- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
ஒழுக்கத்தின் நெறியில் நிற்றலால் மேன்மை அடைதல் உறுதி ஒழுக்கம் தவறினால் தாங்க முடியாத பழியைப் பெறுவதும் உறுதி என்கிறார் வள்ளுவர். மனிதன் தன் சுற்றத்தரோடு தொடர்பு கௌள்ளுதலில் தனிமனித ஒழுக்கம் அவசியமாகிறது. அவ்வொழுக்க முறையினை வகுத்தும் தொகுத்தும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பதனையும், பண்டைத் தமிழரின் வாழ்க்கை அறத்தின் அடிப்படையில் அமைந்தது. அன்பு, பழிபாவங்களுக்கு நாணும் நாணம், எல்லோருக்கும் உதவும் தன்மை, வாய்மை தவறாமை, பழிபாவங்களுக்கு அஞ்சுதல், நடுவுநிலைமை, விருந்தோம்பல், கொடை போன்ற பல்வேறு பண்புகளில் பண்டைத் தமிழர்கள் சிறந்து விளங்கினர். இவை அனைத்தையும்விட நட்பு என்ற நிலையில் சிறந்த விளங்கினர் என்பதனையும், ஆயந்து கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஒழுக்கம் சொல் விளக்கம்
ஒழுக்கம் குறிக்கும் மாரல் என்னும். ஆங்கிலச் சொல் மோர்சு என்ற இலத்தின் மொழிச்சொல்லின் திரிபாகும். ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள், வழக்கமாக கொள்ளும் முடிவை ஒழுக்கமாகக் கொண்டனர்.

ஒழுகு, ஒழுக்கு என்னும் சொற்கள் ஒழுக்கம் என்னும் சொல்லாக மலர்ந்த்து என்பதை, ”மனித இனத்திற்யேயுரிய தனிப்பண்புகள் பல, அவற்றுள் ஒழுக்கம் முதன்மையானதாகப் போற்றப்படுகிறது. ஒழுக்கம் என்னும் சொல் ஒழுகு வேர்ச்சொல்லடியாகப் பிறந்த்தாகும். ஒழுகு என்னும் சொல்லிற்கு இடையுறாது கடைப்பிடித்தல் என்பது பொருள். இடையறாது நீர் ஒழுகுவதை ஒழுக்கு என்று கூறுவதைப் போல வாழ்க்கையில் உயர்ந்தவையெனக் கருதப்படும் நெறிமுறைகளை எக்காலத்தும் எவ்விடத்தும் இடையறாது மேற்கொண்டொழுகுவதே ஒழுக்கமாகும்.”1 எனக் குறிப்பிடுவார் மு.வரதராசனார்.

ஒழுக்கம் என்னும் சொல் சீலம், நன்னடத்தை, ஆசாரம், உயர்ச்சி முறைத்தன்மை, உலக ஓம்பிய நெறி போன்றப் பல பொருள்களைத் தருகிறது. தனி மனித ஒழுக்க கூறுகள் சில,

”ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினு ஓம்ப்ப் படும்”2

என்னும் குறளடியில் நல்லொழுக்கம் ஒருவனுக்கு மேன்மையைக் கொடுப்பதால் நல்லொழுக்கம் உயிரை விடவும் மேலானதாகக் கருதப்பட்டுக் காப்பாற்றப்படுதல் வேண்டும் என வள்ளவப் பெருந்தகை வலியுறுத்துகிறார்.

ஒருவன் ஒழுக்கத்தால் தன்மையும் தன்னைச் சாரந்தவர்களையும் மேம்பாடடையச் செய்யலாம். தனி மனித ஒழுக்கம் சமுதாயத்தோடு தொடர்பு உடையது என்பதனை குன்றக்குடி அடிகளார், ”ஒழுக்கம் என்பது ஒன்றல்ல - இரண்டல்ல பல கூறுகளை உடையது எனினும் இரண்டு பெரும் பிரிவாக ஒழுக்க நெறியை வகைப்படுத்தலாம். தனிமனிதன் தன்னுடைய வாழ்க்கை வட்டத்தில் தனக்காகக் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் ஒன்று, பிறிதொன்று தனிமனிதன் தான் வாழும் சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளும் முறையில் கடைப்படிக்கும் ஒழுக்கம் ஆகும்.”3

சிந்தனைத் தூய்மை

”மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”4

என்னும் குறளடியால் மனத்தூய்மையின் மூலமே மனிதன் வாழ்வில் சாதனைகள் புரியலாம் என்பதனை வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்துகிறார். இறையருள் மனத்தூய்மை அற்றவர்க்கு கிட்டாது என்பதனை,

”சினமிறக்கக் கற்றாவம் சித்தியெல்லாம் பெற்றலாலும்
மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே”5

எனத் தாயுமானவர் பாடியிருக்கிறார். மேலும்,

”நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்”6

என்றும் மனத்தூய்மை பற்றிக் கூறியுள்ளார். மேற்கண்ட கருத்துக்களில் மூலம் மனிதன், வாழ்வில் மனத்தூய்மையுடன் இருத்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

ஒழுக்கமுடைமை

”ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்”7

எனும் குறளில் சிறந்த குடிப்பிறப்புக்கு அடையாளம் சிறந்த ஒழுக்கமுடையவராக வாழ்வது தான். இழிந்த பிறப்பின் அடையாளம் ஒழுக்கம் தவறி வாழ்வது தான் என ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வள்ளுவர் தெளிவுப்படுத்துகிறார்.

”பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை
இழைத்தீங் கெண்ணியிருத்தல் - இழைந்த
பகைகெட் வாழ்வதும் பலபொருள் நல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று”8

என்ற காரியாசான் பாடலில் அறியலாம்.

அன்புடைமை

”அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு”9

எனும் குறளடியில் அன்பை வழியாகக் கொண்டு வாழ்பவனே உயிருள்ள மனிதன் ஆவான். அன்பு இல்லாது வாழ்பவன் வெறும் எலும்புகளைப் போர்த்தி இருக்கும் தோலை உடைய உடம்பு மட்டுமே. அதாவது, செத்த பிணத்திற்குச் சமம் என்கிறார் வள்ளுவர்.

மனதில் அன்பு இல்லாதவர்கள் சுற்றத்தாராகர், நட்புடையவர்களாகவும் ஆகார் என்பதனை,

”ஈரமில்லாது கிளை நட்பன்று”10

எனும் முதுமொழிக்காஞ்சி பாடலடி உணர்த்துகிறது. மேலும்,

”பேரிற் பிறந்தமை ஈரத்தினறிய”11

எனும் பாடல் வரியில் உயர்குடிப் பிறப்பிற்குக் காரணம் அன்புடைமையே எனக் கூறுகிறார்.

நன்றியறிதல்
நன்றிகாட்டுதல் நற்குணங்களுக்கெல்லாம் தலையாயது. நன்றி காட்டும் ஒழுக்கம் ஒருவர்க்குச் சொல்ல வரக்கூடியதன்று, இயல்பாக வருவதாகும். தனிமனிதன் தன்னை வளர்த்துக் கொள்ள நன்றியறிதல் என்ற ஒழுக்கத்தையும் பேணுதல் வேண்டும்.

”தனியனெனப் படுவான் செய்த நன்றில்லான்”12

எனும் செய்யுள் அடிகளில் செய்ந்நன்றி மறப்பவர் இச்சமூகத்தால் தனியாக விடப்படுவார் என்கிறது. மேலும்,

”தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாகக்
கொள்வர்பயன் தெரிவார்”13

எனும் குறளில் உதவியின் சிறுமையைப் பாராது அதன் பயனை எண்ணிப்பார்க்க வேண்டும் என்கிறார்.

கல்வி
மனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். கல்வியின் வாயிலாகப் பெரும்பான்மையான நல்ஒழுக்கத்தைப் பெற முடியும். இதனை இனியவை நாற்பது,

”நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே”14

எனும் அடியில் நாள் தோறும் அறிவொழுக்கங்களைத் தரும் நல்ல நூல்களைப் படிக்க வேண்டும் என்கிறது. வள்ளுவர்,

”விலங்கொடு மக்கள் அனையர்இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்”15

என்னும் குறளடியில் புகழ்பெற்ற நல்ல நூல்களைக் கற்றவரே மாந்தர்ஆவர். கல்லாதவர்விலங்குகள் ஆவர்என்கிறார். நான்மணிக்கடிகை,

”ஒருவருக்கு கற்றலின் வாய்த்த பிறவில்லை”16

என்னும் செய்யுளடியில் ஒருவருக்கு இறுதிவரை பயன்தரக்கூடியது கல்வி மட்டுமே நிலையான செல்வமும் அதுவே எனக் கூறுகிறது. பழமொழி நானூறு,

”கற்றறிந்தார்கண்ட அடக்கல் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்- தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட
நிறைகுடம் நீர்தளும்பல் இல”17

என்னும் பாடலில் அடக்கமுடன் நடந்து கொள்ள கல்வியறிவு பெற்ற ஒருவனால் மட்டுமே முடியும். நிறைகுடம் நீர்தளும்பாது. அதுபோல் நிறைந்த கல்வியறிவுடையவர்அடங்கி நடப்பர். குறைகுடம் நீர்தளும்புவது போல கல்வியறிவு நிரம்பப் பெறாதார்அடங்கி நடக்க மாட்டார்கள் என்கிறது பழமொழி. வள்ளுவர்

”கேடில் வழிச்செல்வம் கல்வி - ஒருவருக்கு
மாடல்ல மற்றை யவை”18

என்னும் குறட்பாவில் ஒருவக்கு அழிவில்லாச் செல்வம் கல்வியேயாகும். மற்ற செல்வங்கள் உற்ற துணையாகாது என்கிறார்.

‘நட்பு’ பொருள் விளக்கம்
ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் (பொதுவாக) உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் ‘உறவு’ நட்பாகும் என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பொருள் விளக்கம் தருகின்றது. நபர்கள் அல்லது நாடுகளுக்கு இடையிலான நேசஉறவு நட்புறவு என்றும் கூறப்படுகிறது. மேலும், தோழன் என்பதற்கு நண்பன் என்றும், தோழமை என்ற சொல்லுக்கு நட்பு என்றும் பொருள் தருகின்றது. நட்பு என்பதற்கு ‘சிநேகம்’ என்று தமிழ் லெக்ஸிகன் அகராதி பொருள் கூறுகின்து. நட்பு என்பது ‘நள்’ என்ற பகுதியின் அடியாகப் பிறந்தது. நட்புக்கு உரியவரை ஆராய்தலே நட்பாராய்தலாகும். நட்டார், நட்டோர், நட்பண், நண்ணு, நணி, நண்பினன், நண்பினோர், நண்பன், நள்ளார், நள்ளாதார்எனும் சொற்கள் இலக்கியத்தில் பயின்று வந்துள்ளன. நட்பு என்பது அரசனுக்கு வினையிடத்து அரசனின் படைபோல உதவுவது என்று பரிமேலழகரும் நட்பின் முறைமை சொல்லுதல் என்று பரிதியும், அமைச்சு, நாடு, அரண், பொருள், படை ஆகியவற்றுள் படையும் பொருளும் உள்ளிட்டன நிலை நின்று வளர்வதும் இனநலன் அழிவுபெறாத நட்பை உடையவனுக்கு அல்லது கூடாது ஆதலின் படைச்செருக்கு என்பதை அடுத்து வைத்தனர் என்று மண்க்குடவரும் நட்பிற்கு வரையறை கூறியுள்ளார். இரண்டு நண்பர்களுக்கு இடையே வழங்கப்படுவது நன்றி திருப்பி வழங்கப்பட வேண்டியது செய்ந்நன்றி. இருவரும் சமூகத்தில் இணையானவர்கள். குருதி உறவுக்கு அப்பாற்பட்டவர்கள். உடைமை நாகரிக சமுதாயத்தில் இணையான தகுதி படைத்த இரண்டு ஆண்களுக்கிடையே ஆய்ந்து அளந்து ஏற்படுத்திக் கொள்ளும் உறவுக்குப் பெயர்நட்பு என்று ராஜ் கௌதமன் விளக்கமளிக்கின்றார். இவர்நட்பு என்பது நன்றி, செய்நன்றி எனும் அடிப்படையில் செயல்படுவது என்பதை புலப்படுத்துகின்றார். இவ்வாறு ‘நட்பு’ என்ற சொல் குறித்து பொருள் விளக்கம் அறியப்படுகின்றது.

வள்ளுவர்காட்டும் நட்பு

திருவள்ளவர் தோழமை தொடர்பான நட்பு (79) நட்பாராய்தல் (80) பழைமை (81) தீநட்பு(82) கூடாநட்பு (83) எனும் அதிகாரங்களைப் பொருட்பாலிலும், அரசியல் சார்ந்த அங்க இயலிலும் அமைத்துள்ளார்.. நட்பைப் போல் செய்து கொள்வதற்கு அருமையானவை யாவுள? என வினவும் வள்ளுவர்நட்பிற்கு மிகச்சிறப்பாக இலக்கணம் வகுத்துள்ளார்.

”உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு”19

உண்மையான நட்பிற்கு இக்குறள் விளக்கம் தருகின்றது. நண்பனுக்கு துன்பம் வரும்போது சென்று காத்தலே உண்மையான நட்பு என்கிறார் வள்ளுவர். மேலும் முகம் மட்டும் மலரும்படியாக நட்புக் கொள்வது நல்ல நட்பாகாது. நெஞ்சம் மலரும்படியாக உள்ளன்பு கொண்ட நட்பு கொள்வதே நல்ல நட்பாகும் என்பதை,

”முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு”20

என்ற குறள் மூலம் நட்பின் பெருமையை உணர்த்துகின்றார்.

நட்பு கூறும் கடமைகள்
நட்பு செய்து கொள்வது ஒருவரோடோருவர்சிரித்து மகிழ்வதற்காக மட்டுமன்று நண்பர்நெறிகடந்து செல்லும் போது. முற்பட்டுச் சென்று இடித்து உரைப்பதற்காகவும் ஆகும். இதனை,

”நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு”21

என்ற குறள் மூலம் நட்புக்குரிய கடமையை அறியலாம்.

நட்புக்குரிய தகுதிகள்

நட்பு செய்து கொள்வதற்குரிய தகுதியுடையவர்களை வள்ளுவர் நட்பாராய்தல் எனும் அதிகாரத்தில் கூறியுள்ளார். அறிவில்லாதார் நட்பு வேண்டாம் என்று கூறும் வள்ளுவர் நண்பரைத் தெரிவு செய்யும்முன் அவரைப் பற்றி நன்கு ஆராய்ந்து நட்பு கொள்ளுதல் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

”குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு”22

என்ற குறளில் ஒருவனுடைய குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும் அவன் குற்றங்களையும் நிலையாக இருக்கும் தோழர்களையும் அறிந்தே நட்புக் கொள்ள வேண்டும் என்று கூறுவதிலிருந்து நண்பருக்குரிய தகுதியை அறியமுடிகிறது. உயர்ந்த குடியில் பிறந்தவனும், தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணப்படுகின்றவனும் ஆகிய ஒருவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ள வேண்டும் என்பதை,

”குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு”23

என்ற குறள் மூலம் உணர்த்துகின்றது.

நட்பில் உரிமைகள்
பழகியவர் உறவுத் தொடர்பை சிறிதும் சிதைத்துவிடாமல் காத்து வருவது நல்ல நட்பாகும். வள்ளுவர் இதைக் குறித்து பழைமை என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார்.

”நட்பிற்குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர்கடன்”24

என்ற குறளில் நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமையாகும். அப்படிப்பட்ட உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமை என்று விளக்குகின்றார்.

”விழைதகையான் வேண்டி யிருப்பர்கெழுதகையாற்
கேளாது நட்டார்செயின்”25

என்ற குறளில் தம்மோடு கொண்ட நெருக்கமான உரிமை காரணமாகக் தம்மைக் கேளாமலே நண்பர் ஒரு செயலைச் செய்து விட்டாலும் அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் எடுத்துக்காட்டுகின்றார். நட்புரிமை கெடாமல் தொன்றுதொட்டுப் பழகிவந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாத பண்பினரை உலகம் போற்றும் என்பதை,

”கெடாஅ வழிவந்த கேண்மையர்கேண்மை
விடாஅர்விழையும் உலகு”26

என்ற குறள் உணர்த்துகின்றது. நண்பர் தவறு செய்தாலும் அவரிடத்து கொண்டு நட்புரிமைப் பண்பிலிருந்து மாறக்கூடாது என்றும் வள்ளுவர் உணரவைக்கிறார்.

தீய நட்பு
நற்பண்பு இல்லாதவரின் நட்பு நாளுக்குநாள் வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து குறைவது நல்லது என்கிறார் வள்ளுவர். அகத்தில் அன்பற்று, புறத்தில் நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும் என்று தீய நட்பை,

”நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்”27

என்ற குறள் வரிகள் உணர்த்துகின்றது. தமக்குப் பயன் உள்ள போது நட்புச் செய்தும் பயன் இல்லாதபோது நீங்கிவிடும் ஒத்த தன்மை இல்லாதவரின் நட்பைப் பெற்றாலும் இழந்தாலும் ஒன்றுதான் என்ற கருத்தை.

”உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிவார்கேண்மை
பெரினும் இழப்பினு என்”28

என்ற குறளின் மூலம் தனது காரியத்திற்காக நட்பு கொள்ளும் செயலை வள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தன்னால் செய்து முடிக்கக்கூடிய காரியத்தை தடுத்துச் செய்யாவண்ணம் கெடுப்பகரின் நட்பை கைவிட வேண்டும் என்ற உணர்த்துகின்றார்.

நட்பினை தேர்ந்தறிதல்
நட்பு என்பது ஆராய்ந்து ஏற்படுத்திக் கொள்ளக் கூடியது அத்தகைய நட்பில் மிகுந்த கவனம் தேவை. முகத்தில் இனிமை தோன்ற நகைத்துப் பழகின போதும் அகத்திலே தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்சவேண்டும் என்பதை,

”முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வங்சரை அஞ்சப் படும்”29

என்ற குறள் தெளிவுப்படுத்துகின்றது. அதேபோல மனத்தினால் தம்மோடு நெருக்கம் கொள்ளாமல் பழகுகின்றவரை அவர்கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நண்பராகத் தெளிவு கொள்ளல் ஆகாது என்று வள்ளுவர் கூறுவது கருதத்தக்கது.

”மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று”30

என்ற குறள் மூலம் வெளிப்பட மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து உள்ளத்தில் இகழ்கின்றவர்களைத் தாமும் அந்நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத்தொடர்பை அழித்துவிடவேண்டும் என்று வள்ளுவர் உணர்த்துகின்றார். மேலும், பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் அவரிடம் நட்புக் கொண்டு அகத்தில் போற்றாது வாய்ப்புக் கிடைத்தபோது அதையும் நீக்கிவிட வேண்டும் என்கிறார்.

அரசர்க்குரிய நட்பு
அரசனுக்குரிய ஆறு அங்கங்களில் நட்பும் ஒன்றாகும். அரசர் தனது நண்பராக்கிக் கொளத்தக்கோருக்கு வேண்டிய தகுதிகளில் தலையானது உயர்குடிப்பிறப்பாகும். உயர்குடிப்பிறப்பும், அவர்களது சுற்றமும், பழிக்கு நாணுகிற பண்பும் ஆராய்ந்த பிறகே அவர்களோடு அரசன் நட்புறவு கொள்ள வேண்டும். மேலும் நன்கு ஆராயமற் கொண்ட நட்பால் அரசனுக்குக் கடைசிவரை துன்பம்தான் என்பதை,

”ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்”31

என்ற குறள் தெளிவுப்படுத்துகிறது. இவ்வாறு நட்புக்குரிய வரையறையை வள்ளுவர் விளக்கிக் காட்டியுள்ளார்.

முடிவுரை

”பரிந்து ஒம்பிக் காக்க, ஒழுக்கம், தெரிந்து ஓம்பித்
தேரினும், அஃதே துணை”32

எத்துனை இடையூறுகள் நேர்ந்தாலும் ஒழுக்கத்தை விடாது கடைபிடித்தல் வேண்டும். எத்துணை ஆராய்ந்து தெளிந்தாலும் வாழ்க்கைத் துணையாய்க் கடைசி வரை காக்க வல்லது ஒழுக்கமே என்கிறார் வள்ளவப் பெருந்தகை. அதேபோல் தனிமனிதன் தன் வாழ்வில் ஒழுக்கமுடன் சமுதாயத்தில் வாழ பின்பற்றக் கூடியன. பின்பற்றக்கூடாதவை எவையென திருக்குறளில் தொகுத்துக் கூறியுள்ளார் வள்ளுவர். அதேபோல், பண்டைத் தமிழர்கள் நட்பை இருகண்களாகப் போற்றினர். மனித உறவு நிலைகளில் நட்பு என்னும் வட்டம் மிகப்பெரியதாகும். இத்தகைய நட்பு நல்ல நட்பாக அமைய வேண்டும். நட்புறவு குறித்த இலக்கணம் அகராதி வழியாகக் கூறப்பட்டுள்ளது. திருக்குறளில் வள்ளுவர் நட்பினை கையாண்ட முறை அறியமுடிகிறது. நண்பரைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுக்குரிய தகுதி, நட்புரிமை, நட்பில் கவனம், தீய நட்பு, அரசர்க்குரிய நட்பு ஆகியன குறள் வழியாக விளக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்கள் மூலம் நட்புக்குரிய தன்மையை உணர முடிகிறது.

அடிக்குறிப்புகள்

வரதராசனார், மு, திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1977. ப.20.

பரிமேலழகர்(உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1975. பா.131

குன்றக்குடி அடிகளார், குறட் செல்வம், கலைவாணி புத்தகாலயம், சென்னை, 1996. ப.25.

பரிமேலழகர்(உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1975.பா-34

தாயுமானவர்பாடல்கள்,பராபரக்கண்ணி, உமா பதிப்பகம், சென்னை. 2003. ப.169.

மேலது, ப.151

பரிமேலழகர்(உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1975. பா.133

சிறுபஞ்சமூலம், கழக வெளியீடு, திருநெல்வேலி, 1936., பா.16

பரிமேலழகர்(உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1975.பா.80.

செல்வகேசவராயமுதலியார், தி (பதி.),முதுமொழிக்காஞ்சி, எஸ்.பி.கே.சி. பிரஸ்,1919, ப.5-3

மேலது ப.1-1

வையாபுரிப்பிள்ளை. ச (பதி.), நான்மணிக்கடிகை, சக்தி காரியாலயம், சென்னை, 1944. பா.61.

பரிமேலழகர்(உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1975. பா-104.

வையாபுரிப்பிள்ளை. எஸ் (பதி.), இனியவை நாற்பது, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1949. பா.18

பரிமேலழகர்(உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1975.பா.410.

வையாபுரிப்பிள்ளை. ச (பதி.), நான்மணிக்கடிகை, சக்தி காரியாலயம், சென்னை, 1944. பா.32

செல்வகேசவராயமுதலியார், தி (பதி.), பழமொழி நானூறு, எஸ்.பி.கே.சி. பிரஸ், 1917. பா-10

பரிமேலழகர்(உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1975. பா-410

மேலது பா-788

மேலது பா - 786

மேலது பா - 784

மேலது பா - 793

மேலது பா - 794

மேலது பா - 802

மேலது பா - 804

மேலது பா - 809

மேலது பா - 817

மேலது பா - 812

மேலது பா - 824

மேலது பா - 829

மேலது பா - 792
மேலது பா - 132

* கட்டுரையாளர் - - முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521.-

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R