அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம், இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்ளை, குடும்பத்தின் மூல உழைப்பாளியான தனயனை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 1988 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து தங்கு தடையின்றி இயங்கும் இந்தத்தன்னார்வத்தொண்டு நிறுவனம், இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவி, அவர்களில் நூற்றுக்கணக்கான மாணவர்களை பல்கலைக்கழகம் வரையில் அனுப்பியிருப்பதுடன் தொடர்ந்தும் செயலூக்கமுடன் பணியாற்றிவருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதில்லை. அவ்வாறு அங்கு செல்லமுடியாத மாணவர்கள் தொழில் நுட்பக்கல்லூரிகளில் இணையும் வரையிலும் இந்நிதியம் உதவி வருகிறது. கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமங்களைச்சேர்ந்த மாணவர்கள் இந்நிதியத்தினால் பயனடைந்தனர்.

1988 முதல் எமது நிதியத்தின் திருகோணமலை மாவட்ட கண்காணிப்பாளராக இயங்கியவர் பல் மருத்துவர் 'ஞானி' ஞானசேகரன். அர்ப்பணிப்புள்ள தொண்டரான இவர் எளிமையாக வாழ்ந்து அந்தப்பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகத்தான சேவையாற்றியவர். அங்கிருந்த நெருக்கடிகளிலிருந்து தப்பிவருமாறு வெளிநாடுகளிலிருந்த அவருடைய நண்பர்கள் அழைத்தபோதும் அவர் அந்தப்பிரதேச மக்களை விட்டு விலகி வரவில்லை. வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் திருகோணமலை மாவட்ட செய்திகளை அவர் அடிக்கடி தந்தமையால் எனக்கும் நெருங்கிய நண்பரானார். திருகோணமலையில் போர் மேகங்கள் சூழ்ந்தவேளைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு தூதரகங்களின் ஆதரவையும் பெற்றுக்கொடுத்தவர்.

ஒரு சமயம் அங்கு நிகழ்ந்த குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு தமிழ்ச்சிறுமியை ஞானியே கொழும்புக்கு அம்புலன்ஸில் அழைத்துவந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததுடன், வீரகேசரி நிறுவனத்தின் அதிபர்களின் ஆதரவுடன் நிதிசேகரித்து மருத்துவச்செலவுகளுக்கும் வழங்கியதுடன், அச்செய்தியின் மூலம் வெளிநாட்டு தூதரகங்களினதும் பார்வை திருகோணமலை மீது படருவதற்கு வழிகோலியவர். அவர் செயலூக்கமுள்ள (Activist) தொண்டர். சப்பாத்தும் அணியமாட்டார். காலில் இறப்பர் சிலிப்பருடன் திருகோணமலையில் அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்று மக்களின் தேவைகளை கவனித்தவர். கொழும்புக்கு வரும்பொழுதும் அவர் காலில் தேய்ந்துபோன சிலிப்பர்களைத்தான் பார்த்திருக்கின்றேன். அவ்வளவு எளிமையான மனிதப்பிறவிதான் பல்மருத்துவர் ஞானி. 1988 இல் அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை தொடக்கியபோது எமக்கு உதவுவதற்கு முன்வந்த ஞானி, திருகோணமலை மாவட்ட மாணவர் கண்காணிப்பாளராக இயங்கினார். அக்காலப்பகுதியில் இம்மாவட்டத்தில் மூதூர், சம்பூர், தம்பலகாமம், கிண்ணியா, பச்சநூர், கட்டைப்பறிச்சான், சேனையூர், கூனித்தீவு முதலான கிராமங்களில் போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு நிதியம் உதவியது.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அமைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபையில் முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் தெரிவானார். இச்சபையின் தலைமைச்செயலகம் திருகோணமலையிலேயே அமைந்தது. இக்காலப்பகுதியில் எங்கள் ஞானியும் காணாமல்போனார். அவரது உடலும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இறுதியாக அவரது அமைப்பிற்கு அனுப்பிய நிதியுதவியும் மாணவர்களிடம் போய்ச்சேரவில்லை. அந்தப்பிரதேசத்தில் போர் நெருக்கடிக்கு மத்தியிலும் துணிச்சலுடன் பாதிக்கப்பட்ட மக்களோடு நின்றவரின் திடீர் மறைவு, எமது கல்வி நிதியத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எமது கல்வி நிதியத்தின் சமகால துணைத்தலைவர் பல் மருத்துவர் ரவீந்திரராஜாவுடன் இலங்கை பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப்படித்தவர்தான் ஞானி.

பயணியின் பார்வையில் - அங்கம் 19: தண்ணீரில் தொடங்கி கண்ணீரில் முடிந்த ஈழப்போராட்டத்தில் சிக்கிய சம்பூர்

ஞானி கடத்தப்பட்ட செய்தி அறிந்ததும் நானும் நண்பர் ரவீந்திரராஜாவும் வடக்கு- கிழக்கு மாகாணசபை முதல்வருடன் தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு முயன்றோம். எனினும் எம்முடன் உரையாடியவர் வரதராஜப்பெருமாளின் மாமனாரும் அங்கிருந்த பீட்டர் என்பவரும்தான். அவர்கள் தரப்பிலிருந்து எமக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை. எமது மாணவர்களுக்கான உதவியை நிறுத்தாமல், திருகோணமலை மாவட்டத்தின் இந்து இளைஞர் பேரவை சிவபாதசுந்தரம் ஊடாக வழங்கினோம். அதன்பின்னர், நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ நிறுவனம் ( Voluntary Organization for Vulnerable Community Development - VOVCOD) என்னும் அமைப்பின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களில் பல மாணவர்களின் தேவைகளை கவனித்தோம். இந்த அமைப்பின் தலைவர் த. கணேஷ் எமக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் விடுத்தவேண்டுகோளின் பிரகாரம் சம்பூர் மகா வித்தியாலயத்தின் தேவையை கவனிக்கவேண்டிய சூழ்நிலை தோன்றியது.

மாவிலாறு நீர்விநியோகத்தின் மீது விடுதலைப்புலிகள் தடைவிதித்ததையடுத்து நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. அத்தகைய எதிர்பாராத திருப்பம் 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்டது. அந்த நெருக்கடிக்கு இயக்கத்தினதும் முன்னைய அரசினதும் தரப்பில் அவரவர் தரப்பில் நியாயம் கற்பிக்கப்பட்டாலும் இறுதியில் அந்தப்பிரதேசம்தான் நான்காம் கட்ட போருக்கு அடித்தளமிட்டது. அதுவே இறுதிப்போராகவும் வன்னி வரையில் விரிவடைந்தது. அதன் விளைவுகளை இன்றும் பார்க்கின்றோம்.

சுருக்கமாகச்சொன்னால், தண்ணீர் விநியோகத்தில் விதிக்கப்பட்ட தடை, இறுதியில் வற்றாத கண்ணீருக்கே வித்திட்டு போருக்கு முடிவு கட்டியது. மாவிலாறு தண்ணீர்பாதை அடைக்கப்பட்டதையடுத்து திருகோணமலையில் போர் தொடங்கியது. கூனித்தீவு, இளக்கந்தை, சூடக்குடா, கடற்கரைச்சேனை, கட்டைபறிச்சான், சம்பூர், சேனையூர், உட்பட சுமார் 25 கிராமங்களைச்சேர்ந்த மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு இடம்பெயர்ந்தனர். பலர் மட்டக்களப்பிற்கும் மேலும் பலர் கிளிவெட்டி அகதி முகாம்களுக்கும் இடம்பெயர்ந்தனர். இது இவ்விதமிருக்க மக்கள் வெளியேறிய பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்பும், அத்துடன் அனல் மின்சார உற்பத்திக்கான நிலப்பறிப்பும் நிகழ்ந்தது. இதில் சிக்கிய கிராமம்தான் சம்பூர்.

இந்தப்பிரதேசத்தில் தமிழ் மாணவர்களுக்கிருக்கும் சம்பூர் மகாவித்தியாலயமே ஒரே ஒரு உயர் பாடசாலையாகும். எனினும் இங்கு கலைப்பிரிவு மாத்திரமே உள்ளது. எமக்கு கிடைத்த அறிக்கையில், இவ்வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கு சில தொண்டர் ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு மாதாந்தம் வேதனம் வழங்குவதற்கு உதவுமாறு கோரப்பட்டிருந்தது. எமது நிதியம் மாணவர்களுக்கு மாத்திரம் உதவும் அமைப்பாகும். ஏற்கனேவே இதுபோன்ற கோரிக்கைகளை வடக்கு - கிழக்கிலிருந்து சில பாடசாலை அதிபர்கள் முன்வைத்திருந்தும், அவ்வாறு உதவும்வகையில் எமது நிதியத்திடம் நிதிவளம் இருக்கவில்லை. வேறு ஏதும் அமைப்புகள் இதுவிடயத்தில் உதவமுன்வரலாம் என்ற நம்பிக்கையில், குறிப்பிட்ட வேண்டுகோள் அறிக்கையை மின்னஞ்சல் ஊடாக வெளியிட்டோம்.

அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் இயங்கும் இலங்கை தமிழ்ச்சங்கம் இதுவிடயத்தில் உதவ முன்வந்தது. இதன் சமகாலத்தலைவர் திரு. த. ரவீந்திரன் எமது கல்வி நிதியம் ஊடாக ஏற்கனவே பல மாணவர்களுக்கு உதவியவர். இவருடைய மனைவியின் தாயார் திருமதி சரோஜினி அவர்கள், தமது அந்திம காலம் வரையில் ( முதியோர் இல்லத்திலிருந்து மறையும் வரையில்) ஒரு மாணவருக்கு உதவியவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கம் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி எமது நிதியத்திற்கு மூவாயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிளை வழங்கியது. அத்துடன் கன்பராவைச்சேர்ந்த கணக்காளர் திரு. சிவசபேசன் அவர்களும் வெளிநாடொன்றிலிருந்து உதவ முன்வந்தார்.
இவர்கள் இல்லையென்றால், சம்பூர் மகா வித்தியாலயத்தின் உடனடித்தேவையை பூர்த்தி செய்திருக்கமுடியாது. எனவே எமது கல்வி நிதியமும் சம்பூர் மகா வித்தியாலயமும் கன்பரா தமிழ்ச்சங்கத்திற்கும் அன்பர் சிவசபேசன் அவர்களுக்கும் நன்றியுடையவர்களாகவே இருப்போம்.

கிழக்கு மாகாணத்தில் வருடத்தில் சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் எட்டாம் வகுப்புடன் தமது கல்வியை நிறுத்திவிடுவதாக ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன்னர் லண்டன் பி.பி.சி. யில் ஒலிபரப்பானது. கிழக்குப்பிரதேச கல்விப்பணிப்பாளர் ஒருவரே தமது இந்த கவலைக்குரிய தகவலை நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆசிரியர் பற்றாக்குறை, வறுமை, அறியாமை, இடப்பெயர்வு முதலான இன்ன பல காரணங்களே இதற்கு அடிப்படை என்பது தெளிவானது. இளம் தலைமுறை கல்வியை இழப்பது கண்ணை இழப்பதற்கு சமமானது. இவ்வாறு இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் கல்வித்துறை பின்னடைந்தமைக்கு அரசுகளும், இயக்கங்களும், அரசியல்வாதிகளும்தான் காரணம். கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை இயங்குகிறது. அங்கு கல்வி அமைச்சு, கல்வித்திணைக்களம் இயங்குகின்றன. கல்வி அமைச்சர், கல்வித்திணைக்கள அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

போர் முடிந்து எட்டு வருடங்களாகிவிட்டன. மக்களின் வாழ்வாதாரத்தேவைகளுடன் கல்வியும் பின்னிப்பிணைந்திருக்கிறது. இந்தப்பின்னணிகளுடன், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறி வேலை வாய்ப்பின்றி சிரமப்படுகின்றனர். இலங்கையெங்கும் ஏராளமான பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது. புலம்பெயர்ந்து சென்றவர்களும் இதுவிடயத்தில் தம்மாலியன்றவழிமுறைகளில் உதவி வருகின்றனர்.
சம்பூர் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறை விவகாரத்தை தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பையும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் மாணவர்களின் நலன்பொருட்டு ஏற்றுக்கொண்டது.

நிதியத்தின் உறுப்பினரும் முன்னாள் தலைவருமான இராஜரட்ணம் சிவநாதனும் சம்பூர் பயணத்தில் இணைந்துகொண்டார். வித்தியாலய அதிபர் திரு. சோமசுந்தரம் பாக்கியேஸ்வரன் முன்னிலையில் உயர்தர வகுப்பு மாணவர்களுடனான கலந்துரையாடலும் தகவல் அமர்வும் நடைபெற்றது. அதனையடுத்து சமயம், புவியியல், தமிழ் மொழி ஆகிய பாடங்களுக்கான தொண்டர் ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டு முதல் இரண்டு மாதங்களுக்கான வேதனம் வழங்கப்பட்டது.
தொண்டர் ஆசிரியர்களாக திருமதி ராமசீத்தா நாகேஸ்வரன் , திரு. இ. இரத்தினசிங்கம், ஜனாப் ஏ. எல். எம். சதாக் ஆகியோரும், இவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு இணைப்பாளராக ஆசிரியர் திரு . இ.தயாபரனும் தெரிவுசெய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் திரு. கோ. குமாரநாயகமும் கலந்துகொண்டு உரையாற்றினார். இவரது மனைவி உதயசந்திரிக்கா மாணவியாக இருந்த காலப்பகுதியில் எமது கல்வி நிதியத்தின் உதவி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. சம்பூர் மகா வித்தியாலயத்தில் நாடகமும் அரங்கியலும் கற்பிப்பதற்கும் ஆசிரியர் தேவைப்படுவதாக இணைப்பாளர் ஆசிரியர் திரு. இ. தயாபரன் மின்னஞ்சல் ஊடாகத் தெரிவித்துள்ளார். இந்தப்பதிவை கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு சமர்ப்பிக்கின்றோம்.

மறுநாள் திருகோணமலை நிலாவெளியில் அமைந்துள்ள நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ நிறுவனத்தின் பணிமனையில் இம்மாவட்டத்தில் நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிவநாதனுடன் நிதியத்தின் மற்றும் ஒரு உறுப்பினர் கபிலனும் கலந்துகொண்டார். ஏற்கனவே நிதியத்தின் உதவியுடன் தமது கல்வியைத்தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகம் பிரவேசித்து, பட்டதாரிகளான மாணவிகள் செல்வி டிலானியும் செல்வி நளினியும் இந்நிகழ்ச்சிக்கு வருகைதந்து உரையாற்றினர். திருகோணமலை மாணவர் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட சில மாணவர்கள் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத்தோற்றுகின்றனர். அவர்களுக்கும் வாழ்த்துக்கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

அன்று மாலை திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டேன். இம்மாவட்டத்தில் மூன்று நாட்களாக என்னுடன் தொடர்ச்சியாக உடன்வந்து எனது நலன்களில் அக்கறை காண்பித்த உடன்பிறவாச் சகோதரன் ரஞ்சன், கோணேசர் ஆலயத்திற்கும் காளிகோயிலுக்கும் அழைத்துச்சென்றார். எனது பயணங்களில் அவரைப்போன்று பலர் நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் அறிமுகமாகி இணைந்துகொள்வதனால் திட்டமிட்டவாறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. இவர்கள் என்றும் எனது நன்றிக்குரியவர்கள். திருகோணமலை மாணவர் சந்திப்பையடுத்து தமது ஓட்டோவில் என்னை அழைத்துவந்து மட்டக்களப்பு செல்லும் பஸ்ஸில் ரஞ்சன் ஏற்றிவிட்டார். இந்தப்பயணத்தின் பின்னர், சம்பூர் மகாவித்தியாலய நிகழ்ச்சி தொடர்பாக கன்பரா தமிழ்ச்சங்கம் நடத்திய தகவல் அமர்வுக்கும்சென்று அங்கிருக்கும் நிலையை படங்களின் காட்சிப்படுத்தலுடன் விளக்கியிருக்கின்றேன்.

(பயணங்கள் தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R