எகிப்தில் சில நாட்கள் 1நோயல் நடேசன்உலகத்தில் முதன்முதலாக ஆணுறையைப் பாவித்தவர்கள் யார் தெரியுமா? எகிப்தியர்கள். எகிப்திலிருந்து முதலாவது ஆணுறை எப்படி உருவாகியது? அறிய ஆவலாக இருக்கிறீர்களா? செம்மறி ஆட்டின் குடலின் வெளிப்பக்கத்தில் உள்ள மெல்லிய லைனிங்கில் இருந்து செய்தது. இந்த குடல் லைனிங்தான் இப்பொழுது சொசேச் செய்வதற்கு பயன்படுகிறது. சத்திர சிகிச்சை  வைத்தியத்துறையில் ஆரம்ப உபகரணங்கள் எகிப்தில் பாவிக்கப்பட்டதாக மருத்துவ சரித்திரம் கூறுகிறது. எழுத்து வடிவம் பப்பரசி இலையில் எழுதப்பட்டது. பப்பரசி பேப்பர்தான் இப்பொழுது பேப்பர் ஆகியது. இந்த பப்பரசி செடிகள் நைல் நதிக் கரையோரம் விளைகின்றன. உலகத்தின் முதல் நாகரீகம் நைல் நதிக்கரையில் தொடங்கியது எனப் பாடப்புத்தகங்கள் வாயிலாகப் படித்தேன். இதே போல் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் யூதமக்கள் மோஷசால் எகிப்திய மன்னர்களிடம் இருந்து இறைவனின் கட்டளைப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்கிறது. இதன்பின்பு குரானைப் படிக்கும்போது அங்கும் எகிப்திய மன்னர்களையும் யூதர்களைப் பற்றியும் அவர்களை அழைத்து சென்ற மோஷசை பற்றியும் பல வாக்கியங்கள்  பேசப்படுகிறது.
 
5112 வருடங்களுக்கு முன்பாக வேட்டையாடிய மனித குலம் நிலப்பாரம்பரியத்திற்கு  மாறி, தானியங்களை உற்பத்தி செய்ததால்  முதலாவதாக உருவாகிய அரசு எகிப்தில் அமைந்தது. நதிக்கரையில் உருவாகிய அக்காலத்தில் மூன்று இலட்சம் மக்களைக் கொண்டிருந்ததாகத் தகவல் உள்ளது. அது சாதாரணமான சிறிய அரசாக இருக்காமல் ஆசியா,  ஆபிக்கா என்ற இரண்டு கண்டங்களிலும் பரந்து விரிந்தது. கிறிஸ்துவுக்கு முன்பாக 342 வருடங்கள் வரை உள்நாட்டு மன்னர்களே எகித்தை ஆண்டார்கள். அவர்கள் கிரேக்கர்கள் போல் சிறிய நகரங்களை ஆளவில்லை. ரோமர்களினைப் போல் பிற்காலத்தில் மற்ற நாடுகளைப் பிடித்து அதன் மூலம் சாம்ராச்சியத்தை உருவாக்கவில்லை.

தற்காலத்து வரவிலக்கணப்படி தேசியம், இனம் என அதற்கான நிலப்பரப்புகளைக் கொண்டு தனக்குரிய மொழியைப் பேசி உருவாகியது. ஆங்கிலத்தில் சொல்லப்படும் நேசன் ஸ்ரேட் (Nation State); உருவாகியது. ஆதிமனிதன் சகாரா பாலைவனத்திற்கு தெற்கே உருவாகினான் என்கிறது அந்திரப்போலஜி. அதேபோல் சகாரா பலைவனத்தில் முதலாவது அரசு உருவாக்கப்பட்டது. இதனால் ஆபிரிக்க கண்டம்தான், மனிதர்களது தோற்றத்தின் தொட்டில் மட்டுமல்ல நாகரீகத்தின் தொடக்கப்பாடசாலையும் கூட.

பேரரசர்களான அலக்சாண்டர், ஜுலியஸ் சீசர் என்பவர்களது பெயர்கள் எகிப்திய தேசத்தோடு கலந்து இருக்கிறது. தானியங்கள் இராணுவ விஸ்தரிப்புக்குத் தேவை. எனவே சுற்றி இருந்த நாட்டு அரசர்கள்  எகிப்தின் மேல் படை எடுத்தார்கள். கோதுமை, பருத்தி போன்ற முக்கிய பொருட்களுக்காக ஆரம்பத்தில் கிரக்கர்களும் பின்பு ரோமர்களும் படையெடுத்து எகிப்தைக் கைப்பற்றினார்கள்.
உலகப் பேரழகிகளாக கருதப்படும் கிளியோபட்ரா, நெபரட்டி((Nefertiti)  என்பவர்களை இந்த நைல் நதி தந்ததாக உலக சரித்திரம் கூறுகிறது.
இப்படி எங்கு பார்த்தாலும் பேசப்படும் ஒரு நாட்டைப் பார்பதற்குப் பலகாலம் விரும்பினாலும், காலம் கனியவில்லை.
இம்முறை  இலங்கை செல்லும் முன் சில நாட்கள் விடுமுறையை எங்கு கழிப்பது எனப் பேச்சு வந்தபோது பல காலக் கனவாக இருந்த  எகிப்திற்குப் போவது என முடிவெடுத்தேன். எனது நண்பன் இரவீந்திரராஜ் என்னுடன் வருவதற்குச் சம்மதித்தான். ஏற்கனவே சீனா,  வியட்னாம்,  கம்போடியா போன்ற நாடுகளுக்கு இருவர் குடும்பங்களும் சென்றதால்; அதே மாதிரியாக இம்முறையும் செல்ல முடிவு செய்தோம்.   எகிப்தில் அரசியல் பிரச்சினைகள், அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என பிரயாண எச்சரிக்கைகள் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சால் வெளியிடப்பட்டு  இருப்பதால்  என்னுடன் வரவிருந்த நண்பன்  என்னை ‘எகிப்தில் நடக்கும் விடயங்களைத் தொடர்சியாக கண்காணி’ எனப் பணித்தான்.

அவனது இரண்டு பிள்ளைகள் மற்றும் எதிர்கால மருமகளும் வருவதால் எனது பொறுப்பு அதிகமாவதை உணர்ந்தேன். மேலும் அவுஸ்திரேலிய பாஸ்போட்டில் நாங்களும் போதாதற்கு அவனது அவுஸ்திரேலிய மருமகளும் வரும்போது நாங்கள் அல்கைடா போன்ற அமைப்புகளால் கடத்தபடுவோமா என்ற பயம்  மனத்தில் தோன்றி மறைந்தது. தற்பொழுது அல்கைடாவின் முக்கிய தலைவர் அல்ஜிரியாவை சேர்ந்த மொக்ரார் மெலமொகரார் (Mokthar Belmokhtar)  வட ஆபிரிக்காவில் இருப்பதாக செய்திகள் கூறின. பயங்கரவாதத்திற்கு எதிரான அமரிக்காவின் நேரடி நடவடிக்கைளில் அவுஸ்திரேலியா பலமான தோழமை நாடாக ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இயங்குவது தெரிந்ததே.
 
ஏற்கனவே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் அரசியல் சமூக விடயத்தை நான் கவனமெடுப்பது வழக்கம். ஆரம்பத்திலே இருந்த இந்தப் பழக்கம் உதயத்தில் ஆசிரியராக இருந்த போது வலுப்பெற்றது. இந்தச் செய்திகளைத் தெரிந்து கொள்வது வேறு. அது இந்தக் கணணி யுகத்தில் எவராலும் முடியும். ஆனால்  அவற்றைப் புரிந்து கொள்வது வித்தியாசமான விடயம். ஒரு பத்திரிகையை வாசித்து விட்டு மட்டும் போக முடியாது.  பல ஊடகங்களை வாசிக்கவேண்டும். அரசுக்கு ஆதரவான, எதிரான  ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் அறிக்கைகள். இதற்கு மேல் இந்திய, இலங்கை விடயங்கள்… அந்தந்த ஊர்களைச் சேர்ந்தவர்களது தொடர்புகளைப் பேணவேண்டும். தமிழ்நாட்டில் விடயங்களை அறிய எனது நண்பர்களான எழுதாளர்களை நாடுவேன். அதே போல் இலங்கை விடயத்திலும்  பலரோடு தொடர்பு கொள்வேன். பல செய்திகளை அறிந்தாலும் அதை ஆராய்ந்து உண்மைத்தன்மையை ஒப்பு நோக்கி பார்க்க வேண்டும்.
 
சுலபமாகப் புரியவைப்பதற்கு உதாரணமாக, வீட்டில் இருக்கும் மிளகாய், வெங்காயத்தை வெட்டி கத்தரிக்காயை போட்டு வதக்குபருக்கும் சமையல் கலையை முறையாக பயின்று நட்சத்திர ஹோட்டல் மாஸ்ரர்  செவ் எனப்படும் சமையல் மேலாளுக்கும் உள்ள வேறுபாடு இது. இப்படியாக பத்திரிகை ஆசிரியராக இருந்த போது கிடைத்த அனுபவத்தைப் பாவித்து எகிப்திய நிலைவரத்தை ஆராய்ந்தேன். எனது அரேபிய நண்பர்கள் முக்கியமான தகவலைத் தந்தார்கள். தூதரக அறிக்கைகளில் பிரித்தானிய வெளிநாட்டு அறிக்கை உண்மைக்கு அருகாமையில் இருந்தது. அமரிக்க அறிக்கைகள் அதிதூரத்தில் இருந்தன. நான் எகிப்து போக இருக்கிறேன் என அறிந்ததும் பல ஆலோசகர்கள் இலவச ஆலோசனை தந்தார்கள். பலர் எகிப்தை தொலைக்காட்சியில் மட்டும் பார்த்தவர்கள். எனது ஒரு நண்பன் ‘நீ தற்கொலை செய்ய முயற்சிக்கிறாய்;’ என்றான். மற்றவன் விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி இப்பொழுது மத்திய கிழக்கை சேர்ந்தவர்களிடம் அகப்படப் போகிறாய் எனக் கவலைப்பட்டான். இதை விடப் பலர் எனது மனைவியிடம்  வைத்தியம் செய்யப் போனவர்கள், அவரிடம் மருத்துவ ஆலோசளைகளைப் பெற்று விட்டு, தங்களது எகித்திய நிலவரம்  பற்றிய புரிதலை ஆலோசனையாக கொடுத்து விடுவார்கள். எல்லோரும் எனது மனைவியிடம் இந்தப் பயணம் தற்கொலைக்கு ஒப்பானது. எங்களுக்குச் சேவை செய்ய டாக்டர் வேணும் என்பது போல் உணர்வு ரீதியாக பயமுறுத்தினார்கள்.

இப்படியான பலரது புரிதல்களையும் ஆலோசனைத்  தரவுகளை எடுத்துப் பார்த்தபோது எகிப்தில் முதல் கட்ட சர்வஜன வாக்கெடுப்பு அமைதியாக முடிந்தது என்ற செய்தி வந்தது. அடுத்த கட்டம் வரையும் குறைந்த பட்சம் அமைதி நிலவும். அத்துடன் நத்தார், புதுவருடம் எனப் பண்டிகை நாட்கள் வருகிறது. மேலும் இங்கே ஆர்ப்பாட்டம் செய்வது சாதாரண மக்களாதலால் அவர்களும் பண்டிகை நாட்களை அமைதியாக கழிக்க விரும்புவார்கள் என்ற எனது புரிதலின் பிரகாரம் பயணம் செய்வது என்பது முடிவாகியது. எனது முடிவுகளை எனது நண்பனும் ஏற்றுக் கொண்டதால் பிரயாணம் தொடங்கியது. இதைவிட துபாயில் இறங்கிய பின் ஏதாவது நடந்தால் துருக்கி செல்வது என்ற இரண்டாவது திட்டமும் இருந்தது.

மெல்பேனில் இருந்து துபாய் வழியாக இந்தப் பயணம் எட்டு மணித்தியாலமாகிறது. பலதடவை துபாய் வழியாக ஐரோப்பவுக்கு நான் மட்டும் தனியாகச் சென்றிருக்கிறேன.; இந்தமுறை செல்லும்போது எனது மனைவியும் நண்பனின் மனைவி நிருஜாவும் மகன் அனுசும் உடனே வந்தார்கள். நண்பனின் மற்ற மகனும் எதிர்கால மருமகளும் அடுத்தநாள் எகிப்துக்கு வருகிறார்கள்.

துபாயை அடைந்ததும் எகிப்து செல்வதற்கு அடுத்த விமானம் இரண்டு மணித்தியாலத்தில் இருந்தது. நேரம் அதிகாலையானதால் காலைக்கடன்களுக்குக் கழிப்பறைகளைத்தேடிச் செல்லும் போது  பெண்கள் இருவரையும் ஒரு இடத்தில் நிற்கச் சொல்லிவிட்டுச் சென்றோம் . அரை மணித்தியாலத்தில் வந்து பார்த்தால் அவர்களைக் காணவில்லை.  அனுஸ்  மட்டும் அந்த இடத்தில்  நின்றான்.
‘அவர்கள் எங்கே?’ எனக் கேட்டபோது, ‘அம்மாவும் அன்ரியும் கடைக்குச் சென்று விட்டார்கள்’. ஏற்கனவே எகிப்தில் இருந்து வரும் வழியில் நாலு நாட்கள் துபாயில் நிற்பதால் விமான நிலயத்தில், சொப்பிங்கில் இறங்குவதில்லை என்ற ஒப்பந்தம் எங்களிடையே செய்ப்பட்டு இருந்தது. சொப்பிங் என்ற விடயத்தில் எனது மனைவியிடம் நான் பயப்பிடும் ஒரு விடயம்.  காசு பணத்தை விட நேரம். பயணம் செய்யும்போது நேரம் எனக்கு முக்கியமாகிறது.
 
ஆனாலும் எங்கள் ஊரில் போட்ட அரசியல் ஒப்பந்தம் போல் இங்கும் அது முறிக்கப்பட்டது. என்ன செய்வது? எங்கே தேடுவது?
நல்லூர் திருவிழா போல் நெருசலான  துபாய் விமான நிலையத்தையும் அங்கிருக்கும் நகைக்கடைகளையும் நினைத்துப் பயந்தேன்.
எந்தக் கடைகளில் எங்கு தேடுவது? சிலகணம் திகைத்து நின்றேன். சிறிது நேரத்தில் நண்பனோடு  ஒன்றாகத் தேடிவிட்டு பின்பு பிரிந்து தேடுவதற்கு முடிவெடுத்து, கடைகளை பகுதியாக பிரித்தோம். உணவுக்கடை, நகைக்கடை மற்றும் டியுடி பிரீ சாமான்கள் விற்பவை என தரவாரியாகப் பிரித்துத் தேடினோம். நான் நகைக்கடைகளைத் தேடிய போது நண்பன் மற்றைய பக்கத்தால் தேடினான். எங்கும் காணவில்லை. மீண்டும் நண்பனின் மகன் இருந்த இடத்திற்கு வந்து பார்த்துவிட்டு அவர்கள் இல்லையானதால் மீண்டும் தேடச் சென்ற போது அங்கும் காணவில்லை. எகிப்திய விமானத்திற்கு இன்னும் அரைமணித்தியாலம்  இருந்தது. இந்த விடுமுறை எகிப்திற்குப் போக முதலே பிரச்சினை வந்திருக்கிறதே என்று நினைத்து சிறிது தாமதித்து விட்டு  திரும்பி பார்த்தபோது எனது நண்பனையும் காணவில்லை. அவனது  மகனையும் காணவில்லை.
 
மீணடும் அறிவிப்புப் பலகையில் பார்த்த போது விமானம் ஏறும் இடத்தை மாற்றிவிட்டார்கள். ஆரம்பத்தில் விமானம் ஏறவேண்டும் என தெரிவிக்கப்பட்ட இடத்தில்தான்  எனது தேடல் தொடங்கியது. எனக்குள் பரபரப்பு வந்தது. மனத்திற்குள் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்கியது. சரி அந்தப் புதிய  இடம் எங்கே என எதிரே வந்த விமான நிலைய ஊழியரிடம் கேட்போது தொலைவில் இருப்பதாகக் கையைக் காட்டினார்;. அந்த கைகாட்டல் நிலவேயோ நட்சத்திரத்தையோ சிறுவனுக்கு காட்டுவது போல் இருந்தது.
 
மனைவி, நண்பன், துபாய் விமான நிலையத்தை சேர்ந்தவர்கள் மற்றும்  துபாய் எமீரைக் கூடத் திட்டினேன். மனத்துக்குள் திட்டியதால் இராஜ நிந்தனை என்ற குற்றம் என்மீது சாட்டப்படவில்லை. நேரத்தைப் பார்த்தபோது விமானம் வெளிக்கிட பத்து நிமிடங்கள் மட்டும் இருந்தது. எனது  பாஸ்போட்டும் மனைவின் பாஸ் போட்டும் என்னிடமே இருந்தன. ஒரு வகையில் ஆறுதல். என்னை விட்டு எகிப்துக்கு அவளால் விமானம் ஏறமுடியாது. ஓடத்தொடங்கினேன். பல காலத்திற்கு பிறகு பரபரப்பில் ஓடினேன். நான் நினைக்கிறன், இரண்டு கிலோ மீட்டர் ஓடியிருப்பேன். ஒருவிதமாக இருநிமிடம் முன்பாக அங்கு சென்ற போது எல்லோரும் என்னைப்பார்த்தபடி பிளேட்டைத் திருப்பி ‘எங்கே போய்விட்டீர்கள்?’ என பரபரப்புடனும் கோபத்துடனும் கேட்டனர்.

‘உங்களைத் தேடித்தான் போனேன்’.

எனது மனைவி சொன்னாள். ‘படிக்காத பெண்ணைச் சீதனத்திற்காக  கட்டியிருந்தால் அப்படி நீங்கள் நினைத்திருக்கலாம்’. நான் அதற்கு மேல் பேசாமல் ஓடியதால் உடலிலும் பரபரப்பில் மனத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை  சீராக்கியபடி விமானத்தில் ஏறினேன்.
விமானம் அரேபிய வான்வெளியில பறந்தது. விமானம் பறக்கும்போது எகிப்தைப் பற்றி சிலரது கூற்றுகளை மனத்தில் அசைபோட்டேன்.
எனது வைத்தியசாலைக்கு வந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர்,

‘எகிப்து நல்ல இடம் ஆனால் ஆண்கள் பெண்களோடு மோசமாக நடப்பார்கள். பெண்களின் பின்புறங்களை கிள்ளுவார்கள். முறைத்து முறைத்து முலைகளைப் பார்ப்பார்கள்’.

அரேபிய நண்பன் சொன்னான், ‘எகிப்தியர்கள் வழிப்பறி, கொள்ளையில் கை தேர்ந்தவர்கள். அங்கு இதற்குப் பாடசாலையே நடத்துகிறார்கள்.’

வேறு ஒருவர் சொன்னார், ‘லஞ்சம் கொடுக்கவேண்டும். இரவில் தனியே நடக்கக் கூடாது’. இப்படியான பலரது அபிப்பிராயங்கள், புரிதல்களைச் சுமந்து கொண்டு நானும் சென்றேன்.

(தொடரும்)


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R