மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்  (17)

பராசக்தி படத்தை இன்றும்  ஒரு மைல்கல்லாக, ஒரு க்ளாசிக் என்று தான் மதிப்பிடுகிறார்கள். அந்தப் படம், கோர்ட்டில் சிவாஜி கணேசனின் உரத்த வாக்குமூலம்  சினிமாவா, அரசியலா? அதை எழுதிய போது கருணாநிதி அரசியல் வாதியாக தன்னை எண்ணிக்கொண்டாரா, இல்லை சினிமா கதையாசிரியராகவா? இன்று வெங்கட் சாமிநாதன்சினிமாவில் பரவலாக அதன் தொடக்கத்திலிருந்தே காணும் பல அவலங்களை, அதன் குணத்தையே தொடர்ந்து நிர்ணயித்து வரும் அவலங்களைக் கண்டாலும் அவை பற்றி நினைத்தாலும்  நான் மிகவும் சுருங்கிப் போகிறேன். மனத்தளவிலும் நினைப்பளவிலும். இது எனக்கு நேர்ந்துள்ள எனக்கே நேர்ந்துள்ள மனவியாதி அல்ல. இன்னமும் தமிழ் சினிமாவும் அரசியலும் பாதிக்காது மன ஆரோக்கியமோ உடல் ஆரோக்கியத்தையமோ க்ஷீணித்துப் போகாது பார்த்துக்கொள்ளும் ஜீவன்கள் யாரும் மனம் சுருங்கி உடல் குறுகித் தான் போவார்கள். கூவத்தின் கரையில் வாழ்வதற்கும் உடல், மனப் பயிற்சி வேண்டும் தானே.. அது டிவி செட்டும் வோட்டுப் போட ஆயிரங்கள் சிலவும் கிடைத்துவிட்டால் அது அந்த பயிற்சி பெற்றதற்கான பரிசு என்று தான் சொல்லவேண்டும்.  தமிழ் சினிமா பற்றியோ, அரசியல் பற்றியோ பேசும்போது இந்த மொழியில், படிமங்களில் தான் நான் பேசத் தள்ளப்படுகிறேன்.  ஆனால் இந்த சாக்கடையில் உழன்று சுகம் காணும் ஜீவன்கள்  அவரவர் ஆளுமைக்கும் பிராபல்யத்துக்கும் ஏற்ப இந்த சமூகத்தையும் ஆபாசப்படுத்தி வருகிறார்கள்.

 வோட்டுக்களும் பிராபல்யமும் நம் ஜனநாயகத்தைத் தீர்மானிப்பதால், சினிமாவின் அவலங்கள் அரசியலுக்கும் அரசியலின் அவலங்கள் சினிமாவுக்கும் பரவி ஒரு மட்டத்தில் இது சினிமாவா இல்லை அரசியலா என்று இனங்காட்டி பிரிக்கமுடியாதவாறு ஒன்று கலந்து விட்டதையும் [பார்க்கிறோம். பராசக்தி படத்தை இன்றும்  ஒரு மைல்கல்லாக, ஒரு க்ளாசிக் என்று தான் மதிப்பிடுகிறார்கள். அந்தப் படம், கோர்ட்டில் சிவாஜி கணேசனின் உரத்த வாக்குமூலம்  சினிமாவா, அரசியலா? அதை எழுதிய போது கருணாநிதி அரசியல் வாதியாக தன்னை எண்ணிக்கொண்டாரா, இல்லை சினிமா கதையாசிரியராகவா? இன்று காலை தற்செயலாக விவேக் ஒரு படத்தில் அந்த கோர்ட் பிரசங்கத்தை ஒட்டி மூச்சு விடாமல் 15 நிமிஷம் கதறித் தள்ளிய காட்சியைப் பார்த்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. அது நகைச்சுவைக் காட்சிகளையே கொண்ட ஒளிபரப்புப் பகுதி. சாதாரணமாக விவேக்கின் காமெடி எனக்குப்பிடிக்காது ஆனால் அவர் திறமை இந்தக் காட்சியில் எனக்குப் பிடித்ததாக இருந்தது.. அதே உரத்த குரல், அதே கேள்விகள், அதே பதில்கள் அதே அடுக்கு மொழிகள். நகைச்சுவைப் பகுதியாதலால் அது கிண்டல் என்று எனக்கு மாத்திரம் அல்ல, தொலைக்காட்சிக்காரர்களுக்கும் அது கிண்டல் வகையைச் சார்ந்ததாகத் தான் பட்டிருக்க வேண்டும். அது கிண்டல் தான் என்றால், அந்தக் கிண்டல், சிவாஜி கணேசனின் நடிப்பைக் கிண்டல் செய்ததா.இல்லை,  அந்த புகழ்பெற்ற அறைகூவலைக் கிண்டல் செய்தாரா, இல்லை பாராட்டு தலாகத்தான்  காப்பி அடித்தாரா? அது சினிமாவா?,இல்லை, அரசியலா? அதைப் பாராட்டு என்று நினைத்துத்தான் விவேக் பத்மஸ்ரீ விருதுக்கு உரியவரானாரா? உலக நாயகன் பராசக்தி வசனத்திலிருந்து தான், தான் சினிமா நுணுக்கங்களையும் தமிழையும் கற்றதாகச் சொல்லும் போது, அது அரசியலா, இல்லை சினிமா ரசனையா?  முதல் அமைச்சர் நினைத்த போதெல்லாம் சினிமாக் காரர்களுக்கு சலுகைகளாக வாரி வழங்கிக்கொண்டு வருகிறாரே, அந்த ஒவ்வொரு சலுகை அறிவிப்பும் அவருக்கு சினிமாககாரர்கள் தரும் பிரம்மாண்ட  பாராட்டு விழாவில் முடிகிறதே, அந்த ஒவ்வொரு பாராட்டு விழாவும் அனேகமாக நாள் முழுதும் நீடிக்கும் குத்தாட்ட விழாவாகவே முடிகிறதே, அது சினிமா ரசனையா?, இல்லை அரசியலா? இல்லை நாள் முழுதும் குத்தாட்டம் பார்க்கக் கிடைத்த ஒரு வாய்ப்பா? இல்லை அது குத்தாட்ட அழகிகள் தமிழக அரசியலுக்குத் தரும் பங்களிப்பா? தமிழகத்தில் இலக்கியம் மாத்திரம் அல்ல, சினிமா, அரசியல், பாராட்டுவிழா, குத்தாட்டம் எல்லாமே பன்முக பரிமாணம் பெற்றுத் திகழ ஆரம்பித்துவிட்டனவே, இதுவே தமிழ்க் கலை வாழ்க்கையில் எல்லோரும் எப்போதும் சொல்லிப் பெருமைகொள்ளும் பொற்காலத்தில் வாழ்கிறோமோ ஒருவேளை?

கடந்த பகுதியில் நான் உலக நாயகனையும் சூப்ப்ர் ஸ்டாரையும் மாத்திரம் எடுத்துக்கொண்டு சில அபிப்ராயங்களைச் சொன்னேன். அவர்களை இரண்டு பெரும் பிரிவுகளுக்கு பாரிய உதாரணங்களாகத் தான் எடுத்துக்கொண்டேன். இடைப்பட்ட பல புள்ளிகளும் உண்டு. அவர்களைப் பற்றி நான் பேசாததால், அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அர்த்த மில்லை. ஒவ்வொருவரிடமும் உலக நாயகனின் தன் மிதப்பும், உண்டு. சுப்பர் ஸ்டாரின் சாகஸக்காட்சிகளும் கொஞ்சம் கூட குறைய உண்டு. யாரையும் நடிகர் என்று சொல்ல லாயக்கில்லை

ரசிகர்களின் கனவுலகப் பிரமைகளுக்கும், மூட்டை மூட்டையாக பணம் பண்ண வந்த தயாரிப்பாளர்களின் கயிற்றசைவுக்கு ஏற்ப ஆடும் பாவைகள் தான். தயாரிப்பாளர்களும் ரசிகர்களிடம் வெற்றி பெற்ற உலக நாயகன், சூப்பர் ஸ்டார் ஆகிய இரண்டு பெரும் மாடலகளின் லீலைகளை வசதிக்கேற்ப கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து எடுத்து உபயோகப் படுத்திக்கொள்வார்கள். ஆக, இதைச் சொல்ல ஒவ்வொரு வரையும் பற்றி விளாவாரியாக எழுதிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை இங்கு பலர் பின்னோட்டமாக எழுதும் அபிப்ராயங்களைப் படிக்கும் போது, நான் எழுதுவதை அவர்கள் எதிர்கொள்வதே இல்லை என்று தெரிகிறது. சூப்பர் ஸ்டாரை, நான் தனிமனிதராக மதிக்கிறேன் என்று சொல்லி விட்டதில் அவர்கள் புள்காங்கிதமடைந்து விடுகிறதைப் பார்க்கிறேன். அவர்களுடைய பாலாபிஷேக மூலமூர்த்தியைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை  சொல்லி விட்டேனே, அது போதும் அவர்களுக்கு. சூப்பர் ஸ்டாரை யாரும் முக்கியமாக மதிக்க வேண்டியது அவரிடம் இருந்திருக்க வேண்டிய, ஆனால் இல்லாது போய்விட்ட அவரது நடிப்பாற்றலுக் காகத்தான்., அவர் தன் சினிமாக்களில் முன் வைத்திருக்க வேண்டிய  சமூக மதிப்புகள் சார்ந்த பார்வைக்காக. வாழ்க்கை விமர்சனத்துக்காகத்தான். கலை சார்ந்த இந்த குணங்களுக் காகத்தான்,.  எந்தக் கலைஞனும் பாராட்டப்பட வேண்டியவனா கிறான்,, அவன் எந்தக் கலைத்துறையைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி. அப்போது தான் அவன் கலைஞனாகிறான். இதே போலத்தான் உலகநாயகனின் பக்த கோடிகளும், கமலிடம் நடிப்புத் திறமையைக் காண்கிறேன் என்று சொல்லிவிட்டேன். உடனே, கமலைப்பாராட்டி விட்டேன் என்று ஆற்றில் மிதக்கிறவனுக்கு பற்றிக்கொண்டு மிதக்கவாவது ஏதோ கிடைத்துவிட்ட பரவசத்தில் காவடி எடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவரது நடிப்புத் திறன் சுயமோகத்தில் தன் கலையையும் இழந்து, முதலும் முடிவுமாக தன் மனிதத்வ த்தையும் இழந்து ஒரு அருவருக்கத் தக்க ஆபாச கலாசாரத்தில் தானும் முழ்கி தமிழ் சமுகத்தையும் முழ்க அடித்துவிட்டதாக நான் குற்றம் சாட்டியதை இவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதைத் தான் மிக ஆபாசமான சினிமா, அரசியல் கலாசாரம் என்று சொல்கிறேன்.

இப்படி தன் ஆபாசத்தைப் பற்றி ஏதாவது ஒரு நல்ல வார்த்தையாவது கிடைக்காதா என்ற தவிப்பு தான் இவர்களை தமிழ் சினிமா மாத்திரமா இப்படி?, இதே ஃபார்முலா தானே ஹிந்தி சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் என்று கேட்கும் பரிதாபம் நேர்கிறது. வாஸ்தவம். தெலுங்கு சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வேளை இன்னம் மோசமாகக் கூட இருக்கும் என்கிற சாத்தியத்தையும் நான் மறுக்கவில்லை. கன்னட சினிமாவிலும் தமிழ் சினிமாவின் கூறுகள் உண்டு. அதன் வெகுஜன சினிமாவும் தமிழ் சினிமாவைப் போல் தான். அங்கும் ஒரு ராஜ் குமார் உண்டு. தான். நடிகர் திலகங்களும் சூப்பர் ஸ்டார்களும் நம் தமிழ் நாட்டுக்கே தரப்பட்ட ஏக போக குத்தகை அல்லர். ஆந்திரா என்.. டி ராமராவுக்கு கோவில் கட்டிய கலாசாரம் தான் தமிழ் நாட்டு சினமா கலாசாரம் முழுதுமாக வெகுஜன கவர்ச்சி பெற்ற இடம் தான் அது. தமிழ் நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் சினிமா இன்னும் பல விஷயங்களில் கொடுக்கல் வாங்கல் நிறையவே இருக்கின்றன, இது ஆந்திரா, இது தமிழ் நாட்டு சமாசாரம் என்று பிரித்தறிய முடியாத வாறு. ஆனால் அங்கு ஒரு குக்குனூரையும் காணலாம். அவருடைய ஹைத்ரபாத் ப்ளூஸ், இக்பால், ஆஷாயே(ன்) போன்ற படங்கள் தமிழ் சினிமா போன்ற ஒரு அருவருக்கத்தக்க ஆபாச கலாசாரத்திலிருந்து மீண்டு இங்கு வித்தியாசமாக சிந்திப்பவர்களும் உண்டு, சூழலை மாற்ற வேண்டும் என்ற ஆசையில் தன்  எளிய ஆரம்ப முயற்சிகளை இந்த படங்களில் காணலாம். அங்கு ஒரு ராம் கோபால் வர்மாவையும் காணலாம். அவர் ஹிந்தி சினிமாவின் ஃபார்முலாவை முழுமையாக ஸ்வீகரிக்காமல், முற்றாகவும் விலக்காமல், அதே சமயம் வித்தியாசமான கதைகளையும், வித்தியாசமான கதை சொல்லும் பாணியையும் கையாண்டு, ஃபார்முலாவுக்குப் பழக்கப் பட்டவர்களை சினிமா தியேட்டருக்குள் அழைத்து வித்தியாசமான சினிமா அனுபவத்தை ஒரு இரண்டும் கெட்ட நிலையில் சினிமா கலாசாரத்தை நகர்த்திக்கொண்டு செல்கிறார். அது அவரால் ஹிந்தி சினிமாவில் செய்ய முடிகிறது என்றால்; அதற்குக் காரணம், ஹிந்தி சினிமாவின் ஒரு சத விகித பார்வையாளர்கள் இதற்குப் பழக்கப் படுத்தப் பட்டுள்ளார்கள். அதற்கு அவர்களைத் தயார் செய்தது, ஆரம்ப காலத்தில் ஜோகன் பற்றிச் சொன்னேனே, அதைத் தொடர்ந்து பிமல் ராய், கமால் அம்ரோஹி போன்றவர்கள் தமக்கென ஒரு சாத்தியப்பட்ட வித்தியாசமான ரசிகர் கூட்டத்தை உருவாக்க முயற்சி செய்ததும் அவர்களைத் தொடர்ந்து, ஷ்யாம் பெனெகல் போன்றோ ஒரு இடைப்பட்ட சினிமா கலாசாரத்தை உருவாக்கியதும் தான். ஒரு சினிமா கலாசாரத்தில் எல்லா தயாரிப்பாளர்களும், 150 கோடி ரூபாய் முதலீடு செய்து 300 கோடி சம்பாதிக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு சினிமா நடிகரும் தனக்கு 10 கோடி 25 கோடி சம்பாத்தியம் தரும் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்றும், தன் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும், மொட்டை அடித்துக்கொண்டும் காவடி எடுத்துக்கொண்டும் தன் பட ரிலீஸ் கொண்டாடப்பட வேண்டும் போன்ற கனவுகளுடன் தமிழ் சினிமா ரசிகர்களை அதல பாதாள் சாக்கடைக்குள் தள்ளிக்கொண்டே இருப்பார்களானால், அதுவே நம் சினிமா கலாசாரமும்

ஆனால், ஒரு ராம் கோபால் வர்மாவையோ, குக்குனோரையோ நாம் நம் தமிழ் சினிமாவில் காண இயலாது. தெலுங்கில் இல்லையா?, ஹிந்தி சினிமாவில் என்ன வாழ்ந்தது? என்று கேள்விகள் எழுப்புகிறவர்கள் எல்லாம் ஏன் வங்காளத்தையோ, மலயாளத்தையோ, கர்நாடகாவையோ குறிப்பிடவில்லை. இந்தியா முழுதிலும் ஒவ்வொரு இடத்துக்கும் உரிய ஃபார்முலாக்கள் உண்டு தான். இதையும் ஒரு பெரிய சூதாட்ட வியாபாரமாக சரக்கு உற்பத்திக்களமாக ஆக்குகிறவர்கள் உண்டு தான். வங்காள சினிமா முழுதுமே சத்யஜித் ரேயும், ரித்விக் காடக்கும், அபர்ணாசென்னும், ரிதுபுர்ணோவும் மிருணால் சென்னுமாக நிறைந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு வங்காளியும் பேசுவது பெருமை கொள்வது, உலக அரங்கில் தன்னது என்று முன் வைப்பது இவர்களைத் தான். அந்த ஊரிலேயும் சிம்புவும் பீம்சிங்குகளும் சரோஜா தேவிகளும், உண்டு தான். அவர்கள் தேவகி போஸும் ரித்விக் காடக்கும் வாழ்ந்த இடத்தில் தம் கடை பரப்பக் காரணம், ராஜ்கபூர், தேவ் ஆனந்து ராஜேஷ் கன்னாக்களும் கல்கத்தா தியேட்டர்களுக்கு நுழையவே அவர்களுக்கான மார்க்கெட்டும் அங்கு உருவாயிற்று. அவர்கள் நுழைந்ததும் அந்த ரக சரக்குகளைத் தவிர வேறு எதையும் சந்தைக்குள் நுழைய விடாது வங்க சினிமா கலாசாரமே ராஜேஷ்கன்னா, மும்தாஜ் கலாசாரமாகிவிடவில்லை. இப்போதும் சத்யஜித் ரேயும் மிருணால் சென்னும் உருவாக்கிய சினிமா ஒரு வாழும் மரபாக, வளமான மரபாகத் தொடர்கிறது. இன்றும் அங்கு ஒரு ரிதுபூர்ண கோஷைக் காணலாம்.

இப்படித்தான் ராஜ் குமார் வகையறாக்கள் சூப்பர் ஸ்டார் ஆன போதிலும், ராஜ் குமார் பெயர் சொன்ன மாத்திரத்தில் கன்னட சினிமாவே வெறிபிடித்து சாமியாடத் தொடங்கினாலும், அங்கு ஒரு கிரீஷ் காஸரவல்லியும் உண்டு. அவர் போல கர்னாட், பி.வி. காரந்து என்று ஒரு சிறிய கூட்டம் உண்டு. ராஜ் குமார் பக்த கோடிகள் வேறு யாரையும் வாழவிடாது செய்துவிடவில்லை.

அப்படி அல்ல. மோகன் லாலும் மம்மூட்டியும் தமக்குள் சிரித்துக் கொள்வார்கள், தமிழ் சினிமாவில் நடிக்கும் போது என்று தான் நினைக்கிறேன். மலையாள சினிமாவைப் பற்றி கமல் சாரின், ரஜனி சாரின் பக்த கோடிகள் பேச்சு எடுக்க வில்லை. வங்க சினிமாவைக் கெடுத்த ஹிந்தி சினிமா பற்றிச் சொன்னேன். அது போலத்தான், மலையாள சினிமாவைக் கெடுத்ததும் தமிழ் சினிமா கலாசாரம் தான். அங்கும் குத்தாட்டங்களும், ஸ்டண்ட் காட்சிகளும் மலையாள வெகு ஜன சினிமா கலாசாரமாகிவிட்டது தான். ஆனால், அங்கு ஒரு தனி உலகம் உண்டு தான். அந்தத் தனி உலகத்துக்கும் மலையாள சந்தையில் இடம் உண்டு.அது இன்னமும் தன்னை தமிழ் சினிமா ஆபாசத்துக்கு முற்றிலுமாக இழந்து விடவில்லை. இன்னமும் சொல்லப் போனால், மம்மூட்டியும், மோகன்லாலும் தமிழ்ப் படங்களிலும் நடித்தாலும், தமிழ்ப் படங்களில் எப்படி மிகையாக நடிப்பதும், தமிழ் சினிமாக் கதைகளே எல்லாம் கார்ட்டூன்களாக மிகைகளாகத்  தானே. சீரழிந்துள்ளன. அவற்றில் இயல்பான வாழ்க்கையின் அழகும், உயிர்ப்பும் ஏது? சிவாஜி கணேசன், தமிழ் சினிமா ரசிகர்களைக் குஷிப் படுத்தி, குஷிப்படுத்தி தன் வாழ் நாளில் பெரும்பகுதியைக் கழித்த காரணத்தால், அந்த அபத்த மிகை நாடகத் தனம் அவரை நடிகர் திலகமாகவும் ஆக்கிவிட்ட கள் மயக்கத்தில், சினிமா ஷூட்டிங்குக்கு வெளியே உள்ள உலகத்திலும், சாதாரண வாழ்க்கையிலும் சினிமாவில் நடிப்பது போன்ற நாடக பாவனையில்தான் நடப்பார், பேசுவார் முக பாவனைகளோடு கைகால்களை அபிநயிப்பார் என்று தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்த சமாசாரம் வெளியே நிறைய பரவியிருப்பது, ஹிந்தி சினிமா நக்ஷத்திரம் ஒருவர் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் இதைப் பற்றிச் சொன்னபோது தெரிந்தது. இந்த கண்றாவியை நம் சினிமா ரசிகர் பட்டாளம் கேட்டால் என்ன செய்வார்கள்? மெய் சிலிர்த்துப் போவார்கள். ஆகா, நம் நடிகர் திலகம் பிறவிக் கலைஞர் அல்லவா? வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நடித்துக்கொண்டே இருக்கிறார். அதுவல்லவோ கலை வாழ்க்கை. கலைக்குச் சேவை. அவர் என்ன பணத்துக்காகவா சினிமாவில் நடிக்கிறார்? என்று மாய்ந்து போவார்கள். அப்படி அல்ல. மோகன் லாலும் மம்மூட்டியும் தமக்குள் சிரித்துக் கொள்வார்கள், தமிழ் சினிமாவில் நடிக்கும் போது என்று தான் நினைக்கிறேன். ”இந்த பாண்டிக்காரனுகளே ஒரு மாதிரிதான், கேட்டியா சேட்டா? என்று தமக்குள் பரிமாறிக்கொண்டால் அது   .நாம் ஆச்சரியப்படவேண்டிய விஷயமாக இராது. மலையாள சினிமாவில் கதை என்றால், நடிப்பு என்றால் அவர்கள் கொள்ளும் அர்த்தம் முற்றிலும் வேறாகத்தான் இருக்கும். அங்கும் தமிழ் சினிமாவின் வெகுஜன குணத்தின் தாக்கம் உண்டு தான். அதற்காக அவர்கள் தம் கலை பிரக்ஞையை இழந்து விடவில்லை. வைக்கோலுக்கும் சேமியாவுக்கும் வித்தியாசம் அவர்களுக்குத் தெரியும். வெகுஜன பாமர ரசனைக்கும் தீனி போட வேண்டும் தான். பாமர ரசிகர்களுக்கும் அவர்களது இப்போதைய ரசனைக்கு ஏற்ப சந்தோஷிக்க சரக்குகள் வேண்டும் தான். அதற்காக அதைத் தவிர வேறு எதுவும் உலகத்தில் இருக்கக் கூடாது என்ற தமிழ் சினிமா கலாசாரம் அங்கு இல்லை.

தமிழ் சினிமாவுக்கு ஏற்ப அவர்கள் தம்மை தமிழ் ரசனைக்கு மாற்றிக்கொண்டாலும், மலையாள சினிமாவில் அவர்கள் தம் இயல்பில் தான் இருக்கிறார்கள். மலையாளத்தில் உருவான படங்களைத் தமிழில் எடுக்கும் போது அதைத் தமிழ் சினிமாத்தனத்துக்கு மாற்ற வேண்டியிருக்கிறது. சிவாஜி, சந்திர முகி போன்ற படங்கள் அவற்றின் மலயாள மூலத்தில் உள்ள குணத்திற்கும் தமிழில் நம்ம சூப்பர் ஸ்டாரின் இமேஜைக் காப்பாற்ற, அவர் தம் பக்த கோடிகளான ரசிகர்ளையும் குஷிப்படுத்த செய்த மாற்றங்களை மனதில் கொள்ளலாம். எதாக இருந்தாலும், நம் ஊருக்குக் கொண்டு வந்தால் அதை நம் ரசனைக்கேற்ப மாற்றித் தான் ஆகவேண்டும். நமக்கு வேண்டிய நமக்கு ஏற்ற தீவனத்தைத்  தானே நமக்குக்கொடுப்பார்கள்.

பாலு மகேந்திராவும் கூட நம் சினிமாவில் ஒரு மாற்றத்தைக் கொணர விரும்பினார். அவரால் சில மாற்றங்களை, சினிமாவுக்கு ஏற்ற கதை சொல்லும் முறைகளை, நம் வாழ்க்கையை ஒட்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர முயன்றார் தான். கன்னடத்தில் கிரீஷ் காஸரவல்லியும் மலையாளத்தில் அரவிந்தன், ஏன் தெலுங்கில் கூட குக்குனூர் போன்றோர் முயன்றது தான். ஆனால் இன்று பாலு மகேந்திராவைக் கொண்டாடுவாரும் இல்லை. வரவேற்பாரும் இல்லை. அவர் பெயரைச் சொல்வாரும் இல்லை. அவர் போன இடம் தெரியவில்லை. பாலு மகேந்திரா மலையாளத்தில் எடுத்த படங்களைப் பார்த்திருக்கிறேன். அதில் அவர் எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைத் தமிழில் அவரால் எடுத்துக்கொள்ள முடிவதில்லை


மெய்த்து விட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (18)

வெங்கட் சாமிநாதன்இது வரை நான் எழுதி வந்ததைப் படித்து அதற்கு அவ்வப்போது எதிர்வினை காட்டி வரும்  அன்பர்கள் பெரும்பாலோர் சுமார் நாற்பது வருடங்களாக அவர்கள் பழக்கப்பட்டுள்ள ரசனையையும் சிந்தனைப் போக்கையும் மீறிய எந்த கருத்தையும், அனுபவத்தை யும், எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்றே தோன்று கிறது. நான் ஏதும் புரட்சிகரமான கருத்துக்களையோ, அவர்கள் அன்றாட நிதர்சன அனுபவ உலகத்துக்கு மீறிய விஷயங்களை யோ, அல்லது நம் தமிழ்ப் பண்டிதர்கள் சொல்வார்களே, ‘நுண் மாண் நுழைபுலம் என்று, அப்படி ஏதும் கிடைக்க அரிதான தேவைகளையோ முன் வைக்க வில்லை. இருப்பினும், நான் சொல்லும்  சாதாரணம், பொதுப் புத்திக்கும் புலப்படும் விஷயங் களைக் கூட அவர்கள் தங்கள் பழக்கப்பட்ட சினிமா அனுபவங் களை உதறி, சாதாரண மனிதர்களாக சிந்திக்க மறுக்கிறார்கள்.

திரும்பத் திரும்ப நான் எழுதத் தொடங்கிய சமயத்தில் அவர்கள் கேட்ட கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள் என்றால், இங்கு சொல்லப்படுவது எதையும்  எதிர்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை என்றே சொல்ல வேண்டும். முதலில்  ஏதோ ஒரு காட்சியை எடுத்துக்கொள்ளலாம். அக்காட்சியில் சிலர் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்தக் காட்சியும் அவர்கள் பேசும் விஷயமும், அவர்கள் பேச்சும் தமிழ் சினிமாவிலேதான் காணக் கிடைக்கும் சமாசாரங்கள் தான். வாழ்க்கையில் அவர்கள் சினிமாவில் காணும் விதத்தில் நின்று கொண்டிருக்கமாட்டார்கள், பேச மாட்டார்கள். பேசும் மொழியும் வார்த்தைகளும் அதுவாக இராது வாழ்க்கையில். அவ்வளவும் செயற்கையாக, நம்பகத் தன்மையை இழந்த வெற்று நாடகமாக இருக்கும். முற்றிலும் பொய்யான, ஒரு உலகத்தை அவர்கள் சிருஷ்டித்துக்கொள்கிறார்கள். அது ரசிக்கத் தக்க ஒன்று அல்ல. ஆனால் இப்படியே ஆரம்ப காலத்திலிருந்து செய்து வந்திருப்பதால், அதை நாம் ஒரு மரபாக இப்படித்தான் இருக்க வேண்டும் போல என்று ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அந்த அபத்த அஸ்திவாரத்தின் மேல் மிகப்பெரிய கட்டுமானத்தையும் எழுப்பியிருக்கிறோம். அது அவ்வளவையும் நிராகரிப்பது என்பது இப்போது நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நிராகரிப்பது என்பது, முதலில் இது ஒரு அபத்தமான கட்டுமானம் என்று நினைப்பு தோன்ற வேண்டுமே நம் ரசனையில் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இது இந்த நிராகரிப்பு என்ற எண்ணமும், நிராகரிப்பிற்கான முயற்சியும் தோன்றப் போவதில்லை.

நல்ல படம் எது என்று சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். இது வரை கண்டதெல்லாம் பிதற்றலாக இருக்கிறதே, இதையே நாம் ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வருவது மட்டுமல்ல அந்த விஷச் செடியையே இப்போது ஒரு பிரம்மாண்டமான விருக்ஷ மாக வளர்த்திருக்கிறோமே என்ற நினைப்பே தோன்றாது கேட்கப்  படும் கேள்வி இது.

இது ஒரு பிரச்சினை என்றால், இன்னொன்று மொழி பற்றியது. சினிமாவையும் சினிமா அல்லாதவற்றையும் பிரித்துக் காண வேண்டிய அவசியமும் இருக்கிறது. சினிமாவை தமிழில் திரைப் படம் என்று சொல்லுகிறோம். வம்பற்ற பாடு. திரையில் ஓடும், படம். சினிமா என்பது புதிதாகக் கிடைத்துள்ள ஒரு வெளியீட்டுச் சாதனத்துக்குரிய பெயர். அதற்கும் முன்னால் ஃபில்ம் என்ற வார்த்தை வந்துவிட்டது. அதற்குப் பின் வந்த வளர்ச்சி, கலையாகப் பரிணமித்த வளர்ச்சியை சினிமா என்று சொல்கிறோம். ஃபில்ம் என்பது ஒரு தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட சாதனம். அந்தத் தொழில் நுட்பம் கலையாகும் போது தான் அது சினிமா என்று பெயர் சொல்லப்படவேண்டும். இது காறும் சுமார் 80 வருடங்களுக்கு மேலாக நாம் வளர்த்துள்ளதை தமிழ்த் திரைப்படங்கள் என்று சொல்லலாம் தான். தவறில்லை. தமிழ் ஃபில்ம் என்றும் சொல்லலாம். ஆனால் இந்த 80 வருடங்களில் நாம் தயாரித்து வெளியிட்டுள்ள லக்ஷக்கணக்கான திரைப்படங்களில் சினிமா என்று சொல்லத் தக்கதற்கான முயற்சிகளை நாம் ஒரு சிலவற்றில் பார்க்கலாம். முன்னரே சொன்னேன் பாலு மகேந்திராவின் வீடு படத்தை. அது சினிமா. ஏனெனில் காட்சி பூர்வமாகவே அது ஒரு வாழ்க்கைத் துணுக்கை, தமிழ் வாழ்க்கைத் துணுக்கை நம் முன்னே விரித்து நிகழ்வித்தது அதைப் பார்த்தாலே தெரியும் அவர்கள் யாரும் .நடிப்பவர்களாக வோ, ஒரு செட்டில் இயக்குனர் சொல்வதைச் செய்பவர்களாக வோ தோன்றாது. வாழ்க்கையில் எங்கோ ஒரு வீட்டில், தெருவில், ஹோட்டலில் நடப்பதை அவர்கள் அறியாது நமக்குப் பார்க்கக் கிடைப்பதான உணர்வில் தான் நாம் இருப்போம். விஷய்ம் இது தான். நடிப்பது என்று தெரியாது, இது உருவாக்கப்பட்ட கதை என்பது தெரியாது, இது தயாரிக்கப்பட்ட செட் என்பது நமக்குப் புலப்படாதவாறு, இது ஒரு இயக்குனர் சொல்லிச் செய்வது என்று தோன்றாதவாறு எது நமக்குக் காணத் தரப்படுகிறதோ அது தான் தொழில் நுட்பம். அது தொழில் நுட்பம் தான்.அதுவே கலையாகி விடாது. கலைக் கான உபகரணங்கள். இங்கு சொல்லப்பட்டனவெல்லாம் நிகழ்ந்து, இவை அனைத்தும் இவற்றின் கூட்டுறவில், ஒருமித்து ஒன்றாகி, சொல்லப்பட்டதுக்கும் மேல் சொல்லப்படாத, நமக்குத் தெரியாது ஒன்று நமக்கு உணர்விக்கப்பட்டால் அது தான் கலையாகும்.. நமக்குப் பழக்கப்பட்டதும், நம் சினிமாக்களில் ஒரு மீறப்படக்கூடாத மரபாகத் தொடர்வதும் இது நடிப்பு, இது செட், இது எழுதித் தரப்பட்டு நெட்டுருப் படுத்தப்பட்ட வசனம் என்று நமக்கு தலையிலடித்துச் சொல்வது போலத்தான் எல்லாம் உரக்கக் கத்திப் பேசி, பஞ்ச் டயலாக்குள் யோசித்துப் புகுத்தி,  மிகையான அபிநயங்களும் பாவங்களும் காட்டி, உடலை வருத்திச் செய்வதெல்லாம் நேற்று வரை பேணப்பட்ட அவஸ்தைகள். இன்று அதையும் மீறி, தெருவில் 40 பேர் ஆடும் குத்தாட்டம் இல்லையென்றால் அது படமல்ல. அது விஜயோ, உலக நாயகனோ, சுப்பர் ஸ்டாரோ யாராக இருந்தாலும் சரி என்பதல்ல,

என்னமோ உலகத்தரப் படங்களையெல்லாம் பார்த்து அவற்றால் இன்ஸ்பையராகி யுள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் மிஷ்கினாக இருந்தாலும் சரித்தான். கலை தானே தன்னை ஸ்தா[பித்துக்கொல்ளும். அது தான் அதன் நிரூபணமே. அது ஒன்றும் மேள தாளங்களோடு, படைகள் அனைத்தும் முன் செல்ல பின்னால் கட்டியம் கூறிக்கொண்டு பராக் பராக் என்று எட்டு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அது நகர் வலம் வராது. அமெரிக்க ஜனாதிபதியோ, ஜெர்மன் சான்ஸ்லரோ ஏகே 47 –ஐக் கையெலேந்து நான்கு கருப்புப் பூணைப் படை சூழ்ந்திருக்க 16 அம்பாஸடார் கார் முன்னும் பின்னும் வருவது தன் அந்தஸ்தை பறை சாற்றும் என்று ஊர்வலம் வரும் இன்றைய அரசியல் பிரமுகர்களின் கோமாளித்தன் போன்றது தான், இதோ பார் நான் என்னென்னவெல்லாம் செய்து காட்டுகிறேன் பார், நான் என்னென்ன படமெல்லாம் பார்த்திருக்கிறேன் பார் என்று பாவனை செய்பவர் தான். அவர் இதற்காகப் படும் அவஸ்தையெல்லாம் பார்த்தால் மிகப் பரிதாபமாக இருக்கிறது. அடிப்பது காபி ஆனால் சொல்லிக் கொள்வது இன்ஸ்பைரேஷன். இதற்கெல்லாம் அதிக தூரம் போக வேண்டியதில்லை. அதிகம் அவரது படங்களை ஏதும் அலசி ஆராயவேண்டியதில்லை. சங்கீதம் தெரிந்தவனா, இல்லை தானும் ஒரு பாட்டுக்காரன் தான் என்று நம்மிடம் பீத்திக் கொள்ள வந்திருக்கிறானா என்பது ஒருவனது குரல் எழுந்தவுடனேயே தெரிய வந்துவிடும். அவனிடம்  ”செர்டிபிகேட்டைக் காட்டுய்யா முதல்லே” என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை ஏதும். மிகச் சாதாரண  விஷயம். மிஷ்கினின் நந்தலாலா தொடங்கிய  வுடனேயே அது பல்லிலிளிக்கத் தொடங்கி விடுகிறது. படம் ஆரம்பிக்கத் தொடங்கியதுமே நாம் பார்க்கும் முதல் காட்சி, அந்தச் சிறுவன் முகம் மாத்திரம் தலை குனிந்த வாறே நிற்கும் காட்சிதான். அவன் எதற்காக அவ்வளவு நேரம் அப்படி தலை குனிந்தவாறே நமக்குக் காட்சி தருகிறான். மிஷ்கின் சொல்ல வந்தது என்ன? அப்படியே சலனமற்று நிற்பது என்னமோ கலைப்படம் என்று நம்மூரில் சொல்கிறார்களே, அந்த மாதிரி ஒரு கலைப் படத்தின் ஓர் அம்சம் என்று நினைத்து விட்டாரோ. “உங்களுக்கெல்லாம் இது சட்டுனு புரியாதாக்கும். இதிலே தான் ரொம்ப விஷயம் அடங்கிக் கிடக்கு” என்று நமக்குச் சொல்ல நினைத்துவிட்டாரோ என்னவோ. நமக்கு எதையும் கொச்சையாகப் புரிந்து கொள்ளவும் கொச்சைப் படுத்தவும் தான் தெரிகிறது.

ஒரு தொழிற்சாலையில் ஒரு லேத்தின் முன் ஒரு நாற்பத்தைந்து வயது பெண் உட்கார்ந்திருக்கிறாள். அவள் தயாரிப்பது வெறும் நட். ஒவ்வொன்றாகத் தயாராகும் நட் ஒவ்வொன்றையும் எடுத்து ஒரு இரும்புத் தட்டில் போட்டுக்கொண்டே இருக்கிறாள். அது அவள் வேலை. இதைச் சொல்ல எவ்வளவு நேரம் அந்தக் காட்சியைக் காட்டுவது? குறைந்தது மூன்று நான்கு நிமிஷம் அந்தக் காட்சி தொடர்கிறது. காமிரா அசைவதில்லை இந்தச் செய்தியைச் சொல்ல எவ்வளவு நேரம் அந்தக் காட்சி நம் முன் காணப்படவேண்டும். பத்து செகண்ட், தாங்காது அதற்கு மேல். என் ஞாபகத்தில் அந்தக் காட்சி சுமார் மூன்று அல்லது நான்கு நிமிட நேரம் காட்டப்படுகிறது. நமக்கு அலுப்புத் தட்டி வெறுப்பு ஏற்படும் வரை. அவள் நட்டு தயாரிக்கும் வேலையில் இருக்கிறாள் என்பதல்ல செய்தி. தினம் எட்டு மணி நேரம் அவள் இருந்த இடத்தை விட்டு அசையாது அந்த வேலையைச் செய்கிறாள். மாதம் முப்பது நாளும். வருடம் 12 மாதங்களும். இது காறும் 20 வருடங்கள் அந்தக் காரியத்தைச் செய்து வந்திருக்கிறாள். இன்னும் இருபது வருடங்களோ என்னவோ அவள் இதே காரியத்தைத் தான் செய்யப் போகிறாள். நமக்கு அதைப் 10 செகண்டுக்கு மேல் பார்க்க போரடிக்கிறது. இது தான் அவள் வாழ்க்கை. இதில் தான் அவள் குழ்ந்தைகள் குடும்பம் உயிர் பிழைத்திருக்கிறது. அவள் வாழ்நாள் முழுதும் இப்படித் தான் கழிந்து வருகிறது. இனியும் இறுதி மூச்சு வரை இப்படித் தான் கழியப் போகிறது. இந்த கொடுமையை அந்தப் படம் நமக்கு மூன்று நிமிடம் வெறுப்பூட்டும் அலுப்பில் சொல்லி விடுகிறது. 10 செகண்ட் காண்பித்தால் இந்த செய்தி நமக்கு சொல்லப்பட்டிராது. சொல்லப்பட்டது அவள் நட் செய்யும்லேத்தில் வேலை செய்கிறாள் எனப்து. சொல்லப்படாது உணர்த்தப் படுவது அவள் வாழ்க்கை பூராவும்  இப்படிப் பட்ட ஒரு கொடுமையில் பாழாவது இன்றைய வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத ஒரு அம்சம் என்பது. நாம் என்ன செய்திருப்போம். அவளும் அவள் சகாக்களும் இந்த அவந்த்ர வாழ்வைச் சொல்லும் ஒரு விஜய் பாட்டுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஒரு குத்தாட்டம் அந்த தொழிற்சாலையில் காட்டப்பட்டிருக்கும். {இதிலே நாங்க ஒரு நல்ல மெஸேஜ் சொல்லி யிருக்கோம் என்று அந்த இயக்குனர் நம்ம சுஹாசினியிடம் சொல்லிக்கொண்டிருப்பார் ஒரு ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில். .  . .


(19) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

மிஷ்கின் வித்தியாசமான ஒன்றை உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அந்த வித்தியாசமான ஒன்று அவருள்ளிருந்து தான் வருகிறதா என்று பார்க்கவேண்டும். இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. வித்தியாசமாக, தனக்கென ஒரு தனிப்பாதையில் செல்ல எங்கே அவர் சொன்னும் இன்ஸ்பைரேஷன் கிடைக்கும் என்று வெளி நாட்டுத் திரைப்படங்களையெல்லாம் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். அவர் தனக்குள் அந்தத் தேடலைத் தொடங்கவேண்டும். அங்கிருந்து தான் சிறந்த கலை எதுவுமே தோற்றம் கொள்கிறது. நந்தலாலா ஒரு ஜப்பானிய படத்தின் நகல் என்றார்கள். வெங்கட் சாமிநாதன்மிஷ்கின் வித்தியாசமான ஒன்றை உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அந்த வித்தியாசமான ஒன்று அவருள்ளிருந்து தான் வருகிறதா என்று பார்க்கவேண்டும். இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. வித்தியாசமாக, தனக்கென ஒரு தனிப்பாதையில் செல்ல எங்கே அவர் சொன்னும் இன்ஸ்பைரேஷன் கிடைக்கும் என்று வெளி நாட்டுத் திரைப்படங்களையெல்லாம் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். அவர் தனக்குள் அந்தத் தேடலைத் தொடங்கவேண்டும். அங்கிருந்து தான் சிறந்த கலை எதுவுமே தோற்றம் கொள்கிறது. நந்தலாலா ஒரு ஜப்பானிய படத்தின் நகல் என்றார்கள். வெளி நாட்டுப் படங்கள் பார்க்கும் வசதி இப்போது நிறைய வந்துவிட்டன. பர்மா பஜார் போகவேண்டாம். தெருக்கோடியில் உள்ள முனைக்கடையில் வேண்டிய டிவிடி கிடைத்துவிடுகிறது. இல்லையெனில் எத்தனை ஃபில்ம் சானல்கள் நமக்குக் கிடைத்துவிடுகின்றன. எல்லோருமே தமிழ் நாட்டில் சினிமா பைத்தியங்கள் தான். சினிமாவின் தயவு இல்லாது இங்கு அரசியல் தலைவர்கள் கூட வாழமுடியாது. பைத்தியக்கார படங்களில் பைத்தியக்கார பாட்டு பாடி, பைத்தியக்கார வசனம் பேசி, பைத்திய்கக்கார டான்ஸ் ஒன்றை டோரண்டோவோ மச்சுப் பிச்சுவோ போய் ஆடி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தயார் செய்துகொண்டு தலைவராகும் கனவுகள் காணத் தொடங்கிவிடுகிறார்கள். ரெடிமேட் ரசிகர் பட்டாளம் சாதியைச் சார்ந்தும் கிடைத்துவிடுகிறது. இந்த மாதிரி ஒரு நாட்டில், சினிமாவே இன்றைய கலாசாரத்தின் குணங்களை நிர்ணயித்துவிடும் போது, 90 சதவிகிதம் தசாவதாரத்தையும், ரோபோவையும் முதல்நாள் முதல ஆட்டத்தைப் பார்க்கவேண்டும் என்று அலையும் கூட்டமாகவே அந்த ஒரு ஆட்டவெறிக்க் முன்னூறோ ஐந்நூறோ செலவழிக்கத் தயங்குவதில்லை தான். ஆனால் இந்த  ஏழு கோடி மக்களின் மந்தைக் கலாசாரத்திலும் தமிழ் நாட்டில் ஒரு சில ஆயிரவராவது  World Movies–ம் Lumiere movies –ம் ஆர்வத்தோடு பார்க்கிறவர்கள் இருப்பார்கள் தானே. அவர்களிடமிருந்து இது ஜப்பானியப் படத்தின் காபி என்றோ சரி, உங்கள் இஷ்டப்படியே ‘’இன்ஸ்பைரேஷன்’ என்றோ வைத்துக்கொள்ளலாமே, தெரியாமலா போய்விடும். அந்தக் காலத்தில் என்றால், தமிழில் கதைகள் படிக்கத் தொடங்கிய காலம் கல்கி லியனார்ட் மெர்ரிக்கிலிருந்து பிரதி எடுத்தாரா இல்லை வேறு எங்கிருந்து என்பது ஒரு க.நா .சுப்பிரமணி யத்துக்குத் தான் தெரிந்திருந்தது. அது ஒரு காலம். ஜாக் லண்டனிடமிருந்தும் தைரியமாக காபி அடிக்கலாம் என்று பின்னாலும் சிலர் நினைத்தார்கள். அதுவும் தெரிந்திருக்க ஒரு சிலர் தமிழ் நாட்டில் இருக்க மாட்டார்களா? ஆங்கிலம் தானே. மூலம் என்ன அராபிய மொழியிலா இல்லை ஸ்பானிய மொழியிலா? ஆனால் சினிமாவில் காபி அடிப்பது என்பது மரியாதைக்குரியதாக்கிய இயக்குனர் திலகங்கள், இயக்குனர் சிகரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இன்றும் ஏதோ பெரிய சகாப்த புருஷர்களாக போற்றித் துதிக்கப்படுகிறார்கள். இதுவும் நான் முன் சொன்ன மந்தைக் கலாசாரத்தின் விகார முகங்கள் தான். ஆக, நிலைமை நாவல் சிறுகதை மாதிரி இல்லை. நகல் எடுத்தாலும் தமிழுக்கான மசாலா சேர்த்தால் எதாவது சிகரம், திலகம் என்று தமிழில் பட்டம் வேறு கிடைத்துவிடும் பாக்கியம் இருக்கிறதே.

சரி உண்மையில் ’இன்ஸ்பைரேஷன்’ என்றால் அது பார்த்ததையே திரும்பச் செய்ததாக இராது அது தன்னுள் ஒரு பயணத்தை மேற்கொள்ளத் தூண்டும். சுற்றித் தமிழ் நாட்டு வாழ்க்கையை, தான் வாழ்ந்த வாழ்க்கையை தன் அனுபவங்களை அசை போடச் சொல்லும். நான் ஜப்பானிய மூலப் படத்தைப் பார்த்ததில்லை. நந்தலாலாவில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி ஆரம்பத்திலேயே சில நிமிடங்களில் வந்து விடுகிறது. பையனும் பாட்டியும் வீட்டில் தனியே இருக்கிறார்கள். அம்மா இல்லை. “அம்மா எப்போ வருவா?” என்று கேட்கிறான். பாட்டி தெரியாது என்கிறாள். சற்றுக் கழித்து பாட்டியை கை பிடித்து கழிவறைக்கு அழைத்துச் செல்கிறான். காத்திருந்து பின் அங்கிருந்து திரும்ப பாட்டியை அழைத்து வருகிறான். தனித்து விடப்பட்ட பையனுக்கு பொறுப்பு தெரிகிறது. நல்ல காட்சி. தமிழ்ப் படங்களில் வரும் சிறுவர்களைப் போல பெரியவர் களுக்கான நீண்ட புத்திசாலித்தனமான வஜனம் ஏதும் பேசுவதில்லை.. ஆனால் ஏன் அந்தப் பையன் தலையைக் குனிந்து கொண்டே அவ்வலவு நேரம் நிற்கிறான் என்ற குடைச்சலுக்கு பதில் அடுத்த படத்தில் யுத்தம் செய் படத்தில் கிடைத்து விடுகிறது. அதில் ரொம்பவும் புத்திசாலியும் சுறுசுறுப்பும் திறமைசாலியும் மேலதிகாரிகள் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு புலன்விசாரணை செய்யும் அதிகாரியாக வரும் சேரன் ஏன் எப்போதும் என்னமோ தப்புப் பண்ணி தலை நிமிர வெட்கமும் பயமும் கொண்டவர் மாதிரி தலை குனிந்தவாரே இருக்கிறார்.? அவர் என்ன போலீஸ் அதிகாரியா, இல்லை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்ட பிக் பாக்கெட் கேஸா? படம் முழுதும் மிஷ்கினின் ப்ரோடகனிஸ்ட்கள்  எல்லாம், தலை குனிந்தே இருக்க வேண்டிய அவசியம் என்ன? நந்தலாலாவில் அந்த சின்ன பையன் இங்கு யுத்தம் செய் படத்தில் சேரன். இதுதான் மிஷ்கினுடைய இயக்கத்தைக் காட்டும் முத்திரையோ. இது தான் மற்ற தமிழ் சினிமாக்காரர்களிடமிருந்து அவரைத் தனித்துக்காட்டும் பிரயத்தனமோ என்னவோ. ரஜனி ரம்பம் அறுக்கும் சத்தத்தோடு விரலை அசைக்கும் சமாசாரம் போல.. சேரன் ஸ்வபாவத்தில் இந்த ஸ்டைலில் நிற்பவர் இல்லையே.

மறுபடியும் எனக்கு மிஷ்கினுக்கு இன்ஸ்பைரேஷன் தந்த ஜப்பானிய படத்தைப் பார்த்தது கிடையாது. நந்தலாலா நகல் தான் என்பதை அந்தப்படத்தின் பெரும்பகுதி எனக்குச் சொன்னது வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறும் சிறுவன் என்கிற சம்பவம் எந்த நாட்டிலும் நடக்கக் கூடியது தான். உண்மையில் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கும் தான். சிலர் ஒப்புக்கொள்ளலாம் சிலர் வெட்கப்படலாம். நானே என் சிறு வயதில் ஒரு நாள் இரவு வீட்டை விட்டு ஓடியிருக்கிறேன். அதைப் பற்றி எழுதியுமிருக்கிறேன். நந்தலாலா பையன் தாயைத் தேடிப் போகிறான். iஇது எவ்வளவு பெரிய விஷயம். எவ்வளவு மகத்தான விஷயம்! வீட்டில் பெரியவர்களின் பாதுகாப்பை விட்டு மீறி ஒரு புத்தி பிறழ்ந்த முன்பின் அறியாத பெரியவருடன் வெளியேறுகிறான். அவன் மனதுக்குள் இது ஒரு பெரிய சாகஸப் பயணம். ஆச்சரியங்களும், பயங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த ஒரு சாகஸபயணம். அவன் மனதுக்குள் என்னெவெல்லாம் நடந்து கொண்டிருக்கும்!! ஒரு பெரிய உலகமே ஆச்சரியத்துடன் விரிந்துகொண்டிருக்கும். அது எதுவும் இந்தப் படத்தில் இல்லை. புத்தி பிறழ்ந்த ஒரு பெரியவருடன் கூடப் போகிறான். அவ்வளவு தான். அவன் மனதுக்குள் விரியும் உலகம் எதுவம் நமக்குத் தெரியவில்லை. காரணம் மிஷ்கினுக்கே அது பற்றிய சிந்தனை ஏதும் இல்லை. போகும் வழியில் அந்த இருவருக்கும் நடக்கும் அடுக்கடுக்கான சம்பவங்கள் தான் படத்தில் விரிகின்றன. அதில் ஒரு கற்பழிப்பும் உண்டு. மசாலா ஐட்டமான சண்டையும் உண்டு.
இதெல்லாம் இல்லாது, அந்தச் சிறுவனின் மன உலகம் விரிந்திருக்குமானால் அது தமிழ்க் கதையாகியிருக்கும். ஏன், ஜப்பானில் தான் சின்ன பையன் வீட்டை விட்டு ஓடுவானா என்று மிஷ்கின் வெகு தைரியமாக தன்னைக் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லியிருக்கலாம். படம் முழுதும் மூளை வளர்ச்சியடையாத அந்த பெரிய மனிதனையே மையமாகக் கொண்டுள்ளது. தொடங்குவதும் முடிவதும் அந்த சிறு பையனை வைத்து என்றாலும் மிஷ்கின் பார்வையாளர் முன் நிறுத்துவது பையனை அல்ல. இதற்கும் முன்னும் பின்னும் அவர் சில படங்களைத் தந்திருக்கிறார். முன்னது பற்றி அவரும் வேறு யாரும்  அதிகம் பேசுவதில்லை. நந்தலாலா தான் அவருக்குப் பேர் சொல்லும் படைப்பு என்று தான் முன் வைக்கப் படுகிறது. அடுத்த படம் யுத்தம் செய் என்ன சொல்ல வருகிறது என்றே தெரியவில்லை. ஒரே இருட்டும் ரத்தமும் வன்முறையும் கொலைகளும் பழிவாங்கலுமாகவே கதை உருவாக்கப் பட்டிருக்கிறது. இல்லை, தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல லாமா? இதில் அவருக்கே முத்திரையாகிப்போன டாப் ஆங்கிள் ஷாட் (சொல்லத் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். யுத்தம் செய் படத்திலும் பார்க்கிறேன். ஆனால் இது எதற்கு என்று தெரியவில்லை. என்ன சொல்ல வருகின்றன இந்த ஷாட் தேர்வுகள் என்பது தெரியவில்லை. அந்தக் காலத்தில் வின்செணன்ட் என்று ஒரு காமிராமேன் இருந்தார். ஸ்ரீதர் என்னும் ஒரு இயக்குனரோடு. இருவருமே தம்மைப் புதிய சகாப்த புருஷர்களாக நினைத்துக்கொண்டார்கள். ஸ்ரீதர் புது வகை கதை, புது வகை வசனத்துக்கு பாராட்டப்பட்டார். ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஒரத்துக்கே ஒடினாள்” ரக வசனம் ஆட்சி நடந்த காலத்தில் ஸ்ரீதர் வசனம் வேறுபட்டதாக இருந்தது. தினமும் பறங்கிக்காயையே குழம்பில் போட்டு ஹிம்சை படுத்திக் கொண்டிருந்த ஹோட்டல் ஒரு நாள் கத்தரிக்காயை குழம்பில் போட்டால் ஒரு பரவச புத்துணர்ச்சி பரவும் இல்லையா?. அது போகட்டும். இந்த ஸ்ரீதருக்கு பிரியமான வின்சென்ட், ‘பார்வையாளர் மத்தியில் பெரும் பரவச அலையைப் பெருக்கியவர். “மன்னன் தான்யா இந்த ஆளு, வின்செண்டு. என்னமா காமிராவை வச்சிக்கிட்டு பூந்து வெள்ளாட்றான் பாருய்யா” என்று ஆரவார கரகோஷம் வாங்கியவர். அவர் செய்த புதுமை சாவித்துவாரம் வழியாக காட்சி அமைப்பது. மேஜைக்குக் கீழே காமிராவை வைத்து படமெடுப்பது என்று. அது எதற்கு இந்த மாதிரி சர்க்கஸ் வித்தையெல்லாம் என்பதை வின்சென்ட்டும் சொல்லவில்லை. பார்வையாளரும்  வாயைப் பிளந்தே வைத்திருந்ததால் கேட்கவும் வாய்ப்பில்லாமல் போயிற்று. உலகிற்கே காமெரா தரும் ஜப்பானில் யோஷிஜிரோ ஓஷூ என்றொரு சினிமா இயக்குனர் இருக்கிறார். அகிரா குரஸவாவுக்கு இணையாகப் பேசப்படுபவர். அவர் திடுக்கிடும் புதுமைகள் ஏதும் செய்வதில்லை. ரொம்ப அமைதியான, சம்பிரதாயங்கள் வழுவிய மனிதர். அவர் படங்கள் எதிலும் காமிரா இருந்த இடத்தை விட்டு நகர்வதில்லை. நடிப்பிடத்திற்கு எதிரே ட்ரைபாடில் காமிராவை வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து பின் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வரும் வழ்க்கமோ என்று தோன்றும். காமிர நகரவே நகராது. ஆனால் அவர் சொல்ல வந்த கதை முழுதும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டு விடும். காமிரா நகரவே இல்லை என்பது பற்றிய பிரக்ஞையே நமக்கு வராது. நான் முன்னாலேயே சொன்னபடி நமக்கு காமிரா, நடிப்பு, செட்டிங் பற்றியெல்லாம் நினைப்பே வராதவாறு கதையைச் சொல்லிவிடும் திறன் தான் திறன். மற்றதெல்லாம் கோமாளித்தனமான பாவனைகள் தான். புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் சமாசாரம் தான்.

என்னென்னமோ உலகத் தரமான படங்களையெல்லாம் பார்த்து தானும் உலகத் தரமான படம் பண்ணுகிறேனாக்கும் என்று கிளம்பியவர் என்ன உலகத் தரத்திற்க்காக ஒரு குத்துப் பாட்டை புகுத்தியிருக்கிறார். அதுவும் மகா கடைத்தரமான ஒரு பாட்டு, ஒரு டான்ஸ். ”கட்டுமரத் துடுப்புப் போல இடுப்பை ஆட்டுறா”
இதில் என்ன உலகத் தரம் இருக்கிறது என்று மிஷ்கின் நினைக்கிறார்? குடித்துக் கொம்மாளம் போடுகிற தரங்கெட்ட கூட்டம் இரவுக் கேளிக்கை விடுதிக்குப் போகும். இல்லை அது கிராமத்துக் கூட்டம் என்றால் ரெகார்டு டான்ஸ் பாக்கப் போகும். அதுதான் தமிழ் வாழ்க்கையின் கோரமான அங்கங்கள் என்றால், அதைத்தான் நான் காட்ட வந்தேன் என்றால், நேர்மையுடன் அதைக் காட்டட்டும். தமிழ் வாழ்க்கையின் ஒரு கோர பகுதி இதுதான் என்றால் அந்த ரிகாட் டான்ஸோ, இல்லை கேளிக்கை விடுதி ஆட்டமோ, ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு மேல் அது நீளாது. மேலும் காமிராவின் குவிமையம் அந்த டான்ஸாக இராது. அந்த சூழல்தான் காட்டப்படும். அது தான் ஒரு சீரிய கலை நோக்கம் கொண்ட ஒரு இயக்குனரின் அணுகலாக இருக்கமுடியும். இந்த கட்டுமரத் துடுப்பு போல இடுப்பை ஆட்டுறா டான்ஸ், மசாலாவாகச் சேர்க்கப்பட்ட சமாசாரம் தான்.

சில பெரிய இயக்குனர்களின் சில படங்களிலும் டான்ஸும் பாட்டும் இடம்பெற்றிருக்கின்றன தான். ஷாம் பெனெகல், பூமிகா என்ற படத்தில் கடந்த காலத்திய ஹம்ஸா வாடேகர் என்ற ஒரு மராத்தி நடிகையின் வாழ்க்கையை படமாக எடுத்திருக்கிறார். அதில் அந்நடிகை நடித்த காலத்திய பாணி சினிமா பாடல்களும் நடனங்களும் இடம்பெற்றிருக்கும். முழுதும் அல்ல. துணுக்குகளாக. லதாமங்கேஷ்கர்/ஆஷா போன்ஸ்லே யை மாதிரியாகக் கொண்டு இரண்டு சகோதரிகளின் கதையை ஒரு படத்தில் சொல்லியிருப்பார். அதிலும் பாட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. சத்யஜித் ரேயின் ஜல்ஸாகர் என்ற படத்தில் ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதக் கச்சேரியே நடக்கும். கச்சேரிக்காக அல்ல. அழிந்து வரும் பிரபுத்துவ வாழ்க்கைச் சூழலைச் சொல்வதற்காக. மாறிய காலச் சூழலில், கடந்த கால பிரபுத்துவ எச்சமாக வாழும் ஒரு பிரபுவின் வாழ்க்கையில் பண்பும் நாகரீகமும், பண்பட்ட கலை வாழ்வும் இருந்தது. அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள புதுப் பணக்காரனின் பாமரத்தனத்தையும் பணத்திமிரையும் அங்கு நாம் காண்போம்.
இன்னொரு ரேயின் படத்தில் ரவீந்திரரின் சங்கீதம் ஒன்று காலை வணக்கமாக தனிமையில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஸ்த்ரீ பாடிக் கொண்டிருப்பாள். காட்சி தான் நினைவில் இருக்கிறது. படத்தின் பெயரல்ல.

ரேயின் படத்தில் டான்ஸ் இருக்கே பாட்டு இருக்கே, ஷ்யாம் பெனிகல் படத்தில் பாட்டும் டான்ஸும் இருக்கே என்று வாதிடக் கூடும் தமிழ் சினிமா பெரும்புள்ளிகள் இருக்கக் கூடும். அவர்களின் பாமரத்தனம் அவர்களது வாழ்வுரிமை. ரேயும் ஷ்யாம் பெனிகலும் கட்டுமரத் துடுப்பு போல இடுப்பை ஆட்டுறா என்று ஒரு குத்தாட்டத்தை அங்கீகரிப்பவர்கள் இல்லை..

மிஷ்கினைப் பற்றி இவ்வளவு எழுதக் காரணம் அவரை மாத்திரம் ஸ்பெஷலாகக் குறிப்பிட்டு அவர் படத்தை பாத்தீங்களா என்று சொன்னதால் தான். மகா மட்டமான படங்களும், இயக்குனர்களும் நடிகர் கூட்டமும் மிஷ்கினைவிட பல மடங்கு அதிக கண்டனத்துக்கு உரியவர்கள் தான். ஆனால் அவர்கள் அக்கறைகளும் வாதமும் வசூலை மாத்திரம்  பற்றியது. முடிந்தால் பின்னர் கலை என்றும் அவர்கள் உரிமை கொண்டாடுவார்கள். உலகத் தரம் என்றால் பேசமாட்டார்கள். 


(20) - மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

வெங்கட் சாமிநாதன்மீண்டும் நான் சொல்ல விரும்புகிறேன். மிஷ்கினை மாத்திரம் பலியாடாக்குவதில் எனக்கு விருப்பமில்லை. இதைவிட மகா பாமரத்தனமான, அசிங்கமுமான சமாசாரங்களையெல்லாம் திணித்து சந்தைப் பொருளாக்கி அதே சமயம் ஏதோ தான் பெரிதாக ஒரு சாதனை செய்துவிட்டதாக மயக்கில் மிதந்து கொண்டிருக்கும் அனேகர், - (இவர்கள் தான் நம் திரைப்படத் துறையில் நிறைந்திருக்கின்றனர், இவர்கள் தான் பட்டங்களும் விருதுகளும் பெற்று கொள்ளையாகச்சம்பாதித்து சமூகத்தில் பெரிய மனிதர்களாகின்றனர். அதிகார பீடங்கள் முன்னிலையில் இவர்கள் குழைவும் பல்லிளிப்பும் மகா கோரமானவை. அசிங்கமானவை. தமிழ்நாட்டின் நாகரீகத்தையும் பண்பாட்டையும் சீர்குலைத்தவை. எந்த அதிகார பீடங்களுக்கு முன் குழைகிறார்களோ அவர்களாலேயே “வெறும் காக்காக் கூட்டம்” என்று இழிந்து நகையாடப்பட்டவர்கள். இந்த காக்காக் கூட்டத்தை தேர்தலின் போது தமக்கு பிரசாரம் செய்ய வேண்டுபவர்கள். இந்தக் காக்காக் கூட்டமும் யார் அதிகாரத்திலிருக்கிறார்களோ அவர்கள் கட்டளைக்கு வளையும்.

இந்த விஷ வட்டத்திலிருந்து வெளியே ஒருவர் செயல் படுவது என்பது எழுபது வருட காலமாக நாம் வளர்த்து செழித்து இருக்கும் நிலையில் சாத்தியமில்லை. ஏனேனில் இந்த செயல் பாடுகளுக்கு ஒரே அளவு கோல் இன்னும் அதிக வருமானம், இன்னும் அதிக மக்களை எட்டுதல். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக வருமானத்தையும் மக்கள் தொகையையும் வேண்டுகிறோமே அவ்வளவுக்கு நாம் தாழ்ந்து தான் போக வேண்டும். அது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை ஏனெனில் எவ்வளவு தாழ்ந்தாலும் அது வெற்றிப் படமாகிவிட்டால், அதோடு சமூக அந்தஸ்து, பணம், புகழ், அதிகார மையங்களின் நெருக்கம் எல்லாம் கிட்டி விடுகின்றன.

பாலசந்தரும், கமலஹாஸனும் தான் என்னவோ உலகத்தரமான படங்களைப் பார்ப்பதாகவும் தமிழ்த் திரைப்பட உலகில் இவர்கள் பெரிய மாற்றங்களையும், புரட்சியையும் சாதித்துவிட்டதாகவும் சொல்லிக்கொண்டாலும் அதை இந்த தமிழ் சமூகமும் அங்கீகரித்து விட்டாலும், அவர்கள் தமிழ் சினிமாவை சினிமாவாக மாற்றிவிடவில்லை. இன்னமும் அவர்களுக்கு அது சந்தைப் பொருள் தான். சந்தைக்கேற்ப தயாரிக்கும், தயாரிக்கப் படும் பொருள் தான். சந்தைக்காகத் தயாரிப்பது வேறு. தான் நினைத்ததைத் தயாரித்து அதைச் சந்தைக்கு எடுத்துச் செல்வது வேறு. இது வார்த்தைகளில் விளையாடும் சமாசாரமில்லை. இரண்டும் வேறு வேறு குணத்தவை. வேறு வேறு உலகைச் சார்ந்தவை.

இதைப் புரியவைப்பது கடினம். அவரவர்களாக தாமே புரிந்து கொண்டால் தான் உண்டு. நிஜமும் பாவனைகளும் ஒன்றே போலத் தான் தோன்றும். சார்ஜ் உள்ள பாட்டரியும் சார்ஜ் தீர்ந்த பாட்டரியும் ஒன்றே மாதிரித்தானே இருக்கும். ஒன்றில் உயிர் இருக்கும். மற்றது அதை இழந்தது. கவிதையும் அப்படித்தான். கவிதை போலவே இருக்கும் செய்யுளும். ஒன்று உணர்வுள்ளது. மற்றது வார்த்தைகளின் கூட்டம். பொய்யான சிரிப்புக்கும் ஆத்மார்த்தமாக மனம் மலர்வதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து தான் தெரிந்து கொள்ளவேண்டும். அதை நிரூபிக்க இயலாது. எல்லாம் ஒன்றே போல இருக்கும். சிவாஜி கணேசன் சினிமாவுக்கு வந்த போதே ஒரு அசிங்கமான, வார்த்தை வாந்தி பேதியுடன் தான் வந்தார். அதற்கேற்ற முக பாவங்களுடன். அது கலையல்ல. ஆபாசம் என்பது இன்று வரை புரிந்து கொள்ளப் படவில்லை என்று தான் தோன்று கிறது. அதன் ஆட்சி இரண்டு தலைமுறைக்கு நீண்டு விட்டது. அந்த வார்த்தை வாந்தி பேதியும் அதோடு வந்த இது பேதி தான் என்று சொல்லும் முக பவனையும் லட்சியமாயிற்றி. சிகரமாயிற்று. அவர் திலகமும் ஆனார். இன்று அந்த புள்ளியிலிருந்து தள்ளி நகர்ந்து வந்துவிட்டாலும், அந்த திலகத்துக்கு ஆராதனையும் அபிஷேகங்களும் நிற்கவில்லை. இது சொல்வது என்ன? சிவாஜி மறைந்து விட்டாலும் அவர பிரநிதித்தவப் படுத்திய உலகம் மறையவில்லை. அதெல்லாம் பிதற்றல் என்று சொல்லும் ஒரு ஜீவனை இன்றைய சினிமா உலகத்தில் காணமுடியாது. அந்த பீடத்திற்கு மலர் மாலை சார்த்துவது தொடர்கிறது.

இந்த ஒரு அசிங்கம், ஒரு பிதற்றலைப் பற்றியது இல்லை. வெவ்வேறு வித பிதற்றல்கள், அசிங்கங்கள் காலத்துக்கேற்ப சந்தையின் தேவைகளுக்கேற்ப கண்டுபிடிக்கப்பட்டு அவையே விதிகளாகின்றன. அன்று சிவாஜி டான்ஸ் ஆட வைகை அணையோ உதகையோ போதுமாக இருந்தது. இன்று மச்சுபிச்சுவுக்குப் போகவேண்டியிருக்கிறது. சில விதிகள் மீறப் படாதவை. சினிமாவுக்காக கதைகள் தயாரிக்கப் படுகின்றன. கதைகளில் மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன். மிஷ்கினையே எடுத்துக் கொள்ளலாம். அவரது யுத்தம் செய் ஒரு தயாரிப்பு கதை. சொந்தமாகத் தயாரித்தாரா, இல்லை கோகோ கோலா பெப்சி கோலா போல வெளிநாட்டு லைசன்ஸ் வாங்கி உள்ளூர் தண்ணி சேர்த்து தயாரிக்கப்பட்டதா என்று தெரியாது. அதில் வரும் எத்தனை திருப்பங்கள், எத்தனை வன்முறைக்காகக் கற்பிக்கப் பட்ட சம்பவங்கள், எந்த திருப்பத்தையாவது, எந்த பாத்திரத்தையாவது நாம் ஒரு தர்க்க ரீதியில் சிந்திக்க முடிகிறதா, அல்லது ஏற்க முடிகிறதா? எல்லாம் தயாரிப்பு. மனித மனம் இப்படியெல்லாம் திடீர் மாற்றங்கள் பெறுமா, பெறுமென்றால் அதற்கான பின்னணி இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லாது, அர்த்தமற்ற திடீர் திருப்பங்களும், திடீர் மனித மாற்றங்களும், வலிந்து புகுத்தப்படும் சம்பவங்களும், அந்தசம்பவங்களின் கோரமும், ஏதோ ஒரு எஃபெக்ட்டுக்காக தயாரிக்கப்பட்டவையாகவே தோன்றுகின்றன. டாப் ஆங்கில் ஷாட் மாதிரி. சிலையாக நெடு நேரம் நிற்பது மாதிரி.

யுத்தம் செய் படத்தில் தெருக்காட்சிகள் சில வருகின்றன. ஒரு தெருக்காட்சி கூட அதன் இயல்பில் நாம் நம்பத்தகுந்த வகையில் இருக்கவில்லை. நாலைந்து பேரை ”நீ இந்தக் கோடியிலிருந்து அந்த முனைக்கு நடந்து போ. அங்கேயிருந்து இந்த முனைக்கு மூணு பேர் நடந்து போகட்டும்,” என்று சொல்லி நடக்க வைத்தது மாதிரிதான் இருக்கிறது. ஒரு ஜீவன் கூட, ஒருத்தர் நடை கூட இயல்பாக, இல்லை. எல்லாம் சொல்லி நடக்க வைத்தது. மாதிரி தான். சேரன் தலையைக் குனிந்து கொண்டு விரைப்பாக நிற்கிறாரே, அதுவும் மிஷ்கினின் புகழ் பெற்ற இயக்கம் போலத் தான் தெருக்காட்சிகளும். அந்தக் காலத்தில் முப்பது நாட்பது களில் இப்படித்தான் ஸ்டுடியோக்குள் அமைத்திருக்கு தெருக் காட்சியில் எதிரும் புதிருமாக சிலரை நடக்க வைப்பார்கள். அதிலிருந்து கொஞ்சம் கூட இயக்குனர்களின் தொழில் திறன் வளரவில்லை. தெருவில் நடக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை இருக்கும். மனதில் என்னவோ ஒடிக்கொண்டிருக்கும். அவரது உடை வேறுபட்டிருக்கும். நடை ஒவ்வொருவருக்கும் அவரவர்து அவசரத்தை மன நிலையைப் பொறுத்து மாறும். ஒவ்வொருவரும் தனித் தனி ஜீவன்கள். அவரவர் கவலைகள். சிந்தனைகள். உத்பல் தத்தின் நாடக மேடையில் கூட மனிதர்கள் கூட்டமாகக் காணும் காட்சிகள் ஒவ்வொரு மனிதனையும் தனித் தனி தோற்றங்களில் தனித் தனி பாவனைகளில் காணாமுடிந்திருக்கிறது. முப்பது பேர் முப்பது விதமாக இருப்பார்கள் முப்பது பாவனைகளீள் செயல் தோற்றங்களில் இருப்பார்கள். நாடக மேடையில் பார்வையாளர்களுக்கு கூட்டம் தான் தெரிய வேண்டுமே ஒழிய முப்பது தனி மனிதர்களை அல்ல என்று உத்பல் தத் நினைப்பதில்லை. பார்வையாளர்கள் கவனிக்கிறார்களோ இல்லையோ, நடப்பு வாழ்க்கையில் முப்பது பேர் ஒரு கூட்டத்தில் கூட முப்பதி விதமாகத் தான் காட்சி தருவார்கள் என்ற நினைப்பில் உத்பல் தத் தன் நடிகர்களுக்கு பயிற்சி தருவார்.

ஜெய காந்தன் உன்னைப் போல் ஒருவன் திரையிட்டிருந்த சமயம். தில்லியில் ஒரு நாள் ஒரு காட்சி திரையிட்ட போது வந்திருந்தார். 1963 – 1964 ஏதோ ஒரு வருடம்,. சரியாக நினைவில் இல்லை. அந்த சின்ன பையன் பெரியவரின் முன் நின்று கொண்டிருக்கிறான். தனித்து விடப்பட்ட பையன். அவனை ஆதரிக்கும் பெரியவர். அவர் ஏதோ சொல்கிறார். இவன் அமைதியாக நின்று கேட்டுக்கொண்டிருக்கிறான். மிக நன்றாக வந்திருக்கிறது அந்தக் காட்சி. பையன் அழவில்லை. நீண்ட வசனம் பேசவில்லை கத்திக் கதறவில்லை. என்று பேசிக் கொண்டிருக்கும் போது ஜெய காந்தன் சொன்னார். சின்னப் பையன் எப்படி தன் உணர்ச்சிகளை முகத்தில் காட்டுவான்? ஆதலால் அவனை “நீ சும்மா தலையைக் குனிந்து கொண்டு நில்லு போதும்..” என்று சொன்னோம். பையனைப் பின்னாலிருந்து ஷாட் எடுத்தாலே போதும் அதுவே எல்லாம் சொல்லி விடும் என்று நினைத்தோம்” என்று சொன்னார். நமக்கு அனேக சமயம் சில சௌகரியக் குறைவுகளே, சில வசதிகள் இல்லாது அதை நிரப்பச் செய்யும் நிர்ப்பந்தங்களே புதிய முயற்சிகளைத் தோற்றுவித்துவிடுகின்றன.

அப்போது பேச்சின் இடையில் ஒரு விஷயம் வந்தது. ஒருவர் சொன்னார், ஸ்ரீதர் தன் படத்தில் ஒரு நோயாளி படுத்திருக்கும் ஷாட்டுக்காக ஒரு ஆஸ்பத்திரிக்கே சென்று காட்சி அமைத்ததாகச் சொல்லியிருக்கிறார். புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எவ்வளவு யதார்த்ததுக்கு முயன்று இருக்கிறார் என்பதைச் சொல்ல அந்த சம்பவம் சொல்லப்பட்டது “ஜெமினி கணேசன் இரவில் நிலாவைப் பார்த்துக்கொண்டே வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ என் கதையை….” என்று பாடுவது நினவுக்கு வந்தது….” எவ்வளவு யதார்த்தம் என்று வியப்போடு நினைத்துக் கொண்டேன். ”அதற்கு ஜெயகாந்தன் உடனே சொன்னது, “ ஆமாம், ஏன்யா, உங்க வீட்டு அறையில் ஒரு மூலையிலே ஒரு கட்டிலைப் போட்டு அந்த ஆளைப் படுக்க வைத்து எடுத்தா பத்தாதா? ஒரு ஆஸ்பத்திரியையே வாடகைக்கு எடுத்து என்ன அதிகம் சாதிச்சிருக்காங்க. எதுக்கு எவ்வளவு தேவைங்கிறதை யோசிக்கறதில்லையா. பணம் இருக்கு. செலவழிக்கிறாங்க.” என்றார்.

நேற்று பார்த்த ஒரு இரானிய படம். ஜாஃபர் பனாஹியினது. சர்க்கிள். அதில் ஒரு இளம் பெண். கர்ப்பமாக இருக்கிறாள். கர்ப்பத்தைக் கலைக்க் வேண்டும். தன்க்குத் தெரிந்த ஒரு நர்ஸ் வேலை செய்யும் ஆஸ்பத்திரிக்குப் போகிறாள். ஆனால் அந்த நர்ஸ் உதவி செய்ய மறுத்துவிடுகிறாள்.  உதவ எண்ணமில்லை என்றல்ல. அது பெரிய ஆபத்தில் வந்து முடியும். என்ற காரணத்தால். அந்தப் பெண் ஆஸ்பத்திரிக்குள் கழிக்கும் சுமார் 20 நிமிடக் காட்சியை, அந்த ஆஸ்பத்திரியின் சூழல் முழவதையும் சிருஷ்டித்து இயக்கியிருக்கும் திறன் வியக்க வைக்கிறது. நம் சினிமாத் திரையில் ஏன் ஹிந்தி சினிமாத் திரையில் கூட 20 நிமிடம் என்ன, ஒரு மின் வெட்டில் தோன்றி மறையும் காட்சியாகக் கூட அந்த மாதிரியான காட்சி அமைப்பும் சுற்றிக் காணும் ஆஸ்பத்திரியின் சூழல் நடவடிக்கைகள் எவ்வளவு இயற்கையா உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு ஏற்பாடுகள், தொழில் திறன், அதற்கு வேண்டும். ஜாஃபர் பனாஹியின் ஒவ்வொரு படமும் இத்தகைய சூழலை உருவாக்குவதில் ஒரு சிகர சாதனையே நம் முன் நிறுத்தி விடுகிறார். அந்தப் பெண் கவலையுடன், பதற்றத் துடன் அலையும் ஒரு பஸ் ஸ்டாண்ட் காட்சியும்,கூடத் தான். அதுவும் 10-15 நிமிடங்களுக்கு நீள்கிறது.  -

<இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R