அத்தியாயம் ஒன்று: முதலிரவு!

ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் 'நானா' நாவலை மொழிபெயர்த்துச் 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்', சீனத்து நாவலான 'பொம்மை வீடு', மேலும் பல கவிதைகள், மற்றும் 'சோலாவின் 'நானா' போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் 'நானா'வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை' ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் 'நானா' நாவலை மொழிபெயர்த்துச் 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்', சீனத்து நாவலான 'பொம்மை வீடு', மேலும் பல கவிதைகள், மற்றும் 'சோலாவின் 'நானா' போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் 'நானா'வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை' ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.  எமிலிசோலாவின் நாவலான 'நானா'வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் 'நானா' சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் 'முதலிரவு' என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் 'போலிஸ்' என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவும் ஒரு கடிதம் எழுதியிருகின்றார். 'நானா' பற்றி வெளிவந்த வாசகர் கடிதங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

'"நானா" கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர் சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்' இவ்விதம் தனது கருத்தினை எழுதியிருக்கின்றார் செம்மாதெரு, யாழ்ப்பாணத்திலிருந்து டொமினிக் ஜீவா.

கொள்ளுப்பிட்டியிலிருந்து எம்.மாதவன் என்பவர் பின்வருமாறு குமுறியிருக்கின்றார்: 'நானா' கதையைத் தொடர்ச்சியாகப் படித்து வருகின்றேன். ஆனால் அந்தப் பிரதிகளைக் கூட அற்பத்தனமாகக் களவெடுத்துவிடும் கயவர்கள் உலகில் இல்லாமலில்லை. ஒரு நண்பன் 'நானா' பக்கங்களைப் பார்த்தே திருடி எடுத்து விட்டான். என் குறையை வேறு யாரிடம் சொல்லி அழுவது? இவ்வளவுக்கும் காரணமான உங்களிடமே கூறிவிட வேண்டுமென்று இதை எழுதுகிறேன்.'

சென்னையிலிருந்து 'செங்கோல்' பதிப்பகத்தைச் சேர்ந்த வே.கணபதி என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: 'எமிலி ஸோலாவின் அற்புதமான கதையை அழகான தமிழில் தந்து வருகின்றீர்கள். தமிழறிந்தோரிடையே ஸோஸாவின் நூலைத் தங்கள் பத்திரிகைதான் அறிமுகம் செய்து வைக்கிறது என்று நினைக்கின்றேன். இந்த முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.'

'சமுதாயப் பதிப்பகம்', சென்னையிலிருந்து சம்பந்தன் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கின்றார்: 'சுதந்திரனில் தொடர்ந்து வெளியாகும் 'நானா' வின் முதற் பகுதியைப் படித்தேன். கதையின் சுவையில் ஆழ்ந்து போனேன். அது ஒரு மொழிபெயர்ப்புக் கதையாகவே தோன்றவில்லை... நானா ஒரு வெற்றிகரமான மூலத்தின் சுவை குன்றாத அற்புத மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமில்லை'. இவர்களுடன் இன்னும் பலரின் கடிதங்கள் 'அருமையான கதை- சுவை குன்றாத் தமிழாக்கம்' என்னும் தலைப்பில் 18-11-51 சுதந்திரன் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது போல் 30-12-51 சுதந்திரன் இதழிலும் 'நானா திசையிலிருந்தும் 'நானா'வுக்குப் பாராட்டு' என்னும் தலைப்பில் பல வாசகர் கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நானாவை வரவேற்றும், எதிர்த்தும் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றார்கள்.- ஆசிரியர் -


அத்தியாயம் ஒன்று: முதலிரவு!

ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் 'நானா' நாவலை மொழிபெயர்த்துச் 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்', சீனத்து நாவலான 'பொம்மை வீடு', மேலும் பல கவிதைகள், மற்றும் 'சோலாவின் 'நானா' போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் 'நானா'வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை' ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.எமிலி ஸோலாஒன்பது மணியாகியும் 'வெரைட்டி' தியேட்டர் அனேகமாகக் காலியாகவே கிடந்தது. ஓரிருவர் 'பால்கனி'யில் நடமாடினர். அவர்களும் மண்டபத்தின் 'வெறிச்'சென்ற தோற்றத்தை எடுத்துக் காட்டுவதற்கே உதவினார்கள். 'காஸ்' தீபங்கள் மண்டபத்தில் மென்மையான ஒளியையும், நிழலையும் பரப்பிக் கொண்டிருந்தன. 'வெல்வெட்' தைத்த நாற்காலிகளும் இதர ஆசனங்களும் அந்தச் சூழ்நிலைக்கே ஒரு அமைதியான தோற்றத்தைத் தந்துகொண்டிருந்தன.

கருஞ்சிவப்பு வர்ணங் கொண்ட தடித்த திரை, மேடைமீது பல மடிப்பகளுடன் ஆடாது அசையாது மோனத்தவம் செய்வது போல் நின்று கொண்டிருந்தது. பார்வைக்கு அது ஒரு தொங்கும் படுதாவாகவே தோன்றவில்லை.

அந்த அமைதியிலே மூன்றாம் வகுப்புக் கலரியில் இருந்து வெளிவந்த பேச்சும், எக்களிப்புச் சிரிப்பும்தான் சிறிது பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. அங்கிருந்தவர்கள் தொழிலாளர்கள்; தங்கள் அழுக்குப் படிந்த தோற்றத்துடன் மேலே'ஸீலிங்' பலகைகளில் எழுதப்பட்டிருந்த நிர்வாண மங்கையரையும், மேகங்களிடையே தவழ்ந்து செல்வதுபோல் தீட்டப்பட்டிருந்த குழந்தைகளையும் சுட்டிக் காட்டி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

சிறிது சிறிதாகப் பார்வையாளர்கள் மண்டபத்துள் வந்து சேர்ந்துகொண்டேயிருந்தார்கள். செல்வச்சீமாட்டிகள் தங்கள் தோள்களைக் குலுக்கிக் கொண்டு ஆசனங்களை நோக்கிச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னே கறுப்பும் வெண்மையுமான மாலைநேர உடைகளில் கனவான்கள் (கணவர்களோ காதலர்களோ யாருக்குத் தெரியும்) அடக்கமாக நடந்துவந்து ஆறுதலாக அமர்ந்தார்கள்.

சிறிது சிறிதாக மண்டபம் நிறைந்து கொண்டிருந்தது.

மேடைக்குச் சமீபம் 'ஆர்கெஸ்ட்ரா' வாத்தியக் கோஷ்டிக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சற்று அருகாமையில் இரு இளைஞர்கள் ஏதோ பேசி நின்று கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவன், உயரமாகவும் சிறிய கன்னங்கரேலென்ற அரும்பு மீசையோடும் விளங்கியவன், "ஹெக்டர் நான் சொன்னேன் கேட்டாயா? மிகவும் அதிகநேரம் இருக்கும்போதே நாம் வந்துவிட்டோம்! மண்டபத்துக்கு வெளியே இருந்தால் ஒரு சுருட்டையாவது பிடித்துக் கொண்டிருக்கலாம்" என்று குறிப்பிட்டான்.

பேச்சைக் கேட்டுக்கொண்டே வந்த மண்டபச்சிப்பந்தி - அவள் பெண் - "ஆமாம் மிஸ்டர் போச்சரி! நாடகம் ஆரம்பிக்க இன்னும் அரைமணி நேரமாவது பிடிக்கும்!" என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

"பலே! நோட்டிஸில்மட்டும் ஒன்பது மணிக்கு என்று திட்டவட்டமாகப் போட்டுவிடுவதில் குறைச்சலில்லை. போதாதற்கு இந்த நாடகத்தில் நடிக்கும் கிளாரிசியையும் காலையில் சந்தித்தேன். தவறாமல் ஒன்பது மணிக்கு ஆரம்பித்துவிடும் என்று உறுதி கூறினாள் சிறுக்கி!" என்று தன்வயிற்றெரிச்சலைக் கொட்டினான் ஹெக்டர்.

சிறிது நேரம் நண்பர்கள் பேசாதிருந்தார்கள்.

அப்புறம் ஹெக்டர் ஆரம்பித்தான். "போச்சரி லூசிக்கு 'பாக்ஸ் ஸீட் ரிசேர்வ்' செய்து விட்டாயா?"

'ஆம்' என்று தலையசைத்த போச்சரி கதையைப் பின் வருமாறு தொடர்ந்தான்:

"இதற்குமுன் நாடக அரங்கேற்றமொன்றையும் நீ பார்த்தது கிடையாது. அப்போது நீ அதிர்ஷ்ட்டசாலிதான்! ஆமாம்! 'அழகி வீனஸ்' ஜமாய்த்துத் தள்ளப்போகிறது. சும்மாவா! ஆறுமாதமும் போதினாவ் தூங்காமல் உயிரைக் கொடுத்தல்லவா பாடுபட்டிருக்கிறான் சங்கீதம் --- ஆஹா! ஹா!.... ஆமாம் போதினாவ் பலே கைகாரப் பேர்வழி! பொருட்காட்சி நேரத்தைப் பார்த்து இந்நாடகத்தை அரங்கேற்றுவதால் சர்வ்தேசப் புகழடையப் போகிறான் பார்!" என்று போச்சரி அளந்து கொண்டே போனான்.

ஹெக்டர் கேட்டுக் கொண்டே வந்தான். முடிவில் "போச்சரி! வீனஸ் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நானாவை நீ அறிவாயா?" என்றான்
ஆவலுடன்.

"நானா! எங்கு பார்த்தாலும் நானாதான். காலையிலிருந்து இருபது முப்பது பேர்களை நான் கண்டுவிட்டேன்! எல்லோருமே அதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள்! பாரிஸில் இருக்கும் எல்லோருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. அது எப்படி என்றாலும், குட்டி தரமாய்த்தான் இருப்பாள்! போதினாவ் சிருஷ்டி சோடை போய் விடுமா? " என்றான் போச்சரி. பின் எதையோ திடீரென் நினைத்துக் கொண்டவன்போல் "வா அப்பா வெளியிலே போவோம். போதினாவைக் கண்டாவது இந்நானா விபரத்தை அறிவோம்" என்றான் அவன்.

போகும் வழியிலே சுவர்களைப் பார்த்துக் கொண்டு சென்றார்கள் நண்பர்கள். கொட்டை கொட்டையான எழுத்துகளில் நானா! நானா! என்று அந்தச் சுவர்கள் அலறிக் கொண்டிருந்தன. ஆட்டம் பார்க்க வந்தவர்கள் பலர் இந்த நோட்டீஸ்களைத் திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டு நின்றார்கள். "டிக்கெட் அறை"க்குப் பக்கத்தில் கும்பல் இடித்துத் தள்ளிக் கொண்டு நின்றது. ஒரு உருளைக் கிழங்குப் பேர்வழி அங்கே நின்று டிக்கட் இல்லை என்று கைகளை விரித்துக் கொண்டு நின்றார்.

"ஆ! அதோ பார் போதினாவ்!" என்றான் போச்சரி. மாடிப்படிகளால் இறங்கிய வண்ணமே ஹெக்டரும் அந்தத் திக்கை நோக்கினான்.

போதினாவ் போசரியைக் கண்டுவிட்டான். "என்ன போச்சரி! ரொமப ஏமாற்றிவிட்டாயே! உன் பத்திரிகையில் நாடகத்தைப் பற்றி ஒன்றையும் காணவில்லையே!" என்று சிரித்தும் முகத்தைச் சுழித்தும் பேசினான் நாடக மனேஜர் போதினாவ்.

"அதெப்படி முடியும்! உன் நானாவை முதலில் பார்த்த பின்னல்லவா அவளைப்பற்றி எழுத முடியும்! மேலும் நான் எழுதுவதாக வாக்களித்தேனா என்ன?"

இதைச் சொல்லிவிட்டு போச்சரி அவசர அவசரமாக தன் மைத்துனன் ஹெக்டரை மானேஜருக்கு அறிமுகம் செய்து வைத்தான். பாரிஸ் நகரில் மேல் படிப்புக்கு வந்திருக்கும் ஒரு மாணவன் என்று தெரிவித்தான். ஹெக்டர் புன்னகைத்தான்; போதினாவும் அதை ஏற்றுக் கொண்டான். போதினாவ் நாடக மானேஜர்; யுவதிகளைக் காட்டிப் பணம் பறிக்கும் சாமர்த்தியசாலி. அவன் தன்மீது நல்லபிப்பிராயம் கொள்ள வேண்டுமென்று ஹெக்டர் விரும்பினான்.

"உங்கள் நாடகமன்றம்..." என்று தெளிவான் உச்சரிப்போடு ஆரம்பித்தான் அவன்.

போதினாவ் அமைதியாக அதை மறுத்தான். உள்ளதை உள்ளபடி கூறுவதில் நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன் எவ்விதம் பேசுவானோ அதே தோரணையில் "இல்லை, என் வேசி வீடு என்று கூறு! அதுதான் பொருத்தம்" என்றான் அழுத்தமாக.

போச்சரி சிரித்தவண்ணம் அதை ஆமோதித்தான். ஆனால் ஹெக்டரோ திடுக்கிட்டுவிட்டான். அவன் கூறவ்ந்த பாராட்டுமொழிகள் எல்லாம் தொண்டையில் சிக்கிக் கொண்டு வெளியே வர மறுத்துவிட்டன. எனினும் அந்தத் தமாஷைத் தானும் அனுபவித்தவன் போல் காட்டிக் கொள்ள முயற்சித்தான் அவன்.

போதினாவின் கழுகுக் கண்கள் இதற்கிடையில் பிரசித்திபெற்ற பத்திரிகை விமர்சகர் ஒருவரைக் கண்டு விட்டன. ஓடோடி அவருடன் கைகுலுக்கிப் பேசிவிட்டு மீண்டான் அவன்.

ஹெக்டர் தன்பேச்சை ஆரம்பித்தான்: "உங்கள் நானா இனிமையான குரலில் நன்றாகப் பாடுகிறாளாமே!" என்றான் முகஸ்துதிக்காக.

"என்ன ! நானாவா நன்றாகப் பாடுகிறாள்! அவளுக்கும் பாட்டுக்கும்தான் ரொம்ப தூரமாச்சே!" என்றான் போதினாவ்.

ஹெக்டர் "நடிப்பு ரொம்ப ஜோராமே!" என்றான் சிறிது சமாளித்துக்கொண்டு.

போதினாவ் "சீ அவளுக்கு நடிப்பே வராது!" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான்.

ஹெக்டருக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. ஆனாலும் ஒருவாறு சரிப்படுத்திக் கொண்டே "இல்லை உங்கள் நாடக மன்றம்..... " என்று இழுக்க் ஆரம்பித்தான்.

"நாடக மன்றமென்ன ? வேசி வீடு!" என்றான் மீண்டும் ஒரு தடவை அழுத்தம் திருத்தமாக.

போச்சரியோ மண்டபத்துக்குட்புகுந்து கொண்டிருக்கும் பெண்கள் வரிசைகலைத் துருவித் துருவிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் ஹெக்டர் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டதைக் கண்டதும் அவனது உதவிக்கு வந்தான் போச்சரி.

"போதினாவுக்கு இஷ்ட்டமான வார்த்தையைத்தான் கூறேன் ஹெக்டர்! ஆனால் போதினாவ் நீ எங்களை ஏமாற்றிவிடுமுடியாது! உனது நானாவுக்குப் பாடவும் தெரியாது, நடிக்கவும் தெரியாது என்றால் அப்புறம் இன்றோடு உன் நாடகம் ஒழிய வேண்டியதுதான்!" என்றான் போச்சரி.

"நாடகம் ஒழிய வேண்டியதா!" மானேஜர் கோபத்துடன் கொதித்தார். "ஒரு பெண்ணுக்குப் பாட அல்லது ஆடத் தெரியவேண்டுமென்று யார் எங்கே விதி வகுத்திருக்கிறார்கள்? போச்சரி நீ ஒரு சுத்த மடையன்! நானாவிடம் பாட்டும் கூத்தும் இல்லை. ஆனால் அவளிடம் வேறு ஒரு விஷய்ம் ஏதேஷ்ட்டமாய் இருக்கிறது. அதைத் தெரிந்துதான் இந்த போதினாவ் அவளைப் பிடித்தானாக்கும். பார், பார்! அவள் மேடை மீது வரட்டும் எல்லாரும் வாயில் 'வீணி' வழிய சொக்கிப்போய் விடுகிறார்களா இல்லையா என்று பார். எல்லாரும் சப்புக்கொட்டிகொண்டு உட்கார்ந்துவிடுவார்கள்! அஹா.. அவள் மிருதுவான சருமமொன்றே போதாதா!" என்றான் போதினாவ்.

அதன்பின் போச்சரியின் கேள்விகிணங்க நானாவைபற்றிய கீழ்க்கண்ட விபரங்களை அவன் வெளியிட்டான். நானாவை அறிமுகம் செய்துகொண்ட் மாத்திரத்திலேயே அவளைத்தனது 'விபச்சார வீட்டி'ன் மூலம் உலகுக்கு வழங்கிவிடுவதென்று தீர்மானித்தான் போதினாவ். போதினாவ் தன்னிடம் சிக்கும் பெண்களைத் தானே அனுபவித்துக்கொண்டு வாழு சுயநலமியல்ல. பொதுஜனங்களுக்குச் சீக்கிரம் அவளை வழங்கிவிடுவதில் அவனுக்கு ஒரு தனித் திருப்தி. ஆனால் நாடகத்துக்கு அவளைத் தெரிதெடுத்ததும் ஏற்கனவே அவன் கீழ் வேலை செய்த ரோஸ்மினாள் அதிக பொறாமையும் ஆத்திரமும் கொண்டாள். எனினும் அதை போதினாவ் பொருட்படுத்தாமல் நானாவை பிரமாதமாக முழிப்பான எழுத்துகளில் தாராளமாக விளம்பரம் செய்து விட்டான். போதினாவ் பெண்களில் தன் வர்த்தகத்தை நடத்துவதில் புலி. ஒவ்வொரு சரக்கும் இவ்வளவுதான் பெறும் என்பது அவனுக்குத் தலைகீழ்ப் பாடமாகத்தெரியும். அதற்கேற்றபடிதான் அவன் நடந்துகொள்வான்.

திடீரென போதினாவ் "அதோ - ரோஸின் கணவன் மினேன் வருகிறான்! ஸ்டினரும் வருகிறார்!" என்றான். கதையைவிட்டுவிட்டு பின்னர் தொடர்ந்து "ஸ்டினருக்கு இப்போது ரோஸ் போதும் போதுமென்றாகிவிட்டது. எங்கே மெல்ல ரோஸைவிட்டு விலகிவிடுகிறானோ என்று மினேவுக்கு ரொம்பப் பயம். அதனால்தான் ஸ்டினருடன் அட்டையைப்போல் ஒட்டிக்கொண்டு திரிகிறான் அவன்" என்றான் போதினாவ்.

ஸ்டினர் தொந்தியும் தொப்பையும் வைத்த பணக்கார பாங்கர். மினேன் அவரைக் கைகளால் அணைத்துப் பேசியவண்ணம் வந்து கொண்டிருந்தான்.

போதினாவ் பாங்கரைக் கண்டதும் , "ஆமாம் நேற்று நீங்கள் அவளை எனது ஆபிஸில் கண்டீர்களல்லவா? " என்று விசாரித்தான்.

"ஓ! அவளா ? நான் அப்போதே நினைத்தேன். ஆனால் நான் அவளை நன்றாகப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை" என்றார் ஸ்டினர்.

மினேன் காதில் இவ்வார்த்தைகள் விழுந்ததும் நானாவைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதைப்புரிந்து கொண்டான். ஆனால் போதினாவ் நானாவை வர்ணிக்க ஆரம்பித்ததும் அவனால் தாங்க முடியவில்லை. எரிச்சலும் ஆத்திரமும் வந்தது.

"ஆமாம்! நானா ரொம்பப் பிரமாதமாக்கும். ஏன் அப்பா வாயை வீணாக்குகிறாய்! நாடகம் தொப்பியாக்ப் போகிறது. அதில் இருந்தாவது தெரிந்துகொள்ளப்பா உன் நானாவின் பெருமையை!" என்று கூறினான் சிறிது ஏளனமாக.

ஸ்டினரை அந்த இடத்தைவிட்டே இழுத்துப் போக முயற்சித்தான் மினேன். ஆனால் ஸ்டினரோ நகர்வதாயில்லை.

இதற்கிடையில் டிக்கட் அறையில் ஜனநெருக்கடி அதிகரித்து விட்டது. கூச்சலும், குமுறலும் ஏற்பட்டன. நானா - என்ற சொல் ஏதோ ஒரு இன்னிசை போல அந்த ஜனக்கூட்டத்தில் இருந்து இடையிடையே எழுந்து கொண்டிருந்தது. போஸ்டர்கள் முன்னால் நின்ற ஆணகள் நானா என்ற அப்பெயரை உரக்க வாசித்தார்கள். இன்னும் சிலர் ஒரு கேள்வி போல் 'நானா?' என்ற அப்பதத்தை மற்றவரைப் பார்த்துக் கேட்டார்கள். பெண்கள் வாயிலும் குசுகுசுப்பதுபோல் நானா என்ற பதம் தவ்ழ்ந்து விளையாடியது. யார் இந்நானா? இந்த நானா எந்த உலகத்திலிருந்து வந்தவள்? எப்படிப்பட்டவள்? சிறு சிறு தமாஷ் பேச்சுகள்கூட நானா என்ற பதத்துடன் சேர்ந்து அடிபட்டன. எங்கு எல்லா இடத்திலும் அந்த வார்த்தை கேடக ஆரம்பித்தது. அந்த இரு எழுத்துகளாலான பெயர் ஒரு இனிமையான அணப்புப்போல் எல்லோர்
இதயத்தையும் தழுவிக் கொண்டது. அனைவரிடமும் அடக்க முடியாத ஆவல். நானாவைப் பார்க்க மக்கள் திரள ஆரம்பித்தார்கள். தொத்துநோய் பற்றுவதுபோல் எல்லோரையும் நானாவைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை புயல் வேகத்தில் பிடித்துக்கொண்டது. ஒரு கனவான் தன் தொப்பியை இந்தச் சந்தடியில் இழந்துவிட்டார். ஒரு சீமாட்டியின் சட்டைப் பாவாடை கிழிந்துபோய்விட்டது.

போதினாவை இருபது முப்பது பேர் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் திணறடித்தார்கள். "என்னால் முடியாது. இப்போதுதான் பார்க்கப் போகிறீர்களே! பின் ஏன் இந்த அவசரம்!" என்று கூறி அங்கிருந்து பாய்ந்து சென்று விட்டான் போதினாவ். அவனுக்கு பொது ஜனங்களிடையே நெருப்பைப் பற்றி வைத்துவிட்டதில் பரம் சந்தோஷம்.

மினேன் ஸ்டினரைப் பார்த்துத் தன் மனைவி ரோஸ் ஸ்டினரை எதிர்பார்த்திருப்பதாகவும், நாடகத்திற்காக தான் செய்து கொண்ட அலங்காரத்தை அவருக்குக் காட்ட விரும்புவ்தாகவும் கூறினான். எங்கே நானாவின் மையலிலே அந்தப் பணங்காய்க்கும் மரம் தன் மனைவியைப் புறக்கணிதது விடுகிறதோ என்று அஞ்சினான் அவன்.

ஹெக்டர் போச்சரியிடம் "அதோ லூசி வருகிறாள்!" என்றான் ஒரு பெண்கள் கூட்டத்தைச் சுட்டிக்காட்டி. லூசி, அவள் தாயார், ஹெக்குலே என்ற இன்னோர் பெண் ஆகியோர் வந்துகொண்டிருந்தார்கள்.

லூரி போச்சரியிடம் " நீயும் எங்களுடன் தானே வருகிறாய்?" என்றாள்.

போச்சரி " வாத்தியக் கோஷ்ட்டியோடு உட்கார்ந்து விடுவதுதான் வசதியானது!" என்றான் பதிலுக்கு.

லூசிக்கு இந்தப் பதில் பிடிக்கவில்லை. தன்னோடு ஜோடியாகக் காணப்படுவதை அவன் விரும்பவில்லை என்று எண்ணினாள். பேச்சை < வெடுக்கென்று மாற்ற விரும்பி " நானாவை உனக்கு முதலில் தெரியும் என்பதை ஏன் முதலில் கூறவில்லை?" என்று கேட்டாள்.

"நானாவை நான் கண்டதே கிடையாதே!" என்றான் போச்சரி.

"உண்மையாகவா? யாரோ சொன்னார்கள் நீ நானாவோடு ஒருநாள் படுத்துத் தூங்கினாயென்று!"

பக்கத்தில் நின்ற மினேன் வாயில் விரலை வைத்து சப்தம் போடவேண்டாமென்று எச்சரித்தான். லூசி ஏன் இந்த ஆர்ப்பாட்டமென்று கேட்டதும் "இதோ போகிறானே ஒருவன், இவன் தான் நானாவின் காதலன்" என்றான் மினேன்.

எல்லோரும் முழித்துப் பார்த்தனர். கட்டுமஸ்தான அழகு நிறைந்த வாலிபன். போச்சரிக்கு ஆளைத் தெரியும். அவன் பெயர் டாக்குனே என்பதாகும். மூன்று இலட்சம் பிராங்கு பெறுமதியான தனது ஆஸ்தி பூஸ்திகளை பாரிஸ் நகர மாதருக்கு வாரி வழங்கிவிட்டு இப்பொழுது 'பங்கு மார்க்கட்' வியாபாரத்தில் சிறிது பணம் தேடிக்கொள்ள முயன்றுகொண்டிருந்தான். லூசி அவனைப் பார்த்ததும் அவனது அழகான கண்களை மெச்சிக் கொண்டாள் என்றே கூறவேண்டும்.

திடீரென் லூசி "அதோ பிளாஞ்ச் வருகிறாள். அவள்தான் நீ நானாவுடன் படுத்துத் தூங்கியதாக என்னிடம் கூறினாள்!" என்றாள்.

பிளாஞ்ச் என்னும் அந்த யுவதியும், சேவியர் பிரபு என்னும் நாகரிக யுவரும் வந்து சேர்ந்தார்கள். போச்சரியும் பிரபுவும் கை குலுக்குக் கொண்டனர். மற்றவர்களுக்கும் பிரபுவை அறிமுகப்படுத்தி வைத்தான் போச்சரி.

பின்னர் அவர்கள் ஆட்டம் ஆரம்பிக்கும்வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டு நின்றார்கள். அவர்கள் வாய்களிலிருந்து நானா என்ற பதம் அடிக்கடி இன்னிசையோடு சிந்திக் கொண்டிருந்தது. பக்கத்தில் கூடி நின்ற ஜனங்களும் நானாவைப் பற்றிய விபரங்கள் ஏதாவது வெளிவருமோ என்று ஒட்டுக் கேட்க ஆரம்பித்தனர். பிரபுவும் பிளாஞ்சும் பாதியில் பேச்சை நிறுத்தி விட்டனர். ஆனால் நானா என்ற பதமோ எங்கும் ஒரு அசரீரிபோல் ஒலித்தது. ஆவல் கட்டுக்கடங்காது போயிற்று. 'ஆட்டத்தை ஆரம்பிக்க மாட்டார்களா என்ன?' 'ஏன் இவ்வளவு நேரம்?' என்று சலிப்புப் பேச்சுடன் தங்கள் பாக்கட் கடிகாரங்களை வெளியே இழுத்துப் பார்த்துக் கொண்டனர் பலர். மண்டபத்துக்கு உள்ளே "அதோ நானா இதோ நானா!" என்ற பேச்சு அடிபட ஆரம்பித்ததும் கழுத்தை நீட்டி நீட்டிப் பார்க்க ஆரம்பித்தனர் இன்னும் சிலர். தியேட்டர் வாசலில் நானாவின் பெயரைத் தாங்கிய கொட்டை எழுத்துப் போஸ்டரைக் கண்ட ஒரு பரட்டைத் தலைப் பையன் அப்படியே ஒரு கணம் வாசித்துக்கொண்டு நின்றான். அப்புறம் "ஆ! என் நானா! என் நானா! " என்று கூச்சலிட்டுச் சிரித்துக் கொண்டே கூத்தாட ஆரம்பித்தான். கனவான்கள் சிரித்தனர். "நானா! என் நானா!" அவன் கூறிய வார்த்தைகளை அவர்களும் திருப்பிக் கூற ஆரம்பித்தார்கள். நெருக்கடி கட்டுமீற ஆரம்பித்தது. டிக்க்ட கொடுக்குமிடத்தில் சண்ட. ஆனால் அப்பொழுதும் நானா கூச்சல் சண்டைக் கூச்சலில் மங்கிமறையவில்லை. வெண்கல நாதம் போன்ற அச்சொல்தான் ஓசைபோல் அந்தக் கூட்டத்தில் ஒலியும் எதிரொலியுமாக இடையிடையே கேட்டுக்கொண்டிருந்தது. ஜனக்கும்ம்பலுக்கென்றே தனி உணர்ச்சிகளும் தனிப்போக்கும்கூட உண்டு. கூட்டத்தை ஒரு வெறி உணர்ச்சி பிடித்துக்கொண்டது. நெருங்குண்டு தள்ளாடிக் கொண்டு நின்றனர் ஜனங்கள்.

திடீரெனெ அந்த இரைச்சலுக்கு மேலே மணியோசை கேட்டது. நாடகம் தொடங்கப் போகிறது என்ற வதந்தி வேகமாகப் பரவி விட்டது. கும்பலிடையே அடி, தடி, நெருகடி, இடி, உதை எல்லாம் மேலும் அதிகரித்து விட்டன.

மண்டபத்துக்குள்ளே மக்கள் நானாவை எதிர்பார்த்து உட்கார்ந்தனர்.

வாத்தியக்கோஷ்ட்டி வெகுநேரமாக ஜமாய்த்துக் கொண்டிருந்தது போல் மக்கள் எரிச்சலடைந்தனர். இத்தனைக்கும் அந்த வாத்திய கோஷ்டியினர் ஒரு சில நிமிஷங்களே தங்கள் கை வரிசையைக் காட்டினர். ஆனால் நானாவைக் காணாத ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாகக் கூட்டத்தினருக்குத் தென்பட்டது.

சிறிது நேரம் செல்லத் செல்லத் திரையும் விலகியது. மக்களின் கரகோஷம் வானைப் பிளந்தது. முதல் காட்சியில் அட்டைகளாலான ஒலிம்பஸ் நகரம் கண் முன்னே வந்து நின்றது. ஒலிம்பஸ் தேவநகரம் கிரேக்க கடவுளர்களின் இருப்பிடம். ஒரு புறம் ஜூபீடரின் > (வியாழ பகவான்) சிம்மாசனம் காணப்பட்டது. ஐரிஸ், கனிமீட் என்ற தேவதைகள் இன்னும் ஒரு கூட்டம் தேவதைகளுடன் வெளிப்பட்டனர். எல்லோரும் ஒரு பாட்டைக் 'கோரஸ்' ஆகப் பாடிக்கொண்டே தேவர்களின் ஆசனங்களைச் சரிப்படுத்தினர்.

போதினாவ் கரகோஷம் செய்வதற்காக பலரைச் சம்பளம் கொடுத்து அமர்த்தி இருந்தான். அவர்கள் பாட்டு முடிந்ததும் கரகோஷம் செய்தனர். ஆனால் மக்களோ அதை ரசிக்கவில்லை. எவ்வித எதிரொலியும் செய்யாமலே இருந்தார்கள்.

கிளாரிசி அன்று மேடையில் தோன்றும்போது மிக அழகாகவே இருந்தாள். ஹெக்டருக்கு அவள் சிறிது பிடித்துப் போயிருந்ததால் கரகோஷம் செய்தான்.

போச்சரி அவன் காதில் மெதுவாகப் "பார்த்தாயா? இந்த உடையை உடுத்த அவள் தன் மேற்சட்டையைக் கழற்றியாகவேண்டும். காலையில் உடைகளைச் சரிபார்க்கும்போது நானும் இருந்தேன். அவள் முதுகுப்புறம் முழுமையும் ஏன் மார்பகங்களில் ஒரு பகுதியும் கூட நன்கு தெரிந்தது!" என்றான் குசுகுசுத்த குரலில்.

தேவ உலகில் டயனாவாகத் தோன்றினாள் மினேன் மனைவி ரோஸ். அவள் அடியோடு சோபிக்கவில்லை. மார்ஸ் (செவ்வாய்) தன்னைப் புறக்கணித்து வீன்ஸை (ரதி) நாடுவதைப் பற்றி முறையிட்டாள் அவள். பாடிய முறையும் அவளது நடிப்பும் மோசமாயிருந்தாலும் பாட்டின் சிருங்காரச் சொற்கள் ஜனங்களைத் தொட்டுவிட்டன. எனவே கரகோஷமும் ஆர்ப்பாட்டமும் பலமாக ஏற்பட்டன. அப்புறம் புரூலியர் செவ்வாயாகத் தோன்றினாள். புருலீயருக்கு எப்போதுமே நல்ல மதிப்பு. வாட்ட சாட்டமான அவள் நீண்ட உடைவாளுடன் காட்சி அளித்தாள். அவள் டயனாவை நோக்கி "நீ எனக்கு வேண்டாமடி!" என்ற ரீதியில் நடந்து கொண்டாள். டயனா ஆத்திரம் கொண்டு , "உன்னைப் பழிக்குப்பழி வாங்குகிறேன் பார்" என்று சபதம் செய்தாள். இந்தக் காட்சி பரவாயில்லை. அப்புறம் நாடகம் ப்டுத்து விட்டது.

ஜனங்களுக்கு ஒரே ஏமாற்றம். மேடையைப் பார்க்கும் கண்கள் குறைந்து போயின. அங்கும் இங்கும் பார்க்க ஆரம்பித்தார்கள். சுகஷேம விசாரணைகளில் ஈடுபடலானார்கள். ஆனால் திடீரென கரகோஷத் தொழிலாளிகளின் கையடி பலமாகக் கேட்டது. ஜனங்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். நானாதான் தோன்றுகிறாள் போலும் என்பது போலும் என்பது அவர்கள் எண்ணம்.

ஆனால் நானா தோன்றவில்லை. தேவ உலக அதிபதி வியாழ பகவானைப் பூவுலகில் தங்கள் கணவர்களால் திரஸ்கரிக்கப்பட்ட மாதர்களின் தூதுக்கோஷ்டி கண்டுபேசும் காட்சி மேடையில் நடைபெற்றௌக் கொண்டிருந்தது. அபத்தம்! அபத்தம்! என்று ரசிகர்கள் முகத்தைச் சுழித்தார்கள்.

"என்ன ? நானா தோன்றவே மாட்டாளா? திரை விழுந்த பிறகுதான் தோன்றுவாள் போலும்!" தாங்க முடியாத அரிப்பும் எரிச்சலும் எல்லார் மனதில் தலைகாட்ட ஆரம்பித்தது.

மினேனுக்கு சந்தோஷம். "நாடகமா இது? நல்ல கேலிக் கூத்து!" என்று உள்ளூர மகிழ்ந்து கொண்டிருந்தான். ஸ்டினரிடமும் சொன்னான், "எழுந்துபோவோமா?" என்றும் கேட்டு வைத்தான்.

அப்பொழுது பின்னால் இருந்த மேக மண்டலம் அசைந்து விலக ஆரம்பித்தது. ஆம் கடைசியில் வீனஸ் மேடையில் தோன்றி விட்டாள்! உயரமாகவும் சதைப்பிடிப்போடும் விளங்கிய நானா தேவதைகள் அணிவதாகக் கூறப்படும் வெள்ளை மஸ்லின் பட்டுடையுடன் அலைவீசும் அவளது பொன்னிறமான கூந்தல் தோல்பட்டைகளில் ஒய்யாரமாக வீழ்ந்துகிடக்க மேக மண்டலத்திலிருந்து இறங்கி நேரே சபையோரை நோக்கி நடந்தாள். அவள் முகத்திலே மோகன முறுவல் ஒன்று தோன்றி ஒளி வீசியது. மெல்லிய இரத்தச் சிவப்பு நிறமான தன் அதரங்களை அசைத்துப் பாட ஆரம்பித்தாள் நானா.

[அடுத்த இதழில் இரண்டாம் அத்தியாயம் 'சதையின் கதை' தொடரும் ]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R