எழுத்தாளர் புதியமாதவி'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்  -


பதிவுகள் பெப்ருவரி 2008 இதழ் 98
(2006, அக்டோபர் 13,14 களில் பாரீஸில் நடந்த 26வது பெண்கள் சந்திப்பில் வாசித்த கட்டுரை.  அ. மங்கையின் தொகுப்பில் , 'மாற்று' பதிப்பக வெளியீடாக வெளியான 'பெயல் மணக்கும் பொழுது' ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள் நூல் பற்றியது.)

1986ல் வெளிவந்த 'சொல்லாத சேதிகள்' வெளிவந்தப் பிறகு தனித்தனியாகவும் கூட்டு முயற்சியாகவும் பல்வேறு தொகுப்புகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. 80களில் ஈழத்தில் தொடங்கிய ஆயுதப்போராட்டம், தமிழ்த் தேசிய இயக்கத்தின் எழுச்சி மாணவியரிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. சில கூட்டு முயற்சிகளும் அமைப்புகளும் தோற்றம் கண்டன. பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப்பறவைகள், நங்கை, இசுலாமிய பெண்கள் மத்தியிலிருந்து வெளிவந்த மருதாணி ..போன்ற பத்திரிகைகள் தான் பெண் எழுத்துகளுக்கு கவிதைகளுக்கு மிகப்பெரிய தளம் அமைத்துக் கொடுத்தன.

பேராசிரியை அ.மங்கை அவர்கள் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து "பெயல் மணக்கும் பொழுது" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அத்தொகுப்பிலிருக்கும் கவிதைகளை முன்வைத்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

யுத்த கால சூழலில் ஆண்களின் பங்களிப்பு பெண்களின் பங்களிப்பை விட அதிகம்தான். இதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தச் சூழலின் பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகமாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகளை விளைவித்தது. அந்த வலியை உணரும் போதுதான் காலம் காலமாய் யுத்தக்களத்தில் பெண்ணும் பெண்ணின் உடலும் எதிரிகளின் வன்மம் தீர்க்கும் ஒரு பொருளாக இருப்பதைத் தலையில் அடிக்கிற மாதிரி உணர்த்தியது.சண்டை நடக்கிறது, வெட்டு, குத்து, ஒருவர் பிணத்தின் மீது ஒருவர் விழுந்து சாகட்டும், ஏன் பெண்ணின் உடலை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க வேண்டும்? ஆடு, மாடுகளைக் கவர்ந்து செல்லும்போது அந்தப்புரத்து பெண்களையும் எதிரி நாட்டு அரசன் தன் அடிமைப்பெண்களாக சிறை எடுத்துச் சென்றான் என்று வரலாறு எழுதப்பட்டிருக்கிறதே.. இந்த இடத்தில் அந்தப்புரத்து பெண்களை அடிமைகளாக சிறைப்பிடித்து சென்றான் என்று பொய்த் தோற்றம் தரும் வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியும், அந்தப் பெண்களைத் தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்து கொள்ளும் பொருட்டு, சிறை எடுத்துச் செல்லப்பட்டதை அறிகிறோம். புராண இதிகாசக் காலம் முதற்கொண்டு போர்க்காலத்தில் பெண் அனுபவிக்கும் வலி அவளே அவளுக்கானதாக அமைந்துவிட்டது. இந்தச் சுழலில் தான் போர்மேகங்கள் சூழ்ந்த ஈழத்து மண்ணில் எழுதப்பட்ட பெண் கவிஞர்களின் எழுத்துகள் தனித்து கவனம் பெறுகின்றன. அவர்களின் பெண்ணியம், அமைதிக்கான கருத்துகள் யாவுமே மேற்கத்திய இசங்களின் தாக்கமின்றி சுயம்புவாக இருப்பதன் அடிப்படைக் காரணம் இதாகத் தான் இருக்க முடியும்.

போர்ச்சூழலில் சிதைந்தப் பெண்ணின் உடல் எதிரியின் வன்மத்தைக் காட்டும் குறியீடு. அந்தக் கருத்து தளத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய் அதே வலியும் வேதனையும் தான் விரும்பாத போது தன்னைப் பலவந்தமாக அனுபவிக்கும் ஆணின் இச்சையுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஓர் அனுபவத்தை மிகவும் இயல்பாகத் தந்துவிடுகிறது.இரண்டு தளத்திலும் நடக்கும் செயல் ஆக்கிரமிப்பு, வன்கொடுமை, தன் வலிமையை மிகவும் கீழ்த்தரமாகக் காட்டும் வன்மம். அந்த வன்மத்தை நிகழ்த்துபவன் அந்த கணத்தில் மனைவியின் உடல் மீது முழு அதிகாரம் படைத்த் ஆணாக இருந்தாலும் கண்டனத்துக்கு உரியவன். 10 வயதுப் பெண்ணைப் புணர்ந்தான் என்ற கேஸில் புணர்ந்தது தவறு அல்ல, கணவனுக்கு தனது மனைவியோடு சம்பந்தம் வைத்துக்கொள்ள உரிமையுண்டு என்று அன்றைய இந்தியாவில் பெரிய தலைவராக போற்றப்பட்ட திலகரின் தலைமையில் கிளர்ச்சி நடந்தது என்ற வரலாற்று செய்தி. பெண்ணுரிமையைப் பேசும் தளத்தில் ஒரு பெண்ணின் உடல் மீது அவள் கணவனுக்கு இருக்கும் உரிமை அதிகாரம் பற்றிப் பேசுவதற்கு இன்றைக்கும் தயக்கம்தான் இருக்கிறது. இந்தப் பின்புலத்தில் தான் கவிஞர் ஆழியாளின் மன்னம்பேரிகள் கவிதை பெண்ணிய சிந்தனைத் தளத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது, இப்போதும் அந்த அதிர்வுகளை நாம் உணர முடிகிறது.

காலப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்
..
நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.

என்னை உற்றுக்கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்

அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.


இதுவரைக்கு இந்தக் கவிதை தெருவில் போகும் ஒவ்வொரு பெண்ணையும் தனக்கான இச்சைத் தீர்க்கும் பார்வையுடன் அலையும் பல்வேறு ஆண்களைக் குறிக்கிறது. அதிலும் இவர்களுக்குள்ளும் பல்வேறு வடிவங்கள் உண்டு நாய் மாதிரி வாலை ஆட்டிக்கொண்டு பின்னாலேயே சுற்றுபவன் இரத்த வெறியுடன் இரவில் அலையும் ஓநாய் என்று நிறைய வகைகள் உண்டு என்கிறார்.

அழகி மன்னம்பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்குமென
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்

..
இப்போது இக்கவிதையில் அந்தப் பெண்ணுக்கு தெருவில் உலாவும் தன்னைத் துரத்தும் மிருகங்களைக் கண்டவுடன் மன்னம்பேரியையும் கோணேஸ்வரியையும் துரத்திய மிருகங்கள் நினைவுக்கு வருகிறது.இதோடு இந்தக் கவிதை முடிந்திருந்தால் போர்க்காலத்தில் காலம் காலமாய் பெண்கள் அனுபவிக்கும் கொடுமையைப் பற்றி எழுதிய ஒரு பதிவாக மட்டுமே இருந்திருக்கும்.

கவிதையின் முடிவில்

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் - நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.


என்று கவிதையை பெண்ணிய தளத்தின் உச்சத்தில் கொண்டு முடித்திருப்பார்.


எந்தப் படைப்பிலும் அந்தப் படைப்புக்கு தேவையில்லாமல் ஒரு சொல் கூட இருக்கக் கூடாது. அதிலும் கவிதையில் இது கறாராகப் பின்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் இக்கவிதையில் மிகவும் சிறப்பாகக் கவனத்துடன் கையாளப்பட்டிருக்கிறது இக்கவிதையின் வெற்றிக்கு இன்னொரு காரணம்.

இக்கவிதையின் நீட்சியாகத்தான் பெண்ணியாவின் கவிதை

ஒரு பெரும்கனவுலகைக் கட்டி
நான் பதினேழு வருடங்கள் ஆண்டேன்
மனிதத்துவத்தைத் தொலைத்த
தகப்பன் மகன்களின் இடையே
எனக்கான
ஒரேயொரு காதலனையும் காணமுடியவில்லை..

என் சிறகுகள் மீது நீளும்
எல்லாக் கைகளுக்கு எதிராகவும்
என் கனவுகள் மீது
கொடூரங்களை வரைய நீளும்
எல்லாத் தூரிகைகளுக்கெதிராகவும்
என் பயணம் ஆரம்பித்தாயிற்று

என்று பெண்விடுதலைக்கான பயணத்தைப் பிரகடனத்தைப் படுத்தி இருக்கும்.

மணிப்பூரின் பெண்கள் மனோரமாவின் படுகொலைக்குப் பின் இந்திய இராணுவத்தை எதிர்த்து தெருவில் இறங்கி நிர்வாணத்தையே ஆயுதமாக ஏந்தி மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று இந்தியாவின் மற்ற மாநிலத்தவரைத் திரும்பிப்பார்க்கவைத்தனர்.

கவிஞர் ரேவதியின் தலைப்பிலிக் கவிதை

அன்பான என் தமிழச்சிகளே
உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்
என் அம்மாவே
உன்னையும்தான்...

சமாதனத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்
பாவம்
அவர்களின் வக்கிரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்
வீரர்களே
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்
ஆகவே,
வெடிவைத்தே சிதறடியுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விட் முடியாதபடி.

சிங்கள சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை

என்ற கவிதை மிகவும் தீவிரத்துடன் பெண்ணுக்கு எதிரிகளிடமிருந்து விளையும் கொடுமையை விளக்கி, அவர்கள் எங்களிடம் தங்கள் வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்வதால் தற்காலிகமாக சிங்கள சகோதரிகள் அவர்களின் வக்கிர ஆக்கிரமிப்பிலிருந்து தப்பித்தார்கள் என்று விரிக்கும் போது அதிர்ச்சியில் நாம் உறைந்து போகிறோம்.

அந்நியன் ஆத்திரத்தில் அடக்கு முறையின் வடிவில் பெண்ணிடம் வல்லாங்கு நடத்துகிறான். அதையே தன் ஊரவன், தன் இனத்தவன் காமனாய், கயவனாய் நடந்து கொண்டால் இவர்களை என்ன செய்யலாம் என்று கேட்கிறது ரங்காவின் 'உண்மையிலும் உண்மையாக; கவிதை

முகைசிரா முகைடீன் எழுதியிருக்கும் 'ஆண்மையின் இலக்கணம்' (பக் 206)

தன் மகனுக்கும்
ஆண்மையின் இலக்கணத்தை
அறிவிப்பதாய்..
தினம் தினம் தாரத்துடன் சண்டையிட்டான்

என்று தொன்றுதொட்டு தொட்டில் பழக்கமாய்த் தொடரும் ஆண்களின் இயல்பான பெண்ணை அடித்து அடக்கியாளும் கருத்தைக்கூறி அப்படி அடித்து அடக்கி ஆள்வதையே ஆண்மை என்று அலட்டிக்கொள்ளும் ஆண்களின் எண்ணத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

வரதட்சனைக் கொடுமை பற்றி உமையாளின் ஒரு கவிதை அம்மாவிற்கு( பக் 54) உயிர்த்தப்புவதற்கு ஊரைவிட்டு ஓடிப் போக வேண்டிய சூழலில் கூட விலை கொடுத்து வாங்கியவனுடன் மட்டும் ஓட தயாராயில்லை என்று சொல்கிறது.

ஒரு பெண் பிறந்தவுடன் பெற்றோரால் திருமணத்திற்கு தயாராகும் தகுதிகளைக் கருத்தில் கொண்டே வளர்க்கப்படுகிறாள். திருமணம் ஆனவுடன் கணவன், குழந்தை, என்ற உறவுகளை காதல், தாய்மை என்ற கீரிடத்தைச் சூட்டி பெண்ணை- அவளுக்கான அடையாளத்தை இந்தச் சமுதாயம் சிலுவையில் அறைந்திருக்கிறது.

என்னிதய சிம்மாசனத்தில்
ராஜாவாயிருந்த
எனதருமை ஆத்மாவின்
இன்னோர் முகத்தில்
முளைத்திருந்த கோரப்பற்கள்
நானறியாமலே என்றோ என்னைக்
கொன்றுவிட்ட சேதியினை


சந்திரா இரவீந்திரனின் கவிதை 'பிணவலி' (பக் 98) அற்புதமாகச் சொல்கிறது. தாங்க முடியாத வலி வரும்போது ' அய்யோ தாங்க முடியலியே.. இந்த வலியை. செத்துப் போயிடலாம் போலிருக்கு.. இந்த வலியில் செத்து செத்து பிழைச்சேன்' என்று சொல்வது வழக்கம். அந்த வழமையிலிருந்து உருவானச் சொல்லாக
'பிணவலி' என்கிறார் கவிஞர்.

பெண் பூப்படைதல் என்பது ஓர் இயற்கையான நிகழ்வு, உடல் வளர்ச்சியில் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றம். அந்த மாற்றத்திற்குப் பின் பெண் தன் உறவுகளால் முழுமையாக அடக்கி ஒடுக்கப்படுகிறாள். பெண்மீது திணிக்கபபடும் இக்கட்டுப்பாடுகளை எதிர்த்து

"பார் நீ ஒருநாள்
வாமனன் நானென நினைக்கும் உமது
எண்ணங்கள் யாவையும் பொடிப் பொடியாக்குவேன்.
அன்றேயுமது சாத்திரம் தகரும்
சடங்குகள் மாளும்
இன்னதின்னதாய் இருப்பீரென நீர்
எழுதிய இலக்கியம் நெருப்பினில் கருகும்'

என்று குரல் கொடுக்கிறார் செல்வி சிவரமணி. (பக் 128)

காதல் புனிதமானது, காதல் போயின் சாதல், காதல் தெய்வீகமானது, காதலுக்காக எதுவும் செய்யலாம், காதலுக்காக எதையும் இழக்கலாம் இப்படி காதல் பற்றியும் வண்டி வண்டியாக எழுதி வைத்திருக்கிறார்கள், எழுதிக்கொண்டுமிருக்கிறார்கள். காதலில் கூட தன் சுயமிழப்பதை இன்றைய பெண் விரும்புவதில்லை. காதலுக்காக த்ன்னை இழந்து தன் நாமம் கெட்டு தலைவன் தாள்பட ஏங்கியிருக்கும் ஆண்டாளாக இருக்க இன்றைக்கு எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை. நட்பாய் தெரிந்த முகம் பார்த்து சிரித்ததையும் அவன் நண்பனுடன் கதைத்ததையும் குற்றமாக்கி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் அவன் காதலை ஆய்வு செய்து அறிக்கை எழுத துணிகிறது. எது காதல் என்று காதலுக்கு முகவரி எழுதுகிறது.

என்னைச் சிதை ஏற்றாமல்
என்னை எனக்கே
திருப்பித் தந்துவிடு

என்று சுயமரியாதைப் பேசுகிறது. எதுவும் சரிப்படவில்லை என்றால் காதலைப் புதைத்து மீண்டும் புதிதாய் பிறந்துவிட்டுப் போகிறேன் என்று வாழ்க்கையை உணர்ந்த பெருமையுடன் சொல்கிறது நளாயினி தாமரைச்செல்வனின் கவிதை 'புதிதாய் பிறந்துவிட்டுப் போகிறேன்' (பக் 146)

.வீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன் புறமுதுகு காட்டியிருந்தால் அவனுக்குப் பாலூட்டிய என் முலைகளை அறுத்தெறிவேன் என்று பொங்கி எழுந்து போர்க்களத்தில் ஒவ்வொரு சடலங்களாய்ப் புரட்டிப் பார்த்து தன் மகன் மார்பில் வேல் பாய்ந்து மாண்டு கிடப்பதைக் கண்டு ஈன்ற பொழுதின் பெரிதுவந்த புறநானூற்று தாய்மார்களைப் பற்றி நம் தமிழ்ப் புலவர்களும் மேடைகளும் தெவிட்ட தெவிட்ட சொல்லியிருக்கிறார்கள். அந்தத் தாய்மார்கள் யாரும் போர்க்களத்தில் போர்ப் புரிந்தவர்கள் இல்லை. ஆனால் போர்க்களத்தில் போர்ப்படையில் நிற்கும் இன்றைய பெண்ணிடமிருந்து மனித நேயத்தின் மாண்பினை -மனிதர்கள் வரைந்த வரைகோடுகள் காட்டும் நாட்டுப்பற்று என்ற எல்லையைத் தாண்டி 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று மனித நாகரிகத்தை உலகத்திற்கு கொடுத்த தமிழ்ப் பண்பாட்டின் எச்சமாய் கவிதைகள் பிறக்கின்றன. கவிஞர் அவ்வையின் 'தாயின் குரலாக' ஒலிக்கிறது யுத்தங்கள் இல்லாத தேசத்தின் குரல்.

போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற தாய்நிலமே
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்
இன்னமும் காயவில்லை..


என்று சொல்லிவிட்டு

இன்னுமா தாய் நிலம்
புதல்வர்களைக் கேட்கிறது?


என்று கேள்வி கேட்டு தாய்நிலம் தன் புதல்வர்களின் உயிரைக் குடிக்கும் எமனாகிவிட்ட முரணை 'தாய்நிலம்' என்ற சொல்லை கவனக்குறியுடன் கொடுத்து வாசகனுக்கு உணர்த்தியிருப்பார்.

கடித்துக் குதறி
நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலுமாக
எத்தனை குஞ்சுகளை விழுங்கி விட்டாய்
இன்னும் அடங்காதோ உன் பசி?


என்று தாய்நாட்டுக்காக போரில் மடிவதை விட போரே இல்லாத நாளைய உலகம் தன் புதல்வர்களுக்கு வசப்பட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார்.

சில கவிதைகள் யதார்த்தத்தை முகத்தில் அறைந்த மாதிரி அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கும். அமெரிக்காவில் புயல் தாக்கிய பின் அங்கிருந்தவர்கள் ஒரு குடுவை நல்ல தண்ணீராக அடித்துக் கொண்ட காட்சியை உலகமே தொலைக்காட்சியில் கண்டது. வசதிப் படைத்தவர்கள், படித்தவர்கள் யாராக இருந்தாலும் பசி என்று வந்து விட்டால் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதையும் குண்டுகள் வீசும் வானத்திற்கு பழகிவிட்டதால் மனிதனின் மெல்லிய உணர்வுகள் மரத்துப் போய் விடுவதையும் கா கிறோம். யதார்த்தம் என்று நாமகள் கவிதை குண்டு வெடிப்புக்குப் பின் தேநீர்க்கடையில் புதிதாய் ஒரு பாட்டு ஆரம்பமாகிறது என்கிற காட்சியை புனைவுகள் இல்லாமல் காட்டியிருக்கும். நிருபாவின் தலைப்பில்லா ஒரு கவிதையும் (பக் 159) மொஸ்கோ வந்திறங்கியவள் விரைவில் தான் விரும்பியவன் இருக்கும் இடம் போக ஏஜென்ஸிக்காரனிடம் அன்றிரவைக் கழித்த அவலத்தைச் சொல்கிறது.

சற்றொப்ப 250 பக்கங்கள் கொண்ட இந்தக் கவிதை நூலில் ஒரே ஒரு கவிதை தான் சாதிய வேறுபாட்டையும் தீண்டாமையின் காரணமாக நீ வெளிநாட்டுக்கு அகதியாகச் சென்றாயோ என்ற கருத்தின் பின்புலத்தில் அமைந்துள்ளது. ஈழத்தமிழர்களிடன் சாதிப் பாகுபாடுகள் இல்லை என்றோ தீண்டாமை இல்லை என்றோ இதற்கு அர்த்தமல்ல. சூலை 2007, தலித் முரசு இதழில் சி. ஜெய்சங்கர் அவர்களின் நேர்க்காணல் வாசித்தேன். (மூன்றாவது கண், தேர்ட் அய் என்று தமிழ், ஆங்கில இதழ்கள் நடத்துபவர். தோழமை ஓவியர் வாசுகியின் கணவர்)

போர்ச்சுழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. மறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கிற கோயில்தான். உயிர் பிழைக்க ஒடிக் கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படிநிலை வெளிப்படும். பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும் ஊரில் முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடிக் கடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்" என்று சொல்லியிருந்தார்.

மைத்ரேயி கவிதை "ஊரிலிருந்து ஒரு கடிதம்' இந்த உண்மை நிலையைப் பதிவு செய்கிறது. படிக்கப்போவதாக பொய்ச்சொல்லிவிட்டு அகதியாக போயிருக்கும் தன் நண்பனுக்கு எழுதும் கடிதமாக அமைந்துள்ளது.

கலாசாலைக் கல்வியின் பொருத்தமின்மையா
அக்காமாரின் பிரச்சனையா
தாழ்த்தப் பட்டவனென்று கூறி
உனையவர்கள் ஒதுக்கிவைத்தமையா
இயக்கங்களின்
ஏறுமாறான நடவடிக்கைகளா
இவற்றில் எது உன்னை
அகதியாய்த் துரத்திற்று?


என்ற கேள்வியில் ஒற்றை வரியில் வெளிச்சம் போடப்பட்டுள்ளது.

கவிதைகளில் காணப்படும் அழகியல் காட்சி வருணனைகள் ஓர் இழப்பின் வலியை உணர்த்தியிருப்பது கவிஞர்கள் வாழ்விட சூழலில் தவிர்க்கமுடியாதவை என்றுதான் காலம் பதிவு செய்யும். ஆண்கவிஞர்கள் பெண் பெயரில் எழுதுவதும், ஒருவரே பல பெயர்களில் எழுதுவதும் போராளிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவைதான். வரலாறு இந்தக் கவிதைகளின் ஊடாக ஒரு தலைமுறையின் இந்த ரகசியங்களையும் சேர்த்தே பதிவு செய்யும். "வாழ்ந்ததை உணர்த்திய மரணம்" (இருப்பும் இறப்பும் பக் 89) சங்கரியின் கவிதை வரிகள். ஆம்... கோணேஸ்வரி, மன்னம்பேரி, இன்னும் முகம் தெரியாத என் தொப்புள்கொடி உறவுகள் ப்லரின் மரணம் தான் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தியது. நீங்கள் வாழ்ந்ததை, உங்கள் இருத்தலுக்காக நீங்கள் நடத்திய போராட்ட களத்தை, உங்கள் வலியை, வலியை வலிமையாக்கிய உங்கள் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக பதிவு செய்யப்படும் பதிவுகள் இன்றைய தேவை. அந்த தேவை அறிந்து அதைப் பூர்த்தி செய்திருக்கும் தோழமை அ. மங்கை அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

இனி இது போன்ற தொகுப்புகள் தொகுக்கப்படும்போது காலவரிசையை முன்னிலைப் படுத்தி தொகுக்க வேண்டிய இரண்டாவது கட்டம் வந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். ஏன் எனில் 80களில் 90 களில் எழுதிய கவிதைகளுக்கும் 2007ல் எழுதப்படும் கவிதைகளுக்கும் நடுவில் தென்படும் சில நுண்ணிய அதிர்வலை மாற்றங்களை நாம் காணலாம். இது போன்ற தொகுப்புகளில் கட்டாயம் கவிஞர்களைப் பற்றிய குறிப்புகள் பின்னூட்டாக தரப்பட வேண்டும்.

கவிதைகள் அல்லாத பிற செய்திகள்:

போர்ச் சுழலில் தன் உடமைகள் இழந்து வெட்டவெளீயில் குடும்பம் நடத்தும் நிலைக்கும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அகதிகள் முகாம்களில் வாழும் நிலைமையிலும் பெண்கள் மிகவும் மோசமான ஒரு சூழலை அனுபவிக்கிறார்கள். ஒரு பெண் வெட்ட வெளியில் திடீரென குடும்பம் நடத்துவது என்பது மிகவும் அவலமான பலவிதமான பிரச்சனைகளை அனுபவிக்கும் சூழல் .. இவை உங்கள் கவிதைகளில் இல்லை. ஒரு கவிதை கூட அகதி முகாமிலிருந்து எழுதப்பட்டதாக இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கருத்துருவங்களின் எதிரொலியாக உருவாகும் கவிதை பிரச்சாரமாக குன்றிவிடும் என்பது நவீனக் கவிதையின் தயக்கமாக இருந்தது. வாழ்வனுபவத்திலிருந்து நிறுவப்படும் கருத்துருவம் பிரச்சாரமல்ல " என்பார் சுகுமாரன். இக்கவிதைகளூம் அதை நிருபித்துள்ளன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R