-March 19, 2014,  கொழும்பு தழிழ் சங்கத்தில் நடைபெற்ற 'துரைவி' அவர்களின் நினைவு தினத்தில் நினைவுப்புபேருரைக்காக வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.  ஊடகக்கல்லூரியில் (இலங்கை) சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் தேவகெளரி மகாலிங்கசிவம் அவர்களின் முகநூற் பதிவிலிருந்து மீள்பிரசுரமாகின்றது. நன்றி. -

கணித்தமிழ்: இணையத்தில் இலக்கியம் - சில குறிப்புகள்இணையத்தில் இலக்கியம் என்ற இந்த பொது தலைப்பில் நவீன ஊடக சூழலில் இலக்கியம் பற்றிய என் அவதானிப்புகளை முன்வைக்கிறேன்..குறிப்பாக இங்கு நவீன ஊடகங்கள் சார்ந்து நவீன இலக்கியங்களின் போக்கை கணிப்பிட முயன்றுள்ளேன். நவீன இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற கதை,கவிதை,நாவல் வகையறாகளின் வெளிப்பாடும் இருப்பும் இந்த தொழில் நுட்ப கலாசாரத்தில் எத்தகையதாக இருக்கிறது?நவீன ஊடகம் இவற்றில் எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது?என்பதற்கான விடைகளை தேடிய ஒரு ஆய்வாகவே இது அமையும். குறிப்பாக 1970 களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த ஆறு ஆண்டுகளாக விஸ்வருபம் எடுத்திருக்கும் சமூக வலைத்தளங்கள் (முகப்புத்தகம் 10ஆம்வருடம்) வரை இலக்கியம் பரிணமித்திருக்கிறது.இதனூடாக ஒரு இலக்கியகாரருக்கு அவரது ஒட்டுமொத்த எழுத்து சூழல் மாறியிருக்கிறது. ஒரு கதையை எழுதி இரண்டு பேரிடம் கொடுத்து சரிபார்த்து அல்லது வெகுஜன ஊடகத்தில் பிரசுரத்திற்கு அனுப்பி அது வெளிவந்து ,சிலவேளை வெளிவராமலும் இருக்கும் நிலையில் பின்னர் அதை நூலாக்கி அறிமுகப்படுத்தி ,வாசிப்புக்கு விட்டு ,விமர்சனத்துக்குள்ளாக்கி ஒரு மீள்ளுட்டத்தைப் பெறும் பொறிமுறை உண்மையில் பிரசவம்தான்.காலமும் பொறுமையும் அந்த இலக்கிய காரரின் சிந்தனைக்கே சிறைவைத்துவிடுகிறது.அடுத்த படைப்பிற்கு வெகுகாலம் எடுக்கிறது.

இணையத்தால் இந்த ஒட்டுமொத்த சூழல் இன்று மாறியிருக்கிறது. இதை ‘எண்ணிம இலக்கியம்’ (Digital literature) )இலத்திரனியல் இலக்கியம்(Electronic literature) என்று குறிப்பிடலாம்.புதிய தொழில் நுட்பத்தை அறிந்து இணையத்தை கையாளத் தெரிந்தவர்கள் அனைவரும் தமது சிந்தனைகளை எழுத்துக்களாக மக்கள் முன் வைக்கத் தொடங்கிவிட்டனர்.இந்த இணைய தொழில் நுட்பம் எண்ணங்களை பாரிமாறுவதற்கான ஒரு ஊடகம், என்பதற்கு அப்பால் இது ஒரு உயிரியாகவே பலருக்கும் ஆகிவிட்டது.தனது எல்லா சுக துக்கங்களையும் அதனுடன் பகிரத்தொடங்கிவிட்டனர்.பலரது நேரம் அதனுடன்தான் கழிகிறது.

இந்த புதிய சூழலில் எழுத்துக்களை முன்வைப்பவர்கள் பெரும்பாலும் புதிய தொழில் நுட்பம் தெரிந்த இளவயதினராக உள்ளனர் என்பதும் உலகளாவிய ரீதியில் செய்யப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.(18 முதல் 45 வரை)இது இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் களமாக உள்ளது.இது ஒரு புறமிருக்க, இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கனவே எழுத்தாளர்களாக முத்திரை பதித்தவர்கள் தமக்கான எழுது களத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இணையத்தளங்களையும் ,வலைப்புக்களையும் முகப்புத்தகத்தையும் பயன்படுத்திவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதை உற்பத்திசார் முறை மாற்றமாகவே கொள்ளலாம்.மரபார்ந்த ஊடகங்கள் மற்றும் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் எவ்வாறு சமூக ஊடகங்களை தமது உற்பத்தி நடவடிக்கைக்காக பயன்படுத்துகின்றனவோ அதேபோல் எழுத்தாளர்களாக இருந்தவர்கள் உற்பத்தி சூழலை மாற்றியுள்ளனர்:மாற்றவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.இதற்குள் சிற்றிதழ்களும் அடக்கம். அச்சில் வருகின்ற ஏராளமான சிற்றிதழ்கள் இணையப்பதிப்பாகவும் வெளிவருகின்றன.அதேவேளை இணைய இதழ்களாக மட்டும் வரக்கூயவையும் உள்ளன.திண்ணைதான் முதல் இணைய இதழாகக் கொள்ளப்படுகிறது.பின்னர் தமிழ் முழக்கம்,வரலாறு.கொம்,நிலர்சசாரல்,தங்கமீன் ,சொல்வளம்,வல்லமை, தமிழோவியம் (www. tamiloviam.com) திசைகள் (www.thisaigal.com), பதிவுகள் (www. pathivukal.com)என் பட்டியல் நீளுகிறது.இவையனைத்திலும் ஆக்க இலக்கியங்கள் வாசிப்பிற்கு வந்துள்ளன..இலக்கியம் பற்றிய வாத பிரதி வாதங்கள் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. அதே வேளை பல எழுத்தாளர்கள் தமக்கென பிரத்தியேக தளங்களையும் உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்புதிய சூழலின் தன்மையைப் பார்ப்போம்,மரபார்ந்த இலக்கிய உற்பத்தியில் ஒவ்வொரு செயற்பாடும் வெவ்வேறு களங்களிலே செயற்பட்டதும் கால அவகாசம் எடுத்துக்கொண்டதும் முக்கிய அம்சங்கள்.இங்கே எல்லாமே ஒரு தளத்தில்,ஒரே நேரத்தில் செயற்படுகிறது.அதாவது, எழுத்து – வெளியீடு – வாசிப்பு – விமர்சனம் – பின்னுட்டம். ஒரு கவிதையை முகப்புத்தகத்தில் எழுதிய அடுத்த கணம் வெளியீடு முடிந்து வாசிப்பு முடிந்து ‘விருப்பம் ‘ என பின்னூட்டம் வருகிறது.சில நிமிடங்கள் சில மணித்தியாலங்களில் விமர்சனமும் வந்துவிடுகிறது.கவிதையை எழுதியவர் அடுத்த கவிதைக்கு தயாராகி விடுகிறார்.அவரது சிந்தனை அடுத்த அடுத்த கட்டங்களுக்கு நகருகிறது.எல்லா இலக்கிய முயற்சிகளுக்கும் இந்த பொறிமுறை பொருந்துகிறது. காலம் கொஞ்சம் வேறுபடலாம்.

இந்த புதிய இணைய கலாசார சூழல் அல்லது இந்த பொறிமுறை செலவு குறைந்தது, சுதந்திரமானது. இதனால் இந்த பொறிமுறை அபரிதமான ஆக்கங்களை இலக்கிய உலகிற்கு தந்து.கொண்டிருக்கதிறது. நவீன இலக்கியம் என்ற வகையறாக்களை கடந்து புதிய வடிவங்களை இந்த சூழல் கோருகிறது. குறிப்பாக எழுத்தை ஆள உனக்கும் முடியும் என எல்லோரையும் உசுப்பிவிட்டுள்ளது.

இங்குதான் இலக்கியத்தில் வடிவம், தரம் சார்ந்த பிரச்சினைகள் எழுகின்றன. எழுதுவதெல்லாம் இலக்கியம் ஆகிவிடாது என ஒரு சாரார்,குப்பைகள் எல்லாம் இலக்கிய தரத்தை நாடி நிற்கின்றன என ஒரு சாரார், இலக்கிய வடிவத்திற்குள் இருக்க வேண்டிய சமூக விழுமியங்கள் வரம்புமீறுகின்றன என ஒரு சாரார் வேதனையுடனும் கோபத்துடனும் தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.எனவே இந்த சூழலை எப்படி புரிந்துகொள்வது?பார்ப்பது?

புதிய சூழலின் முக்கிய தன்மையாக இருப்பது ‘சுதந்திரகளம்’. எதையும் எழுதலாம் ;எவரும் எழுதலாம் ;எப்படியும் எழுதலாம் ,வாசிப்பு நடந்துகொண்டிருக்கிறது. நடந்தவை, நடப்பவை , நடக்கப்போகின்றவை என எவற்றையும் ஒவ்வொரு கணமும் பொதுமக்கள் முன் வைக்கமுடியும். கட்டற்ற எண்ண பதிவுகள்.முகநூல் இதற்கு முக்கிய சாட்சி. 10க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்கள் இன்று உள்ளன.இலங்கையில் 2013 எடுக்கப்பட்ட தகவலின்படி 1.5 மில்லியன் முகப்புத்தக பாவனையாளர்கள் உள்ளனர்.இவர்களில் 68 வீதம் ஆண்கள் 32 வீதம் பெண்கள் என ‘ஸ்ருடன்ற் சிறீலங்கா’ இணையத்தளம் குறிப்பிடுகிறது.இலக்கிய களத்தில் இந்த சுதந்திர எழுத்து முறைமை எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகிறது?

கணித்தமிழ்: இணையத்தில் இலக்கியம் - சில குறிப்புகள்முதலாவது , அதிகாரம் யாரையும் எந்த எழுத்தையும் இருட்டடிப்பு செய்யமுடியாது.இலக்கிய உற்பத்தி முறைமை ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது.அச்சு அறிமுகமானபோதும் அது ஜனநாயக உற்பத்தி முறையாகத்தான் பர்க்கப்பட்டது.ஆனாலும் அதில் சில அதிகார அரசியல் உண்டு.இங்கு இந்த இணைய சூழல் அவ்வாறானதல்ல.முற்றுமுழுதான தூய்மையான ஜனநாயக முறையிலான உற்பத்தி.யாரும் எழுதலாம். எந்த எழுத்தையும் யாரும் இருட்டடிப்பு செய்துவிடமுடியாது. இதனால்தான் பெண்களின் குரல் விழிம்புநிலைமக்களின் வெளிப்பாடுகள், என குரலற்றவர்களின் குரல்கள் வெளிவரத்தொடங்கின. பெண்ணியம் டொட் கொம்மில் போனால் 32 க்கும் மேற்பட்ட பெண்களின் இணையத்தளங்களை எம்மால் பர்க்க முடியும்.இது இன்னும் அதிகரித்திருக்கும். நவீன இலக்கியங்கள் -சிறுகதை கவிதை- இதுவரை பேசாத பொருளை பேசின.மொழியின் போதாமைகூட உணரப்பட்டது. இப்படி பேசுகின்றபேது எப்போதுமே பெண்களுடன் இருந்த அனுபவங்கள் உணர்வுகள் மக்களுக்கு புதிய சிந்தனைகளாக புதிய அனுபவங்களாக தெரிந்தது..சொல்லப்படாத செய்திகளாக அவை இருந்தன. சாதி மத வர்க்க நிலையில் அடக்கப்பட்டவர்களின் நிலையும் இதுதான். குரலற்றவர்களாக இருந்தவர்கள் பேசத் தொடங்கினர். இலக்கியத்திற்கு புதிய பொருள்களாயின அவை.அடுத்தது எதுவும் எழுதலாம்.எப்படியும் எழுதலாம் -உள்ளதை உள்ளபடி எழுதுதல் அதிகரித்திருக்கிறது. இலக்கியம், உள்ளதை உள்ளபடி புனைவுசார்ந்து செய்யப்படுவது.இங்கு இலக்கியம் புனையப்படவில்லை;செய்யப்படவில்லை.அப்படியே அனுபவ முன்வைப்பாக வெளிவருகிறது. இதை எப்படி பார்கலாம் ?மரபுசார் இலக்கிய ஆக்கம்,தனிமனித உணர்வை பொது தளத்திற்கு ஏற்றமாதிரி அல்லது பொதுமைப்பட்ட உணர்வு நிலைகள் மட்டுமே வாசிப்புக்கு வந்தன.இன்று தனிமனிதன் ஒரு சம்பவத்தில் தான் பெறும் உணர்வை,அனுபவத்தை வாழ்வை அப்படியே வாசிப்புக்கு முன்வைப்பதாக நிலைமை மாறியிருக்கிறது. அது இலக்கியமா?நான் நினைக்கிறேன்,ஆம்.இந்த மாதிரியான பதிவுகள் இலக்கியத்தில் ஒரு புதிய வடிவத்தை கோரியிருக்கிறது.இலக்கியம் என்றால் என்ன? என்பதற்கான புதிய அர்த்தத்தையும் கோருகிறது. சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதும் சாதாரணமானவனின் மனது ‘ கற்பனை கலக்காத கதைகள் என்றம் குறிப்பிட்டுள்ளார்..யோ கர்ணன் எழுதும் கதையல்லாத கதைகள் ,அனுபவங்கள் அத்தகையன. என நான் பார்க்கிறேன்.(இவர்கள் சிறகதைகள் கவிதைகளையும் எழுதுகிறார்கள்)அஸ்ரப் சிகாப்தீன் எழுதும் புதிய இலக்கிய கதைகள் அல்லது அவரது முகநூல் பதிவுகள் உண்மையை மறைமுகமாகத்தான் சுட்டுகின்றன. இத்தகைய எழுத்துக்களில் ஏற்றுக்கொள்ளத்தக்க, பெரும்பான்மைக்குரியதாக ,அல்லது இந்த குழுவிற்குரியது என்று சொல்லப்படத்தக்கதாக பொதுமைப்படுத்தும் பண்பு இல்லை. ஆனால் மனதை கட்டி இழுக்கும் ஆக்கங்களாக இவை உள்ளன.சமூக கருத்தியலில் அசைவை உண்டாக்குகின்றன.

இவ்வாறான பதிவுகளால் வாழ்வின்,மனிதனின், சம்பவத்தின் பன்மைத்துவ பண்புகள், குறிப்பாக சொல்லப்போனால் ஒரு மனிதனின் பல முகங்கள் ,சம்பவத்தின் பல கோணங்கள் வாசிப்புக்கு வருகிறது. இதனால் நல்லவை தீயவை என்ற கறுப்பு வெள்ளை தன்மை உடைபடுகிறது.ஒருவர் தனது கோணத்தில் இருந்து எழுதும் உண்மைகள்தான் இறுதி உண்மையாக இருக்காது.மற்றவர் தன்பக்க உண்மையை பதிலாக எழுதுகின்றபோது உண்மையின் முகங்கள் பலவாகிவிடுகின்றன.ஊடக தர்மத்தின் மிக முக்கிய கோட்பாடும் இதுவே. செய்தி உண்மையாக இருக்க வேண்டும் பக்கம் சாராமல் இருக்வேண்டும்.இதனால் ஒரு செய்தியில் பலபக்க கருத்துகள் பதிவாகவேண்டியுள்ளன.அந்த வகையில் பலபக்க கருத்துக்களைக் கண்டறிவதற்கு.இணையம் ஊடகவியலாளர்களுக்கு மிகப்பெரும் வரபிரசாதம்.ஆனால் இணையம் ஊடகவியலாளர்களுக்கு நம்பிக்கையான ஒரு மூலம் அல்ல.ஏனெனில் உண்மைபோன்ற பொய்கள் அதிகமாகவே உள்ளன.

இலக்கியத்தைப்பொறுத்தவரை இன்றைய முன்வைப்புகள் வாழ்வை உண்மையாக அப்படியே முன்வைப்பது என்றாகிவிட்டது.இலக்கியம் சமூகத்தின் கண்ணாடியல்ல ,சமூகத்தின் வரலாறு,தனிமனித வரலாறு. இன்று முகப்புத்தகத்தில் இடும் பதிவுகளைப்பார்க்கும்போது தனிமனித வாழ்க்கை வரலாறு அதனூடனான அரசியல் வரலாறு ,சமூக வரலாறு என்பன இரத்தமும் சதையும் கலந்த புதிய இலக்கிய வடிமாக முன்னிற்கிறது.ஈழத்து அனுபவம் இதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.இதுவரை இருந்த எல்லா மனிதகுல புனித எண்ணங்களை அப்படியே புரட்டிபோடுகிறது. இவைதான் இணையம் உற்பவித்த முக்கிய இலக்கியவடிவமாக நான் கருதுகிறேன். இலக்கியத்தை குடுவைக்குள் அடக்கி பார்க்கமுடியாத தன்மையை இவை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இந்த வாசிப்புக்கான சுதந்திரமும் பின்னூட்டலுக்கான சுதந்திரமும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான இடைவெளியை குறைத்திருகத்கிறது.அதேபோல் விமர்சகர்கள் என்ற தனியலகு நெகிழ்வடைந்துள்ளது.அதே வேளை இலக்கிய புரிதல் சார் வேறுபாடுகளால் குறைபாடுகளால் அபத்தமான சர்ச்சைகளை தோற்றுவிக்கும் அபாயமும் இதில் உண்டு.

அடுத்து இந்த புதிய சூழலில் எழுத்து – வெளியீடு –விளம்பரம் மூன்று தளத்திலும் எழுத்தாளர் ஒரே நேரத்தில் செயற்படுகிறார். ஒவ்வொரு எழுத்தாளர்களும் தத்தமக்கு என உருவாக்கிவைதிருக்கும் இணையத்தளங்கள் ,வலைப்பூக்கள் ,முகப்புத்தக பக்கங்கள் இங்கே குறிப்பிடத்தக்கன. இதில் தனது ஆக்கத்தைபதிவு செய்து முடிந்தவுடனே ஒரு பொத்தானை அமுக்கினால் வெளியீடும் விளம்பரமும் நடந்து முடிகிறது.இந்த தொழிற்பாடு இலக்கியகாரருக்கு புது உற்சாகத்தை அளிக்கிறது.அடுத்த வெளியீடுபற்றி சிந்திக்க தொடங்கி விடுகிறார்.இணைய சூழலை நன்கு பயன்படுத்தும் ஒரு இலக்கிய காரருக்கு ஆக்க இலக்கியத்திற்கு பயன்படும் சொற் தொகுதி பொருட் தொகுதி இரண்டும் விரிவடைந்திருக்கும்.உலகெங்கும் உள்ள தழிழ் மக்களை அவர்களின் வாழ்வை ,சுக துக்கங்களை தெரிந்துகொள்ளும் யதார்த்தம் இந்த சூழலில் இருக்கிறது. 2020 இல் உலகமே online இல் நிற்குமாம் ஆய்வு கூறுகிறது.

கணித்தமிழ்: இணையத்தில் இலக்கியம் - சில குறிப்புகள்சரி புதிய குரல்கள் புதிய இலக்கிய வடிவம் என நவீன ஊடகம் ஏற்படுத்திவிட்டிருக்கும் இந்த சூழலில் அபரிதமான வரவுகள் உண்டு.எனவே புற்றீசல் போல் இணையத்தில் வரும் இலக்கியங்கள் நின்று நிலைக்குமா? இக்கேள்விக்கு பதில் இன்று தரம்சார்ந்து சொல்லமுடியாது. கம்பராமாயணத்தைப்போல், திருக்குறளைப்போல்,புதுமைப்பித்தனின் கதைகளைப்போல், அல்லது எஸ்.போ இங்குள்ள டொமினிக் ஜீவா ,நீர்வை,திக்வலைக்கமால் போன்றோரைப் போல் இன்றைய கதைகள் நின்று நிலைக்குமா?என்பதுதான் பலரது கேள்வி. ஏற்கனவே இங்கு பட்டியலிட்டவை தொடா்ந்ம் நின்று நிலைக்க வேண்டுமென்றால் எண்ணிமப்படுத்தவேண்டிய சூழல் இன்று உருவாகிவிட்டது. அது நடைபெற்றுக்கொண்டுமிருக்கிறது.. இலங்கை நூல்கள் 'நூலகம் நிறுவனத்தினரால் (noolaham.org) எண்ணிமப்படுத்தப்படுகிது. ஏராளமான பழந்தமிழ் இலக்கியங்கள் நவீன இலக்கியங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளன.  ஆகவே இன்று இணையத்தில் வரும் எழுத்துக்கள் நின்று நிலைப்பதற்கு இன்றைய ஆக்க எழுத்தில் ஏதோ ஒரு சொல் அடுத்த அடுத்த சந்ததிக்கு தேவைப்பட்டாலே அது நின்று நிலைக்கும்.தேடுபொறிக்குள் போடப்போகும் சொல் இலக்கியகாரரின் பெயராகவோ கதையின் பெயராகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை.எனவே நிலைப்பதெல்லாம் தரமானது, அழிவதெல்லாம் தரமற்றது என்ற கதைக்கு இந்த இணைய சூழலில் இடமில்லை.இந்த சூழலை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன்.

அடுத்து இணைய வாசிப்புக்கு எற்றதாக மொழியும் அளவும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த சூழல் ஏற்படுத்தியுள்ளது.தளங்களில் எவ்வளவு நீளமாகவும் எழுதலாம்.பத்திரிகைக்காரரின் கொத்து வெட்டுக்குள் அகப்படத் தேவையில்லை.ஆனால் வாசகர் வட்டத்தை அல்லது பயனாளர்களை பிரமாண்டமாக கொண்டுள்ள இன்றைய சமூக ஊடகங்கள் வாசிப்புக்கான, எழுதுவதற்கான அளவை கோருகிறது.அதற்கேற்றால் போல் முகப்புததகத்தில் கதை கவிதை எழுதப்பட்டால் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை எழுத்தாளர் தீர்மானிப்பார்.அது பெரிதாக இருக்கலாம், ஆனால் வாசகா்கள் படிக்க வேண்டுமானால் அதை எப்படி முன்வைக்க வேண்டும், என்பதை 'எழுத்தாளா் இப்படித்தான் தீா்மானிக்க வேண்டும்' என இந்த புதிய ஊகம் அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது.அந்த பரீட்சார்த்த நடவடிக்ககைகளில் ஒன்றாக முகப்புத்தகத்தில் கதை சொல்லடா தழிழா என்ற ஞானதாஸ் அவர்களின் உருவாக்கத்தை கூறலாம்.அதில் புதியவவை மட்டும்ல்லாமல் ஏற்கனவே உள்ளவையும் முன்வைக்கப்படுகிறது. முன்வைக்கும் முறை மாறியுள்ளது. இதே வேளை 'ருவிற்றரை' எடுத்தால் ஒரு தடவையில் 140 எழுத்துக்களில் மட்டும்தான் பதிவு செய்யமுடியும்.இன்று செய்தி அளித்தலுக்கு உலகெங்கும் பிரபல்யமாக இருக்கும் ஒரு சமூக வலைத்தளம் இது.இதற்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கலாம்.திருக்குறள் என்ற இலக்கிய வடிவத்தின்தன்மையை இந்த வலைத்தளம் கோருகிறது.அதற்காக திருக்குறள் எழுதமுடியாது. எனவே புதிய இலக்கிய வடிவம் ஒன்ற தோன்றுவதற்கான வாசல் இதனூடாக திறக்கப்பட்டுள்ளது என்று கொள்ளலாம்.

அடுத்து முக்கியமாக அறம்சார் பிரச்சினைகL.... சர்வதேச புலமைச்சொத்து சட்டத்தையோ பதிப்புரிமையையோ அறியாதவர்களாகதான் பலர் இருக்கின்றனர்.இந்நிலையில் எமது சூழலில் இணைய வெளியீட்டுக்கான சட்ட பாதுகாப்புக்கு இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. .இந்த புதிய சூழலை சட்டத்தில் தற்போதுதான் உள்வாங்கிக்கொணடிருக்கின்றனர்.எனவே சட்டத்தை விடுங்கள்.எழுத்தை ஆள்பவர்கள் வேறு நபரின் எழுத்தை எந்த கூச்சமும் இல்லாது எப்படி தனதாக்கலாம்?அது அடிப்படையில் அறம்சார் பிரச்சினை.இந்த சுதந்திர களம் எதையும் எங்கிருந்தும் பார்த்து எடுக்க அனுமதித்திருக்கிறது.இந்த அனுமதி எழுதப்பட்ட நபரின் பெயருடன் இணைத்த அனுமதியாகத்தான் ள்ளவேண்டும்.முகப்புத்தகத்தில் யாரே எழுதிய கவிதைகளை தன்கவிதைகளாக பதிவிடும் பலர் இதுபற்றி கவனிக்க வேண்டும்.

அதே நேரம் தனிமனித அவதூறுகள் சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளன.அவை குற்றம் சார்ந்தவை.அதையும் தாராளமாக செய்வதற்கு இந்த இணைய சூழல் வாசல்திறந்துள்ளது.அவதூறை விடுத்து அறம் பிழைப்போரை நிறுத்திவைத்து கேள்விகேட்கும் சூழ ல் உருவாக்கபடவேண்டும்.

எனவே இந்த புதிய இணைய சூழல் இலக்கியத்திற்கு புதிய இரத்தத்தை பாச்சும் அதேநேரம் புதியபரிணாமத்தையும் பல பரிமாணங்களையும் இலக்கியத்தில் ஏற்படுத்தியுள்ளது.புதுய சூழல் பற்றியதான புாரிதலும் பயன்படுத்துகையும் இன்னும் தமிழில் அகலிக்க வேண்டும்

நன்றி: தேவகெளரி மகாலிங்கசிவத்தின் முகநூற் பதிவுகள்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R