அவுஸ்திரேலியாவில்  வசிக்கும்  எழுத்தாளரும்  ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி  அவர்கள்   நீண்ட  காலமாக  உள்ளத்தில்  பூட்டி வைத்த  பல  இரகசியங்களை  சொல்ல  மறந்த  கதைகள்  என்று கோடிட்டு   சொல்லியுள்ள  நூல்தான்  சொல்ல  மறந்த  கதைகள். ஒவ்வொரு  ஆண்   பெண்ணிடமும்  மனம்  என்னும்  அதளபாதாளத்தில் பல  இரகசியங்களைக்  கொண்ட  பல  அடுக்குகள்  தொல்பொருள் போல   புதைந்து  கிடக்கின்றன.

" நான்  வெளிப்படையானவன் "  எனச் சொல்லும்  ஒவ்வொரு மனிதனும்  உண்மையில்  வெளிப்படையானவர்கள்தானா ? என்ற சந்தேகம்  இருக்கவே  செய்கின்றது.
பொதுவாழ்வில்  ஈடுபடுவோரும்  எழுத்து,  ஊடகத்துறையில் ஈடுபடுவோரில்   அங்கொன்றும்  இங்கொன்றுமாக  சிலரும்  தமது அனுபவங்களை   வெளிப்படையாக  எழுத்து  மூலமாக பொதுவெளிக்குக்  கொண்டு வந்திருக்கிறார்கள். சில  உண்மைகளை  காலம்  வெளிக்கொண்டு  வரும்  என்பதற்கு உதாரணமாக   இருப்பதுதான்  லெ.முருகபூபதி  அவர்களின்  சொல்ல மறந்த கதைகள்   என்ற  நூலாகும்.

மண்ணுக்கு  மேல்  கற்களைப்  பரப்பி  வைத்தாலும்  புதையுண்டு கிடக்கும்   விதை,  கற்களுக்கிடையில்  கிடைக்கும்  இடைவெளிக்கூடாக   முளையாகி  வீரிட்டு  எழுவது  போல் எழுந்திருக்கிறது.   இந்நூலில்  கிட்டத்தட்ட  19  தலைப்புகளில்  தனது அனுபவங்களைப்   பகிர்ந்திருக்கிறார்  நூலாசிரியர். நம்பிக்கை,   எதிர்பாராதது,  காவி  உடைக்குள்  ஒரு  காவியம், காலிமுகம்,   கண்ணுக்குள்  சகோதரி,  உயிர்ப்பிச்சை,  கண்டம், விபத்து,   தமிழ்  மூவேந்தர்களும்  ருஷ்ய  மன்னர்களும்,  அநாமதேய தொலைபேசி   அழைப்பு,  வீணாகிப்  போன  வேண்டுகோள்,   லிபரேசன்  ஒப்பரேசன்  ஒத்திகை,  நிதானம்  இழந்த  தலைமை, வழிகாட்டி  மரங்கள்  நகருவதில்லை,   காத்திருப்பு - புதுவை இரத்தினதுரை,    ஏரிக்கரைச்  சிறைச்சாலை,   மனமாற்றமும் மதமாற்றமும்,   மரணதண்டனைத் தீர்ப்பு ,  மனிதம்,  பின் தொடரும் வியட்நாம்  தேவதை  ஆகிய  தலைப்புகளில்  எழுதப்பட்ட  ஒவ்வொரு அனுபவக் கட்டுரையும்   ஒரு  சிறுகதை  வடிவத்தைப்  பெற்று நிற்கின்றன.
உண்மைகளைப்   பேசுவதற்குத்  துணிவு  வேண்டும். ஆவணப்படுத்தலில்   இது  ஒரு  தனிரகம்.   எழுத்து  ஊடகங்கள் சிந்தனை   விரிவாக்கத்தால்  புதுப்புது  கிளைகளாக  வளர்ந்து நிற்கின்றன. இந்நூலில்   உள்ளவற்றை   முழுமையாக  வாசகர்கள்  முன்  கொண்டு வந்து   வைப்பது  சிரமமானது.   ஏனெனில்  ஒவ்வொரு  தலைப்பின்  கீழ் எழுதப்பட்டவற்றை   விபரிப்பதாயின்  அதுவும்  ஒரு  நூல்  வடிவைப் பெற்றுவிடும்.   எனவே   சில  தலைப்புகளின்  கீழ்  எழுதப்பட்டவற்றில் ஆங்காங்கே   சில  பக்கங்களில்  உள்ளவற்றை மிகச்  சுருக்கமாகத்தர முயற்சிக்கிறேன்.

நம்பிக்கை   என்ற  தலைப்பில்  இடம்பெறும்  பதிவு,   சிங்கள அரசியல்வாதிகளுக்கு   இருந்த  சோதிட  நம்பிக்கையை வெளிப்படுத்தி    நிற்கின்றது.   அரசியலில்  தமது  எதிர்காலம்  எப்படி அமையும்   என்பதையும்  தாங்கள்  எடுக்க  வேண்டிய  பரிகாரம்  என்ன என்பது   பற்றி  வத்தளையில்  இருக்கும்  தமிழ்  சோதிடரிடம்  தமிழில் இருந்த   சாதகத்தை  காட்ட  அவர்  பலாபலன்களைத்  தமிழில்  சொல்ல தான்   அதனை  சிங்களத்தில்  மொழிபெயர்த்துச்  சொன்னதை விபரிக்கிறார்   இப்பகுதியில். எதிர்பாராதது   என்ற   தலைப்பில்,   மாஸ்கோவில்  நடந்த  12  ஆவது சர்வதேச   மாணவர்  இளைஞர்  மாநாட்டில்  கலந்து  கொண்டபோது அங்கும்   தொழுகை  நடத்துவதற்கு  வசதி  செய்து  தரப்பட்டதை ஆச்சரியத்துடன்   குறிப்பிடும்  அவர்,   தமக்கு  வழிகாட்டியாக  வந்தவர் சிங்களம் , தமிழ்,  ஆங்கிலம்  பேசக்கூடியவர்  என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

காலிமுகத்தில்  வீதிநிர்மாணத்தில்   பணிகளைச்  செயல்படுத்தும் செயலாக்காளராக   பணி  செய்த போது  முன்னாள்  பிரதமர் தகநாயாக்காவை   மிக  எளிமையான  மனிதராக  சந்தித்ததை காலிமுகம்    என்ற   தலைப்பின்  கீழ்  விபரித்திருக்கிறார்.   பிரதமர் பதவியிலிருந்த  அவர், தேர்தலில்  தோல்வியுற்ற போது  தனது  விலகல் கடிதத்தை   அளித்துவிட்டு,  சபாநாயகரிடம்  சொல்லிவிட்டு,  பஸ்ஸில் ஏறிப் போனதை   வியப்புடன்  பார்த்து -  தமிழகத்தின்  முதலமைச்சராக   இருந்த  காமராஜருடன்  ஒப்பிட்டு  தனது உணர்வுகளை   நூலாசிரியர்  இத்தலைப்பில்  பகிர்ந்திருக்கிறார்.


கண்ணுக்குள்  சகோதரி   என்ற  தலைப்பில்,  ஜே.வி.பி.  என்று ஆங்கிலத்தில்   சுருக்கமாகச்  சொல்லப்பட்ட  மக்கள்  விடுதலை முன்னணியின்   காலத்தில் ,  1971 ஆம்  ஆண்டு  நடைபெற்ற   ஆயுதக் கிளர்ச்சி   பற்றிக் குறிப்பிட்டு,    ஆயிரக்கணக்கான  இளைஞர்களைப் பலி கொள்ளுவதற்கு    காரணகர்த்தாக்களான -  சூத்திரதாரிகளான ரோகண விஜேவீரா,   லயனல்  போப்பகே,  உபதிஸ்ஸ  கமநாயக்கா, லொக்கு   அத்துல,   பொடி  அத்துல,  தர்மசேகர,  விஜயசேகர ஆகியோரின்   கைதுக்குப்  பின்  கிளர்ச்சி  முடிவுக்கு  வந்ததைக் குறிப்பிட்ட   நூலாசிரியர்,    இலங்கை  ஆசிரியர்  சங்கப்பணிமனையில்   சிங்களப்  பிரசுரங்களை  தமிழில் மொழிபெயர்த்து , சுவரொட்டிகளை  தான்  எழுதும்போது  தனது கண்ணில்   சிவப்பு  மை  விழுந்து  அதனால்  தான்  கஸ்டப்பட்ட போது அங்கு   பணியாற்றிய  சிங்களச் சகோதரி,  தனது  வீட்டில்  தனது தாயாரிடமோ   அல்லது  யாரிடமோ   தாய்ப்பாலை   வாங்கிக் கொண்டு   வந்து  அன்பாக  சகோதரா  என  அழைத்து  தனது  கண்ணில்   விட்டதை  நெகிழ்ச்சியுடன்  குறிப்பிடுகிறார்.

1984  ஆம்  ஆண்டு  நீர்கொழும்பில்  நடந்த  சம்பவத்தை  இவ்வாறு விபரிக்கிறார்,  "  நீர்கொழும்பில்  எனது   வீட்டுக்கருகாமையில்  உள்ள வீடுகளிலிருந்து   அழுகுரல்கள்  கேட்டன, விசாரித்த  போது  மடுமாதா கோவிலுக்குப்   போன  அந்த  வீடுகளைச்  சேர்ந்த  இளைஞர்கள் இயக்கத்தினால்   கடத்தப்பட்டதனால்  நீர்கொழும்பில்  பதட்டம்  ஏற்பட ஓர்   இரவு  தன்னைத்  தேடிவந்த  இளைஞர்கள், "  நீங்கள் வீரகேசரியில்தானே   வேலை  செய்கிறீர்கள் ? எங்கடை   ஆட்களை உங்கடை   ஆட்கள்  கடத்திப்  போட்டார்கள்  செய்தி  போட  எவ்வளவு காசு ?  எனக் கேட்க,  "  செய்திக்கு  காசு  வாங்குவதில்லை " என்று சொல்லிவிட்டு,  " கடத்தப்பட்ட    இளைஞர்களை  மனிதாபிமானத்துடன் விடுவிக்க   வேண்டுமென்ற  " செய்தி  வீரகேசரியில்  வந்திருப்பதை அவர்களுக்குக்   காட்டி,  பத்திரிகையை  அவர்களிடமே  கொடுத்ததை விபரிக்கும்    நூலாசிரியர்,    சிங்கள  இளைஞர்கள்   கறுப்புக் கொடி கட்டுவதற்கும்    சத்தியாக்கிரகம்  இருப்பதற்கும்  காவல்துறையிடம் அனுமதி     கேட்ட  போது , அவர்கள்  அதற்கு  மறுத்து, " காவல்துறையினரையும்    இராணுவத்தினரையுந்தான்  இயக்கம் சுட்டுக் கொல்லுகின்றது .  அனுமதி  தர  முடியாது ,   நீர்கொழும்பில் பதட்டமேற்படும்   வேண்டாத  விபரீதங்கள்  ஏற்படலாம்  என   இன ஐக்கியத்தை   சிதைக்கக்கூடாது  என்ற  அந்த  காவல்துறை அதிகாரியின்   நேர்மையான  மனிதாபிமான  செயலைச்  சொல்லாமல்    சொல்லி  ஒரு  நல்ல  அதிகாரியை இனங்காட்டியிருக்கிறார்.

நீர்கொழும்பை   பிறப்பிடமாகக்  கொண்டு  வாழ்ந்த  நூலாசிரியர் 1983  ஆம்  ஆண்டு  நடந்த  இனக்கலவரம்  காரணமாக  யாழ்ப்பாணம் அரியாலைப்   பகுதியில்  இடம்பெயர்ந்து  குடும்பமாக  வாழ்ந்த போது தனது    அனுபவங்களை,   இயக்க  இளைஞர்களுடனான அனுபவங்களை    வழிகாட்டி  மரங்கள்   நகருவதில்லை  என்ற தலைப்பில்    விரிவாகவே   குறிப்பிட்டிருக்கின்றார்.

காத்திருப்பு -  புதுவை இரத்தினதுரை  என்ற   தலைப்பில், நூலாசிரியர்    புதுவை   இரத்தினதுரை   மீது  வைத்திருந்த மதிப்பையும்    அன்பையும்  அவருடனான  நட்பினையும் அனுபவத்தையும்   பல  இடங்களில்  விதந்துரைக்கிறார். " சிலாபம்  முன்னேஸ்வரத்தில்  தேர்  நிர்மாணிப்பு  பணிகளுக்காக வந்திருக்கிறார்.   சிறந்த  சிற்பி.   அவரது  கையில்  எழுதும்  பேனை மட்டுமல்ல,    மரங்களைச்  செதுக்கி  அற்புதமான  சிலைகளை நேர்த்தியாக    வடிவமைக்கும்  கூரான  உளியும்  இருந்ததை  எத்தனை பேர்   அறிவார்கள்?"

" முன்னேஸ்வரம்  தேவஸ்தானத்தில்  சில  உருவச்சிலைகளைப் பார்த்துவிட்டு   அவற்றின்  முன்னே   கண்ணீர்  மல்க,  அவற்றின் வடிவமைப்புகளைப்  பார்த்துக்  கொண்டு  அவர்  நின்றதாக   சிலாபம் உடப்பு    பாடசாலை  ஒன்றின்  அதிபர்  சொல்லியிருக்கிறார்"

" இப்படி  மென்மையான  இயல்புகளைக்  கொண்ட   புதுவை இரத்தினதுரை,    வெடிமருந்துகளுக்கும்,    சயனைற்  குப்பிகளுக்கும், ஆயுதங்களுக்கும்    மத்தியில்  எப்படி  வாழத்தலைப்பட்டார் ?  என்பது கண்டறியப்படாத   ரிஷிமூலம்"

இத்தலைப்பில்,  "  போர்  என்றால்  உயிரிழப்பு  தவிர்க்க  முடியாதது, சரணடைய   முன்னர்  அவர்கள்  ஏன்  சயனைற்  குப்பிகளை மறந்தார்கள் "  என்றும்  நெஞ்சில்  துளியளவு  ஈரமும்  இல்லாமல் பேசியவர்கள்    எங்கள்  புலம்பெயர்ந்த  தமிழ்மக்கள் மத்தியிலிருக்கிறார்கள்"   என்பதும்   பதியப்பட்டிருக்கின்றது.
நூலாசிரியர்,   புதுவை  இரத்தினதுரையை   மீண்டும்  சந்திக்க வேண்டும்.    சரணடைந்த  அவர்   உயிரோடு   திரும்பி    வருவார்   என்ற நம்பிக்கை    காத்திருப்பைக் கொண்டிருக்கிறார்.

இந்நூல்   முழுவதையும்  வியப்புடன்  வாசித்தேனெனினும்,  நான் மேலே   குறிப்பிட்ட  எல்லாத்  தலைப்புகளின்  சாராம்சங்கள்  பற்றியும் குறிப்பிடவில்லை.    ஆரம்பத்தில்,   ஏற்கனவே   குறிப்பிட்டது  போல ஒவ்வொரு    வரியையும்  அந்த  வரிகளுக்குள்  இருந்த  ஒளிவு மறைவற்ற    உண்மைகளையும்  சிலாகித்து  எழுதுவதானால்  அதுவே ஒரு   நூலாகிவிடும்.

இந்நூலை   வாசித்த  போது  நூலாசிரியரின்  என்ற    இந்நூலுடன்  அவர்  சொல்ல வந்தவை  அல்லது  அவர்  சந்தித்த  சமகால  உண்மை அனுபவங்கள்   முற்றுபெற்றுவிட்டனவென்றோ   நிறைவு பெற்றுவிட்டனவென்றோ   சொல்ல  முடியாது.  பல  அடுக்கு உண்மைகள்   தொல்லியல்  போல  அவரின்  மனதிற்குள்ளும் அறிவிற்குள்ளும்    இன்னும்  ஏராளம்  உண்டு  என்பது  எனது  திடமான முடிவாகும். அதிலும்   சொல்லிய  தலைப்புகளில்,  இன்னும்  சொல்ல  வேண்டியவை நிறைய இருக்கலாம்  என்பதும்  எனது  கணிப்பீடு.   பிறிதொரு சந்தர்ப்பத்தில்   பாகம்  இரண்டை   எழுதுவார்  என  நம்புகிறேன். இந்நூல்   சமூகப்பயம்  கருதியோ , அல்லது  தன்னைப்  பற்றிய சமூகத்தின்   மதிப்பில்  பாதிப்பு  ஏற்பட்டுவிடுமோ   என்ற கௌரவத்திற்கப்பால்,   ஒரு  எழுத்தாளன்  தனது  பேனாவில்  உண்மை என்ற   ஒன்றை  அறம்  என்ற  மையை  நிரப்பி  எழுதிய  நூல்  இது. இந்நூலை   வாசிப்பவர்களுக்கு  புது  அனுபவம்  கிடைக்கும்.   இதுவரை அறியாத    சமூக  மாந்தரின்  நடத்தைகளை   இந்நூல்  மூலம்  அறிய முடியும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R