கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்)மருத்துவமனை வளாகம் முழுக்க, முடிச்சு முடிச்சாக ,ஜனங்கள் நின்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். துக்கமும் அவமானமும் ஒருபக்கம் என்றால், அதிர்ச்சியின் ஆகாத்தியம் இன்னொரு பக்கம். மூத்த மகன் சரவணனால் பேசவே முடியவில்லை. சரவணனுக்கு இந்த 52 வயசுக்குப் பொருத்தமாக மண்டை முழுக்க சஹாராப்பாலைவனமாக பளபளத்துக்கொண்டிருந்தது. இரண்டாமவர் வீரராகவனுக்கும் வழுக்கை இல்லையென்றாலும் கூட,அவரது தலையும் பொல்லென்று சுத்தமாய்  நரை முடிதான்,. இவர்களுக்கே பேரன் பேத்தி பிறந்துவிட்டார்கள். அப்படியிருக்க இந்த கிழவன், கொள்ளுத் தாத்தாவாய் ,லட்சணமாய், வாழவேண்டிய , இல்லை, , ஒரு மூலையிலாவது முடங்க்கிடக்கவேண்டிய வயசில் போய், இப்படி ஒரு காரியத்தை செய்துட்டாரே? கொஞ்சமாவது பெற்ற பிள்ளைகளோட மான அவமானத்தைப்பற்றி யோசிச்சாரா?  கோபப்படுவதா?  நெஞ்சிலறைந்து கொண்டு அழுவதா?  ? “என்று இரண்டும் கெட்டான் நிலையில் நிலைகுலைந்துபோய் நின்றிருந்த மகன்களை, நெருங்கிய உறவினரான ராஜு மாமாதான் தட்டிக்கொடுத்து , ஒவ்வொரு காரியங்களையும் பொறுப்பாக, செய்ய வைத்தார்.இதில் சனிப்பொணம் தனியாகப்போகக்கூடாது என்று, கூடவே அதற்கான பரிகாரத்தையும் செய்யவைத்தே,பெரியசாமித் தாத்தாவை, மண்டாய் சுடுகாட்டில், மின்தகனத்துக்கு கொண்டு போனார்கள். அதுவரை தாங்கிக்கொண்டு நின்ற பெரியவர் சரவணனால் அதற்குமேலும் தாங்கமுடியவில்லை.

 

”ஏம்பா, ஏம்பா, இப்படி பண்ணினே? உனக்கு என்னப்பா குறை வச்சேன்? ; என்று பெரிதாக அழத்தொடங்கிவிட்டார்.. இரண்டாமவர் வீர ராகவனும் தேம்பித்தேம்பி அழுதார்.

”இப்படி ஒரு பாவத்தைப்பண்ணிட்டு போயிட்டியே? ஆண்டவனே, இந்தக் கிழவனுக்கு நீயாவது நல்ல புத்தி காட்டியிருக்ககூடாதா? கல்லும் கனிந்துருகும் கண்றாவியாக இருந்தது அவர்கள் கண்ணீர். தகனத்துக்கு வந்த மொத்த ஜனங்களுக்கும் கொல்லென்றாகிவிட்டது. இப்படி உற்றம், சுற்றம்,என ஊரே உறைந்துபோய் நிற்க, நிமித்தம் அதுவாய்  ஒரு நிமிஷத்தில் சாம்பலாகிப்போனார் பெரியசாமித் தாத்தா .மூன்றாம் நாள் அஸ்தியை ஒரு குமிழ்ப்பானையில் தகன அதிகாரி எடுத்து நீட்ட,சகலமும் பதறிக்கொண்டு வந்தது ராஜுமாமாவுக்கு.

.”உண்மையிலேயே என்னதாம்பா நடந்தது உங்களுக்குள்ளே? இந்த 72வது  வயசிலெ 10 வது மாடியிலருந்து குதிக்கணும்னா,,--அட, தற்கொலை செய்ய வேண்டிய வயசாடா இது ? அத்தானுக்கு அப்படி என்னதாண்டா கவலை?“

ஆடிப்போய்விட்டார் சரவணன். “ மாமா, நீங்களுமா மாமா எங்க பேரிலே சந்தேகப்படறீங்க?

”ஊரே என்னைத்தானே கேட்குது ? நான் யாருக்குன்னு பதில் சொல்லுவேன் ?  நினைக்கவே ஒடம்பெல்லாம் தூக்கி வாரிப்போடுது. இதில 72 வயசிலே தற்கொலைங்கறதொன்னும் சின்ன விசயமில்லை, எப்படிறா, எப்படிறா,    சே, பெரிய வெக்கக்கேடால்லெ போச்சி?“ படீரென்று வெடித்தார் சரவணன். ”திமிர் மாமா திமிர், வயசான காலத்திலே கிழவனுக்கு மூளை பிசகிப்போச்சு ?!வேறென்ன சொல்ல ?டி.வி. என்னா? தனிக்கட்டில் என்னா? நினைச்சா நினைச்ச இடத்துக்குப்போக கைக்காசு என்னா?  எதிலே கொறை வைச்சோம்? அப்படியும் இப்படி ஒரு காரியத்தைப்பண்ணனும்னா, கிழவனுக்கு மூளைக் கோளாறில்லாம வேறென்னா ?

வீர ராகவனுக்கும் பொத்துக்கொண்டு வந்தது கோபம்.. “ சொகுசு கூடிப்போனா புல்லும் நாட்டியமாடும்னு சும்மாவா சொன்னாங்க? அண்ணன் சொல்றதுதான் மாமா உண்மை.தின்னுட்டுப்பொழுது போகாம, ஏதாவது கோக்குமாக்கா செஞ்சாலாவது, அனுதாப அலையிலே ஊரே அழுவுமேங்கற குருட்டுபுத்தி கிழவனுக்குத் தோணியிருக்கும்,  வேறென்னா? ”

ராஜுமாமாவுக்கே கூட ஒரு வேளை இவர்கள் சொல்வதுதான் சரியோ என்று தோன்றி விட்டது. ஆனாலும் ஒன்றைக்கவனிக்க அவர் மறக்கவில்லை. மகன்கள் இருவருமே பெரியத்தானை கிழவன், கிழவன் என்றுதான் பொருமினார்களே தவிர, மறந்தும் கூட அப்பா, என்று சொல்லவில்லை. வீட்டிலும் கூட இவர்கள் இப்படித்தானா? இல்லை, இந்த காலம் போன காலத்தில் அத்தான் மாடியிலிருந்து குதித்த கோராமையில் தாங்கமாட்டாது இப்படி வெடிக்கிறார்களா ?  மிகவும் வருத்தமாக இருந்ததது. கங்கம்மா அக்கா மட்டும் உயிரோடிருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? 18 வயசில் பெரிய படிப்பும் இல்லாமல், ஒரு கைத்தொழில் கூடத்தெரியாமல், சிகாமட்டிலிருந்து  வந்த ராஜுவை அன்போடு ஆதரித்தவர் ராஜுமாமாதான்.  ஏதோ தூரத்து சொந்தம் தானே என்றில்லாமல், உடனே அருகிலுள்ள ஒரு வங்குசாக்கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.பின்னாளில் ராஜுவுக்கே கல்யாணமாகி, மனைவி வந்த பிறகும் கூட , கங்கம்மா அக்காவின் மொச்சைகொட்டை போட்டகருவாட்டுக்குழம்பின் ருசிக்கீடாக ஒரு சமையலை அவர் சாப்பிட்டதே இல்லை.

பெரியசாமி அத்தானின் மனசும் பெரிசுதான். அள்ளி அள்ளி அக்கா பரிமாறும்போது, ’எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்குத்தானே,ஏன்டா வஞ்சகம் பண்றே? சாப்பிடு,நல்லா சாப்பிடு, “ என்று அவரும் அவர் பங்கிற்கு, ”பெரிய துண்டுமீனாய் பார்த்து அவன் இலையில் போடு, என்று பரிவார். ராஜுமாமாவுக்கு மங்களத்தைப் பார்த்து கட்டிவைத்ததே கூட பெரியசாமி அத்தான் தான்.பிறகு பிரசவம், நல்லது பொல்லது, என எல்லாத்துக்குமே,பெரியசாமியும் கங்கம்மா அக்காவும் இல்லாமல் அவர் வீட்டில் ஒருகாரியம் நடந்ததில்லை. அந்த நன்றியில் தானோ, என்னமோ மங்களம் கதறிய கதறலில் யாராலுமே அவளை கட்டுப்படுத்த முடியவில்லை. அத்தானின் இரண்டு மகன்களுக்கும் திருமணமாகியது. மருமகள்களும் வந்தார்கள்.சரவணனின் பெரிய பையனுக்கு திருமணமான மறுவாரம், கங்கம்மா அக்கா
 தலைசுற்றி  விழுந்து அரைமணிநேரத்திலேயே, இல்லாமலாகிப்போனாள். மாரடைப்பு என்று மருத்துவர்கள் சர்வசாதாரணமாக சொன்னதை பெரியசாமியால் சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. எப்படி, என்னை விட்டு அதற்குமுன்னர் போகமுடிந்தது? ராத்திரிகூட மலேசியாவில் பத்துமலைக்குப்போய்விட்டு வந்த கதையை அப்படி ரசித்துப்பேசிக்கொண்டிருந்தவளுக்கு, திடீரென்று கூற்றுவனிடம் போக அப்படி என்ன அவசரம்? கிட்டத்தட்ட பித்துப்பிடித்தவர் போலானார் பெரியசாமி. ஒரே மாசத்தில் முகமெல்லாம் முதுமையின் கோடுகள் கோலமிட, உடம்பிலும் தள்ளாமை,அப்படியே அவரை மூலையில் முடக்கிவிட்டது.பிறகு பெரியசாமி அத்தானை பார்ப்பதெல்லாம் எப்போதாவதுதான் என்றாகிவிட்டபிறகு, ராஜுமாமாவுக்கும் அவரது சம்சாரசாகரமும், வாழ்க்கையின் எதிர்நீச்சலும் இருக்கவே இருந்தது. இந்த நேரத்தில் தான் இப்படி ஒரு செய்தி. பத்தாவது மாடியிலிருந்து குதித்துவிட்டாரா? சகலமும் பதறியது ராஜுவுக்கு. மூக்கில் குருதி வடிந்து,சிறுநீரில் பொதபொதத்து, கசங்கிய அழுக்குமூட்டையாய் , தரையில்  கிடந்தார் பெரியத்தான். மேலிருந்து நேராய் செங்குத்தாய் கீழே விழுந்ததில், மூக்குச்சில்லு தெறித்துப்போய், கபாலம் பிளந்து,திறந்த  கண்கள் வழியாக உயிர் போயிருந்தது.அத்தானை அந்தக்கோலத்தில் பார்த்த ராஜுவால் தாங்கவே முடியவில்லை. வெலவெலத்துப்போய் நின்றவர், குலுங்கிக்குலுங்கி அழுதார். தற்கொலை செய்யவேண்டிய வயசா இது? அப்படி என்னதான் நடந்தது அத்தான் ? ஒரு எட்டு எங்கிட்டயாவது சொல்லியிருக்கக்கூடாதா ? மனசார அரற்றினார் ! கங்கம்மா இறந்து மூன்று மாதம் கூட முடிவதற்குள் தாத்தாவுக்கு உடம்பில் பல கோளாறுகள்.ஏற்கனவே இருந்ததுதான், என்றாலும் இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினையை தினமும் சமாளிப்பது பகீரதப்பாடாயிருந்தது.காலையில் எழுந்தால் சட்டென்று சிறுநீர் பிரியாது. முக்கி முக்கி, உயிர் போவும்.அப்பொழுதும் சொட்டு சொட்டாய் தான் போவும்.  மூன்றுநாட்களாய் மலம் போவதும் உன்னைப்பிடி, என்னைப்பிடி என்றாகிவிட்டது. !கங்கம்மா இருந்தவரைக்கு, வெந்தயம் ஊறவைத்து அந்த நீரைக்குடிக்கவைப்பார். அல்லது வாழைத்தண்டு நீர், என ஏதாவது கைவைத்தியம் செய்தாவது அப்பாதைக்கப்போதே நிவாரணம் கிட்டும்,  .இல்லையென்றால் மறுநாளே பாலிகிளினிக்குக்கு, விடாப்பிடியாய் அழைத்துச்சென்றுவிடுவார்.இப்போது மருமகள்களிடம் சொல்லவே வெட்கமாக இருந்தது.பெற்ற பையன்களிடம் சொல்லலாமென்றால், அவர்களுக்கு அப்பாவிடம் பேசவே நேரமில்லை. வீட்டிலிருந்தாலும் கூட, தாத்தாவே எதிரில் வந்தாலும்,  ”என்னாப்பா? சாப்ட்டியா, இன்னுமா நீ தூங்கலை?போ, போய் நேரத்தோட படுத்துக்கோ, என்பதோடு  சரி. எவ்வளவு நாட்களாகிவிட்டன இவன் என்னிடம் பேசி, அந்த ஞாபகம் கூடவா இவனுக்கிருக்காது? நாளைக்கு இவனுக்கும் வயசாகும். அப்பொழுது புரியும்.

”ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல் போனால் , பெற்ற பிள்ளையே கூட அந்நியனாகி விடுகிறானே, இந்த பயல்கள் அப்பா, என்று என்று கூப்பிடுவதே  அபூர்வம். அதிலும் நாமாக  வலிய பேசப்போனாலும், இந்த பவிஷு. --தாத்தாவுக்கும் வீம்பு உச்சாணிக்கொம்பில் ஏறிக்கொண்டது. இவன்களோட பேசப்போவதைவிட போய் மூலைச்சுவரில் முட்டிக்கொள்ளலாம். இவன்களே இந்த லட்சணத்தில் என்றால் வாழ வந்த மாதரசிகளின் அலட்டல் ஒன்றும் இம்மட்டு அம்மட்டு அல்ல.கிழவனைக்கண்டாலே அவ்வளவு அலட்சியம். மற்றவர்கள் சாப்பிட  வருவதற்குள் தாத்தா பசி பொறுக்காமல் சாப்பிட்டுவிட்டால், அன்று முழுவதும் ஜாடைப்பேச்சால் குத்தி குத்திப்பேசியே நாராசம் பாய்ச்சுவாள். மறுநாளிலிருந்து பணிப்பெண் எவ்வளவுதான் இவர் கூப்பிட்டாலும் திரும்பியே பார்க்க மாட்டாள். இதே மருமகள் கல்யாணமாகி வந்த காலத்தில் மாமனாரின் முன்னால் எதிரில் வரவே பயப்படுவாள். ”என்னதான் நீங்க சொல்லிக்கொடுத்த மாதிரியே சமைச்சாலும்,எங்கம்மா சமைக்கற ருசி வரவே வராதுங்கறாரே,அப்படி என்னதான் அதிசயம் உங்க கையிலே வச்சிருக்கீங்க அத்தை “என்று மாமியாரிடம் அப்படி கொஞ்சுவாள். ”அ- தேனு வச்சிருக்கேன், அதுதான் விரல் வழியா பொத்துக்கிட்டு வழியுது, போயேன், “ என்று மாமியாரும் மருமகளை சீராட்டுவதை பார்க்க அப்படி பூரிப்பாயிருக்கும் பெரியசாமிக்கு. சாயந்திரமானால் மகனையும் மருமகளையும் நிற்கவைத்து சுற்றிப்போடுவார் கங்கம்மா. ” பேய்க்கண்ணு பட்டாலும் ஊர்க்கண்ணு, கொள்ளிக்கண்ணு மட்டும் படவே கூடாது, என்று படபடப்பு வேறு. உடனே மருமகளுக்கு மட்டும் பாசமழையில் சிலிர்க்காதா என்ன? சட்டென்று சரவணனின் காதில் கிசுகிசுப்பாள். உடனே சரவணன்  போய் பெரியசாமியை விடாப்பிடியாய்  அழைத்துக்கொண்டு,வருவான்.

’அத்தை, மாமா , ரெண்டுபேரும் சேர்ந்து நில்லுங்கோ, என்று சடாரென்று காலில் விழுந்து வணங்கியதெல்லாம் இந்த தாடகை மருமகள் தானா, என்பதே அவருக்கு திகைப்பாய் இருந்தது. காலம் தான் மனிதர்களை எப்படியெல்லாம் தோலுரித்துக் காட்டுகிறது. கங்கம்மா உயிருடனிருந்த காலம் வரை குரலை உயர்த்திப்பேசும் துணிச்சல் கூடஇவளுக்கு இருந்ததில்லை. கட்டின பசுபோல் அப்படி கங்கம்மாவின் பின்னால் நின்று கொண்டுதான் பேசுவாள். எல்லாம் கங்கம்மாவோடு போச்சு. இந்த லட்சணத்தில் மலமூத்திர பிரச்சினையை யாரிடம் சொல்ல.நேரத்தோடு சாப்பிட்டால்தானே, நேரத்தோடு மருந்தும் வேலை செய்யும்? அவரைப் பற்றி யாருக்குக் கவலை ? விரக்தியின் எல்லையில் எவ்வளவு நேரம்தான்  டி.வியையே பார்த்துக்கொண்டிருக்க ? குழந்தைகளையாவது கொஞ்சலாமென்றால், பேரனின் குழந்தைப்பயல் இவரைக் கண்டாலே வீறிட்டலறுவான். வேறு என்னதான் செய்ய ? அன்றும் அப்படித்தான். வீட்டுக்குள்ளேயே இருக்க பெரியசாமிக்கு அப்படி மூச்சு முட்டியது. சரிதான், என்று கால் போனபோக்கில், அருகிலிருந்த பார்க்குக்குப் போனார்.

” தாத்தா? நீங்க, கங்கம்மா பாட்டியோட வீட்டுக்காரர்தானே?, என்னைத் தெரியலயா தாத்தா? கிழவனாருக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.செப்புக்குடம் போல் எதிரில் நின்ற அந்த பெண் குமிழ் போல் சிரித்தாள். ”நான் தான் சுப்ரமணியத்தோட பொண்ணு, மகேஸ்வரி. என்னைப் பிரசவிக்க எங்கம்மா லட்சுமிக்கு பிரசவம் பார்த்ததே கங்கம்மா பாட்டிதானே, அம்மா, எங்கிட்ட நிறைய சொல்லியிருக்காங்களே? தாத்தா, இன்னுமா என்னைத் தெரியலை ?"

”அட, நம்ம  வெல்டர் சுப்ரமணியத்தோட பொண்ணா நீ ?  அப்பா எப்படிம்மா இருக்கறார் ? என்று அன்போடு தாத்தாவும் விசாரித்தார். இப்படித்தான் மகேஸ்வரி தாத்தாவின் வாழ்க்கையில் சுடரொளியாய் நுழைந்தாள். இப்பொழுதெல்லாம் நாள் தவறினாலும் தாத்தாவுக்கு மகேஸைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அப்படி ஒரு அந்நியோனியம் அந்தக் குழந்தையின் பேரில் ஏற்பட்டுவிட்டது.
ரொம்ப நாட்களாக தாத்தா சாப்பிட ஏங்கிய கருவாட்டுக்குழம்பு, கிச்சாப் கோழி, என மகேஸ்வரி சமைத்துக்கொண்டு வந்து கொடுப்பாள். பார்க்கில் உட்கார்ந்து, ரசித்து ருசித்து தாத்தா சாப்பிடுவதைப்பார்க்கும் போது, மகேஸ்வரிக்கு கண்கள் நிரம்பிவிடும். பார்க்கில் ஓடி விளையாடிக்கொண்டிருக்கும் மகேஸ்வரியின் குழந்தை, ஆதித்யாவை தாத்தா மடியில் வைத்து கொஞ்சுவார், இந்தக் குழந்தை தாத்தாவை படீரென்று அடிக்கமாட்டான். வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நறுக்கென்று கிள்ளிவிட்டு ஓடும் கொள்ளுப்பேரனை நினைத்துக் கொள்வார்.தாத்தா நடக்கும்போது பின்னாலிருந்து அழகு காட்டும் மருமகளும், வாரம் ஒரு நாள் வீட்டுக்கு வரும் பேரனின் மனைவியின் நெருப்புமிழும் பார்வை போலில்லாமல், உண்மையான பாசத்தோடு, தாத்தா, என்று  மகேஸ்வரி அழைக்கும்போதே வயிற்றில் குளிர்ந்த பால் இறங்கியது. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடக்காமல்,காலையும் மாலையும் காலார கொஞ்சம் நடங்க தாத்தா, பிறகு தினம் ஒரு பேர்’ பழம் மறக்காமல் சாப்பிட்டாலே போதுமே?  என்று மகேசு சிரித்துக்கொண்டே சொல்ல, இரண்டு ”பேர்” பழம் சாப்பிட்டார்.தினசரி நடந்தார். பெரியசாமியின் வயிற்றுப்பிரச்சினை போன இடம் தெரியவில்லை. தாத்தா ரொம்ப மகிழ்ச்சியாகவே இருந்தார். அதுதான் மருமகளுக்கு ஆச்சரியம். கிழம் மாலை நாலு மணியானால்  போதும். டாணென்று வெளியே கிளம்பிவிடுகிறது.  என்னமோ நிதி கிட்டினாற்போல், யாரையுமே சட்டை பண்ணாமல் கிழவரின் போக்கும், நடையும், --  பொறுக்கவில்லை. அன்று மாலை  தாத்தாவுக்கு ”அப்பம்ஜாலே ”யும், பருப்புக்குழையலும்,  கொண்டு வந்திருந்தாள் மகேஸ்வரி. ? ”சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க தாத்தா, இப்பவும் பாட்டியின் சமையல்தான் சூப்பர்னு சொன்னீங்க, ஓடியே போய்விடுவேன். ஆமாம், சொல்லிட்டேன்,”

தாத்தாவுக்கு நாவூறியது.  எவ்வளவு நாளாச்சு,  இந்த பதார்த்தம் எல்லாம் சாப்பிட்டு, ! நாகரீகத்தின் எல்லையில்,பிசாவும், பர்கரும்,கே.எஃப், சி,யும்,சிக்கன் டிக்காவும்,என்று என்னென்னவோ அவருக்கே புரியாத பெயரும், உணவும் வீட்டில் புழங்கத் தொடங்கிய பிறகு, இதையெல்லாம் அவர் கண்ணால் கண்டதேயில்லை. வாயாற ,வயிறார , மனசு நிறைய , அவர் சாப்பிட்டார்,. திடீரென்று அவருக்குப் புரையேறியது. குழந்தைக்குக் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீர் கொடுத்து உபசரித்தாள் மகேஸ்வரி.  தாத்தா வீட்டுக்குள் நுழையும் போதே, மகனின் அறையிலிருந்து வந்த குரலில் அவர் பெயர் அடிபட, , ஒரு வினாடி நின்று
விட்டார்.

”வெக்கக்கேடுங்க, மொதல்லே, கிழத்துக்கு ஒரு பொண்ணைப்பாத்து கட்டி வைக்கணும். பல்லும் சொல்லும் எல்லாம் போனாலும் கிழத்துக்கு ஆசை மட்டும் போகலை. பல்லைக்காட்டிக்கிட்டு, பார்க்கில ஒரு பொண்ணு கூட தொடுப்பு வச்சிக்கிட்டுத் திரியுது.  அந்தப்பொண்ணு ஊட்டிவிடாத குறைதான்.”

அதற்குமேல் கேட்டுக்கொண்டிருக்க வலுவில்லை தாத்தாவுக்கு. எப்படி தன்னுடைய அறைக்குள் வந்து சேர்ந்தார் என்பதே அவருக்கு நினைவில்லை. நெட்டுக்குத்தாய்  ஜன்னலில் தெரிந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்த தாத்தாவுக்கு எங்குமே சூன்யம் தான் தெரிந்தது.. விருட்டென்று  ஜன்னல் பூட்டுக்களை சாவி போட்டுதிறந்தார்.ஜான்னல் ஹாவென்று திறந்துகொள்ள, நாற்காலியை இழுத்துப்போட்டு, அதன்மேல் ஏறி நின்றபோது,பிரபஞ்சமே வெறும் மாயையாக அவருக்கு முன்னால் ஓய்ந்து போயிருந்தது. கால்கள் நடுங்க, ஒருகாலை ஜன்னல் விளிம்பில் வைத்து ஏறி, மற்ற  காலையும் தூக்கிவைத்தபோதுதான் அவருக்கு அழுகை வந்தது. அதற்குள் நிதானமில்லாமல் சற்று இடற , தலை குப்புற அப்படியே நெட்டுக்குத்தாய் கீழே வந்து  சிமெண்டுத்தரையில், சொத்தென்று விழ,, மூக்குச்சில்லு தெறித்து, கபாலம் தட்டி, ரத்தம் பீய்ச்சிட, மூத்திரம் சிதறி ஒழுக, திறந்த கண்கள் வழியே ,தாத்தாவின் உயிர் பொட்டென,பிரிந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R