ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?அகநானூறு திணையும், திணைக்குரிய துறைக்குறிப்பும் செவ்வனே பெற்றுள்ளது. இருப்பினும் சில பாடல்களின் துறைக்குறிப்புகள் திணைக்குப் பொருத்தமில்லாததாகவும் உள்ளன. இதை முதற்பொருள், கருப்பொருள். உரிப்பொருள் அடிப்டையில் நிறுவலாம். எனினும் இக்கட்டுரை அகநானூற்றுப் பெண் புலவர்களின் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக் குறிப்புகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. பெண் புலவர்களின் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக் குறிப்புகளுக்கும் ஆண் புலவர்களின் பாடலுக்குக் கொடுக்கப்பட்ட துறைக் குறிப்புகளுக்கும் வேறுபாடு உள்ளதா? என்பதை ஆய்வுச் சிக்கலாகக் கொண்டு அகநானூற்றுப் பெண் புலவர்களின் துறைக்குறிப்புகள் மட்டும் ஆராயப்படுகின்றன. பெண், ஆண் புலவர்களின் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக்குறிப்புகள் கீழ்க்காணுமாறு உள்ளன.

அகநானூற்றுப் பெண் புலவர் பாடல்களின் துறைக்குறிப்புகள்

1. அஞ்சியத்தை மகள் நாகையார்
1. வரைந்து எய்திய பின்றை மண மனைக்கண் சென்ற தோழிக்கு
தலைமகள் சொல்லியது (அகம். 352)

வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம் (மேலது )

2. ஒக்கூர் மாசாத்தியார்
1. வினைமுற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது.
(அகம். 324)
2. வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு உழையர் சொல்லியது. (அகம். 384)

3. ஔவையார்
1. தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. (அகம்.11)
2. செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது (அகம்.147)
3. பிரிவின்கண் தலைமகள் அறிவுமயங்கிச் சொல்லியது. (அகம்.273)
4. தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. (அகம்.303) 4. கழார்க்கீரன் எயிற்றியார்
1. பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. (அகம்.163)
2. பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.(அகம்.217)
3. தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியது. (அகம்.235)
4. பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லிது.(அகம்.294)

5. குமுழி ஞாழலார் நப்பசலையார்
1. தோழி வரைவு மலிந்து சொல்லியது (அகம்.160)

6. நக்கண்ணையார்
1. தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவளாய்த் தலைமகள் சொல்லியது. (அகம்.252)

7. போந்தை பசலையார்
1. தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.(அகம்.110)

8. வெள்ளிவீதியார்
1. வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (அகம்.45)
2. இரவுக்குறி சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.(அகம்.362)

9. வெறி பாடிய காமக்கண்ணியார்
1. வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து தலைமகள் ஆற்றாளாகத் தோழி தலைமகனை இயற்பழிப்பத் தலைமகள் இயற்பட மொழிந்தது. (அகம்.22)
தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகத் தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம் (மேலது)
2. தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியதும் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் மாம். (அகம்.98)

அகநானூற்றில் பாடல் பாடிய பெண் புலவர்கள் ஒன்பது பேர் என சங்க இலக்கியம் ஆய்வுகளும் அட்டவணைகளும் என்ற நூலில் (ப.309) ந. சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் இக்கட்டுரை பெண் புலவர்கள் ஒன்பது பேர் என்ற வரையறைக்குட்பட்டு எழுதப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட துறைக்குறிப்புகள் யாவற்றிலும் பெண்களின் காதல் அல்லது பிரிவுத் துயர் வெளிப்பட்டுள்ளன. மேலும், பெண் புலவர்களின் பாடல்களில் தனிச்சிறப்புமிக்க துறைக்குறிப்புகள் அமைந்துள்ளன இதை அஞ்சியதை மகள் நாகையார் பாடல்களின் துறைக்குறிப்புக்கள் ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களின் துறைக்குறிப்புக்கள் மற்றும் ஔவையார் பாடல்களின் துறைக்குறிப்புகளில் காணலாம். ஔவையார்பாடல்களின் துறைக்குறிப்புகள் ஏனைய அகநானூற்று ஆண் புலவர்களின் பாடல்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மேலும் குறிஞ்சித் திணை களவுக் குறித்த துறைகளை மட்டுமே பெற்று வரும் என்பது தொல்காப்பிய விதி.

உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே (தொல். பொருள். அகத்.15)

என்று கூறிய பின்னர் ஒவ்வொரு திணைக்கும் இன்ன உரிப்பொருள் வரும் என்பார் தொல்காப்பியர்.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்த மென்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே
(தொல். பொருள், அகத்.16)

என்ற நூற்பாவின் மூலம் ஒவ்வொரு திணைக்கும் இடம்பெற வேண்டிய உரிப்பொருளை தொல்காப்பிய உரையாசிரியர்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றனர். இதன் அடிப்படையில் பார்க்கும்போது குறிஞ்சித் திணைக்குக் களவு குறித்த உரிப்பொருள் வர வேண்டும். ஆனால், கற்பு குறித்த உரிப்பொருள் அஞ்சியத்தை மகள் நாகையார் பாடலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்தப் பாடலுக்கும் இத்தகைய திணைமாறிய உரிப்பொருள் அகநானூற்றுப் பெண் புலவர் பாடல்களில் காணப்படவில்லை.

ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக்குறிப்புகள் இரண்டும் ஒரே தன்மையில் உள்ளன. இவற்றில் எவ்வித பொருள் வேறுபாடும் இல்லை. மேலும் அகநானூற்றில் வேறெந்த பெண் புலவர்களின் பாடல்களுக்கும் இத்துறைக்குறிப்புகள் கொடுக்கவில்லை. முல்லைத் திணைக்குரிய இந்த இரண்டு துறைக்குறிப்புகளும் பாடலின் பொருளை உணர்த்துகின்றன.

ஔவையார் இயற்றிய நான்கு பாடல்களின் துறைக்குறிப்புகளும் அடிப்படையில் பிரிவு குறித்ததாக உள்ளன. மேலும் நான்கு பாடல்களின் திணையும் பாலைத் திணைக்கு மட்டுமே உரியதாக உள்ளது. முதற்பொருள், கருப்பொருள் சிறப்பாகப் பொருந்தி வருகிறது. இருப்பினும் பாடல்களின் துறைக்குறிப்புகள் உரிப்பொருள் அடிப்படையில் அமைந்துள்ளன என்பதைவிட , கருப்பொருளை மையமாகக்கொண்டு அகநானூற்றுத் துறைக்குறிப்புக்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினாலும் சிக்கல் வருகிறது. ஏனெனில் அகநானூற்று முல்லை, மருதத் திணைப் பாடல்கள் உரிப்பொருள் அடிப்படையில் திணை துறைக் குறிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஔவையார் அகநானூற்றில் 11, 147, 273, 303 ஆகிய பாடல்களை பாடியுள்ளதாகத் தொகுப்பு நமக்குக் கிடைக்கிறது இவற்றில் முதல் இரண்டு பாடல்கள் ஆண் புலவர்கள் பாடிய பாடல்களுக்குக் கொடுக்கபட்ட துறைக்குறிப்புகளோடு ஒத்துள்ளன. அல்லது பெண் × ஆண் புலவர்களின் துறைக்குறிப்புகள் ஒன்றுபோல் உள்ளன. ஆனால் 273, 303 ஆகிய இரண்டு பாடல்களின் துறைக்குறிப்புக்கள் வேறுபட்டும் வேறெந்த பெண்×ஆண் புலவர்களின் பாடல்களுக்கும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கன.

பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது (அகம். 273)
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது (அகம். 303)

இந்த இரண்டு துறைக் குறிப்புக்களும் மிக முக்கியமானவை.

பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது, தலைமகள் தன் நெஞ்சிற்குக் கூறியது என இரண்டு துறைக்குறிப்புகளும் முற்றிலும் வேறுபட்டன. தலைமகன் தன் நெஞ்சிற்குப் பாடியதாக நிறைய பாடல்கள் கிடைக்கின்றன. ஆனால் தலைவி பாடியதாக, பெண் புலவர் ஒருவர்கூட இயற்றவில்லை. ஔவையார் பாடலில் இது காணப்படுகிறது. நெஞ்சுக்குக் கூறியதாக வரும் பாடல்களில் மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் தலைவன் நெஞ்சிற்குப் பாடும்போது ‘தலைவி நமக்குக் கிடைக்கமாட்டாள்’ , ‘பெறுவதற்கு அரியவள்’ போன்ற ஏமாற்ற குரல் ஒலிக்கிறது. ஆனால் ஔவையார் பாடிய பாடலில் மட்டும் அலர் எழுந்ததால் தலைவனைத் தேடிச் செல்வேன் எனத் தலைவி கூறுகிறாள். இது பெண் × ஆண் புலவர்களின் பாடலுக்குக் கொடுக்கப்பட்ட துறைக்குறிப்புகளில் மிக முக்கியமான வேறுபாடாகும்.

ஆண் புலவர்களின் பாடுபொருள்
ஆண் புலவர்கள் பெண் புலவர்களின் பாடுபொருளிலிருந்து முற்றிலும் வேறுபடாமல் இருப்பினும் சில இடங்களில் வேறுபட்ட பாடுபொருளை பாடியுள்ளனர். அதனடிப்படையில் துறைக்குறிப்பு அமைக்கும்போது சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. முதலவதாக,

1.பரத்தையார் பிரிவு – அகம் 66
2. வாயில் மறுத்தல் – அகம்.116.
3. புணர்ந்து உடன்போதல் அகம் .அகம்.55
4. வெறியாட்டு அகம்.192.

மேற்கூறிய துறைக்குறிப்புக்கள் யாவும் பெண் புலவர்களின் பாடல்களுக்கு வகுக்கவில்லை. இது ஏன் என்பது சிக்கலுக்குரிய வினா. பெண் சார்ந்தும் பெண்ணின் மனம் குறித்தும் நிகழ்வுகளாக எடுத்துரைக்கும் பாடல்கள் ஆண் புலவர்களே இயற்றியுள்ளனர். பெண் புலவர்கள் அவர்களின் அன்பு குறித்தும் அன்பினால் ஏற்படுகின்ற பிரிவு துயரையும் பெண் புலவர்கள் பாடியுள்ளனர். இது அக்காலத்திய பெண் நிலையை அறிந்துகொள்ள முடிகிறது.

மேற்கண்ட முடிவுகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பெண் × ஆண் புலவர்களின் பாடல்களில் வேறுபாடு என்னவென்றால் பெண் புலவர்கள் எதிர்ப்புக்குரலை பதிவு செய்துள்ளனர். தலைவன் பிரிந்ததால் அவனைத் தேடிச் செல்வேன் எனத் துணிச்சலாகப் பெண் புலவர் கூறுகிறார். ஆனால் ஆண் புலவர் இயற்கையும், காதலையும் பெண்ணின் காதல் நிகழ்வுகளையும் பாடியுள்ளார்.

அகநானூற்றுப் பெண் புலவர்களின் பாடல்களில் அல்லது பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக்குறிப்புகளில்

வரைவிற்குப் பிந்தைய நிகழ்வுகள்
தலைவி தன் நெஞ்சிற்குக் கூறல்
அறிவு மயங்கிக் கூறல் என்ற துறைக்குறிப்புகளைத் தவிர வேறு கருத்தமைவுகள் பாடல்களில் இல்லை. இது பெண் புலவர்களுக்கே உரிய தனித்தன்மைகள். ஏனைய துறைக்குறிப்புகளான,

ஊடல்
வெறியாட்டு
பரத்தையிற் பிரிவு

போன்றவற்றை பெண் புலவர்கள் பாடவில்லை. இந்தத் துறைக்குறிப்புகள் யாவும் முழுக்க முழுக்க பெண் நிகழ்வுகளை மையமாகக் கொண்டன. இவ்வாறு இருக்க ஏன் பெண் புலவர்களின் பாடல்களுக்கு இத்தகைய துறைக்குறிப்புகள் வழங்கவில்லை. ஊடல் குறித்தும், பரத்தையற் பிரிவு குறித்தும் வெறியாட்டுக் குறித்தும் ஆண் புலவர்கள் மட்டும் பாடவேண்டிய கட்டாயம் என்ன என்பது மிக முக்கியமான வினா? மேலோட்டமான நிகழ்வுகள் மட்டுமே பெண் புலவர்கள் பாடியுள்ளனர். பாட முடியாத சூழல் இருந்திருக்க வேண்டும். இது ஒருவித கட்டுப்பாடாகக் கூட இருந்திருக்கலாம்.

ஆண் புலவர்கள் பாடுவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் பாடல்களில் தலைவியின் நுணுக்கமான சில செயல்பாடுகளைக்கூட ஆண் புலவர் பாடியுள்ளார். மிகையான காதலையும் ஊடலையும் ஆண் புலவர் எவ்விதத் தடையும் இன்றி பாடியுள்ளார். இதற்கு மிக முக்கியமான காரணம் என்ன என்பதைத் தரவுகள் இல்லையெனினும் சில கருத்துக்களை முன்வைக்கலாம்.

சங்கப் பாடல்களைத் தொகுக்கும்போது பெண் புலவர்களின் பாடல்களை ஒதுக்கி இருக்கலாம். அல்லது மிகையான காதல் உணர்வுள்ள பாடல்களை நீக்கி இருக்கலாம். அவ்வாறு நீக்கி இருந்தால் ஆண் புலவர்களின் பாடல்களையும் நீக்கி இருக்க வேண்டும் என்று கூறலாம். ஆனால் ஆண் பாடினால் தவறில்லை பெண் பாடக் கூடாது என்று கருதி இருக்கலாம்.

கற்பித்தல் முறைக்கு அகநானூற்றுப் பாடல்களை உட்படுத்தியபோது இவ்வாறு பெண் பாடலாமா என்று கருதி மடாலயங்கள் அவற்றை நீக்கி இருக்கலாம். ஒன்றிரண்டு பாடல்களில் பெண்ணின் கலகக் குரல் ஒலித்தாலும் பெண்ணுக்குத் தொடர்ந்து சுதந்திரமாகப் பாடல் இயற்ற மறுக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால்தான் பெண் ஆண் புலவர்களின் பாடுபொருள்களில் மாற்றம் உள்ளன. இந்த மாற்றம்தான் பெண் புலவர்களின் பாடல்களுக்கு வகுக்கப்பட்ட துறைக்குறிப்புகள் சிறப்புநிலை பெற்று, பெண் புலவர்களின் துணிச்சலை எடுத்துரைக்கின்றன. இதனடிப்படையிலே பெண் புலவர் பாடல்களின் துறைக்குறிப்புகள் ஆண் புலவர் பாடல்களின் துறைக்குறிப்புகளிலிருந்து வேறுபட்டு உள்ளன என்ற முடிவை இக்கட்டுரை முன்வைக்கிறது.

துணை நூல்கள்
1. அகநானூறு, களிற்றியானை நிரை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ,சென்னை , மறுபதிப்பு 2009.
2. அகநானூறு, மணிமிடைபவளம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ,சென்னை , மறுபதிப்பு 2007.
3. அகநானூறு, நித்திலக்கோவை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை , மறுபதிப்பு 2008.
4. அடிகளாசிரியர் (ப.ஆ.), தொல்காப்பியம் பொருளதிகாரம் , இளம்பூரணர் உரை (செய்யுளியல் நீங்கலாக), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் முதற்பதிப்பு 2008.
5. சண்முகசுந்தரம் (தொ.ஆ.), சங்க இலக்கியம் ஆய்வுகளும் அட்டவணைகளும், காவ்யா பதிப்பகம், 2012.

* கட்டுரையாளர்- - வீ.ராஜீவ்காந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி - 605014. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R