3-ம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்

பத்மா ஒரு கண்ணாடி ‘ட்ரே’யில் ‘ஒரேஞ்பார்லி’ கொண்டு வந்து கொடுத்தான். ஸ்ரீதருக்குச் சாதாரணமாக ‘ஐஸ்’ போடப்பட்ட அல்லது அறிஞர் அ.ந.கந்தசாமி[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]   

ஸ்ரீதரின் திட்டப்படி அன்று மாலை தான் அவன் பத்மா வீட்டுக்குப் போக வேண்டும். அநேகமாக நாலரை மணிக்குப் பிறகு போனால் போதுமானது என்று அவன் முடிவு செய்திருந்தான். எனினும், காலையிலிருந்தே அதற்குரிய வேலைகளை ஆரம்பித்துவிட்டான். அவன் இது சம்பந்தமாகச் செய்த முதல் வேலை, கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட்டில் 48/17ம் இலக்க வீடு எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்ததாகும். உண்மையில் ஸ்ரீதருக்கு அன்று இருப்பே கொள்ளவில்லை. பத்மா வீட்டுக்கு முதன் முதலாகப் போகப் போகிறோம். அவளுக்கும் தனக்குமுள்ள தொடர்புகள் இதன் மூலம் மேலும் வலுவடையும் என்ற எண்ணம், அவனுக்குப் பத்மா வீட்டுக்குச் செல்வதில் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணியது.

இருந்த போதிலும், அவன் மனதில் ஒரு பயமும் தயக்கமும் ஏற்படவே செய்தன. பரமானந்தர் முன்னால் நான் எப்படி நடந்து கொள்வது, என்ன பேசுவது, அவரது முன்னிலையில் தன்னம்பிக்கையுடன் தன்னால் நடந்து கொள்ள முடியுமா? ஒரு வேளை அவர் முன்னால் திக்கித் தடுமாறிப் பரிகசிக்கத் தக்க முறையில்  நான் நடந்து கொள்வேனோ என்பது போன்ற இளமைக்குரிய இயல்பான அச்சங்கள் பலவும் அவனிடத்தே தோன்றின. ஆனால் நாடக தினத்தன்று பரமானந்தர் திரைக்குப் பின்னால் வந்து தன்னுடன் பேசிய தோரணையை நினைவு படுத்திக் கொண்டதும், இந்த அச்சங்களில் பாதி மறைந்தது. சற்றேறக் குறைய அறுபது வயது போல் தோன்றிய பரமானந்தர், உயரம் பருமனில் அவனது தந்தை சிவநேசரை ஓரளவு ஞாபகமூட்டினார். ஆனால் சிவநேசரோ நல்ல சிவப்பு. பரமானந்தரோ பத்மாவைப் போலில்லாமல் சிறிது கறுப்பாக இருந்தார். மேலும், சிவநேசர் எப்பொழுதும் தன்னுடைய அந்தஸ்தில் அக்கறை கொண்டவராக, காற்சட்டையும், “குளோஸ் கோட்டும்” தலைப்பாகையும் அணிந்திருப்பார். அத்துடன் செல்வத்தின் பூரிப்பும் பொலிவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வித கர்வமும் அவர் முகத்தில் என்றும் கதிர் வீசிக்கொண்டிருக்கும். பரமானந்தரோ சாதாரண வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து, அதற்கு மேல் ஒரு “டசூர்” கோட்டும் அணிந்திருப்பார். சட்டையை கழுத்து வரை மூடி ஒரு பித்தளைப் பொத்தானை அணிவதும் அவரது வழக்கமாகும். அவரது முகத்தில் ஒருவித அடக்கமும் அமைதியும் குடிகொண்டிருந்தன.

நாடக தினத்தன்று பரமானந்தர் ஸ்ரீதருடன் பேசியது, ஒரு கனவான் தனக்குச் சமமான இன்னொரு கனவானுடன் எப்படிப் பேசுவானோ அப்படித் தான். அது அவரிடம் அவனுக்கு அநாவசியமான பயத்தையோ, அல்லது அவ்வித பயத்துக்குத் தூண்டுகோலாக விளங்கும் அளவுக்கு மீறிய மரியாதை உணர்ச்சியையோ ஏற்படது தடுத்த போதிலும், இன்று “நான் காதலிக்கும் பெண்ணின் அப்பா, எல்லாம் சரியாக நடந்து முன்னேறினால் தன் மாமனாகப் போகிறவர்” என்ற எண்ணம் அவன் சிந்தனை ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் அவனை அறியாமலே ஒரு திரை போலத் தொங்கிக் கொண்டிருந்ததால், அவர் மீது ஒரு வித பயம் அவனுக்கு ஏற்படவே செய்தது. “பரமானந்தர் நாடகத்தை விரும்பியது உண்மைதான். என்னை மெச்சியதும் உண்மைதான். பத்மாவுடன் நான் ஓரளவு பழகுவதைப் பார்த்தும் பாராதவர் போலிருப்பதும் உண்மைதான். இருந்தாலும் நான் அவளைக் காதலிப்பதை விரும்புவாரா? என்ன நான் கலையார்வமுள்ளவராக இருந்தாலும் ‘காதலித்து மணம் புரிதல்’ என்ற பிரச்சினையில் அவர் முற்றிலும் பழைய கொள்கை பூண்டவராகவிருக்கலாமல்லவா? ஏன்? “நாடகத்திற் காவியத்திற் காதலென்றால் நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாமென்பர். வீடகத்தில் கிணற்றோரத்தே, வயலருகே காதலென்றால், பாடை கட்டி அதை ஒழிக்க வழி செய்கின்றாரே, இவரும் அப்படிப்பட்டவரல்லர் என்பது என்ன நிச்சயம்! கடவுளே, மாரியம்மா, அவர் அவ்வாறில்லாமலிருக்க நீதான் உதவி புரிய வேண்டும்,” என்று பலவாறு சிந்தித்தான் ஸ்ரீதர்.

ஆனால் ஸ்ரீதரின் பதற்றம் அத்துடன் நிற்கவில்லை. தனது உண்மையான அந்தஸ்தை மறைக்க அவன் நடத்திக் கொண்டிருந்த ஆள் மாறாட்ட நாடகமும் அவனுடைய உள்ளத்தை ஈட்டி  போல் உறுத்திக் கொண்டே இருந்தது. இருந்த போதிலும் ஓர் இளைஞனது உள்ளத்துக்குக் காதல் என்ற பேருணர்ச்சி கொடுக்கும் தைரியத்தை யாரே அளக்கவல்லார்? ஒரு கன்னிக்காக இவ்வுலகில் காதலர்கள் எதை எதை எல்லாம் செயாத் தயாரவிருக்கிறார்கள்? காதலுக்காக உயிரையே பணயம் வைப்பவர்கள் எத்தனை பேர்? இன்று கூடப் பத்திரிகைகளில், அப்படிப்பட்டவர்களின் செய்தி வரத்தானே செய்கிறது? காதலின் வயப்பட்ட ஸ்ரீதரும் தன் பயங்களை எதிர்த்துப் போராடி ‘எடுத்த காரியத்தை எப்படியும் முடித்தே தீருவேன், பின் நிற்கப் போவதில்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் , தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவலான 'மனக்கண்' முகப்போவியம்.ஸ்ரீதர் காலை பத்தரை மணியளவில் தனது காரைத் தானே ஓட்டிக் கொண்டு கொட்டாஞ்சேனை ‘கொலீஜ் ரோட்’டைக் கண்டு பிடிப்பதற்குச் சென்றான். அவன் கொழும்பிலே நீண்ட காலமாக வசித்தபோதிலும் நகரின் இந்தப் பகுதியில் அவன் நடமாடியதேயில்லை. ஓரொரு சமயம் தனது தாயார் கொழும்புக்கு வரும் நேரங்களில் அவளது நச்சரிப்புத் தாங்காமல் அவளுடன் கொட்டாஞ்சேனையிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அவன் போயிருப்பது உண்மைதான். இருந்தாலும் கொட்டாஞ்சேனையில் அந்தக் கோயிலை விட வேறு எதுவுமே அவனுக்குத் தெரியாது. இன்று முதன் முதலாகக்  காரை அதிக வேகமின்றி அவன் கொலீஜ் ரோட் வழியாக ஓட்டிச் சென்றபோது, தான் வசித்த ஹோர்ட்டன் பிளேசுக்கும் இந்த வீதிக்கும் இருந்த பெரிய வித்தியாசத்தை அவன் கவனித்தான். அகன்று விரிந்து பச்சைப் பசேலென்ற நிழல் மரங்களுடனும், இருபுறத்திலும் பெரிய மாளிகைகளுடனும் விளங்கிய ஹோர்ட்டன் பிளேஸ் அருகே, ஒடுங்கிய ஒழுங்கை போல் விளங்கிய இந்தச் சிறிய வீதி எங்கே? குப்பையும் கூளமும் சிறிய தட்டிக் கடைகளுமாக விளங்கிய அந்த வீதியில் ஒரு சிறிய வீட்டுப் ‘பேலி’யே 48ம் நம்பர் ‘தோட்டம்’. தோட்டம் என்றதும் பயிர்ச் செய்கை நடக்கும் தோட்டமென்றோ எண்ணிவிட வேண்டாம். சின்னஞ் சிறு வீடுகள் ஒன்றோடென்று சங்கிலித் தொடர் போல் இணைந்திருக்கும் இருப்பிட வரிசைக்கேகொழும்பில் “தோட்டம்” என்று பெயர். 48ம் நம்பர் வீட்டு வரிசையில் ஒரு புறச் சுவரில் கறுப்பு மையினால் ஒரு வட்டமிடப்பட்டு, அதற்கு நடுவில் 48 என்ற இலக்கம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. “இதில் பன்னிரண்டாவது வீட்டிலே தான் எனது பத்மா வசிக்கிறாள்” என்று தனக்குள் தானே கூறிக் கொண்ட ஸ்ரீதர் தனக்கும் பத்மாவுக்கும் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பற்றியும் சிந்திக்காமல் இல்லை. மாமன்னனாகிய துஷ்யந்தனுக்கும் ஆசிரமத்துப் பெண் சகுந்தலைக்கும் ஏற்பட்ட காதலும், இலங்கை மன்னன் துட்ட கைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும்  பஞ்சம குலப் பெண் அசோக மாலாவுக்கும் ஏற்பட்ட காதலும் அவனுக்கு நினைவு வந்தன. “அவர்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வுடன் ஒப்பிடும்போது, எனக்கும் பத்மாவுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வு எம்மாத்திரம்? அதனைச் சமாளிப்பது அவ்வளவு கடினமாயிருக்க முடியாது. மேலும், நான் அவளை உண்மையாகவே நேசிக்கிறேன். அவளும் என்னை நேசிக்கிறாள். இந்த நிலையில் இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் தவிடு பொடியாவது நிச்சயம்,” என்று சிந்தித்தவாறே வீட்டை நோக்கிக் காரை ஒட்டினான் ஸ்ரீதர்.

அன்று மாலை ஸ்ரீதர் பத்மா வீட்டுக்கு வந்தபோது சற்றேறக்குறைய ஐந்து மணியிருக்கும். ஹோர்ட்டன் பிளேசிலிருந்து கொட்டாஞ்சேனைக்குக் காரிலேயே வந்திருந்தபோதிலும், காரை 48ம் இலக்கத் தோட்டத்துக்குச் சற்றேறக் குறையக் கால் மைல் தூரத்திலே வீதியின் ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, பஸ்ஸிலிருந்து இறங்கி வரும் பாவனையிலேயே ஸ்ரீதர் பத்மா வீட்டுக்கு வந்தான். எங்கே பள பளவென்று விளங்கிய தனது பெரிய காரைக் கண்டதும், அவர்கள் தனது அந்தஸ்தை நினைத்து மிரண்டு விடுவார்களோ என்ற அச்சம் அவனுக்கு. அவ்வாறு நிகழ்ந்தால் அவன் தன் அருமைப் பத்மாவை இழக்க நேரிடுமல்லவா? கார் விஷயத்தில் மட்டுமல்ல, உடை விஷயத்தில் கூட அவன் இத்தகைய விபத்து ஏற்படக் கூடாது என்று கருதி, மிகவும் அடக்கமாகவே உடுத்தி வந்தான். ஒரு மத்திய தர வாத்தியார் வீட்டுப் பெண்ணைக் காதலிக்கும் வாலிபன் எவ்வாறு உடுத்தி வருவான் என்பதைத் தனக்குத் தெரிந்த அளவில் யூகித்து அதற்கேற்றவாறு உடுத்தியிருந்தான் அவன். ஆனால் என்ன செய்தாலும் அரசகுமாரன் போன்ற தனது தோற்றப் பொலிவை மட்டும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பத்மாவும் பரமானந்தரும் ஸ்ரீதரை நாலு மணியிலிருந்தே எதிர்பார்த்திருந்தார்கள். உண்மையில் ஸ்ரீதரைப் போலவே பத்மாவும் அன்று காலையிலிருந்தே அதிக பரபரப்படைந்திருந்தாள். காதலன் முதன் முறையாகத் தன் வீட்டுக்கு வரும்பொழுது, எந்தப் பெண்ணுக்குத்தான் அவ்வித பரபரப்பேற்படாது! ஸ்ரீதர் வீட்டுக்கு வரும்போது வீடு மிகவும் சுத்தமாயிருக்க வேண்டுமென்பது அவளது எண்ணம். அதற்காக இரண்டு மூன்று தடவைகள் வீட்டைத் தும்புக்கட்டையால் பெருக்கிச் சுத்தம் செய்து விட்டாள் அவள். உண்மையில் ஸ்ரீதர் வருவதற்கு

இரண்டு நிமிஷங்களுக்கு முன்னால் தான் அவள் வீட்டைக் கடைசி முறையாகப் பெருக்கிவிட்டு, வாசலுக்கு வந்து வீதிப்புறத்தில் கண்ணை எறிந்து ஒரு தடவை பார்த்துவிட்டு உள்ளே சென்றான். உள்ளே சென்று மேசையிலிருந்த புத்தகங்களை ஒன்பதாவது தடவையாக அவள் அடுக்குவதற்கும், ஸ்ரீதரின் முகம் வாசலில் தோன்றுவதற்கும் சரியாக இருந்தது.

பரமானந்தர் “ஓ, ஸ்ரீதரா, வா தம்பி. இதோ இந்நாற்காலியில் உட்கார்” என்று வரவேற்றார். ஸ்ரீதரும் முகமலர்ந்து புன்னகை செய்து கொண்டே, நாற்காலியில் உட்கார்ந்தான்.

பரமானந்தர் “ஸ்ரீதர்! உங்கள் வீட்டைக் கண்டு பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாயா?” என்று கேட்டார். “இல்லையே. கையில் வீட்டின் இலக்கம் இருந்ததால் எவ்வித கஷ்டமுமின்றியே வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்றான் ஸ்ரீதர்.

அதன் பின் அதையும் இதையும் பற்றி இருவரும் உரையாட ஆரம்பித்தார்கள். பரமானந்தர் தனது அலுமாரியைத் திறந்து, பழைய ‘போட்டோ ஆல்பம்’ ஒன்றை எடுத்து வந்தார். அதில் அவர் இளமையில் நடித்த பல நாடகக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று அரிச்சந்திரன் நாடகக் காட்சி. பரமானந்தர் மயானத்தைக் காக்கும் வெட்டியான் வேஷத்தில் கம்பீரமாகக் காட்சியளித்தார்.

இன்னொன்று நல்லதங்காள் நாடகக் காட்சி. அதில் பரமானந்தர் நல்லதங்காளாகப் பெண் வேஷத்தில் காட்சியளித்தார். ஸ்ரீதரும் பரமானந்தரும் நாடகங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டார்கள். அரிச்சந்திர விலாசத்தில் தனக்கு ஞாபகத்திலிருந்த சில தருக்களைப் பாடிக் காட்டினார் பரமானந்தர். ஸ்ரீதர் அவற்றை இரசித்தானோ இல்லையோ, பத்மாவை முன்னிட்டு அவற்றை மிகவும் இரசிப்பது போல் பாவனை காட்ட மட்டும் பின் நிற்கவில்லை. பத்மாவுக்கோ தந்தையின் கர்நாடக மெட்டுகள் சிரிப்பை ஊட்டின.

பத்மா ஒரு கண்ணாடி ‘ட்ரே’யில் ‘ஒரேஞ்பார்லி’ கொண்டு வந்து கொடுத்தான். ஸ்ரீதருக்குச் சாதாரணமாக ‘ஐஸ்’ போடப்பட்ட அல்லது குளிர்ப்பெட்டியில் நன்கு குளிர்ப்படுத்தப்பட்ட குளிர்பானங்களைத் தான் குடித்துப் பழக்கம். எனவே பத்மா கொண்டு வந்து குளிர்ப்படுத்தப்படாத பானத்தை அவனால் குடிக்க முடியவில்லை. இருந்தாலும் அவளைத் திருப்திப்படுத்துவதற்காக, அவன் அதைக் குடிக்கும்படியேயாயிற்று.

பரமானந்தர் பேச்சு இப்போது வேறு திசையில் சென்றது.

“தம்பி! நீர் யாழ்ப்பாணத்தைல் எந்த ஊரைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார் அவர்.

“உடுவில்” என்றான் ஸ்ரீதர்.

பச்சைப் பொய்!

“உங்கள் அப்பா என்ன தொழில் தம்பி!”

“உபாத்தியாயர். இளைப்பாறியிருக்கிறார்” என்றான் ஸ்ரீதர்.

அதுவும் பொய்!

ஒரு பொய்யைச் சொல்லிவிட்டால், பின்னால் அதற்கு உண்மையின் வலுவை ஏற்படுத்த இன்னும் எத்தனை பொய்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது!

“அப்படியா? அவரும் என்னைப்போல உபாத்தியாயர் தானா?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் பரமானந்தர். பின்னர் தான் மானிப்பாயைச் சேர்ந்தவர் என்றும், வாலிப வயதில் வேலை கிடைக்காததால் கிறிஸ்தவராக மதம் மாறிக் கொழும்பில் ஒரு பாடசாலையில் உபாத்தியாயராக வேலைக்கமர்ந்ததாகவும், பின்னால் பழையபடி இந்துவாகிவிட்டதாகவும் கூறினார் அவர்.

“தம்பி! நான் கிறிஸ்தவனாக மாறியது உண்மையில் தவறுதான். இன்னும் அது என் மனதை உறுத்துகிறது. ஆனாலும் வேலை கிடைக்காத பலர் உபாத்திமைத் தொழிலுக்காக அன்று அவ்வாறு மதம் மாறினார்கள். ஆனால் இவ்விதம் பொருளாதாரக் காரணத்துக்காக மதம் மாறியவர்கள் ஒரு பொழுதும் உண்மைக் கிறிஸ்தவர்களானதில்லை. சந்தர்ப்பம் கிடைத்ததும் பழையபடி இந்துவாகி விடுகிறார்கள். இதுவே என் விஷயமும்” என்றார் பரமானந்தர்.

பின்னர் மதம் மாறியதனால் தனக்கேற்பட்டால் கஷ்டங்களை எடுத்துக் கூறினார் அவர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்ததும் தன்னைத் தனது உறவினர்கள் எல்லோரும் விலக்கி விட்டார்களென்றும் மதிப்புக் குறைவாக நடந்த ஆரம்பித்தனரென்றும் கூறினார் பரமானந்தர் “இதனால் இன்று பெயரளவில்தான் நான் மானிப்பாய்க்காரன். நான் திருமணம் செய்த என் மனைவி- பத்மாவின் தாய் ஒரு கிறிஸ்தவ அனாதை நிலயத்தில் வளர்க்கப்பட்டவள். பத்மாவுக்குப் பதினைந்து வயதாயிருக்கும்போதே அவள் இறந்து விட்டாள்” என்று தன் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார் அவர்.

முடிவாக “இன்று எனக்கு வரும் பென்ஷன் மிகக் குறைவானதுதான். இருந்தாலும் சில பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். பென்ஷனும் பிள்ளைகள் கொடுக்கும் சம்பளமும் சேர்ந்து ஒருவாறு வாழிக்கையை ஓட்ட உதவுகின்றன. என்னுடைய நல்ல காலத்துக்கு ஆண்டவன் கிருபையால் இருபத்தைந்து ரூபாவுக்கு இந்த வீடு கிடைத்திருக்கிறது. வசதியான வீடுதான். ஒரு குறைவுமில்லை. பத்மா பீ.ஏ.பாஸ் பண்ணி எங்கேயாவது வாத்தியாராக அமர்ந்துவிட்டால், எல்லாக் கஷ்டங்களும் பறந்துவிடும் என்று மேலும் பேசினார் பரமானந்தர்.

ஸ்ரீதருக்கு அவர் பேச்சு சில சமயங்களில் விநோதமாக இருந்தது. தாம் வாழும் அந்த சின்ன வீட்டை அவர் வசதியான வீடு என்று வர்ணித்த போது அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. இருந்தாலும், பண்புள்ளவனாதலால் எவ்வித மெய்ப்பாட்டையும் காட்டாமல் வீட்டை மேலும் கீழும் பார்த்தான் அவன். மின்சார வெளிச்சமில்லை. கூரை சுத்தம் செய்யப்படாது, அங்குமிங்கும் ஒட்டடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. சுவர் பல இடங்களில் இடித்து காரை போயிருந்தது. அவன் அவற்றைப் பார்த்த விதத்தை நோக்கிய பரமானந்தர் அந்தப் பார்வைக்குத் தனக்குத் தெரிந்த அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டு, “ஸ்ரீதர்! என்ன யோசிக்கிறாய்? லைட் இல்லை என்றா? ஆம். உண்மையில் அது எந்த வீட்டுக்கு ஒரு குறைதான். முக்கியமாகப் பத்மாவுக்கு இரவில் படிப்பதற்கு அது ஒரு தடைதான். ஆனால், நான் அக்குறையை நிவர்த்தி செய்துவிட்டேன். ‘பெட்ரோமாக்ஸ் லாம்பொ’ன்று அவளுக்காகவே வாங்கியிருக்கிறேன். அதன் விலை எழுபத்தைந்து ரூபா” என்றார்.

ஸ்ரீதருக்கு அவர் விலை கூறிய விதம் விசித்திரமாயிருந்தது. தனது தந்தை சிவநேசர் பத்தாயிரம் ரூபாய் பொருளைப் பற்றிப் பேசும்போது கூட “பத்தாயிரம் ரூபா தான்” என்று மிகவும் அலட்சியமாகப் பேசுவதை அவன் கேட்டிருக்கிறான். ஆனால் பரமானந்தரோ உலகத்துச் செல்வம் எல்லாவற்றையும் கொடுத்து, அந்த லாம்பை வாங்கியவர் போலல்லவா பேசுகிறார் என்று அவன் ஆச்சரியப்பட்டான்!

பத்மா வீட்டுக்கு ஸ்ரீதர் விஜயம் செய்த முதலாம் நாள் சம்பவங்கள் இவ்வளவுதான். வீட்டைவிட்டுக் கிளம்பு முன் ஸ்ரீதரிடம் பரமானந்தர், “தம்பி! இது உன் வீடு போல. விருப்பமான நேரம் இங்கு வந்து போகலாம்” என்று குறிப்பிட்டார். ஸ்ரீதரும் “சரி வருகிறேன்” என்று கூறிப் பத்மாவை நோக்கிக் கள்ளத்தனமாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் புறப்பட்டான்.

ஸ்ரீதரின் அந்தப் புன்னகையைப் பத்மா அன்று பல மணி நேரம் மறக்கவில்லை. இரவு துயிலச் சென்றபோது ஸ்ரீதரின் அப்புன்னகையைப் படுக்கைக்கும் எடுத்துச் சென்றாள் அவள். கண்ணை மூடிக்கொண்டதும் கண்ணுள் தெரிந்தது அப்புன்னகை. அதற்குப் பதில் புன்னகை செய்தவாறே நித்திரை போனாள் அவள்.

அன்றிரவு சுரேஷ் மிகவும் நேரம் கழித்தே வீடு வந்தான். ஸ்ரீதர் அவனுக்காகக் காத்திருந்து காத்திருந்து அலுத்துப் போய் விட்டான். தனது கொட்டாஞ்சேனை விஜயத்தின் வெற்றியைப் பற்றி சுரேசுக்குக் கூறி மகிழ வேண்டுமென்று அவன் விரும்பினான். ஆனால் சுரேஷ் நேரத்துக்கு வந்தால் தானே!

சுரேஷ் வீடு வந்தபொழுது இரவு பதினொரு மணியாகிவிட்டது. அவனது உறவினர் ஒருவர் வெள்ளவத்தையில் ஒரு கடை வைத்திருந்தார். அவரைக் காணப் போனதினாலேயே இத்தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதர் சுரேஷைக் கண்டதும் தன் கதை முழுவதும் அவிழ்த்துவிட்டான். அவனும் எல்லாவற்றையும் இரசித்துக் கேட்டான். காதல் கதை கேட்பதற்கு யாருக்குத்தான் ஆசையில்லை!

“ஆனால் நீ பொய்க்குப் பின் பொய்யாக அவிழ்த்துவிடுகிறாயே. ஊரின் பெயர் பொய். அப்பா பெயர் பொய். அவரது தொழில் பற்றிய தகவல் பொய். நாளைக்கு நீ முன் சொன்ன பொய்யை மறந்துவிட்டு அதற்கு முற்றிலும் மாறான தகவலைப் புதிய பொய்யாகச் சொல்லப் போகிறாய். ஜாக்கிரதை!” என்றான் சுரேஷ் கேலியாக.

ஸ்ரீதர், “நான் அவ்வளவு மடையனல்ல - நீ என்ன நினைத்தாய்! பொருத்தமான பொய் கூட எனக்குச் சொல்லத் தெரியாது என்று நினைத்தாயா, என்ன!” என்றான்.

சுரேஷ், “ஸ்ரீதர்! அந்தக் காலத்தில் அரிச்சந்திரன் போன்றவர்கள் தங்களுக்குப் பொய் சொல்லத் தெரியாது என்று சொல்வதில் பெருமையடைந்தார்கள். ஆனல் இன்று நீயோ 'எனக்கா பொய் சொல்லத் தெரியாது' என்று பெருமையோடு கேட்கிறாய். அது கிடக்கட்டும். இன்று நீ உன் தகப்பனார் பெயர் சின்னப்பா என்று கூறியிருக்கிறாய். நாளைக்கு அதை மறந்துவிட்டு வேறேதாவது பெயரைச் சொல்லிவிடாதே. உண்மையில் இந்த விவரங்களை ஒரு டயரியில் குறித்து வைத்துப் பாடமாக்கிக்கொள்” என்றான் சுரேஷ்.

“அதைச் செய்வதற்கு உன்னுடைய ஆலோசனை கிடைக்கும் வரை நான் காத்திருக்கவில்லை. இதோ பார், சுரேஷ்” என்று சொல்லிய வண்ணம் தான் மேசையில் எழுதிக் கொண்டிருந்த ஒரு காகிதத்தை எடுத்து சுரேஷிடம் நீட்டினான் ஸ்ரீதர். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது. தந்தை பெயர்: சின்னப்பபிள்ளை; தாய் பெயர் பார்வதி; ஊர்: ஊடுவில். மேசையில் இருக்கும்போது பொழுதுபோகாவிட்டால் காகிதத் துண்டுகளில் ஏதாவது கிறுக்கிக் கொண்டிருப்பது ஸ்ரீதரின் வழக்கம். அந்த வழக்கத்தின்படி அவன் கிறுக்கியிருந்த வார்த்தைகளே அவை.

சுரேஷ் மேசையில் சாப்பிட உட்கார்ந்தபோது ஸ்ரீதரும் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டான். வேலைக்காரன் சுப்பையா பால் கொண்டு வந்தான். நன்பர்கல் தூங்குவதற்குத் தயாராகும் நேரமறிந்து சூடான பால் தயாரித்துத் தருவது அவனது வழக்கம். ஸ்ரீதர் பாலைப் பருகியவாறே சுரேஷிடம் கதை கொடுக்க ஆரம்பித்தான்.

வெள்ளவத்தையில் கடை வைத்திருந்த உறவினருக்குத் தனது மாமனார் எழுதியுள்ள ஒரு கடிதத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தான் சுரேஷ். “மாமா எனது வாழ்க்கையின் மலர்ச்சிக்காகப் புதியதொரு திட்டம் வகுத்திருக்கிறார், ஸ்ரீதர். ஆனால் பார்க்கப்போனால் அது எனக்காக வகுக்கப்பட்ட திட்டமல்ல. தனது மகள் சிறப்பாக வாழ வேண்டுமென்ற விருப்பத்தில் அவர் செய்திருக்கும் ஏற்பாடு. உண்மையில் தன்மானமுள்ள மனிதன் இப்படிப்பட்ட ஏற்பாடுகளை ஏற்கக் கூடாதுதான். இவற்றின் மூலம் அவருக்கும் எனது அத்தை மகளுக்கும் எனக்குள்ள கடமைப்பாடு மேலும் அதிகரிக்கிறது. கடமைப்பாடு என்றால் என்ன? ஒரு வித அடிமைப்பாடு தானே? இருந்தாலும் என்ன செய்வது? என்னைப் போன்ற போதிய பணமில்லாதவர்களுக்கு வேறு வழி ஏது?” என்று பீடிகையுடன் ஆரம்பித்தான் அவன்.

“சரி. பீடிகை இருக்கட்டும். விஷயத்துக்கு வா. மாமாவின் திட்டமென்ன?” என்றான் ஸ்ரீதர்.

“இம்மாதம் பரீட்சை “ரிஸல்ட்” வந்ததும் நான் இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்குப் போய் வரவேண்டுமென்று விரும்புகிறார் அவர்.

அப்பொழுது எனக்குள்ள ‘டிமாண்ட்’ அதிகரிக்கும் என்பது அவரது எண்ணம். எனக்கும் அது பிரியம்தான். ஆனால் அவர் கருதும் அந்த டிமாண்டுக்காக அல்ல; என் அறிவு சிறப்படையும், சேவைத் திறனும், சமுதாய உபயோகமும் அதிகரிக்கும் என்ற காரணம்தான் எனக்கு இதில் ஆசையை ஏற்படுத்துகிறது. ஸ்ரீதர், நீ இதில் ஒரு புதுமையைப் பார்த்தாயா? என் ஆசையோ பொதுநலத்தை அடிப்படையாகக் கொண்டது. மாமாவின் ஆசையோ சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அவருடைய சேர்க்கையில்லாமல் என் பொதுநல எண்னம் எப்படி நிறைவேறும்? சமுதாயத்தில் இந்த விசித்திர நிலைமை நிலவுவதற்கு என்ன காரணம் என்று நீ நினைக்கிறாய்?” என்றான் சுரேஷ்.

“எனக்கு இவைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. நீதான் மிகப் பெரிய புஸ்தகங்களை எல்லாம் கொண்டு வந்து வாசிக்கிறாய். என்ன காரணம்? சொல் பார்ப்போம்” என்றான் ஸ்ரீதர்.

“இன்றைய சமுதாய வாழ்க்கை முழுவதுமே பணம் என்ற ஒரே மையத்தைச் சுற்றியே சுழல்கிறது. அதை ஒவ்வொருவனும் எப்படியும் அடைய வேண்டியிருக்கிறது. இந்த நியதியில் நடைபெறும் ஓர் அமைப்பிலே இப்படிப்பட்ட விசித்திரங்கள் நடந்து கொண்டேயிருக்கும்”  என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் அலுப்புடன் “நீ என்றும் போல் உன்னுடைய சோஷலிஸப் பிரச்சாரத்துக்கு வருகிறாய் போல் தெரிகிறது. சுரேஷ்! உண்மையில் என்னைப் பொறுத்தவரையில் நீ டாக்டர் வேலைக்குப் படிப்பது வீண் என்றே நான் நினைக்கிறேன். அரசியலில் நீ பல விஷயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறாய். கொலீஜில் கூட அரசியல் சங்கத்துக்கு இவ்வருடமும் நீ தானே தலைவர்! ஏன் நீ  அரசியலில் ஈடுபட நினக்கவில்லை” என்றான்.

சுரேஷ் சிரித்துக்கொண்டு, “நல்லாய்ச் சொன்னாய்! நான் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன். அதுவும் சோஷலிஸ அரசியலில் என்றால் மாமா எனது படிப்புக்குப் பணம் உதவுவார் என்று எண்ணுகிறாயா நீ! உண்மையைச் சொன்னால் ஸ்ரீதர் அரசியலில் ஈடுபடக்கூட இன்றைய சூழ்நிலையில் தன் கையில் பணம் இருக்க வேண்டும். அதற்குக் கூட நான் லாயக்கில்லை. நான் அரசியல் செய்வதென்றால் என் தாயாருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் வீட்டை விட்டு ஓடிப் போய்த்தான் அதில் ஈடுபட வேண்டும். ஆனால் உன் நிலைமை வேறு. அளவற்ற சொத்துள்ள உனது நிலையில் நான் இருந்தால் கட்டாயம் நான் அரசியலில் குதித்துத் தான் இருப்பேன்.

இன்றைய நிலையில் நான் சமுதாயத்தின் கைதி. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கைதி. குடும்ப நிலைமையால் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் ஸ்ரீதர்! உன்னைப் பொறுத்தவரையில் இன்று கூட நீ அரசியலில் ஈடுபடலாம்” என்றான்.

ஸ்ரீதர், “ஆனால் எனக்கு அரசியலில் சிறிது கூட அக்கறையில்லையே. உண்மையில் நான் எவருடனும் அரசியல் பற்றிப் பேசுவதேயில்லை. ஆனால் நீயோ சாமர்த்தியசாலி. சந்தர்ப்பமறிந்து பொருத்தமாக அரசியல் பேசுகிறாய். அதுவும் அளவறிந்து பேசுவதனால்தான் சில சமயங்களில், நான் உன்னுடன் அதைப் பற்றிப் பேசுகிறேன். மேலும் அரசியல் பற்றி என்னை விட உனக்கு எவ்வளவோ தெரியும். அதனால் உன்னுடன் பேசுவதில் எனக்கு அறிவுத் துறையில் இலாபமும் ஏற்படுகிறது. ஆனால் எனக்கு இன்றுள்ள பிரச்சினை, அரசியல் பிரச்சினயல்ல. காதல் பிரச்சினை. அது ஒன்றுதான் என் மனத்தைத் தொடுகிறது” என்றான்.

சுரேஷ், “எனக்கோ அந்தப் பிரச்சினையில்லை. என் திருமணத்தை என் மாமாவும் அம்மாவும் தீர்மானித்து விட்டார்கள். ஏன், எங்களது தமிழ்ச் சமுதாயம் என்னுடைய இத்திருமணப் பிரச்சினையைப் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே தீர்மானித்துவிட்டத் என்று கூடச் சொல்லலாம்” என்றான்.

“அது எப்படி?” என்றான் ஸ்ரீதர்.

“மச்சானை மண முடிக்க வேண்டும். அத்தை மகளைக் கட்ட வேண்டும் என்பது என்று நேற்று விதிக்கப்பட்ட சட்டமா என்ன? அச்சட்டத்துக்கு அடங்கி நடக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். பார்த்தாயா ஸ்ரீதர் இன்னொரு விசேஷத்தை? எண்ணத்தால் நான் புரட்சிக்காரன். ஆனால் செயலால் உன்னை விட அதிகமாகச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நல்ல பிரஜை நான்” என்றான் சுரேஷ், சிந்தனை தோய்ந்த புன்னகையுடன்.

ஸ்ரீதர் மனம் இப்பொழுது வேறிடத்தில் சஞ்சரித்தால் அர்த்தமில்லாமல் “ஆம்” என்ற பாவனையில் தலையை அசைத்தான். சுரேஷ் மேல்படிப்புக்காக இங்கிலாந்துக்குப் போய்விட்டால் தான் தனித்துவிட நேரிடுமே என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்து அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் அவன். தனது ஒரே நண்பன், தன் மனத்திலெழும் எல்லா எண்ணங்களையும் ஒளிவு மறைவின்றிப் பேசக் கூடியதாயிருக்கும் தன் ஒரே ஆத்ம நண்பன், தன்னை விட்டுப் பிரியப் போகிறானே என்ற எண்ணம் அவனுக்குக் கவலையை உண்டாக்கியது. ஆனால் அதை எப்படித் தடுக்க முடியும்? சுரேஷின் எதிர்கால நன்மைக்கு அவன் லண்டன் செல்வதும், அங்கு பட்டம் பெற்றுத் திரும்புவதும் அவசியம். ஆகவே, மனதிலெழுந்த கவலை எண்ணங்களைத் தன்னாலியன்ற அளவு அகற்றிக் கொண்டு சுரேஷ¤க்கு, அவன் திட்டங்களெல்லாம் வெற்றியடைய வேண்டுமென்று வாழ்த்துரை வழங்கினான் ஸ்ரீதர்.

சுரேஷ் பதிலுக்கு “அவை கிடக்கட்டும் ஸ்ரீதர். நான் உன்னிடம் ஒரு வேண்டுகோள் செய்ய விரும்புகிறேன். நான் எங்கிருந்தாலும் உன் திருமண அழைப்பை மட்டும் அனுப்ப மறந்துவிடாதே முடியுமானால் பத்மா - ஸ்ரீதர் திருமணத்தைப் பக்கத்திலிருந்து பார்க்க நான் வந்தே தீருவேன்” என்றான்.

ஸ்ரீதர், “சுரேஷ்! நீ கேட்டா நான் என் திருமண அழைப்பை உனக்கு அனுப்புவது? நீ செவ்வாய்க் கிரகத்துக்குப் போய் அங்கே குடியிருந்தாலும் எனது அஞ்சல் உன்னைக் கட்டாயம் அங்கே தேடி வரும். அது போக, நீ என் பத்மாவை ஒரு தடவையாவது நேரில் பார்த்ததில்லையல்லவா? நிச்சயம் நீ லண்டன் போகு முன் உன்னை நான் அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்” என்றான்.

சுரேஷ், “என்ன? நான் பத்மாவைப் பார்க்கவில்லையா? அதை நீ, அவ்வளவு நிச்சயமாக எப்படிச் சொல்ல முடியும்? நான் பத்மாவை நன்றாகப் பார்த்திருக்கிறேன்” என்றான் விஷமச் சிரிப்போடு, சாப்பிட்ட கையை மேசையிலிருந்த கண்ணாடி நீர்க்குவளையுள் கழுவிக் கொண்டே.

“பொய் சொல்லாதே, நீ பத்மாவைப் பார்த்ததேயில்லை” என்றான் ஸ்ரீதர்.

“பார்த்திருக்கிறேன் அவளை வர்ணிக்கட்டுமா?”

“வர்ணி பார்ப்போம்.”

“மிகவும் அழகாயிருப்பாள். ஆனால் ஸ்ரீதர் எனது வர்ணனை உனக்குக் கோப மூட்டக் கூடும். ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன்..”

“இல்லை. நான் கோபிக்க மாட்டேன், வர்ணி.”

“ஆனால் அவள் உடம்பின் அழகை விடப் பேச்சின் அழகு தான் யாரையும் கவரும். இன்னும் அவள் நடை இருக்கிறதே. அதுதான் அவளின் சிறப்பு வாய்ந்த அம்சம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலானவை அவளது உடைகள். தனது தோற்றத்துக்கு ஏற்ற வர்ணங்களைத் தெரிந்தெடுப்பதில் வேறேந்தப் பெண்ணுமே அவளுக்கு நிகராக முடியாது. ஸ்ரீதர், எப்படி என் வர்ணனை? நான் சொல்வது முற்றிலும் சரி தானே?”

"முற்றிலும் சரி. நன்றாக நேரில் பார்த்தவனால் தான் இவ்வளவு சரியாக அவளை வர்ணிக்க முடியும். சுரேஷ், நீ பத்மாவை எங்கே பார்த்தாய், எப்பொழுது பார்த்தாய்?”

சுரேஷ் கல கலவென்று சிரித்துவிட்டு “ஸ்ரீதர் நீ ஓர் அப்பாவி. ஒரு காதலன் கண்ணுக்கு ஒரு பெண் இப்படித் தோன்றாமல் வேறு எப்படித் தோன்றுவாள்? ஆகவே வெறுமனே வாய்ப்பந்தல் போட்டேன். நீயோ ஏமாந்துவிட்டாய்!” என்றான்.

“இல்லை நீ போய் சொல்லுகிறாய். நீ அவளை எங்கோ பார்த்திருக்கிறாய்” என்று அழுத்துமாகச் சொன்னான் ஸ்ரீதர்.

சுரேஷ், “ஸ்ரீதர்! உன் போக்கே விசித்திரமாயிருக்கிறது. சற்று முன் தான் நான் அவளைப் பார்த்ததே இல்லை என்று அடம் பிடித்தாய். இப்பொழுதோ “இல்லை, இல்லை அவளைப் பார்த்துத்தான் இருக்கிறாய்!” என்று பிடிவாதம் செய்கிறாய், நல்ல ஆளப்பா நீ” என்றான்.

ஸ்ரீதர் “அது எப்படி என்றாலும் நீ அவளைப் பார்த்ததும் உன் வர்ணனை கொஞ்சம் கூடத் தவறில்லை என்பதை உணர்ந்து கொள்வாய். இருந்து பார்!” என்றான்.

இவ்வாறு நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, சுவரில் மாட்டியிருந்த அலங்கார மணிக்கூடு இன்னிசையொழுக, ‘டாங் டாங்’ என்று பன்னிரண்டு முறை மணி அடித்தோய்ந்தது.

அது பாதி வழி அடித்துக் கொண்டிருக்கும் போதே சுரேஷ் எழுந்தான். “நேரமாகிவிட்டது. தூங்குவோம்” என்றான் கொட்டாவி விட்டுக்கொண்டே.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் , தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவலான 'மனக்கண்' முகப்போவியம்.இவை நடந்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளே ஸ்ரீதர் பத்மா வீட்டுக்கு ஐந்து தடவைகள் போய்விட்டான். பரமானந்தர் வாழ்க்கையில் பழுத்த அனுபவசாலியானதால் கிழவனான தன்னுடன் நாடகங்களைப் பற்றிப் பேசுவதற்காக மட்டுமே ஸ்ரீதர் கொட்டாஞ்சேனைக்கு வரவில்லை என்பதைத் தெற்றத் தெளிவாக அறிந்து கொண்டார். நாடகக் கலையை விடப் பல்கலைக் கழக நாடக இணைக் காரியதரிசிபத்மாதான் இளைஞனான ஸ்ரீதரைக் கொட்டாஞ்சேனைக்கு இழுக்கிறாள் என்பது அவருக்கு நன்கு தெரிந்துவிட்டது.  இருந்தாலும், ஒன்றும் அறியாதவர் போலவே அவர் நடந்து கொண்டார். உண்மையில், அவருடைய உள்ளத்தில் ஸ்ரீதர் மீது ஓரளவு பிரியமும் மதிப்பும் ஏற்பட்டிருந்ததால், பத்மாவுக்கு அவனை மாப்பிள்ளையாக்குவதில் அவருக்கும் அதிக ஆர்வம் ஏற்படவே செய்தது. “பத்மா வாத்தியார் மகள். அவனும் வாத்தியார் மகள். ஆகவே ஸ்ரீதர் எந்த விதத்திலும் எம்மிலும் அந்தஸ்துக் குறைந்தவனல்லன். ஆளும் அழகாயிருக்கிறான். பத்மா அதிர்ஷ்டசாலி அதனால் தான் அவனுடைய தொடர்பு அவளுக்கு ஏற்பட்டது” என்று கூட அவர் சிந்திக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் விஷ்யத்தைச் சுற்றி வளைப்பானேன் என்று எண்ணிய அவர் ஒரு நாள் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு பத்மாவிடம் நேரே விஷயத்தைப் பிரஸ்தாபித்து விட்டார்.

“பத்மா! இங்கே வா. உட்கார். உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்” என்றார் பரமானந்தர் -

“என்னப்பா?” என்று கொண்டே உட்கார்ந்தாள் பத்மா.

“உனக்கு இப்பொழுது வயதாகிவிட்டது. உன் அம்மா இந்த வயதில் கல்யாணம் செய்து உன்னையும் பெற்றுவிட்டாள். . நீயும் திருமணம் செய்ய வேண்டியவள்தானே? நேற்று எனது பழைய நண்பன் ஒருவன் ஒரு நல்ல இடத்து மாப்பிள்ளையை உனக்குப் பேசி வந்தான். நான் ஒரு மறுமொழியும் கூறவில்லை. நாளை வருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். நான் அவனிடம் என்ன சொல்லவேண்டும் என்று கேட்பதற்கே உன்னை அழைத்தேன். மாப்பிள்ளையைப் பெண் பார்க்க அழைத்து வரும்படி சொல்லவா?” என்றார் பரமானந்தர் தந்திரமாக.

பத்மாவின் முகம் திருமணம், மாப்பிள்ளை என்ற வார்த்தைகளைக் கேட்டதும், குப்பென்று சிவந்துவிட்டது, என்னதான் படித்த பெண்ணென்றாலும் நாணத்தின் நடுக்கம் அவள் உடலெங்கும் பாவவே செய்த்தது. அப்பாவின் முகத்தைப் பார்ப்பதற்கே கன்கள் கூசின.

நிலத்தைப் பார்த்த வண்ணமிருந்தாள். அவள் நாக்கு அவளது துடிக்கும் செவ்விதழ்களைத் தடவியது. என்ன சொல்வதென்று தெரியாது திக்குமுக்காடிவிட்டாள்.

“என்ன பத்மா, பேசு. சொல்லவேண்டியதைச் சொல்” என்றார் பரமானந்தர்.

பத்மா வெறுமனே தலையை ஆட்டினாள்.

“வெறுமனே தலையை ஆட்டினால் அதன் பொருள்? வெட்கத்துக்காகப் பேச வேண்டியவற்றைப் பேசாது விடலாமா? ஒன்றுக்கும் பயப்படாது மனதிலுள்ளதைச் சொல்லு, பிள்ளை. நான் உனது இஷ்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய மாட்டேன்” என்றார் பரமானந்தர்.

தந்தையின் இந்த வார்த்தைகள் அவளுக்குத் தைரியமூட்டின. பேசுவதற்குத் தீர்மானித்தாள். ஆனால் பேச்சுத்தான் வரவில்லை. ஆனால் பரமானந்தர் மேலும் “பேசு பேசு” என்று வற்புறுத்தவே, வெட்கம் சிறிது சிறிதாக மறைந்தது. மனத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நான் ஸ்ரீதரைத்தான் கல்யாணம் செய்வேன்” என்றாள் தயக்கத்துடன்.

“என்ன ஸ்ரீதரையா? ஆனால் ஸ்ரீதர் அதற்குச் சம்மதமா?” என்றார் பரமானந்தர்.

“ஆம்” என்றாள் பத்மா.

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

“சொல்லியிருக்கிறார்.”

“ஓகோ, அப்படியானால் விஷயம் தீர்மானமாகி விட்டது. ஆகவே கல்யாணம் பேசி வந்தவனிடம் பத்மாவுக்குக் கல்யாணம் தீர்மானமாகிவிட்டது - ஸ்ரீதருடன் என்று சொல்லி விடவா, நாளைக்கு?”

“ம்” என்றாள் பத்மா நாணப் புன்னகையுடன்.

“சரி எனக்கு ஆட்சேபனையில்லை. ஸ்ரீதருக்கும் சொல்லிவிடு. சரி, போ படு,” என்றார் பரமானந்தர். சிறையிலிருந்து வெளிப்பட்டவள் போல் துள்ளி” எழுந்தோடினாள் பத்மா.

கட்டிலில் போய்ப் படுத்த அவள் அன்றிரவு முழுவதுமே நித்திரை கொள்ளவில்லை. இரவு முழுவதும் தன் எதிர்க்காலத்தைப் பற்றிப் பகற் கனவுகள் கண்டு கொண்டிருந்தாள் அவள்.

இதற்கு இரண்டு நாள் கழித்து ஸ்ரீதர் சுரேஷிடம் ஒரு கடிதத்தைக் காட்டினான் களிப்போடு. அது பத்மாவின் கடிதம். முத்து முத்தான எழுத்துகளில் மூன்றே மூன்று வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.

'அப்பா நான் உங்களை மணமுடிக்க அனுமதி தந்து விட்டார். இதைவிட வேறென்ன இன்பம் வேண்டும் எங்களுக்கு? நாளை நண்பகல் என்னை வழமையான இடத்தில் கட்டாயம் சந்தியுங்கள்! - பத்மா'

ஸ்ரீதரின் உள்ளம் இக் கடிதத்தால் களிப்புற்றதாயினும் ஒரு வித கலக்கமும் அவனைப் பிடிக்கலாயிற்று. அவன் தன் ஆள் மாறாட்ட நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது. ஆனால் இதனைக் கண்ணியமான முறையில் எவ்வாறு செய்து முடிப்பது என்ற பிரச்சினைக்கு அவனால் எவ்விதமான விடையும் காண முடியவில்லை.  [தொடரும்]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R