலங்களையும் கோவில்களையும் ஆறு பாய்கின்ற இடங்களுக்கு அண்மையிலேயே அமைத்தனர். ஏனென்றால் பண்டமாற்று நிலவிய அக்காலத்தே கோவில் பணியாளர்களுக்கு சம்பளம் என்று ஏதும் கிடையாது  அதற்கு மாறாக அவர்களுக்கு விளைநிலங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் அவற்றில் பயிர் செய்து அறுவடையாகும் கூலங்களை பண்டமாற்று முறையில் மாற்றி வாழ்க்கை நடத்தலாம் என்ற ஏற்பாடு தான் இதற்கு காரணம். இக்கால் இப்பகுதியில் ஆறு ஏதும் இல்லை. பின் எப்படி பயிர் விளைத்திருக்க முடியும்? இத்தனைக்கும் அக்காலத்தே புழல் ஏரி இவ்வளவு பெரிதாகவும் இருக்கவில்லையே? என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழும். ஒரு கல்வெட்டு  இப்பகுதியை அண்டிய முகப்பேர் நுளம்பூரில் ஆறு ஒன்று ஓடியதை குறிக்கிறது. அந்த ஆறு கூவத்தின் கிளை ஆறாகவோ அல்லது குசத்தலை ஆற்றின் கிளை ஆறாகவோ இருந்திருக்கலாம். ஏனெனில் திருநின்றவூர் தொடங்கி திருமுல்லைவாயில் வரை உள்ள கோவில்கள் இன்று எந்த ஆற்றின் தொடர்பும்  இல்லாமலேயே உள்ளன. ஆனால் அக்காலத்தே எதோ ஒரு ஆற்றின் ஓட்டம்  இல்லாமல் அக்கோவில்களை அமைத்திருக்க மாட்டார்கள்.  கீழ்வரும் கல்வெட்டு அந்த ஐயத்தை போக்கும் சான்றாக உள்ளது.   (பார்வை நூல்: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வட்டுகள் .p.181) 

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் சீராசராச தேவர்க்கு யாண்டு 21 ஆவது ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து காஞ்சிபுரத்து திருவத்திஊர் நின்றருளிய  / அருளாளப்பெருமாளுக்கு துலா நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்தசியும் நாயாற்றுக்  கிழமையும் பெற்ற ரேவதினாள் நாயனார் கண்டகோபாலதேவர் கேழ்விமுதல்களில் நுளம் / பியாற்றுழான் னாராயணநம்பி  தாமோதரன் பெருமாளுக்கு வைத்த திருநுந்தாவிளக்கு இரண்டு இதில் குறைக்கோன் இளையபெருமாள் விளக்கு ஆறுமா சேவான்மேட்டு சேவைக்கோன் விள / க்கு கால் சிரியக்கோன் கைக்கொண்ட விளக்கு அரைக்கால் வடவாஇள் கோன் கைக்கொண்ட விளக்கு அரைக்கால் வடுகக்கோன்  விளக்கு அரைக்கால் கோயில் நங்கைக்கோன்  விளக்கு / அரைக்கால் யாதரி கைக்கொண்ட விளக்கு  அரைக்கால் கன்னிக்கோன் கைக்கொண்ட விளக்கு அரை இராமக்கொன் கைக்கொண்ட விளக்கு ஆறுமா அரை ஆக விளக்கு  இரண்டுக்கு விட்ட பாற்ப்பசு / இருபதும் சினைப்பசு இருபதும் பொலிமுறை நாகு இருபத்துநாலும் ரிஷபம் இரண்டும் ஆக உரு அறுபத்து ஆறுங்  கைக்கொண்டு  அரிய்யென்ன வல்லனாழியால்  நெய் உரியும் தயிரமுது / நாழியும் கோயிற்த்தேவைய்களும் செய்யக்கடவதாகவுங் கைக்கொண்டு இத்திருநந்தா விளக்கு  சந்திராதித்தவரை  செலு த்தக்கடவோம் பெருமாள் கோயிற் தாநத்தோம்.

விளக்கம்: 3 ஆம் இராசராச சோழனின் 21 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1238) காஞ்சிபுரம் அருளாளப் பெருமாளுக்கு   பெயர்குறிக்காத கண்டகோபல மன்னனின் (திருக்காளத்தி தேவனாக இருக்கவேண்டும்) வாய்மொழி ஆணைகளை நேரில் கேட்டு ஓலையில் எழுதும் அதிகாரிகளில் (கேழ்விமுதலிகள்)  நுளம்பியாற்று உழான் (நாட்டு நிலை சார்ந்த நான்காம் அதிகார நிலை அதிகாரி)  நாராயணநம்பி தாமோதரன் பெருமாளுக்கு இரண்டு நந்தாவிளக்கு எரிக்க 66 மாடுகளை வழங்குகிறான். அதில் 20 கறவை பசுக்கள்,, இன்னும் 20 கருவுற்ற மாடுகள், 26 புணரும் தகுதி பெறத்தக்க ஆண் கன்றுகள், 2 காளைகள். இவற்றை  இடையர்களான 9 கோனார்கள் பிரித்துக் கொள்கின்றனர். பசுக்களை  பெற்றவர் இம்மாடுகளில் இருந்து  உரி நெய்யும் தயிரமுத்திற்கு தயிரும் கொடுக்க ஓப்புக்கொள்ள அவற்றை கோயில் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள கோயில் பொறுப்பாளர்கள்  ஒப்புக்கொள்கி ன்றனர். 32 மாட்டில் அரை 16, கால் 8. ஆறு  மாடு என்றால் காலுக்கும் குறைவு. அரைக்கால் என்றால் காலில் பாதி 4. இதாவது 1/8.  ஒன்பது பேர் பெற்றுக்கொள்ளும் பசுக்கள்  6 + 8  + 4 + 4  + 4  + 4  + 4 + 6 + 6 = 40 மாடுகள் . கறவைப் பசு 20, சினைப்பசு 20 சேர 40 கணக்கு சரியாக  வருகிறது.  மற்றவை பால்கறக்காத காளையும் காளைக் கன்றுகளும் ஆகும்.

நுளம்பியாறு இன்றைய சென்னை முகப்பேறு - நுளம்பூர் - நொளம்பூர் என்று அறியப்படுகிறது. இதாவது, நுளம்பியாறு என்றோர் ஆறு அவ்வூரின் வழியே பாய்ந்துள்ளது.

கீழே உள்ள படம் :

1. வடக்கு மேற்கு திசை தோற்றம்.

 

 வடக்கு மேற்கு திசை தோற்றம்.


2 சோழவுரீசுவரம் வாயிற் தூண் கல்வெட்டு.

சோழவுரீசுவரம் வாயிற் தூண் கல்வெட்டு.

 

கல்வெட்டுகள்:

இக்கோவிலில் உத்தம சோழனின் 14 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு உள்ளதை வைத்து இக்கோவில் கற்றளி நிலையை 983 AD முன்பே பெற்றுவிட்டது என்பதை அறிய முடிகிறது. இக்கோவிலில் பழைய தூண்களில் வடிக்கப்பட்ட கல்வெட்டுகள் உட்பட மொத்தம் 30 கல்வெட்டுகள் மேல் உள்ளன. .சோழபுரீசுவரர் கோவில் படித்தூணில் வலப்புறத்தில் தலைகீழாக ஒரொஒரு  கல்வெட்டு வெட்டப்பட்டு           உள்ளது. (மேல் உள்ள இரு படங்கள்)

கல்வெட்டு பாடம் & விளக்கம்: தெளிவின்மை காரணமாக முழுக்கப் படிக்க இயலவில்லை. சொற்களும் தொடர்ச்சியாக இல்லை. அடுத்துள்ள பக்கப் பகுதியில் தொடர்ச்சி இருக்ககூடும். படித்தவரையில் பாடம்: வளைவான அடைப்புக்குறிக்குள் உள்ளவை யூகமாகப் படித்தவை. நேர்கோட்டு  அடைப்புக் குறிக்குள் உள்ளவை  கல்வெட்டில் இல்லாத , யூகம் செய்த எழுத்துகள்.

1                  2 கிழக்கும் 3 (கெல்லைக்)  4 குழிக்கு....  5 ற்பார்க்கெ[ல்லை] 6 (க்குள்பட்ட) 7 துக்கு எம்மி[ல்]
8 [இசை]ந்த பெருநா[ன்கெல்லை]   9 ..ண்டு மனை 10 குடுத்தோம்  11 (போனகமும்)     12 ---   13. -----   
14 (திரு நன்) [தா விளக்கு?] 15 ..நெய் ....

கோயிலில் விளக்கெரிக்கவும், போனகத்துக்கும் (உணவுக்கும்) நிலக்கொடை அளிக்கப்பட்டுள்ளது எனலாம். நிலத்தின் எல்லை பற்றிய குறிப்புள்ளது.  -- கோவை சுந்தரம்


இராசேந்திர சோழன் கல்வெட்டு:

திருமுல்லைவாயல் மாசிலாமணீசுவரர் கோயிலுள் அலுவலகம் முன்பாக  வெளிச்சுற்றுப் பகுதியில் தனித்து எடுத்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் ஒன்றை கோவையை. துரை சுந்தரம் வாசித்துள்ளார் . அது கீழே

ஸ்ரீ .............................. .......தே / வற்கு யாண்டு மூன்(றா) /  வது ஜயங்கொண் / ட சோழ மண்டலத் / து புலியூர் கோட்டத் / து மாங்காடு நாட்டு / 7  ---- / 8 - - - -9- - - - .கொ (த்துக்காளப்பெ) /. நாட்டுத் தேவதா /  னந் திருமுல்லைவாயி /  லாண்டா(ற்)குச் [சந்த்யாதி]/ த்தவற் ஒரு ந[ந்தா] விள /  க்கு ...........................வி ட்ட /  (செம்மறி) சாவாமூவாப் / பேராடு தொண்ணூறு இ /  வ்வாடு தொண்ணூறு/ ம் இவ்வாடு ஒன்றினு(க்) /  கு ஓராண்டு..............

விளக்கம்: கல்வெட்டின்படி,. இந்த ஊர் கோயிலுக்குத் தானமாகத்தரப்பட்ட தேவதான் ஊர். கோயிலுக்கு விளக்கெரிக்கத்
தொண்ணூறு ஆடுகள் கொடையாக அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.  வழக்கமாக, ஆடுகள் என்றுமட்டும் வரும். இக்கல்வெட்டில், செம்மறி ஆடுகள் என்று  குறிப்பாக  எழுதப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொல்லியல் துறையால் இக்கல்வெட்டு படியெடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

கல்வெட்டு எண்: 738.  கல்வெட்டு மாசிலாமணீசுவரர் திருக்கோவிலின் முதல் சுற்று கிழக்குச் சுவறில் உள்ளது. இது
முதல்  இராசேந்திர சோழன் ஆட்சியில்  கி.பி.1014-1015, திருமுல்லைவாயில் உடையார்க்கு, நந்தா விளக்கை எரிப்பதற்கு, நாகன் வெள்ளியன் என்பான் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த இடையன் சம்பியானிடம் 90 ஆடுகளை கொடுத்தது பற்றிக் கூறுகின்றது.


விசய கண்டகோபாலன் கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ மதுராந்தக பொத்தப்பி சோழன் (மூலை 30 ஆண்டு ) செயங் கொண்ட  /  சோழ மண்டலத்து புழர் கோட்டத்து / கானப் பேறூர் நாட்டு உடையார் திருமுல்லைவாயலுடைய நாயனார்க்கு விசைய கண்ட கோபாலன் சித்திரைத் தி / ரு நாள் எழுந்தருளவும் விசைய கண்டகோபாலன் சந்தி அமுது  செய /யவும் பூசைக்கும் அமுதுபடிக்கு ம் திரு / முல்லைவாயல் பொன் வரி, கடமை நாட்டு வரி, காணிக்கை  உள்ளூர் ப்புறக்கத்து  வரி ம / ற்றும் எப்பேர்ப்பட்ட  வரிகளும் / அவனத்து ஆயம் இழக்க ஸர்வ மான்யமும்  சந்திரதிராதித்தவரையும்   செல்வதாக  விட்டோம் இப்படி செய் /  வதே இவை  கண்ட கோபாலன் எழுத்து.

விளக்கம்: இக்கல்வெட்டு கருவறையின்  தென் புறச்சுவரில் விநாயகர் சிலைக்கும் குருபகவான் சிலைக்கும் இடையே தரையை ஒட்டிய மடிப்பில் வெட்டப்பட்டுள்ளது.
.
மண்டலம், கோட்டம், வளநாடு என்பன முறையே மன்னர், அரைசர், கிழார்/கோன்  ஆகியோரால் ஆளப்பட்ட நிர்வாகப்பகுதிகள். ஒரு வேந்தனிடத்தில் 30,000 - 40,000 பேர் கொண்ட படை இருக்கும். மன்னனிடம் 10,000 - 15,000 பேர் கொண்ட படை இருக்கும். ஒரு அரைசனிடம் 3,000 பேர் கொண்ட படை இருக்கும்  கிழார் கோனிடம் 150 - 300 பேர் கொண்ட மிகச் சிறு படை இருக்கும். ஆட்சிப் பகுதியின் எல்லை, வரி வருவாய்க்கு தக்கவே  இந்த படையாள் எண்ணிக்கையும்  அமைகிறது. 

திருமுல்லைவாயல் கானப்பேறூர் நாட்டில் அடங்கிய ஒரு சிறு கிராமமாக இருந்துள்ளது. இங்குள்ள ஈசனுக்கு சித்திரை மாதத்தில் நடக்கும் திருநாளுக்கும், விசய கண்டகோபாலன் பெயரில் அமைந்த சந்தி பூசைக்கும் அமுது படிக்கும் திருமுல்லைவாயலில் திரட்டப்படும் எல்லா வகை வரிவருவாயையும் அரசனுக்கு கொடுக்காமல் அதை  ஈசனுக்கு வழங்க ஆணையிட்டான் விசய கண்ட கோபாலன்.   இக்கல்வெட்டில் இரண்டு கண்டகோபாலர் பெயர் இடம் பெறுகிறது. ஒன்று மன்னனான மதுராந்தக பொத்தப்பி மனுமசித்த சோழன் காளத்தி தேவன். இக்கல்வெட்டு 3 ஆம் இராசராசனுக்கு  30 ஆம் ஆட்சி ஆண்டில் (1246 A D) வெளியிடப்படுகிறது.  இன்னொன்று இக்கல்வெட்டை வெளியிட்ட விசய கண்ட கோபாலன். இவன் மதுராந்தக பொத்தப்பிச் சோழனுக்கு  மகனாய் இருத்தல் வேண்டும். கல்வெட்டு வெளியிடும் போது இளவரசன்  பொறுப்பில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் 1250 AD இல் விசய கண்ட கோபாலன் தொண்டை மண்டலத்தின் வேந்தனாக பொறுப்பேற்கிறான். அவன் கால கல்வெட்டில் அவன் திரிபுவன சக்கரவத்திகள் என்று குறிக்கப்படுகிறான். அதே நேரம் மதுராந்தக பொத்தப்பி சோழன் 3 ஆம் இராசராசனுக்கு அடங்கிய மன்னனாகவே  ஆட்சி புரிகிறான். கல்வெட்டு மரபுப்படி முதலில் வேந்தனின் மெய்கீர்த்தியும், பெயரும், ஆட்சி ஆண்டும் குறிப்பிட்டு தான் கல்வெட்டு எழுதப்படுவது வழக்கம்.  காஞ்சி அருளாளப் பெருமாள் (வரதர்) கோவிலில் பொறிக்கப்பட்ட மதுராந்தக பொத்தப்பி சோழன் கல்வெட்டுகள் அவனை 3 ஆம் இராசராச சோழனுக்கு அடங்கிய மன்னனாகவே சுட்டுகின்றன.

தெலுங்கு சோழர்களாக அறியப்படுகிற கண்டகோபாலர்கள் நெல்லூர் அருகே உள்ள பொத்தப்பியை தலைநகராகக்  கொண்டு  ஆட்சிபுரிந்த தெலுங்கு பல்லவராவர். இதற்கு வீரகண்ட கோபாலன் கால காஞ்சி வரதர் கோவில் கல்வெட்டே சான்று. சோழருக்கு கட்டுப்பட்டதால் பிற அரசர்கள் போலவே தன்  பெயருடன் சோழன் என்ற பெயரை ஒட்டாக இவன் வைத்திருக்க வேண்டும். இதை வைத்து இவர்களை தெலுங்கு சோழர் என்பது பிழையாகும்.  இந்த மதுராந்தகப்  பொத்தப்பி சோழனின்  தம்பி தம்முசித்தன் 1205 A D இல்  நெல்லூருக்கு மன்னனாக முடிசூட்டிக்  கொண்டான் .  அப்படியானால் தொண்டை மண்டலத்தின் தென் பகுதியில் இருந்து கொண்டு பொத்தப்பி சோழன்  ஆட்சியை நடத்தியிருக்க வேண்டும். 40ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்ததாக தெரிகிறது. தமிழகம்  விசய நகர ஆட்சியில்  அல்ல கண்டகோபாலர் ஆட்சியிலேயே, 13 ஆம் நூற்றாண்டிலேயே  தொண்டைமண்டலம் வரை தெலுங்கர் ஆட்சிப் பகுதியாகிவிட்டது.

விசயநகர ஆட்சிக்கால கல்வெட்டு:

இக்கல்வெட்டு கருவறை புறச்சுவரில் விநாயகர் சிலைக்கும் குரு பகவான் சிலைக்கும் இடையே தரையை ஒட்டிய மடிப்பில் வெட்டப்பட்டுள்ளது  

1. ஸ்வஸ்தி ஸ்ரீ  ஹரியராயனுக்குச் செல்லாந் நின்ற  சுபானு சங்வற்சரம்    நா     /  யற்று  பூறுவபக்ஷத்து வெ /   ள்ளிக்கிழமையும் பூநையும் பெற்ற   புனர்பூசத்து நாள் ஐயங் கொண்ட 

2.   சோழ மண்டலத்து புழர்  கோட்டம்  ஆன விக்ரம சோழ வளநாட் டு கான /  ப் பேறூர்  னாட்டு  உடையார் /  திருமுல்லைவாயல் உடையனாயகர்க்கு இ மண்டலத்து  இக்கோ(ட்ட)த்து  அம் ப    

3. த்தூ(ர்) னாட்டு அம்பத்தூ(ர்) வல்லங் கிழான் சோழ பல்லவதரையன் அருளாளனா  / தர்  செய்ய நாராயணதேவ / னேன்    காணி உதக பூர்வ பிறமாணம் பண்ணிகுடுத்தபடி              வெண்ணை 

4. யூர்  நாட்டு  எங்கள் காணியான வெண்ணை இன் கரை  நாலில் என்  வி  /    ழுக்காடு   நாலில் ஒன்றும் நாய  / னார்  திருபங்குனித் திருனாள் திருவூடல் திருநாள்  என் உபயத்துக்கு   திருநாமத்து
5.  க்  காணி ஆக உதகம்  பண்ணிக் குடுத்தேன் இந்த உதகபூர்வம்படி யே  /   நடத்திக்கொண்டு-ஏழாந்தி /    நாள் திருவூடல் திருனாள் சந்திராதித்தவரைக்கு தாழ்வற நட த்தி க்கொள்  
6. ளவும்  இப்படிக்கு   திருமலையிலே சிலாலேகை பண்ணிகுடுத்தேன் /  அருளாளநாதர்  செய்ய /   ராயண தேவனேன் இப்படிக்கு இவை அருளாளன்     செய்ய  நா

7. ராயண  தேவன் எழுத்து இப்படி  அறிவேன் சோழ பல்லவதரைய / ன்   உலகு உய்யக் கொ /    ண்டார்    வேங்கடத்தான் எழுத்து இப்படி  அறிவேன்  சோழ

8. ப் பல்லவதரையர் வடுகநாதர் திருவேங்கடத்தான் எழுத்து /  இப்படி    அறிவேன்   சோ /  ழ பல்லவதரையன் அறம் வளத்த நாயன் எழுத்து

இப்படி அறிவேன்  சோழப்பல்லவதரையன் உலகு தொழ நின்றானேன். இப்படி அறிவேன்  சோழ பல்லவதரையனான  ம - -நின்ற  பெருமாள் சின்மய முதலி எழுத்து.

விளக்கம்: இரண்டாம் ஹரிஹரர் ஆட்சி சுபானு ஆண்டு 1403 - 1404 AD திருமுல்லைவாயல் நாயனார்க்கு அம்பத்தூர் நாட்டு வல்லன் கிழான் சோழ பல்லவத்தரையன் அருளாளனாதர் ஜெயநாராயண தேவன் வெண்ணையூர் நாட்டில் அவர்களது குடும்ப காணியில் தன்  பாங்கான நாலில் ஒரு  பங்கை பங்குனித்திருநாள், திருவூடல் திருநாள், ஏழாந்தி திருநாள் ஆகியன இடையறாது நடத்த வேண்டி நிலத்தை நீரட்டி உபயமாக ஈசன் பெயருக்கு எழுதித் தந்துள்ளான். இதைப் பற்றி  திருமலையில் கல்வெட்டி குறித்துள்ளான். இதை அவன் உடன் பிறந்த உலகு உய்யக்கொண்ட வேங்கடத்தானும், வடுகநாதர் திருவேங்கடத்தானும், அறம்வளர்த்த நாயனும், உலகு தொழ நின்றானும்,     மா  - -நிறை பெருமாள் சமைய முதலியும் ஒப்புகின்றனர். (acknowledge). உடன் பிறந்த ஐந்து பேர் சாட்சி கையெழுத்திடுகின்றனர். இதில் இன்றுள்ள அம்பத்தூர் பெயர் இடம்பெறுகிறது. முதலியென்பது (chief) என்ற பொருளது. இந்த முதலி நிலங்களுக்கு வரியிட்டும் பெயர்மாற்றியும் ஆவணப்படுத்துபவன். இவன் பல்லவதரையன் அருளாளனானதனுக்கு உடன்பிறந்தான் ஆவான். 

பண்டு வேந்தன் முதல் அதிகார நிலையிலும், மன்னன் அவனுக்கு  கீழ்படிந்து  இரண்டாம்  அதிகார நிலையிலும், அம் மன்னன் கீழ் அரையன் > அரைசன் > அரசன் மூன்றாம் அதிகார நிலையிலும், கிழான் அரையனுக்கு கீழ் நாலாம் அதிகார நிலையிலும் இருந்துள்ளனர். பல்லவர்கள் இந்த நான்கு அதிகார நிலையிலும் இருந்ததற்கு இக்கல்வெட்டு தக்கச்சான்று. வேந்தன் அல்லது மன்னன் தான் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் போதே தன் உடன்பிறந்தாரை  நாட்டின் இன்னொரு பகுதிக்கு தன் கீழ்படிந்த ஆட்சியாளராக பொறுப்பேற்க வைப்பதால் இவ்வாறு நான்கு நிலையிலும் ஒரே அரச குடியினர் ஆட்சிப்பொறுப்பில் இருப்பது காலஓட்டத்தில் நடந்தேறிவிடுகிறது.  இதற்கும்  நாட்டு  கிழார் கோன் கீழ்அடங்கும்  சில கிராம பண்ணையார்களும் இந்த அரசகுடியராகவே இருந்துள்ளனர்.

எனக்குள்ள கேள்வி என்னவென்றால் தமிழகத்தில் விசயநகர ஆட்சி 1378 இல் ஏற்பட்ட பிறகு இந்த மூன்றாம் நிலை அதிகாரப் பொறுப்பான அரையன் பதவியும்,  நான்காம் நிலை அதிகாரப் பொறுப்பான கிழான் பதவியும் நீக்கப்பட்டுவிட்டதாகத்  தெரிகிறது. அதற்கு பதிலாக நாயக்கர் என்ற பதவி உருவாக்கப்பட்டுவிட்டது. இருந்தும் இந்த பழைய கிழான் பதவியை செயநாராயணன் குறிப்பது ஏற்கனவே அப்பதவியில் இருந்தவர்கள் தாம் இறக்கும் வரை அதில் தொடரலாம் என்ற விலக்கினாலா? அல்லது ஆட்சி அதிகாரம் இழந்த பிறகும்  மக்களிடம் தனக்கு முன்பு இருந்த செல்வாக்கு  மறைந்து மட்கிப் போகாமல்  காத்திடவா? என்று தெரியவில்லை. மேலும், அரச குடும்பத்தில் ஒருவர்தாம் பதவியில் இருந்துள்ளார் ஆனால் எல்லோரும் அப்பதவியை தம் பெயரின் பின்னே போட்டுக்கொள்வது எவ்வாறு தகும்? 

மல்லிகார்ச்சுனராயர்  கால கல்வெட்டு:

இக்கல்வெட்டு வெளிப்புறத்தில் தலமரமான  முல்லைக்கொடிக்கு  எதிரே உள்ள கிழக்கு நோக்கிய பாறைச் சுவரில் வெட்டப்பட்டுள்ளது

கல்வெட்டுப் பாடம்:

1  ஸ்வஸ்திஸ்ரீ ம(ன்) மஹாமண்டலேச்வர(ர்) ராஜாதிராஜ பரமேச்வர
2  (பூர்வ) தக்ஷின பச்சிம உத்தர சமுத்திராதிபதி வீரப்ரதாப ம(ல்)லிகர்ற்
3  சுன தேவ மஹாராயர்கு செல்லாநின்ற பிரசாபதி ஸம்வற்சரத்து
4  ..........பூர்வபக்ஷத்து தெசமியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற பூசத்து நாள் செய்துகொண்ட
5  சோழமண்டலத்து புழர்கோட்டத்து  கானப்பேறூர் நாட்டு  உடையார் திருமுல்லை வாயல் உடை(ய)
6  மஹாதேவற்கு உத்தம சோழிப் பதாகை ஆன குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்க
7  லத்து மஹாசபையோம் நாச்சியர் கோட்டை  நாச்சியார் திருப் பூரத்திருநாள் எங்கள் உ
8  பையம் அமுதுபடி கறிஅமுதுபடி வெஞ்சனம் சாத்துபடி ...படிக்கும்  எங்கள் ஊர் கிழக்கு
9  ...........இறையிழிச்சி ..............ஆக விட்ட நிலம் கீழ்(பாற்)கெல்லை திரு
10 முல்லைவாயல் (எ)ல்லைக்கு மேற்கும் தென்பாற்கெல்லை திருக்கா...கனூர்க்கு  வடக்கு ........கரைக்கு
வடக்கு மேல்பார்கெல்லை
11 .................வடக்கு (வேளானூர்) எல்லைக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை  வெள்ளானூர்
12 ..ல்லைக்கு தெற்கும் இந்நான்கெல்லைகுட்பட்ட நிலம் சந்திராதித்தவரையும்
சறுவமானியம் செல்வதாக சிலா
13  லேகை பண்ணிக்குடுத்தோம் சோழிபதாகை மஹாஸபையோம் இப்படி ....உய்யக்கொண்டா(ந்)
14  ...........(சூடாமணி) எழுத்து சபையார் பணியால் சோழிப்பதாகை உடையாந் பெரிய முதலி எழுத்து
15. -- -- - பட்ட  -- - - -.

விளக்கம்:
மல்லிகார்ச்சுனர் ஆட்சிக்காலத்தில் பிரஜாபதி (பிரஜோத்பத்தி) ஆண்டில் திருமுல்லைவாயல் நாச்சியார்க்கு,  பூரத் திருநாளன்றுக்கு வேண்டிய அமுதுபடி, கறிஅமுதுபடி, சாத்துபடி  ஆகியவற்றுக்காக சோழிப்பதாகை சபையார் நிலக்கொடை வழங்கிய செய்தி. நிலத்தின் எல்லைக் குறிப்புகள் உள்ளன. சான்றொப்பம் இட்டவர் இருவர் பெயர்கள் உள்ளன.  மல்லிகார்ச்சுனரின் ஆட்சிக்காலம் 1446-1465. இந்தக் காலப்பகுதியில் பிரஜாபதி ஆண்டு கி.பி. 1451-1452 ஆகும். எனவே, கல்வெட்டின் காலம்   கி.பி. 1451-1452 ஆகலாம். - கோவை சுந்தரம்.

கொடியிடை நச்சியாருக்கு சோழிப்பதாகை, இன்றைய கோவில் பதாகை ஊர் சபையார் பூரத்திருநாள் அமுதுபடி சாத்துப்படி  ஆகியவற்றுக்கு நில தானமும் தந்து வரி குறைப்பும் செய்து கொடுத்துள்ளனர். நிலத்தின் எல்லை குறிப்பிடும் போது வெள்ளானூர் போன்ற ஊர்கள் குறிக்கப்படுகின்றன. கோவில்பதாகையும் வெள்ளான்ஊரும் ஆவடிக்கும் திருமுல்லைவாயிலுக்கும் இடையே அமைந்துள்ள ஊர்கள் ஆகும்.

கோவில்பதாகையில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள உருள்வடிவத்  தூண்கள் அக்கோவில் சோழர்  காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்ககு சான்று. அதில் கல்வெட்டு ஏதும் உள்ளதா என்று அறிய முடியவில்லை.

இணையத்தில் : https://www.dharisanam.com/temples/sri-masilamaneeswarar-temple-at-thirumullaivoyal

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R