வாசிப்பும், யோசிப்பும் 358: பூந்துணர் 2010 பற்றிச் சில கருத்துகள்...

அண்மையில் இலண்டனிலிருந்து பேராசிரியர் கோபன் மகாதேவா அனுப்பிய 'பூந்துணர் '(Perceptions in Bloom) தொகுப்பு நூல் கிடைத்தது. எழுத்தாளர் சின்னையா சிவனேசன் மூலம் அனுப்பியிருந்தார். இருவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 'பிரித்தானிய 'ஈழவர் இலக்கியச் சங்க எழுத்தாளர்கள்' அமைப்பு மாதாமாதம் நடத்திய இலக்கிய நிகழ்வுகளில் வாசிக்கப்பட்ட 61 படைப்புகளின் தொகுப்பு நூலே இத்தொகுப்பு நூல். இவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் கோபன் மகாதேவா, இணைப்பாளராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் பெருமுயற்சியினால் இத்தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது. இத்தொகுப்பில் ஆங்கில மற்றும் தமிழ்ப்படைப்புகளுள்ளன. தமிழ்த்தொகுப்புகளைப் பொறுத்தவரையில் பேராசிரியர் கோபன் மகாதேவா, திருமதி அமரர் சீதாதேவி கோபன்மகாதேவா , இணைப்பாளராக விளங்கிய அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் மற்றும் திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் ஆகியோரின் படைப்புகளை அதிகமாகக் காணமுடிகின்றது. இந்நூலின் முன்னுரையில் முதற்தொகுப்பு 2007 மார்கழியில் வெளிவந்ததாகவும், இது 2011ற்கான தொகுப்பு என்றும், 2008, 2009 & 2010 ஆண்டுகளில் தொகுப்பு நூல் வெளியாகவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 'பூந்துணர் 2010' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் நூலின் உள்ளே முதற் பதிப்பு 2011 என்றும் , காப்புரிமை 2010 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொகுப்பு வெளியான ஆண்டு பற்றிய குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

நூலின் கட்டுரைகளின் கூறுபொருளைப்பற்றிப்பார்க்கையில் அவை பன்முகத்தன்மை வாய்ந்தவை. இலக்கியம், அரசியல், சமூகம், அறிவியல் , புகலிடம் அனுபவம், இயற்கை ,நூல் விமர்சனம் என்று அவை பல்வகையின. இவை பற்றிய படைப்புகளுடன், அத்துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமையாளர்களைப்பற்றிய கட்டுரைகள் பலவற்றையும் காணமுடிகின்றது. தொகுப்பின் முதற்கட்டுரையினை அமரர் திருமதி சீதாதேவி கோபன்மகாதேவா எழுதியுள்ளார். தலைப்பு 'காந்தியும் விடுதலை வேட்டைகளும்; என்றுள்ளது. 'காந்தியும் விடுதலை வேட்கைகளும்' என்றிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். மகாத்மாவைப்பற்றிய நல்லதொரு கட்டுரை. கட்டுரை சுருக்கமாக (ஆனால் சுவையான நடையில்) காந்தியைப்பற்றி 'உயிரினமும் சுதந்திரமும், 'காந்தியின் வாழ்க்கையும் முயற்சிகளும் சாதனைகளும் என்னும் உபதலைப்புகளில் ஆராய்கிறது. சுருக்கமான ஆனால் தெளிவான கட்டுரை. மகாத்மாவின் வாழ்வு பற்றிய நல்லதோர் ஆவணக்கட்டுரை. அதனைத்தொடர்ந்து பேராசிரியர் கலாநிதி கோபன் மகாதேவா 'மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஆராய்ச்சிக்காக உகந்த சில கருவூலகங்கள்' என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். இதுவொரு வித்தியாசமான கட்டுரை. காந்தியைப்பற்றிய ஆராய்ச்சி செய்யும் எவரும் எடுக்க வேண்டிய பல்வகைத் தலைப்புகளைப் பட்டியலிடும் கட்டுரை. இவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, அதனைப் பல தொகுப்பு நூல்களாக்கலாம், அவ்விதம் செய்யின் அவை மகாத்மா காந்தி பற்றிய விரிவான அவரது குறை , நிறைகளை வெளிப்படுத்தும் தொகுப்புகளாக அமையும். இவ்விதம் செய்வதாயின் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது பற்றியும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் கட்டுரையாசிரியர் இக்கட்டுரையில். நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களும் 'பார் போற்றும் சாதனையாளர் மகாத்மா காந்தி' என்று நல்லதொரு கட்டுரையினை எழுதியுள்ளார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை பற்றி, அவரது சமூக, அரசியல் மற்றும் பொருளியற் கோட்பாடுகள் பற்றி அறிய விரும்பும் எவருக்குமுரிய நல்லதொரு அறிமுகக் கட்டுரை.
கவிஞர் கண்ணதாசனின் படைப்புகளைப்பற்றி (கலாநிதி சிவ.தியாகராஜா), அவரது கவிதைகளில் வெளிப்படும் காதல் உணர்வுகளைப்பற்றி (திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம்), அவரது வாழ்க்கையைப்பற்றி (நுணாவிலூர் கா.விசயரத்தினம்) மற்றும் அவரது இந்து மதத்தின் மீதான ஈடுபாடுகள் பற்றி ( திருமதி சீதாதேவி மகாதேவா) ஆகியோரின் கட்டுரைகளும் , பேராசிரியர் கோபன் மகாதேவாவின் 'கவியரசு கண்ணதாசன் காவியமான கதை' என்றொரு கவிதையும் வெளியாகியுள்ளன. இவை கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கை, படைப்புகளின் குறுக்கு வெட்டுமுகங்களாகக் கருதலாம். இவற்றில் 'கவியரசு கண்ணதாசனின் இந்துமத ஈடுபாடுகள்' என்னும் திருமதி சீதாதேவி மகாதேவாவின் கட்டுரையும், 'மக்கள் கவிஞன் கவியரசு கண்ணதாசன்' என்னும் நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் கட்டுரையும் முக்கியமானவை.

மருத்துவராக விளங்கிய திருமதி சீதாதேவி மகாதேவாவின் எழுத்து நடை இனிமையான, சரளமான எழுத்து நடை. அவரது எழுத்துகள் வாசிப்பதற்கு இனிமையானவை. இவரது இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன. இவரது மகாகவி பாரதியாரைப்பற்றிய 'My Literary Hero: Tamil Poet Bharathi' ('எனது இலக்கிய நாயகன் பாரதி) ஆங்கிலக்கட்டுரை , 'My 'Achiever': Madame Marie Curie' ('எனது "சாதனையாளர்" மேடம் மேரி கியூரி') ஏனும் ஆங்கிலக் கட்டுரை, அலெக்சாண்டர் பிளெமிங், லூயிஸ் பாஸ்ரர், றொபேர்ட் லிஸ்ரன் & மைக்கல் பாரடே ஆகிய அறிவியல் அறிஞர்கள் பற்றிய 'என் நவயுக நாயகர்கள்' என்னும் தமிழ்க் கட்டுரை ஆகியவை. இவரது இக்கட்டுரைகளை வாசிக்கையில் இவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து இவை போன்ற மேலும் பல கட்டுரைகளை எழுதியிருக்கலாமே என்று தோன்றியது. இவை போன்ற கலை, இலக்கிய மற்றும் அறிவியல் ஆளுமைகளைப்பற்றிய கட்டுரைகள் தமிழில் நிறைய வெளிவருதல் அவசியம். ஏற்கனவே இவர் இவை போன்ற கட்டுரைகளை நிறைய எழுதியுள்ளாரா என்பதும் தெரியவில்லை. எழுதியிருப்பின் அவற்றைத் தனியாக ஒரு தொகுப்பு நூலாக வெளியிடலாம்.

திருமதி தமிழரசி சிவபாதசுந்தரத்தின் ;என் மனம் கவர்ந்த இலக்கிய நாயகிகள் 'கட்டுரையும் குறிப்பிடத்தக்க கட்டுரைகளிலொன்று. இதில் அவர் தன் மனங்கவர்ந்த இலக்கிய நாயகிகள் பற்றிச் சுருக்கமாகவும், காரைக்கால் அம்மையார் பற்றி விரிவாகவும் எழுதியுள்ளார்.

அடுத்து அமரர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் 'என் இலக்கிய நாயகர்கள்' என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை. தொல்காப்பியர், திருவள்ளுவர், சேக்கிழார் & இளங்கோவடிகள் பற்றிய கட்டுரைகள் இவை. தொல்காப்பியர் என்றால் முதலில் நினைவுக்கு வரும் அளவுக்குக் கட்டுரைகள் பல எழுதியவர் இவர். 'பதிவுகள்' இணைய இதழில் இவரது கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன. இவரது நூலொன்றுக்கும் எனது அணிந்துரை வேண்டுமென்று வேண்டி அதனை உள்ளடக்கி அந்நூலினை வெளியிட்டார். மறக்க முடியாதவர். சுவையான . தெளிந்த நடையில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர்.

இவ்வகையில் பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் 'ஷேக்ஸ்பியரின் ஆங்கில இலக்கிய விருந்துகள்' என்னும் கட்டுரையும் நல்லதொரு கட்டுரை. ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை, அவரது படைப்புகள் பற்றிய சுருக்கமான அறிமுகக் கட்டுரை. ஷேக்ஸ்பியரின் படைப்புகளுடன் நன்கு பரிச்சயமானவர் பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள். அவர் ஷேஹ்ஸ்பியரின் முக்கியமான புகழ்பெற்ற படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தால் சிறப்பாகவிருக்கும். அவரது எழுத்தில் ஷேக்ஸ்பியரின் யூலியசஸ் சீசர்' போன்ற படைப்புகளைத் தமிழில் வாசிக்க ஆர்வமாகவுள்ளேன். எழுத்தாளர் அகஸ்தியர் பற்றியும் இவர் 'சாதனையாளர் சவரிமுத்து எஸ்.அகஸ்தியர்' என்னுமொரு வித்தியாசமான கட்டுரையை எழுதியுள்ளார்.

தொகுப்பிலுள்ள விளையாட்டு பற்றிய கட்டுரைகளில் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் ஒலிம்பிக் விளையாட்டு பற்றிய 'ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்' என்னும் கட்டுரை ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி பற்றிய பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய விரிவான கட்டுரை. நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் 'மங்கையர் ஆடும் பாண்டி ஆட்டம்' கட்டுரை சுருக்கமாக அவ்விளையாட்டு பற்றி விபரிக்கின்றது. கட்டுரையுடன் அதனை விளக்கும் வகையிலான சித்திரமும் இடம் பெற்றுள்ளது. சிறுவயதில் என் சகோதரிகள், உறவுக்காரப்பெண்களுடன் ஆண்களாகிய நாமும் சில சமயங்களில் இவ்விளையாட்டினை விளையாடியிருக்கின்றோம். 'எட்டுக்கோடு' என்று இவ்விளையாட்டை அழைப்பார்கள். அவ்விதமே எனக்கு நினைவிலுள்ளது.

நூலிலுள்ள கட்டுரைகளில் இலண்டன் மாநகர் பற்றிய, இலண்டனில் புகழிட வாழ்வு பற்றிய படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலண்டனைப் பேரழிவுக்குள்ளாக்கிய பிளேக் நோய் (கொள்ளை நோய்) பற்றியும், இன்றுள்ள இலண்டன் மாநகர் பற்றியும் விபரிக்கும் திருமதி சீதாதேவி மகாதேவாவின் கட்டுரைகள் இலண்டன் மாநகர் பற்றிய வரலாற்றுரீதியிலான பிம்பத்தினைத்தருகின்றன.

பேராசிரியர் கோபன் மகாதேவாவின் 'லண்டன் மாநகரின் மத்திய தெரு ஒன்றில் ' நல்லதொரு கவிதை. இலண்டன் வீதியோரத்தில் பிச்சையெடுத்து வாழும் வீதிமனிதர்களைப் பற்றியது. இக்கவிதைக்கு மூலம் கவிஞரின் ஆங்கிலக் கவிதை நூலான 'Down a Central Street in London Town' என்னும் நூல் என்று கவிதையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது இன்னுமொரு கவிதையான 'லண்டனில் கியூவரிசைகள்' என்னும் கவிதை அங்கு எதற்கெடுத்தாலும் நிலவும் போக்கான கியூவரிசை பற்றிப்பேசுகிறது. அக்கவிதையின் மூலம் கவிஞரின் இன்னுமோர் ஆங்கிலக் கவிதைத்தொகுப்பான Vying for Greatnessand Other Poems என்னும் தொகுப்பிலுள்ள Queues என்னும் கவிதையென்கிறது. எனக்குப் பொதுவாக நகரங்கள் பற்றிய கவிதைகளை வாசிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். அவ்வகையில் இக்கவிதைகள் பிடித்துள்ளன. கவிஞரின் ஆங்கிலக் கவிதை நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் கவிதைகள் இவை.

நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் 'புலம்பெயர்ந்த ஈழவரின் பிரித்தானிய வாழ்க்கை' அங்கு வாழும் புகலிடத்தமிழர் பற்றிய சுருக்கமான கட்டுரை. பயனுள்ள தகவல்களை உள்ளடக்கியுள்ளது. உரும்பையூர் கவி மு.து.செல்வராசாவின் இரு கவிதைகளின் தலைப்புகளும் வேடிக்கையானவை. 'லண்டனில் எதைக் கடிக்க? எதைக்குடிக்க?' & 'லண்டனுக்கு ஏன்தான் வந்தேன்?' சுவையாக, வேடிக்கையாக புகலிடத்தமிழரின் லண்டன் வாழ்க்கையை விபரிப்பவை இவை. 'லண்டனில் எதைக் கடிக்க? எதைக்குடிக்க? ' கவிதையில் இலண்டன் வாசியான புகலிடத்தமிழர் ஒருவர் இறைச்சி விற்கும் கசாப்புக்கடைக்குப் போகின்றார். மாட்டிறைச்சி வாங்க நினைக்கின்றார். ஆட்டிறைச்சி வாங்க நினைக்கின்றார். கோழியிறைச்சி வாங்க நினைக்கின்றார். ஆனால் அவை ஏற்படுத்தும் நோய்கள் அல்லது உடல் உபாதைகளைப்பற்றி எண்ணியதும் அவற்றை வாங்கும் எண்ணத்தைத்தவிர்க்கின்றார். பின்னர் மரக்கறி வாங்கச் செல்கின்றார். அரிசி, மா என்பன சர்க்கரை வியாதியைத்தரும். மேலும் மரக்கறிகளை உருவாக்கப்பயன்படுத்தும் கிருமிநாசினிகளைப்பற்றி எண்ணுகின்றார். அவற்றாலேற்படும் ஆபத்துகளை எண்ணுகின்றார். இவ்விதமெண்ணும் கவிஞர் இவ்விதமாகக் கவிதையை முடிக்கின்றார்:

"எதனைக் கடிப்பேன்? எதனைக்குடிப்பேன்?
எதிலும் கலவை. எதிலும் செயற்கை.
புதிய பாதைகள் தேடி நாம் வந்தோம்.
புதிய நோய்களும் உடலினுள் கொண்டோம்.
என்னமோ என்மனம் எண்ணியது இப்படி.
சொன்னது நிஜமெனில் நான் வாழ்வது எப்படி?"

'லண்டனுக்கு ஏன்தான் வந்தேன்?' கவிதையும் இது போன்றதொரு அங்கதத்தொனி மிக்க கவிதை. கவிஞருக்கு நகைச்சுவை இயல்பாக வருகின்றது. புகலிடத்தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து இவை போன்ற கவிதைகளை எழுதினால் அவை நிச்சயம் வாசகர்களுக்கு இனிய , சுவையான அனுபவங்களாக விளங்கும்.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள Nightmare Trip in a Race - Riot traion என்னும் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் ஆங்கிலக் கட்டுரையும் முக்கியமானதோர் ஆவணக் கட்டுரை. 1977 இனக்கலவரத்துக்குச் சற்று முன்பாக பேராசிரியர் தன்து குழந்தைகளுடன் யாழ்-கொழும்பு புகையிரதத்தில் பயணிக்கையில் அதில் பயணித்த தமிழ்ப்பயணிகள் சிங்களக் காடையர்களால தாக்கப்படுகின்றார்கள்; கொள்ளையடிக்கப்படுகின்றார்கள். அதில் பேராசிரியரும் அகப்படுகின்றார். அதில் அவர் தனக்கேற்பட்ட அனுபவங்களை விபரிக்கின்றார். வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய முக்கியமான கட்டுரையிது.

நூலின் இறுதியில் இத்தொகுப்பு பற்றிய எழுத்தாளர்கள் முல்லை அமுதன், கலாநிதி செவ.தியாகராஜா & எஸ்.வீ.பரமேஸ்வரன் ஆகியோரின் விமர்சனக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் தொகுப்பின் படைப்புகள் பற்றியும், அவற்றை எழுதிய ஆளுமைகள் பற்றும் விபரிக்கப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் பற்றிச் சுருக்கமான அறிமுகக் குறிப்புகள் புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

தொகுப்பில் என்னைக் கவர்ந்த முக்கியமானதொரு விடயம்: நூலின் எழுத்துப்பிழைகள் எவற்றையும் நான் காணவில்லை. இதற்காக நூலை வெளியிட்டுள்ள 'செஞ்சுரி ஹவுஸ்' பதிப்பகம் நிச்சயம் பெருமையுறலாம். இவ்விதமாகத் தொகுப்பொன்றினை உருவாக்குவதென்பது அவ்வளவு இலகுவான செயலல்ல. ஆனால் அதனை வெற்றிகரமாக, சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தினர். அவர்களது மாதாந்த இலக்கிய நிகழ்வுகள் புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு நல்லதொரு தொகுப்பினைத்தந்துள்ளதும் பாராட்டத்தக்கது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நன்றி: https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5646:-358-2010-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R