- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர்1. இக்கட்டுரையில் உகையெனும் மெய்ப்பாடும் அகநானூற்றுப் பாடல்களும் உரையாசிரியர்கள் வழிநின்று ஆராயப்படுகின்றன.

1:1. உவகையெனும் மெய்ப்பாடும் அதன் விரிகளும்
உவகையெனும் மெய்ப்பாட்டின் விரிகளாக, செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கினையும் கூறுகின்றார் தொல்காப்பியர்151 என மேலே சொல்லப்பட்டது. இந்நான்கு விரிகளையும் விளக்கும் உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்கள் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.
உவகையென்பது,

“உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும்.”152
என பேராசிரியரும்;

“ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும்
ஒத்த காமத் தொருவனோடு பலரும்
ஆடலும் பாடலுங் கள்ளுங் களியும்
ஊடலும் உணர்தலுங் கூடலு மிடைந்து.
புதுப்புனல் பொய்கை பூம்புனல் என்றிவை
விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும்
பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும்
நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும்
குளம்பரிந் தாடலும் கோலஞ் செய்தலும்
கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும்
துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும்
அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும்
நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந் துறைத்தலும்
கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலும்
ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும்
சிருங்கா ரம்மென வேண்டுப இதன்பயன்
துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த
இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே.”

எனச் செயிற்றியனார் விரித்தோதினாராயினும் இவையெல்லாம் இந்நான்கனுள் அடங்கும்.”153

என இளம்பூரணர் கூறியுள்ளார். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும் எனக் கொள்க. இவற்றின் வழி உவகையென்பது மகிழ்ச்சியாகும்.
இது தன்னிடம் மட்டுமே தோன்றும் என்பதனை,

”தன்கட்டோன்றிய பொருள் பற்றியே வரும்.”154

எனப் புலவர் குழந்தை கூறியுள்ளார்.

1:1:1.  செல்வம் எனும் மெய்ப்பாடும் அகநானூறும்
செல்வமென்பது, “செல்வ நுகர்ச்சி”155 எனவும், “பொருட் செல்வமேயன்றி அறுசுவை உண்டி முதலிய நுகர்பொருளும், ஆடையணி முதலிய துய்த்தற் பொருளும், கொடியும் படையும் முதலிய அரசச் செல்வமுமாம்”156 எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இவற்றின்வழி செல்வம் என்பது நுகர்ச்சி, அஃது மக்கள் அடிப்படை தேவைகளை நுகர்தலும், அரசன் படைகளை பெருக்குதலுமாகும்.

இம்மெய்ப்பாட்டினை விளக்க பேராசிரியரும், புலவர் குழந்தையும் கலி.12 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். மேலும், பாலசுந்தரம் புறம்.161, 141 ஆகிய பாடல்களையும்; தாசன் குறள்.1107-ஐ எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:2. புலனெனும் மெய்ப்பாடும் அகநானூறும்
புலனென்பது, “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலன்களான் நுகர்தல்”157 எனவும், “கல்விப்பயனாகிய அறிவுடைமை”158 எனவும், “ஊழான் அமைந்த தன்னுணர்வான் எய்தும் உண்மையறிவாகிய புலமைப்பேறு.”159 எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். இவற்றின்வழி, புலனென்பது ஐம்புலனாலும் கற்றறிந்த அறிவுடைமையாகும் என்பதாம்.

இம்மெய்ப்பாட்டினை விளக்க பேராசிரியரும் புலவர் குழந்தையும் கலி.40 ஆம் பாடலையும்; பேராசிரியரும் பாலசுந்தரமும் நாலடி.137 ஆம் பாடலையும்; மேலும், பாலசுந்தரம் புறம்.10 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர்.
இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:3.  புணர்வெனும் மெய்ப்பாடும் அகநானூறும்
புணர்வென்பது, “ஒன்றியுயர்ந்த பாலதாணையாற் பொருந்திய தலைவனும் தலைவியும் எய்தும் உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியுமாம். “அல்லல் நீத்த” என்றதனான் உயிரோரன்ன நட்பிற் புணர்ச்சியுமாம் எனக் கொள்க.”160 என பாலசுந்தரம் கூறியுள்ளார். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். இதன்வழி, புணர்வாவது காமப் புணர்ச்சியும் கற்புறு புணர்ச்சியும் ஆகும்.

இம்மெய்ப்பாட்டினை விளக்க, இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர், குறள்.1107-ஐயும்; மேலும், பாலசுந்தரம் குறள்.783-ஐயும்; பேராசிரியரும் புலவர் குழந்தையும்,

“தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்
வடிப்புறு நரம்பிற் நீவிய மொழிந்தே”161

எனும் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், வடிந்த நரம்பை உடைய யாழைப்போல இனி மொழிகளைக் கூறி வளையினது மூட்டுவாயின் வடுப்பொருந்த எம்மைக் கூடினாள் எனத் தலைவன் தலைவி தன்னைக் கூடி இன்புற்றதைத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. இது எவ்வாறு புணர்ச்சி பற்றிய உவகையானது எனின், “இவள் இவ்வாறு முயங்கினமையின் “உவவினி நெஞ்சே” என்றமையின் என்றும், பேராசிரியர் கூறுவர்.”162 எனப் புலியூர் கேசிகன் கூறியுள்ளார். இவற்றின்வழி இப்பாடலில் புணர்வெனும் உவகை வெளிப்பட்டுள்ளது.

1:1:4.  விளையாட்டெனும் மெய்ப்பாடும் அகநானூறும்
விளையாட்டாவது, “சோலையும் ஆறும் புகுந்து விளையாடும் விளையாட்டு”163 எனவும், “தீதில் பெய்தல்”164 எனவும் பொருள் கொள்வர். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். இதன்வழி, விளையாட்டென்பது மனதொத்த இருவரும் சோலையும் ஆறும் இன்ன பிற இடங்களும் சென்று சேர்ந்து விளையாடுதலுமாகும்.

இம்மெய்ப்பாட்டினை விளக்க, பேராசிரியரும் புலவர் குழந்தையும் கலி.30 ஆம் பாடலையும்; பாலசுந்தரம் கலி.30, 92 ஆகிய பாடல்களையும், மேலும், இளம்பூரணர் பாலசுந்தரம், தாசன் ஆகியோர் பரி. (எண்.இல்லை) எனும் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதுவும் எடுத்தாளவில்லை.

1:2. முடிவுரை
1. உவகையென்பது மகிழ்ச்சியினைக் குறிக்கும்.
2. இது தன்கண் மட்டுமே வெளிப்படும்.
3. செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கினையும் பற்றி தோன்றும்.
4. செல்வம் என்பதனை விளக்க பேராசிரியரும், புலவர் குழந்தையும் கலி.12 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். மேலும், பாலசுந்தரம் புறம்.161, 141 ஆகிய பாடல்களையும்; தாசன் குறள்.1107-ஐ எடுத்தாண்டுள்ளனர்.
5. புலன் என்பதனை விளக்க பேராசிரியரும் புலவர் குழந்தையும் கலி.40 ஆம் பாடலையும்; பேராசிரியரும் பாலசுந்தரமும் நாலடி.137 ஆம் பாடலையும்; மேலும், பாலசுந்தரம் புறம்.10 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர்.
6. புணர்வு என்பதனை விளக்க இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர், குறள்.1107-ஐயும்; மேலும், பாலசுந்தரம் குறள்.783-ஐயும்; பேராசிரியரும் புலவர் குழந்தையும், அகம்.142 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர்.
7. விளையாட்டு என்பதனை விளக்க, பேராசிரியரும் புலவர் குழந்தையும் கலி.30 ஆம் பாடலையும்; பாலசுந்தரம் கலி.30, 92 ஆகிய பாடல்களையும், மேலும், இளம்பூரணர் பாலசுந்தரம், தாசன் ஆகியோர் பரி. (எண்.இல்லை) எனும் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர்.
8. உவகையெனும் மெய்ப்பாட்டில் புணர்வு என்பதனை விளக்க மட்டுமே பேராசிரியரும் குழந்தையும் அகநானூற்றுப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இவ்வகநானூற்றுப் பாடல் சரியாகப் பொருத்தியாளப்பட்டுள்ளது.

அடிகுறிப்புகள்
1. தொல்.மெய்.3.
2. பேரா.மெய்.11
3. இளம்.மெய்.11
4. குழந்தை.மெய்.11
5. இளம்., பேரா., பாரதி, குழந்தை, இராசா, தாசன், மெய்.11
6. பாலசுந்., மெய்.11
7. இளம், இராசா, மெய்.11
8. பேரா., பாரதி, குழந்தை, தாசன், மெய்.11
9. பாலசுந். மெய்.11
10. பாலசுந்.மெய்.11
11. அகம்.142
12. புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.51
13. இளம்., தாசன்,, மெய்.11
14. பாரதி, மெய்.11

துணைநின்ற நூல்கள்
(அ). தொல்காப்பிய உரை நூல்கள்
1. இராசா.கி., (உரை), தொல்காப்பிய பொருளதிகாரம் (பகுதி-2), பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. பதி.2013.
2. இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், பொருளதிகாரம் (பாகம்.2), சாரதா பதிப்பகம், சென்னை-14, பதி.2014.
3. சோமசுந்தரபாரதி, ச, (உரை), தொல்காப்பியம் பொருட்படலப் புத்துரை, மெய்ப்பாட்டியல், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதி.1975.
4. தாசன். மு.,(உரை) தொல்காப்பியக் களஞ்சியம், பொருளதிகாரம் (பகுதி-2), அபிலா பதிப்பகம், மேலப்பொட்டக்குழி, குமரி மாவட்டம், பதி.2011.
5. பாலசுந்தரம். ச.,(உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சி காண்டிகையுரை (களவு , கற்பு, பொருள், மெய், உவமை), தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பதி.1989
6. புலவர் குழந்தை (உரை),  தொல்காப்பியம் பொருளதிகாரம், அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில், பதி.2012.
7. பொன்னையா. நா(பதி.), பேராசிரியர்(உரை), தொல்காப்பியம், பொருளதிகாரம் (பாகம்.2), திருமகள் அழுத்தம், சுன்னாகம், பதி.1943.
(ஆ) அகநானூற்று உரைநூல்
1. கேசிகன், புலியூர்., அகநானூறு மூலமும் உரையும்(3-தொகுதிகள்), சாரதா பதிப்பகம், சென்னை-14, பதி.2016.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - - பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R