பேராசிரியர் செல்வா கனகநாயகம் ஓரு சில விஷயங்களில் மட்டும் கருத்து முரண்பாடு கொண்டு நாம் விமர்சித்தவர்கள் அகால மரணமடைகிறபோது நமக்கு ஏற்படும் உணர்வு முதலில் குற்றவுணர்வாகவே இருக்கிறது. அவர்கள் நாம் கண்டு பேசி நம்மை உபசரித்தவர்கள், நம்மோடு கனிவுடன் உரையாடியவர்கள் என்கிறபோது நமது விமர்சனம் அவர்களது இறுதிநாட்களில் அவர்களைச் சிறிதேனும் துன்புறுத்தி இருக்குமா என நினைக்கிறபோது எழுதுவதையும் விவாதிப்பதையும் சிந்திப்பதையும் கூட விட்டுவிடலாமா என்று சமயத்தில் நமக்குத் தோன்றும். தென் ஆசிய இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட கனடிய நண்பரான செல்வா கனகநாயகத்தின் மரணத்தைக் கேள்வியுற்றபோது இவ்வாறான மனநிலைக்கே நான் ஆட்பட்டேன்.

அவருடன் விரிவாகப் பேசுவதற்கான இரண்டு தருணங்கள் எனக்கு வாய்த்தன. இலண்டன் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பவென இரண்டு மணித்தியாலங்கள் அவருடன் அவரது ஆய்வு நூல்கள் குறித்து உரையாடியிருக்கிறேன். அந்த உரையாடலுக்கெனவே அவரது நூல்கள் அனைத்தையும் இரு வாரங்களில் நான் வாசித்திருந்தேன். அன்று நான்கைந்து மணிநேரங்கள் என்னுடன் இருந்தார். தொரான்றோ பல்கலைக் கழகத்தில் நடந்த தமிழியல் கருத்தரங்கில் ஈழ நாவல்கள் பற்றிய எனது கட்டுரை சமர்ப்பிப்பதற்கான பயணத்தை தனிப்பட்ட முறையில் அவரும் ‘காலம்’ செல்வமும்தான் பொறுப்பெடுத்துச் செய்தனர். அந்த நிகழ்வுக்கும் வந்திருந்து விவாதங்களைத் துவக்கி வைத்தவரும் அவர்தான். நான் மொழிபெயர்த்த மஹ்முத் தர்வீஷ் கவிதைகள் நூல் குறித்தும் அவர் என்னுடன் தனிமையில் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அவரது கல்லூரிக்கால நண்பரும் இலங்கை இலக்கியவாதியும் அரசியல்வாதியுமான ரஜீவ விஜேசிங்கவுடன் இணைந்து அவர் கொண்டுவந்த சமகால இலங்கைக் கவிதைகள் தொகுப்பு மிகுந்த அசமத்துவம் கொண்ட அரசியல் மறைதிட்டம் கொண்டது எனும் விமர்னத்தை சில வாரங்கள் முன்புதான் நான் எழுதியிருந்தேன். அந்நூலில் அவரது ஈழக்கவிதை தொடர்பான அரசியல் நீக்க மொழியில் எழுதப்பட்ட அவரது கட்டுரை சுயதணிக்கை கொண்ட கட்டுரை என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன். கல்வித்துறைசார் ஆய்வாளராக, ஒரு படிப்பாளியாக எனது விமர்சனத்தை அவர்  தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார் எனும் மனச் சமாதானத்தையே அவரது மரணத்தைக் கேள்விப்படும் இத்தருணத்தில் எனக்குள் நான் போர்த்துக் கொள்கிறேன்.

அவரது முக்கியமான நூல்களில் ஒன்று ‘கான்பிகரேஷன்ஸ் ஆப் எக்ஸைல்’. விக்ரம் சேத், தாரிக் அலி, பாப்சி சித்வா, சசி தாரூர் போன்ற தென் ஆசிய எழுத்தாளர்களுடனான அவரது நேர்முகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஈழக் கவிதைகளைப் பரவலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் செல்வா கனகநாயத்தின் இலக்கிய அக்கறைகள் புலப்பெயர்வும், கனடாவில் வாழும் ஆசிய ஆப்ரிக்க பூர்வகுடிக் கனடிய எழுத்தாளர்களின் அனுபவமான இரண்டு உலகங்களில் வாழ்வதான அனுபவத்தின் உடன்பாடும் முரண்பாடும் என்பதாகவே இருந்தன. படிப்பாளியும் கனிவான மனிதரும் ஆன, எப்போதுமே புன்னகையை உதட்டில் தேக்கி வைத்திருப்பவரும் ஆன செல்வா கனகநாயகத்திற்கு எனது மனமார்ந்த அஞ்சலி. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தார்க்கும் அவரை நேசித்த அவரது நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா அவரது எழுத்துக்களில் அதனது சகல முரண்களுடனும் வாழும். அதன் வழி அவர் வாழ்கிறார்.

நன்றி: http://yamunarajendran.com/?p=1502


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R