தலைவர் காமராஜ்.செல்லமுத்து, தமிழியல்துறை, தமிழியற்புலம், முனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர் ‘பெருந்தலைவர் காமராசர்’. தமிழகத்தின் மானுட மேம்பாட்டுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டும் குரல்கொடுத்தும் செயலாற்றியும் வாழ்ந்த தொண்டருக்குத் தொண்டர், தலைவருக்குத் தலைவர், அறிஞருக்கு அறிஞர், அரசியல் வித்தகர் மாமேதை காமராசர். தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுள் தலைசிறந்த தலைவராக விளங்கிய காமராசரை நம் காலத்திற்குக் கொண்டு வந்து, நம் விருப்பப்படியான கண்ணோட்டத்தில் விளக்கம் கொடுத்து நம்மைப் போல ஆக்கிவிட முயற்சிக்கக்கூடாது. நம்முடைய முழு அறிவையும் பயன்படுத்தி, சான்றோர்களின் துணையையும் நாடி, அவர் காலத்திற்குச் சிந்தனை வழி செல்லவும், அக்கால சமூக நடைமுறைகளை யூகித்துப் புரிந்து கொள்ளவும் முயல்வதே அறிவார்ந்த செயலாகும். ஏனெனில், தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘கருப்புக் காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘ஏழைப் பங்களான்’, ‘கர்ம வீரர்’, ‘கிங் மேக்கர்’, ‘கல்விக்கண் திறந்தவர்’ எனப் பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் இவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, இவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கிய பெருமையும் இவரைச்சேரும். இவ்வாறான பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாறுகளையும், அவரின் உன்னதமான பல்வேறு சாதனைகளையும் இச்சமுதாயம் அறிந்திருப்பது அவசியம்.

1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாளன்று தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள “விருதுநகர்” மாவட்டத்தில், குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தவர்தான் காமராசர். தாயார் சிவகாமி அம்மாவின் முதல் சகோதரர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை நடத்தி வந்தார். விருதுநகருக்கு அந்தக் காலத்தில் இருந்த பெயர் விருதுப்பட்டி. இவருடைய தந்தை விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமாட்சி (குலதெய்வம்) என்ற இயற்பெயருடைய காமராசரை, அவருடைய தாயார் “ராசா” என்று அன்பாக அழைத்ததால், பின்னாளில் அதுவே, (காமாட்சி, ராஜா) ‘காமராசர்’ என்று பெயர்வரக் காரணமாகவும் அமைந்தது. காமராசருக்கு நாகம்மாள் என்ற தங்கையும் இருந்தார்.

காமராசர் தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரில் தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள “சத்ரிய வித்யா சாலா உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்தார். காமராசர் தனது பள்ளிப் பருவத்திலேயே, விருதுப்பட்டியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களுக்குப் சென்றுள்ளார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. இவ்வாறான, பொதுக் கூட்டங்கள் அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது. அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவர் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராசர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

இக்காலகட்டங்களில், டாக்டர் வரதராஜ நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராசர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “ஹோம் ரூல் இயக்கத்தின்” ஒரு அங்கமாக மாறி பல போராட்டங்களில் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16 வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்தியாக்கிரகத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி.ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த பேரணியில் பங்கேற்றதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த வருடமே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராசர், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்று ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார் காமராசர். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராசரை செயலாளராக நியமித்தார். காலப்போக்கில் காமராசர், சத்தியமூர்த்தியின் தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராக முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகளை அகற்றுதல், கொடிப் போராட்டம், உப்புச் சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு என அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு தலைவர் சத்திய மூர்த்தி அவர்கள் காலமானார். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றியதோடு மட்டுமல்லாமல், காமராசர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டிலுள்ள அவருடைய உருவபடத்திற்கு மாலை அணிவித்து வணங்கிய பின்பே தன்னுடைய முதல்வர் பணியைத் தொடர்ந்தார்.

1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் பல கிளம்பியது. எனவே, ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் மதிப்பும் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராசர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஒரு மாநில முதல்வராக இருக்கும் தகுதி பெரும் பணக்காரர்களுக்கும் மிட்டாமிராசு தாரர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மட்டுமே உண்டு என்பதை பொய்யாக்கி சாமானியனும் மாநில முதலமைச்சர் ஆகலாம் என்பதை நிரூபித்துக் காட்டினார் காமராசர். வீண் விளம்பரங்களை வெறுத்ததோடு, கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கறை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து மக்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டறிந்தார். அதனை தீர்க்க புதிய செயல் திட்டங்கள் பல தீட்டினார்.

காமராசர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000 த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது. இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்றோரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சிக்காலத்தில் 37 சதவீதமாக உயர்ந்தது.

கோவைக் கல்லூரிகளின் சமூகப் பணிக் கூட்டு மன்ற அமைப்புத் துவக்க விழாவில், கல்லூரி மாணவ - மாணவியர்களிடையே ஒரு அமைப்பைத் தொடங்கி வைத்து, ”எது சமூக சேவை? ” என்று காமராசர் மணிக்கணக்கில் பேரூரை ஆற்றிப் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சரித்திரம் சான்று பகர்கிறது. மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் காமராசர் என்பார்கள். காமராசரின் வாழ்க்கையென்பது ஒரு சாதாரண மனிதரின் வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்ன என்பதனை விளக்க வந்த தனி மனித வழிகாட்டி. பொது வாழ்விலும் அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறைகள் காந்தியடிகளின் ‘சத்ய சோதனை’ போன்றதாகும். அதனால் தான் காமராசரை, காந்தியடிகளோடு ஒப்புமைப்படுத்தி ‘தென்னாட்டுக் காந்தி’ என்று போற்றிப் புகழ்கின்றோம். அவருடைய சாதனைச் சரித்திரம் நூறு ஆண்டுகள் அல்ல. இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த மண் பேசும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

காமராசர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்திலுள்ள சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன. இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது. மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது. சுமார் 3 கோடி செலவில் அமராவதி அணையும் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராசர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது. 1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது. இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது. சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் இவரது ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.

இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில்தான் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை விவசாயம் சார்ந்து பெருந்தலைவர் காமராசர் செய்திருப்பது என்றும் பாராட்டுதலுக்குரியது ஆகும்.

காமராசர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியதோடு, ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராசரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’ போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தின் இறுதியில், தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து.சுந்தரவடிவேலு காமராசரின் கல்வித் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற உடனிருந்து பாடுபட்டார். அதேபோல், காமராசரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணமாக இருந்தவர் அன்றைய தொழில்துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் ஆவார்.

தமிழ் நாட்டில் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்த காமராசர் அவர்கள் பெரிய பேச்சாளர் அல்ல. ஆனாலும் பேசத் தெரியாவரும் அல்ல. எது சொன்னாலும் ”ஆகட்டும். பார்க்கலாமின்னேன்” – என்று ஒரு வரியில் எதற்கும் பதில் அளித்து விடுவார் என்பார்கள். பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி காமராசர் பண்டித நேருவுடனும், மற்ற தலைவர்ளுடனும் காங்கிரசைப் பலப்படுத்த பலருடன் கலந்து ஆலோசித்து, தானே ஒரு திட்டத்தையும் உருவாக்கி அதனை வெளியிட்டார். அதாவது, மூத்த தலைவர்கள் பதவியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபடவேண்டும். இந்தியா முழுதும் காங்கிரஸ் இயக்கத்தை வலிமை உடையதாக ஆக்க வேண்டும் என்பதே காமராசரின் திட்டம். இதைக் கே.பிளான் (காமராசர் திட்டம்) என்றார்கள்.

காமராசரின் இந்தத் திட்டத்தைப் பிரதமர் நேருஜியும், மற்றத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். முன் உதாரணமாக முதலமைச்சராக இருந்த காமராசரே அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்து, பக்தவத்சலத்தை முதலமைச்சராக்கி கட்சிப்பணியாற்ற தில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் வரவேற்றது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோரும் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆன பின்பு காமராசர் இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எல்லா மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சிக்காகப் பேச வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. அவர் தொண்டனாக இருந்த காலங்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொண்டிற்கும் உழைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் பேசாமல் இருந்ததில்லை.

“தண்ணீர் மழையாகப் பெய்யுது. அது ஆறாக ஓடுது. அப்படி ஓடுகிற தண்ணீரை அணைக் கட்டித் தேக்கி வைக்கிறோம். பிறகு அங்கு வாய்க்கால் வெட்டி அதன் மூலம் தண்ணீரை விவசாயத்துக்கு அனுப்புகிறோம். விவசாயத்துக்குப் பயன்பட்டபோது, மிஞ்சும் தண்ணீர் சமுத்திரத்துக்கு போகிறது. பிறகு என்ன ஆகிறது? இந்த மழைநீர் வற்றி, ஆவியாகி, மேகமாக மேலே போய மறுபடியும் மழையாகக் கொட்டுகிறது. இப்படித்தானே அது பழையபடி சுற்றிக்கொண்டே வருகிறது. அதைத் தடுத்த நிறுத்த முடியுமா என்ன? அதே போல் தான் பணமும். அது நம்மைச் சுற்றித் தான் வர வேண்டும். ஒரே இடத்திலே அது தேங்கிவிடக்கூடாது. மழையில்லை என்றால் யாரும் வாழ முடியாது. மழைக்கு இவ்வளவு பெருமை எப்படி ஏற்பட்டதோ, அதே மாதரி தான் பணத்துக்கும் பெருமை ஏற்பட்டுள்ளது. மழையைப்போல தான் பணமும் சுற்றிக்கொண்டு வரவேண்டும். மழை எல்லா இடத்திலும் பெய்கிறமாதிரி, எல்லா இடத்திலேயும் செல்வம் பரவலாக இருக்க வேண்டும். ஒருவரிடத்தில் மட்டும் அது சொந்தமாக தேங்கிவிடக்கூடாது. அதை ஒருவர் உபயோகிக்கவும்கூடாது” என்பன போன்றவை காமராசரின் மிக எளிமையான உரையாடல்கள் ஆகும்.

காங்கிரஸ் ஊழியர்கள் மத்தியில் தொண்டனாக, பின்னர் தலைவனாக அவரது பேச்சு ஒரு விதமாக இருந்தது. முதலமைச்சர் ஆன பின்பு காமராசரின் பேச்சு வேறு விதமாக மாறியிருந்தது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போது, இந்தியா முழுவதக்கும் ஏற்றதாக அவரது பேச்சுக்கள் இருந்தன. இதுபோன்ற எளிமையான சிந்தனையும் பேச்சாற்றலும் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற நிலைமாறி, ”காமராசர் காங்கிரஸ்” என்ற நிலை உருவானது. தனது தியாகத்தாலும், அயராத உழைப்பாலும், தொண்டுகளினாலும் வாழ்வின் உயர்ந்த நிலையை அடைந்த காமராசர், 1952 - ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து, தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார். 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார் காமராசர். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார் காமராசர். மேலும், தமிழக மக்களின் கேள்விகளுக்குத் தக்க பதில் அளித்ததோடு, தேர்தல் பொதுக்கூட்டங்களில் சற்று நேரம் அதிகமாகவே, விளக்கமளித்துப் பேசினார். காமராசரைத் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி எல்லோரும் வற்புறுத்திய போது, ”எனது நிர்வாகத்தில் நண்பர்களோ கட்சிக்கார்களோ, உறவினர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ தலையிடக்கூடாது. அப்படி நீங்கள் தலையிடாமல் இருந்தால் நான் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன்” – என்றார். ஏனெனில், அவரது சிந்தனையும் செயலும் பேச்சாற்றலும் வெறும் பேச்சாக மட்டுமே இருந்ததில்லை.

”காங்கிரஸின் சமதர்மக் கொள்கை பிடிக்காமல் பணக்காரர்;களும் பெரிய முதலாளிகளும் காங்கிரஸ் மீது கோபப்படுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குக் காங்கிரஸ் மீது கோபம் வரலாமா? ”நாட்டில் கவலையற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டும். அதையும் நாம் நம் வாழ்நாளிலேயே செய்துவிட வேண்டும். உணவு, வீடு, கல்வி, வசதி எதுவும் இல்லை என்ற புகாரே மக்களிடம் இருக்கக்கூடாது.”

”மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல் தான் நாட்டின் இலக்கிற்கு அடிப்படை. எனவே மாணவர்கள் அதைப் பற்றி நன்கு தெரிந்து செய்ய வேண்டும். ஆசிரியர்களைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து. மாணவர்களைக் கொண்டு அரசியல் பலம் பெற நான் விரும்பவில்லை. நாங்கள் மாணவர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவோம் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம்.” நம்மால் நிலையான அரசு அமைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. எவரோடும் சேர்ந்து ஆட்சியில் பங்கு பெற முயற்சிக்கக்கூடாது. ஆட்சி அமைக்கவும் கூடாது.

இது ஜனநாயக நாடு. இங்கே எஜமானர்கள் யார்? வாக்காளப் பெருமக்கள்தான் அவர்கள் தான் உண்மையான எஜமானர்கள்.” ”ஏதோ சில கட்சிகள் கூடி ஆட்சி அமைத்துத் தேர்தலில் வெற்றி பெற்றால் நிலையான அரசாங்கம் எப்படி அமையும்? சர்க்கசில் சிங்கம், புலி, கரடி, குரங்கு, நரி ஆகியவை கூண்டில் அடைபட்டு அடங்குவது போல, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கொள்கைகளை உடைய கட்சிகளது அரசு தானே நடக்கும்? நாட்டில் அமைதியும் ஒழுங்கும் இருக்குமா? அவர்களது பிரச்சினையைக் கவனிக்க முடியுமா? பொது மக்கள் யோசிக்கவேண்டும்” என்பன போன்ற பெருந்தலைவரின் பேச்சுக்கள் நடைமுறைகால அரசியலை அப்படியே காட்சிப்படுத்துவது போல அமைந்திருக்கிறது எனலாம்.

நாம் நம் உழைப்பைத் தந்து அதற்கு ஊதியமாகப் பெறும் ரூபாய் நோட்டுக்கள் வெறும் காகிதங்களே. ஆனாலும் அதை நிறை மனதோடு ஏற்கிறோம். சேமித்து வைக்கிறோம். எந்த நம்பிக்கையில்? ஒவ்வொரு காகித நோட்டிலும் நாட்டின் அரசு ஒரு சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறது. அந்தக் காகிதத்தில் குறிக்கப்பட்டுள்ள தொகையை என்றும் எந்தப் பொருளாக விரும்புகிறோமோ அந்தப் பொருளாகப் பெறும் உரிமை நமக்குத் தரப்பட்டு இருக்கிறது. அரசுகள் மாறலாம். தலைவர்கள் மாறலாம். கொள்கை வேறுபாடுகள் உள்ள அரசுகள் அமையலாம். ஆனால், தலைமை வங்கி அல்லது நீதித்துறை அளித்த ‘சத்தியவாக்கு’ என்றும் மாறாது. மாறக்கூடாது.”

சமதர்மம் என்றால் ஏழ்மையைச் சமமாகப் பகிர்ந்து கொடுப்பது என்று அர்த்தமல்ல. மேலும், மேலும் உற்பத்தி செய்தால், அதே சமயத்தில் அதனால் ஏற்படுகின்ற செல்வம் ஒருவருடைய இரும்புப் பெட்டிகளில் சென்று ஐக்கியமாகி விடாமல், பலருக்கும் பயன்படும் விதத்தில் பரவலாகும்படி பார்த்துக் கொள்ளுதல், இவை தான் சமதர்மத்தின் நோக்கம். ‘ஒருவன் பட்டினியாக இருக்கிறான் என்றால் அவன் யார்? என்ன சாதி? என்றெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? திராவிடன் பசி ஒருவிதமாகவும் ஆரியன் பசி வேறுவிதமானதாகவுமா இருக்கும்? பட்டினி எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆகவே பாரபட்சமின்றி எல்லோரது பட்டினியையும் போக்க வேண்டும்.’

‘புதிய சமுதாயத்தை அமைக்க வேண்டுமானால் பழைய பழக்க வழக்கங்களை அப்படியே வைத்துக் கொள்ள முடியுமா? அதற்காகப் பழையதெல்லாம் தவறு என்று சொல்லலாமா? கூடாது. ஒரு புது வீட்டுக்குக் குடித்தனம் போகும்போது, பழைய டின், துடப்பம், ஓட்டை உடைசல் எல்லாவற்றையும் விட்டு விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு போகிறோம். அல்லவா? அது போல் பழமையில் இருக்கிற நல்ல விஷயங்களை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என கணக்கற்ற சிந்தனைகளை பாமரனுக்கும் புரியும்படி மிக எளிய எடுத்துச்சொன்னவர்தான் பெருந்தலைவர் காமராசர்.

இவ்வாறு தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இந்தியாவின் இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே? ”ஆகட்டும் பார்க்கலாமின்னேன்” – என்று சொல்வதைத் தவிரக் காமராசருக்கு வேறொன்றும் பேசவே தெரியாது என்று அவரைத் தாழ்த்திப் பேசியவர்கள் கூடக் காமராசரது முழுமையான வாழ்க்கையும் வரலாற்றையும் அறிந்திருந்தால் நிச்சயம் வாழ்த்திதான் பேசியிருப்பார்கள். ஏனெனில்,

“அவரைப்போல உன்னதமான தலைவன் எந்த அரசியலிலும் இல்லை,

நிச்சயமாக அவரைத்தவிர அவருக்கு நிகர் உலகில் வேறு யாரும் இல்லை!!!”

பார்வை நூல்

சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்;வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; சென்னை
தேனி.எஸ்.மாரியப்பன் - காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், விஜயா பதிப்பகம் 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் - 641 001, முதற்பதிப்பு ஜூலை 2009.


* கட்டுரையாளர் - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, தமிழியற்புலம், முனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R