- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் இருபத்தி ஏழு

அவர்களின் அறைக்கு நகர்ந்து சென்று நோட்டமிட்டபோது அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்டது. எனவே மெல்ல அடிமேல் அடி வைத்து பத்திரமாகப் படிக்கட்டில் இறங்கினேன். மொத்த வீடும் நிசப்தமாக இருந்தது. ஒரு சிறு சத்தம் கூட கேட்கவில்லை. உணவருந்தும் அறையின் சின்ன சந்து வழியாக நுழைந்து பார்த்தபோது சடலம் வைத்திருக்கும் அறையில் பாதுகாவலாக இருந்த மனிதர்கள் அனைவரும் அவரவர் இருக்கைகளிலேயே தூக்கத்தால் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். சவம் வைக்கப்பட்டுள்ள முன்னறையிலிருந்து வெளியே வராந்தாவுக்குச் செல்லும் கதவு திறந்திருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதவின் வழியே புகுந்து வராந்தாவுக்குள் நுழைத்தேன். அங்கேயும் யாருமில்லை. பீட்டரின் மிச்சம் மட்டுமே இருந்தது. அதையும் தாண்டி வாசலுக்குச் செல்லும் முன்புறக் கதவு பூட்டியிருந்தது. அதனின் சாவியும் அங்கே இல்லை.

அந்த சமயத்தில் யாரோ என் பின்புறமுள்ள படிக்கட்டுகளில் இறங்கிவரும் சத்தம் கேட்டது. அங்குமிங்குமாக ஓடி நான் ஒளிந்து கொள்ள இடம் தேடியபோது முன்னறையில் சவப்பெட்டி அருகே மட்டுமே கொஞ்சம் இடம் இருந்தது. அந்தப் பெட்டியின் மேல்மூடி ஒருக்களித்துத் திறந்தவாறு இருந்ததால், ஈரத்துணியால் மூடி வைத்திருக்கும் இறந்த மனிதனின் முகத்தையும், அவன் மேல் மூடப்பட்டிருந்த சவச்சீலையையும் என்னால் நன்கு காண முடிந்தது. காசு மூட்டையை சவத்தின் கைகள் குறுக்காக வைக்கப்பட்டுள்ள பகுதியின் மேல் மூடியினுள் செருகி வைத்தேன். அந்தக் கரங்கள் மிகவும் குளிர்ந்தாக இருந்து என்னையும் உறைய வைத்தது. பின்னர் அறையின் குறுக்காக ஓடிச்சென்று கதவின் பின் மறைந்து கொண்டேன்.

படிக்கட்டுகளில் மேரிஜேன் இறங்கி வந்துகொண்டிருந்தாள். சவப்பெட்டி அருகே மெதுவாகச் சென்று, மண்டியிட்டு, உள்ளே பார்த்தாள். பின்னர் தனது கைக்குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் கண்ணீர்
சிந்திக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவளின் பின்புறமாக நான் நின்றிருந்ததால், அவளின் அழுகைச் சத்தம் எனக்கு கேட்கவில்லை. எனது மறைவிடத்திலிருந்து நான் வெளியே வந்தேன். உணவருந்தும் அறையைத் தாண்டிச் செல்கையில் சவப்பெட்டி அருகே இருந்த இரண்டு ஆண்களும் என்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். அந்தச் சந்து வழியாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று நோக்கினேன். யாரும் அசையக் கூட இல்லை.

திருட்டுத்தனமாகப் படியேறி எனது படுக்கைக்குச் சென்றேன். இத்தனை கஷ்ட சூழலிலும், ஆபத்திலும் நான் செய்த காரியம் சரியாக நடக்கவில்லை என்பதில் வருத்தமாக இருந்தேன். அந்தப் பணமூட்டை அங்கே இருக்கும் இடத்திலேயே இருந்து விட்டால், ஒரு நூறு அல்லது இருநூறு மைல் தொலைவுக்கு நதியின் மேல் நான் தப்பிச் சென்றபின் மேரி ஜேனுக்குக் கடிதம் எழுதித் தெரிவித்து விடலாம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

புதைத்த பிணத்தை அவள் தோண்டி எடுத்துக்கூட அந்த பணமூட்டையை அவள் எடுத்து விடக்கூடும். ஆனால் அது ஒருக்கால் நடக்காமல் கூடப் போய்விடலாம். சவப் பெட்டியின் மூடியை நேராக வைத்து சரி செய்து ஆணியடிக்கும் வேளையில் பணம் இருப்பது தெரிய வந்தால் என்ன ஆகும் என்பதும் ஒரு சந்தேகம். திரும்பவும் ராஜாவுக்கு அந்தப் பணம் போய் சேர்ந்துவிடும். அதன் பிறகு இன்னொரு சந்தர்ப்பம் இதேபோல் கிடைத்துத் திருட முயல்வது என்பது நடக்கவே நடக்காது.

திரும்பவும் கீழே சென்று சவப்பெட்டியிலிருந்து அந்தப் பணத்தை எடுத்து வந்து விடலாமா என்று ஒரு கணம் நினைத்தேன். அப்படி முயற்சிப்பது அனர்த்தமாகிவிடும். காலை நேரம் ஒவ்வொரு நிமிடமாக பக்கத்தில் நெருங்கிக் கொண்டிருப்பதால், விரைவிலேயே அங்கிருக்கும் மனிதர்கள் எழுந்து நடமாடக் கூடும். நான் ஏதாவது செய்யப் போய், என்னை அவர்கள் பிடித்து விட்டால், அதுவும் கையில் இருக்கும் ஆறாயிரம் டாலர் பணமூட்டையுடன் பிடித்து விட்டால், வேறு வினையே வேண்டாம். அவ்வாறு குழப்பம் ஏற்பட்டு ரகளை ஆகும் சூழ்நிலையை நான் விரும்பவில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

அடுத்தநாள் காலை, நான் படியிறங்கிக் கீழே சென்றபோது, முன்னறை மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த பாதுகாவலர்களும் சென்றிருந்தார்கள். அந்தக் குடும்ப ஆட்கள், பார்ட்லியின் விதவை, எங்கள் மோசடிக் கும்பல் இவர்களைத் தவிர அங்கே வேறு யாருமில்லை. அவர்களின் முகங்களில் ஏதேனும் மாறுதல் தெரிகிறதா என்று கூர்ந்து நோக்கினேன். என்னால் எதையும் கணிக்க முடியவில்லை.

இறுதிச் சடங்கு செய்யும் வெட்டியான், மதியவேளையில் அவனின் குழுவுடன் வந்தான். அவர்கள் அறையின் நடுவில் சில இருக்கைகள் வைத்து சவப்பெட்டியை அதன் மேல் வைத்தார்கள். பின்னர் மற்ற இருக்கைகள் அனைத்தையும் ஒரு கோட்டில் நேராக போட்டு வைத்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்து இருக்கைகள் எடுத்து வந்து, வீட்டின் முன்னறை, உணவருந்தும் அறை மற்றும் வராந்தா போன்ற அனைத்து இடங்களிலும் நிரப்பி வைத்தார்கள். சவப்பெட்டியின் மூடி முன்பு இருந்ததைப் போலவே இன்னும் அரைகுறையாகவே மூடி இருந்தது. ஆனால், அனைவரும் சூழ்ந்திருக்கும் அந்தச் சமயத்தில் உள்ளே குனிந்து சோதிக்கும் அபாயத்தை நான் செய்யத் துணியவில்லை.

மக்கள் கூட்டம் கூட்டமாய் வரத்தொடங்கினார்கள். சவப் பெட்டியின் முன்பக்கமாக இருந்த முதல் வரிசை இருக்கைகளில் பெண்கள் அமர்ந்து கொண்டார்கள். அடுத்த அரைமணிநேரத்திற்குள் மக்கள் மெதுவாக ஒன்றன் பின் ஒன்றாக, வந்து இறந்த மனிதனின் முகத்தை ஒரு நொடி உற்று நோக்கிவிட்டுச் சென்றமர்ந்தார்கள். அந்த வீட்டு இளம்பெண்களும், மற்ற பெண்களும் கைகளில் உள்ள கைக்குட்டைகளில் கண்களைப் புதைத்தவாறு, தலை குனிந்து அழுதுகொண்டே அமர்ந்திருந்தார்கள். அனைத்தும் அமைதியாகவும், தீவிரமாகவும் இருந்தது. பாதங்களைத் தரையில் தேய்த்துக்கொள்ளும் ஒலியும், மூக்கைச் சிந்தும் சத்தங்கள் மட்டுமே அங்கே கேட்டன. மக்கள் இறுதிச்சடங்கில் மூக்கைச் சிந்துவது போல, தேவாலயங்களைத் தவிர வேறு எங்கும் இந்த அளவு செய்வதில்லை.

அந்த அறை முழுதும் நிரம்பியதும், கைகளில் கருப்பு நிற கை உறைகள் அணிந்த வெட்டியான் அறை முழுதும் அமைதியாய் வலம் வந்தான். மக்களைத் தேற்றி, அவர்கள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்து, அவர்களை வசதியாக உணர வைத்து என்று அவன் வேலையைச் சரிவரச் செய்தான். அங்கிருக்கும் மனிதர்களை இடம் விட்டு இடம் நகரச் சொல்வதும், நேரம் கழித்து வருபவர்களை உள்ளே அழுத்தி நிற்கவைப்பதும், வழியை மறைக்காமலிருக்கும்படி செய்வதும் என அனைத்தையும் தன் தலை அசைப்பினாலும், சைகைகளாலும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவன் நடத்தினான். பின்னர் சுவற்றின் மேல் சாய்ந்தவாறு இருக்கக்கூடிய ஒரு இடத்தில் அமர்ந்தான். மென்மையாகவும், வஞ்சகமாகவும் இருக்கும் அவனை போன்ற மனிதனை நான் ஒரு இதுவரை கண்டதேயில்லை. அவன் முகத்தில் சிறியதாகக் கூட ஒரு புன்னகை இல்லை.

யாரோ ஒருவர் கொஞ்சம் மோசமான நிலையில் தென்பட்ட அங்கிருந்த ஆர்மோனியப் பெட்டி போன்ற இசைக்கருவியைக் கொண்டு வந்தார்கள். மற்ற எல்லாக் காரியங்களும் முடிந்ததும், ஒரு இளம் பெண் அமர்ந்து அந்தக் கருவியை இசைக்க ஆரம்பித்தாள். அது என்னவோ குழந்தை வீறிட்டழுவது போன்று குரல் எழுப்பிக் கொண்டு அழுதது. ஆயினும், அங்கிருந்த அனைவரும் அந்தக் கருவியின் இசையுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தார்கள். என்னைக் கேட்டால், பீட்டர் இந்தக் கண்ராவியை கேட்காமல் இறந்து போனதற்கு மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றுதான் கூறுவேன்.

பின்னர் மத போதகர் ஹாப்ஸன் மெதுவாகவும், பயபக்தியுடனும் பேச ஆரம்பித்தார். அப்போதுதான், கீழ் அறையிலிருந்து யாருமே இதுவரை கேட்டிராத ஒரு உரத்த ஓசை கேட்டது. அது ஒரு நாய் கத்தும் சத்தம். அது உரக்க ஊளையிட்டதில் நீங்கள் மனதில் நினைப்பது கூட உங்களுக்குக் கேட்காது போய்விடும் போல இருந்தது. சமயகுரு சவத்தின் அருகே நின்று காத்திருந்தார். மொத்த சூழ்நிலையும் மிகவும் சீர்கேடான முறையில் இருந்தது. யாருக்குமே என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தார்கள். வெகு விரைவிலேயே, அந்த நெட்டைக்கால் வெட்டியான் "கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்." என்ற ரீதியில் ஒரு சைகை சமயகுருவுக்குக் காட்டினான்.

பின்னர் அவன் சுவரில் நன்கு குனிந்து சாய்ந்து நின்றதால், அவனின் தோள்கள் மட்டும் அமர்ந்திருந்த மனிதர்களின் தலைக்கும் மேல் தென்பட்டது. நாயின் குரைப்புச் சத்தம் அதிகமாக அதிகமாக, அவனும் அப்படியே சரிந்த நிலையில் இரண்டு சுவற்றுக்கும் இடையில் புகுந்து மறைந்து கீழ் அறைக்குச் சென்றான். ஒரு சில நொடிகளிலேயே ஒன்று அல்லது இரண்டு சாட்டை அடிச் சத்தமும், இறுதியாக நாய் ஊளையிட்ட ஒரு இழுவை ஒலியும் நாங்கள் கேட்டோம். அதன்பின் அனைத்தும் மீண்டும் அமைதியாகிவிட்டது. பின்னர் அந்த சமயகுரு முன்பு நிறுத்திய இடத்திலிருந்து பிரசங்கத்தைத் தொடர்ந்தார்.

அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களில் வெட்டியானின் தோள் சுவற்றை ஒட்டி உயர்ந்து கொண்டே வந்தது. அப்படியே குனிந்து சாய்ந்தபடியே மூன்று அறைகளுக்குள்ளும் புகுந்து வந்தான். பின்னர், அவன் கையால் அவனது வாயைப் பொத்திக்கொண்டு, தலையை கொக்கு போல அங்கிருந்த மனிதர்களின் தலைக்கு மேலாக வளைத்து சமயக்குருவின் காதில் ஏதோ ரகசியம் கூறுவது போல "அவன் ஒரு எலியைப் பார்த்து விட்டான்" என்று கூறினான்.

பிறகு பழைய மாதிரியே அவன் இடம் சென்று சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான். ஏன் நாய் அவ்வாறு சத்தமிட்டுக் குலைக்கிறது என்று அறியாமல் குழம்பியிருந்த மக்கள் அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் திருப்தியடைந்தார்கள். அவ்வாறான சிறு விஷயங்களைச் சரி செய்வதற்கு அதிக முயற்சி தேவையில்லை. ஆனால், சரியான சமயத்தில் செய்யப்படும் இந்த மாதிரியான சிறு செயல்கள் கூட மக்களின் மதிப்பையும், பாராட்டுதலையும் சம்பாதித்துத் தந்துவிடும். அதனால்தான் பொதுவாக எல்லா ஊர்களிலும் வெட்டியான் மாதிரியான பிரபலமான மனிதன் வேறு எவனும் இருக்க மாட்டான்.

நல்லது. இறுதியாக நடந்த பிரசங்கம் மிக நீண்டதாக அலுப்பைக் கொடுப்பதாயிருந்தாலும் நன்றாகவே இருந்தது. அதுவும் முடிந்தவுடன், ராஜா உள்ளே நுழைந்து எப்போதும் போலவே சில குப்பையான கருத்துக்களை அதிகப் பிரசங்கித்தனமாக உளறிக் கொட்டினார். அத்துடன் எல்லாமே முடிந்தது. வெட்டியான் தனது கருவிகளுடன் அந்த மேல்மூடியை சரி செய்ய சவப் பெட்டிக்குள் தலையை நுழைத்தான். மிகுந்த கலக்கத்துடன் நான் அவனையே கூர்ந்து கவனித்தவாறு அங்கே என்ன நடக்கப் போகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவன் பெரிதாக எதையும் குழப்பி வைக்கவில்லை. மூடியை சரியாகப் பொருத்தி, சுலபமாக ஆணியடித்து இறுக்கமாக மூடிவிட்டான். அவ்வளவுதான். அதனுள்ளே நான் வைத்த பணப்பை உள்ளதா இல்லையா என்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வேளை, யாருக்கும் தெரியாமல் வேறு யாரோ அதை எடுத்திருந்தால்? என்னை நானே கேட்டுக் கொண்டேன். அது தெரிந்து கொள்ளாது, மேரிஜேனுக்கு நான் எப்படிக் கடிதம் எழுத முடியும்? ஒரு வேளை மீண்டும் அவள் அந்தச் சவப்பெட்டியைத் தோண்டி எடுத்து அதில் ஒன்றுமில்லை என்றால் என்ன செய்வது? என்னைப் பற்றி அவள் என்ன நினைப்பாள்? அடச் சீ! அவர்கள் என்னைத் தேடிவந்து சிறையில் அடைப்பதுதான் மிச்சமாகும். நான் வாயைப் பொத்திக்கொண்டு கடிதம் எழுதும் எழுதாமல் இருப்பதுதான் நல்லது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எல்லாமே தற்போது சரியான குளறுபடியாக மாறிவிட்டது. நிலைமையைச் சீராக்கப் போவதாக நினைத்து, நானே எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி, முன் இருப்பதை விட அதிகம் சீர்கெடுத்து விட்டேன். நான் நல்லதே நினைத்தேன். அப்படியே அதன் போக்கிலே விட்டு விடுகிறேன். போய் தொலையட்டும்.

அவரைப் புதைத்த பிறகு நாங்கள் திரும்ப வீடு வந்து சேர்ந்தோம். நான் அனைவரின் முகத்தையையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். என்னால் அமைதியாக அந்த விஷயத்தை மறந்து இருக்க இயலவில்லை . புதிதாய் எதுவுமே வெளிவரவில்லை. அந்த முகங்கள் எனக்கு எதுவும் கூறவே இல்லை.

அன்று மாலை ராஜா அனைவரையும் சந்தித்து அவரின் தோழமையான பேச்சு ஜாலத்தால் ஒவ்வொருவரையும் உற்சாகமூட்டமுயன்றார். இங்கிலாந்தில் அவரின் கீழ் வேலை செய்யும் மக்கள் அவரைக் காணாது வருத்தம் கொள்வார்கள் என்பதால், இந்த ஊரில் இருக்கும் மிச்ச சொத்துக்களுக்கும் உடனடியாக வழி செய்துவிட்டு ஊருக்குத் திரும்பவேண்டும் என்றார். அவரும் அங்கிருந்த மற்றவர்களும் அவருக்கு அங்கே தங்க அதிக நாட்கள் இல்லாதது குறித்து மிகுந்த வருத்தம் அடைந்தார்கள். அங்குள்ள அனைவருமே அவர் அங்கேயே நீண்ட நாட்கள் தங்கவேண்டுமென ஆசைப்பட்டார்கள். ஆயினும் அது முடியாத காரியம் என்று அவர்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறினார்கள்.

அவரும் வில்லியமும் அந்த இளம்பெண்களையும் தங்களுடன் கூட்டிச் செல்வதாக ராஜா தெரிவித்தார். இதைக் கேட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அந்தப் பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வாழ்வதுடன், அவர்களின் சித்தப்பாக்கள் அவர்களை நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்று அந்த ஊர் மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அந்த பெண்களுக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அங்கே நடந்த அத்தனை கெட்ட விஷயங்களையும் ஒரே கணத்தில் மறந்து அந்தப் பெண்கள் மிகவும் குதூகலத்தில் ஆழ்ந்தார்கள். அங்குள்ள சொத்துக்களை விற்கும் வேலையை ராஜா சீக்கிரமே செய்து முடித்தால், தாங்கள் அவருடன் புறப்படத் தயாராக இருப்பதாய் அந்தப் பெண்கள் அறிவித்தார்கள். தங்களை பொய் சொல்லி ஏமாற்றிய மோசடிப் பேர்வழிகளின் சுயரூபம் உணராத அந்த அப்பாவிக் குழந்தைகளின் ஆனந்தம் என் மனதைப் பிசைந்து வருத்தியது. அவர்களிடம் உண்மையைக் கூற சரியான வழி ஏதும் எனக்கு புலப்படவும் இல்லை.

நல்லது. இந்த வீட்டையும், நீக்ரோ உள்ளிட்ட மற்ற சொத்துக்களையும் அந்த ராஜா இறுதிச் சடங்கு முடிந்த இரண்டு நாட்களுக்குள் ஏலத்தில் விடாமல் மட்டும் இருந்துவிட்டால், அப்புறம் என்னை என்னை என்ன வேண்டுமானாலும் வசை பாடுங்கள். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் அவர்களுக்குத் தேவையெனில் அவரிடம் முன்னதாகவே வந்து வாங்கி கொள்ளலாம் என்று ராஜா செய்தி பரப்பினார்.

இறுதிச் சடங்கு முடிந்த இரண்டு நாட்களுக்குள், அந்தப் பெண்களின் சந்தோஷக் குமிழி “பட்” என்று உடைந்தது. நீக்ரோ மக்களை விலைக்கு வாங்கும் வணிகர்கள் ரு சிலர் ராஜாவிடம் வந்து அங்கிருந்த நீக்ரோ பணியாளர்களை நல்லவிலைக்குப் பேரம் பேசி வாங்கினார். வாங்கியவர்கள் செக் கொடுத்து வாங்கி கொண்டு சென்றனர். அங்கிருந்த நீக்ரோவின் இரண்டு ஆண் குழந்தைகளை நதியின் மேற்பக்கம் உள்ள மெம்பிஸ் என்ற இடத்திற்கு வேலை செய்யவும், அவர்களின் தாய் நீக்ரோவை நதியின் கீழ்புறம் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகருக்கும் எனக் கொண்டு சென்றனர்.

அந்தப் பெண்களின் இதயங்களும், அந்த நீக்ரோ பணியாளர்களின் இதயங்களும் சுக்குநூறாக உடையக் கூடுமோ என்று நான் அஞ்சும் அளவு அவர்கள் வேதனையில் கதறி அழுதார்கள். அவர்கள் ஒன்றையொன்று பிரிய இயலாது கண்ணீர் வடித்த காட்சியை பார்த்த எனக்கு தாங்கமுடியாத வருத்தமாக இருந்தது. அந்த ஊரை விட்டு வேற்று நகரத்து மக்களுக்கு அவர்கள் விற்கப் பட்டால், பின்பு கனவில் கூட அவர்களைத் திரும்பப் பார்ப்பது கடினம் என்று அந்தப் பெண்கள் கண்களில் நீர் வழியக் கூறினார்கள். பரிதாபத்திற்குரிய அந்த பெண்களும், அவர்களின் நீக்ரோக்களும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி அழுத காட்சி என் வாழ்நாள் முழுதும் என் கண்களை விட்டு அகலவே அகலாது.

இதற்கு மேலும் பொறுக்க முடியாது அந்த வஞ்சகக் கும்பலை காட்டிக் கொடுத்துவிட வேண்டுமென்று துடித்தாலும், இந்த விற்பனை சட்டப்படி செல்லாது என்ற விஷயம் இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்து விட்டால், இந்த நீக்ரோக்கள் மீணடும் திரும்பி வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையினால் நான் அமைதியாக இருந்துவிட்டேன்.

இந்த விற்பனை அந்த ஊருக்குள் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. நீக்ரோ தாயையும் குழந்தைகளையும் அவ்வாறு பிரிக்கும் செயல் பாவம் என்ற எண்ணம் அந்த ஊர் மக்களுக்கு ஏற்பட்டு அது சம்பந்தமாக தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தார்கள். ராஜாவுக்கும் பிரபுவுக்கும் உள்ள மரியாதையை அந்தச் செயல் குலைத்தது. ஆயினும் பிரபுவின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாது ராஜா தனது மோசடி விளையாட்டைத் தொடர்ந்துகொண்டேதானிருந்தார். பிரபுவுக்கு இது மிகுந்த தர்மசங்கடம் விளைவித்தது என்பதை நீங்கள் நன்கு உணரமுடியும்.

நீக்ரோக்கள் ஏலம் முடிந்த மறுநாள், காலைப்பொழுதின் பாதி நேரத்தில் ராஜாவும், பிரபுவும் நான் இருந்த பரணுக்கு ஓடி வந்து என்னை எழுப்பினார்கள். ஏதோ பிரச்னை என்பதை அவர்களின் முகத்திலிருந்தே நான் கண்டுகொண்டேன்.

"நேற்று முன்தினம் இரவு நீ என் அறைக்கு வந்தாயா?" ராஜா கேட்டார்.

"இல்லை, மாண்புமிகு ராஜாவே!" நான் பதிலுரைத்தேன். என்னைச்சுற்றி எங்கள் கும்பலைத் தவிர யாரும் இல்லாதபோது இவ்வாறுதான் நான் அவரை அழைப்பது வழக்கம்.

"நேற்று அங்கே அதாவது நேற்றிரவு நீ அங்கே வந்தாயா?"

"இல்லையே, மகாராஜா!"

"நேர்மையாகச் சொல். பொய் சொல்லாதே!"

"நெஞ்சைத் தொட்டுச் சொல்கிறேன், மாண்புமிகு அரசரே! நான் உண்மையைத்தான் பேசுகிறேன். மேரிஜேன் உடன் வந்து உங்கள் அறையையும் பிரபு அறையையும் காட்டியபோது அங்கே வந்ததுதான். அதற்குப் பின் நான் அங்கே கால் கூட வைக்கவில்லை."

"வேறு யாரேனும் உள்ளே செல்வதை நீ கண்டாயா?" பிரபு வினவினார்.

"இல்லை, கருணை மிக்கவரே! அப்படி யாரையும் கண்டதாக எனக்கு நினைவில்லை."

"நன்கு நிறுத்தி நிதானமாக யோசி."

சிறிது நேரம் யோசித்தேன். இதுதான் நான் எதிர்பார்த்த நல்ல சந்தர்ப்பம்.

"நல்லது. அந்தப் பணியாள் நீக்ரோ பலமுறை உள்ளே செல்வதை நான் கவனித்தேன்."

இருவரும் ஒருகணம் அதிர்ந்து பாதுகாப்பற்ற பகுதிக்கு தள்ளப்பட்டது போலத் துள்ளினார்கள். பிறகு அதுதான் என் பதிலாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தது போல நடித்தார்கள்.

"என்ன சொல்கிறாய்? அனைத்து நீக்ரோக்களுமா?" பிரபு கேட்டார்.

"இல்லை. நல்லது. எல்லோரும் எல்லா சமயத்திலுமல்ல. ஒரே ஒருமுறை அவர்கள் அனைவரும் ஒன்றாக அந்த அறையிலிருந்து வெளிவந்ததைப் பார்த்தமாதிரி என் நினைவு."

"ஆஹா! எப்போது அது நடந்தது?"

"இறுதிச் சடங்கு நடந்த அன்று காலை. நான் வெகு நேரம் உறங்கி விட்டேன். எனவே கொஞ்ச நேரம் கழித்து ஏணியில் இறங்கி வரும் வேளை, அவர்களை நான் கண்டேன்."

"நல்லது. மேலே சொல்லு. அவர்கள் என்ன செய்தார்கள்? எப்படி நடந்து கொண்டார்கள்?"

"அவர்கள் எதுவும் செய்யவில்லை. நான் பார்த்தவரை அவர்கள் வித்தியாசமாகவும் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் பூனை நடை நடந்து சென்றார்கள். மேன்மை பொருந்திய ராஜாவின் அறையை சுத்தம் செய்ய அவர்கள் சென்றிருக்கலாம் என்றும் நீங்கள் அங்கே உறங்காமல் விழித்து இருக்கக் கூடும் என்றுதான் நான் எண்ணினேன். நீங்கள் அங்கே படுக்கையில் உறங்கி கொண்டிருப்பதைக் கண்டவுடன் சத்தம் செய்யாமல் நழுவிச் சென்று விட்டார்கள். உங்களை எழுப்பி பிரச்னையில் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை போலும்."

"கடவுளே! அவ்வளவுதான்" ராஜா கூறினார்.

இருவரும் மிகவும் சோர்ந்து காணப்பட்டார்கள். கொஞ்சம் மடத்தனமாகவும் முழித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நிமிடம் அப்படியே நின்று தங்கள் தலையைச் சொரிந்து கொண்டார்கள். இறுதியாக பிரபு ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார்.

பின்பு "அந்த நீக்ரோக்கள் நம்மிடம் நன்கு விளையாட்டு காட்டிவிட்டனர். இந்த ஊரிலிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் செல்லும்படி அவர்களை விற்று விட்டோம் என்று சோகமாய் இருப்பது போல அருமையாக நடித்தார்கள். பாவம் அவர்கள் என்று நான் நினைத்தேன். நான் மட்டுமா, நீயும் மற்றவர்களும்தான். நீக்ரோக்கள் நடிக்க முடியாது என்று இனிமேல் யாரும் சொல்லாதீர்கள். ஏன், அவர்கள் நடித்த நடிப்பால் அனைவருமே முட்டாளாகி இருப்பது நிஜம். இப்படியே அவர்கள் தொடர்ந்து நடித்தால், கூடிய விரைவில் பெரிய செல்வந்தர்களாக அவர்கள் மாறி விடுவது நடக்கும் என்பது என் கருத்து. எனக்கு மட்டும் கொஞ்சம் பணம் இருந்து, ஒரு நாடகக் கொட்டகையும் இருந்திருந்தால், சிறந்த நடிகர்களைத் தேடி நான் செல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அற்பத் தொகைக்காக அவர்களை நாம் விற்று விட்டோம். அற்பத் தொகை. ஹேய்! அந்த நீக்ரோ வணிகர் கொடுத்த காசோலை எங்கே?" என்று பிரபு கேட்டார்.

"வங்கியில் செலுத்தி விட்டேன், வேறெங்கே அது இருக்கும்?"

"நல்லது. கடைசியில் அதுவாவது மிச்சமாயிற்றே, நன்றி இறைவா!"

"ஏதேனும் கெட்டது நடந்து விட்டதா? மிகவும் பணிவுடன் நான் கேட்டேன்.

சுழன்று திரும்பிய ராஜா "உனக்குத் தேவையில்லாத விஷயம். வாயை மூடிவைத்துக் கொண்டு உன் வேலை என்னவோ, அப்படி ஏதேனும் இருந்தால், அதை மட்டும் பார். இந்த ஊரில் இருக்கும் வரை இதை நன்றாக உன் மனதில் வைத்துக் கொள். புரிகிறதா? என்று கடுமையாகச் சீறினார்.

"நம்முடைய நஷ்டத்தை நாம் வாய் பேசாது முழுங்கிவிடவேண்டும். ஒன்றும் சொல்லக் கூடாது. அப்படியே சென்று கொண்டிருக்க வேண்டும். வாய் மூடி மௌனியாக இருப்பதை இப்போது நாம் கடைப்பிடிக்க வேண்டும்." என்று பிரபுவை நோக்கி ராஜா கூறினார்.

அவர்கள் ஏணிப்படியில் இறங்கி கொண்டிருக்கும் வேளை, பிரபு மீண்டுமொருமுறை நக்கல் சிரிப்புடன் கிண்டல் அடித்தார்.

"விரைவு விற்பனை. குறைந்த லாபம். ஓ! ஆமாம். நல்ல வணிகம்தான்."

"ஒருவேளை அவர்களை விற்கமுடியாமலே போய் விட்டால் நஷ்டம் என்று கருதி விரைவாக விற்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் லாபம் நமக்கு நல்லது என்று நினைத்தேன். இது உன் புத்தியை விடத் தவறானதா?" உறுமிக் கொண்டே ராஜா வினவினார்.

"நல்லது. இப்படிச் சொல்லும் ஒருவர் முன்னமே என் அறிவுரையைக் கேட்டு நடந்திருந்தால், அந்த நீக்ரோக்கள் இன்னமும் இந்த வீட்டில் இருந்திருப்பார்கள். இப்படி நாம் புலம்ப வேண்டியதும் நடந்திருக்காது."

ராஜா விடாமல் பிரபுவை மென்மேலும் கடிந்து கொண்டே போனார். பிறகு என்னை நோக்கி மீண்டும் கடுமையாக வசை பாடினார். சந்தேகத்திற்கிடமாக அந்த நீக்ரோக்கள் அவரது அறைக்குள் நுழைந்ததை நான் பார்த்திருந்தாலும் அதை முன்னமே ஏன் கூறவில்லை என்று கடூரமாக கூச்சலிட்டார். எந்த மடையனுக்கும் அதைக் காணும் வேளை சந்தேகம் எழுந்திருக்கும் என்றார்.

பின்னர் அந்த நாளின் காலையில் தவறு ஒன்றுமே நடக்காது என்று நினைத்துப் படுக்கையில் படுத்து உருண்டு கொண்டிருந்த தன்னையும் வைது கொண்டார். இனி அந்த மாதிரி காலையில் படுத்துக் கொண்டிருந்தால் வாழ்வே கெட்டு விடும் என்று தனக்குத் தானே சபித்துக் கொண்டார். இவ்வாறாக ஒருவரை ஒருவர் கடிந்து குறை கூறிக்கொண்டே சென்றனர். எப்படியோ இந்தப் பழியை அந்த நீக்ரோக்கள் மீது போட்டு நான் தப்பிவிட்டதில் எனக்கு ஒரு பயம் கலந்த சந்தோசமே ஏற்பட்டது. அதிலும் நீக்ரோக்கள் இங்கு இல்லாததால், எந்த ஆபத்தும் நான் அவர்களுக்கும் உருவாக்கவில்லை என்பது கூடுதல் சந்தோசமே.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R