- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -

1. கவிதை: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!

அழுது அழுது அழுதபின் அன்னை
விழுதெனக் கண்டனள் வேர்!

அன்றும் பிறந்தனன் அன்னை மடியிலே
இன்றும் பிறந்தேன் இயம்பு!

பொழுது புலரும் பொழுதினில் இன்றென்
எழுபதில் நுழைந்தேன் இனிது!

தேவரம் சொல்லித் திரவியம் சேர்த்தனள்
பாவரம் தந்தவென் தாய்!

மரபுங் கணமும் மழலைத் தமிழாள்
உரமுங் குளித்தேன் உலகு!

ஏழுபத்தும் என்னை இதயத் திருத்தியவள்
வாழும் தமிழ்தந்தாள் வான்!

இன்று புதிதாய்ப் பிறந்தேன் இனியொரு
மன்றில் உதித்திடும் வண்ணம்!

ஆயிரங் கண்கள் உடையவ ளாமெங்கள்
தாயெனும் தண்தமி ழாள்!

இரவில் உதிப்பனிச் சூரியன் ஞான்றும்
மரபோ டெழுதிடும் வான்!

கவிதையும் வார்ப்புக் கலசமாய் ஊற்றுப்
புவியிலு மென்தமிழ் பேசும்!

எழுபதி லிந்நாள் எழுகவே யென்றோர்
விழுமம் படைத்தனள் வேதம்!

தமிழே அமிழ்தே தரணியி லென்றன்
எழுபதுங் கண்டேன் இயம்பு!


2. கவிதை: தமிழ்மரபும் தைமரபும்!

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - - வெண்பனி தூவ வீசுங் குளிர்காற்று
கண்களைப் பிய்க்கக் கரத்தில் தடியூன்றி

நேரம் உரைத்து நெடுந்தெருவில் ஓடிவரும்
தூரப் பெருவண்டி துள்ளிக் குதித்தேறி

இந்தப் பொழுதில் எழிலாய் அமர்ந்திருக்கும்
சொந்தம் உடைத்தோரே சுற்றம் எனக்கூடி

ஆரச் சோர அமர்ந்திருக்கும் இப்போதில்
ஊரைப் பாடி உலகத்தைப் பாடி

தமிழ்மரபு ஊர்ந்து தையின் திருநாளை
அமிழ்தம் எனவுரைத்த ஆட்சிப் புகழ்பாடி

வாக்கும் மனமும் வணக்கமும் தெண்டனிட்டுத்
தூக்கும் அடிபணிந்து தெய்வத் திருத்தாளை

ஆக்கும் இவனோர் அரும்பிள்ளை வந்தான்காண்!
நாக்கும் உரையும் நவின்றிடுமோர் இச்சபையில்

கன்னற் கவிதை கனிந்ததென நீவிரெலாம்
சொல்லிக் கொள்ளவொரு சித்தம் எனக்கின்றிப்

போனாலும் என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்!
ஆனாலும் இன்பம் அளந்த பொழுதிதுகாண்!

மூத்தோர் சபையில் மூதறிஞர் தன்னோடும்
வீற்றோர் அருகே விருந்துத் தமிழுண்ண

இந்தப் பொழுது எனக்குக் கிடைத்தவொரு
நிந்தம் எனநினைத்து நெஞ்சாரக் காண்கின்றேன்!

நோக்கிப் பரவி நினைத்துக் கனடியத்தை
ஏற்றுப் பரவி இதுபோது வந்தேன்காண்!

இரவில் தொலைந்து இனமும் அழிந்து
துரவும் அழிந்த தூரலின் பின்பே

மரபும் தமிழும் மதித்துக் கனடா
பரவும் பொழுதிதுதான் பாருங்கள் தோழரீர்!

நேற்று இருந்ததெலாம் நின்றதiனைப் பாருங்கள்
போற்றும் மரபுப் பெருவிருட்சம் அதுவேதான்!

சுருவில் பெருநகரம் சேர்ந்த தெருவில்
கருவில் உதித்த காலத்து வர்த்தகர்கள்

கோர்த்துக் கொழும்பைக் கொண்டாடிப் போந்தவர்கள்
நேற்றுக் கொலைகாண நின்றார் அவர்பூமி!

தாயின் வயிற்றில் தவழ்ந்த குழந்தையும்
தாயையும் சேர்த்துத் தறித்தான் ஒருவனடா!

இரவில் மரம்முறியும் இடும்பன் வருவதுபோல்
வரவில் நிலம்பதறும் வாள்மனிதர் கண்டு

குளறுஞ் சத்தம் கிளர்ந்த நிலம்ஓடிக்
குருதிக் கடலாறு கொடுக்கும் மறுகணமே

வாள்கொண்டு ஈட்டி வதைகள் புரிந்தவனோ
நீள்வேலி யோடு நிறுத்தி மறைத்துவைக்க

ஏவியவன் ஈட்டிவாள் எல்லோரும் ஓர்வீட்டில்
தாவி யிருக்கத் தனித்ததுவெம் வாழ்வுமடா!

மரபு அழிந்துபட வாழ்வு அழித்துவரும்
இரவு எழுந்ததம்மா! எங்கள் காரிகையர்

தலையைக் கலைத்து சாமி வணங்கும்
நிலத்து மரபொன்று நீள்நிலத்தில் வந்ததம்மா!

முகநூலில் சந்தித்து முகமிழந்த ஒருசாதி
சகதியாய் ஆன சரித்திரங்கள் நடக்குதம்மா!

பெண்ணா இவள்என்று பேசும் அளவிற்கு
மண்ணாய்ப் போச்சுதம்மா மரபும் திருநாளும்!

முகந்தெரியாக் காதல் முதலிட்டுக் காசு
அகழ்ந்து சடலங்கள் ஆக்குதடா பாரீரே!

காணிகள் எல்லாம் கவர்ந்து நிலமாடி
ஆணிகள் இட்டு அடித்தார் சவமாகி!

ஏமாற்றல் நாடகங்கள் ஈன மனங்களுடன்
காமுற்றுக் காணும் கணக்கற்ற சேதிகளை

செய்திப் பரப்பாகிச் செத்து மரபெல்லாம்
பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போக ஒருசாதி

மையாய் மரபெல்லாம் மனதில் வளர்த்தவராய்
நெய்யாய்ப் பூமியெலாம் நெஞ்சில் வரைகின்றார்!

மரபுந் திருநாளும் வளர்கின்ற மாண்பும்
உரமென்று காக்கும் ஒருதமிழன் இன்னும்

வரமென்று வாழும் வரையிலும் எம்தமிழின்
மரபென்ற வேரின் மாண்பு இருக்குமம்மா!

என்னை அழைத்தீரே! என்பாடல் முறையற்ற
தன்மை எனக்கண்டால் சபையோரே மன்னிப்பீர்!

நாளை யொருநாளில் நாமெல்லாம் மீளுரைக்கும்
வேளை வருமென்பேன்! மீண்டொருநாள் சந்திப்போம்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R