இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?சங்க இலக்கியம் இயற்கையின் உயிர் அகவமைப்பை ஒளித்திரையெனக் காட்டும் தொகை இலக்கியம். சங்கத்தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நெறியை அது தெற்றென எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியர் உயிர் வகைக்கோட்பாட்டைக் கூறுகையில் (தொல்.மரபு.நூற்.1526 )உயர்திணை உயிர்கள், அல்திணை உயிர்கள் என்கிறார். இவற்றுள் அல்திணை உயிர்கள் பற்றிய (விலங்குகள் மட்டும்) பதிவினை ஆற்றுப்படை நூல்களில் இடம்பெற்றிருப்பனவற்றைக் குறித்து இக்கட்டுரை இயங்குகிறது. கீழ்க்காணுமாற்று விலங்குகள் ஆற்றுப்படை நூல்களுள் பதிவு செய்யப்பெற்றிருப்பனவாகக் காணப்படுகின்றன.

01.ஆடு , 02.ஆமான், 03.ஆளி, 04.எருது, 05.ஒட்டகம், 06.கரடி, 07.குரங்கு, 08.சிங்கம், 09.நாய், 10.பன்றி, 12.புரவி, 13.புலி, 14.மரையான், 15.மான், 16.முயல் என்னும் விலங்குகள் இடம்பெற்றுள்ளன. அவைகளை குறித்து விளக்கமாகக் காணலாம்.

01.ஆடு:
சங்க இலக்கியத்தில் ஆட்டை வெள்ளாடு, செம்மறி ஆடு, வருடை ஆடு, தகர், துருவை என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறது. முருகன் மயிலையும் குற்றமில்லாத கோழிக்கொடியோடு ஆட்டுக்கிடாவையும் கொடியாகக்கொண்டவன் என்பதனை,

“தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன்”        திருமுருகு.210

என்கிறார் நக்கீரர். பெரிய காலை உடையதாகவும் மிக்க வலிமை உடையதும் உள்ள ஆட்டுக்கிடாயினது உதிரத்தோடு பிசைந்த தூய வெள்ளரிசியை சிறு பலியாக முருகப்பெருமானுக்கு இட்டு வழிப்பட்ட செய்தியை,

“மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை
குருதியொடு விரைஇய தூவெள்ளரிசி”        திருமுருகு.232-233

என்கிறது சங்க இலக்கியம். சிறிய திணை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்தும் மறியை அறுத்தும் அவ்விடத்தில் இறைப்பொருள் நிலைத்து நிற்க வேடர்கள் விழா செய்தனர் என்பதனை,

“சிறுதிணை மலரொடு மறியறுத்து”        திருமுருகு.218

என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அருகம்புல்லின் பழுதையை தின்று நன்றாகக்கொழுத்த செம்மறி ஆட்டின் பருத்த மேல்தொடையின் பதமான இறைச்சியை இரும்புக் கம்பியில் கோர்த்து சுடப்பட்டதைக் கரிகால் வளவன் பொருநனுக்கு அளித்த நிகழ்வை,

“.............. ................... பதனறிந்து
துரா அய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேயை பருகென தண்டி”     பொருநர்.102-104

என்று முடத்தாமக் கண்ணியார் பாடுகிறார். அத்தோடு ‘கருமறி’ (சிறுபாண்.197), ‘கொடுமுகத் துருவை’ (பெரும்பாண்.152), ‘கேழகக் கிடா’ (பெரும்பாண்.326), ‘துருவை அன்ன புந்தலை மகரொடு’ (மலைபடுகடாம்.267), ‘வன்றலை மாத்தகர்’ (மலைபடுகடாம்.503) என்றெல்லாம் இவ்வாட்டினம் குறிக்கப்படுகிறது. பண்டங்களை விற்போர் பெற்ற கலவை நெல்லின் அரிசி கருமை, வெண்மை, செம்மை எனத் தோற்றம் அளித்ததைப் போல செம்மறி திரள் வெள்ளாட்டோடு விரவி கடல் போன்ற ஒலியுண்டாக்கியதை,

“பகர்விரவு நெல்லின் பலவரியன்ன
தகர்வரவு துருவை வெள்ளையொடு விரைஇக்
கல்லென் கடத்திடை கடலின் இரைக்கும்
பல்யாட்டின் நிரை”         மலைபடுகடாம்.413-416

என்று மலைபடுகடாமில் பெருங்கெளசிகனார் பாடுகிறார்.

02.ஆமான்
ஆமான் என்பது காட்டுப்பசுவைப்போன்ற ஒரு விலங்கு. கழுத்தில் அலைதாடி தொங்கும் தோற்றம் கொண்டது. இவ்விலங்கு நெருப்பினை ஒத்தனவாய் மராமரக் கொம்பில் பூக்கள் மலர்ந்துள்ளமையைக் கண்டு தன் இனமெல்லாம் ஓடிவிட மடப்பத்தினை உடைய ஆமானின் கன்று ஓடமாட்டாது வலிய அகப்பட்டது என்று சங்க இலக்கியம் எடுத்துக்காட்டுகிறது. இதனை,

”தொகுதிபோக வலிந்தகப் பட்ட
மடநடை ஆமான்”        மலைபடுகடாம்.499-500

கரியகொம்பினை உடைய ஆமாவினுடைய நன்றாகிய ஏறுகள் முழங்கும் ஆரவாரத்தை,

”கருங்கோட்டு ஆமா நல்லேறு சிலைப்ப” திருமுருகு.315

என்ற தொடர் எடுத்துக்காட்டுகிறது.

03.ஆளி
ஆளி என்னும் விலங்கை பழம்பெரும் சிற்பங்களில் காணமுடியும். இவ்விலங்கு சிங்கத்தை ஒத்தது.துதிக்கை உடையது. யாளி குருளைத் தலைமை பொருந்திய வலிமை உடையமையால் செருக்கு கொண்டு தாய்ப்பால் உண்ணுதலை கைவிடாத இளம்பருவத்தில் தனது கன்னிவேட்டையின் முதல் நாளில் களிற்று யானையை பாய்ந்து கொன்று வீழ்த்தியது. இதனை,

”ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள விடாமாத்திரை ஞெரேரெனத்
தலைகோள் வேட்டம் களிறட்டாங்கு”    பொறுநர்.139-142.

என்று வரும் பாடல் மூலமாக அறியலாம். முகில்கள் விலையாடுகின்ற மூங்கில் வளருகின்ற பக்க மலையில் கருப்பஞ்சாற்றை காய்ச்சும் ஆலைகள் யாளியால் தாக்குண்ட யானைகள் கதறி ஆரவாரித்தலை ஒத்து இருந்தது என்று,

”மழை விளையாடுங் கழைவள ரடுக்கத்து
அணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன்
கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்கு”      பெரும்பாண்.257-259

என்று சங்கப்பாடல் எடுத்துக்காட்டுகின்றது.

04.எருது
எருதை ஆங்கிலத்தில் ஆக்சன்(Oxen) என்று கூறுவர். உரையாசிரியர்களும் இதனை காட்டுப்பசு, காட்டு எருது, காட்டா (பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் விளங்கின விளக்கம்.ப.67) என்றெல்லாம் வழங்குவர். உருத்திரனின் ஊர்தியாகவும் வெள்ளேறு கொடியாகவும் இருந்ததனை புறநானூறு குறிப்பிட்டுள்ளதை,

”ஊர்தி வான்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப”    புறம்.1.3-4

வெள்ளிய ஆணேற்றை வலப்பக்கத்தே வெற்றிக்கொடியாக உடைய முப்புரமெரித்த உருத்திரனைப் பலரும் புகழ்ந்தனர் என்ற செய்தியை,

”............... ................ வெள்ளேறு
வலவனுயரிய பலர்புகழ் திணிதோள்”    திருமுருகு.151-152
என்று நக்கீரர் பாடுகிறார். ‘பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே’     (திருமுருகு.268), என்றும் உப்புவணிகர்கள் உப்பினை ஏற்றி வலியினை உடைத்தாகிய பலவாகிய எருதுகளை ஊர்தோறும் செல்லுதற்கரிய நெடிய வழியிலும் சென்றனர் என்ற நிகழ்வை,”நோன்பகட் டுமணர் ஒழுகையொடு வந்த” (சிறுபாண்.55) என்ற சிறுபாணாற்றுப்படை நூலும், “பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி” (பெரும்பாண்.25) என்ற பெரும்பாணாற்றுப்படை நூலும் எடுத்து இயம்புகின்றன.

05.ஒட்டகம்
கற்பனையான ஒரு உவமையில் ஏற்றிக்கூறப்பெற்றதாக ஒட்டகம் இடம்பெற்றுள்ளது. எயில் பட்டினத்தில் கடல் நீரின் அலைகளால் கொணர்ந்து ஒதுக்கிய அகில் மரம் ஒட்டகம் உறங்கி கிடப்பது போன்று காட்சியளித்ததை,

”ஓங்குநிலை ஒட்டகந் துயில் மடிந்தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்”        சிறுபாண்.154-155

என்று நத்தத்தனார் பாடுகிறார்.

06.கரடி
சங்க இலக்கியத்தில் கரடி எண்கு, உளியம் எனவும் அழைக்கப்பெற்றிருக்கிறது. ஆண்பன்றியும் பனையின் செறும்பினை ஒத்த கரிய மயிரினை உடைய கரடிகளும் மலை முழைஞ்சுகளிலே புகுந்து ஒடுங்கும். அதனை,

”................... .................... கேழலோடு
இரும்பனை வெளிற்றின் புன்சா ய்னை
குரூஉமயிர் யாக்கை குடவாடி உளியம்”        திருமுருகு..311-315

நன்னன் வேள்மானின் கோபுர வாயிலில் வளைந்த அடியினை உடைய வாய்திறவாத கரடியின் குருளை இருந்ததை,

”ஊமை என்கின் குடவாடிக் குருளை”        மலைபடுகடாம்.501

என்று பெருங்கெளசிகனார் பாடுகிறார்.

07.குரங்கு
சங்க இலக்கியத்தில் குரங்கு என்னும் பெயர் பொதுப்பெயராகவும் முசு, ஊகம், மந்தி, கடுவன் என்றெல்லாம் அழைக்கப்பெற்றுள்ளது. இப்பெயரை தொல்காப்பியர் மரபியலில்,

”குரங்கும் மூசுவும் ஊகமும் மூன்றும்
நிரம்ப நாடின், அப்பெயர்க் குரிய”    தொல்.மரபு.22

என்று கூறுகிறார். குரங்கின் பல்வேறு பெயர்களை பலவாறும் சங்க இலக்கியத்தில் காணலாம். மந்தியை, “மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கத்து” (திருமுருகு.42), “வரை மந்தி கழி மூழ்க” (பொருநர்.224), “மகாஅர் மந்தி” (சிறுபாண்.56), “கடுஞ்சூல் மந்தி கவரும்” (பெரும்பாண்.395) என்றெல்லாம் ஆற்றுப்படை நூல்கள் எடுத்தாளுகின்றன. “கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்” (மலைபடுகடாம்.292) என்று கலையை குரங்கின் சிறுபருவமாகப் பகர்கிறது மலைபடுகடாம். “பைங்கண் ஊகம்” (சிறுபாண்.221), “ஊகமொடு” (திருமுருகு.302), ”கருவிரல் ஊகம்” (மலைபடுகடாம்.208) என்று ஆற்றுப்படை இலக்கியங்கள் ஊகத்தை எடுத்துக்காட்டுகின்றன. “நெடுங்கழை கொம்பர் கடுவன் பயிலும்” (மலைபடுகடாம்.236) என்று மலைபடுகடாம் கடுவனைப் பதிவு செய்கிறது. தொல்காப்பியர் குரங்கினுள் ஏற்றை கடுவன் என்றலும் . (தொல்.மரபியல்.69)என்பார்.

08.சிங்கம்
சிங்கத்தை காட்டின் அரசன் என்பர். விலங்குகளில் வலிமையானதாக உணரப்படுகிறது. புலியின் குருளையை வீழ்த்தும் சிங்கத்தின் காட்சியை, “பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான் கொடுவரிக் குருளைகொள வேட்டாங்க” (பெரும்பாண்.448) என்று பெரும்பாணாற்றுப்படை காட்டுகிறது. இதனால் சிங்கம் விலங்குகளுள் வலியது என்பது தெரிகிறது.

09.நாய்
சங்க இலக்கியத்தில் நாய் செந்நாய், நீர்நாய், வீட்டுநாய், வேட்டை நாய் என்று வகைப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பெற்றுள்ளது. வேட்டை நாய் பிளந்த வாயுடன் இருக்கும் என்று, “பருவாய் ஞமலியொடு மைப்புத லெருக்கி” (பெரும்பாண்.112) என்கிறது பெரும்பாணாற்றுப்படை. எயினர்கள் வீட்டுக் காவலுக்கு கட்டுதற்கரிய சங்கிலிகளால் நாயை கட்டிவைத்திருந்தனர் என்ற செய்தியை, “தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர்” (பெரும்பாண்.125) என்றும் “மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது” (பெரும்பாண்.299) என்றும் “செல்நாயன்ன” (பெரும்பாண்.139), “புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்” (சிறுபாண்.132) என்றெல்லாம் நாயினை ஆற்றுப்படைகள் எடுத்துக்காட்டுகின்றன. 

10.பன்றி
சங்க இலக்கியத்தில் பன்றி பலவிடங்களில் பயின்று வந்துள்ளது. கேழல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நக்கீரர்,

“.............. ................. ..........கேழலொடு
இரும்பனை வெளிற்றின் பன்சாயன்ன
குருஉமயிர் யாக்கை குடவாடி உளியம்”    திருமுருகு.311-313

என்று திருமுருகாற்றுப்படையில் பதிவு செய்கிறார். நடுயாமத்தில் கானவர்கள் அகத்திப்பூவினை ஒத்த வளைந்த கொம்பினை உடைய பன்றி நீருண்ண வரும்பொழுது அதை வெட்டையாடினர் என்று உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் பதிவு செய்துள்ளார். அதனை,

“புகழா வாகை பூவினன்ன
வளை மருப்பினேனம் வரவு பார்த்திருக்கும்”    பெரும்பாண்.109-110

பெண்பன்றியோடு புணர்ச்சியில் ஈடுபடாமல் ஆண்பன்றியைக் கொழுக்க வைத்து உண்டதை பெரும்பாணாற்றுப்படையில் 341-344 ஆம் பாடல் வரிகளில் காணமுடிகிறது. “சிறுகட் பன்றிப் பழுதுளிப் போக்கி” (மலைபடுகடாம்.153), “முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை” (மலைபடுகடாம்.176), “இருள் துணிந்தன்ன ஏனங் காணின்” (மலைபடுகடாம்.247), “சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் பன்றி பறையும்” (மலைபடுகடாம்.343-344) என்றெல்லாம் கேழல் குறிக்கப்பெற்றிருக்கிறது.

12.புரவி
குதிரையின் சங்கப்பெயர் புரவி. குதிரை இந்தியாவின் இயல்பு விலங்கா என்பது ஆய்வு நிகழ்ந்தவண்ணமுள்ளது. அது வெளியில் இருந்து வணிகத்தின் மூலம் வந்தது என்னும் கருத்து ஆய்வுலகில் உள்ளது. குதிரையின் உள்ள மயிரானது அரக்கூட்டப்பட்ட நிறமுடையதாகவும் பாலை ஒத்த வெள்ளிய நிறமுடையதாகவும் இருந்தது. அத்தகைய குதிரைகள் நன்கினை கரிகால் வளவன் பொருநருக்கு பரிசிலாக அளித்தான். அதனை, 

”ஊட்டுளை துயல்வர வோரி நுடங்க

பால்புரை புரவி நன்குடன் பூட்டி”        பொருநர்.164-165

என்ற முடத்தாமக்கண்ணியாரின் பாடல் எடுத்துக்காட்டுகிறது. காரி என்னும் வள்ளல் பாணனுக்கு பரிசு வழங்கிய காட்சியை,

”.............. ............. ............ கறங்குமணி

வாலுளைப் புரவியொடு”        சிறுபாண்.91-92

என்ற நத்தத்தனார் பாடல் காட்சிப்படுத்துகிறது. காரியின் குதிரையும் ஓரியின் குதிரையும் அவரவர்களின் பெயராலேயே அழைக்கப்பட்டதை, சிறுபாணாற்றுப்படையின் 110-111 ஆவது பாடல் பதிவு செய்கிறது. ”பொலம்படப் பொலிந்த கொய்சுவற் புரவி” (மலைபடுகடாம்.575), “வாலுளைப் புரவி (பெரும்பாண்.28,320, 488) என்று பெரும்பாணாற்றுப்படை புரவியின் தலையாட்டம், பிடரிமயிர் ஆகியனவற்றைக்குறித்து அழகாகப் பாடுகிறது.

13.புலி
சங்க இலக்கியம் புலியை வீரமுள்ள விலங்காகக் காட்டுகிறது. புலி வீரத்தின் அடையாளம். காட்டு விலங்குகளுக்கு அச்சத்தை ஊட்டும் ஆற்றல் மிக்க விலங்காக இது விளங்குகிறது. முழையில் செறிந்திருந்த புலி பாய்தலால், மரையானினது கன்று அதன் உடலை வெறுத்து ஓடியதை,

”அளைச்செறி உழுவை கோளுற வெறுத்த
மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி”    மலைபடுகடாம்.505-506

என்று பாடுகிறது மலைபடுகடாம். காட்டில் புலியின் வருகையினால் கலைமான் அதன் விருப்பத்திற்கு உரிய பிணையை விட்டு ஓடியதனை,

”புலியுற வெறுத்த தன் வீழ்பிணை யுள்ளி”    மலைபடுகடாம்.404 என்று பாடுகிறது. சூல் கொண்ட பிடியை பாதுகாக்கும் வலிக்கு வரம்பாகிய களிற்றினை ஒளிந்திருந்து புலி பாய்ந்ததனால் தம் சுற்றத்தை அழைக்கும் களிற்றின் ஆரவாரத்தினை,
”ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு”    மலைபடுகடாம்.309

என்று பாடுகிறது. “புலிப்போத் தன்ன புல்லணற் காளை” (பெரும்பாண்.137), “உறுபுலி” (சிறுபாண்.122) என்றெல்லாம் புலி ஆற்றுப்படை இலக்கியங்களில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. 

14.மரையான்
மரையான் என்பது பசுவைப்போன்ற தோற்றமுடையது. மான் போன்ற கிளைத்த கொம்பினைக் கொண்ட விலங்கு. அதன் இளமைப் பெயரை கன்று என தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. அதனை, 

”எருமையும் மரையும் வரையார் ஆண்டே”    தொல்.மரபு.16

நிரையினின்று பெயர்ந்த ஆனேறும், மலையிடத்தினின்று வந்த மரைமானினது விரைந்த ஏறும் புறங்கொடாத வலியினோடே தம்முள் புண்பட முட்டிக்கொண்டன. இச்செய்தியை,

”இனத்திற் திரிந்த துளங்கமி நல்லேறு
மலைத்தலை வந்த மரையார் காழ்விடை”        மலைபடுகடாம்.310-311

என்றும், புலி பாய்தலால் தனது உடலை வெறுத்த பெரிய செவியினையுடைய மரையானினது கன்றினை,

”மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி”    மலைபடுகடாம்.506

என்று மலைபடுகடாம் பாடுகிறது. 

15.மான்
சங்க இலக்கியம் ஐவகை மான்களைக் கூறுகின்றது. மானின் கொழுவிய தசையை குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவர்கள் சமைத்து உணவாக உட்கொண்டதனை,

”வருவிசை தவிர்த்த கடமான் கொழுன்குறை”    மலைபடுகடாம்.175

அன்மையில் பிள்ளையை ஈன்ற எயிற்றி மான் தோலாகிய படுக்கையில் இருந்ததை,

”மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பின வொழியப் போகி”    பெரும்பாண்.89-90

மான் தோலால் கூத்தர்கள் சிறு பறையினை உருவாக்கி ஒலியெழுப்பியதை, “மான் தோற் சிறுபறை கறங்க” (மலைபடுகடாம்.321), பண்டங்கள் விற்போர் இனிய கரும்பொடு அவலையும் விற்று அவற்றிற்கு பதிலாக மானினது தசையையும் கள்ளையும் பண்டம் மாற்றாகப் பெற்றனர். என்னும் செய்தியை,

”தீங்கரும் பொடு அவல் வகுத்தோர்
மான்குறையொடு மது மறுக்கவும்”    பொருநர்.216-217

என்றும் , மானினது குளம்பு பதித்த இடம் போன்று இருபுறமும் தாழ்ந்த நடுவிடம் உயர்ந்த பத்தலினை உடைய யாழை,

”குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்”    பொருநர்.4

என்று பொருநராற்றுப்படை எடுத்துக்காட்டுகிறது. ஒரு மானினைக் காட்டி மற்றொரு மானைப் பிடிப்பதற்காகக் எயிற்றியர் தங்களது முற்றத்திடத்தே நிழலையுடைய விளவினது மரத்தில் மானினை கட்டி வைத்திருந்ததனையும், தவப்பள்ளியின் முற்றத்திடத்தே மானும், புலியும் துயில் கொண்டிருந்ததனை,

”பார்வை யாத்த பறைதான் விளவின்
நீழல் முன்றில்”        பெரும்பாண்.95-96

முல்லை நிலக்காட்டில் புலி வருதலைக் கண்டு அஞ்சி பிணைமானை விட்டு ஓடிவிட்டு கலைமானை நினைத்து கூப்பிடுதலை,

”புலியுற வெறுத்த தன் வீழ்பிணை யுள்ளிக்
கலைநின்று விளிக்குங் கானம்”    மலைபடுகடாம்.404-405

என்று மலைபடுகடாம் எடுத்துக்காட்டுகிறது.

16.முயல்
இவ்விலங்கு காட்டில் வாழுகின்ற மென்மையான இயல்புடைய சிறிய விலங்கு ஆகும். இதன் செவி முள்ளைத் தண்டில் உடைய தாமரையினது புறவிதழை ஒத்த நெடிய செவியினைக் கொண்டிருக்கும், சிறிய உடலமைப்பு கொண்ட குறுமுயலினைக் கானவர் வலையினால் வளைத்து பிடித்து, புறம் போக விடாது கூடித்தின்பர். அச்செயலை,

”முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇ”    பெரும்பாண்.114-115

என்று பெரும்பாணாற்றுப்படை பதிவு செய்கிறது. 

முடிவுரை:
ஆற்றுப்படை இலக்கியங்கள் பல்வேறு கருப்பொருள்களின் வாழ்வியலை அழகுற எடுத்துக்காட்டுகின்றது. அவற்றுள் விலங்குகள் பதினாறும் அதன் வாழ்வியலும் எடுத்துக்காட்டுகின்றது. சங்க இலக்கியத்தில் திணை சார்ந்த கருப்பொருள்கள் அதன் இயல்புத்தன்மை மானுட இயல்புகளுள் பொருந்தி நின்றனவற்றைக் காணமுடிகிறது. சங்க இலக்கியம் முழுவதிலும் நிலத்திற்கான புறவியல் வாழ்வும் அகவியல் வாழ்வும் கருப்பொருள்கள் ஒவ்வொன்றின் பிணைவுத்தன்மையுடன் இருந்திருக்கின்றன. ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. நிலமும் பொழுதும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கான புறவியல் சூழலை பொருத்தமைவுடன் முழுமைப்படுத்துகிறது. ஆற்றுப்படை இலக்கியத்தில் விலங்கு, பறவை போல் அழகியலுடன் பல்வேறு கருப்பொருள்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் விலங்குகள் அவைகளின் வாழ்வியல் இயல்புடன் நிறைவுறக்காட்டுகிறது.

* கட்டுரையாளர் - - முனைவர் சு.விமல்ராஜ், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி(தன்.), மன்னன்பந்தல். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R