எதிர்மன்னசிங்கம்இந்த அங்கத்தை எழுதுவதற்கு அமர்ந்தபோது, எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன கதையொன்று நினைவுக்கு வந்தது. நான் பிறந்தது வீட்டில். எங்கள் அம்மா தனது ஐந்து பிள்ளைகளையும் வீட்டில்தான் பெற்றார். அதேபோன்று எனது அக்காவும் தனது நான்கு குழந்தைகளையும் வீட்டில்தான் பெற்றார். மருத்துவச்சி வந்து பிரசவம் பார்த்த காலத்தில் நாங்கள் பிறந்தோம். இன்று நிலைமை அப்படியல்ல. நான் பிறந்து, எனது அழுகுரல் கேட்டவுடன் எங்கள் தாத்தா ( அம்மாவின் அப்பா) வீட்டின் கூரையில் ஏறி ஓடுகளைத் தட்டி சத்தம் எழுப்பினாராம். ஆண்குழந்தை பிறந்ததால் அவ்வாறு செய்ததாக பாட்டி எனக்குச்சொன்ன காலத்தில் 1966 ஆம் ஆண்டு எங்கள் அக்காவுக்கு ஆண்குழந்தை முதலில் பிறந்தது. அன்று காலை நான்தான் மருத்துவச்சியை அழைத்துவந்திருந்தேன். குழந்தையின் குரல் கேட்டதும், பாட்டிதான் அறையிலிருந்து முதலில் வெளியே வந்து " ஆம்பிளைப்பிள்ளை" என்றார்கள். உடனே நான் " பாட்டி கூரையில் ஏறி தட்டவா..? " எனக்கேட்டேன். பாட்டியும் என்னை வீட்டின் கேற்றில் ஏற்றிவிட்டார்கள். அதில் ஏறி ஷெரிமரத்தில் கால்வைத்து, கூரைக்குச்சென்று ஓட்டிலே தட்டி ஒரு ஓடையும் உடைத்துவிட்டேன். அதன் பிறகு பாட்டி என்னிடம் ஒரு காகிதமும் பென்ஸிலும் கொடுத்து ( பாட்டிக்கு எழுதத்தெரியாது, கைநாட்டுத்தான்) இவ்வாறு எழுதச்சொன்னார்கள். " பாலகிரிதோசம் இன்றல்ல நாளை" அந்தத்துண்டை வீட்டின் வாசல்கதவு நிலையில் வெளிப்புறமாக ஒட்டினார்கள். அதேபோன்று மற்றும் ஒரு துண்டை எழுதச்செய்து வீட்டின் பின்புற கதவு நிலையிலும் ஒட்டினார்கள். எதற்கு இவ்வாறு எழுதி ஒட்டுகிறீர்கள்? எனக்கேட்டபோது, " வீட்டில் குழந்தை அழும் குரலைக்கேட்கும் எச்சுப்பிசாசு இரவில் வருமாம். அது வந்து வாசலில் இவ்வாறு எழுதியிருப்பதை பார்த்துவிட்டு மறுநாளும் வருமாம். அவ்வாறு தினமும் இரவில் வந்து பார்த்து ஏமாந்துபோய்விடுமாம் அந்தத் தமிழ் வாசிக்கத்தெரிந்த எச்சுப்பிசாசு. காலப்போக்கில், பாட்டியிடம், " தாய்மார் ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள். அங்கெல்லாம் அந்த எச்சுப்பிசாசுகள் வருவதில்லையா...? அங்கும் இவ்வாறு ஒட்டுகிறார்களா..? சிங்களத்தாய்மாரும் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள். அப்படியானால் சிங்களம் தெரிந்த பிசாசுகளும் வருமல்லவா..? " எனக்கேட்டிருக்கின்றேன். அதற்குப்பாட்டி, "உன்னைச்சொல்லிக்குற்றமில்லை. இப்படியெல்லாம் நீ பேசுவது கலிகாலத்தில்" என்று எனது வாயில் அடித்தார்கள்.

அன்று மட்டக்களப்பில் எதிர்மன்னசிங்கம் எழுதிய "கிழக்கிலங்கைத்தமிழ் மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியம்" நூல் வெளியீட்டு விழாவுக்குச்சென்று, நூலாசிரியரிடம் நூலைப்பெற்று அதிலிலிருந்த அணிந்துரையை வாசித்ததும் எனக்கு எங்கள் ஊரில் மறைந்துகொண்டிருக்கும் பண்பாட்டுப்பாரம்பரியம் நினைவுக்கு வந்தது. ஊருக்கு ஊர் இவ்வாறு பல பண்பாட்டுக்கோலங்கள் பலரதும் மனதில் அழியாத கோலங்களாகவே பதிவாகியிருக்கின்றன. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் கலாநிதி சி. சந்திரசேகரம் அவர்கள் இந்நூலின் அணிந்துரையில் இவ்வாறு எழுதியுள்ளார்:

" இன்று சில பண்பாட்டுக்கூறுகள் நினைவுகளிலேயே உள்ளன. சில நினைவுகளில் இல்லாமலும் போய்விட்டன. எடுத்துக்காட்டாக, பாரம்பரிய விவசாயச்செய்கையோடு தொடர்புடைய பண்பாடுகள், கோயில் தீர்த்தத்தால் வயலைக்காவல் பண்ணுதல், சூடுபோடும் வழக்குகள், வேளாண்மைத்தொழிலின்போது பாடல்கள் பாடப்படுதல் என்பனவெல்லாம் முற்றாக மறைந்துவிட்டன. அவ்வாறே, பல கிராமிய விளையாட்டுக்கள், திருமணமுறை (பூருதல்), ஆண்கள் கடுக்கன்போடுதல், கன்னக்கொண்டை கட்டுதல், பிள்ளை பிறந்ததும் நிகழும் குறித்த நிகழ்வுகள் ( ஆண்பிள்ளை பிறந்தால் கருங்காலி உலக்கையினையும், பெண்பிள்ளை பிறந்தால் விளக்குமாற்றையும் வீட்டுக்கூரைக்கு மேலாக எறிதல்) எனப் பல்வேறு பண்பாட்டுக்கூறுகள் மறைந்துவிட்டன." எதிர்மன்னசிங்கம் கிழக்கிலங்கைத்தமிழ் மக்களின் பண்பாட்டுப்பாரம்பரியத்தை ஆவணமாக்கித்தந்திருப்பதுபோன்று, ஏற்கனவே, இந்த ஆய்வு ஆவணப்படுத்தலில் தி. சதாசிவ ஐயர், சு.வித்தியானந்தன், சா. இ. கமலநாதன், எவ். எக்ஸ். சி நடராசா, வி. சீ. கந்தையா, சிவசுப்பிரமணியம், சி. மௌனகுரு, வ. மகேஸ்வரலிங்கம் எனப்பலர் ஈடுபட்டு வந்திருக்கும் தகவலையும் கலாநிதி சி. சந்திரசேகரம் பதிவுசெய்கிறார். இலங்கை - இந்திய கீழைத்தேசங்களில் மட்டுமல்ல ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா முதலான நாடுகளிலும் பாரம்பரியப்பண்பாடுகளுடன் வாழ்ந்த ஆதிக்குடிமக்கள் பற்றிய சித்திரங்கள் வரலாற்று ஏடுகளில் பதிவாகியிருக்கின்றன. எதிர்மன்னசிங்கம் நேரடிக்கள ஆய்விலும் முதியோர் பலரை நேர்கண்டும் கடினமாக உழைத்து இந்த ஆவணப்பதிவை தந்திருக்கிறார். ஏற்கனவே இந்தத்துறையில் அயற்சியின்றி அவர் இயங்கிவந்திருக்கின்றமையால் இந்த நூல் அவரது மற்றும் ஒரு வரவு.

பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வுத் தொடர் வரிசையில் 28 ஆவதாக இந்த நிகழ்ச்சி மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன் அன்றைய தினம் நடைபெற்றது. மகுடம் இதழின் ஏற்பாட்டில் நடந்த இவ்விழாவில் அதன் ஆசிரியர் வி. மைக்கல் கொலின் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநகர ஆணையாளர் வெ. தவராஜா தலைமையில் நடந்த இந்த விழாவில், கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் மருத்துவகலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா முதன்மை அதிதியாகவும், சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள் சி. மெளனகுரு, மா. செல்வராசா, செ. யோகராசா, ஆகியோரும் கலந்துகொண்டனர். முன்னாள் கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா. சக்கரவர்த்தி நூல் ஆய்வுரையும், நூலாசிரியர் ஏற்புரையும் வழங்கினர்.
நூலாசிரியர் எதிர்மன்னசிங்கம், வெகு சுவாரஸ்யமாகவே தனது ஏற்புரையை நிகழ்த்தினார். அவ்வப்போது அவரது நினைவில் தங்கியிருந்த கூத்துப்பாடல்களையும் இராகத்துடன் உதிர்த்தார். அவரது உரை சபையை கலகலப்பாக்கியது. என்னையும் அங்கிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசியதுடன் மேடைக்கு அழைத்து பிரதியும் தந்தார். அவருடைய அருமை மகள் மருத்துவக்கலாநிதி தர்மினி தமிழ்வாழ்த்துப்பாடினார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் உறவினர் எதிர்மன்னசிங்கத்தின் குடும்பத்தினருடன் அன்றைய மாலைப்பொழுது இனிமையாக கடந்தது.

எதிர்மன்னசிங்கம் மட்டக்களப்பு மட்டிக்களி என்னும் இடத்தில் 1941 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தையார் செல்லத்தம்பியும் கூத்துக்கலைஞராவார். தனது ஆரம்பக்கல்வியை மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும் பின்னர் இன்றைய மகாஜனாக்கல்லூரியிலும் ( முன்னர் இதன்பெயர் அரசடி மகா வித்தியாலயம்) உயர்தரத்தை கல்லடி சிவானந்தா கல்லூரியிலும் கற்றவர். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் கலைமானி, முதுமானிப்பட்டங்கள் பெற்றவர். மட்டக்களப்பு அரசாங்க செயலகத்தில் கலாசார உத்தியோகத்தராக பணியாற்றியிருக்கும் இவர், பின்னாளில் வடக்கு- கிழக்கு மாகாண சபையின் கலாசார உதவிப்பணிப்பாளராகவும் பணியாற்றி பல பயனுள்ள பணிகளை முன்னெடுத்திருப்பதாக நண்பர்களின் பதிவுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

தந்தை கூத்துக்கலைஞராக இருந்தமையால் இவரிடமும் இளமைக்காலத்திலிருந்தே கலை ஆர்வம் மலர்ந்திருக்கிறது. தமது பதினைந்து வயதில் நாடக மேடையில் ஏறியிருப்பவர். பல்கலைக்கழகத்தில் பயிலும்வேளையில் நொண்டி நாடகத்தில் நடித்திருக்கிறார். வாத்தியக்கருவிகளை இசைப்பவராகவும் குழுப்பாடகராகவும் தம்மாலியன்ற சேவையை கலையுலகத்திற்கு வழங்கியிருக்கும் எதிர்மன்னசிங்கத்தின் மற்றும் ஒரு முகம்தான் எழுத்தாளன். ஆக்க இலக்கிய படைப்புத்துறையில் இவரது ஈடுபாடு எத்தகையது என்பது எனக்குத்தெரியாது, ஆனால், மட்டக்களப்பு மாநில உபகதைகள், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, சிந்தாமனிப் பிள்ளையார் ஆலய வரலாறு, சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள் முதலான நூல்களை வரவாக்கியிருப்பவர் என்ற தகவலை அறியக்கூடியதாக இருக்கிறது.

இவர் சிறந்த நாடக, கூத்து நடிகராகவும் திகழ்ந்திருப்பார் என்பதற்கு அன்றைய தினம் இவர் வழங்கிய ஏற்புரை எடுத்துக்காட்டாக இருந்தது. இவருக்கு 75 வயது கடந்து விட்டது, எனினும் இவரது குரல் வளம் இன்றும் சிறப்பாகவே இருக்கிறது. 1963 இல் கலை, இலக்கியம், ஆய்வுத்துறையில் எழுதத்தொடங்கியவர், இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்.

கிழக்கிலங்கைத்தமிழ் மக்களின் பண்பாட்டுப்பாரம்பரியம் பற்றிய தமது ஆய்விற்கு, தமிழ்நாட்டுத்தமிழர், யாழ்ப்பாணத்தமிழர், இஸ்லாமியர், சிங்களவர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் பற்றிய தொடர்புகளையும் கோணேசர் கல்வெட்டு, திருக்கோயில் கல்வெட்டு, நாடு காட்டுப்பரவணிக்கல்வெட்டு, வீரமுனைச்செப்பேடு, முக்குவர் ஏற்பாடு, மாகோன் ஏற்பாடு, தேசவழமைப்பத்திகள், கோணேசர் அந்தாதி, மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு தமிழகம், வசந்தன் கவித்திரட்டு, மாகோன் வரலாறு, குளக்கோட்டான் தரிசனம், கண்ணகி வழக்குரை, அம்மன் காவியங்கள், மாநில உபகதைகள், எண்ணெய்சிந்து, காவடிப்பாடல்கள், வசந்தன் பாடல்கள், கொம்புமுறிப்பாடல்கள் முதலானவற்றை எடுத்தாள்கிறார்.
இதிலிருந்து இவரது தேடுதலும் அதற்கான கடின உழைப்பும் தெரிகிறது. எம்மவர்களின் தற்போதைய நவீன வாழ்க்கையில் மறைந்துகொண்டிருக்கும் பண்பாட்டுக்கோலங்கள், பாவனையிலிருந்து காணாமலாகிவிட்ட பொருட்கள் பற்றியும் இந்த நூல் பேசுகின்றது.

இன்று மூட நம்பிக்கையாக கருதப்படும் பல பண்பாட்டுக்கூறுகள் ஒரு காலத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டிருக்கிறது. மருங்கைக்கொண்டாட்டம் ( குழந்தை பிறந்து முப்பதாம் நாள் நடைபெறும் நிகழ்வு) பல்லுக்கொழுக்கட்டை சொரிதல், சாமத்தியச்சடங்கு, திருமணச்சடங்கு, மரணச்சடங்கு என்பன ஒரு மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு பருவத்திலும் அந்திமத்திலும் நடைபெற்றுவருகிறது. இதன் பண்பாட்டுக்கோலங்கள் ஊருக்கு ஊர் பிரதேசத்திற்குப்பிரதேசம் இனத்திற்கு இனம் வேறுபட்டிருந்தாலும், இன்றும் இந்த நவீனயுகத்திலும் தொடருகிறது. தமிழர்கள் அந்நியதேசங்களுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் நீடிக்கிறது.

ஒரு காலகட்டத்தில் வழக்கத்திலிருந்தவற்றை ஆவணப்படுத்தியிருப்பதன் ஊடாக இந்தத்துறையில் மேலும் ஆய்வுகள் உருவாவதற்கு எதிர்மன்னசிங்கம் வாயிலை திறந்திருக்கிறார். தற்காலத்தலைமுறையினர், இப்படியெல்லாம் எமது முதாதையர்கள் வாழ்ந்திருக்கிறார்களா..? என்பதை நூதனசாலைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் தொல்பொருட்களிலிருந்தும் ஆவணங்களிலுமிருந்தும் தெரிந்துகொள்வதுபோன்று, மாணவர்கள், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் தொல்லியலில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு எதிர்மன்னசிங்கத்தின் நூல்களும் உசாத்துணையாக பயன்தரும்.

அன்றைய நூல் வெளியீடு அவரது பவளவிழாவையும் முன்னிட்டு நடந்தமையினால், அவரை கட்டி அணைத்து வாழ்த்திவிட்டு அங்கிருந்து விடைபெற்றேன். அன்று இரவு மட்டக்களப்பு Hotel east Lagoon இல் நடந்த திரு. கணேசராஜா அவர்களின் தலைமையில் இயங்கும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்திற்கு நண்பர் கோபாலகிருஷ்ணன் அழைத்துச்சென்றார்.

( பயணங்கள் தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R