ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காலந்தோறும் மக்கள் பயன்படுத்தி வந்த பொருட்கள் அதன் தேவை மற்றும் தனித்தன்மை கருதி அந்தந்த சூழலுக்கு ஏற்ப தனி வடிவமோ, பொது அமைப்பில் மாறுதலோ கொள்கின்றன. அப்புழங்கு பொருட்கள்வழி மேற்கொள்ளப்படும் ஆய்வு புழங்கு பொருள் அல்லது பருப்பொருள் பண்பாய்வு என அறிஞர்களால்  வகைப்படுத்தப்படுகிறது. வாய்மொழி வழக்காறுகள், ஏட்டுச்சுவடிகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள் போல புழங்கு பொருட்களும் அந்தந்த நில மக்களின் பண்பாட்டுச் சூழல் செய்திகளை காலங்களின் ஊடாகக் கடத்தும் திறனுடையவை. குறுந்தொகைப் பாடல்களில் காணக்கிடைக்கும் புழங்கு பொருட்களையும், அதன்வழி பண்பாட்டுச் சூழலையும் இக்கட்டுரை ஆராய்கிறது.


பயன்பாடு:
புழங்கு பொருட்களை அவற்றின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டுக்களம் சார்ந்து, தொழில்சார் கருவிகள், வேட்டைக் கருவிகள், வேளாண்கருவிகள், அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் எனப் பாகுபடுத்தலாம்.பெரும்பாலான அறிஞர்கள் புழங்கு பொருட் பயன்பாட்டை கலை (Art) என்றும் கைவினை  (Craft) என்றும் இரு உட்பிரிவுகளாகக் காண்கின்றனர் என மானிடவியலாளர் ஹென்றி கிளாசி குறிப்பிடுகிறார். பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானவை என்று கொள்ள முடியாது. அவை மற்ற பயன்பாடுகளிலிருந்து நாம் வேறுபட்டு நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கும் அப்பண்பாட்டை காலங்கடந்து நிலைநிறுத்துவதற்கும் காரணிகளாக அமையலாம்.

கொல்லுத் தொழில்:
ஏழூரில் உள்ள மக்களின் பயன்பாட்டில் உள்ள மண்வெட்டி, களைக் கொத்து போன்ற தொழில் கருவிகளை ஆக்கவும், ஆக்கிய கருவிகளை பழுது நீக்கவும் கொல்லுப்பட்டறையில் கொல்லர் உலையில் பயன்படுத்தப்பட்ட உலைவாங்கு மிதிதோல் (துருத்தி) போன்ற கருவிகள் பழந்தமிழர்களின் புழக்கத்தில் கொண்டிருந்ததை,


“ ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த
உலைவாங்கு மிதிதோல் போலத்”                    (குறு:172)


என குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.
கொல்லர் உலையில் பயன்படுத்தப்படும் பட்டைக் கல்லைப்போன்ற வெம்மையை உடைய பாறை என சுடுபாறையின் வெம்மையைக் கூற புழங்குபொருள் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது இதனை,


‘உலைக்கு லன்ன பாறை யேறி’                     (குறு:12)

என்ற வரிகளால் அறியலாம்.

வார்த்தல், கடைசல் கருவிகள்:
விவசாயத்திற்குப் பயன்படும் கருவிகள் அனைத்தும் மரப்பிடி கொண்டு அமைக்கப்பட்டவையாகும். மட்டுமன்றி தேர்கால்களில் கால்கள் அகலாமல் இருப்பதற்கும் அணிகலனாக அலங்கரிப்பதற்கும் ‘பூண்’ என்னும் வளையம் பயன்படுத்தப்படுகிறது. இப் பூணை இரும்பு, பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். வளையவடிவில் செய்யப்பட்ட பூண் விவசாய கருவிகளில் புழக்கத்திலிருந்ததை ஓதஞானியார் குறிப்பிடுகையில்,

‘பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாள்முகம் துமிப்ப வள்இதழ் குறைந்த’                 (குறு:227)

என்ற பாடல்வரிகளில் ஆவணப்படுத்துகின்றார்.

சங்கப்பாடல்களில் தலைவன் பொருளீட்டும் பொருட்டு தலைவியைப் பிரிந்து செல்லும் பொழுது மணிகள் கோர்க்கப்பட்ட தேரில் சென்று பொருளீட்டுவதாக ஏராளமான பாடல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அம்மணிகள் ஊது உலையில் இட்டு வார்த்து, மணிகள் செய்யப்பட்டதையும் அம்மணிகள் புழக்கத்திலிருந்ததையும்…….

‘ ………………………………….மெழுகான்
றூதுலைப் பெய்த படுவாய்த் தெண்மணி’            (குறு:155)

என்ற பாடல்வரிகளால் அறியலாம்.

தச்சுத்தொழில் பொருட்கள்:
மரவேலைகளை மரத்தச்சரும், கல்லைப் பயன்படுத்திச் செய்யும் வேலைகளை கல்தச்சரும் மேற்கொண்டனர். சிறுவர்களின் விளையாட்டுப் பொம்மையாக சிறுவண்டியும், அதனுடன் பூட்ட சிறிய பொம்மைக் குதிரையும் விளையாட்டுப் பொருளாக மரத்தச்சரால் செய்தளிக்கப்பட்டதை….

‘ தச்சன் செய்த சிறுமா வையம்
ஊரிந்தின் புறாஅ ராயினும் கையின்
ஈர்ந்தின் புறூஉ மிளையோர் போல’                (குறு: 61)

என்ற பாடல்வரி படம்பிடித்துக் காட்டுகிறது. தச்சர் செய்த அச்சிறுமா பெரிதும் புழக்கத்தில் இருந்ததற்கு ஏராளமான சான்றுகள் சங்கப்படல்களில் காணக்கிடக்கின்றன அவற்றில்,

‘தச்சச் சிறாஅர் நச்சுப் புனைந்த
ஊரா றற்றே ருட்டிய புதல்வர்’                      (பெரு: 248)

என்று பெரும்பாணாற்றுப்படையும் சுட்டுகிறது.

உலக்கை:
பச்சை நெல்லை ஊறவைத்து அவல் இடிப்பதற்கு  நன்கு முற்றிய கரிய வைரம் பாய்ந்த மரத்தினால் செய்யப்பட்ட உலக்கை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவல் இடிக்கும் போதும், விவசாய வேலைகள் செய்யும் போதும் உடல் சோர்வு தெரியாமல் இருப்பதற்கு வாய்மொழியாக பாடல்களைப்பாடுவது வழக்கம் அவ்வகையில் பாடப்பட்ட பாடல்களில் ‘வள்ளைப்பாட்டும்’ ஒன்றாகும். இப்பாடல் இலக்கிய வகையில் இடம் பெற்றிருப்பதை அறியலாம்.

‘பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்புஅணைத் துயிற்றி’            (குறு: 238)

என்ற குன்றியனார் பாடல்வரியின் மூலம் வைரம் பாய்ந்த உலக்கை பயன்படுத்தப் பட்டிருப்பதை உணரமுடிகிறது.

விதைக்குறு வட்டி:
சங்ககாலத் தமிழர்கள் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்கும், தானியங்களை வயல் வெளிகளில் விதைப்பதற்கு எடுத்துச் செல்வதற்கும் விதைக்குறு வட்டியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். விதைக்குறு வட்டியானது பனங்குருத்தோலைகளால் முடையப்பெற்ற சிறுபெட்டியாகும் இப்பெட்டி புழக்கத்திலிருந்ததை தலைவி கூற்றாக வரும்

‘முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர்
விதக்குறு வட்டி போதொடு பொதுளப்’                (குறு: 155)

என்ற பாடலால் அறியக்கிடக்கிறது.

விதைப்புக்கூடையின் பயன்பாடு குறுந்தொகையில் மட்டுமல்லாது ஐங்குநுறூறு, நற்றிணை போன்ற சங்கப்பாடல்களிலும் விரவிக்கிடப்பதை ஆங்காங்கே காணமுடிகிறது.

இன்றும் விதைக்குறு வட்டியைப் பல பெயர்களில் அதாவது,விதைப்பெட்டி, பெட்டிக்கூடை, சாட்டுக்கூடை, மக்கிரி, கொடாப்பு என பலவடிவங்களில் பயன்படுத்தி வருகின்றனர். விதைக்குறு வட்டியானது பனையோலைகளாலும், மூங்கிலைப் பயன்படுத்தியும் அதே வடிவில் அதே பயன்பாட்டில் இன்றும் நிலைத்திருப்பதைக் பண்பாட்டுக்கூறாக கருத இடமளிக்கிறது.

பொன்செய் பாவை:
அரசனைப் பிழைத்தவர் தம் எடைக்கு எடை பொன்தருதல் என்பது வழக்கிலிருந்ததை பல சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன, இதனை,

“மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை
புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பனங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல்’                (குறு: 292)

என்ற பாடல் காட்டுகிறது.    பொன்செய்பாவை என்ற புழங்குபொருள் பண்பாடு சார்ந்து பயின்று வந்ததை பெருங்கதை குறிப்பிடுகையில்,

“……ஆடுவி குளிரெனின்
ஆடகப் பொன்னினு மளவி னியன்ற
பாவை யாகும் படுமுறை”                        (பெருங்: 1:40:371-3)

என்ற பெருங்கதைப் பாடல் வழியும்,

“பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்’                (அக:127-8)

என்ற மாமூலர் எழுதிய அகநானூற்றுப் பாடல் வழியும் அறிய முடிகிறது.

அரசனைத் தொடர்ந்து வழிபடு தெய்வத்திற்கும் எடைக்கு எடை பொன்னாய், வெள்ளியாய், நெல்லாய், உப்பாய்க் கொடுக்கும் வழக்கம் மரபாக இன்றும் நிலைத்திருக்கிறது.

ஆடிப்பாவை
“கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல”                        (குறு: 8)

என்ற பாடல், கண்ணாடி முன்னின்று தம் கைகளையும், காலையும் தூக்க, தானும் தூக்கும் ஆடிப்பாவையை மனைவிக்கு அடங்கி அவள் சொல்லுக்கு ஆடும் தலைவனைச் சிறுமைப்படுத்த ஒப்புமைப்படுத்துவதை பரத்தையின் கூற்றாகக் கூறப்படுகிறது.

“ஆடியுப் பாவை போனீயணங்கிய தணங்க வென்றான்”

என சீவகசிந்தாமணியும் (957) ஆடிப்பாவை குறித்துக் கூறுகிறது.

“தாதிற் செய்த தண்பனிப் பாவை”                    (குறு: 48)

“முறிகண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறுபசும் பாவையும் எம்முள்ளார்”                    (குறு: 278)

ஆகிய குறுந்தொகைப் பாடல் வரிகள் பாவை செய்தலைக் குறிப்பிடுகின்றன.

கண்ணாடித் தோற்றம், பாவை (பொம்மை) எனும் புழங்கு பொருளாகி, நெடிய காலத்தினூடே கடந்து பண்பாட்டின் தொடர்ச்சியாய், ‘கையுங் காலுந் தூக்கத் தூக்கும் பாவை’ நிலையிலிருந்து ‘நிகழ்த்துவோன் விரலசைவுக்கு ஆடும் பாவை’ என பாவைக் கூத்தாக படிமலர்ச்சி பெற்றதை அறியலாம்.

ஞெகிழி
அறுவடைக்குத் தயாரான விளைபொருட்களை கிளி, குருவிகளிடமிருந்து காக்க கவண், பறை, தட்டை என ஒலியெழுப்பியோ, அச்சுறுத்தியோ தினைப்புனங் காவல் மேற்கொண்டனர்.

“ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல்யானை”                (குறு: 357)

எனும் பாடல் வழி கொள்ளிக் கட்டைக்கு அஞ்சி விலகிய யானை காட்டப்படுகிறது.

“ஒளிதிகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்
‘களிறு’ என ஆர்ப்பவர், ஏனல் காவலரே”                (கலி: 52:13)

என்ற கலித்தொகைப் பாடல் தினைப்புனக் காவலில் ஒளிதிகழ் ஞெகிழி, வில், கவண் பயன்பாட்டைப் பறை சாற்றுகிறது. ஒளியும் வெம்மையும் கொண்ட ஞெகிழி காவல் குறிப்பாகப் படிமலர்ச்சி பெற்ற புழங்கு பொருள்களாகி, இன்றும் விழாக்களிலும், சடங்கு நிகழ்த்துகைகளிலும் ‘தீப்பந்தம் பிடித்தல்’ என்ற பண்பாட்டிற்கு வேராக விளங்குகிறது.

“தழலும் தட்டையும் குளிரும் பிறவும்”                (குறு: 34)

“படுகிளி கடியுதட கொடிச்சி கைக்குளிரே”            (குறு: 291)

பாடல்களில் இடம்பெற்ற கிளியை விரட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களான பறை, தட்டை போன்றவை இன்றும் புழக்கத்திலுள்ளன.

எருமண்
‘கான்யாற்று எருமண்’ கூந்தல் கழுவப் புழங்கியதை,
“கூழைக்கு எருமண் கொணர்கஞ் சேனும்”            (குறு: 113)

என்ற பாடல் சுட்டுகிறது. தற்காலத்தில் பெண்கள் தங்கள் கூந்துலுக்கு எருமண்ணுக்கு மாற்றாக மூலிகைப் பொருட்களையும், வேதி நறுமணப் பொருட்களையும் பயன்படுத்தினாலும், ‘எருமண்’ பாரம்பரிய இயற்கை வழிமுறையாகவும், வைத்திய முறையாகவும் இன்றும் உயிர்ப்புடன் திகழ்கிறது.

மண்கலமும் பொன்கலமும்
தற்காலத்தில் அன்றாடப் புழங்கு பொருட்களில் பயன்படக்கூடிய பொருட்கள் இரும்பு, செம்பு,  ஈயம், பித்தளை போன்ற உலோககங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பச்சை மண்ணால் செய்யப்பட்ட மட்கலப் புழக்கம் இன்றும் அதன் மதிப்புக்குறையாமல் இருக்கிறது, மட்பாண்ட பயன்பாட்டையும் பொன்னால் ஆன பாத்திரங்களின் பயன்பாட்டையும் குறுந்தொகை சுட்டுகையில்,

“பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல”                (குறு: 29)

“செம்பொற் புனை கலமும்”                        (குறு: 356)

எனக் குறிப்பிடுவதை அறியலாம்.

கைவளைகள்
பல்வேறு அளவுகளில் செய்யப்பட்ட கைவளைகள் விற்பனை செய்பவரை,

“சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே”            (குறு: 117)

என்ற பாடல் காட்டுகிறது.

“கோடீ ரிலிங்குவளை நெகிழ நாளும்”                (குறு: 365)

என சங்குகளை அறுத்துச் செய்த வளையல்கள் பயன்பாடு சுட்டப்படுகிறது.

‘வளைஞெகிழ்தல்’ என்பது கைவளை நெகிழ்தல் என்ற இயல்புப் பொருளை மட்டுமின்றி, பிரிவுத்துயர் ஆற்றாமல் உடலும், உள்ளமும் சோர்வுற்று புனையா ஓவியமாகக் காட்சிதரும் தலைவியின் மெலிவைக் கூறும் குறியீடாகவும் விளங்குகிறது.
‘கைவளை அணிதல்’ வரவையும், மகிழ்வையும் குறிப்பதாகவும், ‘கைவளை நெகிழ்தல்’ பிரிவையும், துன்பத்தையும் குறிப்பதாகவும் அமைந்துள்ளது. கைவளைகள் பொன்னாலும், முத்தாலும் செய்யப்பட்டதையும், ஆபரணங்களைப் பாதுகாக்க ‘பொன்பெய்பேழை (Jewel Box) பயன்படுத்தப்பட்டதையும்,

“இன்னாக் கானமு மினிய பொன்னோடு
மணிமிடை யல்குன் மடந்தை”                    (குறு: 274)

“பொன்செய் பேழை முய்திறந் தன்ன”                (குறு: 233)

“பாம்புமிழ் மணியிற் றோன்றும்”                (குறு: 239)

ஆகிய பாடல்களால் அறியலாம்.

பொன்னை உரைத்துப் பாரிக்கும் உரைகல் புழக்கத்தை,
“………….. பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை”            (குறு: 192)

என்ற வரிகளாலும் அறியலாம்.

தொகுப்புரை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்ள புழங்கு பொருள்கள் குறித்த செய்திகள் முக்கியத் தரவுகளாகின்றன. இலக்கியங்களில் உண்மைத் தன்மை குறித்த ஐயம் எழுந்தாலும், ஒவ்வொரு பாடலையும் ஒப்புநோக்க உரிப்பொருளை விளக்க இயல்பாகக் காட்டப்பட்டவையாக புழங்கு பொருள்கள் திகழ்கின்றன என்ற உண்மை தெற்றென விளங்குகிறது. தொன்மையும்;, தரவுகளில் செழுமையும் கொண்ட குறுந்தொகைப் பாடல்களில் கூறப்பட்ட புழங்கு பொருட்கள் பண்பாட்டுச் சூழல் ஆய்வுக்குக் கரு வூலமாகத் திகழ்கிறது.

பார்வை நூல்கள்:
1.    குறுந்தொகை மூலமும் உரையும் 2009
டாக்டர். உ.வே.சா நூல்நிலையம், சென்னை.
2.    சீவகசிந்தாமணி மூலமும் உரையும்
நான்காம் பதிப்பு, 2015.
சாரதா பதிப்பகம், சென்னை.
3.    நற்றிணை மூலமும் உரையும் 2016
ஔவை துரைசாமிப் பிள்ளை
சாரதா பதிப்பகம், சென்னை. 2015

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R