முன்னுரை:

ஆய்வுக்கட்டுரை!

இலக்கியங்களிலும் புராணங்களிலும் பலவகை உலகங்கள் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் நாம் உலகம் தவிர வேறு எவற்றிலும் புலன் உணர்வுகளோடு வாழ இயலும் என்று அறிவியல் அடிப்படையிலும் சான்றுகள் அடிப்படையிலும் நிருவப்படவில்லை. ஆயின் இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதர்களுக்கு வேறொரு உலகத்தைக் கட்டமைத்துத் தந்திருக்கிறது. இதில் வசதியான செய்தியாதெனில் ஞானிகளோ அறிவியல் விஞ்ஞானிகளோ மட்டுமல்லாது சாதாரண மனிதர்கள் யாவரும் அவ்வுலகில் உலாவலாம், தம் இருத்தலை பதிவு செய்யலாம், பிறக்கு அறிவிக்கலாம், பிறறோரு தொடர்பாடலாம். அதுதான் தகவல் தொழில்நுட்பம் நமக்கு வழங்கியிருக்கும் கொடையான மெய்நிகர் உலகம்(Virtuval world) ஆகும். கட்டற்ற களஞ்சியமான விக்கிப்பீடியா “மெய்நிகர் உலகம் (virtual world) என்பது உலகில் உள்ள மக்கள் பலரும் கணினி அடிப்படையிலான ஒப்புச்செயலாக்கச் சூழலில் ஒருவரோடு ஒருவர் செயல்புரிதல் ஆகும்” என்று வர்ணிக்கிறது. இந்த உலகமானது மனிதர்களுக்குக் கிடைத்த வரமா? சாபமா? என பலதரப்பிலும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, இவ்வாய்வுக் கட்டுரையில் மெய்நிகர் உலகில் மனிதனின் அடையாளங்கள் குறித்து விவாதிக்கின்றது.

அடையாளங்கள்:

அடையாளங்கள் என்பதைத் தனிமனித அடையாளம் சமூக அடையாளம் என இரு வகையாகக் கொள்ளலாம். மெய் உலகில் மனிதர்கள் அல்லது இனக்குழுக்கள் தம் அடையாளங்களை வழக்காறுகள், பண்பாடு, கலாச்சாரம் என கட்டமைத்திருக்கின்றனர். அதனை தலைமுறை தலைமுறையாக எடுத்துச்செல்ல, இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலிய எழுத்து மொழி ஊடகங்களையும், நாட்டுப்புற நம்பிக்கைகள், கதையாடல்கள், பாடல்கள் என பேச்சு மொழி ஊடகங்களையும் அன்றாட வாழ்வியலில் மதம் சார்ந்த நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களையும் துணைகொண்டு பாதுகாத்திருக்கிறார்கள். மெய்நிகர் உலகில் எழுத்துமொழி, பேச்சுமொழி காட்சிப்பதிவுகள், நகைமொழிகள் முதலியவற்றின் வழியாக மனிதர்கள் தங்கள் தொடர்பாடலை நிகழ்த்தி அடையாளங்களைப் பதிவு செய்கின்றனர். கட்டற்றக்களைக்களஞ்சியமான விக்கிப்பீடியா “நகைமுகம் அல்லது புன்னகை தவழும் முகம் அல்லது ஸ்மைலி (☺/☻) எனப்படுவது, மனித முகத்தின் அழகிய புன்னகையை குறிக்கப் பயன்படுகின்ற உணர்ச்சித்திரம் (emoticon) ஆகும். இது பொதுவாக, மஞ்சள் நிறமுடைய (வேறு பல நிறங்களும் பயன்படுத்தப்படுவதுண்டு) வட்டத்தில் (அல்லது கோளத்தில்) கண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கரிய நிற புள்ளிகளும் புன்னகை பூக்கும் வாயை குறிப்பதற்கு வளைந்த வடிவமுடைய கரிய நிற வளைகோடொன்றும் அமைந்த நிலையில் காணப்படும். மேலும், ஸ்மைலி என்ற சொல்லே சிலவேளைகளில், அனைத்துவிதமான உணர்ச்சித்திரங்களையும் (emoticon) குறிக்கப் பயன்படுத்தப்படுவதுண்டு” என்று விளக்குகின்றது.

மெய்நிகர் உலகில் செல்லப்பயன்படும் கருவிகள்:

தற்காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியில் மெய்நிகர் உலகம் செல்லப்பயன்படும் கருவிகளை மனிதர்கள் தங்கள் கரங்களிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார்கள், அதாவது கணினி மற்றும் அலைபேசி. கட்டற்றக்களஞ்சியம் விக்கிப்பீடியா” கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன” என்று விளக்கம் தருகிறது.  இந்தக் கருவிகளோடு மெய்நிகர் உலகமான இணைய வெளியை இணைத்துக்கொண்டால் போதுமானது. இக்கட்டுரையில் கணினிகொண்டு மெய்நிகர் உலகம் செல்லும் முறைமட்டுமே பெரும்பாலும் விவாதிக்கப்படுகின்றது.

மெய்நிகர் உலகின் உலாவல் முறைகள்:

இணைய தளங்கள், , இணைய முகவரிகளைக் கண்டறிய உதவும் தேடுபொறிகள் இவற்றின் வழியாக மனிதர்கள் மெய்நிகர் உலகில் உலாவலைச் செய்யலாம். இணையதளங்கள் அதன் அமைப்பு, பயன்படுதன்மை இதனைக் கொண்டு சில வகையாகப் பிரிக்கின்றனர்.

அவை, சமூக வலைதளங்கள், வணிக வலைதளங்கள், வலைபூக்கள், விளையாட்டுத் தளங்கள், செய்தி ஊடகத் தளங்கள், பொழுதுபோக்குத் தளங்கள், கல்விதளங்கள், வேலைவாய்ப்புத் தளங்கள், துறைசார்ந்த தளங்கள், நிறுவனம் சார்ந்த தளங்கள் எனப் பலவகைபடும்.

மொழி அடையாளங்கள்:

மெய்நிகர் உலகின் கருத்தாடலில் இயற்கை மொழியின் எழுத்துமொழி பெரும்பங்கை வகின்றது. அதன்பின் புகைப்படங்கள், காணொலிகள் இறுதியாக மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நகைமுகங்கள் பங்குவகிக்கின்றன. ஆகவே, இயற்கை மொழியை மெய்நிகர் உலகில் கொண்டுசெல்லவேண்டியது மனிதர்களுக்கி முதன்மைத் தேவையாகிறது. ஆகவே, மனிதக் குழுக்கள் தங்கள் இயற்கைமொழியை பொறிமொழி வழியாக உட்செலுத்தி மெய்நிகர் உலகில் தொடர்பாடலை நிகழ்த்துகின்றனர். உலகின் பல்வேறு மொழிக்குழுவினரும் தங்கள் மொழியை மெய்நிகர் உலகில் கொண்டுசெல்ல தொடர்ந்து முயன்றதின் விளைவாகப் பல்வேறு சிக்கல்களும் இறுதியாக சிக்கல் தீர்வாக மொழியின் ஒருங்குறி அமைப்புமுறையும் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ் மொழியிலும் ஒருங்குறியீட்டுத் தன்மைபின்பற்றப்பின்பே சிக்கல் தீர்ந்தது. “தொடக்கத்தில், தமிழ் இணையத் தளங்களில் பல்வேறு எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததில், பல்வேறு சிக்கல்கள் இருந்தன. எழுத்துறுவை கட்டாயமாக பதவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது இணையத்தளம் இயக்கு நேர எழுத்துரு (Dynamic Font) தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். இதிலுள்ள மிகப் பெரிய சிக்கல், இயக்குநேர எழுத்துரு பயன்படுத்தப்பட்ட கோப்புகளை தொடர்பிலா (Offline) முறையில் படிக்க முடியாது. இதனால், தமிழ் இணையப் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடும் படியாக இல்லை. இந்த தருணத்தில் உலக நாடுகள் மொழிகளுக்கெல்லாம் கணனியில் ஒரு பொதுவான வடிவத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் உருவானது. பிரசித்தி பெற்ற உலக மொழிகளின் அட்டவணை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். அதில், அம்மொழிகளுக்கென, பிரத்தியேகமாக ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதில் தமிழுக்கென குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கியுள்ளனர். அதுதான் ஒருக்கீட்டு எழுத்து(Unicode) . இதனால் எழுத்துருவை பதவிறக்க வேண்டுமென்ற அவசியமுமில்லை. எல்லா இயங்குதளங்களிலும் (Operating System), எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாக படிக்கவும் முடிகிறது. (http://www.thinakaran.lk/vaaramanjari/2010/0) இவ்வாறு உலக மொழியினங்கள் அனைத்தும் சேர்ந்து முயன்று மெய்நிகர் உலகில் தங்களுக்கான மொழி அடையாளத்திற்குத் தீர்வு கண்டுள்ளன. ஆனால்,” கணினித் தொழில் நுட்பம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட காரணத்தால் கணினியின் செயல்பாட்டை அதன் நுணுக்கத்தை முழுமையாக உணராதவர்கள் எளிதில் பயன்படுத்தக் கணினிக்கென ஒரு கணினி மொழி ரோம வரிவடிவில் உருவாக்கப்பட்டு ரோம வரிவடிவில் அமைந்த மொழிகளில் உள்ள வளங்களை உள்ளீடு செய்யவும் செயலாற்றவும் வெளியிடவும் ஆங்கிலத்தை ஒத்த கணினி மொழி ஒரு சில இலக்கண விதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுக் கணினிக்குக் கட்டளையிடச் செயற்கை மொழிகளை உருவாக்கி மென்பொருள் உருவாக்கப் பயன்படுத்திய காரணத்தால் தொடக்கத்தில் இருந்து அண்மைக்காலம் வரை கணினி செயல்பட ரோம வரிவடிவமே பெரிதும் பயன் படுத்தப்பட்டது. ஆங்கில மொழிபோல் தோற்றம் கொண்டு ஆங்கில இலக்கண விதிகள் சிலவற்றின் அடிப்படையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதால் கணினி ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்களால் பயன்படுத்தப்பட்டது.”

(https://groups.google.com/forum/#!topic/vallamai/ShDBxqGKAQ8)

தற்சமயம் உலகின்பெரும்பான்மை மொழிகள் ஆங்கிலமொழிப் பின்புலத்தில் தங்கள் மொழியை இடைமுகப்புமொழியாகக்(Interface Language) கொண்டு செயல்படுகின்றன. செம்மொழியான தமிழ்மொழிக்கும் இந்த அவலநிலை என்னும் பொழுது மிகவும் வருந்தத்தக்கது.

ஆயினும், “தங்களின் மொழியின் சிறப்பை அறிந்த பிரெஞ்சு அறிவுலகமும் புலம் பெயர்ந்த சீனர்களும் பொதுவுடமை ஆட்சியில் இருந்த சோவியத் ரஷ்யாவும் தங்களுக்கென ஆங்கிலம் அல்லாத கணினிக்கான வரிவடிவை உருவாக்கிக் கொண்டது கணினி வரலாறு சுட்டிக்காட்டும் பாடம்.  அதன் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கணினிக்கான வளங்களை ஆங்கிலம் அல்லாத மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்தனர்”.

(https://groups.google.com/forum/#!topic/vallamai/ShDBxqGKAQ8)

மேற்கண்ட தகவலிலிருந்து மெய்நிகர் உலகின் மிகப்பெரும் அடையாளம் மொழி என்பதை உணரவேன்டும்.

தனிமனித அடையாளங்கள்:

தனிமனிதர்கள் தங்கள் தாய்மொழியைக்கொண்டு உலாவலை நிகழ்த்த வாய்ப்புகிடைத்தமையால் அதிகம் உள்நுழையத் தொடங்கினர். அவர்களின் வரவினை தக்கவைக்கும் விதமாக சமூக வலைத்தளங்கள் கட்டமைக்கப்பட்டன. சமூக வலைத்தளங்கள் உலக அளவில் வரும் இத் தனிநபர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகப் பாவித்து, அவர்களைத் தங்கள் தளத்தின் வணிக விளப்பரங்களைப் பார்வையிட வைத்தல் வழியாகத் தங்கள்ப் பொருளீட்டலைச் செய்துகொள்கின்றன. சான்றாக இன்றைக்குத் தமிழகச் சூழலில் பிரபலமாக இருக்கும் முகநூலினைக் குறிப்பிடலாம். இவ்வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவக்கவும் வரவினை அதிகப்படுத்தவும் தங்கள் தளத்தில் இலவசமாக கணக்கினைத் தொடங்க அனுமதிக்கின்றன. மேலும், தனிநபர் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு அது காலக்கோடு என வழங்கப்படுகின்றது. இது தவிர தங்கள் விருப்பம்போல் ஒரு புதிய பக்கத்தினைத் தொடங்கவும் அனுமதிவழங்கப்ப்டுகின்றது. இது ஒரு தனிநபரின் வலைப்பூபோல முகநூலில் செயல்படுகின்றது. மேலும், தங்கள் சிந்தனை ஒத்த கருத்தாடலை நிகழ்த்து குழுவை உருவாக்கவும் அதனை நிர்வகிக்கவும் பிற நபர்களை அக்குழுவில் இணைக்கவும் அனுமதிக்கின்றது. இது மெய் உலகின் தேநீர்க்கடை கூட்டம் போன்றது. இங்கே, அக்கம்பக்கத்திலும் அவ்வூரில் உள்ளோர் மட்டுமே கலந்துகொள்வர். மெய்நிகர் உலகில் , மெய்யுலகின் எந்த முனையிலிருந்தும் காலம் நேரம் கடந்து கலந்து கொள்ளலாம். காலக்கோடு நம் வீட்டுத் திண்ணை போல நண்பர்களை அழைத்துக் கருத்தைப் பறிமாறலாம். யாரை அழைக்க வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அவர்களைத் தடுக்கலாம். இங்கே தனிமனிதர்கள் தங்களின், மதம், சாதி, இனம், மொழி, தனிமனித விருப்பங்கள், இலக்குகள், சமூக விழாக்கள், வழக்கங்கள், வீட்டு நிகழ்வுகள், பொருளாதாரநிலைகள், அரசியல் நிலைப்பாடுகள், சண்டை சச்சரவுகள் எனப் பல்வேறு வகையில் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தலாம். இந்த அடையாளப்பதிவுகளோடு ஒத்துப் போகிறவரும் இதில் கலந்துகொள்கின்றனர். தங்களுக்கான இணை தேடலிலும் தனிநபர்கள் சமூக வலைத்தங்களைப் பயன்படுத்தத் தவறவில்லை. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பாலியல் தேவையுடையோரும் இத்தளங்களின் வழியே தங்கள் கருத்தொத்தோரைக் கண்டறியத் தலைபடுகின்றனர். ஆயின் இம்மெய்நிகர் உலகில் தனிமனிதர்கள் வெளிக்காட்டும் அடையாளங்கள் உண்மைதான் என்று சொல்வதற்கில்லை.  ஒரே நபர் இம்மெய்நிகர் உலகில் வெவ்வேறு அடையாளங்களோடு உலாவ வாய்ப்பு உள்ளது.

மேலும் , தனிநபர்கள் அவர்களே சுயமாகக் கட்டணம் செலுத்தி நேரத்தையும் இடத்தையும் இணையவெளியில் வாங்கித் தங்களுக்கான இணையதளங்களையும் நிர்வகிக்கின்றனர். இவர்களும் தங்களுக்கான வாடிக்கையாளர் வருகையைத் தங்களின் அறிவுத்திறத்தால் உருவாக்கப்பட்ட கருத்துப்பொதிகளால் வரவழைக்கின்றனர். இவர்களின் இணையப்பக்கங்களில் வடிக்கையாளர் வருகை அதிகமானால், விளம்பரதாரர்கள் தேடிவந்து விளம்பர இடம்பெற்றுச் செல்லுவர்.

சமூக அடையாளங்கள்:

உலக அளவில் ஒவ்வொரு சமூகக் குழுக்களும் தங்களின் மெய்யுலக அடையாளகளை இணைய வெளியின் அனைத்து வாய்ப்புகளிலும் பதிவுசெய்கின்றனர். சான்றாக, தமிழீழப் போராளிகள் அல்லது அக்கருத்தியலில் உடன்பாடுடையோர் தங்களின் கருத்துக்களைத் தனித்த தளங்களிலும், சமூக தளங்களிலும் அடையாளப்படுத்திப் பரவலை நிகழ்த்துகின்றனர். சான்றாக, “தமிழ்த்தேசியம், தமிழ்மொழி, தமிழ்க்கலாச்சாரம் என்ற நடைமுறை சமூக அரசியல் வாஞ்ஞைக்கு பொருள்படக்கூடிய தமிழ் பதம் தமிழியம் என்பதாகும். தமிழர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு கல்வி, மருத்துவம், குடியிருப்பு, தொழில் என்பன சிறப்பாக அமைய தமிழியம் என்ற பதத்தின் செயற்படுதன்மை உதவியாக அமையும். அடுத்து தமிழ்மொழியின் உயிர்ப்பினை தொடர்பாடல் மொழி, தொழில்நுட்ப மொழி, கலாச்சார மொழி, சமயமொழி என்பனவற்றில் பிரதிபலிக்கவும் தமிழியம் என்ற பதத்தின் செம்பணியுதவும்”( http://www.tamilwin.com/mshow-RUmryBScNWkq7.html) என்று ஒரு இணையதளம் தங்கள் அடையாளத்தைப் பதிவிடுகின்றது. இவ்வாறே வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மொழிக் குழுவினர், மதக்குழுவினர், அரசியல்க் குழுவினர் என மெய்யுககின் அனைத்துக் குழுவினரும் தங்களின் அடையாளங்களைப் பதிகின்றனர்.

மெய்நிகர் உலகின் சிக்கல்கள்:

1. நேரத்தையும் இடத்தையும்( time and space ) விலை கொடுத்து ஒரு தனிநபரோ குழுவோ வாங்கியிருந்தாலும் நம்முடைய தனிநபர் பாதுகாப்பு என்பதை இழக்கின்றோம். நம்மைக் குறித்த அனைத்துத் தரவுகளும் நமக்கு இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் வசம் இருக்கும்.

2. சமூக வலைதளங்களில் தனிமனித அடையாளங்கள் மூன்றாவது நபரால் மாற்றப்படலாம், மறைக்கப்படலாம், களவாடப்படலாம். முகநூல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் நிலைபதிவுகளை மாற்றிச் சோதனைக்கு உட்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து விவாதிக்கும் ஒரு தளம் கீழ்க்கண்டவாறு கருத்துரைக்கின்றது.” “தொலைக்காட்சி விளம்பரங்கள் முதல் நூற்றுக் கணக்கான வழிகளில் நமது உணர்ச்சிகளை கார்ப்பரேட்டுகள் தம் விருப்பப்படி வளைப்பதற்கு இந்த முடிவுகள் பேஸ்புக்கால் விற்கப்படும் என்று உறுதியாக நம்பலாம். மகிழ்ச்சி, துன்பம் இன்ன பிற மனித மன உணர்வுகளை நண்பர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதாக நீங்கள் பயன்படுத்தும் வசதி, உங்கள் மன உணர்வுகளை செயற்கையாக தூண்ட முடிவதையும், உங்கள் மனநிலையின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? மேட்ரிக்ஸ் படத்தில் வருவதைப் போல மெய்நிகர் உலகின் மாய உணர்ச்சிகள் உங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை ஃபேஸ்புக்கின் சோதனை நிருபித்திருக்கிறது. இனி நீங்கள் அழுவதும் , சிரிப்பதும் உங்கள் கையில் இல்லை. அவர்கள் அழச்சொன்னால் அழ வேண்டும், சிரிக்கச் சொன்னால் சிரிக்க வேண்டும். அப்போது அழுவதற்கும், சிரிப்பதற்கும் உரிய கருப்பொருளும், நிகழ்வுகளும் தலைகீழாக கூட மாறியிருக்கலாம். ஆக ஃபேஸ்புக் மூலம் நீங்கள் உங்கள் உலகை கட்டியமைக்க முடியாது. ஃபேஸ்புக்தான் உங்களது அறிவு, அரசியல் பார்வையினை கட்டியமைக்கும்”. (http://www.vinavu.com/2014/08/13/facebook-decides-what-you-feel/)

3. தனிமனித ஆளுமைச்சிதைப்பாடு மெய்நிகர் உலகால் ஏற்படுகின்றது.” கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவுக்கு சிலர் குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு அடிமையாகி இருப்பதுண்டு. அதாவது அவர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்த தளங்களில் அதிக நேரத்தை வீணடித்து கொண்டிருப்பார்கள்.

உதாரணத்திற்கு பேஸ்புக்கே கதி என இருக்கும் பேஸ்புக் பிரியர்கள் இருக்கின்றனர். சதா யூடியூப்பில் வீடியோ காட்சிகளாக பார்த்து கொண்டிருக்கும் யூடியூப் பிரியர்களும் இருக்கின்றனர். கூகுலின் இமெயில் சேவையான ஜிமெயில் பற்றி சொல்லவே வேண்டாம். புதிய இமெயில் வந்துள்ளதா என்று பார்க்க கை அடிக்கடி பரபரக்கும்”. (http://keepmeout.com/en/)

4. சமூகத்தால் காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு நியதிகள் மாறவும் அதனால் சமூக சீர்குலைவிற்கும் மெய்நிகர் உலாவல் வழிவகுக்கின்றது. குறிப்பாக இளம் சீரார்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. “செங்கல்பட்டு அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஒரு மாணவன் வகுப்பறையில் பயன்படுத்திய செல்போனை வாங்கி ஆசிரியர் பரிசோதித்தார். அதில் முழுக்கவே ஆபாச வீடியோக்கள். அதைவிட அதிர்ச்சி, பள்ளியின் ஆசிரியை ஒருவரை மிகவும் ஆபாசமான கோணங்களில் அந்த மாணவன் வீடியோ எடுத்திருந்தான். எச்சரிக்கப்பட்டு, பிரச்னை முடிக்கப்பட்டது. விஷயம் தெரிந்ததும் அந்த ஆசிரியை, 'இந்த வேலையே வேண்டாம்’ என்று விலகிச் சென்றுவிட்டார்”. (http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=35591)

5. சமூக விரோதிகள் தங்களை அடையாளப்படுத்திக் கூடுமிடமாகவும் மெய்நிகர் உலக அடையாளங்கள் அமைந்துவிடுகின்றன.

முடிவுரை:

இறுதுயாக, எவ்வாறாயினும் மெய்நிகர் உலகம் என்பது மனித வாழ்வில் தவிர்க்கவியலா இடம்பெற்ற நிலையில் அதனை முறையாகப் பயன்படுத்தும் அறிவினை அனைவருக்கிம் ஊட்டவேண்டியது மிகப்பெரும் கடமையாகும். குறிப்பாக வளரும் தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்தல் அவசியமாகும். நேரமும் காலமும் கடந்த இந்தத் தொடர்பாடல் உலகின் மொழி என்பது மிகவும் முதன்மை என்றறிந்து தமிழ் மொழியின் அடையாளத்தை முழுமைப்படுத்த வேண்டியது தமிழ்மொழி இனக்குழுக்களின் காலத்தேவை. மெய்நிகர் உலகின் தன்மைகளைப் புரிந்துகொண்டு பயன்படுத்துபவர்களுக்கு அது நம் கையில் தவழும் வரம் என்பதை அறிவோம்.

<இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R