நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்களாகும். இப் பதினெட்டு நூல்களையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். அதே போல சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய 1. திருக்குறள், 2. நாலடியார், 3. நான்மணிக்கடிகை, 4. இன்னா நாற்பது, 5. இனியவை நாற்பது, 6. திரிகடுகம், 7. ஆசாரக் கோவை, 8. பழமொழி நானூறு, 9. சிறுபஞ்சமூலம், 10. ஏலாதி, 11. முதுமொழிக் காஞ்சி, 12. ஐந்திணை ஐம்பது, 13. திணைமொழி ஐம்பது, 14. ஐந்திணை எழுபது, 15. திணைமாலை நூற்றைம்பது, 16.கைந்நிலை, 17.கார் நாற்பது, 18. களவழி நாற்பது ஆகிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர். இப் பதினெட்டு நூல்களையும் ஒரு நான்கடி வெண்பாவில் அமைத்திருக்கும் சிறப்பினையும் காண்போம்.

'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.'

மேலும், இப் பதினெட்டு நூல்களையும் முப்பகுதிகளான 1. நீதி சார்ந்த 11 நூல்கள், 2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள், 3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் என்று வகுத்துக் கூறுவர்.

1. நீதி சார்ந்த 11 நூல்கள் - திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி.

2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள் - ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது.

3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் - களவழி நாற்பது.

இனி, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானதும், நீதி சார்ந்த பதினொரு (11) நூல்களில் ஒன்றானதுமான சிறுபஞ்சமூலம் என்ற நூலில் எவ்வாறான அறம் சார்ந்த விடயங்கள் பேசப்படுகின்றன என்பதையும் காண்பதே இக் கட்டுரையின் நோக்காகும்.

சிறுபஞ்சமூலம்.
இந்நூலைக் காரியாசான் என்பவர் இயற்றியுள்ளார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். இதில் 97 பாடல்கள் அமைந்துள்ளன. கண்டங்கத்தரி, சிறுவழுதுளை, பெருமல்லிகை, சிறுமல்லிகை, சிறுநெருஞ்சி ஆகியவற்றின் ஐந்து வேர்கள் சேர்ந்து மருந்தாகி, மக்கள் நோய்களைத் தீர்க்கின்றன. அதுபோலவே இந்நூற்பாடல் ஒவ்வொன்றிலும் அமைந்த ஐந்தைந்து அரிய பொருள்களும் உயிர் காக்கும் தன்மை கொண்டவை.

கடவுள் வாழ்த்து:- எல்லாம் உணர்ந்து, காமம் வெகுளி மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களையும் விலக்கி, முதுமை இல்லாத இறைவன் திருவடிகளை வணங்கி, அப்பெருமானின் சிறந்த குணங்களைப் போற்றி, இவ்வுலக மக்களுக்கு நன்மை உண்டாகும் வண்ணம் 'சிறுபஞ்சமூலம்' என்ற நூலுக்குக் கடவுள் வாழ்த்தை மரபு வழியில் நின்று தந்துள்ளார் ஆசிரியர் காரியாசான்.

'முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி ஆற்றப் பணிந்து – முழுதேத்தி
மண்பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா
வெண்பா உரைப்பன் சில.'

கற்புடைய மனைவி:- தன் கணவனுக்கு அழிழ்தம் போன்றவள். கற்க வேண்டிய நூல்களைக் கற்று அதன்படி அடங்கி நடப்பவன் உலகத்துக்கு அமிழ்தம் போன்றவன். நன்மைகள் பொருந்திய நாடு, அதை ஆளும் மன்னனுக்கு அமிழ்தம் ஆகும். அத்தகைய நாட்டுக்கு நல்ல தன்மையுடைய மேகத்தை அளாவுகின்ற கொடியையடைய மன்னன் அமிழ்தம் போன்று இன்பம் செய்வான். அந்த மன்னனின் சேவகனும் மன்னனுக்கு நன்மையைச் செய்வானாகில் அவனும் அமிழ்தம் போன்றவன் ஆவான்.

'கற்புடைய பெண் அமிர்து கற்றடங்கி னான்அமிர்து
நற்புடைய நாடமிர்து நாட்டுக்கு – நற்புடைய
மேகமே சேர்கொடி வேர்தமிர்து சேவகனும்
ஆகவே செய்யின் அமிர்து.' - (பாடல் 04)

யானைப் படை:- நால்வகைப் படைகளில் யானைப் படை அழகாகும். பெண் இடை சிறிதாக இருத்தல் அழகாகும். ஒருவன் ஒழுக்கத்திற்கு நடுவுநிலைமை பிறழாமை அழகாகும். செங்கோல் ஆட்சிக்கும் நடுவுநிலைமை அழகாகும். போர் வீரர்க்குக் கெடாத வீரமானது அழகாகும். இவ்வண்ணம் இங்கே ஐவகை அழகு பேசப்படும் விந்தையைக் காண்கின்றோம்.

'படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடை தனக்கு நுண்மை வனப்பாம் - நடைதனக்குக்
கோடா மொழி வனப்புக் கோற்கதுவே சேவர்க்கு
வாடாத வன்கண் வனப்பு.' - ( பாடல். 07)

நாவிற்கு நன்றல் வசை:- சிலந்திக்குத் தன் கருவான முட்டையே இயமனாகும். எருது முதலான விலங்கிற்கு அவற்றின் நீண்ட கொம்புகளே இயமனாகும். வெற்றி உண்டாகாத மானுக்கு அதன் மயிர்தான் இயமனாகும். நண்டுக்கு அதன் குஞ்சுகளே இயமனாகும். ஒருவன் நாவுக்கு நன்மையில்லாப் பழிச் சொற்கள் இயமனாகும்.

'சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள் கோடு
விலங்கிற்றுக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை.' -- (பாடல். 11)

மன்னன் செங்கோல்:- தன்னை மணந்து கொண்ட கணவனின் சொற்படி தவறாமல் நடத்தல், இல்வாழ்க்கைக்குப் பொருந்திய இயல்பு ஆகும். தந்தைக்கு இடையறாது அவனது சொல்லின் வழியே தவறாமல் நடத்தல் ஒரு மகனின் தன்மையாகும். அவனைப் போன்றே ஒழுகுதல் தன் உறவினரின் குணமாகும். மன்னர் ஏவும் வேல் வழியே போய்ப் பகைவருடன் கூடாமல் அவரைவெல்கின்ற வழியால் இடைவிடாது போர் புரிந்து வாழ்தல் மன்னனின் பகைவரிடம் போயிருந்தவரின் இயல்பாகும். மன்னனின் செங்கோல் வழியே வாழ்தல் நாட்டின் குணமாகும்.

'கொண்டான் வழிஒழுகல் பெண்மகன் தந்தைக்குத்
தண்டான் வழியொழுகல் தன்கிளையஃது - அண்டாதே
வேல்வழி வெம்முனை வீடாது வன்னாடு
கோல்வழி வாழ்தல் குணம்.' -- (பாடல். 15)கற்றவர் தேவரைப் போல்வர்:- அறிவு நூல்களைக் கற்றவர் தேவரைப் போன்றவராவர் கல்லாதவர் பிசாசுகளைப் போன்றவர் ஆவர். முதுமைப் பருவம் வருவதற்கு முன்பே பொருளைத் தேடி வைத்துக் கொள்ளாதவர் அறிவற்றவராவர். முன்னர் யாம் செல்வம் உடையவராயிருந்தோம். அதனால் துன்பம் உடையோம் அல்லோம். அழகுடையோர் என்பவர் இரண்டு கால்களை உடையு எருதுக்கு நிகராவர்.

'தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்
பூதரே முன்பொருள் செய்யாதார் - ஆதரே
துன்ப மிலேம்பண்டு யாமே வனப்புடையேம்
என்பார் இருகால் எருது.' - (பாடல். 20)

தீய பெண்களின் ஐந்து செயல்கள்:- கள் உண்ணுதலும், ஆராய்ந்து பார்க்கின் தன் கணவனைப் புணராது பிரிந்து வாழ்தலும், நாணம் அற்றவளாய் மற்றவர் இல்லத்துக்குச் செல்லுதலும், பிறர் செயலை எண்ணி மற்றவருடன் ஆராய்தலும,; தீய மகளிரொடு நட்புக் கொள்ளலும் என்ற ஐந்தும் தீய பெண்களின் செயல்கள் ஆகும்.

'கள்ளுண்டல் காணில் கணவன் பிரிந்துறைதல்
வெள்கில ளாய்ப்பிறர் இல்சேறல் - உள்ளிப்
பிறர்கருமம் ஆராய்தல் தீப்பெண் கிளைமைத்
திறமதுதீப் பெண்ணின் தொழில்.' - (பாடல். 25)

குற்றம் இல்லா ஒருவன் இவ்வுலகில் இல்லை:- யாவற்றையும் அறியும் ஒருவனும், எதையும் அறியாத ஒருவனும், குணங்கள் முழுவதும் இல்லா ஒருவனும், குற்றங்கள் இல்லா ஒருவனும், நூல் தொகுதி முழுவதும் கற்றான் ஒருவனும் இவ்வுலகத்தில் இல்லை.

'ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் ஒருவன்
குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்
கணனடங்கிக் கற்றானும் இல்.' - (பாடல். 31)

நூல்களின் சொல் அழகே அழகு:- தலைமயிர் அழகும், மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், பல்லின் அழகும் ஆகிய ஐந்து அழகுகளும் அழகு ஆகாவாம். நூல்களிற் செறிந்துள்ள சொல்லின் அழகே சிறந்த அழகாகும்.

'மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கு இயைந்த
சொல்லின் வனப்பே வனப்பு.' - (பாடல். 37)

மனைவியின் கடமைகள்.:- சுற்றத்தாரிடம் சினம் கொள்ளாதிருத்தல், கணவனின் வருவாய்க்கேற்பச் செலவு செய்தல், உறவினரை வெறுக்காது அன்புடன் பாதுகாத்தல், விருந்தினரைப் பேணல், தெய்வ வழிபாடு இயற்றல் ஆகிய இவை ஐந்தும் மனைவிக்கரிய கடமைகளாகும். மனைவியின் கடமை பற்றி ஆசிரியர் கூறும் கருத்துக்கள் போற்றத்தக்கவையாம்.

'வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெருவாமை வீழ்ந்துவிருந்து ஓம்பித் - திருவாக்கும்
தெய்வத்தை எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு.' - (பாடல். 43)

ஐந்து அரண் உடையான் வேந்தன்:- மிக்க நீரும், காடும், சேறும், உயர்ந்து வானத்தைத் தொடும் பெரிய மலையும், சிறந்த காலாட்களும் உள்ளிட்டுச் சான்றோர் ஆராய்ந்தெடுத்த இந்த ஐந்தையும் அரணாக உடையவனை மன்னனாக நியமித்தல் முறையாகும்.

'நீண்ட நீர் காடு களர்நிவந்து விண்தோயும்
மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு - மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி' -- (பாடல் 49)

உயிரைக் கொல்லாமை நன்று:- பிற உயிரைக் கொல்லாமை நல்லது. கொல்லுதல் மிகத் தீமை எழுத்தைக் கற்றுக் கொள்ளாமை தீது. புpறரைப் சினப்பது தீமை. அறிவுடையவர் தனக்குச் சொல்வதற்கு முன்னம் தன்னைச் சேர்ந்தவர் அனைவரும் பழிக்காத வண்ணம் ஒழுகுபவன் இறைவன் ஆவதற்கு உரியவன்.

'கொல்லாமை நன்று கொலைதீ எழுத்தினைக்
கல்லாமை தீது கதம்தீது - நல்லார்
மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி.' - (பாடல். 51)

பெண்டிர்க்குக் கணவனை வளைக்கும் மருந்து:- நல்ல மக்களைப் பெறுதலும், அடக்கம் உடைமையும், அழகு உடைமையும், கணவனின் கருத்துக்கு ஏற்ப அவனுடன் உறைதலும், அவன் உண்ணும் உணவை விரும்புதலும். என்னும் இந்த ஐந்து குணங்களும் அற்பமானவை அல்ல. ஆதலால் பெண்டிர்க்கு இவ்வைந்து குணங்களும் தம் கணவனைத் தம்மிடத்தில் ஈர்க்கும் மருந்தாகும்.

'மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமை
ஒக்க உடனுறைதல் ஊணமைவு – தொக்க
அலவலை அல்லாமை பெண்மகளிர்க்கு ஐந்து
தலைமகனைத் தாழ்க்கும் மருந்து.' -- (பாடல். 53)

உழு தொழில்:- விளை நிலத்திலுள்ள வைக்கோலைத் தன்னிடம் உள்ளதாகத் திரட்டி, நாள்தோறும் உழுகின்ற எருதுகளைப் பாதுகாத்து, புல்லிய நிலத்தை நல்ல நிலமாகத் திருத்தி, எருவிட்டு, அதைப் போற்றிய பின்பு, பண்படுத்தல் கலப்பையால் உழுதல் என்ற இவற்றை அந்த உரம் இட்ட நிலத்தில் செய்பவன் உழு தொழிலில் சிறந்தவன். இவ்வாறு உழவு நூலை உணர்ந்த அறிவுடையவர் உரைப்பர்.

'நன்புலத்து ஐயடக்கி நாளுமா டோபோற்றிப்
புன்கலத்தைச் செய்துஎருப் போற்றியபின் - இன்புலத்தில்
பண்கலப்பை என்றிவை பாற்படுப் பான்உழவோன்
நுண்கலப்பை நூலோது வார்.' -- (பாடல். 60)


நீரறம் செய்தல் நன்று:- நீர் அளிக்கும் அறம் செய்தல் நன்று. நிழல் உண்டாகச் செய்யும் அறம் நல்லது, தன் வீட்டில் மற்றவர் உறைய இடம் கொடுக்கும் அறம் நல்லது, மற்ற உயிர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பானானால் அது சிறந்த அறமாகும். கோயிலுடன் மரங்கள் நிறைந்த சோலை நிலைபெறச் செய்தல் நல்லறமாகும். இவ்வைந்தையும் செய்வதற்குப் பேரின்பம் மிகுதியாய் உண்டாகும்.

'நீரறம் நன்று நிழல்நன்று தன்னில்லுள்
பாரறம் நன்றுபார்த்து உண்பானேல் - பேரறம்
நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சால வுடன்.' - (பாடல். 63)

ஏகும் சுவர்க்கத்து இனிது: நீர்நிலையைத் தோண்டி அதைச் சற்றி மரக் கிளைகளை நட்டு, மக்கள் நடக்கும் வழியை உண்டாக்கி, தரிசான நிலத்தில் உள் இடத்தைச் செப்பம் செய்து, உழும் வயலாக்கி, அவற்றுடன் வளமாய் உண்டாக்கிச் சுற்றுப் பக்கத்தில் கரையுண்டாகும் கிணற்றை உண்டாக்குதலுடன் கூடிய இந்த ஐந்து பகுதிகளையும் அமைத்தவன் துறக்க உலகத்தில் இனிதே செல்வான்.

'குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீது
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம்தொட்டுப்
பாகுபடுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது.' - (பாடல். 66)

ஐவருக்கும் பாவம் உண்டாம்:- ஓர் உயிரைக் கொன்றவன், மற்றவர் கொலை செய்யத் தானும் உடன்பட்டவன், நாணாமல் கொன்றதை விலைக்கு வாங்கியவன், அந்தக் கொன்ற ஊனைச் சமைத்தவன், சமைத்ததைக் கொடுக்க உண்டவன் என்று சொல்லப்பட்ட இந்த ஐவருக்கும் பாவம் உண்டாம்.

'கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாது
கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்கால் - கொன்றதனை
அட்டான் இடவுண்டான் ஐவரினும் ஆகுமெனக்
கட்டெறிந்த பாவம் கருது.' - (பாடல். 70)

பேரறம் என மொழிந்தார் முதுநூலார் முன்பு:- தாய் தான் பெற்ற குழந்தையை எடுத்து வளர்த்தல், தான் அடைந்த கருவை அழிக்காது வெளிப்படுத்தல், வளர்ப்பவர் இல்லாத குழந்தையைக் கண்டு எடுத்து வளர்த்தல், கருக்கொண்ட கன்னியையும் மிகவும் வருந்தியவளையும் (கைம் பெண்களையும்) வீட்டில் வைத்துப் பாதுகாத்தல் என்ற இந்த ஐந்தும் பழமையான நூலறிவோர் முன் காலத்தில் பெரிய அறமாக மொழிந்துள்ளனர்.

'ஈன்றெடுத்தல் சூல்புறம் செய்தல் குழவியை
ஏன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை - ஆன்ற
அழிந்தாளை இல்வைத்தல் பேரறமா ஆற்ற
மொழிந்தார் முதுநூலார் முன்பு.' - (பாடல். 72)

சூலாமை தரும் துன்பம்:- கருக்கொள்ளாமையால் வரும் துன்பமும், கருவால் உண்டாகும் துன்பமும், குழந்தையைப் பெற்ற பின்னர் அதை ஏற்றுக் கொள்ளாமையும், ஏற்றுக்கொண்டால் அதனை வளர்க்கும் அருமையும், வளர்த்த பின்னர் சால்புக் குணங்கள் இல்லாமையும் என்ற இந்த ஐந்தையும் நன்கு உணர்ந்தவர்கள் அதை ஆராய்ந்து எந்த உயிரையும் கொல்லாமையும் அதன் தசையை உண்ணாமையும் நல்லதாம்.

'சூலாமை சூலில் படும் துன்பம் ஈன்றபின்
ஏலாமை ஏற்றால் வளர்ப்பருமை – சால்பவை
வல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமை
கொல்லாமை நன்றால் கொழித்து' - (பாடல். 75)

அறிவுடையார் செயல்:- அறிவுடையார் திருமணம் இல்லாத விலைமகளிரை மனைவியாக வீட்டில் வைத்திருக்க மாட்டார், பாம்புப் புற்றின் மீது ஏறமாட்டார், தம்முடன் ஒட்டு இல்லாதவருடன் நட்புக் கொள்ளமாட்டார், போர்த் தொழிலில் வல்ல மன்னரின், வடிவில் மலை போன்ற யானை உள்ள இடத்தில் செல்லமாட்டார், கொடிய புலி திரியும் காட்டிலும் செல்ல மாட்டார்.

'வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற்று ஏறார்
புரைஇல்லார் நள்ளார்போல் வேந்தன் - வரைபோல்
கடுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார்
கொடும்புலி கொட்கும் வழி.' - (பாடல். 80)

விண்ணோரால் ஏத்தப் படுவர்:- ஒருவன் தன்னிடமிருந்து நீங்கியவற்றுக்கு இரங்காதவனாயும், தனக்குக் கிட்டாதவற்றை விரும்பாதவனாயும், சான்றோரால் இகழப்பட்டவற்றை விரும்பாதவனாயும், பொருள் இல்லாதவர் இரந்து வேண்டியவற்றை உள்ளம் மகிழ்ந்து இன்சொல்லுடன் கொடுப்பவனாயும் விளங்குவானாயின் அவன் தேவர்களால் துதிக்கப்படுபவன் ஆவான்.

'கழிந்தவை தானிரங்கான் கைவாரா நச்சான்
இழிந்தவை இன்புறான் இல்லார் - மொழிந்தவை
மென்மொழியால் உள்நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால்
இன்மொழியால் ஏத்தப் படும்.' - (பாடல். 82)

ஐந்தினையும் கற்பவன் சிட்டன் ஆவான்:- வழக்கமான இலக்கண நூலும், ஞான நூலும், அளவை நூலும், சமய நூலும், அறிவு மிக்க முத்தி நூலும் என்ற இவை ஐந்தினையும் கற்றறிபவன் சிறப்படைந்து தலையாய சிட்டன் ஆவான்.

'சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே
வித்தகர் கண்டவீ டுள்ளிட்டாங்கு அத்தகத்து
அந்தவிவ் வைந்தும் அறிவான் தலையாய
சிந்திப்பின் சிட்டன் சிறந்து.' - (பாடல். 86)

நாணம் இல்லாதவன்:- நாணம் இல்லாதவன், நன்கு பிறருடன் நட்புக் கொள்ளாதவன், தந்தை தாய் ஆகிய பெரியோரைப் பாதுகாவாதவன், பிறர் பணியாளனாய் உள்ளவன் ஆகியவர்கள் நாயைப் போன்றோராவர். இன்னும், பெருமையற்ற நகையை அணிந்த கொங்கைகளையுடைய பரத்தையரின் தொருவில் அவர் மீது கொண்ட ஆசையால் திரியும் கைப்பொருள் இல்லாதவன் பருத்தி விலை கூறுமிடத்துப் போய் நிற்கும் நாய் போன்றவன் ஆவான்.

'நாணிலன் நாய்நன்கு நள்ளாதான் நாய்பெரியார்ப்
பேணிலன் நாய்பிறர் சேவகன்நாய் - ஏணில்
பொருந்திய பூண்முலையார் சேரிகைத்து இல்லான்
பருத்தி பகர்வுழி நாய்.' - (பாடல். 88)

அம்பு பறத்தல் அரிது:- வஞ்சிக் கொம்பை வெல்கின்ற இடையையுடையவளே! ஒருத்தி பெண்மைக் குணம் உடையவளானால் அவளுக்கு நாணம் மிகவும் எளிது. ஒருவன் பிறன் ஒருவனுடன் நட்புக் கொள்வானானால் அவனுக்கு மகிழ்ந்து சிரிப்பது எளிதாகும். ஒருவன் வீரனானால் அவனுக்கு வலிமை எளிதாகும். ஒருவர் பெரியார் ஆனால் அவர்க்கு மற்றவரைப் போற்றல் எளிதாகும். எல்லாரிடத்தும் அன்புடையார்மீது, மற்றவர் எய்யும் அம்பு விரைந்து செல்வது அரிதாகும்.

'நாணெளிது பெண்மை நகையெளிது நட்டானேல்
ஏணெளிது சேவக னேல்பெரியார் - பேணெளிது
கொம்பு மறைக்கும் இடையாய் அளியன்மீது
அம்பு பறத்தல் அரிது.' - (பாடல். 89)

அறிவற்ற மனைவி தீயைப் போல்வாள்:- இளையவன் துறவை மேற்கொண்டு செய்தல் தக்கதாகும். செல்வம் உடையவன் உணவை வெறுத்து நோன்பு செய்தல் தகுதியுடையது. கற்புடையவளின் அழகானது தகுதியுடையது. ஒருவன் மனைவி அறிவற்றவளானால் தீயைப் போன்றும் நிழலில் முயிற்றை (சிவந்த) எறும்பு போன்றும் துன்புறுத்துவாள்.

'தக்கது இளையான் தவம்செல்வன் ஊண்மறுத்தல்
தக்கது கற்புடை யாள்வனப்புத் - தக்கது
அழல்தண்ணென் தோளால் அறிவில ளாயின்
நிழற்கண் முயிறாய் விடும்.' - (பாடல். 91)

மணவாழ்க்கை நன்று:- இல்வாழ்க்கை துறவறத்தைவிடச் சிறந்தது. தவறாது அதனைப் போற்றி ஒழுகின் அவர் துறவறத்தாருடன் வைத்து மதிக்கப்படுவர். நல்ல துறவறத்தாருக்குச் சமைத்துப் பகிர்ந்து இட்டு உண்டு மிகவும் இனிதாக முன் பிறவியில் வாழ்ந்தவரே, இந்தப் பிறவியில் சமைத்து அளித்து உண்டு மிகுதியாய் வாழ்ந்திருப்பவர் ஆவர்.

'புல்லறத்தில் நன்று மணவாழ்க்கை போற்றுடைத்தே
நல்லறத்தா ரோடு நடக்கலாம் - நல்லறத்தார்க்கு
அட்டிட்டுண்டு ஆற்றவாழ்ந் தார்களே யிம்மையில்
அட்டிட்டுண்டு ஆற்றவாழ் வார்' - (பாடல். 93)

ஈவது நன்று:- பிறர் வேண்டியதை ஈவது நன்றாம். ஈயாமை தீமையாம். நல்லவர் பொருந்தாதவருடன் பொருந்தி இருப்பது நல்லதாகும். இடைவிடாமல் நன்நெறிக்குரிய பொருளைக் கேட்டு அந்நெறியில் நிற்பது நன்றாம். அவ்வாறு நின்றால் அது அழிவற்ற வீட்டின்கண்ணே விரைந்து செல்லும் செலவில் மிகுதியாய் மேம்பட்டு நிற்கும்.

'ஈவது நன்றுதீது ஈயாமை நல்லவர்
மேவது நன்றுமே வாதாரோடு – ஓவாது
கேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கே
ஓட்டுத் தவநிற்கும் ஊர்ந்து.' - (பாடல். 94)

செத்தால் அறிக சிறந்து:- கற்புடைய பெண்ணும், வீரனும், குற்றம் இல்லாத அரிய தவத்தைச் செய்பவனும், குற்றம் இல்லாத பொருள் திறத்தில் செம்மையானவன் நல்லவன் எனத் தேர்ந்து எடுக்கப்படுபவனும், குற்றம் இல்லாமல் மன்னனால் தேர்ந்து எடுக்கப்பட்ட சால்பும் என்ற இந்த ஐவரும் மேலானவர்கள் ஆவர். இவர்களின் நற்குணங்களை இவர்கள் இறந்த பின்பும் சிறப்பாக அறியலாம்.

'பத்தினி சேவகன் பொத்தில் கடுந்தவசி
பொத்தில் பொருள்திறத்துச் செவ்வியான் - பொத்தின்றி
வைத்தா ரதுவழக்கும் சான்றவர் தம்செம்மை
செத்தால் அறிக சிறந்து' - (பாடல். 96)

ஆய்ந்து விடுதல் அறம்:- நல் வாழ்வை அடையும் பொருட்டு அதற்கான நன்நெறியை அறிந்தவர்கள் தீய சொற்களைச் சொல்வதுடன் மக்கள் நடக்கும்; வழியிற் சென்று துன்பமாதலும், பொருந்திய இருளுக்கு வருந்தாமையும், பொய்மையானது தாழ்வுபடுவதில் பொருந்துதலும், சான்றோர் மொழிகளில் அடங்கிய நீதிகளைச் சினந்து வெறுத்து விடுதலும் என்ற இந்த ஐந்தையும் ஆராய்ந்து நீக்கி விடுவதும் அறமாகும்.

'வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை
குறிப்படரல் தீச்சொற்களோடு - மொழிப்பட்ட
காய்ந்து விடுதல் களைந்துயக் கற்றவர்
ஆய்ந்து விடுதல் அறம்.' - (பாடல். 97)

முடிவுரை.
இதுகாறும், கடவுள் வாழ்த்து, கற்புடைய மனைவி, யானைப் படை, நாவிற்கு நன்றல் வசை, மன்னன் செங்கோல், கற்றவர் தேவரைப் போல்வர், தீய பெண்களின் ஐந்து செயல்கள், குற்றம் இல்லா ஒருவன் இவ்வுலகில் இல்லை, நூல்களின் சொல் அழகே அழகு, மனைவியின் கடமைகள், ஐந்து அரண் உடையான் வேந்தன், உயிரைக் கொல்லாமை நன்று, பெண்டிர்க்குக் கணவனை வளைக்கும் மருந்து, உழு தொழில், நீரறம் செய்தல் நன்று, ஏகும் சுவர்க்கத்து இனிது, ஐவருக்கும் பாவம் உண்டாம், பேரறம் என மொழிந்தார் முதுநூலார் முன்பு, சூலாமை தரும் துன்பம், அறிவுடையார் செயல், விண்ணோரால் ஏத்தப் படுவர், ஐந்தினையும் கற்றவன் சிட்டன் ஆவான், நாணம் இல்லாதவன், அம்பு பறத்தல் அரிது, அறிவற்ற மனைவி தீயைப் போல்வாள், மணவாழ்க்கை நன்று, ஈவது நன்று, செத்தால் அறிக சிறந்து, ஆய்ந்து விடுதல் அறம் என்ற இருபத்தொன்பது (29) தலைப்புகளில் அமைந்த பாடல்களில் அறம் சார்ந்த செய்திகள் பேசப்பட்டுள்ள பாங்கினை விரிவுபடுத்திப் பார்த்தோம்.

இந்நூலில் 97 பாடல்கள் அமைந்துள்ளன அதில், ஒவ்வொரு பாடல்களிலும் ஐந்தைந்து அறம் சார்ந்த பொருட்களாக ஒருமித்து 485 அறநெறிக் கூற்றுக்கள் மக்கள் மத்தியிற் செறிந்து, அவர்களை ஆற்றுப்படுத்தி, அவர்தம் வாழ்வியலை மேம்படச் செய்து, மக்களை முன்னிலையில் வைத்திருக்கின்றன என்பதை மறுக்கவோ! மறைக்கவோ!! முடியாதெனலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R