பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பதிவுகள் இணைய இதழ்

தொடர்நாவல்: மனக்கண்(26)

E-mail Print PDF

26-ம் அத்தியாயம்: குருடன் கண்ட கனவு!

நாவல்: மனக்கண் 26-ம் அத்தியாயம் -  குருடன் கண்ட கனவு!தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -இருட்பொந்தொன்றிலே நீண்ட காலமாக அடைக்கப்பட்டிருந்த ஒருவன், திடீரென அப்பொந்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு ஒளிப் பிரவாகத்தால் குளிப்பாட்டப்பட்டால் அவன் நிலை எப்படியிருக்கும்? சுரேஷ் ‘அமராவதி’க்கு வந்து போனதிலிருந்து தனக்கு இந்த நிலை அதி சீக்கிரத்திலேயே வரப் போகிறதென்று மனப்பால் குடிக்க ஆரம்பித்துவிட்டான் ஸ்ரீதர், இனி வானத்துச் சந்திரனையும், முற்றத்து முல்லையையும் தன்னிரு கண்களாலும் கண்டு மகிழலாம் என்ற நம்பிக்கை வந்ததும் அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி கொஞ்சமல்ல. ஆனால் இவற்றைப் பார்ப்பதல்ல, அவனுக்கு முக்கியம். இவற்றை அவன் தன் கண்கள் குருடாவதற்கு முன்னர் போதிய அளவு பார்த்திருக்கிறான் தானே. ஆனால் அவன் தன் வாழ்க்கையிலேயே முன்னர் ஒரு போதும் பார்த்திராத பொருளொன்று இப்பொழுது இவ்வுலகில் இருந்தது. அதைப் பார்ப்பதுதான் அவனுக்கு முக்கியம். ‘அமராவதி’ மாளிகையின் சலவைக்கல் தளத்திலே தவழ்ந்து விளையாடிய அவனது அன்பு மகன் முரளியே அது. எங்கே அவனை ஒரு போதும் தன் வாழ்க்கையில் தன் கண்களால் பார்க்க முடியாதோ என்று அஞ்சியிருந்த அவனுக்குச் சுரேஷின் வருகை புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

“சுரேஷ்! என்ன அற்புதமான நண்பன். கர்ணனுக்கு வாய்ந்த கெளரவ புத்திரன் போல. இல்லை இல்லை. அர்சுனனுக்கு வாய்ந்த கிருஷ்ணனைப் போல - எனக்கு வாய்ந்த அற்புதமான் நண்பன் அவன்” என்று சுரேஷை மெச்சினான் அவன்.

ஸ்ரீதர் குருடான செய்தி அறிந்ததும் லண்டனிலுள்ள தன்னறையில் தானும் கண்ணை மூடிக் கொண்டு குருடன் போல் நடந்து பார்த்ததாக சுரேஷ் கூறினானல்லவா? அது அவனை மிகவும் உருக்கிவிட்டது. பாரதத்தில் பாண்டுவின் அண்ணான திருதராஷ்டிரனின் கண்கள் குருடென்ற காரணத்தினால் அவன் மனைவி காந்தாரி தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு தானும் ஓர் அந்தகியாய்க் காலம் கழித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? தனது பார்வை இழப்பில் பங்கு கொள்ள முயன்ற சுரேஷின் செய்கை காந்தாரியின் இந்தச் செயற்கரும் செய்கையைத் தான் அவனுக்கு ஞாபகமூட்டியது.

சுரேஷ் வந்து போனதிலிருந்து எந்த நேரமும் தன் கண் பார்வையைப் பற்றியே பேச ஆரம்பித்தான் ஸ்ரீதர். சுசீலாவைத் தன் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டு அவள் பட்டுக் கன்னங்களைத் தன் கரங்களால் தடவிய வண்ணம் “பத்மா, பார், பார், இன்னும் சில நாட்களில் உன்னை முன் போல் என்னால் பார்க்க முடியும். மேலும் கல்கிசையில் நான் உன்னை நீச்சலுடையில் எழுதிய படம் பாதியில் நிறுத்தப்பட்டதல்லவா? கண் பார்வை கிடைத்ததும் அதை முடிப்பதுதான் என் முதல் வேலை. இன்னும் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் அதில் இலங்கை ஓவியக் கண் காட்சிக்கும் அதை அனுப்பி வைப்பேன். கட்டாயம் முதற் பரிசு கிடைக்கும்” என்று ஆர்ப்பரித்தான். தாய் பாக்கியத்தை அழைத்து “அம்மா, இன்னும் சில வாரங்களில் சுரேஷ் என் கண் பார்வையை எனக்குத் தந்து விடுவான். கண் பார்வை கிடைத்ததும் பழையபடி கொழும்புக்குப் போய் என் படிப்பை முடித்துவிட்டு வருவேன். இந்த முறை நீயும் அப்பாவும் கூட “கிஷ்கிந்தா”வில் வந்து என்னுடன் இருக்க வேண்டும்.” என்று என்னென்னவோ பேசினான் அவன். முரளியைத் தன் கரங்களில் தூக்கி வைத்துக் கொண்டு “அடே முரளி, அப்பா உன்னைக் காண முடியாத படி நீ இருளிலே ஒளிந்திருக்கிறாய் அல்லவா? இனி அது முடியாது. இன்னும் சில வாரங்களில் உன்னை நான் கண்டு கொள்வேன். உன்னையும் அழகான படமாகத் தீட்டப் போகிறேன் நான்.” என்று கொஞ்சினான். இதற்கிடையில் கூண்டுக் கிளி மோகனா “முரளி, முரளி” என்று கூப்பிட, “மோகனா, உன்னையும் தான். உன்னை நான் மறக்கவில்லை. உன்னுடைய படத்தையும் பாதியில் நிறுத்தினேனல்லவா? அதையும் சீக்கிரம் முடித்து வைப்பேன்.” என்றான்.

மோகனா இப்பொழுது முன் போல் “பத்மா, பத்மா” என்று கூப்பிடுவதில்லை. அதற்குப் பதிலாகச் சுசீலா அதனை “முரளி, முரளி” என்று கூப்பிடப் பழக்கி வைத்திருந்தாள். இவ்வாறு மோகனா முரளியைக் கூப்பிடும் போதெல்லாம் முரளி அதற்குப் பலத்த குரலில் எதிரொலி கொடுத்துக் கும்மாளமடிப்பது வழக்கம்.

கண் பார்வைக்குப் பற்றி ஸ்ரீதர் அடிக்கடி பேச ஆரம்பித்தது சுசீலாவுக்கு அதிக மன வேதனையை உண்டு பண்ணலாயிற்று. “ஐயோ, பாவம் தன் கண் பார்வையைப் பெற்றுக் கொள்ள அவர் எவ்வளவு தூரம் ஆசைப்படுகிறார். ஆனால் அதற்குக் குறுக்கே நிற்கிறோமே நாம், இது சரியா?” என்று கவலைப்படலானாள் அவள்.

இந்தக் கவலை அன்றிரவு நடைபெற்ற ஒரு சம்பவத்தால் மேலும் அதிகமாயிற்று.

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -ஸ்ரீதர் ஆழ்ந்த துயிலில் தன்னை மறந்திருந்த சுசீலாவை நடுச்சாமத்தில் தன் கைகளால் தட்டி எழுப்பினான். “நீண்ட நாட்களின் பின்னர் நான் ஓர் கனவு கண்டேன் பத்மா. குருடனாலும் கனவு காண முடியும். நீயும் நானும் முரளியும் நதியருகிலும், சோலையிலும், மலை முகட்டிலும் மலைச்சாரலிலும் இயற்கை அழகுகளை இரசித்துக் கொண்டு ஆடிப் பாடிக் கை கோத்துச் செல்வதாகக் கனவு கண்டேன். ஆனால் முரளியின் முகம் மட்டும் எனக்குத் தெரியவில்லை. அவன் ஒரு முகமூடி அணிந்திருந்தான். இவ்வாறு நாம் போய் கொண்டிருந்த போது வழியிலே சுரேஷ் வந்தான். அவன் முரளியின் முகமூடியைக் கழற்றி வீசினான். அதற்குப் பிறகுதான் முரளியின் முகத்தை நான் முதன் முதலாகப் பார்த்தேன். மிகவும் அழகான பையன் அவன்.” என்று பேசிக் கொண்டே போனான் அவன். “இன்னும் கனவிலே நான் வேறு எதையெல்லாம் கண்டேனென்று சொல்லவா?” என்று கேட்டுவிட்டுக் கவிஞன் போல் பேச ஆரம்பித்தான் அவன், “ஆம், பத்மா, அழகான மலர்களைக் கண்டேன். வண்ண மயிலைக் கண்டேன். வாண வேடிக்கை கண்டேன். தீ கண்டேன். திசை கண்டேன். நிலாவைப் பார்த்தேன். உன் நீண்ட விழிகளையும் கண்டேன். சித்திரங் கண்டேன். சிற்பம் கண்டேன். நாட்டியம் கண்டேன். நற்கனிகளையும் இரத்தினங்களையும் கண்டேன். ஆமாம். அழகான எல்லாவற்றையும் கண்டு களித்தேன் நான்.”

சுசீலா திக் பிரமை பிடித்தவள் போல் அவன் பேசுவதெல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள் என்றாலும், உள்ளே அவள் இதயத்தில் ஆழத்திலே வேதனை ஒன்று வெடித்தெழுந்தது. பெரியதொரு குற்றஞ் செய்துவிட்டது போன்ற உணர்வு அவளை அவனது பேச்சுக்குப் பதிலளிக்கவொண்ணாது தடுத்தது. “ஐயோ, அவர் தம் கண் பார்வையைப் பெறுவதற்கு எவ்வளவு ஆசைப்படுகிறார். ஆனால் அதை நானும் மாமாவுமாகச் சேர்ந்து தடுத்துவிட்டோமே. இது நியாயமா? அக்கிரமமல்லவா?” என்ற எண்ணம் அவள் உள்ளத்தை அரித்தது.

ஸ்ரீதரோ தன் பேச்சை நிறுத்துவதாயில்லை. “பத்மா, என் ஆசைப் பத்மா. சுரேஷ் எவ்வளவு நல்லவன். பார்த்தாயா? அவன் சீக்கிரமே என்னைப் பார்க்க மீண்டும் வருவான். அப்பொழுது அவனிடம் சொல்லி லண்டன் டாக்டரை உடனே வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறிதும் தாமதிக்கக் கூடாது. பத்மா, எனக்கு மிகவும் அவசரம். உன்னையும் முரளியையும் சீக்கிரமே என் கண்களால் பார்க்க வேண்டும். இந்த இருளில் சிறையிலிருப்பதை இனி என்னால் பொறுக்கவே முடியாது. ஆம், பத்மா குருடாயிருப்பது இலேசான விஷயமல்ல. மிக மிக வேதனை, மிக மிகக் கஷ்டம். வேண்டுமானால் உன் கண்களை ஒரு நாள் முழுவதும் கறுப்புத் துணியால் இறுகக் கட்டி வைத்துவிட்டுப் பார். அப்பொழுது தெரியும் கண் பார்வையின் பெருமை. ஆம், இராசாத்தி. ஒரு மனிதனுக்குக் கண் பார்வைதானே மிக மிக முக்கியம். அதைச் சுரேஷ் எனக்குத் தரப் போகிறான். நான் அதிர்ஷ்டசாலி” என்று விடிய விடிய கண்களைப் பற்றிப் பேசிய விதம் சுசீலாவின் உள்ளத்தை வாள் கொண்டறுப்பது போலிருந்தது.

‘அமராவதி’யில் ஸ்ரீதர் இவ்வாறு கனவு கண்டு கொண்டிருக்க, சுரேஷ் வல்வெட்டித் துறையில் தன் வீட்டுக்கு முன்னாலிருந்த மாமரத்தின் கிளைகளூடே சந்திரன் விரித்திருந்த நிலவுப் பின்னணியில் ஒரு சாய்வு நாற்காலியில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவன் நித்திரக் கொள்ளவில்லை. ஸ்ரீதர் விஷயத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என்ற பிரச்சினையை விடுவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

“பார்க்கப் போனால் ஸ்ரீதர் மனைவியும் சிவநேசரும் சொல்வது உண்மைதானே? அவன் இன்று ஏமாற்றப்பட்டிருந்தாலும் இன்பத்தில் திளைத்திருக்கிறான். கண் பார்வை கிடைத்தால் அந்த இன்பத்துக்கு முடிவு வந்துவிடுமல்லவா? அதற்கு நான் காரணமாயிருக்கலாமா? கூடாது?” என்று முடிவு செய்வதும், பின்னர், “ஒரு மனிதனுக்குக் கண் பார்வைதானே முக்கியம்? அதனை நாம் ஒருவனுக்குக் கொடுக்க முடிந்தும் கொடுக்காமலிருந்தால் பெரிய கொடூரமல்லவா?” என்று எதிர்மறையாகச் சிந்திப்பதுமாக இருந்தான்.

இரண்டு தினங்கள் கழித்து அவன் மீண்டும் ‘அமராவதி’க்குப் புறப்பட்டபோது இப்பிரச்சினையில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். ஸ்ரீதருக்குக் கண் பார்வை தருவது அவனது நலனுக்கே நல்லதல்ல என்பதே அது. ஆகவே, பேராசிரியர் நிக்கலஸ் நோர்த்லி அதிக வேலையின் காரணமாக இலங்கைக்கு வருவதைச் சில காலத்துக்கு ஒத்தி போட்டுவிட்டார் என்று ஸ்ரீதரிடம் கூறிவிட வேண்டுமென்று முடிவு கட்டி விட்டான் அவன். பின்னர் விஷயத்தை வாழ்க்கை பூராவுமே ஒத்தி போட்டு விடலாம். அவசியமானால் சில காலம் கழித்து, பேராசிரியர் நோர்த்லி இறந்து விட்டார் என்று கூடக் கூறி விடலாம். ஆனால் விவேகியான ஸ்ரீதர் “நோர்த்லி போலவே சிறந்த வேறு கண் வைத்தியர்களும் இருக்கிறார்களல்லவா? நீ கூடச் சொன்னாயே. அவர்களில் ஒருவரை அழைக்கலாமே” என்று கேட்பதென்னவோ நிச்சயம். ஆனால் அதற்கென்ன செய்வது? அவற்றுக்கெல்லாம் அவ்வப்போது மனதில் தோன்றும் சாக்குப் போக்குகளைச் சொல்ல வெண்டியதுதான். ஒரு பொய் சொல்லிவிட்டால் அதைத் தாங்க ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் பொய்களைச் சொல்ல வேண்டியதுதான்.

ஆனால் இந்தச் செய்தியைக் கேட்டதும் ஸ்ரீதர் முகமென்னவோ மாலை நேரத் தாமரை போல் வாடி விடப் போவது நிச்சயம். அதைக் கண் கொண்டு பார்ப்பது கஷ்டம்தான். இருந்தாலும் அவனது நன்மைக்காகப் பல்லைக் கடித்துக் கொண்டேனும் அதைச் செய்ய வேண்டியதுதான்.

இத்தகைய யோசனைகள் தன் சிந்தனையில் ஊசலாட, ‘அமராவதி’யின் பெரிய ‘கேட்டு’களுக்கு ஊடாக சுரேஷ் தன் காரில் உள்ளே சென்ற போது சுசீலா அவனை வழிமறித்தாள். “நில்லுங்கள். சுரேஷ் நீங்கள் ஸ்ரீதரைக் காணு முன் உங்களுடன் சில வார்த்தைகள் நான் பேச வேண்டும்” என்றாள் அவள்.

மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் நின்ற மகிழ மரத்தின் நிழலில் சுரேசும் சுசீலாவும் பேசிக் கொண்டார்கள். நல்ல வேளை. ஸ்ரீதர் மத்தியான உணவுக்குப் பின் தூங்கச் சென்றவன் இன்னும் துயில் கலைந்து எழவில்லை.

சுசீலா சுரேஷிடம் “சுரேஷ், நீங்கள் அமராவதிக்கு வந்திருக்கக் கூடாது. சலனமற்றுப் படிகம் போல் விளங்கிய ஸ்ரீதரின் வாழ்க்கை என்னும் தடாகம் உங்கள் வரவால் முற்றிலும் கலங்கிப் போய்விட்டது. ஐயோ, இன்று அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. என்னால் இதைத் தாங்க முடியாது” என்றாள்.

சுரேஷ் ஒரு பதிலும் பேசாது அவள் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு நின்றான். அவள் என்ன சொல்வதற்கு இப்படிப் பீடிகை போடுகிறாள் என்பது அவனுக்கு முதலில் விளங்க வில்லை.

“நீங்கள் அமராவதிக்கு வரும் வரை ஸ்ரீதர் மிகவும் சந்தோஷமாகவே இருந்து வந்தார். ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்பது போல் அவர் தம் கண் பார்வையை முற்றாக மறந்து முரளியோடு விளையாடுவதிலும் வாழ்க்கையைத் தம் நிலைக்கேற்றவாறு அனுபவிப்பதிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் நீங்கள் வந்து அவரது ஆசைத் தீயை மூட்டி விட்டீர்கள். கண் பார்வை கிடைக்கும் என்ற கனவைத் தூண்டிவிட்டீர்கள். அதன் பயனாக அவர் தமது அமைதியை முற்றாக இழந்து விட்டார். மீண்டும் உலகின் வண்ணங்களையும் வளைவுகளையும் காணத் துடிக்கிறார் அவர். ‘எப்போது என் கண் பார்வை கிடைக்கும்?’ என்று அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டார் அவர். ஆம். சுரேஷ். இராப் பகலாக வெறி பிடித்தவர் போலக் கண் பார்வை, கண் பார்வை என்று கதறுகிறார் அவர். அவர் இவ்வாறு ஓலமிடுவதைக் கேட்க என்னால் சகிக்க முடியவில்லை. இவ்வளவு ஆசையுடன் ஒரு மனிதன் தன் மனதால் விரும்புவதை நாம் தடுக்கலாமா? சுரேஷ், எனது முன்னைய வேண்டுகோளை மறந்து விடுங்கள். நீங்கள் சொன்ன பேராசிரியர் நோர்த்லியை உடனே இங்கிலாந்திலிருந்து ஜெட் விமானம் மூலம் இங்கே வர ஏற்பாடு செய்யுங்கள். உண்மையில் ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவர் என்னை- அதாவது நன்னித்தம்பி மகள் சுசீலாவை நேசிக்கவே இல்லை. ஒரு நாள் என் மனத்தின் சபலத்தை அடக்க முடியாது நான் அவரை நன்னித்தம்பி மகள் சுசீலாவை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் ஞாபகமிருக்கிறது. அதற்கு இப்போதென்ன என்று என்னைக் கேட்டார் அவர். பத்மாவைத்தான் நேசிக்கிறார். ஆனால் அவர் பத்மாவை விட நேசிப்பது தன்னிரு கண்களையும் தான். கண்ணிழந்தவருக்குக் கண் மேல் தானே ஆசையிருக்கும்? ஆகவே நாம் அவர் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால், நாம் அவருக்கு அளிக்க வேண்டியது அவர் கண் பார்வையைத்தான். அதனையும் நாம் அவருக்குக் கொடுக்க முடிந்தும் கொடுக்காமல் இருந்தால் அதை விடப் பெரிய பாவமென்ன?” என்றாள் சுசீலா.

சுரேஷ் சுசீலாவின் வேண்டுகோளைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டான். அவன் சற்றும் எதிர்பாராத வேண்டுகோள் இது. எத்தனையோ தரம் மூளையைக் குழப்பி ஸ்ரீதரின் வாழ்க்கைக்கு நல்ல முடிவு அவன் நிரந்தரமாகக் குருடாயிருப்பதே என்ற தீர்மானத்துக்கு வந்து அதை அமுல் நடத்துவதற்கு வழி வகைகளையும் வகுத்துக் கொண்டு வந்திருந்த அவனுக்கு இது புதிய சிக்கலை உண்டாக்கிவிட்டது.

சுசீலா சொன்னது போல் குற்றம் முழுவதும் தன்னுடையைதுதான் என்பது அவனுக்குத் தெரியத்தான் செய்தது. சும்மா இருந்த அவனுக்குக் கண் பார்வையை மீண்டும் பெறுவதில் ஆசை மூட்டிவிட்டு இப்பொழுது அது முடியாதென்று கூறினால் அவனுக்கு எப்படி இருக்கும்? மனித இதயத்தின் வேதனை எல்லாம் நிறைவேறாத ஆசைகளால் உண்டானதுதானே? ஆசைத் தீயை மூட்டிவிட்டுப் பின்னால் அதனை நீருற்றிக் கரிக்கும்பமாக்குவதா? அதனால் ஏற்படும் ஏக்கத்தைப் பொறுப்பது இலேசான காரியமா என்ன?

ஆனால் ஸ்ரீதர் மீண்டும் தன் கண் பார்வையைப் பெற்றால் அதனால் அவனுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள்? - அவற்றை எண்ணிப் பார்க்கவே பயமாய் இருந்தது. அதில் முதலாவது பலியாக அவஸ்தைப் பட வேண்டியவள் சுசீலாவல்லவா? பாவம் சுசீலா, அவளுக்கு நான் எவ்வளவு தீங்கிழைத்துவிட்டேன்?

பார்க்கப் போனால் இந்தச் சுசீலா எப்படிப்பட்ட அதிரடியான பெண். ஒரு குருடனை மணக்க இசைந்து அவனை மணந்திருக்கிறாள். அதனால் ஏற்படும் வாழ்க்கை வசதியீனங்களெல்லாவற்றையும் அனுபவித்து வருகிறாள். ஆனால் அத்துடன் அவள் பிரச்சினை தீர்ந்து விட வில்லையே. தன்னைத்தான் அழித்துவிட்டு வேறொரு பெண்ணாகவும் வாழ்ந்து வருகிறாள். இப்பொழுது கண் பார்வை பெற்றதும் சுசீலா பத்மாவல்ல என்பதைத் தெரிந்து கொண்ட ஸ்ரீதரின் உள்ளத்தில் வெறியோடு வீசப் போகிற பெரும் புயலிலே தான் ஒரு சிறு மலராகச் சிதைந்து சீரழியவும் துணிந்துவிட்டாள் அவள். தியாகத்தின் எல்லையாக, அன்பின் கோபுரமாக விளங்கும் அவளது இத்துணிவை நினைத்தால் நெஞ்சு நடுங்குகிறதே!....

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -இவ்வாறு சிந்தித்த சுரேஷ் சுசீலாவிடம், “கண் பார்வை இழந்தவனுக்கு உலகில் கண் பார்வையே முக்கியமென்பது உண்மைதான். ஆனால் ஸ்ரீதருக்குக் கண் பார்வை அளித்தப் பின் அதனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை எண்ணிப் பார். நீ தன் பள்ளிக் காதலி பத்மா அல்ல, போலி என்று தெரிந்ததும் அவனுக்கு உன் மீது தாங்க முடியாத வெறுப்பேற்படும். எனவே அவன் உன்னை வெறுத்தொதுக்குவது நிச்சயம். அவன் அப்படிச் செய்தால் அது நியாயமே. உலகிலேயே இதுவரை கண்டும் கேட்டுமிராத பெரும் மோசடியை, ஆள் மாறாட்டத்தை நீங்கள் அவனது வாழ்க்கையில் செய்திருக்கிறீர்கள். இது வரை நான் வாசித்த எந்த நாவலிலும் கூட இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான கட்டத்தை நான் கண்டதில்லை. இந்த மோசடியில் நீயே பிரதான பங்கு வகித்திருக்கிறாய். இப்படிப்பட்ட பயங்கர நாடகத்தை எவரும் பாதியில் விட்டுவிட முடியாது. அதன் முடிவு வரை அதை ஆடியே தீர வேண்டும். அப்பொழுதுதான் அதன் பலா பலன்களிலிருந்து நீ தப்ப முடியும். இந்த நாடகத்துக்கு முடிவு ஒன்றே ஒன்று தான் ஸ்ரீதரின் மரணம், அல்லது உனது மரணம். ஸ்ரீதர் இறப்பதற்கு முன் நீ இறந்தால் பத்மாவே தன்னுடன் அல்லது வாழ்வு முடியும் வரை வாழந்திருந்தாள் என்று அவன் நினைத்துக் கொள்வான். அதே போல உனக்கு முன் ஸ்ரீதர் இறந்தால் அப்பொழுதும் அவனுக்கு விஷயம் தெரிய வராது. ஆகவே புயலடிக்காமலே அவனது வாழ்க்கை முடிந்து விடும். சுசீலா, நீ இப்போது பிடித்திருப்பது புலியின் வால். அதைக் கடைசி வரை நீ கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ள வேண்டும். சிறிது விட்டுக் கொடுத்தாலும் புலி உன் மேல் பாய்ந்து உன்னைத் தின்று விடும். ஆகவே நாடகத்தைப் பாதியில் நிறுத்துவதை ஒரு போதும் முடியாத காரியம். ஆகவே ஸ்ரீதர் கடைசி வரை கண் பார்வையற்றவனாக இருப்பதே மேல்” என்றான்.

சுசீலா, “ நீங்கள் சொல்வது உண்மைதான். இதன் பயனாகப் பயங்கரமான விளைவுகள் ஏற்படப் போகின்றன என்பதும் எனக்குத் தெரியத்தான் செய்கிறது. ஆனால் அந்த விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை நான் விவரமாகக் கற்பனை செய்து பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவ்வித கற்பனை மனத்தின் தைரியத்துக்கு அடியோடு குழி பறித்துவிடும். ஆகவே அது எப்படியும் போகட்டும். என்னைப் பொறுத்தவரையில் எனது ஆள் மாறாட்ட மோசடியின் பலா பலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ள நான் முயலவில்லை. எவ்வித பலா பலன்களையும் அது வரும்போது ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் ஸ்ரீதர் கண் பெற வேண்டும். அவர் உள்ளம் அதற்காக அழுகிறது. அதை அவருக்குக் கொடுத்து அதனால் என்ன பலன் ஏற்பட்டாலும் நான் அதனை ஆனந்தமாகப் பெற்றுக் கொள்ளுவேன். சுரேஷ், நீங்கள் இதனை எனக்காகச் செய்துதான் ஆகவேண்டும்.” என்றாள்.

சுரேஷிற்கு அதற்கு மேலும் சுசீலாவை எதிர்த்து நிற்க முடியவில்லை. இன்னும் தன் உயிருக்குயிரான நண்பன் ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதை அவனை விட வேறு யார் தான் அதிகமாக விரும்ப முடியும்? ஆனால் ஒன்று, அதனால் ஸ்ரீதருக்குக் கஷ்டம்தான் விளையப் போகிறது. ஆனால் கண் பாவை இல்லாதிருத்தலும் கஷ்டம் தானே. இன்னும் இதோ கிடைக்கப் போகிறது என்று ஆசையோடு எதிர்பார்க்கப் பட்ட ஒன்று அவ்வாறு கிட்டாமல் போனால், அதுவும் பெரிய துன்பந்தானே. இப்படி இப்பிரச்சினையில் எப்பக்கம் திரும்பினாலும் துயரும் துன்பமுமே முகத்துக்கு முன்னால் சுற்றி நிற்கின்றன. இந்நிலையில் எதைச் செய்வது சரி, எதைச் செய்வது பிழை என்றே அவனுக்குத் தெரியவில்லை. எதையாவது செய்யத்தானே வேண்டும்? அப்படியானால் ஸ்ரீதர் ஆசைப்படுவதை, சுசீலா விரும்புவதைச் செய்துவிட வேண்டியதுதான்.

ஆனால் இதில் ஒரு சிக்கல். இதைப் பற்றிச் சிவநேசர் என்ன நினைப்பார்? அவருடன் இது பற்றிப் பேச வேண்டாமா? சுரேஷ் இந்த விஷயத்தைச் சுசீலா முன்னால் தூக்கிப் போட்டதும், “அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் அவரைச் சமாளித்துவிடுகிறேன். தன் மகன் கண் பார்வை பெறுவதை எந்தத் தகப்பன் தான் விரும்பாதிருக்க முடியும்? அவர் விரும்பாவிட்டாலும் நான் அவரை விரும்ப வைத்து விடுவேன்.” என்றாள்.

“அப்படியானால் அது உன் விஷயம். இன்றைக்கே பேராசிரியர் நோர்த்லியுடன் நான் கேபிளில் பேசுவேன். மிக விரைவிலேயே எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுவேன்.” என்றான் சுரேஷ்.

சிறிது நேரம் கழித்து ஸ்ரீதர் பிற்பகல் துயில் நீங்கி எழுந்ததும் சுரேஷ் தன் திட்டத்தை ஸ்ரீதரிடம் கூறினான். ஸ்ரீதர் அவன் தோள்களைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினான். “சீக்கிரமே விஷயத்தை முடி. முதலில் உன் முகத்தைப் பார்க்க எனக்கு எவ்வளவு ஆசையாயிருக்கிறது தெரியுமா சுரேஷ்?” என்றான் அவன், குழந்தைப் பிள்ளையைப் போல.

இச்சம்பவம் நடந்த இரவு சுசீலா மாமியார் பாக்கியத்திடம் தானும் சுரேசும் செய்து கொண்ட ஏற்பாடுகளைக் கூறினாள். முதலில் பாக்கியம் அதை முழு மூச்சோடு ஆட்சேபிக்கவே செய்தாள். இருந்தாலும் முடிவில் என்னவோ நடப்பது நடக்கட்டும் என்ற தோரணையில் தனது மனத்தை மாற்றிக் கொண்டுவிட்டாள். அவளால் வேறு என்ன தான் செய்ய முடியும்? இரண்டு மூன்று தினங்களில் சிவநேசரையும் கூட இதே நிலைக்குக் கொண்டு வந்துவிட்டாள் சுசீலா. இவை நடந்து ஓரிரு தினங்கள் கழித்து சுரேஷ் லண்டனுக்குப் பேராசிரியர் நோர்த்லியுடன் கேபிளில் பேசினான்.

“பேராசிரியரே, தங்களுக்கு எப்பொழுது இலங்கை வர வசதியாயிருக்கும்” என்று கேட்டான் சுரேஷ்.

“இந்த மாதம் கல்லூரி விடுமுறை. அத்துடன் கையில் அதிக வேலைகளுமில்லை. மேலும் கீழைத்தேய கண் நோய்களைப் பற்றி நான் ஒரு நூலும் எழுதி வருகிறேனல்லவா? இலங்கையில் அதற்கு வேண்டிய சில குறிப்புகளையும் நான் பெற முடியும். ஆகவே எப்பொழுதும் நான் இலங்கை புறப்படத் தயார். ஏற்பாடுகளைச் செய்.” என்றார் பேராசிரியர்.

சுரேஷிற்கு ஒரே ஆனந்தம். “அப்படியே ஆகட்டும்.” என்று ஏற்பாடுகளைச் செய்தான் அவன்.

இரண்டு வாரங்கள் கழித்து பேராசிரியர் நோர்த்லி ‘அமராவதி’யில் ஸ்ரீதரின் கண்களை மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்தார். அவர் பக்கத்தில் இலங்கையின் சிறந்த கண் வைத்திய நிபுணர்களில் ஒருவரும் சிவநேசரின் குடும்ப நண்பருமான டாக்டர் நெல்சன் நின்று கொண்டிருந்தார்.

பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதரின் கண்களைத் தம்மிடமிருந்த பூதக் கண்ணாடி இணைந்த கருவிகளால் உற்று நோக்கி ஆராய்ந்த வன்ணமே, டாக்டர் நெல்சனுக்குச் சில விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்தார். பாக்கியம், சுசீலா, சிவநேசர், சுரேஷ், நன்னித்தம்பியர் ஆகியோரும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

முரளி தனது ஆயாவின் கைகளில் வீற்றிருந்தவன்ணம் கைகொட்டி மழலை மிழற்றினான். “அப்பா அப்பா” என்று சப்தமிட்டான்.

பேராசிரியர் நோர்த்லி அவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு, “யாரிந்த சின்னப்பயல். பெரிய கலாட்டா பண்ணுகிறானே" என்றார் சிரித்துக் கொண்டு. முரளி அவரது வெள்ளை மீசையைத் தன் கால்களால் பற்றிக் கொண்டு விட மாட்டேன் என்று அடம்பிடித்தான். பேராசிரியரை அவனிடமிருந்து விடுப்பது சுசீலாவுக்குப் பெரிய கஷ்டமாய்ப் போய்விட்டது.

ஸ்ரீதர் பேராசிரியரிடம் “அது என் மகன் முரளி அவனை நான் இன்னும் பார்த்ததேயில்லை. அவனைப் பார்க்கத் தான் எனக்குக் கண் வேண்டும் டாக்டர்” என்றான்.

அதைக் கேட்ட பேராசிரியர் மனம் உருகிவிட்டதே. “சரி, என்னாலானதைச் செய்கிறேன்” என்று தம் ஆராய்ச்சியை நீண்ட நேரம் நடத்தினார் அவர். முடிவிலவர் சுரேஷை நோக்கி “சுரேஷ், ஸ்ரீதரின் கண் நோய் மிகவும் சிக்கலான ஒன்று தான். என்றாலும், இந்த நோயைப் பற்றிய முக்கிய விஷயங்கள் பல, சமீப காலத்தில் தெரிய வந்துவிட்டன. பிரெஞ்சு டாக்டர் பீயரே ரோலண்ட் என்பவர் இது பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதன் அடிப்படையில் நாலு மாதங்களின் முன்னர் இத்தாலியில் நான் ஓர் ஆபரேஷனை நடத்தினேன். மிக வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் நடத்தப்பட்ட பெண் உலகப் பிரசித்தி பெற்ற நடிகை. அன்னா பெட்ரோனி என்பது அவள் பெயர். இப்பொழுது பழையபடி நடிக்கத் தொடங்கி விட்டாள் அவள்.” என்றார்.

இதைக் கேட்ட ஸ்ரீதருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. அன்றலர்ந்த தாமரை போல் பூரித்த முகத்துடன் புன்னகை மழை பொழிந்தான் அவன். “அம்மா, பத்மா, கேட்டீர்களா பேராசிரியர் பேச்சை? நான் அதிர்ஷ்டசாலி. சுரேசுக்கு நான் நன்றி பாராட்ட வேண்டும்.” என்றான்.

ஆனால் சந்திர சிகிச்சை தாங்கொணாத வேதனை தருமென்ற எண்ணமும் அவனுக்கு ஏற்படாமலில்லை. ஆகவே “சந்திர சிகிச்சை அதிகம் நோகுமோ?” என்று பேராசிரியர் நோர்த்லியை நோக்கி வினவினான்.

பேராசிரியர் நோர்த்லி சிரித்துவிட்டு, “என்ன ஸ்ரீதர், இவ்வளவு பயப்படுகிறாய்? இந்தக் காலத்தில் பெண்கள் கூட சந்திர சிகிச்சைக்கு இவ்வளவு பயப்பட மாட்டார்களே. உனக்கு நோகாமலே கண் பார்வை வேண்டுமா. சரி, அப்படியே செய்கிறேன்.” என்றார்.

ஸ்ரீதரின் சந்திர சிகிச்சைக்கு யாழ்ப்பாண நகரில் டாக்டர் நெல்சனின் கண் வைத்திய சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அது நவீன வசதிகள் பொருந்திய சிறந்த வைத்தியசாலையாக இருந்த போதிலும் பல குறைபாடுகளும் அங்கு இருக்கவே செய்தன. அவற்றை நிவிர்த்திக்க, பேராசிரியர் நோர்த்லி சொன்னபடி பல திருத்தங்கள் அங்கு செய்யப்பட்டன. அத்துடன் அங்கிலாதிருந்த சில நவீன கருவிகளும் ஸ்ரீதரின் சந்திர சிகிச்சைக்கெனக் கொழும்பிலிருந்து விசேஷமாக வரவழைக்கப்பட்டன. இவற்றிற்குரிய செலவுகள் யாவும் சிவநேசரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு பேராசிரியர் நோர்த்லிக்கு வேண்டிய சகல வசதிகளும் அவரால் பெரும் பணச் செலவில் செய்து கொடுக்கப்பட்டன. அவர் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கென ‘அமராவதி’யின் இரண்டு கார்களிலொன்றும் அவரிடம் கொடுக்கப்பட்டது. ஒரு காரோட்டியும் பேராசிரியருக்கென விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்டான்.

பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை முடிந்து, அவனது கண்ணின் கட்டை அவிழ்ந்து நோய் குணமாகிவிட்டதா என்று ஊர்ஜிதமாக்கிக் கொண்டதும் யாழ்ப்பாணத்திலிருந்து நேரே பம்பாய்க்கு விமானம் மூலம் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பம்பாயில் உலக சமாதான இயக்கத்தின் இந்தியத் தலைவர் சிலரை அவர் நேரில் பார்த்துப் பேச விரும்பியதே அதற்குக் காரணம்.

இவ்வாறு டாக்டர் நெல்சனின் ஆஸ்பத்திரியில் சந்திர சிகிச்சை ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்க, அதனை எவ்வித கிலேசமுமின்றி வரவேற்றுக் கொண்டிருந்தது ஸ்ரீதரின் உள்ளம் மட்டும்தான். மற்றவர்களோ ஸ்ரீதரின் கண் பார்வையுடன் பெரிய இடி முழக்கத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பாக்கியம், சுசீலா, சுரேஷ், எல்லோருக்கும் இது பொருந்தும். ஏன் சிவநேசருக்கும் கூடத்தான். தமது மனைவி பாக்கியத்திடம் “சுசீலா அற்புதமான பெண். குருடனைக் கட்டுவதற்குத் தானாக முன் வந்தாள். ஆனால் அவள் இப்பொழுது செய்வதோ அதிலும் பார்க்கப் பல மடங்கு துணிவு நிறைந்த செயலாகும். தன் ஆள் மாறாட்ட நாடகம் பிடிபடப் போகிறது என்பதைக் கூடச் சட்டை செய்யாமல், ஸ்ரீதருக்குப் பார்வை தர முன் வருகிறாள் அவள். ஆனால் இதனால் என்ன விபரீதம் நேரிடப் போகிறதோ?” என்று கவலையுடன் கூறினார் அவர்.

அதற்குப் பாக்கியம், “ஆனால் இந்த ஆள் மாறாட்ட நாடகத்துக்குச் சுசீலா மட்டுமா பொறுப்பு? நாமும் கூடத் தானே? ஸ்ரீதர் எங்கள் மீதும் கோபமடையத் தான் போகிறான். இதை நாம் எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? வருவது வரட்டும், மாவிட்டபுரம் கந்தன்தான் துணை.” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள்.

[தொடரும்]

Last Updated on Saturday, 02 February 2013 17:59  


'

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றம்/ நோக்கம்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

Yes We Can


Dr. Lalithambigai (Lali) Thambiaiyah

Dr. Lalithambigai (Lali) Thambiaiyah passed away on April 16, 2020 at Kaiser Hospital in Walnut Creek, California, USA. She was 61 years old. She is preceded in death by her father Mr. Kandiah Elankanayagam Kathirgamalingam, Retired Crown Advocate (1977), mother Manonmany (2014), sister Vijeyalakshmi (2018), father-in-law Velupillai Suppiah Thambiaiyah (1991), and mother-in-law Saraswathy (1987). Read More

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்

' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

THANK YOU!

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

மதுரைத் திட்டம்

மதுரைத்திட்டம்

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

படிப்பகம்

உலக வானொலி