ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்


 

 

அறிஞர் அ.ந.கந்தசாமி - தொடர் நாவல்: மனக்கண்முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை

ஒருவன் ஏழை வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் பணக்கார வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனாலும் பிரச்சனைகளில்லாமல் இல்லை. ஸ்ரீதரைப் பல காலமாக அலைத்து வந்தப் பிரச்சினை அவன் மிகப் பெரியதொரு பணக்கார வீட்டில் பிள்ளையாய் பிறந்திருந்தான் என்பதுதான். பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது அவனுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அவற்றைத் தன் சின்ன வயதிலிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். உதாரணமாக அவர்களது பெரிய மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பொக்கு வாய் கிழவி தட்டிக் கடை நடத்தி வந்தாள். அந்தக் கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒளவையாரின் படம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. "ஒரு வேளை இந்தக் கிழவியும் ஒளவையாரைப் போலக் கவி பாட வல்லவளோ?" என்று கூட ஓரொரு சமயம் அவன் எண்ணியதுண்டு. ஆனால் அதை எப்படிக் கண்டறிவது? அந்தக் கடைக்கு போவதற்குத்தான் வீட்டிலுள்ள யாருமே அவனை அனுமதிப்பதில்லையே! ஆகவே அந்த விஷயம் என்றைக்குமே தீர்க்கப்படாத மர்மமாகவே அவன் உள்ளத்தில் புதையுண்டுவிட்டது.

இன்னும் கிழவியின் தட்டிக் கடையில் இன்னொரு விசேஷமும் இருந்தது. அது வேறொன்றுமல்ல, அங்கிருந்த மிக அகலமான வாயுள்ள ஒரு போத்தலாகும். அப்போத்தலில் சில சமயங்களில் ஏதோ ஒரு வகைப் பணிகாரத்தை அவள் நிரப்பி வைத்திருப்பாள். ஊரிலுள்ள ஏழைச் சிறுவர் சிறுமியர் அவற்றை விலைக்கு வாங்கி மகிழ்ச்சியுடன் உண்டுக்கொண்டு, கிராமத்தின் புழுதி படர்ந்த வீதியில் ஆடிப்பாடிச்சண்டையிட்டுக்கொண்டு செல்வார்கள். ஸ்ரீதர் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்பான். அவனுக்குப் பணிகாரம் சாப்பிட்டுக் கொண்டு போவதற்குப் பேராசை. ஆனால் யார் அவனை அவ்வாறு செய்ய அனுமதிப்பார்கள்.

ஒரு நாள் அவனது அப்பா சிவநேசரிடம் ஸ்ரீதர், "அப்பா அந்த போத்தலில் இருக்கும் பணிகாரத்தை எனக்கு வாங்கித் தா அப்பா" என்று கேட்டான். அதற்குச் சிவநேசர் அளித்த கண்டிப்பான பதில் என்ன தெரியுமா? "சீச்சீ, அதை அதைச் சாப்பிட்டால் நிச்சயம் நோய்கள் உண்டாகும்." இவ்வாறு கூறிய தந்தை ஸ்ரீதரை விரைவாக வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவி பாக்கியத்திடம் "ஸ்ரீதருக்கு நான் நேற்று வாங்கி வந்த சொக்கிலேட்டைச் சாப்பிடக் கொடு" என்றார். பாக்கியமும் அவ்வாறே செய்தாள். ஸ்ரீதரும் சொக்கிலேட்டைச் சாப்பிட்டு முடித்த பிறகு பணிகாரத்தின் நினைவு தான் அவன் மனதில் மேலோங்கியது.

சில சமயங்களில் சோனாவாரியாக மழை கொட்டிக் கொண்டிருக்கும்போது ஸ்ரீதர் வீதியில் தாய் தந்தையருடன் காரில் வந்திருக்கிறான். அப்பொழுது கிராமத்துச் சிறுவர்கள் அம்மணமாகக் கொட்டும் மழையில் கும்மாளமடிப்பதையும், வெள்ளத்தில் துள்ளித் துள்ளி விளையாடுவதையும் பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவனுக்கும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டுமென்று ஆசை தோன்றும். ஆனால் இவை எல்லாமே அவன் பணக்கார வீட்டுப் பிள்ளை என்பதால் நிறைவேறாத நிராசைகளாகவே முடிந்துவிட்டன.

இவை பால்யஸ்ரீதரின் அனுபவங்கள். இன்றோ ஸ்ரீதர் பெரியவனாகிவிட்டான். வயதும் இருபத்துமூன்றாகிவிட்டது. கொழும்பில் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த அவன் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக வளர்ந்திருந்தான். செக்கச் செவேலென்ற சருமம்; கன்னங்கரேலேன்ற தலைமயிர்; கருவண்டுகள் போன்ற விழிகள். பொதுவாக எவரையும் கவர்ந்திழுக்கும் கம்பீரம் நிறைந்த தோற்றம். இன்னும், படிப்பிலும் அவன் கெட்டிதான். அத்துடன் கலைகளில் ஈடுபாடுள்ளவன். சித்திரம், சிற்பம், நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் தான் தனது ஓய்வு நேரத்தை அதிகமாக செலவிட்டு வந்தான் அவன்.

ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளை என்ற பிரச்சினை இன்றும் அவன் வாழ்க்கையைப் பாதிக்கத்தான் செய்த்தது. பணத்தை அடிப்படையாக் கொண்டு உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் சமுதாயத்தில் இப்பிரச்சினை என்றுமே தீராது. உண்மையில் ஸ்ரீதர் அன்றிரவு வெகு நேரம் வரை சுரேஷிடம் பேசிக் கொண்டிருந்தது இந்தப் பிரச்சினையைப் பற்றித் தான்.

ஜன்னலூடாக வானத்து மதியைப் பார்த்த வண்ணம் "சுரேஷ்! அப்பா பெயரைச் சொல்லியதும் என்னுடன் நெருங்கிப் பழக எல்லோரும் அஞ்சுகிறார்களே ஏன்?" என்று கேட்டான் ஸ்ரீதர்.

தொடர் நாவல்: மனக்கண்வஞ்சனையற்ற ஸ்ரீதர் தன் பிரச்சினைகளைப் பற்றி எப்பொழுதும் ஒளிவு மறைவின்றிச் சுரேஷிடம் கேள்விகள் கேட்பது வழக்கம். சுரேஷ் ஸ்ரீதரை விட இரண்டு வயது மூத்தவன். வைத்தியக் கல்லூரியில் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருந்தான். அனுபவத்திலும் அறிவிலும் ஸ்ரீதரை விட மேம்பட்டவன். இன்றும் ஸ்ரீதரைப் போலல்லாமல் உலகம் என்ன என்பது அவனுக்கு ஓரளவு தெரியும். அதற்குக் காரணம் அவன் ஓர் ஏழை மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையொடு மல்லடித்துப் பழகியிருந்ததுதான். அவன் தந்தை கிராமத்தில் ஒரு நெல் வியாபாரியாயிருந்து இறந்து போய் விட்டார். தாய் மிகுந்த கஷ்டப் பட்டு கணவன் விட்டுப் போன பதினைந்து பரப்பு நெற்காணியையும், ஐந்து பரப்புத் தோட்டக் காணியையும் மூலத்தனமாக வைத்து எப்படியோ குடும்பச் செலவைச் சமாளித்துக் கொண்டிருந்தாள். பெயருக்கு அவளுக்கு ஓர் அண்ணனும் ஒரு தம்பியும் இருந்தபோதிலும், அவர்களால் எவ்வித உதவியும் இருக்கவில்லை. ஆனால் சுரேஷின் தந்தைக்கு ஒரு தங்கை இருந்தாள். அந்த மாமியால் தான் சுரேஷ¤க்கும் ஓரளவு உதவி இருந்தது. சுரேஷின் மாமா பிரபல புகையிலை வியாபாரி. அவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தார்கள். மகளுக்கு எப்படியும் சுரேஷை மணம் செய்துவிட வேண்டுமென்பது அவரது திட்டம். அதனால் தான் அவர் சுரேஷின் படிப்புக்கு வேண்டிய பண உதவிகளை அவ்வப்பொழுது மறுக்காது செய்து வந்தார். வைத்தியப் படிப்பில் ஈடுபட்டிருந்த சுரேஷ் பரீட்சையை எடுத்திருந்தான். அநேகமாக இன்னும் சில மாதங்களிலே அவன் டாக்டராகிவிடுவான். டாக்டர் மாப்பிள்ளைக்கு எங்குதான் கிராக்கியில்லை! அந்தக் கிராக்கியின் பலனைச் சுரேஷ் அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும், ஏழ்மையின் துன்பமும் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தின் தன்மைகளும் அவனுக்கு நன்றாகத் தெரிந்துதான் இருந்தன.

ஸ்ரீதரும் சுரேஷ¤ம் எவ்வாறு சந்தித்தார்கள், எவ்வாறு ஒரே வீட்டில் ஒரே அறையில் குடியிருக்க ஆரம்பித்தார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம். ஸ்ரீதரின் தந்தைக்குக் கொழும்பில் இருந்த பல வீடுகளில் ஒன்றுதான் அவன் இப்பொழுது வசித்துவந்த "கிஷ்கிந்தா" என்னும் வீடு. தனது மற்ற வீடுகளை எல்லாம் வாடகைக்கு விட்டிருந்த சிவநேசர், இந்த வீட்டை மட்டும் வாடகைக்கு விடவில்லை. இதற்குக் காரணம் அரசாங்க **அலுவலகங்களுடனும்** கொழும்பிலுள்ள வங்கிகள், தாம் பங்குதாரராயிருந்த கம்பெனிக என்பவற்றுடனும் அவருக்கு அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் காரணமாக அவர் கொழும்புக்கு வரும் நாட்களில் தங்குவதற்கு வசதியான இடம் ஒன்று வேண்டியிருந்ததுதான். ஸ்ரீதர் மேற்படிப்புக்காகக் கொழும்புக்கு வந்தபொழுது அவனையும் அங்கு குடியேற்றினார்.

"கிஷ்கிந்தா" விசாலமானா தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த சுமாரான பெரிய வீடு. கீழ் வீட்டில் இரண்டறைகளும் மேல் வீட்டில் மூன்றறைகளும் கொண்ட அவ்வீட்டில் ஆரம்பத்தில் ஸ்ரீதரும் சமையல்காரனும், தோட்டக்காரனும், டிரைவருமே இருந்தார்கள். இரவு வேளைகளில் வேலைக்காரர்கள் கீழே உறங்கிவிட ஸ்ரீதர் மட்டுமே மேல் மாடியில் உறங்குவது வழக்கம். தனியே படுக்க ஸ்ரீதருக்குப் பயம். அதனால் ஒரு நாள் அவன் தந்தையிடம் தன்னால் அவ்வீட்டில் தனியாகக் குடியிருக்க முடியாது என்று கூறிவிட்டான். அதைக் கேட்ட சிவநேசருக்கு ஒரு யோசனை தோன்றியது. பத்திரிகைகளில் தமது வீட்டில் ஒரு அறை காலியாக இருப்பதாகவும் மேல் படிப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு அது வாடகைக்கு விடப்படும் என்றும் அவர் விளம்பரம் செய்தார். அதன் பயனாக வந்து சேர்ந்த பலரில் ஸ்ரீதரால் பொறுக்கியெடுக்கப்பட்டவனே சுரேஷ். ஆரம்பத்தில் சுரேஷ் வெறுமனே அறையில் வாடகைக்கிருக்கும் "ஆரோ எவரோ" என்ற முறையில் தான் நடத்தப்பட்டான். ஆனால் நாளடைவில் இருவரும் இணை பிரியாத நண்பர்களாகி விட்டார்கள். சிவநேசருக்கும் சுரேஷை நன்கு பிடித்திருந்தது.

ஸ்ரீதரும் சுரேஷ¤ம் இரவு படுக்கைக்குப் போன பின்னர் ‘லைட்’டை அனைத்து விட்டு இருட்டிலே சிறிது நேரமாவது சம்பாஷித்துக் கொண்டிருப்பது வழக்கம். அந்நேரத்தில் தான் நண்பரிருவரும் தங்கள் சொந்தப் பிரச்சினைகள் பற்றியும், அன்று பகல் தங்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் பேசிக் கொள்வார்கள். அன்றிரவும் அப்படிப் பேசிக் கொண்டிருந்த போதுதான் ஸ்ரீதர் முன்னர் கூறிய கேள்வியைச் சுரேஷிடம் கேட்டான்.

வானத்தில் முழுமைத் தோற்றத்துடன் பவனி வந்துகொண்டிருந்த வெண்ணில ஜன்னலூடாக ஸ்ரீதரின் அறைக்குள் நிலவுப்பாலை ஊற்றிக்கொண்டிருந்தது. அவ்வெளிச்சத் ‘ தீ ’யில் நண்பர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் ஓரளவு பார்க்கக் கூடியதாயிருந்தது.

ஸ்ரீதரின் கேள்விக்குச் சுரேஷ் விவரமாகப் பதிலளித்தான். உண்மையில் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துவிட்டான் அவன்.

"ஸ்ரீதர்! உன் அப்பா சாதாரண மனிதரல்லவே!" என்று ஆரம்பித்த அவனை ஸ்ரீதர் இடைமறித்து "ஏன், அவருக்கு மூன்று கால்களோ, கொம்போ முளைத்திருக்கிறதா?" என்று கேட்டான்.

சுரேஷ் அதற்கு "ஸ்ரீதர்! சந்தேகமில்லாமல் அவர் கொம்பு முளைத்த பேர்வழிதான். அதுவும் ஒன்றிரண்டு கொம்புகளல்ல, பல கொம்புகள் அவருக்கிருக்கின்றன!" என்றான்.

ஸ்ரீதர் "அப்படியானால் எங்க அப்பாவை நீ மாடென்று சொல்கிறாய். அப்படித்தானே! வரட்டும். நான் அவரிடம் இதைச் சொல்கிறேன்" என்று சிரித்தான். சுரேஷ¤ம் அவனோடு சேர்ந்து சிரித்துவிட்டு ஸ்ரீதரின் கேள்விக்குப் பதிலளிக்க ஆரம்பித்தான்.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் , தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவலான 'மனக்கண்' முகப்போவியம்."உனது அப்பா ஜாதியில் உயர்ந்தவர், அந்தஸ்தில் உயர்ந்தவர், பணம் படைத்தவர் படிப்பிலும் உயர்ந்தவர். உண்மையில் இலங்கை பூராவும் எல்லா வகையிலும் புகழ்பெற்ற பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்படிப்பட்டவரின் மகன் நீ. நான் இப்பொழுது சொன்ன பண்புகள் ஒவ்வொன்றும் உண்மையில் ஒவ்வொரு கொம்புக்குச் சமமானது. இவை போதாவென்பதுபோல் நீயும் பார்ப்பதற்கு வாட்டச்சாட்டமாக இராஜகுமாரன் போல் இருக்கிறாய். ஹோர்ட்டன் பிளெனில் பெரிய பங்களாவில் வசிக்கிறாய். டிரைவரோடு கூடிய ‘பிளிமத்’ கார் வேறு. அது மட்டுமல்ல. நீ கல்லூரிக்கு உடுத்திச் செல்லும் உடைகளை என்னைப் போன்றவர்கள் ஒரு கல்யாணத்துக்குக் கூட உடுத்திச் செல்வதில்லை. இந்த நிலையில் உன்னைப் பார்ப்பவர்கள் இயற்கையாகவே ஒரு தாழ்மை உணர்ச்சி தோன்றிவிடுகிறது. அதனால்தான் உன்னோடு தாராளமாகப் பேசவும் பழகவும் அஞ்சுகிறார்கள். இதில் நாம் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!"

ஸ்ரீதர் பெருமூச்சு விட்டான்: "சுரேஷ்! இதனால் எனக்கு எவ்வளவு சிக்கலான பிரச்சினைகள் ஏற்படுகின்றனவென்று தெரியுமா? சில சமயம் ‘கண்டீனில்’ யாருடனாவது பேசிக்கொண்டிருக்கலாம் என்று போனால் யாருமே என்னுடன் பேசிக்கொண்டிருக்க விரும்புவதில்லை. கேட்ட கேள்விக்கு டக்கென்று ஏதோ பதில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். என்னைப் பார்த்து அவர்களுக்குத் தாழ்மை உணர்ச்சி ஏற்படுகிறது என்று நீ கூறுகிறாய். அதை நான் நம்பவில்லை. எனக்குத்தான், அவர்கள் என்னுடன் பழகுவதற்கு இவ்வளவு கிராக்கி வைக்கிறார்களே என்பதை நினைத்ததும் கடுமையான தாழ்மை உணர்ச்சி ஏற்படுகிறது. "என்னில் என்ன குறைபாடு?" என்று எனது நெஞ்சத்தையே நான் குடைய ஆரம்பித்து விடுகிறேன்... உண்மையில் சுரேஷ்! இதனால் எனக்கேற்படும் தனிமை உணர்ச்சியை உனக்கு எவ்வாறு எடுத்துக் கூறுவது என்று எனக்கு விளங்கவில்லை. உண்மையின் நீயுமில்லாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும். நீ ஒருவன் தான் அம்மாவுக்கு அடுத்தபடி என்னுடன் தாராளமாக பழகும் ஒரே ஒருவன்."

ஸ்ரீதரின் வார்த்தைகள் சுரேஷின் இதயத்தைத் தொட்டன. அவனுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயமேயாயினும் இவ்வளவு தூரம் அவன் தன் மீது மனமார அன்பு செலுத்துகிறான் என்பது அவனுக்கு முன்னர் தெரியாது. சொந்த அன்னையோடு தன்னை ஒப்பிடும் அளவுக்கு அவன் தன்னை நேசிக்கிறான் என்பதை யோசித்த போது அவனுக்குப் பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டு விட்டது. அந்த அதிர்ச்சியில் ஒரு கணம் அவன் மெளனமாக இருந்து விட்டுப் பின் எதையோ நினைத்துக்கொண்டவன் போய், "ஸ்ரீதர்! நீ தீடீரென இந்த விஷயத்தை இவ்வளவு விரிவாகப் பேச வேண்டிய காரணமென்ன! கல்லூரியில் இன்று பகல் நடைபெற்ற சம்பவம் எதுவும் அதற்குக் காரணமா?" என்று கேட்டான்.

ஸ்ரீதர் "அப்படி ஒன்றுமில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். ஆண்களை விடப் பெண்கள்தான் என்னைக் கண்டு அதிகம் அஞ்சுகிறார்கள். வெகு அவசியமான நேரங்களில் கூட அவர்கள் மற்ற மாணவர்களிடம் பேசுவதுபோல என்னிடம் பேச முன் வருவதில்லை. அதற்குக் காரணமென்ன!" என்று தயக்கத்துடன் கேட்டான்.

இந்தக் கேள்விக்குச் சுரேஷ் சாதுரியமாகப் பதிலளித்தான். "உனக்கேற்பட்டிருக்கும் இப்பிரச்சினை மன்னாதி மன்னர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மகாமன்னனான துஷ்யந்தன் வேட்டைக்குச் சென்றபோது முதன்முதலாகச் சகுந்தலையைக் காண்கிறான். அவனை ஒரு வண்டு துரத்துகிறது. துஷ்யந்தன் வண்டை விரட்டிச் சகுந்தலையைக் காப்பாற்றுகிறான். அப்பொழுது சகுந்தலையின் தோழி அநசூயை "நீங்கள் யார்?" என்று துஷ்யந்தனை வினவுகிறாள். அதற்கு அவன் அளித்த பதில் என்ன தெரியுமா? மன்னனால் தேவாலயங்களைக் கண்காணிக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்ட தர்மாதிகாரி தான் என்று பொய் கூறுகிறான் அவன். அவன் மட்டும் அவ்வாறு சொல்லாமல் உண்மையைச் சொல்லியிருந்தால் சாகுந்தலம் நாடகமே காளிதாசனால் எழுதப்பட்டிருக்க முடியாது. தன்னைக் காப்பாற்றியவன் துஷ்யந்த மன்னன் என்று சகுந்தலைக்குத் தெரிந்திருந்தால் அவள் அச்சத்தால் நடுங்கியிருப்பாள். மன்னர் மன்னன் காலில் விழுந்து வணங்கி "மன்னவா! நீ நீடுழி வாழ்க!" என்று கூறிவிட்டுப் போயிருப்பாள். காதல் ஏற்பட்டிருக்காது" என்றான்.

அதற்கு ஸ்ரீதர் "சகுந்தலையின் கதையில் அப்படி ஒரு சம்பவமிருக்கிறதா? அது எனக்கு நினைவில்லை. ஆனால் இது போன்ற அனுபவம் ஒன்று எனக்கும் இவ்வாரம் ஏற்பட்டது. நானும் ஏன் துஷ்யந்தனைப் போல் ஒரு பெண்ணிடம் நான் யார் என்பதைப் பற்றி ஒரு பெரிய பொய் கூறிவிட்டேன். பார்க்கப் போனால் நான் செய்தது தவறில்லை போலல்லவாதெரிகிறது. **** துஷ்யந்தன் செய்ததைத் தானே நானும் செய்திருக்கிறேன்!" என்றான்.

சுரேஷ் வேடிக்கையாக "அட சக்கை! அப்படியா காரியம்! இப்பொழுது நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். நீ துஷ்யந்தன். ஆனால் துஷ்யந்தன் மனதைக் கவர்ந்த அந்தச் சகுந்தலை யாரோ? எந்த ஊரோ? என்ன பேரோ?" என்று கேட்டான்.

தொடர் நாவல்: மனக்கண்ஸ்ரீதர் "அந்தப் பெண் எனது வகுப்பு மாணவியல்ல. விஞ்ஞானப் பிரிவில் படிக்கிறாள். என்னைப் பற்றி அவளுக்கு முன்பின் தெரியாது. நான் ஒரு நாடக கவிஞன் என்பது மட்டுமே அவளுக்குத் தெரியும். பல்கலைக் கழக நாடக மன்றத்துக்கு அவளும் என்னோடு கூட்டுக் காரியதரிசியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறாள். இவ்வருடம் சொபாக்கிளிஸ் என்ற கிரேக்கப் புலவன் எழுதிய "எடிப்பன் ரெக்ஸ்" என்னும் நாடகத்தை நாங்கள் தமிழில் அரங்கேற்றவிருக்கிறோம். அது பற்றிய வேலைகளுக்காக என்னிடம் இரண்டு மூன்று தடவை பேச வந்த அவள் என்னுடன் சற்றுத் தாராளமாகவே பழக ஆரம்பித்து விட்டாள். அவள் இளைப்பாறிய ஒரு வாத்தியாரின் மகள். கொட்டாஞ்சேனையில் வசிக்கிறாள். அவள் என்னிடம் என்னுடைய குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். நான் எப்படி சிவநேசரின் மகன் என்று கூறுவேன்! அவ்வாறு கூறினால் அவள் மிரண்டு விடுவாள் என்று நினைத்து என் தகப்பனார் பெயர் செல்லையா பிள்ளை என்றும் அவரும் அவளுடைய தந்தையைப் போல இளைப்பாறிய ஒரு வாத்தியாரே என்றும் கூறிவிட்டேன் என்றான். பின் திடீரென்று "சுரேஷ்! நான் பொய் சொல்வதில் தப்பில்லையே!" என்று நண்பனை வினவினான்.

சுரேஷ் "அதில் தப்பொன்றுமில்லை. அதுதான் துஷ்யந்தன் கூட அவ்வாறு பொய் சொல்லியிருக்கிறான் என்று முன்னமே கூறினேனே!" என்றான்.

ஸ்ரீதர் அதைக் கேட்டுவிட்டுச் சிறிது நேரம் ஜன்னல் வழியாக மேகமந்தைகளூடே சஞ்சரித்துக் கொண்டிருந்த சந்திரனைப் பார்த்துக் கொண்டு பேசாமலிருந்தான்.

சற்று நேரம் சென்றதும் சுரேஷ் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு, "ஸ்ரீதர்! நான் உன்னிலும் பார்க்க வயதிற் கூடியவன். ஆகவே உன்னுடைய சகுந்தலை விஷயமாக நான் உன்னை எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். காதல் என்பது கதைகளுக்குத்தான் சரி. வாழ்க்கைக்கு ஒத்து வராது. உன் தகப்பனார் அவளை ஒரு பொழுதும் தன் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதை நீ மறந்துவிடாதே!" என்றான்.

ஸ்ரீதர் "சுரேஷ்! நீ தெரியாமல் பேசுகிறாய். நீ அப்பாவைப் புரிந்து கொள்ளவில்லை. அவர் முற்போக்கான கருத்துகள் கொண்டவர். பத்து வருடங்களின் முன்னர் அவர் தமிழில் எழுதி வெளியிட்ட "நமது சமுதாயப் பிரச்சினைகள்" என்ற நூலை நான் உனக்குக் காட்டியிருக்கிறேனல்லவா! அதில் அவர் காதல் திருமணத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி நான் பத்மாவைத் திருமணம் செய்வதை எதிர்க்க முடியும்! நிச்சயம் அவர் எங்கள் திருமணத்தை ஆதரிப்பார்" என்று கூறினான்.

சுரேஷ் "அதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது இரவு வெகு நேரமாகிவிட்டது. நாங்கள் நித்திரை கொள்ள வேண்டாமா? காதலைப் பற்றிப் பேசினால் யாருக்கும் ருசிதான். என்றாலும் நாளைக்கு வகுப்புக்கும் போக வேண்டுமல்லவா!" என்றான்.

ஸ்ரீதர் தனது கட்டிலுக்குப் பக்கத்திலுருந்த மின்சார விசையை அழுத்தினான். வெளிச்சம் மின்னிக்கொண்டு அறை முழுவதும் வியாபித்து, ஜன்னலூடாகப் பரவியிருந்த நிழலையும் விழுங்கியது. மேசையிலிருந்து மணிக்கூடு மணி பன்னிரண்டு என்பதைக் காட்டியது.

"ஓ! மணி பன்னிரண்டாகி விட்டது!" என்று கூறிக் கொண்டே ஸ்ரீதர் எழுந்து மேசையிலிருந்த வெந்நீர்ப் போத்தலிலிருந்த தேநீரை இரு கோப்பைகளில் ஊற்றி ஒரு கோப்பையைச் சுரேஷிடம் நீட்டினான். சுரேஷ் அதை ஒரே மடக்காகக் குடித்துவிட்டுக் கட்டிலில் படுத்துக்கொண்டு போர்வையில் தன் உடலை மட்டுமல்ல. முகத்தையும் மூடிக் கொண்டான்.

ஸ்ரீதர் ‘லைட்’டை அணைத்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றான். ஆனால் நித்திரை வரவில்லை. பத்மாவின் நினைவுமுகம் ஜன்னலூடாகத் தெரிந்த சந்திரனுடன் போட்டியிட்டுக் கொண்டு அவன் மனதை இன்ப நிலவால் நிறைத்தது. அன்று அவன் நித்திரை போன போது அதிகாலை நாலு மணியிருக்கும். அவனது கிராமத்திலென்றால் அப்பொழுது கோழி கூவியிருக்கும்!


2-ம் அத்தியாயம்: அழைப்பு

தொடர் நாவல்: மனக்கண் - அத்தியாயம் 2[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]

பல்கலைக் கழக மண்டபத்தில் ‘எடிப்பஸ் ரெக்ஸ்’ நாடகம் தமிழில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிரேக்க நாடகாசிரியனன சொபாக்கிளிஸ் எழுதிய அந்நாடகம் உலகத்தின்  வெற்றி நாடகங்களில் ஒன்று. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏதென்ஸ் நகரில் முதன் முதலாக அரங்கேற்றப்பட்ட அந்நாடகம் உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் நடிக்கப்பட்டு இப்போது தமிழ் மொழிக்கும் வந்துவிட்டது. நானே இதற்குப் பொறுப்பாளி என்பதில் நாடகத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மிக்க பெருமை.

“எடிப்பஸ் ரெக்ஸ்” இதுவரை உலகில் பல்லாயிரம் இரவுகள் ஓடியிருக்க வேண்டும்! சில சமயம் இலட்சம் இரவுகள் கூட ஓடியிருக்கலாம். ஆண்டொன்றுக்கு அங்கொரு நாட்டில் இங்கொரு நாட்டிலாக ஐம்பது இரவுகள் ஓடியிருந்தால் கூட ஓர் இலட்சமாகிவிடுமல்லவா? இந்த நாடகத்தை முதன் முறையாக நூல் வடிவில் வாசித்த போதே ஸ்ரீதர் நிச்சயம் அதனைத் தமிழில் நடிக்கவேண்டுமென்றும், அதில் எடிப்பஸ் மன்னனின் பாகத்தைத் தானே வகிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டான். இளமையில் அந்தக் கனவு இன்று மிகவும் ஆரவாரமாக மேடையில் நிறைவேறிக்கொண்டிருந்தது!

பல்கலைக் கழக நாடகமென்றால் ஒரே கூச்சலும் கும்மாளமுமாயிருக்கும் என்பதை கூறவா வேண்டும்? மாணவர்கள் ஏதேதோ பேசிச் சிரித்தார்கள், கூச்சலிட்டார்கள். சீழ்க்கை அடித்தார்கள். ஆனால் இதெல்லாம் நாடகம் தொடங்க முன்னர்தான். நாடகம் ஆரம்பித்ததும் சுக்கிரீவர் கூட்டம் என்று சாதாரணமாக வர்ணிக்கப்படும் பல்கலைக் கழக மாணவர்களே “கப்சிப்” பென்று ஸ்தம்பித்து, உட்கார்ந்து விட்டார்கள் என்றால், நாடகம் எவ்வளவு தூரம் நெஞ்சைப் பிழிப்பதாக இருந்திருக்க வேண்டும்!

இருளிலே சபையோர் அடுத்த சம்பவம் என்ன என்ற ஆர்வத்தோடு ஒளிமயமான நாடக மேடையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீதர் மேடையில் கணீரென்ற குரலில் பேசி நடித்துக் கொண்டிருந்தான்.

அன்று காலையிலிருந்தே ஸ்ரீதரின் மனம் நாடக அரங்கேற்றத்தால் மிகவும்  பூரித்துப் போயிருந்த தென்றாலும் காளிதாசனின் “கணையாழி சாகுந்தலத்”தில் சூத்திரதாரி “பெரிய பயிற்சியுடையோருக்கும் அறிஞர் மகிழ்ந்து புகழும் வரை சிறிது மனத்தளர்ச்சி இருப்பது இயற்கையே” என்று கூறி இருப்பதற்கு இசைய, நாடகத்தின் வெற்றியில் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கவே செய்தன. ஆனால் சபையின் அமைதியும் இடையிடையே பட்டாசு வெடித்தது போல் இருளில் வெடித்துப் பரவிய கைதட்டலும் அந்தப் பயத்தை நாடகம் தொடங்கிய முதல் ஐந்து  நிமிஷங்களிலேயே எங்கேயோ தூக்கி எறிந்துவிட்டது. எனவே தானே இராஜா என்பதுபோல் சிம்மக் குரலெடுத்து முழங்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

ஆனால், என்னதான் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த போதிலும் ஸ்ரீதரின் மனதில் ஒரு பெருங் குறை இல்லாமல் இல்லை. தாய் பாக்கியமும் தந்தை சிவநேசரும் நாடகத்துக்கு வர முடியாது போய் விட்டமையே அது. சிவநேசருக்கு நீரிழிவு வியாதி ஏற்கனவே உண்டு. அதன் விளைவாகக் கடந்த சில நாட்களாகக் காலில் ஒரு கட்டி ஏற்பட்டுப் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலைமை அவருக்கு  ஏற்பட்டுவிட்டதால், இருவராலும் நாடகத்துக்கு வர முடியவில்லை. இல்லாவிட்டால் மகனின் நடிப்புப் புலமையைப் பார்க்க எங்கிருந்தாலும் அவர் வந்தேயிருப்பார். கூடத் தாய் பாக்கியமும் வந்திருப்பாள்.

ஸ்ரீதர் மனம் இதனால் ஏமாற்றமடைந்திருந்ததாயினும் சபையின் முன்னணி ஆசனங்களில் பத்மாவும் அவளது தந்தையார் வாத்தியார் பரமானந்தரும் உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் அவனது கவலைகள் மறைந்து போயின.

பத்மாவின் தகப்பனார் வாத்தியார் பரமானந்தரை அவன் இதற்கு முன்னர் ஒரு போதும் கண்டதில்லையாயினும் பத்மாவின் பக்கத்தில் அவர் வீற்றிருந்த தோரனையிலிருந்தும், அவர் வயது, முகச் சாயல் என்பவற்றிலிருந்தும் அவர்தான் பத்மாவின் தந்தை என்பதைத் தெரிந்துக் கொண்டான்.

பரமானந்தர் நாடகத்தை மிக நுணுக்கமாகப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தார்.

நாடகம், தேபேஸ் நாட்டு மன்னனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுவது, எடிப்பஸ் தந்தையைத் தந்தையென்றறியாது தன் கரத்தாலேயே கொன்றுவிடுகிறான். பின் தாயைத் தாயென்று தெரியாது பெண்டாளுகிறான். அவளைத் தனது பட்டத்து மகிஷியாகவும் ஏற்றுக் கொள்ளுகிறான். தாய்க்கும் மகனுக்கும் குழந்தைகளும் பிறந்துவிடுகின்றன! இந்நிலையில் சில சந்தர்ப்ப சூழல்களால் அவனுக்கு உண்மைகள் வெளியாகின்றன. என்ன செய்வான், எடிப்பஸ். தாயைப் பெண்டாண்ட பாதகன் தானென்று தெரிந்ததும் நெருப்பை மிதித்தவன் போல் நெஞ்சடைத்து கதறுகிறான் எடிப்பஸ்!

தந்தையைக் கொன்றவன் நான்!

தாயின் கணவன் நான்!

என் பிள்ளைகள் எனக்குத் தம்பிமாராகிவிட்டார்கள்!

எடிப்பசுக்கு இதை விட  வரை வேறென்ன வேண்டும்!  வேறென்ன வேண்டும்!

உலகமே அதிரும்படியாக இவ்வசனங்களை முழங்குகிறான் ஸ்ரீதர். இந்தக் கட்டத்தில் அவனது நடிப்பு எல்லோரையும் கவர்ந்துவிட்டது. ஆனால் அடுத்த கட்டமோ மயிர்க் கூச்செரியச் செய்தது.

‘எடிப்பஸ் மன்னன் மேடையின் நடுவே மின் விளக்கின் வட்ட ஒளியில் வந்து நிற்கிறான். ஆவேசங் கொண்டு அலறுகிறான். பின்னணியில் கூட்டு வாத்தியங்களும் அவனோடு சேர்ந்து பயங்கரமாக அலறுகின்றன. இசையின் அலறலுக்குத் தக்கபடி தன் ஈட்டியால் தன் கண்களை மீண்டும் மீண்டும் பல தடவை குத்துகிறான் அவன். கண்களிலிருந்து இரத்தம் பீறிடுகிறது. கன்னங்களில் கொட்டுகிறது செந்நீர்! கண்ணிழந்து கபோதியாய் நிற்கிறான் காவலன்.

இந்தக் கட்டத்தில் ஸ்ரீதர் நடிப்பின் உச்சத்தை அடைந்து விடுகிறான். சபையோர் நடு நடுங்கிப் போய் விட்டார்கள். பட்டாசு போல் கைதட்டல் வெடிக்கிறது!

பத்மா அவன் கண்களைக் குத்தும் கட்டத்தில் “ஐயோ” என்று அலற வந்தவள் எப்படியோ அதை ஒருவாறு அடக்கிக் கொண்டாள். பரமானந்தர், “பத்மா, நடிப்பென்றால் இதுதான் நடிப்பு! நடிகனின் பெயர் என்ன?” என்றார் மகளைப் பார்த்து.

“ஸ்ரீதர். அவர்தான் நாடகத்தைத் தமிழில் எழுதியவரும் கூட. இன்னும் அவர்தான் தயாரிப்பாளரும்!” என்றாள் விரிவாக.

“அப்படியா! அவன் மிகவும் கெட்டிக்காரன் போலிருக்கிறதே. நாடகம் முடிந்தப்பின்னர் அவனை நான் நிச்சயம் பார்த்துப் பாராட்டவேண்டும்” என்றார் பரமானந்தர்.

தொடர் நாவல்: மனக்கண் - அத்தியாயம் 2நாடகம் முடிந்து, சபை கலைந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு புரளிக்கார மாணவன் கலைந்து கொண்டிருந்த மக்களின் இரைச்சலுக்கு மேலே கேட்கும் படியான உரத்த தொனியின் “தந்தையைக் கொன்றவன் நான்..” என்று கூச்சலிட்டுச் சென்றான். சொபாக்கிளின் அவ்வுணர்ச்சி நிறைந்த கதையில் இரண்டாயிரம் வருடங்களைத் தாண்டி, கொழும்பில் அவ்வாறு ஒலித்ததைக் கேட்ட ஓர் இலக்கியப் பிரியர் இன்னோர் இலக்கியப் பிரியரின் முதுகில் தட்டி “கேட்டீரா, இதுதான் இறவாத இலக்கியம், காலத்தை வென்ற இலக்கியம்!” என்று கூறிவிட்டுச் சென்றார். ஜன சந்தடியில் ஒன்றிரண்டு வாக்குகள் அங்குமிங்கும் புரண்டன. சீக்கிரம் மோட்டார் வண்டிகளின் ‘ஹோர்ண்’ சப்தமும் இயந்திரங்களின் உறுமலும் கேட்டன. நாடகம் முடிந்து ****

ஸ்ரீதர் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வேஷம் கலைக்கும் (அதுதான் வேஷம் போடும் அறையும் கூட) அறைக்குள் வந்து மேக்கப்பைத் துடைக்க ஆரம்பித்தான். சுரேஷ் அவனை அங்கு எதிர்பார்த்துக்கொண்டு நின்றான். ‘சுரேஷ்! எனக்கு நிறைய வேலையிருக்கிறது. நீ போ. நான் அப்புறம் வருகிறேன். நாடகம் எப்படி!” என்று கேட்டான் உற்சாகத்தோடு “அற்புதம்!” என்று சுருங்கச் சொன்ன சுரேஷ் ஸ்ரீதரின் தோள்களைத் தடவி “நீ இவ்வளவு தூரம் நடிப்பாய் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்கு வா. அப்புறம் பேசுவோம்.” என்று கூறுவிட்டு அவனிடம் விடை பெற்றுச் சென்றுவிட்டான். அவன் போன மறுகணம் பத்மாவும் பரமானந்தரும் அங்கு வந்தார்கள். வெயர்த்து விறு விறுத்து, பாதி கலைக்கப்பட்ட மேக்கப்புடன் நின்ற ஸ்ரீதர் அவர்களைக் கைகூப்பி வரவேற்றான். பத்மா பரமானந்தரை ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைத்தானள்.

“ஸ்ரீதர்! உனது நடிப்பு மிகவும் நன்றாயிருந்தது. இப்படிப்பட்ட நடிப்பைச் சிறந்த ஆங்கிலப் படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்” என்று மனமாரப் பாராட்டினார் பரமானந்தர்.

ஸ்ரீதருக்குப் பரமானந்தரின் பாராட்டு மிகுந்த ஆனந்தத்தைத் தந்தது. “எடிப்பஸ்” நாடகத்தை நடிக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாளைய ஆசை. அதை வெற்றியாகவே நிறைவேற்றி விட்டேன் என்று நீங்கள் கூறுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தாழ்மையுடன் பதிலளித்தான் அவன்.

பரமானந்தர் அவன் தோள்களைத் தட்டி “சரி, நான் வருகிறேன். ஸ்ரீதர் சமயம் இருக்கும் போது நீ வீட்டுக்கு வரலாம். முடியுமானால் நாளையே வா. உன்னுடன் நாடகங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். உண்மையில் நானும் உன்னைப்போல் ஒரு நாடகக் கலைஞன் தான். வாலிப வயதில் நானும் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்பொழுது நான் இது போல் மீசை வைத்திருக்கவில்லை. பெண் பாகங்களில் கூட நடித்திருக்கிறேன்” என்றார் சிரித்துக்கொண்டு.

ஸ்ரீதரும் சிரித்தான். “ஓ! அப்படியா! அப்போது நாங்கள் இருவரும் ஒரே திசையை நோக்கிச் செல்பவர்கள். பத்மாவுக்கு நாடகத் துறையில் இருக்கும் ஆர்வத்துக்கும் இப்போது காரணம் புரிந்துவிட்டது. தந்தைக்கு இருக்கும் கலையார்வத்தில் பாதியாவது மகளுக்கு இருக்காதா? என்னை வீட்டுக்கு வரும்படி கூறினீர்களல்லவா? கட்டாயம் நாளைக்கே வருகிறேன்” என்றான் ஆர்வத்துடன்.

அதன்பின் பரமானந்தரும் பத்மாவும் ஸ்ரீதருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, மரமடர்ந்த இருள் படர்ந்திருந்த வீதி வழியே கொட்டாஞ்சேனைக்குச் செல்ல, பஸ்தரிப்பை நோக்கி நடந்தார்கள். வழியில் நாடகத்தைப் பற்றித் தந்தையும் மகளும் விரிவான விமர்சனம் செய்து கொண்டார்கள்.

ஸ்ரீதர் அன்றிரவு வீடு வந்து சேர்ந்தபொழுது இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. சுரேஷ் ஏற்கனவே வீடு வந்து வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டுப் படுத்துவிட்டான். ஸ்ரீதர் அறைக்கு வந்த பொழுது சுரேஷின் “கார்-புர்” குறட்டை ஒலி தான் அவனை வரவேற்றது. அதைச் சற்று உற்றுக் கேட்ட ஸ்ரீதர் “சுரேஷின் குறட்டை ஒலி பல சங்கீத வித்வான்களின் கச்சேரிகளிலும் பார்க்க இனிமையாக இருக்கிறதே!” என்று தன்னுள் தானே கூறிக் கொண்டான். ஸ்ரீதரின் உள்ளத்தில் அன்று மிக்க மகிழ்ச்சி. அதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று நாடகத்தின் வெற்றி. மற்றது பரமானந்தர் அவனைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தமை. இவ்வழைப்பின் பயனாகப் பத்மாவுக்கும் தனக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த தொடர்பு மேலும் இறுகி வலியுறும் என்று அழுத்தமான எதிர்ப்பார்ப்பு அவன் மனதிலே ஏற்பட்டது.

ஸ்ரீதரின் அறையில் வெளிச்சம் தெரிந்ததும் வேலைக்கார சுப்பையா மாடிக்கு ஓடி வந்தான்.

“சின்ன ஐயா வீடு வந்ததும் உடனே தனக்கு ***  ஐயா டெலிபோனில் பேசினார்” என்றான் அவன்.

“அப்படியா!” - என்று கொண்டே ஸ்ரீதர் டெலிபோன் இருக்கும் இடத்துக்குப் போய் கிராமத்துக்கு ஒரு “ட்ரங்க் கோலை” “புக்” பண்ணிவிட்டுச் சாப்பாட்டு மேசையிலமர்ந்து, சிறிது சாப்பிட ஆரம்பித்தான். ஆனால் கையும் வாயும்தான் சாப்பாட்டோடு சேர்ந்து நின்றனவல்லாமல், மனமென்னவோ பத்மாவின் பின்னாலே தான் போயிற்று. அவள் தங்க மேனியும் தளிரிடையும் மனத்திரையில் தோன்றின.

“பத்மா மிகவும் கெட்டிக்காரி. எவ்வளவு நாகரிகமாகவும் மரியாதையாகவும் என்னைத் தன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டாள்! பரமானந்தரும் ஒரு நாடகக் கலைஞராக இருப்பது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலல்லவா? இனி நான் அவர் வீட்டுக்கு அதைச் சாக்காக வைத்துக்கொண்டு எத்தனை தடவையும் போகலாம்” - என்று தன்னோடு தானே பேசிக் கொண்டான் ஸ்ரீதர்.

பின்னர் திடீரென மற்றோர் எண்ணம் உண்டாயிற்று. “இன்று நான் பத்மாவுடன் மாறாட்டமாகத்தானே பழக வேண்டியிருக்கிறது! ஆனால் என்றோ ஒரு நாள் உண்மையைக் கூறித்தானேயாக வேண்டும்! அப்பொழுது அவள் என்னைப் பொய்யன் என்று ஏற்க மறுப்பாளோ! காலையில் சுரேஷிடம் நான் இந்தக் கேள்விக்கு மறுமொழி கேட்க வேண்டும். அவன்தான் இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகளுக்குத் தெளிவான பதிலளிக்கக் கூடியவன்,” என்று எண்ணிய ஸ்ரீதரின் மனதில் எதற்காக அவன் தந்தையார் நள்ளிரவில் டெலிபோனில் தன்னுடன் பேச முயல வேண்டும் என்ற கவலையும் ஏற்பட்டது. “** செய்தியோ அவச் செய்தியோ? எதுவும் இப்போது தெரிந்துவிடும் தானே” என்று அவன் எண்ணவும் டெலிபோனில் “ட்ரங்கோல்” வரவும் சரியாய் \இருந்தது. சாப்பிட்ட கையைக் கழுவாமலே டெலிபோனுக்கு ஓடினான்.

-- யாரது, ஸ்ரீதரா?

-- ஆமப்பா, என்ன விசேஷம்?

-- நாடகம் எப்படி இருந்தது?

-- மிகவும் நன்றாயிருந்தது என்று சொன்னார்கள். என் நடிப்பை மிகவும் புகழ்ந்தார்கள் அப்பா.

-- அப்படியா? எனக்கும் அம்மாவுக்கும்தான் வர முடியவில்லை. இன்னும் எனது கால் புண் ஆறவில்லை. இல்லாவிட்டால் இருவரும் வந்திருப்போம்.

-- அது சரி, அப்பா. இப்பொழுது கால் புண் எப்படி?

-- நோவடங்கி விட்டது, என்றாலும் புண் ஆறவில்லை. புண் ஆற இன்னும் இரண்டு வாரங்களாவது பிடிக்குமாம்.

-- அப்படியா? சரி அப்பா. வேறென்ன விசேஷம்?

-- ஒன்றுமில்லை.

-- அப்போது வைக்கட்டுமா? குட் நைட் அப்பா.

-- குட் நைட். ஆனால் நில்லு. அம்மா பேசவேண்டுமாம்.

-- ஸ்ரீதர்!

-- அம்மா!

-- நாடகம் நன்றாய் இருந்ததா?

-- ஆம் அம்மா.

-- அப்படியா... அடுத்தபடி நாடகம் போட்டால் நான் எப்படியும் வருவேன். அப்பாவுக்குக் கால் சுகமில்லாததால் அவரை விட்டுவிட்டு வரமுடியவில்லை.

-- இப்போது அதற்கென்ன! நான் கோபித்துக் கொள்வேன் என்று பயமா? அப்பாவுக்குச் சுகமில்லாதிருக்கும்போது நான் அப்படிக் கோபிப்பேனோ!

-- அது சரி ஸ்ரீதர், என்ன சாப்பிட்டாய்?

-- இப்பொழுது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிற சோறும், மீனும் சுப்பையா நன்றாகச் சமைத்திருக்கிறான்.

-- காலையில் சுப்பையாவிடம் சொல்லி முட்டைக் கோப்பி குடிக்க மறக்காதே.

-- சரி அம்மா. சாப்பாட்டுக் கதை போதும். நான் என்ன குழந்தைப் பிள்ளையா.. சரி வைக்கிறேன். வைக்கட்டுமா?

தொடர் நாவல்: மனக்கண் - அத்தியாயம் 2டெலிபோனை வைத்துவிட்டு ஸ்ரீதர் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டான். பின்னர், மீண்டும் மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுப் படுக்கை அறையை நோக்கி நடந்தான். “நாடகத்துக்கு வராததற்குக் காரணம் கூறித் திருப்திப் படுத்தவா இவ்வளவு முயற்சியும்!” என்று தன்னுள் தானே கூறிக் கொண்ட அவன் “ஒரு வகையில் அவர்கள் வராததும் நல்லதுதான். இல்லாவிட்டால் பத்மா தனது தந்தையார் பரமானந்தரை எனக்கு அறிமுகம் செய்துவைப்பதில் எவ்வளவோ சிரமம் ஏற்பட்டிருக்கும். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் முன்னர் வருவதற்கு நிச்சயம் பத்மா தயங்கியிருப்பாள். அத்துடன் எனது பொய்யும் அல்லவா வெளிப்பட்டிருக்கும். இன்னும் அப்பா வந்திருந்தால் பேராசிரியர்கள் கூட இருக்கையை விட்டெழுந்து அவரை வரவேற்றிருப்பார்கள். எல்லாம் ஒரே சிக்கலாக முடிந்திருக்கும்! “கடவுள் தான் என்னைக் காப்பாற்றினார். நான் அதிர்ஷ்டசாலி” என்று எண்ணியவாறே படுக்கையில் சாய்ந்தான் அவன். வாலிபப் பருவத்தில் வாலிபர்கள் எண்ணுவது வேறு. ஒருவர் எண்ணத்தை ஒருவர் அறிய முடியாதிருப்பதனால், அவர்கள் சமாதானமாக வாழ முடிகிறது. இல்லாவிட்டால் அவர்களிடையே எத்தனை குழப்பங்கள் ஏற்படும்! நாங்கள் **** ஸ்ரீதருக்கு இவ்வளவு சந்தோஷம் என்பது தெரிந்திருந்தால் அவனது பெற்றோர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இவ்வித சிரமங்களிலிருந்து எம்மைக் காப்பாற்றவே போலும். மற்றவர்களுக்குத் தெரியாமலே சிந்திக்கும் அற்புத சக்தியை இயற்கை மனிதர்களுக்கு அளித்திருக்கிறது!

காலையில் ஸ்ரீதர் கண் விழித்தபோது சுரேஷ் “ஷேவ்” எடுத்து முகம் கழுவிப் பவுடர் போட்டுக்கொண்டிருந்தான். தலையைக் ‘கிறீம்’ போட்டு வாரிக் கண்ணாடி மேசை  முன்னால் வெறும் மேலுடன் அவன் தன்னை அழகு பார்த்துக்கொண்டிருந்ததை சிறிது நேரம் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் “சுரேஷ்! என்ன அதிகாலையில் இவ்வளவு அலங்காரம்? பெண் பார்க்கப் போகிறயா?” என்று கேட்டான்.

சுரேஷ் “நான் பெண் பார்ப்பது இருக்கட்டும். முதலில் முட்டைக் கோப்பியைக் குடி. இதோ சுப்பையா கொண்டு வந்து வைத்திருக்கிறான். நேற்று நாடகத்தில் நடித்த களைப்பிற்காக இரண்டு முட்டை போட்டு விசேஷமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உனது அம்மா நேற்று உத்தரவிட்டாளாம்” என்றான்.

ஸ்ரீதர் “என்ன அம்மாவின் உத்தரவா? சுப்பையா கனவு கண்டானா?” என்றான் ஆச்சரியத்துடன்.

“கனவில்லை. எல்லாம் உண்மையில் நடந்ததுதான். உன் அம்மா டெலிபோனில் போட்ட உத்தரவு” என்றான் சுரேஷ்.

“ஓ! டெலிபோனிலா. சரிதான். ‘டெலிகிராம்’ அடிக்காமல் விட்டாளே, அது போதும். இல்லாவிட்டால் தந்தி ஆபிஸ் கிளார்க் அதைப் பார்த்துச் சிரிக்கும்படி ஏற்பட்டிருக்குமல்லவா? “ஸ்ரீதருக்கு நாளைக் காலை இரண்டு முட்டை போட்டுக் காப்பி கொடு” என்று தந்தி வந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது? சில சமயம் தினசரிப் பத்திரிகைகளில் கூட அந்தச் **** பெண்களுக்குப் புத்தியேயில்லை. நான் என்ன குழந்தைப் பிள்ளையா? இப்படி நடத்தப்படுவதற்கு? எனக்கு இவை சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை. சலிப்பைத்தான் கொடுக்கிறது. உடனே ஒரு ‘ட்ரங்கோல்’ எடுத்து அம்மாவைக் கண்டிக்க வேண்டும் போலிருக்கிறது. நான் என்ன சொன்னாலும் அம்மா கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் இப்படியே நடந்துக் கொள்கிறாள். ஏற்கனவே நான் நூற்றைம்பது இறாத்தல் குண்டோதரன் போல் இருக்கிறேன். அம்மா சொல்லுவதெல்லாவற்றையும் சாப்பிட்டால் வயிறு வெடித்துச் செத்துவிட மாட்டேனா?” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷ், “நீ என்னவோ அப்படிச் சொல்கிறாய்? எனக்கோ எனது தாயார் அப்படித் தொல்லை கொடுக்கவில்லையே என்ற கவலை. ஆனால் அவளும் உன் அம்மாவைப் போல பணக்காரியாக இருந்தால் நிச்சயம் ‘ட்ரங்கோல்’ போட்டுப் பேசத்தான் செய்வாள்” என்றான்.

“ஏன் உனக்கு இரண்டு முட்டை போட்ட கோப்பி குடிக்க ஆசையா? அப்படியானால் சுப்பையாவிடம் சொன்னால் உடனே கொண்டு வந்துவிடுகிறான். சென்ற வாரம் தானே அம்மா நூறு முட்டைகள் அனுப்பினாள். அதில் பத்து முட்டை கூழ் முட்டையானாலும் தொண்ணூறு முட்டைகள் தேறுமல்லவா?”

“முட்டை ஆசையில் நான் பேசவில்லை. நான் ஏற்கனவே ஒரு முட்டை போட்ட கோப்பி குடித்துவிட்டேன். சுப்பையா கொண்டு வந்தான். நீ முதலில் படுக்கையை விட்டெழும்பி உன் கோப்பியைக் குடி. குடித்துக்கொண்டே பேசலாம்” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பக்கத்திலிருந்த மேசையிலிருந்த கோப்பியை எடுத்துக் குடித்துக்கொண்டே “அப்படியானால் நீ சொன்னதின் அர்த்தமென்ன?” என்று கேட்டான்.

“உன் அம்மா இரண்டு முட்டை போட்டுக் கோப்பி கொடுக்கும்படி இருநூற்றைம்பது மைலுக்கு அப்பாலிருந்து டெலிபோனில் உன் வேலைக்காரனுக்கு உத்தரவிட்டது உன் மீதுள்ள அன்பினால்லவா? உன் உள்ளத்துக்கு ஒருவித இதத்தைக் கொடுக்கவில்லையா? இருநூற்றைம்பது மைலுக்கப்பாலிருந்தாலும் அவள் உள்ளமும் உன் உள்ளமும் ஒட்டிக் கொண்டது போன்ற ஓர் உணர்வு ஏற்படவில்லையா? எனக்கு அப்படிப்பட்ட இதத்தை அனுபவிப்பதில் ஆசை. அதனால் தான் நான் அவ்வாறு சொன்னேன்” என்றான் சுரேஷ்.

“எனக்கென்னவோ ஒரு மனிதனைப் பிடித்துத் தன்னோடு சேர்ந்து அமுக்கி வைத்துக் கொள்ள முயலும் இவ்வித அன்பு இன்பத்தைத் தருவதற்குப் பதிலாகப் பெரும் தொல்லையாகத் தான் படுகிறது. உனக்கும் அப்படித்தானிருக்கும் அனுபவித்துப் பார்த்தால்! ஆனால் நான் இப்படிப் பேசுவதானால் எனக்கு அம்மாவைப் பிடிக்காது என்று எண்ணி விடாதே. உண்மையில் அப்பாவை விட அம்மாமீது தான் எனக்குப் பிரியம். அப்பாவைக் கண்டால் ஒருவித மரியாதை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. மரியாதைக்கும் பயத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பயமும் அன்பும் எவ்வாறு ஒரே இடத்தில் குடிகொள்ள முடியும்?” என்று கூறிய ஸ்ரீதர் அந்த விஷயத்தை அவ்வாறு நிறுத்திவிட்டு “சுரேஷ்! நீ நாடகத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான் ஆர்வத்துடன்.

“அதுதான் நேற்றிரவே சொல்லிவிட்டேனே! அற்புதம்! இதோ காலைப் பத்திரிகை என்ன சொல்கிறது பார்” என்று கொண்டே மேசையிலிருந்த பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு ஸ்ரீதரின் கட்டிலில் அமர்ந்தான் சுரேஷ்.

*எடிப்பஸ்  பல்கலைக்கழக மாணவர்களின் வெற்றி நாடகம் என்ற ஐந்து ‘கலம்’ தலைப்புடன் விரிவான விமர்சனம் வெளியாகிருந்தது பத்திரிகையில். எடிப்பஸாக நடித்த ஸ்ரீதரின் படமும் ** ராணியாக நடித்த நடிகையின் படமும் விமர்சனத்தோடு வெளியிடப்பட்டிருந்தன. ஸ்ரீதருக்குத் தலைகால் தெரியாத இன்பம், விறுவிறுவென்று வாசிக்க ஆரம்பித்தான்.

விமர்சனத்தில் ஸ்ரீதருக்கே முதலிடம் தரப்பட்டிருந்தது. “கண்மணிகளை ஈட்டியால் பல முறை குத்திக் குத்தி அலறி நிற்கும் கட்டத்தில் எடிப்பஸாக நடித்த ஸ்ரீதர் என்ற மாணவர் புகழ்பெற்ற உலகப் பெரும் நடிகர்களுக்குச் சமமாக நடித்தார்” என்று கூறியிருந்தான் விமர்சகன். ஸ்ரீதர் முகம் புன்னகையால் மலர்ந்தது “சுரேஷ்! பார்த்தாயா? என் நடிப்பைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.

“மீண்டும் மீண்டும் உன் முகத்துக்கு முன்னே உன்னைப் புகழ என்னால் முடியாது. ஏன், நான் புகழ்ந்து கூறுவது உனக்கு அவ்வளவு இனிப்பாயிருக்கிறதோ? எத்தனை தடவை அற்புதம், அபாரம் என்று சொல்லிக்கொண்டிருப்பது?” என்றான் சுரேஷ்.

அதைக் கேட்டுவிட்டு மகிழ்ச்சியால் துள்ளும் மனதோடு விமர்சனத்தை மூன்று நான்கு தடவை வாசித்துவிட்டான் ஸ்ரீதர்.

காலைச் சாப்பாட்டு மேசையில் ஸ்ரீதர் சுரேஷிடம் தான் இரவு கேட்கத் தீர்மானித்திருந்த கேள்வியைக் கேட்டான்: “சுரேஷ்! நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நான் யார் என்பது பற்றிப் பத்மாவிடம் பொய் கூறியிருக்கிறேனல்லவா? என்றைக்கோ உண்மை வெளியாகும்போது அவள் என்னைப் பொய்யன் என்பதற்காக வெறுத்தொதுக்கக் கூடுமல்லவா? அதைத் தடுப்பது எப்படி, சுரேஷ்?”

அதற்குச் சுரேஷ் “ஸ்ரீதர்! தனது காதலைப் பெறுவதற்காக ஒரு நல்ல மனிதன் பொய்யனாய் மாறினான் என்பதற்காக எந்தப் பெண்ணும் ஓர் ஆணை வெறுக்க மாட்டான். உண்மையில் அது அவன் மீது அவளுக்குள்ள காதலை அதிகரிக்கவும் செய்யும். ‘என்னை அடைவதற்காகத் தானே அவர் அவ்வாறு பொய் சொன்னார்? அது அவர் என் மீது கொண்ட ஆசையை அல்லவா காட்டுகிறது?” என்று தான் அவள் யோசிப்பாள். இப்படிப் பட்ட விஷயங்களில் சொல்லப்படும் பொய் பொய்யல்ல. அரிச்சந்திரன் கூட இப்படிப்பட்ட பொய்களைப் பேசி இருக்கலாம்” என்றான். பின்னர் ஒரு கேள்வியையும் தூக்கிப் போட்டான் சுரேஷ்: “ஸ்ரீதர் உன் பேச்சிலிருந்து எனக்கொரு விஷயம் தெரிகிறது. பத்மாவுக்கும் உனக்குமுள்ள தொடர்பு மேலும் மேலும் முற்றி வருகிறது என்பதே அது. அது உண்மையல்லவா?”

“ஆம் சுரேஷ். பத்மாவும் அவள் தந்தை பரமானந்தரும் நாடகம் முடிந்ததும் வேஷம் போடும் அறைக்கே வந்துவிட்டார்கள். என்னை இன்று பிற்பகல் தங்கள் வீட்டிற்கு வரும் படியும் அழைத்திருக்கிறார்கள். போகலாமென்றுக்கிறேன். இதில் ஒரு ருசிகரமான விஷயமென்றால் பத்மாவின் தகப்பனாரும் என்னைப்போல் இளமையில் நாடகங்களில் நடித்திருக்கலாம்.”

“ஓ! அப்படியா விஷயம்! இன்று காலையில் விழித்துக் கொண்டதும் என்னைப் பார்த்துப் ‘பெண் பார்க்கப் போகிறாயா?’ என்று நீ கேட்டாயல்லவா? அது தப்பு. இன்று  பெண் பார்க்கப் போவது நானல்லவே, நீ அல்லவா?” என்றான் சுரேஷ் கிண்டலாக.

ஸ்ரீதர் குறுநகை புரிந்தான். “சுரேஷ், அதிருக்கட்டும். உனக்கெப்போது கல்யாணம்? நீ எப்போது பெண் பார்க்கப் போகிறாய்?” என்றான்.

அதற்குச் சுரேஷ் “எனக்கு இந்த விஷயத்தில் சுதந்திரமில்லை என்பதுதான் உனக்குத் தெரியுமா! எனது மாமா என்னை எப்போதோ விலைக்கு வாங்கி விட்டார். ஏழ்மையில் பிறந்து வாழ்க்கையில் முன்னேற விரும்பும் என் போன்றவர்களுக்கு வேறு வழி எது? ஆனால் இவற்றைச் சலிப்பின்றிப் பொறுத்துக் கொள்ள என் வகுப்பு இளைஞர்கள் எப்படியோ கற்றுக்கொள்கிறார்கள்ள்” என்றான்.

ஸ்ரீதர் “நீ பணக்கார வகுப்பினருக்கு இது விஷயத்தில் பரிபூரண சுதந்திரம் இருப்பது போலல்லவா பேசுகிறாய்! அது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. என் உண்மைப் பெயரைச் சொல்லிக் காதல் புரியதற்கே எனக்கு வாய்ப்பில்லை என்பது உனக்குத் தெரிகிறதல்லவா? பல மத்தியதர வகுப்பினருக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே! பல்கலைக்கழகத்திலேயே பல மத்திய வகுப்புக் காதல் ஜோடிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு எவ்வளவு பொறாமை ஏற்படுகிறது தெரியுமா?” என்றான்.

சுரேஷ், ஸ்ரீதரின் வார்த்தைகளை அங்கீகரிப்பது போல் சிந்தனையுடன் தலையால் சமிக்ஞை செய்து கொண்டே மேசையை விட்டெழுந்தான். “இவை எல்லாம் இன்றைய சமுதாய அமைப்பின் கோளாறு!” என்று கூறிவிட்டு, அவன் போக ஸ்ரீதரின் மனமோ வேறு திசையில் திரும்பியது. பின்னே பத்மா வீட்டுக்குப் போவது பற்றிய பிரச்சினைகளை ஆராய ஆரம்பித்ததுதான் ஸ்ரீதர். எதை உடுத்துவது, பரமானந்தர் முன்னிலையில் எவ்வாறு நடந்து கொள்வது, பத்மாவுக்குச் சொன்ன பொய்யைப் பரமானந்தருக்கும் சொல்லுவதா, பொய்யைச் சொல்லும் போது நாக்குக் கூசுகிறதே, அதை எப்படிச் சமாளிப்பது என்பன போன்ற பல கேள்விகளுக்கு அவன் விடை காண வேண்டியிருந்தது. உண்மையில் சின்ன விஷயங்கள் போல் தோன்றும் இவை மனிதர்களின் மனதை எவ்வளவு தூரம் அலைக்கழித்து விடுகின்றன! பார்க்கப் போனால் சின்ன விஷயங்கள் என்று எதுவுமே உலகில் இல்லை. ஒருவர் மனதைப் பாதிக்கும் எந்த விஷயமும் பெரிய விஷயமே!


3-ம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்

பத்மா ஒரு கண்ணாடி ‘ட்ரே’யில் ‘ஒரேஞ்பார்லி’ கொண்டு வந்து கொடுத்தான். ஸ்ரீதருக்குச் சாதாரணமாக ‘ஐஸ்’ போடப்பட்ட அல்லது [ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]

ஸ்ரீதரின் திட்டப்படி அன்று மாலை தான் அவன் பத்மா வீட்டுக்குப் போக வேண்டும். அநேகமாக நாலரை மணிக்குப் பிறகு போனால் போதுமானது என்று அவன் முடிவு செய்திருந்தான். எனினும், காலையிலிருந்தே அதற்குரிய வேலைகளை ஆரம்பித்துவிட்டான். அவன் இது சம்பந்தமாகச் செய்த முதல் வேலை, கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட்டில் 48/17ம் இலக்க வீடு எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்ததாகும். உண்மையில் ஸ்ரீதருக்கு அன்று இருப்பே கொள்ளவில்லை. பத்மா வீட்டுக்கு முதன் முதலாகப் போகப் போகிறோம். அவளுக்கும் தனக்குமுள்ள தொடர்புகள் இதன் மூலம் மேலும் வலுவடையும் என்ற எண்ணம், அவனுக்குப் பத்மா வீட்டுக்குச் செல்வதில் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணியது.

இருந்த போதிலும், அவன் மனதில் ஒரு பயமும் தயக்கமும் ஏற்படவே செய்தன. பரமானந்தர் முன்னால் நான் எப்படி நடந்து கொள்வது, என்ன பேசுவது, அவரது முன்னிலையில் தன்னம்பிக்கையுடன் தன்னால் நடந்து கொள்ள முடியுமா? ஒரு வேளை அவர் முன்னால் திக்கித் தடுமாறிப் பரிகசிக்கத் தக்க முறையில்  நான் நடந்து கொள்வேனோ என்பது போன்ற இளமைக்குரிய இயல்பான அச்சங்கள் பலவும் அவனிடத்தே தோன்றின. ஆனால் நாடக தினத்தன்று பரமானந்தர் திரைக்குப் பின்னால் வந்து தன்னுடன் பேசிய தோரணையை நினைவு படுத்திக் கொண்டதும், இந்த அச்சங்களில் பாதி மறைந்தது. சற்றேறக் குறைய அறுபது வயது போல் தோன்றிய பரமானந்தர், உயரம் பருமனில் அவனது தந்தை சிவநேசரை ஓரளவு ஞாபகமூட்டினார். ஆனால் சிவநேசரோ நல்ல சிவப்பு. பரமானந்தரோ பத்மாவைப் போலில்லாமல் சிறிது கறுப்பாக இருந்தார். மேலும், சிவநேசர் எப்பொழுதும் தன்னுடைய அந்தஸ்தில் அக்கறை கொண்டவராக, காற்சட்டையும், “குளோஸ் கோட்டும்” தலைப்பாகையும் அணிந்திருப்பார். அத்துடன் செல்வத்தின் பூரிப்பும் பொலிவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வித கர்வமும் அவர் முகத்தில் என்றும் கதிர் வீசிக்கொண்டிருக்கும். பரமானந்தரோ சாதாரண வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து, அதற்கு மேல் ஒரு “டசூர்” கோட்டும் அணிந்திருப்பார். சட்டையை கழுத்து வரை மூடி ஒரு பித்தளைப் பொத்தானை அணிவதும் அவரது வழக்கமாகும். அவரது முகத்தில் ஒருவித அடக்கமும் அமைதியும் குடிகொண்டிருந்தன.

நாடக தினத்தன்று பரமானந்தர் ஸ்ரீதருடன் பேசியது, ஒரு கனவான் தனக்குச் சமமான இன்னொரு கனவானுடன் எப்படிப் பேசுவானோ அப்படித் தான். அது அவரிடம் அவனுக்கு அநாவசியமான பயத்தையோ, அல்லது அவ்வித பயத்துக்குத் தூண்டுகோலாக விளங்கும் அளவுக்கு மீறிய மரியாதை உணர்ச்சியையோ ஏற்படது தடுத்த போதிலும், இன்று “நான் காதலிக்கும் பெண்ணின் அப்பா, எல்லாம் சரியாக நடந்து முன்னேறினால் தன் மாமனாகப் போகிறவர்” என்ற எண்ணம் அவன் சிந்தனை ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் அவனை அறியாமலே ஒரு திரை போலத் தொங்கிக் கொண்டிருந்ததால், அவர் மீது ஒரு வித பயம் அவனுக்கு ஏற்படவே செய்தது. “பரமானந்தர் நாடகத்தை விரும்பியது உண்மைதான். என்னை மெச்சியதும் உண்மைதான். பத்மாவுடன் நான் ஓரளவு பழகுவதைப் பார்த்தும் பாராதவர் போலிருப்பதும் உண்மைதான். இருந்தாலும் நான் அவளைக் காதலிப்பதை விரும்புவாரா? என்ன நான் கலையார்வமுள்ளவராக இருந்தாலும் ‘காதலித்து மணம் புரிதல்’ என்ற பிரச்சினையில் அவர் முற்றிலும் பழைய கொள்கை பூண்டவராகவிருக்கலாமல்லவா? ஏன்? “நாடகத்திற் காவியத்திற் காதலென்றால் நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாமென்பர். வீடகத்தில் கிணற்றோரத்தே, வயலருகே காதலென்றால், பாடை கட்டி அதை ஒழிக்க வழி செய்கின்றாரே, இவரும் அப்படிப்பட்டவரல்லர் என்பது என்ன நிச்சயம்! கடவுளே, மாரியம்மா, அவர் அவ்வாறில்லாமலிருக்க நீதான் உதவி புரிய வேண்டும்,” என்று பலவாறு சிந்தித்தான் ஸ்ரீதர்.

ஆனால் ஸ்ரீதரின் பதற்றம் அத்துடன் நிற்கவில்லை. தனது உண்மையான அந்தஸ்தை மறைக்க அவன் நடத்திக் கொண்டிருந்த ஆள் மாறாட்ட நாடகமும் அவனுடைய உள்ளத்தை ஈட்டி  போல் உறுத்திக் கொண்டே இருந்தது. இருந்த போதிலும் ஓர் இளைஞனது உள்ளத்துக்குக் காதல் என்ற பேருணர்ச்சி கொடுக்கும் தைரியத்தை யாரே அளக்கவல்லார்? ஒரு கன்னிக்காக இவ்வுலகில் காதலர்கள் எதை எதை எல்லாம் செயாத் தயாரவிருக்கிறார்கள்? காதலுக்காக உயிரையே பணயம் வைப்பவர்கள் எத்தனை பேர்? இன்று கூடப் பத்திரிகைகளில், அப்படிப்பட்டவர்களின் செய்தி வரத்தானே செய்கிறது? காதலின் வயப்பட்ட ஸ்ரீதரும் தன் பயங்களை எதிர்த்துப் போராடி ‘எடுத்த காரியத்தை எப்படியும் முடித்தே தீருவேன், பின் நிற்கப் போவதில்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

ஸ்ரீதர் காலை பத்தரை மணியளவில் தனது காரைத் தானே ஓட்டிக் கொண்டு கொட்டாஞ்சேனை ‘கொலீஜ் ரோட்’டைக் கண்டு பிடிப்பதற்குச் சென்றான். அவன் கொழும்பிலே நீண்ட காலமாக வசித்தபோதிலும் நகரின் இந்தப் பகுதியில் அவன் நடமாடியதேயில்லை. ஓரொரு சமயம் தனது தாயார் கொழும்புக்கு வரும் நேரங்களில் அவளது நச்சரிப்புத் தாங்காமல் அவளுடன் கொட்டாஞ்சேனையிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அவன் போயிருப்பது உண்மைதான். இருந்தாலும் கொட்டாஞ்சேனையில் அந்தக் கோயிலை விட வேறு எதுவுமே அவனுக்குத் தெரியாது. இன்று முதன் முதலாகக்  காரை அதிக வேகமின்றி அவன் கொலீஜ் ரோட் வழியாக ஓட்டிச் சென்றபோது, தான் வசித்த ஹோர்ட்டன் பிளேசுக்கும் இந்த வீதிக்கும் இருந்த பெரிய வித்தியாசத்தை அவன் கவனித்தான். அகன்று விரிந்து பச்சைப் பசேலென்ற நிழல் மரங்களுடனும், இருபுறத்திலும் பெரிய மாளிகைகளுடனும் விளங்கிய ஹோர்ட்டன் பிளேஸ் அருகே, ஒடுங்கிய ஒழுங்கை போல் விளங்கிய இந்தச் சிறிய வீதி எங்கே? குப்பையும் கூளமும் சிறிய தட்டிக் கடைகளுமாக விளங்கிய அந்த வீதியில் ஒரு சிறிய வீட்டுப் ‘பேலி’யே 48ம் நம்பர் ‘தோட்டம்’. தோட்டம் என்றதும் பயிர்ச் செய்கை நடக்கும் தோட்டமென்றோ எண்ணிவிட வேண்டாம். சின்னஞ் சிறு வீடுகள் ஒன்றோடென்று சங்கிலித் தொடர் போல் இணைந்திருக்கும் இருப்பிட வரிசைக்கேகொழும்பில் “தோட்டம்” என்று பெயர். 48ம் நம்பர் வீட்டு வரிசையில் ஒரு புறச் சுவரில் கறுப்பு மையினால் ஒரு வட்டமிடப்பட்டு, அதற்கு நடுவில் 48 என்ற இலக்கம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. “இதில் பன்னிரண்டாவது வீட்டிலே தான் எனது பத்மா வசிக்கிறாள்” என்று தனக்குள் தானே கூறிக் கொண்ட ஸ்ரீதர் தனக்கும் பத்மாவுக்கும் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பற்றியும் சிந்திக்காமல் இல்லை. மாமன்னனாகிய துஷ்யந்தனுக்கும் ஆசிரமத்துப் பெண் சகுந்தலைக்கும் ஏற்பட்ட காதலும், இலங்கை மன்னன் துட்ட கைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும்  பஞ்சம குலப் பெண் அசோக மாலாவுக்கும் ஏற்பட்ட காதலும் அவனுக்கு நினைவு வந்தன. “அவர்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வுடன் ஒப்பிடும்போது, எனக்கும் பத்மாவுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வு எம்மாத்திரம்? அதனைச் சமாளிப்பது அவ்வளவு கடினமாயிருக்க முடியாது. மேலும், நான் அவளை உண்மையாகவே நேசிக்கிறேன். அவளும் என்னை நேசிக்கிறாள். இந்த நிலையில் இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் தவிடு பொடியாவது நிச்சயம்,” என்று சிந்தித்தவாறே வீட்டை நோக்கிக் காரை ஒட்டினான் ஸ்ரீதர்.

அன்று மாலை ஸ்ரீதர் பத்மா வீட்டுக்கு வந்தபோது சற்றேறக்குறைய ஐந்து மணியிருக்கும். ஹோர்ட்டன் பிளேசிலிருந்து கொட்டாஞ்சேனைக்குக் காரிலேயே வந்திருந்தபோதிலும், காரை 48ம் இலக்கத் தோட்டத்துக்குச் சற்றேறக் குறையக் கால் மைல் தூரத்திலே வீதியின் ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, பஸ்ஸிலிருந்து இறங்கி வரும் பாவனையிலேயே ஸ்ரீதர் பத்மா வீட்டுக்கு வந்தான். எங்கே பள பளவென்று விளங்கிய தனது பெரிய காரைக் கண்டதும், அவர்கள் தனது அந்தஸ்தை நினைத்து மிரண்டு விடுவார்களோ என்ற அச்சம் அவனுக்கு. அவ்வாறு நிகழ்ந்தால் அவன் தன் அருமைப் பத்மாவை இழக்க நேரிடுமல்லவா? கார் விஷயத்தில் மட்டுமல்ல, உடை விஷயத்தில் கூட அவன் இத்தகைய விபத்து ஏற்படக் கூடாது என்று கருதி, மிகவும் அடக்கமாகவே உடுத்தி வந்தான். ஒரு மத்திய தர வாத்தியார் வீட்டுப் பெண்ணைக் காதலிக்கும் வாலிபன் எவ்வாறு உடுத்தி வருவான் என்பதைத் தனக்குத் தெரிந்த அளவில் யூகித்து அதற்கேற்றவாறு உடுத்தியிருந்தான் அவன். ஆனால் என்ன செய்தாலும் அரசகுமாரன் போன்ற தனது தோற்றப் பொலிவை மட்டும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பத்மாவும் பரமானந்தரும் ஸ்ரீதரை நாலு மணியிலிருந்தே எதிர்பார்த்திருந்தார்கள். உண்மையில் ஸ்ரீதரைப் போலவே பத்மாவும் அன்று காலையிலிருந்தே அதிக பரபரப்படைந்திருந்தாள். காதலன் முதன் முறையாகத் தன் வீட்டுக்கு வரும்பொழுது, எந்தப் பெண்ணுக்குத்தான் அவ்வித பரபரப்பேற்படாது! ஸ்ரீதர் வீட்டுக்கு வரும்போது வீடு மிகவும் சுத்தமாயிருக்க வேண்டுமென்பது அவளது எண்ணம். அதற்காக இரண்டு மூன்று தடவைகள் வீட்டைத் தும்புக்கட்டையால் பெருக்கிச் சுத்தம் செய்து விட்டாள் அவள். உண்மையில் ஸ்ரீதர் வருவதற்கு

இரண்டு நிமிஷங்களுக்கு முன்னால் தான் அவள் வீட்டைக் கடைசி முறையாகப் பெருக்கிவிட்டு, வாசலுக்கு வந்து வீதிப்புறத்தில் கண்ணை எறிந்து ஒரு தடவை பார்த்துவிட்டு உள்ளே சென்றான். உள்ளே சென்று மேசையிலிருந்த புத்தகங்களை ஒன்பதாவது தடவையாக அவள் அடுக்குவதற்கும், ஸ்ரீதரின் முகம் வாசலில் தோன்றுவதற்கும் சரியாக இருந்தது.

பரமானந்தர் “ஓ, ஸ்ரீதரா, வா தம்பி. இதோ இந்நாற்காலியில் உட்கார்” என்று வரவேற்றார். ஸ்ரீதரும் முகமலர்ந்து புன்னகை செய்து கொண்டே, நாற்காலியில் உட்கார்ந்தான்.

பரமானந்தர் “ஸ்ரீதர்! உங்கள் வீட்டைக் கண்டு பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாயா?” என்று கேட்டார். “இல்லையே. கையில் வீட்டின் இலக்கம் இருந்ததால் எவ்வித கஷ்டமுமின்றியே வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்றான் ஸ்ரீதர்.

அதன் பின் அதையும் இதையும் பற்றி இருவரும் உரையாட ஆரம்பித்தார்கள். பரமானந்தர் தனது அலுமாரியைத் திறந்து, பழைய ‘போட்டோ ஆல்பம்’ ஒன்றை எடுத்து வந்தார். அதில் அவர் இளமையில் நடித்த பல நாடகக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று அரிச்சந்திரன் நாடகக் காட்சி. பரமானந்தர் மயானத்தைக் காக்கும் வெட்டியான் வேஷத்தில் கம்பீரமாகக் காட்சியளித்தார்.

இன்னொன்று நல்லதங்காள் நாடகக் காட்சி. அதில் பரமானந்தர் நல்லதங்காளாகப் பெண் வேஷத்தில் காட்சியளித்தார். ஸ்ரீதரும் பரமானந்தரும் நாடகங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டார்கள். அரிச்சந்திர விலாசத்தில் தனக்கு ஞாபகத்திலிருந்த சில தருக்களைப் பாடிக் காட்டினார் பரமானந்தர். ஸ்ரீதர் அவற்றை இரசித்தானோ இல்லையோ, பத்மாவை முன்னிட்டு அவற்றை மிகவும் இரசிப்பது போல் பாவனை காட்ட மட்டும் பின் நிற்கவில்லை. பத்மாவுக்கோ தந்தையின் கர்நாடக மெட்டுகள் சிரிப்பை ஊட்டின.

பத்மா ஒரு கண்ணாடி ‘ட்ரே’யில் ‘ஒரேஞ்பார்லி’ கொண்டு வந்து கொடுத்தான். ஸ்ரீதருக்குச் சாதாரணமாக ‘ஐஸ்’ போடப்பட்ட அல்லது குளிர்ப்பெட்டியில் நன்கு குளிர்ப்படுத்தப்பட்ட குளிர்பானங்களைத் தான் குடித்துப் பழக்கம். எனவே பத்மா கொண்டு வந்து குளிர்ப்படுத்தப்படாத பானத்தை அவனால் குடிக்க முடியவில்லை. இருந்தாலும் அவளைத் திருப்திப்படுத்துவதற்காக, அவன் அதைக் குடிக்கும்படியேயாயிற்று.

பரமானந்தர் பேச்சு இப்போது வேறு திசையில் சென்றது.

“தம்பி! நீர் யாழ்ப்பாணத்தைல் எந்த ஊரைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார் அவர்.

“உடுவில்” என்றான் ஸ்ரீதர்.

பச்சைப் பொய்!

“உங்கள் அப்பா என்ன தொழில் தம்பி!”

“உபாத்தியாயர். இளைப்பாறியிருக்கிறார்” என்றான் ஸ்ரீதர்.

அதுவும் பொய்!

ஒரு பொய்யைச் சொல்லிவிட்டால், பின்னால் அதற்கு உண்மையின் வலுவை ஏற்படுத்த இன்னும் எத்தனை பொய்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது!

“அப்படியா? அவரும் என்னைப்போல உபாத்தியாயர் தானா?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் பரமானந்தர். பின்னர் தான் மானிப்பாயைச் சேர்ந்தவர் என்றும், வாலிப வயதில் வேலை கிடைக்காததால் கிறிஸ்தவராக மதம் மாறிக் கொழும்பில் ஒரு பாடசாலையில் உபாத்தியாயராக வேலைக்கமர்ந்ததாகவும், பின்னால் பழையபடி இந்துவாகிவிட்டதாகவும் கூறினார் அவர்.

“தம்பி! நான் கிறிஸ்தவனாக மாறியது உண்மையில் தவறுதான். இன்னும் அது என் மனதை உறுத்துகிறது. ஆனாலும் வேலை கிடைக்காத பலர் உபாத்திமைத் தொழிலுக்காக அன்று அவ்வாறு மதம் மாறினார்கள். ஆனால் இவ்விதம் பொருளாதாரக் காரணத்துக்காக மதம் மாறியவர்கள் ஒரு பொழுதும் உண்மைக் கிறிஸ்தவர்களானதில்லை. சந்தர்ப்பம் கிடைத்ததும் பழையபடி இந்துவாகி விடுகிறார்கள். இதுவே என் விஷயமும்” என்றார் பரமானந்தர்.

பின்னர் மதம் மாறியதனால் தனக்கேற்பட்டால் கஷ்டங்களை எடுத்துக் கூறினார் அவர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்ததும் தன்னைத் தனது உறவினர்கள் எல்லோரும் விலக்கி விட்டார்களென்றும் மதிப்புக் குறைவாக நடந்த ஆரம்பித்தனரென்றும் கூறினார் பரமானந்தர் “இதனால் இன்று பெயரளவில்தான் நான் மானிப்பாய்க்காரன். நான் திருமணம் செய்த என் மனைவி- பத்மாவின் தாய் ஒரு கிறிஸ்தவ அனாதை நிலயத்தில் வளர்க்கப்பட்டவள். பத்மாவுக்குப் பதினைந்து வயதாயிருக்கும்போதே அவள் இறந்து விட்டாள்” என்று தன் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார் அவர்.

முடிவாக “இன்று எனக்கு வரும் பென்ஷன் மிகக் குறைவானதுதான். இருந்தாலும் சில பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். பென்ஷனும் பிள்ளைகள் கொடுக்கும் சம்பளமும் சேர்ந்து ஒருவாறு வாழிக்கையை ஓட்ட உதவுகின்றன. என்னுடைய நல்ல காலத்துக்கு ஆண்டவன் கிருபையால் இருபத்தைந்து ரூபாவுக்கு இந்த வீடு கிடைத்திருக்கிறது. வசதியான வீடுதான். ஒரு குறைவுமில்லை. பத்மா பீ.ஏ.பாஸ் பண்ணி எங்கேயாவது வாத்தியாராக அமர்ந்துவிட்டால், எல்லாக் கஷ்டங்களும் பறந்துவிடும் என்று மேலும் பேசினார் பரமானந்தர்.

ஸ்ரீதருக்கு அவர் பேச்சு சில சமயங்களில் விநோதமாக இருந்தது. தாம் வாழும் அந்த சின்ன வீட்டை அவர் வசதியான வீடு என்று வர்ணித்த போது அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. இருந்தாலும், பண்புள்ளவனாதலால் எவ்வித மெய்ப்பாட்டையும் காட்டாமல் வீட்டை மேலும் கீழும் பார்த்தான் அவன். மின்சார வெளிச்சமில்லை. கூரை சுத்தம் செய்யப்படாது, அங்குமிங்கும் ஒட்டடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. சுவர் பல இடங்களில் இடித்து காரை போயிருந்தது. அவன் அவற்றைப் பார்த்த விதத்தை நோக்கிய பரமானந்தர் அந்தப் பார்வைக்குத் தனக்குத் தெரிந்த அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டு, “ஸ்ரீதர்! என்ன யோசிக்கிறாய்? லைட் இல்லை என்றா? ஆம். உண்மையில் அது எந்த வீட்டுக்கு ஒரு குறைதான். முக்கியமாகப் பத்மாவுக்கு இரவில் படிப்பதற்கு அது ஒரு தடைதான். ஆனால், நான் அக்குறையை நிவர்த்தி செய்துவிட்டேன். ‘பெட்ரோமாக்ஸ் லாம்பொ’ன்று அவளுக்காகவே வாங்கியிருக்கிறேன். அதன் விலை எழுபத்தைந்து ரூபா” என்றார்.

ஸ்ரீதருக்கு அவர் விலை கூறிய விதம் விசித்திரமாயிருந்தது. தனது தந்தை சிவநேசர் பத்தாயிரம் ரூபாய் பொருளைப் பற்றிப் பேசும்போது கூட “பத்தாயிரம் ரூபா தான்” என்று மிகவும் அலட்சியமாகப் பேசுவதை அவன் கேட்டிருக்கிறான். ஆனால் பரமானந்தரோ உலகத்துச் செல்வம் எல்லாவற்றையும் கொடுத்து, அந்த லாம்பை வாங்கியவர் போலல்லவா பேசுகிறார் என்று அவன் ஆச்சரியப்பட்டான்!

பத்மா வீட்டுக்கு ஸ்ரீதர் விஜயம் செய்த முதலாம் நாள் சம்பவங்கள் இவ்வளவுதான். வீட்டைவிட்டுக் கிளம்பு முன் ஸ்ரீதரிடம் பரமானந்தர், “தம்பி! இது உன் வீடு போல. விருப்பமான நேரம் இங்கு வந்து போகலாம்” என்று குறிப்பிட்டார். ஸ்ரீதரும் “சரி வருகிறேன்” என்று கூறிப் பத்மாவை நோக்கிக் கள்ளத்தனமாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் புறப்பட்டான்.

ஸ்ரீதரின் அந்தப் புன்னகையைப் பத்மா அன்று பல மணி நேரம் மறக்கவில்லை. இரவு துயிலச் சென்றபோது ஸ்ரீதரின் அப்புன்னகையைப் படுக்கைக்கும் எடுத்துச் சென்றாள் அவள். கண்ணை மூடிக்கொண்டதும் கண்ணுள் தெரிந்தது அப்புன்னகை. அதற்குப் பதில் புன்னகை செய்தவாறே நித்திரை போனாள் அவள்.

அன்றிரவு சுரேஷ் மிகவும் நேரம் கழித்தே வீடு வந்தான். ஸ்ரீதர் அவனுக்காகக் காத்திருந்து காத்திருந்து அலுத்துப் போய் விட்டான். தனது கொட்டாஞ்சேனை விஜயத்தின் வெற்றியைப் பற்றி சுரேசுக்குக் கூறி மகிழ வேண்டுமென்று அவன் விரும்பினான். ஆனால் சுரேஷ் நேரத்துக்கு வந்தால் தானே!

சுரேஷ் வீடு வந்தபொழுது இரவு பதினொரு மணியாகிவிட்டது. அவனது உறவினர் ஒருவர் வெள்ளவத்தையில் ஒரு கடை வைத்திருந்தார். அவரைக் காணப் போனதினாலேயே இத்தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதர் சுரேஷைக் கண்டதும் தன் கதை முழுவதும் அவிழ்த்துவிட்டான். அவனும் எல்லாவற்றையும் இரசித்துக் கேட்டான். காதல் கதை கேட்பதற்கு யாருக்குத்தான் ஆசையில்லை!

“ஆனால் நீ பொய்க்குப் பின் பொய்யாக அவிழ்த்துவிடுகிறாயே. ஊரின் பெயர் பொய். அப்பா பெயர் பொய். அவரது தொழில் பற்றிய தகவல் பொய். நாளைக்கு நீ முன் சொன்ன பொய்யை மறந்துவிட்டு அதற்கு முற்றிலும் மாறான தகவலைப் புதிய பொய்யாகச் சொல்லப் போகிறாய். ஜாக்கிரதை!” என்றான் சுரேஷ் கேலியாக.

ஸ்ரீதர், “நான் அவ்வளவு மடையனல்ல - நீ என்ன நினைத்தாய்! பொருத்தமான பொய் கூட எனக்குச் சொல்லத் தெரியாது என்று நினைத்தாயா, என்ன!” என்றான்.

சுரேஷ், “ஸ்ரீதர்! அந்தக் காலத்தில் அரிச்சந்திரன் போன்றவர்கள் தங்களுக்குப் பொய் சொல்லத் தெரியாது என்று சொல்வதில் பெருமையடைந்தார்கள். ஆனல் இன்று நீயோ 'எனக்கா பொய் சொல்லத் தெரியாது' என்று பெருமையோடு கேட்கிறாய். அது கிடக்கட்டும். இன்று நீ உன் தகப்பனார் பெயர் சின்னப்பா என்று கூறியிருக்கிறாய். நாளைக்கு அதை மறந்துவிட்டு வேறேதாவது பெயரைச் சொல்லிவிடாதே. உண்மையில் இந்த விவரங்களை ஒரு டயரியில் குறித்து வைத்துப் பாடமாக்கிக்கொள்” என்றான் சுரேஷ்.

“அதைச் செய்வதற்கு உன்னுடைய ஆலோசனை கிடைக்கும் வரை நான் காத்திருக்கவில்லை. இதோ பார், சுரேஷ்” என்று சொல்லிய வண்ணம் தான் மேசையில் எழுதிக் கொண்டிருந்த ஒரு காகிதத்தை எடுத்து சுரேஷிடம் நீட்டினான் ஸ்ரீதர். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது. தந்தை பெயர்: சின்னப்பபிள்ளை; தாய் பெயர் பார்வதி; ஊர்: ஊடுவில். மேசையில் இருக்கும்போது பொழுதுபோகாவிட்டால் காகிதத் துண்டுகளில் ஏதாவது கிறுக்கிக் கொண்டிருப்பது ஸ்ரீதரின் வழக்கம். அந்த வழக்கத்தின்படி அவன் கிறுக்கியிருந்த வார்த்தைகளே அவை.

சுரேஷ் மேசையில் சாப்பிட உட்கார்ந்தபோது ஸ்ரீதரும் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டான். வேலைக்காரன் சுப்பையா பால் கொண்டு வந்தான். நன்பர்கல் தூங்குவதற்குத் தயாராகும் நேரமறிந்து சூடான பால் தயாரித்துத் தருவது அவனது வழக்கம். ஸ்ரீதர் பாலைப் பருகியவாறே சுரேஷிடம் கதை கொடுக்க ஆரம்பித்தான்.

வெள்ளவத்தையில் கடை வைத்திருந்த உறவினருக்குத் தனது மாமனார் எழுதியுள்ள ஒரு கடிதத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தான் சுரேஷ். “மாமா எனது வாழ்க்கையின் மலர்ச்சிக்காகப் புதியதொரு திட்டம் வகுத்திருக்கிறார், ஸ்ரீதர். ஆனால் பார்க்கப்போனால் அது எனக்காக வகுக்கப்பட்ட திட்டமல்ல. தனது மகள் சிறப்பாக வாழ வேண்டுமென்ற விருப்பத்தில் அவர் செய்திருக்கும் ஏற்பாடு. உண்மையில் தன்மானமுள்ள மனிதன் இப்படிப்பட்ட ஏற்பாடுகளை ஏற்கக் கூடாதுதான். இவற்றின் மூலம் அவருக்கும் எனது அத்தை மகளுக்கும் எனக்குள்ள கடமைப்பாடு மேலும் அதிகரிக்கிறது. கடமைப்பாடு என்றால் என்ன? ஒரு வித அடிமைப்பாடு தானே? இருந்தாலும் என்ன செய்வது? என்னைப் போன்ற போதிய பணமில்லாதவர்களுக்கு வேறு வழி ஏது?” என்று பீடிகையுடன் ஆரம்பித்தான் அவன்.

“சரி. பீடிகை இருக்கட்டும். விஷயத்துக்கு வா. மாமாவின் திட்டமென்ன?” என்றான் ஸ்ரீதர்.

“இம்மாதம் பரீட்சை “ரிஸல்ட்” வந்ததும் நான் இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்குப் போய் வரவேண்டுமென்று விரும்புகிறார் அவர்.

அப்பொழுது எனக்குள்ள ‘டிமாண்ட்’ அதிகரிக்கும் என்பது அவரது எண்ணம். எனக்கும் அது பிரியம்தான். ஆனால் அவர் கருதும் அந்த டிமாண்டுக்காக அல்ல; என் அறிவு சிறப்படையும், சேவைத் திறனும், சமுதாய உபயோகமும் அதிகரிக்கும் என்ற காரணம்தான் எனக்கு இதில் ஆசையை ஏற்படுத்துகிறது. ஸ்ரீதர், நீ இதில் ஒரு புதுமையைப் பார்த்தாயா? என் ஆசையோ பொதுநலத்தை அடிப்படையாகக் கொண்டது. மாமாவின் ஆசையோ சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அவருடைய சேர்க்கையில்லாமல் என் பொதுநல எண்னம் எப்படி நிறைவேறும்? சமுதாயத்தில் இந்த விசித்திர நிலைமை நிலவுவதற்கு என்ன காரணம் என்று நீ நினைக்கிறாய்?” என்றான் சுரேஷ்.

“எனக்கு இவைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. நீதான் மிகப் பெரிய புஸ்தகங்களை எல்லாம் கொண்டு வந்து வாசிக்கிறாய். என்ன காரணம்? சொல் பார்ப்போம்” என்றான் ஸ்ரீதர்.

“இன்றைய சமுதாய வாழ்க்கை முழுவதுமே பணம் என்ற ஒரே மையத்தைச் சுற்றியே சுழல்கிறது. அதை ஒவ்வொருவனும் எப்படியும் அடைய வேண்டியிருக்கிறது. இந்த நியதியில் நடைபெறும் ஓர் அமைப்பிலே இப்படிப்பட்ட விசித்திரங்கள் நடந்து கொண்டேயிருக்கும்”  என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் அலுப்புடன் “நீ என்றும் போல் உன்னுடைய சோஷலிஸப் பிரச்சாரத்துக்கு வருகிறாய் போல் தெரிகிறது. சுரேஷ்! உண்மையில் என்னைப் பொறுத்தவரையில் நீ டாக்டர் வேலைக்குப் படிப்பது வீண் என்றே நான் நினைக்கிறேன். அரசியலில் நீ பல விஷயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறாய். கொலீஜில் கூட அரசியல் சங்கத்துக்கு இவ்வருடமும் நீ தானே தலைவர்! ஏன் நீ  அரசியலில் ஈடுபட நினக்கவில்லை” என்றான்.

சுரேஷ் சிரித்துக்கொண்டு, “நல்லாய்ச் சொன்னாய்! நான் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன். அதுவும் சோஷலிஸ அரசியலில் என்றால் மாமா எனது படிப்புக்குப் பணம் உதவுவார் என்று எண்ணுகிறாயா நீ! உண்மையைச் சொன்னால் ஸ்ரீதர் அரசியலில் ஈடுபடக்கூட இன்றைய சூழ்நிலையில் தன் கையில் பணம் இருக்க வேண்டும். அதற்குக் கூட நான் லாயக்கில்லை. நான் அரசியல் செய்வதென்றால் என் தாயாருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் வீட்டை விட்டு ஓடிப் போய்த்தான் அதில் ஈடுபட வேண்டும். ஆனால் உன் நிலைமை வேறு. அளவற்ற சொத்துள்ள உனது நிலையில் நான் இருந்தால் கட்டாயம் நான் அரசியலில் குதித்துத் தான் இருப்பேன்.

இன்றைய நிலையில் நான் சமுதாயத்தின் கைதி. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கைதி. குடும்ப நிலைமையால் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் ஸ்ரீதர்! உன்னைப் பொறுத்தவரையில் இன்று கூட நீ அரசியலில் ஈடுபடலாம்” என்றான்.

ஸ்ரீதர், “ஆனால் எனக்கு அரசியலில் சிறிது கூட அக்கறையில்லையே. உண்மையில் நான் எவருடனும் அரசியல் பற்றிப் பேசுவதேயில்லை. ஆனால் நீயோ சாமர்த்தியசாலி. சந்தர்ப்பமறிந்து பொருத்தமாக அரசியல் பேசுகிறாய். அதுவும் அளவறிந்து பேசுவதனால்தான் சில சமயங்களில், நான் உன்னுடன் அதைப் பற்றிப் பேசுகிறேன். மேலும் அரசியல் பற்றி என்னை விட உனக்கு எவ்வளவோ தெரியும். அதனால் உன்னுடன் பேசுவதில் எனக்கு அறிவுத் துறையில் இலாபமும் ஏற்படுகிறது. ஆனால் எனக்கு இன்றுள்ள பிரச்சினை, அரசியல் பிரச்சினயல்ல. காதல் பிரச்சினை. அது ஒன்றுதான் என் மனத்தைத் தொடுகிறது” என்றான்.

சுரேஷ், “எனக்கோ அந்தப் பிரச்சினையில்லை. என் திருமணத்தை என் மாமாவும் அம்மாவும் தீர்மானித்து விட்டார்கள். ஏன், எங்களது தமிழ்ச் சமுதாயம் என்னுடைய இத்திருமணப் பிரச்சினையைப் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே தீர்மானித்துவிட்டத் என்று கூடச் சொல்லலாம்” என்றான்.

“அது எப்படி?” என்றான் ஸ்ரீதர்.

“மச்சானை மண முடிக்க வேண்டும். அத்தை மகளைக் கட்ட வேண்டும் என்பது என்று நேற்று விதிக்கப்பட்ட சட்டமா என்ன? அச்சட்டத்துக்கு அடங்கி நடக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். பார்த்தாயா ஸ்ரீதர் இன்னொரு விசேஷத்தை? எண்ணத்தால் நான் புரட்சிக்காரன். ஆனால் செயலால் உன்னை விட அதிகமாகச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நல்ல பிரஜை நான்” என்றான் சுரேஷ், சிந்தனை தோய்ந்த புன்னகையுடன்.

ஸ்ரீதர் மனம் இப்பொழுது வேறிடத்தில் சஞ்சரித்தால் அர்த்தமில்லாமல் “ஆம்” என்ற பாவனையில் தலையை அசைத்தான். சுரேஷ் மேல்படிப்புக்காக இங்கிலாந்துக்குப் போய்விட்டால் தான் தனித்துவிட நேரிடுமே என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்து அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் அவன். தனது ஒரே நண்பன், தன் மனத்திலெழும் எல்லா எண்ணங்களையும் ஒளிவு மறைவின்றிப் பேசக் கூடியதாயிருக்கும் தன் ஒரே ஆத்ம நண்பன், தன்னை விட்டுப் பிரியப் போகிறானே என்ற எண்ணம் அவனுக்குக் கவலையை உண்டாக்கியது. ஆனால் அதை எப்படித் தடுக்க முடியும்? சுரேஷின் எதிர்கால நன்மைக்கு அவன் லண்டன் செல்வதும், அங்கு பட்டம் பெற்றுத் திரும்புவதும் அவசியம். ஆகவே, மனதிலெழுந்த கவலை எண்ணங்களைத் தன்னாலியன்ற அளவு அகற்றிக் கொண்டு சுரேஷ¤க்கு, அவன் திட்டங்களெல்லாம் வெற்றியடைய வேண்டுமென்று வாழ்த்துரை வழங்கினான் ஸ்ரீதர்.

சுரேஷ் பதிலுக்கு “அவை கிடக்கட்டும் ஸ்ரீதர். நான் உன்னிடம் ஒரு வேண்டுகோள் செய்ய விரும்புகிறேன். நான் எங்கிருந்தாலும் உன் திருமண அழைப்பை மட்டும் அனுப்ப மறந்துவிடாதே முடியுமானால் பத்மா - ஸ்ரீதர் திருமணத்தைப் பக்கத்திலிருந்து பார்க்க நான் வந்தே தீருவேன்” என்றான்.

ஸ்ரீதர், “சுரேஷ்! நீ கேட்டா நான் என் திருமண அழைப்பை உனக்கு அனுப்புவது? நீ செவ்வாய்க் கிரகத்துக்குப் போய் அங்கே குடியிருந்தாலும் எனது அஞ்சல் உன்னைக் கட்டாயம் அங்கே தேடி வரும். அது போக, நீ என் பத்மாவை ஒரு தடவையாவது நேரில் பார்த்ததில்லையல்லவா? நிச்சயம் நீ லண்டன் போகு முன் உன்னை நான் அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்” என்றான்.

சுரேஷ், “என்ன? நான் பத்மாவைப் பார்க்கவில்லையா? அதை நீ, அவ்வளவு நிச்சயமாக எப்படிச் சொல்ல முடியும்? நான் பத்மாவை நன்றாகப் பார்த்திருக்கிறேன்” என்றான் விஷமச் சிரிப்போடு, சாப்பிட்ட கையை மேசையிலிருந்த கண்ணாடி நீர்க்குவளையுள் கழுவிக் கொண்டே.

“பொய் சொல்லாதே, நீ பத்மாவைப் பார்த்ததேயில்லை” என்றான் ஸ்ரீதர்.

“பார்த்திருக்கிறேன் அவளை வர்ணிக்கட்டுமா?”

“வர்ணி பார்ப்போம்.”

“மிகவும் அழகாயிருப்பாள். ஆனால் ஸ்ரீதர் எனது வர்ணனை உனக்குக் கோப மூட்டக் கூடும். ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன்..”

“இல்லை. நான் கோபிக்க மாட்டேன், வர்ணி.”

“ஆனால் அவள் உடம்பின் அழகை விடப் பேச்சின் அழகு தான் யாரையும் கவரும். இன்னும் அவள் நடை இருக்கிறதே. அதுதான் அவளின் சிறப்பு வாய்ந்த அம்சம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலானவை அவளது உடைகள். தனது தோற்றத்துக்கு ஏற்ற வர்ணங்களைத் தெரிந்தெடுப்பதில் வேறேந்தப் பெண்ணுமே அவளுக்கு நிகராக முடியாது. ஸ்ரீதர், எப்படி என் வர்ணனை? நான் சொல்வது முற்றிலும் சரி தானே?”

"முற்றிலும் சரி. நன்றாக நேரில் பார்த்தவனால் தான் இவ்வளவு சரியாக அவளை வர்ணிக்க முடியும். சுரேஷ், நீ பத்மாவை எங்கே பார்த்தாய், எப்பொழுது பார்த்தாய்?”

சுரேஷ் கல கலவென்று சிரித்துவிட்டு “ஸ்ரீதர் நீ ஓர் அப்பாவி. ஒரு காதலன் கண்ணுக்கு ஒரு பெண் இப்படித் தோன்றாமல் வேறு எப்படித் தோன்றுவாள்? ஆகவே வெறுமனே வாய்ப்பந்தல் போட்டேன். நீயோ ஏமாந்துவிட்டாய்!” என்றான்.

“இல்லை நீ போய் சொல்லுகிறாய். நீ அவளை எங்கோ பார்த்திருக்கிறாய்” என்று அழுத்துமாகச் சொன்னான் ஸ்ரீதர்.

சுரேஷ், “ஸ்ரீதர்! உன் போக்கே விசித்திரமாயிருக்கிறது. சற்று முன் தான் நான் அவளைப் பார்த்ததே இல்லை என்று அடம் பிடித்தாய். இப்பொழுதோ “இல்லை, இல்லை அவளைப் பார்த்துத்தான் இருக்கிறாய்!” என்று பிடிவாதம் செய்கிறாய், நல்ல ஆளப்பா நீ” என்றான்.

ஸ்ரீதர் “அது எப்படி என்றாலும் நீ அவளைப் பார்த்ததும் உன் வர்ணனை கொஞ்சம் கூடத் தவறில்லை என்பதை உணர்ந்து கொள்வாய். இருந்து பார்!” என்றான்.

இவ்வாறு நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, சுவரில் மாட்டியிருந்த அலங்கார மணிக்கூடு இன்னிசையொழுக, ‘டாங் டாங்’ என்று பன்னிரண்டு முறை மணி அடித்தோய்ந்தது.

அது பாதி வழி அடித்துக் கொண்டிருக்கும் போதே சுரேஷ் எழுந்தான். “நேரமாகிவிட்டது. தூங்குவோம்” என்றான் கொட்டாவி விட்டுக்கொண்டே.

இவை நடந்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளே ஸ்ரீதர் பத்மா வீட்டுக்கு ஐந்து தடவைகள் போய்விட்டான். பரமானந்தர் வாழ்க்கையில் பழுத்த அனுபவசாலியானதால் கிழவனான தன்னுடன் நாடகங்களைப் பற்றிப் பேசுவதற்காக மட்டுமே ஸ்ரீதர் கொட்டாஞ்சேனைக்கு வரவில்லை என்பதைத் தெற்றத் தெளிவாக அறிந்து கொண்டார். நாடகக் கலையை விடப் பல்கலைக் கழக நாடக இணைக் காரியதரிசிபத்மாதான் இளைஞனான ஸ்ரீதரைக் கொட்டாஞ்சேனைக்கு இழுக்கிறாள் என்பது அவருக்கு நன்கு தெரிந்துவிட்டது.  இருந்தாலும், ஒன்றும் அறியாதவர் போலவே அவர் நடந்து கொண்டார். உண்மையில், அவருடைய உள்ளத்தில் ஸ்ரீதர் மீது ஓரளவு பிரியமும் மதிப்பும் ஏற்பட்டிருந்ததால், பத்மாவுக்கு அவனை மாப்பிள்ளையாக்குவதில் அவருக்கும் அதிக ஆர்வம் ஏற்படவே செய்தது. “பத்மா வாத்தியார் மகள். அவனும் வாத்தியார் மகள். ஆகவே ஸ்ரீதர் எந்த விதத்திலும் எம்மிலும் அந்தஸ்துக் குறைந்தவனல்லன். ஆளும் அழகாயிருக்கிறான். பத்மா அதிர்ஷ்டசாலி அதனால் தான் அவனுடைய தொடர்பு அவளுக்கு ஏற்பட்டது” என்று கூட அவர் சிந்திக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் விஷ்யத்தைச் சுற்றி வளைப்பானேன் என்று எண்ணிய அவர் ஒரு நாள் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு பத்மாவிடம் நேரே விஷயத்தைப் பிரஸ்தாபித்து விட்டார்.

“பத்மா! இங்கே வா. உட்கார். உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்” என்றார் பரமானந்தர் -

“என்னப்பா?” என்று கொண்டே உட்கார்ந்தாள் பத்மா.

“உனக்கு இப்பொழுது வயதாகிவிட்டது. உன் அம்மா இந்த வயதில் கல்யாணம் செய்து உன்னையும் பெற்றுவிட்டாள். . நீயும் திருமணம் செய்ய வேண்டியவள்தானே? நேற்று எனது பழைய நண்பன் ஒருவன் ஒரு நல்ல இடத்து மாப்பிள்ளையை உனக்குப் பேசி வந்தான். நான் ஒரு மறுமொழியும் கூறவில்லை. நாளை வருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். நான் அவனிடம் என்ன சொல்லவேண்டும் என்று கேட்பதற்கே உன்னை அழைத்தேன். மாப்பிள்ளையைப் பெண் பார்க்க அழைத்து வரும்படி சொல்லவா?” என்றார் பரமானந்தர் தந்திரமாக.

பத்மாவின் முகம் திருமணம், மாப்பிள்ளை என்ற வார்த்தைகளைக் கேட்டதும், குப்பென்று சிவந்துவிட்டது, என்னதான் படித்த பெண்ணென்றாலும் நாணத்தின் நடுக்கம் அவள் உடலெங்கும் பாவவே செய்த்தது. அப்பாவின் முகத்தைப் பார்ப்பதற்கே கன்கள் கூசின.

நிலத்தைப் பார்த்த வண்ணமிருந்தாள். அவள் நாக்கு அவளது துடிக்கும் செவ்விதழ்களைத் தடவியது. என்ன சொல்வதென்று தெரியாது திக்குமுக்காடிவிட்டாள்.

“என்ன பத்மா, பேசு. சொல்லவேண்டியதைச் சொல்” என்றார் பரமானந்தர்.

பத்மா வெறுமனே தலையை ஆட்டினாள்.

“வெறுமனே தலையை ஆட்டினால் அதன் பொருள்? வெட்கத்துக்காகப் பேச வேண்டியவற்றைப் பேசாது விடலாமா? ஒன்றுக்கும் பயப்படாது மனதிலுள்ளதைச் சொல்லு, பிள்ளை. நான் உனது இஷ்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய மாட்டேன்” என்றார் பரமானந்தர்.

தந்தையின் இந்த வார்த்தைகள் அவளுக்குத் தைரியமூட்டின. பேசுவதற்குத் தீர்மானித்தாள். ஆனால் பேச்சுத்தான் வரவில்லை. ஆனால் பரமானந்தர் மேலும் “பேசு பேசு” என்று வற்புறுத்தவே, வெட்கம் சிறிது சிறிதாக மறைந்தது. மனத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நான் ஸ்ரீதரைத்தான் கல்யாணம் செய்வேன்” என்றாள் தயக்கத்துடன்.

“என்ன ஸ்ரீதரையா? ஆனால் ஸ்ரீதர் அதற்குச் சம்மதமா?” என்றார் பரமானந்தர்.

“ஆம்” என்றாள் பத்மா.

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

“சொல்லியிருக்கிறார்.”

“ஓகோ, அப்படியானால் விஷயம் தீர்மானமாகி விட்டது. ஆகவே கல்யாணம் பேசி வந்தவனிடம் பத்மாவுக்குக் கல்யாணம் தீர்மானமாகிவிட்டது - ஸ்ரீதருடன் என்று சொல்லி விடவா, நாளைக்கு?”

“ம்” என்றாள் பத்மா நாணப் புன்னகையுடன்.

“சரி எனக்கு ஆட்சேபனையில்லை. ஸ்ரீதருக்கும் சொல்லிவிடு. சரி, போ படு,” என்றார் பரமானந்தர். சிறையிலிருந்து வெளிப்பட்டவள் போல் துள்ளி” எழுந்தோடினாள் பத்மா.

கட்டிலில் போய்ப் படுத்த அவள் அன்றிரவு முழுவதுமே நித்திரை கொள்ளவில்லை. இரவு முழுவதும் தன் எதிர்க்காலத்தைப் பற்றிப் பகற் கனவுகள் கண்டு கொண்டிருந்தாள் அவள்.

இதற்கு இரண்டு நாள் கழித்து ஸ்ரீதர் சுரேஷிடம் ஒரு கடிதத்தைக் காட்டினான் களிப்போடு. அது பத்மாவின் கடிதம். முத்து முத்தான எழுத்துகளில் மூன்றே மூன்று வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.

'அப்பா நான் உங்களை மணமுடிக்க அனுமதி தந்து விட்டார். இதைவிட வேறென்ன இன்பம் வேண்டும் எங்களுக்கு? நாளை நண்பகல் என்னை வழமையான இடத்தில் கட்டாயம் சந்தியுங்கள்! - பத்மா'

ஸ்ரீதரின் உள்ளம் இக் கடிதத்தால் களிப்புற்றதாயினும் ஒரு வித கலக்கமும் அவனைப் பிடிக்கலாயிற்று. அவன் தன் ஆள் மாறாட்ட நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது. ஆனால் இதனைக் கண்ணியமான முறையில் எவ்வாறு செய்து முடிப்பது என்ற பிரச்சினைக்கு அவனால் எவ்விதமான விடையும் காண முடியவில்லை.


பரிசீலித்து ஆறுதலாகச் சொன்னாலென்ன? முள்ளிலே போட்ட சால்வையை மெல்ல மெல்லத் தான் எடுக்க வேண்டுமென்பார்கள். பத்மாவுடன் எனக்கேற்பட்டுள்ள காதல் தொடர்பு என்னும் சால்வை எனது பொய்கள் என்னும் முள் தைத்துக் கிடக்கிறது. அவற்றைப் பிரித்தெடுப்பதை மிகவும் சாவதானமாகத்தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நம்முடைய காதலில் கிழிசல்ஏற்பட்டுவிடலாமல்லவா” என்றது இரண்டாம் குரல்.

இவ்விரு குரல்களின் மோதலுக்கு முன்னால் ஸ்ரீதரால் அவ்வித முடிவுக்கும் வர முடியவில்லை  . சிந்திக்கச் சிந்திக்க மூளை குழம்பியதேயல்லாமல், முடிவெதுவும் தோன்றுவதாயில்லை. ஆகவே “சரிதான், அப்புறம் பார்த்துக்கொள்வோம்” என்று விஷயத்தைச் சலிப்போடு ஒத்தி போட்டான் அவன். இவ்வுலகில் சிக்கலான விஷயங்கள் தம் முன்னே எதிர்ப்படும்பொழுது அவற்றை நேர காலத்திலேயே ஆராய்ந்து முடிவுக்கு வருபவர்கள் பத்துப் பேரென்றால், அவை தாமாகவே தீரட்டும் என்று விட்டு விடுபவர்கள் நூறு பேருக்கும் அதிகமென்றே சொல்ல வேண்டும். ஸ்ரீதர் இந்த நூறு பேருக்கு அதிகமான குழுவைச் சேர்ந்தவன் தான்.

பத்மாவின் மனதிலோ இவ்வித கவலைகள் எதுவுமே இருக்கவில்லை.  அவள் உள்ளம் சிட்டுக் குருவி போல் வெட்ட வெளியில் பறந்து கொண்டிருந்தது. “நானே அதிர்ஷ்டசாலி. என் அழகுக் காதலனை மண முடிக்கலாமென்று தந்தையே கூறிவிட்டார். இனி எனக்கென்ன குறை? அவரைக் கைப்பிடித்துக் கொண்டு அகிலமெல்லாம் சுற்றி வருவேன், ஆடுவேன். பாடுவேன். ஒரு போதும் பிரிய விடேன். என் ராஜா எனக்குக் கிடைத்துவிட்டான். இனி நான் அவனை விடுவேனோ?” என்றவாறு சிந்தித்துக் கொண்டே “வழமையான இடத்துக்குப் புள்ளிமான் போல் துள்ளித் துள்ளி வந்த அவள் தன்னையறியாமலே வாய்விட்டுச் சிரித்தும் கொண்டாள். சிரிக்கச் சிரிக்க இன்பமாய் இருந்தது. யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதைக் கவனித்துக் கொண்டு தன் மனம் பூரண திருப்தி பெறும் வரை மீண்டும் மீண்டும் சிரித்தாள். ஆனால் துள்ளும் கால்களை மட்டும் பார்த்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று மெல்ல அடக்கிக் கொண்டாள்.

“வழமையான இடத்”தில் பத்மாவும் ஸ்ரீதரும் எதிர்ப்பட்டபொழுது, ஸ்ரீதரின் முகத்தையும் கண்களையும் ஆவலுடன் பார்த்தாள் பத்மா. மெளன மொழியில் அவள் உள்ளம் அவனுடன் பேசியது.

“திருப்திதானே!” என்றன அவள் நயனங்கள்.

“ஆம் திருப்திதான்” என்று பதிலளித்தன அவன் கண்கள்.

நான்கு கண்களை வாயாக்கி இரண்டு உள்ளங்கள் அங்கு பேசிக்கொண்டன.

இந் நிலையால் ஏற்பட்ட போதையை ஒரு கண மெளனத்துக்கு மேல் தாங்க முடியாது போலிருந்தது பத்மாவுக்கு. அதனை மெளனமாக மேலும் மேலும் அனுபவித்துக்கொண்டு நிற்க அவளுக்கு ஆசைதான். ஆனால் வாழ்க்கையை அவ்வாறு ஒரே போதி மயமாக்கிவிட முடியுமா என்ன? எனவே அந்தரத்திலிருந்து கீழே வர நினைத்த பத்மா “பார், அவருடைய ஆனந்தத்தை!” என்றாள் கேலியாக.

ஸ்ரீதர் பதிலுக்குப் புன்னகை செய்தான். என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. வெறுமனே “பத்மா, வா ஐஸ்கிறீம் சாப்பிடுவோமா?” என்றான். பத்மாவுக்கு ஒரே மகிழ்ச்சி. “ஆம்” என்று புறப்பட்டாள். தந்தையே அங்கீகரித்துவிட்ட காதலனுடன் எங்கு போவதற்கும் எதற்கு அஞ்ச வேண்டும்?

பல்கலைக் கழகத்துக்கு முன்னாலிருந்த மரமடர்ந்த சாலைக்குச் சென்றார்கள் இருவரும். வீதியின் இருமருங்கும் செழித்து வளர்ந்திருந்த மரங்கள் வீதிக்கு இலைக் கூரையிட்டிருந்தன. பச்சப் பசேலென்ற அவ்விலை முகட்டின் இடைவெளிகளுக்கூடாக கதிரவனின் வெங்கதிர்கள் ஒளிக் கோலமிட்டிருந்தாலும் வெப்பம் உடலைத் தாக்கவில்லை. இயற்கையின் பவளக் கட்டுப்பாட்டு (ஏயர் கண்டிஷன்) அமைப்புப் போல் அமைந்திருந்த மர நிழல் வீதியைக் குளு குளு என்று வைத்திருந்தது. குளிர்ந்த உள்ளத்துடன் காதலர்கள் அங்கு நடந்து சென்றார்கள். ஸ்ரீதருக்கு அப்போது ஏற்பட்டிருந்த மன நிறைவில் பத்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு நடக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் யாராவது பார்த்து விட்டால் என்ற அச்சம் அவளை அவ்வாறு செய்யாது தடுத்தது.

“பத்மா! உனது அப்பாவை எப்படி இந்த விஷயத்தைப் பேசும்படி செய்தாய்?” என்று கேட்டான் ஸ்ரீதர்.

“நீங்கள் இனிமேல் அப்பாவை “உனது அப்பா உனது அப்பா” என்று சொல்லக் கூடாது. மாமா என்று சொன்னால் என்னவாம்? வாய் புளித்து விடுமோ?” என்றாள் பத்மா பொய்க் கோபத்துடன்.

“எனக்கு அப்படிச் சொல்ல வெட்கமாயிருக்கிறது, பத்மா” என்றான் ஸ்ரீதர். தனது தலை மயிரைச் சரி செய்தவாறே.

“மகளைக் கல்யாணம் கட்ட ஆசை. ஆனால் தகப்பனாரை மாமா என்று சொல்ல வெட்கமா மிஸ்டர்!” என்றாள் பத்மா, புன்னகையுடன், தன் பின்னலைப் பிரித்துப் பிரித்துச் சீர் செய்தவாறே.

இதற்கிடையில் வீதியில் வந்த டாக்சி ஒன்றைக் கை காட்டி நிறுத்தினான் ஸ்ரீதர். “எதற்கு டாக்சி!” என்றாள் பத்மா. “ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குப் போக” என்றான் ஸ்ரீதர். “என்ன, இந்த கால் மைல் தூரத்துக்கு டாக்சியா?” என்று பத்மா சொல்லி முடிப்பதற்குள் டாக்சியின் கதவைத் திறந்து விட்டான் டிரைவர். இருவரும் ஏறியுட்கார்ந்தார்கள். டாக்சி பறந்து போய், பம்பலப்பிடிச் சந்தியிலிருந்த எஸ்கிமோ ஐஸ்கிறீம் ‘பார்லர்’ முன்னால் நின்றது.

பத்மாவும் ஸ்ரீதரும் ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குள் புகுந்த போது பத்மா திடுக்கிட்டுவிட்டாள். ஏனெனில், அவளது தோழி தங்கமணியும் வேறிரு மாணவிகளும் அப்போதுதான் ஐஸ்கிறீம் அருந்திவிட்டு உல்லாசமாகச் சிரித்துப் பேசியவண்ணம் முகத்துக்கு நேரே வந்து கொண்டிருந்தார்கள். பத்மா அதற்கு முன்னர் ஓரிரு தடவை ஸ்ரீதருடன் பல்கலைக் கழகச் சிற்றுண்டிச் சாலையில் தேநீர் அருந்தியிருந்தபோதிலும் ஓர் ஆடவனுடன் ஐஸ்கிறீம் அருந்த பகிரங்கமான, ஒரு ஹோட்டலுக்கோ, ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்கோ பத்மா தனித்து போனது இதுவே முதல் தடவையாகும். அவ்விதம் முதல் தடவை சென்ற பொழுதே சக மாணவிகளிடம் அகப்பட்டுக் கொண்டு விட்டால் யாருக்குத்தான் அதிர்ச்சி ஏற்படாது? பத்மாவின் முகம் நாணத்தால் குப்பென்று சிவந்ததாயினும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு இலேசான புன்னகை ஒன்றை உதிர்ந்துவிட்டு ஸ்ரீதரின் பின்னால் நாணிக்கோணி உள்ளே சென்றாள்.

தங்கமணி ஒரு தடவைக்கு இரண்டு தடவை தன் முகத்தைத் திருப்பி வேறெதையோ பார்ப்பது போல் ஸ்ரீதரையும் பத்மாவையும் திரும்ப திரும்பப் பார்த்துக்கொண்டாள்.

ஐஸ்கிறீம் சாலையில் பெண்களும், ஜோடிகளும் குடும்பங்களும் உட்கார்ந்து சாப்பிடுவதற்கென்று சிறிய அழகான அடைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் “வேகன்ட்” (இடம் காலி) என்று அட்டை தொங்கிய ஒரு சிறிய கதவைத் தள்ளிக்கொண்டு ஓர் அடைப்புக்குள் புகுந்தான் ஸ்ரீதர். பத்மாவும் பின் தொடர்ந்தாள்.

அவர்களைத் தொடர்ந்து உள்ளே வந்த வெயிட்டரிடம் ஐஸ்கிறீம் “மெனு”க் கார்டை வாசித்து விலை உயர்ந்த *ஐஸ்கிறீம் வகைகளில் இரண்டு கிண்ணங்கள் கொண்டு வரும்படி உத்தரவிட்டு, ஸ்ரீதர் பத்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு மேசையில் கொடி போல் துவண்டு கிடந்த அவளது வளைக் கரங்களைப் பற்றினான். அவளது மலரிதழ் போன்ற குளிர்ந்த கரங்களில் அவள் அணிந்திருந்த கறுப்பு நிறக் கண்ணாடி வளையங்களைத் தன் விரல்களால் நீக்கி நீக்கிப் பார்ப்பது அவனுக்கு ஒரு வகை இன்பத்தைக் கொடுத்தது. பத்மாவும் ஒன்றும் பேசவில்லை. அவளுக்கும் அதில் ஒரு சுகமேற்படவே செய்தது. ஆனாலும் அவள் அதை முற்றிலும் அனுபவித்துக் கொண்டிருந்தாள் என்பதற்கில்லை. ஏதோ சிந்தனையிலிருந்தாள். அவள் முகத்தில் கவலை கூடாரமிட்டிருந்தது!

ஸ்ரீதருக்கு அவள் மெளனம் பிடிக்கவில்லை. “என்ன பத்மா, என்ன யோசனை!” என்று கேட்டான். ஸ்ரீதரின் அக்கேள்விக்குப் பின்னர்தான் பத்மா இவ்வுலகிற்கு வந்தாள். “இல்லை எனது வகுப்பு மாணவிகள் சிலர் எங்களைப் பார்த்துவிட்டார்கள் அல்லவா? அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றாள் அவள்.

ஸ்ரீதர் அதைக் கேட்டதும் அழுத்தம் திருத்தமாக “இதிலென்ன யோசிக்க இருக்கிறது? அவர்கள் ஏதாவது பேசினால் ஸ்ரீதர் என் காதலன். அவனை தான் கட்டிக்கொள்ளப் போகிறேன். கல்யாணத்துக்குக் கட்டாயம் கார்டு அனுப்புவேன். வரத் தயங்கக் கூடாது என்று சொல்லிவிட்டால் போகிறது. விஷயம் அப்படியே தீர்ந்து விடும்” என்றான்.

ஸ்ரீதரின் தமாஷான இப் பேச்சைக் கேட்டு, பத்மா முக மலர்ச்சியோடு சிரித்தாள். என்றாலும், அப்படிப் பேசுவது அவ்வளவு இலேசா என்ன? "ஆண் பிள்ளைகள் அப்படிப் பேசக் கூடும். பெண்கள் வாயடக்கமாகப் பேசாவிட்டால் ஊரெல்லாம் தூற்றும். வெட்கங் கெட்டவள் என்று சொல்லுவார்கள்” என்றாள்.

இதற்கிடையில் வெயிட்டர் பள பளவென்று ஒளி வீசிய வெள்ளி முலாம் பூசிய கிண்ணங்களில் ஐஸ்கிறீமைக் கொண்டு வந்து வைத்தான்.

இருவரும் அருந்த ஆரம்பித்தனர். நன்கு தயாரிக்கப்பட்ட ஐஸ்கிறீமீன் இனிய சுவையை நா அனுபவிக்கத் தொடங்கியதும் பத்மா கலகலப்பாகப் பேச ஆரம்பித்தாள். தந்தை பரமானந்தர் தன்னிடம் தனது திருமணத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்ததையும், தான் அவர் கேட்ட கேள்விகளுக்கு வெட்கத்தோடு அளித்த பதில்களையும் விவரமாகச் சொன்னாள் பத்மா. ஸ்ரீதர் பத்மாவின் கெட்டித்தனத்தைப் பாராட்டினான் என்றாலும், அவன் மனதை ஒரு கேள்வி, புழு அரிப்பது போல் குடைந்து கொண்டேயிருந்தது. “நான் யார்” என்பதை இப்பொழுதே சொல்லி விடுவோமா?” என்பதே அது. முடிவில் அப்பொழுது சொல்வது உசிதமல்ல. வேறொரு நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டான் அவன்.

பத்மா பேசிக் கொண்டே போனாள். “எங்கப்பா திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டார். உங்களப்பா விஷயமென்ன? ஒரு வாத்தியார் சம்மதித்துவிட்டால் போதுமா? மற்ற வாத்தியார் சம்மதமும் வேண்டாமா? அதையும் சீக்கிரமாகத் தீர்த்துக் கொண்டால்தான் எனக்கு நிம்மதி ஏற்படும்” என்றாள் அவள்.

ஸ்ரீதர் “நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. நான் இம்மாத முடிவில் வீட்டுக்குப் போய் வரும்போது நல்ல செய்தியுடன் தான் வருவேன். எல்லாம் வெற்றியாகவே முடியும். நீ உனது தந்தைக்கு எப்படி ஒரே செல்ல மகளோ அப்படியே நானும் என் பெற்றோருக்கு ஒரே செல்லப்பிள்ளை. என் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க அப்பா நினைத்தாலும், அம்மா அதற்கு ஒரு போதும் விடமாட்டாள் பத்மா” என்றான்.

அதற்குப் பிறகு இளங் காதலர்கள் காதற் பேச்சுகள் பேசிக் கொண்டார்கள். சில சமயம் சிருங்காரமாகப் பேசினார்கள். சில சமயம் நகைச்சுவையாகப் பேசினார்கள். சில சமயம் ஊடுவது போலவும் பேசினார்கள்.

“நீ என்னை உண்மையாகக் காதலிக்கிறாயா?” என்றான் ஸ்ரீதர்.

“அதில் கூடச் சந்தேகம் கொள்கிறீர்களா? அப்படியானால் என்னுடன் பேச வேண்டாம்” என்று கோபித்தாள் பத்மா.

“கோபிக்காதே என் கோபி! அதிகமாகக் கோபித்தாயானால் உன் கிருஷ்ணன் வீதியில் ஒரு மாட்டு வண்டிக்கு முன்னர் பாய்ந்து உயிரை விட்டு விடுவான். ஜாக்கிரதை.” என்று தமாஷாகக் கூறினான் ஸ்ரீதர்.

காதலர்களின்  பேச்சு பற்பல திசைகளில் திரும்பித் திரும்பிச் சென்றது.

“உங்களம்மா யாரைப் போலிருப்பாள்? உங்களப்பா யாரைப் போலிருப்பார்? உங்களைப் போலா? என்னை அவர்களுக்குப் பிடிக்குமா? அவர்களுக்கு என் மீது பிடித்தம் ஏற்பட நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நான் கொழும்பு மோஸ்தரில் உடுத்துவது அவர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ?” என்ற கேள்விக்கு மேல் கேள்வியை அடுக்கினாள் பத்மா. ஒரு பெண்ணின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது உண்மையில் பரீட்சைக்குப் பதிலளிப்பதை விட எவ்வளவோ கடினமானது என்பது அப்பொழுதுதான் ஸ்ரீதருக்குத் தான் தெரிந்தது. திடீரென “ நான் இம்முறை பரீட்சையில் முதலாம் வெகுப்பில் சித்தி என்பது நிச்சயம்” என்று கூறினான் ஸ்ரீதர். “அதென்ன, திடீரென அவ்வளவு நிச்சயம் ஏற்பட்டுவிட்டது?: என்று கேட்டாள் பத்மா ஆச்சரியத்துடன். “இல்லை, உன் கேள்விகளுக்கு டக் டக் என்று பதிலளித்த நான் எப்படி பரீசையில் தோற்க முடியும்? நிச்சயம் முதல் வகுப்புக் கிடைக்கவே செய்யும்” என்றான் ஸ்ரீதர். ஆனால் கேள்விக் கணைகளை பத்மா மட்டும்தான் தொடுத்தாள் என்பதில்லை. ஸ்ரீதரும் கேள்விகள் கேட்கவே செய்தான். “ நீ என்னைக் காதலிப்பது எதற்காக?” என்று அவன் கேட்டதும் பத்மா அவனது அழகிய விழிகளை நோக்கியவாறு, “உங்கள் அழகிய கண்கள்தாம் என்னை முதல் முதலில் கவர்ந்தன. உண்மையில் அவை போன்ற கண்களை நான் வேறெங்கும் கண்டதேயில்லை” என்று கூறினாள். ஸ்ரீதர் “அப்படியா? அப்படியானால் நிச்சயம் இன்று என் கண்களை நான் கண்ணாடியில் பார்க்க வேண்டும்” என்று தன் கண்களைத் தன் கண்களால் தடவிக் கொண்டு வேடிக்கையாகக் கண்களை வெட்டினான். பத்மா தன்னை மறந்து கல கலவென்று சிரித்துவிட்டாள். “உஷ்” என்று வாயில் விரலை  வைத்து மெளன அடையாளங் காட்டினான் ஸ்ரீதர். பத்மா மதுவுண்ட வண்டு போல் ஸ்ரீதரின் கன்களயே பார்த்துக் கொண்டு வீற்றிருந்தாள்.

ஸ்ரீதர் திடீரென்று “அப்படியானால் நீ என்னை மூளைக்காகக் காதலிக்க வில்லையா?” என்று கேட்டான். பத்மா பளிச்சென்று “அது எப்படி முடியும்? ஒருவரிடம் உள்ள ஒன்றைப் பார்த்துதானே இன்னொருவர் அவர் விரும்ப முடியும்” என்று பதிலளித்தாள். ஸ்ரீதர் அவளது சாதுரியத்தை உண்மையில் மெச்சினானாயினும், “பத்மா! நீ சரியான வாயாடி!” என்று சும்மா சொல்லி வைத்தான். ஸ்ரீதரின் கேள்விக்குப் பதில் கேள்வியாக, பத்மா ஸ்ரீதரிடம் “நீங்கள் ஏன் என்னைக் காதலிக்கிறீர்கள்!” என்று கேட்டாள். “உன்  அழகுக்காக, உன் நிலா முகத்துக்காக, உன் முல்லைச் சிரிப்புக்காக, உன் விழிகளுக்காக, ஏன், உன் வாய்க்காகவும்தான்!” என்றான் ஸ்ரீதர்.

காதலர்கள் குறும்பாகவும் அன்பாகவும் போட்டியாகவும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க வெள்ளைக் கோட்டு போட்ட வெயிட்டர் ‘பில்’லுடன் வந்து விட்டான். ஸ்ரீதர் தன் காற்சட்டைப் பையிலிருந்து இரண்டு புத்தம் புதிய நூறு ரூபாத் தாள்களை எடுத்து அதிலொன்றை வெயிட்டரிடம் கொடுத்தான். வெயிட்டர் அதை எடுத்துச் சென்றதும் பத்மா ஸ்ரீதரிடம் “என்ன, பணப் புழக்கம் அதிகமாயிருக்கிறது! அப்பா தன் பென்ஷன் பணத்திலிருந்தா உங்களுக்கு இவ்வளவு தாராளமாகப் பணம் அனுப்புகிறார்! நீங்கள் அவர் பணத்தை டாக்சிக்கென்றும் அதற்கென்றும் இதற்கென்றும் வீணாக்குவது தவறு” என்று கடிந்து கொண்டாள்.

ஸ்ரீதர் பத்மாவின் எதிர்பாராத இவ்வார்த்தைகளால் அசந்து போய் விட்டான். என்றாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு “இல்லை. இந்தக் காசு நான் சம்பாதித்தது. நான் பின்னேரங்களில் சில பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கிறேன்,” என்றான்.

பத்மா, “அப்படியா விஷயம்! அதனால் அந்தக் காசைக் கரியாக்கலாம் போலும்! நீங்கள் பெரிய செலவாளி. இந்த ஷெர்ட்டின் விலை என்ன? இருபத்தைந்து ரூபா இருக்குமா?” என்றாள்.

“இல்லை, இதன் விலை அறுபது அல்லது எழுபது ரூபாவென்று நினைக்கிறேன். ஞாபகமில்லை” என்றான் ஸ்ரீதர்.

“பார்க்கப் போனால் நீங்களும் என்னைப் போல் வாத்தியார் பிள்ளை. ஆனால் பேச்சோ ராஜா மகன் மாதிரி. விலைக்கு வாங்கிய ஷேர்ட்டின் விலை கூடத் தெரியவில்லை. ஆளைப் பார் ஆளை” என்றாள் பத்மா கிண்டலாக.

வெயிட்டர் மிச்சக் காசை ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தான். அதில் ரூபா ஒன்றை விட்டுவிட்டு, சொச்சத்தை எடுத்துக் கொண்டான் ஸ்ரீதர். வெயிட்டர் நாய்க்குட்டி குழைவது போல் நின்று, நன்றியறிதலோடு சலாம் செய்து விட்டு வெளியேறினான்.

“ஆமாம். உங்களுக்குப் பணம் அதிகரித்துத்தான் விட்டது. இல்லாவிட்டால் ஒரு ரூபாவை அவனுக்குக் கொடுப்பீர்களா?” என்றாள் பத்மா.

அப்பொழுது ஐஸ்கிறீம் சாலையிலிருந்த மணிக்கூடு டணால் டணால் என்று பன்னிரண்டடித்து ஓய்ந்தது. பத்மா கனவிலிருந்து விழித்தவள் போல “நேரமாகிறது. போவோமா?” என்றாள்.

பத்மாவும் ஸ்ரீதரும் மேசையை விட்டு எழுந்தார்கள். உல்லாசப் பேச்சாலும், காதல் என்ற மெல்லுணர்வின் இனிய அரவணைப்பாலும், வாய்க்கு உருசியான உணவாலும் பத்மாவின் மனதில் தங்கமணியும் தோழியர்களும் ஏற்படுத்திய சலசலப்பு இப்போது அடங்கியிருந்தது.

உண்மையில் அவள் உள்ளத்தில் அதிகாலை தேர்ந்தத் தடாகம் போன்ற ஒரு பேரமைதி குடி கொண்டிருந்தது. தனது வாழ்க்கையிலேயே ஒரு காலமும் அனுபவித்திராத ஒருவித பூரணத்துவத்தை அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள். தான் இவ்வுலக வாழ்வில் விரும்பியதெல்லாம் ஒவ்வொன்றாகக் கிட்டுவது போன்ற ஓருணர்ச்சி அவள் உள்ளத்தைத் தாலாட்டியது. ஆனால் ஸ்ரீதரின் மனதின் நிலையோ வேறு விதமாக இருந்தது. தான் யார் என்பதை எப்படிப் பத்மாவுக்கு எடுத்துக் கூறுவது என்பது அவனுக்கு விளங்கவில்லை. பத்மாவின் காதல் தோழமையையும் கண்ணுக்கு முன்னால் இன்பமூட்டிக் கொண்டிருந்த அவள் எல்லையற்ற அழகையும் பூப்போன்ற அவள் கன்னங்களில் நேரத்துக்கு நேரம் இடம் மாறி உயிர்த்துடிப்போடு தவழ்ந்து கொண்டிருந்த சங்கின் சுழி போன்ற அவளது கன்னச் சுழியையும், சுருண்ட கேசத்தையும், தந்தத்தில் கடைந்தெடுத்தது போன்று சொகுசோடு காட்சியளித்த அவள் மெல்லிடையையும், எல்லாவற்றுக்கும் மேலாக வீணா கானம் போன்ற தன் இனிய குரலில் அன்பையும் குறும்பையும் சொரிந்து அவள் பேசிய வார்த்தைகளையும் அவன் உண்மையில் இரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தான் எனினும், அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் தான் கூறிய பொய்யினால் ஏற்பட்ட கவலை பனி மூட்டம் போல் திசையிட்டிருந்தது. அவள் விரல்களையோ, கரங்களையோ அவன் தொட்ட போது, அவன் உள்ளம்  மேகங்களிடையே சஞ்சரித்தது உண்மையேயாயினும் அந்த மேகத் தொகுதி  மின்னற் கொடிகளின் துடி துடிப்பிலே நடுங்கிக் கொண்டிருந்தது போலவும் அந்த நடுக்கம் தன்னையும் பாதிப்பது போலவும் ஸ்ரீதருக்கு ஓருணர்வு ஏற்பட்டது. இருந்தாலும் என்ன செய்வது? ஏதோ பொய் சொன்னது சொல்லிவிட்டோம். எப்படியோ பிரச்சினை ஒன்று தோன்றிவிட்டது. அதைச் சந்தர்ப்ப சூழலை அனுசரித்துத் தீர்த்துக்கொள்ள வேண்டியது தான். அதற்காக இவ்வளவு கலங்கக் கூடாது. மேலும் இதனால் என்ன தலையா போய்விடப் போகிறது? ஆண் பிள்ளை ஆண்மையோடு நடந்து கொள்ள வேண்டாமா? - என்பது போன்ற எண்ணங்கல் குறுக்கும் மறுக்குமாக அவனது மனதில் நடமாடிக் கொண்டிருந்தாலும், அதரங்களில் என்னவோ ஒப்புக்கு ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டேயிருந்தது.

பத்மாவும் ஸ்ரீதரும் ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்கு வெளியே வந்ததும் தத்தம் பாதைகளில் பிரிந்தார்கள். “நாளை வழமையான இடம்” என்றாள் பத்மா. “ஆகட்டும் கண்ணே” என்றான் ஸ்ரீதர் போலிக் குறும்போடு.

பத்மா ஐஸ்கிறீம் ‘பார்லரி’லிருந்து நேரே பல்கலைக் கழகத்துக்குப் போய் அங்கிருந்து கொட்டாஞ்சேனை பஸ் தரிப்புக்குச் சென்றாள். ஸ்ரீதர் எவ்வளவு சொல்லியும் டாக்சியில் செல்ல மறுத்து ‘புல்லர்ஸ்’ வீதிவழியாக நடையிலேயே சென்றாள் பத்மா. அவள் கண்ணுக்கு முற்றாக மறைந்ததும் ஸ்ரீதர் “சுரேஷை உடனே கண்டு பேச வேண்டும்” என்று எண்ணிக் கொண்டே ஒரு டாக்சியை மறித்து, அதில் ஏறிக்கொண்டான்.

பஸ்தரிப்பில் பத்மா சற்றும் எதிர்பாராத வகையில் அவளது சிநேகிதி தங்கமணியும் பஸ்சுக்காகக் காத்துக் கொண்டு நின்றாள். பத்மாவைக் கண்டதும் அர்த்தபுஷ்டியுள்ள புன்சிரிப்புடன் சுட்டு விரலை விறைப்பாக உயர்த்தி “எல்லாம் எனக்குத் தெரியும், மச்சாள்” என்பது போன்ற ஒரு சைகையைச் செய்தாள் தங்கமணி. பத்மா நாணத்தால் குன்றிவிட்டாள். எனினும், பெண்களுக்கே இயல்பாயுள்ள முறையில் எப்படியோ சிரித்துச் சமாளித்துக் கொண்டாள். ஆனால் அந்தப் பஸ் தரிப்பிலே அவள் உள்ளம் வெதும்பும் சம்பவம் ஒன்று சீக்கிரமே நடக்கப் போகிறது என்பது அப்பொழுது அவளுக்குத் தெரியாது. காலை நேரம், எவ்வளவு இன்பமாய் இருந்ததோ, அவ்வளவுதுன்பமயமான மாலை நேரம் ஒன்று அவளுக்காகக் காத்திருந்தது என்பதை அவள் அறியாள்.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் , தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவலான 'மனக்கண்' முகப்போவியம்.தங்கமணியும் பத்மாவும் ஓரளவு சிநேகிதிகளே என்றாலும், அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்டவர்கள் என்று சொல்ல முடியாது. உண்மையில் பத்மாவுடன் சிநேகிதியாக இருப்பது எந்தப் பெண்ணுக்குமே கஷ்டமாகத்தானிருக்கும். பல்கலைக்கழகத்திலேயே ஐந்து அழகிய பெண்களைப் பொறுக்கினால், நிச்சயம் பத்மாவும் அதில் ஒருத்தியாக இருப்பாள் என்பதில் சந்தேகமிலை. படிப்பிலும் பத்மாகெட்டிக்காரிதான். அத்துடன் நாடக மன்றத்தின் இணைக் காரியதரிசி. இவையெல்லாம் அவளைச் சாதாரண மாணவிகளிடையே செல்வாக்குடையவளாகச் செய்திருந்தாலும், தாமும் வாழ்க்கையின் முன்னணியில் நிகழ வேண்டும் என்ற எண்ணம் படைத்த மாணவிகளிடயே அவள் மீது தாங்கொனாத பொறாமையைத்தான் தூண்டியிருந்தன. தங்கமணியும் அப்படிப்பட்ட ஒரு மாணவியே. இயற்கை அவளுக்கு அழகைத் தாராளமாக வாரி வழங்காவிட்டாலும் நல்ல உடற்கட்டை அளித்திருந்தது. நல்ல உயரம். பொது நிறமென்று சொல்ல முடியாத கரிய நிறமென்றாலும் அவள் முகத்தில் எவ்வித குறைபாடுகளுமில்லை. அளவான மூக்கு, சிறிது நீளமான முகம். அமைப்பான கன்னங்கள், மேலேறிய புருவம், அப்புருவத்துக்கு நடுவே ஆச்சரியக் குறி போன்ற சிவந்த பொட்டு, உயர்ந்த இடை -- இவைதாம் தங்கமணி. எந்தக் கூட்டத்திலும் தனித்துத் தெரியும் இத்தோற்றத்துடன் தயக்கமில்லாத கலகலப்பான பேச்சும்  எங்கும் முன்னே சென்று தலைமை தாங்கும் பண்பும் அவளிடம் இருந்தன.

தங்கமணிக்குப் பத்மாவின் இரகசியத்தைத் தான் தெரிந்து கொண்டதில் பரம திருப்தி. ஏற்கனவே பத்மா மீது காரணமின்றியே இலேசான பொறாமை கொண்டிருந்த தங்கமணிக்குக் காலையில் அவளைப் பல்கலைக்கழகத்திலேயே கண் நிறைந்த அழகான ஸ்ரீதருடன் பார்த்தது தொடக்கம் மேலும் பொறாமை அதிகரித்தது. போதாதற்கு ஸ்ரீதர் இலங்கையின் மிகப் பெரிய பணக்காரரான சிவநேசர் மகன் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

“பத்மா, நீ கெட்டிக்காரி! ஸ்ரீதர் உன் காதலனா?” என்று கேட்டாள் தங்கமணி.

காலை நிகழ்ச்சிகளால் இன்பத்தில் மிதந்து கொண்டிருந்த பத்மாவின் உள்ளம் வீதியின் ஓரத்தில் ஓங்கி  வளர்ந்திருந்த நிழல் மரங்களின் உச்சியில் ஏறி நின்று “ஸ்ரீதர் என் காதலன்” என்று முழு உலகுக்கும் முழங்க வேண்டுமென்று விரும்பியிருந்து நேரமல்லாவா அது? ஆகவே துடிதுடிப்பாக, “ஆம் தங்கமணி! ஸ்ரீதர் என் காதலன். அவனை நான் கட்டிக் கொள்ளப் போகிறேன். அப்பாவும் சம்மதித்துவிட்டார். கல்யாணத்துக்குக் கட்டாயம் கார்டு அனுப்புவேன். வரத் தயங்கக் கூடாது” என்றாள் பத்மா ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்த பிரகாரம்.

தங்கமணி, பத்மாவின் துணிவான பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போய் விட்டாள். வழக்கமாகக் கூச்சத்துடன் பேசும் பத்மா காதல் தந்த தெம்பாலல்லவா இப்படிப் பேசுகிறாள் என்று தன்னுள் தானே எண்ணிக் கொண்டு “உண்மையாகவா? அப்படியானால் எனது நல்வாழ்த்துக்கள். ஆனால் நீ பெரிய அதிர்ஷ்டக்காரி. ஸ்ரீதர் மாதிரி பணக்கார வீட்டுப் பிள்ளை யாருக்கும் இலகுவில் கிடைப்பானா?” என்றாள் அவள்.

பத்மா ஆச்சரியத்துடன். “என்ன பணக்கார வீட்டுப் பிள்ளையா? யார் சொன்னது? அவர் அப்பாவும் என் அப்பா போல் ஓர் இளைப்பாறிய வாத்தியார்தான். பணக்கார வீட்டுப் பிள்ளை பெண்ணில்லாமல் என்னைத் தேடி வருகிறானா?” என்றாள்.

தங்கமணி “ஏன் வரமாட்டான்? உன்னிடமிருக்கும் அழகும் தளுக்கும் போதாவா?” என்று சொல்லி உடலைக் குலுக்கிக் காட்டிச் சிரித்தாள், வஞ்சனையற்றுப் பேசுபவள் போல. பின் திடீரென “நீ என்ன சொன்னாய்? சிவநேசர் இளைப்பாறிய வாத்தியார்? யாரை ஏமாற்றுகிறாய்?” என்றாள்.

"சிவநேசரா ? யாரது? ஸ்ரீதரின் தகப்பனாரின் பெயர் சின்னப்பா பிள்ளை. ஊர் உடுவில்”

தங்கமணி சிரித்தாள்.

“உனக்குப் பைத்தியமா? அல்லது என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? ஸ்ரீதர் எங்களூரைச் சேர்ந்தவன். அவன் தகப்பனார் சிவநேசர் பெரிய பணக்காரர். இந்த இலங்கையிலேயே அவர் போன்ற பணக்காரரும் சாதிக்காரரும் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள்.”

சிவநேசர்! பத்மாவும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா. அவள் வசித்த கொலீஜ் ரோடு 48ம் நம்பர்த் தோட்டத்தில் வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்த வேலாயுதக் கிழவன் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை யாழ்ப்பாணத்தில் சிவநேசர் பங்களாவில் வேலை செய்தவன். அவரைப் பற்றித் தந்தை பரமானந்தரோடு வேலாயுதம் கதை கதையாய்ப் பேசிக் கொண்டிருப்பதை அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆம். வேலாயுதம் கூட அவரைப் பற்றிக் கோடீஸ்வரர் என்று பல முறை வர்ணித்திருக்கிறாள். சிவநேசப் பிரபு என்று தான் வேலாயுதம் அவரைப் பற்றிப் பேசும்போது குறிப்பிடுவது வழக்கம். அந்தப் பெரும் பணக்காரரின் மகனா ஸ்ரீதர்?

பத்மாவால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் தங்கமணி அறுதியிட்டுக் கூறுகிறாள்! என்றாலும் பத்மாவின் உள்ளம் விட்டுக் கொடுக்க மறுத்தது. தோள் வழியாக நெஞ்சில் புரண்டு கொண்டிருந்த கருநாகம் போன்ற தன் பின்னலை விரல்களால் சுற்றிக் கொண்டே “தங்கமணி! பொய் சொல்லாதே! அவர் உடுவிலுள்ள வாத்தியார் சின்னப்பா பிள்ளையின் மகன் தான். ஒரு வேளை நீ சொல்லும் சிவநேசர் மகனும் பார்ப்பதற்கு ஸ்ரீதர் போல் இருப்பானாக்கும்!” என்றாள்.

தங்கமணிக்கு இப்பொழுது ஒரு சந்தேகமேற்பட்டது. அவள் அறிந்தவரையில் பத்மா பொய் பேசுபவளல்ல. ஒரு வேளை உண்மையாகவே பத்மா ஸ்ரீதரால் ஏமாற்றப்பட்டிருக்கிறாளோ? இந்த எண்ணத்துடன் அவள்  பத்மாவின் தோள்களைப் பற்றியவண்ணம், “பத்மா! நீ சொல்வது உண்மையானால், நீ ஏமாற்றப்பட்டிருக்கிறாய். ஸ்ரீதர் உண்மையில் சிவநேசரின் மகளே. அவர்கள் வீட்டுக்கு அரை மைல் தூரத்தில்தான் எங்கள் வீடு. அவர்களைப் பற்றி எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். நான் ஏன் உனக்குப் பொய் சொல்ல வேண்டும்?”

என்றாள். பேச்சுத்தான் அன்பாக இருந்ததே ஒழிய, பத்மாவின் இக்கட்டு தங்கமணிக்கு ஒருவித இன்பத்தையே தந்தது. பத்மாவின் பிடிவாதம் தளர ஆரம்பித்தது, என்றாலும் விட்டுக் கொடுக்காமல் “நீ என்ன சொன்னாலும் எனக்கு அவற்றை நம்பக் கஷ்டமாகத் தானிருக்கிறது. நான் சொன்ன விவரங்கள் ஸ்ரீதர் கூறிய விவரங்களே. அப்படியானால் அவர் எனக்குப் பொய் கூறியிருக்கிறார். அவர் ஏன் அப்படி எனக்குப் பொய் சொல்ல வேண்டும், தங்கம்!” என்றாள்.

தங்கமணி, “ஒருவன் ஏன் பொய் சொல்கிறான் என்பது அவனுக்குத்தான் தெரியும். ஏதாவது சூழ்ச்சிகரமான திட்டங்கள் அவன் மனதில் இருக்கும். உன்னை ஏமாற்றித் தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொண்டு ‘டிமிக்கி’ கொடுக்கிற எண்ணமோ என்னவோ! உனக்குத் தெரியாதா ஆண்களைப் பற்றி? எதற்கும் நீ கவனமாய் நட. நல்ல வேளை, உன் அதிர்ஷ்டம் நான் இன்று உங்கள் இருவரையும் ஜோடியாகக் கண்ட்து. ஆனால் எனக்கு ஆச்சரியமென்னவென்றால், ஸ்ரீதரை காண்பவர்கள் எல்லாம் ஏதோ பிரின்ஸ் ஓவ் வேல்ஸைக் கண்ட மாதிரி “ அது யார் தெரியுமா? சிவநேசர் மகன்” என்று சுட்டிக் காட்டிப் பேசுபவர்கள் நிறைந்த பல்கலைக் கழகத்தில் உனக்கு அவனைத் தெரியாமலிருந்ததே என்பதுதான்” என்றாள்.

பத்மாவுக்கு இன்னும் தங்கமணியின் பேச்சில் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் உண்மை போல் தோன்றிய அவற்றை மறுத்துரைக்கும் சக்தியும் அவளிடமிருக்குவில்லை. ஆகவே சிறிது நேரம் வாய் மூடி மெளனியாய் இருந்தாள் அவள்.

அப்பொழுது பெரிய பிளிமத் கார் ஒன்று பஸ் தரிப்பைக் கடந்து சென்றது. கார் டிரைவர் முன்னாசனத்திலிருந்து காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.

தங்கமணி அந்தக் காரைக் கண்டதும் உணர்ச்சியோடு “பத்மா! இதுதான் ஸ்ரீதரின் கார், பார், இன்னும் சிறிது நேரத்தில் ஸ்ரீதருடன் வரும்.” என்றாள்.

பத்மா, “இல்லை அவர் இதில் வர மாட்டார். அவர் “எஸ்கிமோவி”லிருந்து நேரே வீடு போய்விட்டார்” என்றாள்.

தங்கமணி “அப்படியானால் மிகவும் நல்லது. கார் ஸ்ரீதர் இல்லாது வந்தால் நான் மறித்து நிறுத்தி டிரைவரிடம் பேச்சு கொடுத்து இந்தக் கார் ஸ்ரீதருடையது என்பதை நிரூபிக்கிறேன். பார்க்கிறாயா?” என்றாள்.

முதலில் அதற்கு வேண்டாம் எனப் பதிலளித்த பத்மா பின்னால் “சரி, ஆகட்டும்” என்று அரை மனதோடு பதிலளித்தாள்.

தங்கமணி எதிர்பார்த்தது போலவே சுமார் இரண்டு மூன்று நிமிடங்களில் கழக வளவிலிருந்து கார் மீண்டும் வெளியே வந்தது. அதைக் கண்டதும் தங்கமணி வீதியில் இறங்கிக் காரை மறித்தாள். டிரைவர் காரை ‘பிரேக்’ போட்டு நிறுத்திக் கொண்டே “என்ன காரியம்” என்ற பாவனையில் இரு பெண்களின் முகங்களையும் ஏற இறங்கப் பார்த்தான்.

“இது ஸ்ரீதரின் கார் தானே! ஆள் எங்கே” என்று கேட்டாள்.

“ஆம். இது ஸ்ரீதர் ஐயாவுடைய கார்தான். அவரைக் கண்டீனில் காணோம். செல்லப் பிள்ளை. நினைத்தவுடன் நினைத்த மாதிரி நடப்பார். டாக்சியில் போயிருப்பார்” என்றான் டிரைவர்.

“சரி. நீ போ” என்றாள் தங்கமணி.

கார் சிறிது தூரம் போனதும் தங்கமணி அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியே விட்ட வண்ணமே பத்மாவைப் பார்த்துச் சிரித்தாள்.

“எனக்கு டிரைவரிடம் பேசும்போது நெஞ்சு டக் டக் என்றடித்துக் கொண்டது. அப்பாடா, அவன் அநாவசியமான கேள்விகள் கேட்காமல் போனானே, அது போதும்.” என்றாள் அவள், பெருமூச்சால் தன் நெஞ்சில் கையை வைத்த வண்ணமே.

பத்மாவுக்கோ பதிற் சிரிப்புச் சிரிக்க முடியவில்லை. தங்கமணிக்கு அதைக் கண்டு திருப்தி. பத்து நிமிஷங்களுக்கு முன் பத்மா முகத்தில் படர்ந்திருந்த கர்வம் எங்கே போயொழிந்தது என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். ஆனாலும் வெளிக்குத் தானும் விசனப்படுவது போலவே காட்டிக்கொண்டாள்.

'கடைசியில், தங்கமணி தன் கட்சியை நிரூபித்துவிட்டாள். அவர் பொய்தான் சொல்லியிருக்கிறார். என் காதலன் ஸ்ரீதர். அவரை நான் கட்டப் போகிறேன் என்று பெருமையுடன் பேசி ஒரு சில நிமிஷங்கள் கழிவதற்குள் அவர் ஒரு பொய்யன் என்று நிரூபித்துவிட்டாள் அவள்' என்று தன்னுள் கறுவினாள் பத்மா. ஆனால் அடுத்த கணமே  “அவளைக் கோபித்து என்ன பயன்? குற்றம் அவர் மேலல்லவா? ஏன் அவர் அப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்லி, என்னை இப்படித் தலை குனிய வைத்தார்?” என்று சிந்தித்தவண்ணமே முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டாள் அவள். அவளால் தங்கமணியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் முத்துகள் வெடித்துக் கன்னத்தைக் கழுவிச் சென்று கொண்டிருந்தன. உதட்டைப் பிதுக்கிக் கொண்டு செய்வதறியாது நின்றான் அவள்.

தங்கமணி, “பத்மா! ஏன் அழுகிறாய்? பெரிய இடத்து உறவெல்லாம் இப்படித்தான். விட்டது சனியன் என்று உன்னுடைய அலுவல்களைப் பார். போ. நான் என்றால் அப்படித் தான் செய்வேன். ஆனால் முதலில் உன் போல் ஏமாந்திருக்க மாட்டேன்.” என்று புண்ணில் வேல் கொண்டு  போல் பேசினாள் பத்மாவின் மனதில் நன்கு பட வேண்டுமென்று.

அவள் இவ்வாறு பேசுவதற்கும், கொட்டாஞ்சேனை பஸ் வருவதற்கும் சரியாய் இருந்தது. பத்மா அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு, பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து, தங்கமணியைப் பார்த்துக் கைகளை அசைத்தாள். வழக்கமாக அக் கை அசைப்போடு சேர்ந்து வரும் ‘செரியோ’ என்ற வார்த்தை அன்று ஏனோ அவள் வாயில் வர மறுத்துவிட்டது!

தங்கமணி பஸ் தரிப்பில் வத்தளை செல்லும் பஸ்சுக்காகக் காத்து நின்றாள் அன்று தனக்குக் கல்யாணம் நடந்தது போன்ற பெருமகிழ்ச்சி அவளுக்கு!


5-ம் அத்தியாயம்: சலனம்

மனக்கண் நாவலின் காட்சி: பத்மா கவலையில் ...[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]  பார்க்கப் போனால் மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? பத்மாவின் வாழ்க்கையிலே, பஸ் தரிப்பில் அவள் கொட்டாஞ்சேனை பஸ்ஸிற்காகக் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்துவிட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வீதியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு சம்பவம், சில போது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பிவிட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும்போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியதோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிடவில்லையா? ஆள்வோனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது!

சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிக பெரியது. பஸ் தரிப்பில் எல்லோரையும் போல், பஸ்சுக்காகக் காத்துக்கிடக்கும் சலிப்பைப் போக்குவதற்காகப் பத்மாவும் தங்கமணியும் ஆரம்பித்த உரையாடல் இவ்வாறு தனது உள்ளத்தையே பிழிந்தெடுத்து வெம்ப வைக்கும் ஒரு பெரும் அதிர்ச்சி சம்பவமாக முடிவுறும் என்று பத்மாவால் எண்ணியிருக்க முடியுமா? தங்கமணி ஸ்ரீதரின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கூறிய தகவல்கள், அதைத் தொடர்ந்து அங்கே வந்த ஸ்ரீதரின் கார் டிரைவர் கூறிய விவரம் - எல்லாம் சேர்ந்து பத்மாவின் உள்ளத்தை ஒரே கலக்காகக் கலக்கிவிட்டன.

பஸ்ஸில் ஏறி வசதியாக ஒரு ஜன்னலண்டை உட்கார்ந்து நண்பகலின் சூரிய வெளிச்சத்தில் வெண் புறாவின் ஒளி வீசும் சிறகுகளைப் போன்ற பளபளப்போடு வானத்தில் ஓடிக்கொண்டிருந்த முகில்களைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் உள்ளத்தில் “ஸ்ரீதர் ஏன் இப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்ல வேண்டும்? ஏன் என்னை இவ்வாறு ஏமாற்ற வேண்டும்?  இதில் ஏதோ பெரிய மோசடி இருக்கிறது. இவ்விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால், அவர் என்ன நினைப்பார்?” என்பது ஒன்றன்பின்னொன்றாக வந்துக்கொண்டிருந்தன.

ஒருவனுக்குக் கவலை ஏற்பட்டால் அந்தக் கவலையின் அமுக்கத்திலிருந்து தனது மனதை விடுவித்துக்கொள்ள, அவன் எங்காவது ஒரு மூளையில் ஆறுதலாக உட்கார்ந்து கண்ணீர் கொட்டி அழுவதற்கு விரும்புகிறான். ஆனால் அதற்குக் கூட வசதியான இடம் கிடைக்க வேண்டுமே! அவ்வித வசதியான இடம் கிடைத்ததும் அவன் சந்தோஷத்துடன் அங்கே உட்கார்ந்துகொண்டு தன் துயரம் முற்றிலும் போகும் வரை கண்ணீர் விட்டு அமைதி காண்கிறான்.

பத்மாவுக்கு அன்று பஸ்ஸிலே கிடைத்த ஆசனம் இதற்கு மிக வசதியாக இருந்தது. அந்த வகையில், அந்த்ச் சோக நேரத்தில் கூட அவள் அதிர்ஷ்டசாலிதான். பஸ்ஸில் அடியோடு ஜனக் கூட்டம் இல்லாத நேரம். பஸ்ஸின் பிற்பகுதியில்  தனிமையாக விளங்கிய அவ்வாசனத்தில் அமைதியாக உட்கார்ந்துகொண்டு, அன்றைய நிகழ்ச்சிகளை ஆராய ஆரம்பித்தாள் அவள். அவளது பொன் முகம் ஜன்னலோடு ஒன்றிக் கிடக்க, தனது நீண்ட விழிகளால் கண்ணீரை மனத்திருப்தியோடு ஓட விட்டவண்ணமே “காலையில் ஸ்ரீதரோடு ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குப் போன போது 'நானே மகாராணி!' என்று என்னுள்ளம் பாடிக் கொண்டிருந்தது. ஆனால் பின்னேரம் இப்படி ஆகிவிட்டதே” என்று ஏங்கினாள் அவள்.

உண்மையில் அன்றைய காலையைப் போல் அவள் உலக இன்பத்தை மட்டின்றி அனுபவித்த நாள் அவள் வாழ்க்கையிலேயே வேறு இல்லை. தந்தையாரின் கல்யாண அனுமதியினால் களிப்பில் திளைத்த மனதோடு அதிகாலையிலேயே படுக்கை விட்டெழுந்து பைப்பிலே நீராடிப் பெளடரிட்டுப் பொட்டிட்டுப் பட்டணிந்து கொண்டு தன் காதலனைக் காண உல்லாசமாகப் பல்கலைக் கழகம் வந்ததும், அங்கே அழகொழுகும் தனது மனதிற்குகந்த காதலனைச் சந்தித்து, இன்ப மொழிகள் பேசி, டாக்ஸியில் தோளோடு தோள் உராய - ஐஸ்கிறீம் பார்லருக்குச் சென்றதும், அங்கே வாய்க்கினிய ஐஸ்கிறீமைப் போதிய அளவு அருந்தி மனம் மகிழ்ந்ததும், எல்லாவற்றுக்கும் மேலாக அவளது அன்புக் காதலன் அவள் வளைக் கரங்களைத் தடவிக் கொடுத்த உடற் சுகமும் அவள் மனதில் திரைப்படம் போல் வந்துகொண்டிருந்தன. “ஆனால் சுவர்க்கமாக ஆரம்பித்த காலை பிற்பகல் நரகமாக மாறிவிட்டதே! தங்கமணிக்கு முன்னே என் கர்வமெல்லாம் அடங்கி இப்படி ஆகிவிட்டேனே. எப்படி நானென் தந்தைக்கு முன்னே போவேன்? எப்படித் தங்கமணிக்கு முன்னே தலை நிமிர்ந்து நடப்பேன்?” என்று யோசித்த வண்ணம் கண்களில் துளிர்த்த கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள், பத்மா.

இதற்கிடையில் அங்கு பஸ் டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டர் சிங்களத்தில் “நோனா, ஏன் அழுகிறீர்கள்?” என்றான். ஒப்புக்கொரு புன்னகை செய்து கொண்டு கண்ணைத் துடைந்த வண்ணம்  கைக்குட்டையில் முடிந்து வைத்திருந்த 25 சதத்தை அவனிடம் கொடுத்து “கொட்டாஞ்சேனைக்கு ஒரு டிக்கெட்” என்றாள் பத்மா.

பஸ் இப்பொழுது கொழும்பு நகர மண்டபத்துக்கு அண்மையாக வந்து கொண்டிருந்தது. அதன் ஜன்னல் வழியாக நகர மண்டபத்தின் உயர்ந்த கோபுரத்தைப் பார்த்து அதன் பளிச்சென்ற வெண்மையான தோற்றத்தைப் பத்மாவின் மனதில் ஒருபுறம் வியந்து கொண்டிருக்க, அதன் மறுபுறம் சிவநேசர் மீது சென்றது.

சிவநேசர் பெயர் நாட்டிலுள்ள மற்ற எல்லோருக்கும் எவ்வளவு பழக்கமோ அவ்வளவுக்கு அவளுக்கும் பழக்கம்தான். உண்மையில் அவரை நேரில் அவள் காணா விட்டாலும், நேரில் கண்டால் நிச்சயம் அடையாளம் கண்டு கொள்வாள். கம்பீரமான தோற்றம், வெள்ளைத் தலைப்பாகை, கழுத்து வரை பூட்டப்பட்டிருக்கும் வெள்ளைக் குளோஸ் கோட்டு, உத்தரீயம் ஆகியவற்றுடன் கூடிய அவரது படத்தை அவர் தர்மகர்த்தாவாக இருந்த கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலில் அவள் பல முறை பார்த்திருக்கிறாள். எப்போதோ ஒரு நாள் அவர் படத்தைத் “தினகரன்” பத்திரிகையிலும் பார்த்ததுண்டு. ஆம், உண்மைதான். ஸ்ரீதர் அவர் மகனாகத்தான் இருக்க வேண்டும். அவர் முகம் தான் அவனுக்கு. அதே பெரிய அகன்ற கண்கள். அதே கம்பீரத் தோற்றம். இருந்தும் இவ்விஷயத்தை ஏன் இதுவரை தான் கவனிக்கவில்லை என்று ஆச்சரியப்பட்டாள் பத்மா. “ நான் ஒரு மட்டி” என்று தன்னைத் தானே ஏசியும் கொண்டாள் அவள்.

பத்மா இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க “இப்பன்வலை” என்னும் ஹைட்பார்க் கோர்னரை அடைந்து, அங்குள்ள பஸ்தரிப்பில் நின்றது. அங்கே ஒரு கிழவியுடன், உடம்போடொட்ட உடை அணிந்து ஒய்யாரமாக நிமிர்ந்து நடை பயின்று வந்த ஓர் உயரமான யுவதியும், அவர்களுக்குப் பின்னால் மீசை வைத்த ஒரு வாலிபனும் ஏறினார்கள். இவர்களில் அந்த மீசையுள்ள வாலிபன் பத்மாவுக்கு நன்கு பழக்கமானவன். கமலநாதன் என்ற அவன் கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் 30ம் இலக்கத் தோட்டத்தைச் சேர்ந்தவன். அவனது இரு தங்கைகளுக்குப் பத்மா ஆங்கில பாடஞ் சொல்லிக் கொடுப்பது வழக்கம். பரமானந்தர் தமிழ் சொல்லிக் கொடுப்பார். ஐந்தாறு தடவைகள் கமலநாதன் அவர்கள் வீட்டுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணத்தைச் செலுத்துவதற்காக வந்து போயிருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் அவன் ஒரு மோட்டார் சைக்கிளில் தான் வருவான். இன்று தான் அவனை முதன்முதலாக பஸ்ஸில் சந்தித்தாள் பத்மா.

மனதில் பெருங் கவலையோடிருந்த பத்மாவுக்கு அவனைப் பார்த்துச் சிரிப்பதா கூடாதா என்ற பதற்றம் ஏற்பட்டது. ஆனால், செத்த வீட்டில் கூட வருபவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தானே வேண்டியிருக்கிறது! இன்றைய உலகில் சிரிப்பு சந்தோஷத்தின் சின்னம் மட்டுமல்ல, அறிமுகத்தின் சின்னமுமாகவல்லவா மாறிவிட்டது! இன்னும் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதோடு தனக்குப் பணம் தந்து தங்கையைப் படிக்க அனுப்பும் ஒருவனை அவள் எப்படி அலட்சியம் செய்ய முடியும்? ஆகவே வேறு வழியின்றி இருவர் கண்களும் சந்தித்ததும் உப்புச் சப்பில்லாத அறிமுகச் சிரிப்பொன்றை உதிர்ந்தாள் அவள். அவள் அவ்வாறு சிரித்திருக்காவிட்டால் கர்வம் பிடித்தவள் என்று அவன் கணித்திருக்கலாமல்லவா?

ஆனால் கமலநாதன் நிலைமையோ வேறு. தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பானாலும் ஏதோ எதிர்பர்த்தது கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அவனது முகத்திற் பொங்கப் பதிற் புன்னகை செய்தான் அவன். அது வெறுமனே முகத்தின் புன்னகையாக மட்டும் தோன்றவில்லை. உள்ளமும் சேர்ந்து சிரித்தது போன்ற மென்மையான புன்னகை அவன் அதரங்களில் தவழ்ந்து அவனது சிவந்த கன்னங்களையும் மலர வைத்தது.

இப்பொழுது பஸ்ஸில் சுமாரான கூட்டம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு ஆசனங்களே காலியாக இருந்தன. ஆகவே வேறு வழியில்லாமல் பத்மாவுக்குப் பக்கத்திலிருந்த வெற்று ஆசனத்தில் கமலநாதன் உட்கார்ந்து கொண்டான். பத்மா அவனுக்கு ஒதுங்கி இடம் கொடுத்ததோடு இரண்டாம் முறையும் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

பத்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்த கமலநாதன் திடீரென அவள் முகத்தைத் திரும்பிப் பார்த்தபோது, கைக்குட்டையால் பலமுறை துடைக்கப்பட்ட பின்னரும் கண்களின் ஓரத்தில் இன்னும் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கண்ணீர்த் துளியைக் கண்டு கொண்டான். அதைப் பார்த்ததும், பத்மா அழுதிருக்கிறாள் -- அதன் காரணம் யாதாக இருக்கலாம் என்பதை அறிய வேண்டும் என்ற ஒரு துடிப்பு அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் தனிப்பட்டவர்களின் இப்படிப்பட்ட சொந்த விவகாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் தமக்கு ஏற்படும் போது பண்புள்ள மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதையே கமலநாதனும் செய்தான். அதாவது தனது ஆவலை அப்படியே அடக்கிக்கொண்டான்.

இதற்கிடையில் தன் கண் தன்னைக் காட்டிக் கொடுக்கிறது என்பதை உணராத பத்மா, அவனுடன் பேச்சுக் கொடுக்க எண்ணி “ஏன் இன்று பஸ்ஸில் பிரயாணம் செய்கிறீர்கள்? உங்கள் மோட்டார் சைக்கிள் எங்கே?” என்று கேட்டு வைத்தாள்.

கமலநாதன் இப்படியொரு கேள்விக்காகவே தவங்கிடந்தவனைப் போன்று உற்சாகமாகப் பதிலளித்தான்: “சென்ற வாரம் நான் ஒரு மோட்டார் விபத்தில் மாட்டிக்கொண்டேன். அதனால் எனது சைக்கிளில் சிறிது பழுது ஏற்பட்டது. கராஜில் திருத்தப் போட்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் கிடைத்துவிடும்” என்று கொண்டே தனது உருண்டு திரண்ட வலது கை மணிக்கட்டில் பிளாஸ்டரால் போடப்பட்டிருந்த பெரிய கட்டைக் காண்பித்தான்.

பத்மா, “அப்படியா? ஆனால் உங்கள் தங்கை விமலாவோ, லோகாவோ  இதைப் பற்றி வீட்டில் ஒன்றும் சொல்லவில்லையே? காயம் பலமோ?” என்று கேட்டாள்.

கமலநாதனுக்கு அவளது அக்கறையான பேச்சு ஒருவகைத் திருப்தியைத் தந்திருக்க வேண்டும். ஆகவே, புன்னகையுடன் “உங்களுக்கு எத்தனையோ கவலைகள் இருக்கும். அவற்றுக்கிடையே இந்த அர்த்தமற்ற செய்தியை ஏன் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற அவர்கள் எண்ணியிருக்கலாம்” என்றான் குறும்புப் பார்வையோடு.

பத்மா அவனது கறுத்தடர்ந்த மீசையைப் பார்த்த வண்ணமே பருவத்துக்கேற்ற பரிகாசப் பேச்சுக்கள் பேசுகிறான் என்று எண்ணிக்கொண்டு, “எனக்கா கவலைகள்? யார் சொன்னது?” என்று கேட்டாள்.

“யாரும் சொல்ல வேண்டியதில்லையே? உங்கள் கண்களில் இப்பொழுது கூட ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணீர்த் துளிகள் உங்கள் மனதை அப்படியே காட்டுகின்றன. கண்களைத் துடையுங்கள்” என்றான் கமலநாதன்.

பத்மா திடுக்கிட்டுக் கைக் குட்டையை எடுத்துக் கண்கள் இரண்டையும் அவற்றால் நன்றாகத் தேய்த்துத் துடைத்துக் கொண்டாள்.

“பார்த்தீர்களா, நீங்கள் நன்றாக அழுதிருக்கிறீகள். உங்கள் காதலனைப் பற்றிய பிரச்சினை ஏதாவது உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்க வேண்டும்” என்றான் கமலநாதன்.

“என் காதலனா? நீங்கள் சரியான ஆள். அப்படி ஒன்றும் இல்லை” என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன் கமலநாதன் “உங்கள் காதலனைப் பற்றி எனக்கெல்லாம் தெரியும். அவர் பெயர் ஸ்ரீதர் என்றும், வாட்டசாட்டமான ஆள் என்றும் விமலாவும் லோகாவும் வீட்டில் பேசிக் கொண்டார்கள். ஏன் இந்த விஷயம் கொலீஜ் ரோட்டில் பலருக்கும் தெரிந்ததுதான்” என்றான்.

பத்மா இதைக் கேட்டு மெளனமானாள். ஸ்ரீதரின் ஆள் மாறாட்ட மோசடி உடனே முற்றாக ஞாபகத்துக்கு வர, மீண்டும் கண்ணோரத்தில் வெளி வருவதற்குத் திமிறிய கண்ணீர்த் துளிகளை அவ்வாறு வெளிவராது கட்டுப் படுத்துவதற்குப் படாத பாடு பட்டாள் அவள். ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பி வீதிக் காட்சிகளில் மனதைச் செலுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்த அவளின் நிலையைக் கமலநாதன் ஓரளவு யூகித்துக் கொண்டு “உங்கள் மனதைப் பெரிய கவலை ஒன்று வருத்துகிறது என்று தெரிகிறது. என்ன விஷயம்?” என்று கேட்டான் அனுதாபத்துடன்.

பத்மா, அவன் மிகவும் சகஜமாக உரையாடும் முறையைக் கண்டு திடுக்கிட்டாள் என்றாலும் வீட்டுக்கு வந்து போகும் ஒருவன், தந்தையாரையும் தனது நிலையையும் நன்கு தெரிந்த ஒருவன் அவ்வாறு பேசும்போது அதனைக் குற்றமாக எண்ண முடியவில்லை.

இன்னும் கமலநாதன் மரியாதையாகவும் பண்போடுமே உரையாடினான். மேலும் அப்போது அவளிருந்த மனநிலையில் யாருடனாவது பேச வேண்டும் போன்ற ஓர் உணர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டது. உண்மையில் தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் அவனிடம் பூரணமாகக் கொட்டிவிடுவோமா, அவனது ஆலோசனைகளைக் கேட்போமா என்ற எண்ணம் கூட அவளுக்கு உண்டாகியது. ஆனால் அதற்கு அவள் மனம் நாணியது என்பது ஒரு புறமிருக்க, பஸ்சும், சீக்கிரமே கொட்டாஞ்சேனையை அடைந்துவிடும்; அதற்கிடையில் தான் விரும்பிய எல்லாவற்றையும் கூற நேரம் போதாது என்ற மற்றோர் எண்ணமும் அவள் பேச்சைக் கட்டுப்படுத்தியது. ஆகவே அவள், “என் கவலையை உங்களுக்குக் கூறி என்ன பிரயோசனம்? உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றாள்.

அதற்குக் கமலநாதன் “அப்படிச் சொல்வது தப்பு. இவ்வுலகில் ஒருவர் கவலையை இன்னொருவருக்குச் சொல்வதால் கவலையில் பாதிக் கனம் குறைகிறது. அது மட்டுமல்ல உங்கள் கவலை தீர எனக்குத் தெரிந்த ஆலோசனைகளையும் நான் கூற முடியுமல்லவா?” என்றான்.

அதற்கு பத்மா “உங்களை எனக்குப் போதிய அளவு தெரியாத நிலையில் நான் உங்களிடம் என் கவலைகளைச் சொல்வது எப்படி?” என்றாள்.

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு என்னைத் தெரியாவிட்டாலும், எனக்கு உங்களைத் தெரியும். உங்கள் அப்பா சில சமயங்களில் உங்களைப் பற்றி என்னுடன் பேசியிருக்கிறார். இன்னும் விமலாவும் லோகாவும் வீட்டில் உங்களைப் பற்றி அடிக்கடி அரட்டையடிப்பது வழக்கம். நீங்கள் கொலீசுக்குப் போகும்போது எதை எப்படி உடுத்துவீர்கள். தலையை எப்படி எப்படியெல்லாம் அழகாகப் பின்னிக் கட்டுவீர்கள் என்பது பற்றிக் கூட அவர்கள் பேசிக்கொள்வார்கள். அம்மா கூட உங்களைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இன்றுதான் இவ்வளவு தூரம் உங்களுடன் பேச்சு கிடைத்தது என்றாலும், நான் உங்களை ஓர் அந்நியனாகக் கருதவில்லை. ஆகவே உங்கள் பிரச்சினையைக் கூறினால், என்னால் சில ஆலோசனைகளைக் கூற முடியுமென்றே எண்ணுகிறேன். இன்னும் எனக்கு அன்றாட மனோதத்துவதில் நல்ல ஈடுபாடு. உண்மையில் மனோதத்துவ நூல்களைத் தான் நான் அதிகமாக வாசிப்பது வழக்கம். சொல்லுங்கள் உங்கள் பிரச்சினையை. நான் நல்ல தீர்ப்பும் கூறுகிறேனா இல்லையா என்று பாருங்கள்” என்று கூறினான் கமலநாதன்.

பத்மா, “அப்படியா? உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியுமென்று எனக்குத் தெரியாமற் போனதே, பரவாயில்லை. எனது கவலையைப் பற்றி வேறொரு சமயத்தில் உங்களோடு பேசுவேன். இப்பொழுது பேசுவதற்கு நேரமும் போதாது. இதோ, பஸ் வண்டியும் மசங்கமாச் சந்திக்கு வந்துவிட்டது. அடுத்த பஸ் தரிப்பில் நாங்கள் இறங்க வேண்டுமல்லவா?” என்றான்.

கமலநாதன் “ஆம். நாங்கள் வேறு சமயத்தில் பேசிக்கொள்வோம். ஆனால் என்றும் எப்பொழுதும் என்னாலியன்று உதவிகளை நான் உங்களுக்குச் செய்யச் சித்தமாயிருக்கிறேன்” என்றான்.

சிறிது நேரத்தில் கொட்டாஞ்சேனையில் பஸ் நின்றதும் இருவரும் கீழே இறங்கித் தத்தம் பாதைகளில் பிரிந்து சென்றார்கள். நாங்கள் இருக்கும் வட்டாரத்தில் ஜோடியாகப் போனால் பலரும் பலவிதமாகக் கதைத்துக்கொள்வார்கள் என்ற அச்சமே அவர்களை அவ்வாறு செய்யும்படி தூண்டியது. இல்லாவிட்டால் கொலிஜ் ரோட்டுக்குப் போகும் இருவரும் ஜோடியாகவே பேசிக்கொண்டு சென்றிருக்கலாம். 

மனக்கண் நாவலில் கமலநாதன் வீதியில் நடந்த பத்மாவின் மனம் அன்று காலையிலிருந்து ஒன்றன்பின்னொன்றால் நடைபெற்ற அனுபவங்களை இசை மீட்டுக் கொண்டிருந்தது. ஒரே நாளில் எத்தனை சம்பவங்கள்! ஸ்ரீதருடன் முதன்முறையாக ஐஸ்கிறீம் ‘பார்லரு’க்குப் போய்க் கைகோத்துக் காதல் மொழி பேசிய இன்ப அனுபவம், பஸ் தரிப்பில் தங்கமணியின் சந்திப்பும் அதனால் ஏற்பட்ட விளைவும், பஸ்ஸிலே இப்பொழுது கமலநாதனுடன் உரையாடக் கிடைத்து சந்தர்ப்பம்.. அப்பாடா வாழ்க்கை என்பது பஞ்சகல்யாணிக் குதிரை வேகத்தில் அல்லவா போகிறது! சாதாரணமாக நத்தை வேகத்தில் கூடப் போகாத  அவளது வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே என்று அதிசயித்தாள் அவள். முன்மெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக, எவ்வித சம்பவமுமற்ற நாளாக, சுவையற்ற முறையில் கழியும். அதனால் ஏற்படும் சலிப்பைப் போக்க, தோட்டத்துப் பிள்ளைகளைக் கூட்டி வைத்து விளையாட்டுச் சொல்லிக் கொடுப்பது, அவர்களில் பெண் குழந்தைகளுக்குத் தலைவாரிப் பின்னி விடுவது, விடுதலை நாட்களில் கோயிலுக்குப் போவது போன்ற எதையாவது செய்வாள் அவள், இந்நிலைமை. அவள் நாடக மன்ற இணைக் காரியதரிசியாகிய பின்னர்தான் ஓரளவு மாறியது. ஸ்ரீதரின் காதலிணைப்பு ஏற்பட்ட பின்னர் அவனை அடிக்கடி காண்பதும், அவன் வீட்டுக்கு வருகையில் அவனோடு தந்தைக்குத் தெரியாது கண்ணாலும், வாயாலும் கைகளாலும் பேசிக் கொள்வதும், அவனைப் பற்றி நினைத்து நினைத்துப் புத்தக நிகழ்ச்சிகள் போல் அவளுக்குத் தோன்றின. அந்நிகழ்ச்சிகளில் சில அவளது உள்ளத்திற்கு வேதனையையும் விழிகளுக்குக் கண்ணீரையும் கொண்டு வந்த போதிலும் “வாழ்க்கையை வாழுகிறேன்” என்ற ஜீவ உணர்வு முன்னெப்போதிலும் பார்க்க இன்று அவளுக்கு மிக அதிகமாக ஏற்பட்டது. மனித இதயத்துக்குத் துன்பத்தை அனுபவிப்பதில் கூட இன்பம் இருக்கிறது. பலருக்கு வெறும் உப்புச் சப்பற்ற வாழ்க்கை வாழ்வதைவிட துன்பகரமான வாழ்க்கைகூட அதிக திருப்தியைத் தருகிறது. உண்மையில் வெறுமனே சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், மீண்டும் சாப்பிடுகிறோம்  என்ற வாழ்க்கையை யார்தான் விரும்புவார்கள்!

ஸ்ரீதர் பொய்காரன் - அழகன் தான். கலைஞனும் கூடத்தான். பண்புள்ளவன் தான். ஒரு பெண்ணின் இதயத்தை மகிழ வைக்கும் அத்தனை சிறப்பம்சங்களும் பொருந்தியவன் தான். இருந்தாலும் என்ன பயன்? அவன் ஏன் பொய் சொன்னான்? என்னை ஏமாற்றிக் கைவிட்டு ஓடுவதற்காகத்தான் இருக்க வேண்டும். பணக்காரரின் போக்கு இதுதான் போலும்! பொய் விலாசம் கூறிப் பொல்லாங்கு செய்ய நினைத்த அவனுடன் மேலும் சிநேகமாய் இருப்பதும், அவனைக் காதலனாய் மதித்து உறவாடுவதும் ஆபத்தைக் கொண்டு வராவா? என்பன போன்ற கேள்விகள் பத்மாவின் உள்ளத்தில் எழுந்தன. இக்கேள்விகளைத் தொடர்ந்து அவர்களது தோட்டத்தில் 21ம் இலக்க வீட்டில் வசித்த குசுமா என்ற சிங்களப் பெண்ணின் பரிதாப நினைவும் அவளுக்கு ஏற்பட்டது. கட்டழகியான குசுமா தனது காதலனால் ஏமாற்றப்பட்டு இப்பொழுது ஒரு பிள்ளைக்குத் தாயாகிவிட்டாள். அவள் காதலனோ அவளைக் கைவிட்டுவிட்டு எங்கோ ஓடிப் போய்விட்டான். முழுத் தோட்டத்தாலும் ஒழுக்கங் கெட்டவள் என்று வர்ணிக்கப்பட்ட அவள் நினைவு வந்ததும் குசுமாவின் காதலன் போலவே ஸ்ரீதரும் வஞ்சனைத் திட்டம் ஒன்றை நிறைவேற்றி விட்டு, மெல்ல மறைவதற்குத் தான் தன் ஆள்மாறாட்ட நாடகத்தை ஆடியிருக்கிறான் என்று எண்ணினாள் பத்மா.

“உண்மையில் நான் தங்கமணியைக் கோபிப்பது பிசகு. அவளில்லா விட்டால் ஸ்ரீதரின் களவு வெளிப்பட்டிருக்காதல்லவா?” என்று கூடத் தனக்குள் தானே கூறிக்கொண்டாள் அவள்.

வீதியில் நடந்துகொண்டிருந்த பத்மாவின் எண்ணத்தில் கமலநாதனும் அடிக்கடி காட்சி தந்தான். அவளை அறியாமலே ஸ்ரீதருடன் கமலநாதனை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது அவள் மனம். கமலநாதன் எனக்குத் தெரிந்தவன். அருகில் வசிப்பவன். அவனால் என்னிடம் இப்படிப்பட்ட பொய் சொல்லியிருக்க முடியாது. மேலும், அவனும் அழகன்தான். ஸ்ரீதரின் செருக்கான ஆடம்பரத் தோற்றம் இல்லாவிட்டாலும் அவனும் ஒரு சினிமா நடிகன் போன்ற கவர்ச்சி கொண்ட காளை தான். இன்னும்  அவன் பல்கலைக் கழகப் பட்டதாரியல்ல என்றாலும் யோக்கியமான உத்தியோகம் செய்பவன் தான். முனிசிப்பல் சுகாதாரப் பரிசோதகன். தங்கைகள் மீதும் தாயின் மீதும் பிரியம் கொண்டவன். என் மீதும் அன்புள்ளம் கொண்டவன். ஸ்ரீதருக்கு மீசை இல்லை. எல்லோரும் மீசை வைக்க வேண்டியது அவசியமில்லை என்றாலும் கமலநாதனின் கறுத்தடர்ந்த அரும்பு மீசை அவனுடைய சிவந்த முகத்துக்கு ஓர் அழகைக் கொடுக்கத்தான் செய்கிறது. இவ்வாறு பத்மாவின் மனம் எதை எதையோ எல்லாம் சிந்தித்தது. “கமலநாதனுக்கு என் மீது ஆசை. என்னதான் உலகத்துக்குப் பயந்து பண்பாக நடந்து கொண்டாலும் அவன் என்னைப் பார்த்தப் பார்வையும் என்னுடன் பேசுவதில் காட்டிய ஆர்வமும் அதை எனக்கு வெளிக் காட்டவே செய்தன” என்று பலவாறு எண்ணினாள் அவள். “ஸ்ரீதர்  தனது பொய் வெளியாகியதும் எனது வாழ்க்கையை விட்டு அகன்றுவிட்டால் நான் என்ன செய்வது?” என்ற பீதியும் பத்மாவுக்கேற்பட்டது. அப்பா என்ன சொல்லுவார்? தனது மகளின் திருமணப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நினைத்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அவர் திடுக்கிட்டுவிட மாட்டாரா? மேலும், தோட்டத்திலுள்ள பலருக்கும் ஸ்ரீதர் வருவதும் போவதும் தெரிந்திருந்தன. அவர்கள் வேறு பரிகாசம் செய்வார்கள். ஐயையோ! இதை எல்லாம் எப்படிச் சமாளிப்பது? கட்டிய கோட்டைகள் எல்லாம் இடிந்து விட்டனவே! - என்று கவலையில் மூழ்கினாள் அவள்.

ஓர் இள வாலிபனோடு சிநேகமாய் இருப்பதால் ஒரு  யுவதிக்கு ஏற்படும் கர்வம், இன்பம், மனப்பூரிப்பு ஆகியவற்றை அன்று தான் பத்மா பரிபூரணமாக அனுபவித்திருந்தாள். காலையில் அந்த உணர்ச்சிகளில் மூழ்கி, வாழ்க்கையை மனதார அனுபவித்துக் கொண்டிருந்த போது, அதை ஒரு நாளோடு திடீரென முடிவுறும் சிறுகதையாக அவள் எண்ணவில்லை. பல காலம் நீடிக்கும் ஒரு தொடர் கதையாக அது வளர்ந்து வரும் என்றே அவள் எதிர்பார்த்தாள். ஆனால் என்ன செய்வது? எல்லாம் வேறு விதமாகப் போய்விட்டன. ஸ்ரீதர் என்னை ஏமாற்றிவிட்டாள். நாளை நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அவன் திணறுவான். அதன் பின் தன் களவு வெளிப்பட்டுவிட்டதே என்றெண்ணி ஓடி ஒளிந்து கொள்வான். பின்னர் அவன் என்னைத் தேடி வரமாட்டான். இன்னும், அவன் என்னை மனதார மணம் முடிக்க விரும்பினால் கூட, கோடீஸ்வரரான சிவநேசர் அதை அனுமதிப்பாரா? ஆகவே, சீக்கிரமே நான் தனித்துவிடுவேன். பிறகு, புது மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுதான். ஆனால் ஸ்ரீதரைப் போல் அற்புதமான, மனங் கவரும் மாப்பிள்ளை எங்கே கிடைப்பான்? கடந்த இரண்டு மாதங்களாக அவனுடைய உறவால் ஏற்பட்டிருந்த காதல் மலர்ச்சிக்கு முடிவு வந்துவிடும். அதை என்னால் தாங்க முடியுமா? காதல் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத கறிபோல் மீண்டும் சப்பென்று ஆகிவிடுமோ, என்ன செய்வது?

பொழுது போவது எப்படி? புத்தகமும் கையுமாக இருக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் அப்பாவுடன் தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இல்லை, அப்பாவுடன் நீண்ட நேரங்கள் பேசி அவளுக்குப் பழக்கமில்லை. அடுத்த வீட்டு அன்னம்மாவுடன் அரட்டை அடிக்கலாம். ஆனால் அவளுக்குத் தோசையைப் பற்றியும், உழுந்தைப் பற்றியும் இறந்து போன அவளது கணவனைப் பற்றியும் தான் பேசத் தெரியும்? இன்னும் மனதைக் கவர்ந்த ஓர் ஆணழகனுடன் பேசும் கொஞ்சு மொழிகளுக்கு அவை ஈடாகுமா, என்ன? பருவத்தின் தாகத்தை அவை தணிக்குமா? ஸ்ரீதருக்குப் பதிலாகக் காதலர்களைச் சம்பாதிப்பது கஷ்டமல்ல. பத்மாவின் பொன்னிற உடலும் தளுக்கு நடையுமே போதும் அதற்கு. ஆனால் கல்யாணம் என்ற முடிவு வரை நின்று பிடித்து, வாழ்க்கைத் துணையாக அவளுடன் வரத் தயாராக இருக்கும் நல்ல காதலன் எங்கே கிடைப்பான் என்று கவலையடைந்த பத்மா மனதில் கறுத்தடர்ந்த மீசை கொண்ட கமலநாதன் மீண்டும் காட்சியளித்தான்.

ஆனால் அவளுக்கு அதனால் மீண்டும் இன்பம் ஏற்படவில்லை. தான் இதுவரை தீட்டியிருந்த காதற் கனவும் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று முரணான இரு துருவங்கள் போல் அவளுக்குக் காட்சியளித்தன. உண்மையில் பத்மா தனது காதலை ரோமியோ - சூலியட், லைலா - மஜ்னு காதலுக்குச் சமமான ஒரு காதலாகவே இது வரை எண்ணியிருந்தாள். அத்தகைய காதலில் கமலநாதன் போல் ஓர் இரண்டாம் காதலனுக்கு இடமேது? ஆகவே கமலநாதனின் நினைவு வரக் கூடாதென்றே அவளது மனதின் ஒரு பகுதி விரும்பியது. ஆனால் ஸ்ரீதருக்கும் ரோமியோ - மஜ்னுவுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அழகிலும் கவர்ச்சியிலும் ஒரு வேளை ஸ்ரீதர் ரோமியோவையும் மஜ்னுவையும் மிஞ்சியவனாகக் கூட இருக்கலாம். ஆனால் காதலில்...? ரோமியோவோ, மஜ்னுவோ ஸ்ரீதரைப் போல் பொய்யர்களல்ல. குசுமாவின் காதலனைப் போல் தங்கள் காதலியரைக் கற்பழித்துவிட்டுக் கம்பி நீட்டியவர்களல்ல. அவர்கள் தங்கள் காதலிமாருக்குப் பொய் விலாசம் கொடுத்துக் காதல் புரிந்துவிட்டு ஓடிப் போனவர்களல்லவே! ரோமியோ சரியாக நடந்தால் சூலியட்டும் சரியாக நடந்து கொள்வாள். ஆனால் இன்றைய கள்ள ரோமியோக்களுக்கு நல்ல சூலியட்டுகள் எங்கே கிடைப்பார்கள்? ஸ்ரீதரும் ஒரு கள்ள ரோமியோ தானே? அவனுக்காக என் வாழ்க்கையை நான் நாசமாக்கிக் கொள்ளக் கூடாது. மேலும் உயிர் துறக்கும் காதல் எல்லாம் நாடகத்துக்கும் காவியத்துக்கும்  தான் சரி. இன்றைய உலகுக்குச் சரிப்படாது. மேலும் அக்காலத்துக்கு லைலா - மஜ்னு காதல் ஆதர்சம் என்றால், இன்றைய உலகிற்கு ஹொலிவூட் நடிகர்களின் காதல்தான் ஆதர்சம். இளவரசர் அலிகான் - ரீட்டா ஹேவொர்த் காதல்தான் இன்றைய உலகிற்கு முன்மாதிரி. உலகம் அவர்களைப் புறக்கணித்துவிட்டதா என்ன? உயர்த்தித்தானே பேசுகிறது? அன்று சூலியட் புகழை ஷேக்ஸ்பியர் பாடினார். இன்று அலிகான் - ரீட்டா காதலைப் பத்திரிகையாளர்கள் பாடுகிறார்கள். ஆகவே ஸ்ரீதர் போனால் புதிய மாப்பிள்ளை வேண்டும் என்று எண்ணுவதில்  என்ன தவறிருக்கிறது? இன்றைய நாகரிகப் பெண்கள் உலகெல்லாம் செய்வதைத்தானே நானும் செய்ய நினைக்கிறேன்? ஆனால் காதலனைத் தேடும் படலத்தில் மறுபடியும் இன்னொரு பொய்யனைத் தேடிக்கொண்டுவிடக் கூடாது. கமலநாதன் பற்றிய விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். அவனால் என்னிடம் பொய் கூற முடியாது. அவனையே என் காதலனாக ஏற்றுக் கொண்டாலென்ன? அழகும் பண்பும் கொண்ட அவன் பஸ்ஸில் எவ்வளவு அருமையாக என்னுடன் பழகினான்? என்னுடன் நெருங்கிப் பழக அவனுக்குச் சிறிது இடம் கொடுத்தாலென்ன? ஸ்ரீதர் மீது எனக்கு ஆசை ஏற்பட்டதும் அவன் செய்தது அதுதானே? நான் இப்பொழுது இந்தத் துறையில் அனுபவசாலி. ஒன்றும் தெரியாத நிலையிலேயே சிறிதும் அனுபவம் இல்லாமலே ஸ்ரீதர் விஷயத்தில் நான் வெற்றி பெற்றேன். எனவே கமலநாதன் விஷயத்தில் வெற்றி பெறுவது மிக மிகச் சுலபம்! இன்னும் கமலநாதனுக்கோ என்னை ஏற்கனவே பிடித்திருக்கிறது. லோகாவும் விமலாவும், என் பின்னலைப் பற்றிப் பேசுவார்களாம்! சாமர்த்தியமாகத் தனக்கு என் மீதுள்ள ஆசையை எவ்வளவு தளுக்காக வெளிப்படுத்திவிட்டான் அவன்? அவளது அம்மாவுக்கும் என்னைப் பிடிக்கிறதாம்!

கமலநாதனுக்கு என் மீது காதல்தான். ஐயமில்லை. பத்மா இவ்வாறு யோசித்து முடிவதற்கும் வீட்டுக்குள் புகுவதற்கும் சரியாய் இருந்தது. அப்பா பரமானந்தர் சாய்மனை நாற்காலியில் பத்திரிகை வாசித்தபடியே தூங்கிப் போயிருந்தார். ஓசைப்படாது உள்ளே புகுந்த பத்மா, கண்களை நிமிர்த்திச் சுவரிலிருந்த பழைய கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரண்டாகியிருந்தது. வழக்கம் போல் அடுத்த வீட்டு அன்னம்மா மத்தியான உணவை மேசை மீது பரப்பியிருந்தாள். கருவாட்டு மணம் மூக்கைத் துளைத்தது. அதைச் சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் கட்டிலில் படுத்திருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், “ஹாண்ட் பாக்”கையும் படிக்கும் மேசை மீது அலுப்போடு வீசிவிட்டுத் தனது அறைக்குள் புகுந்தால் பத்மா. அப்பொழுது “இன்னும் ஒரு மணி நேரத்தில் கமலநாதனின் தங்கையர் இருவரும் வருவார்கள். அவர்களின் வாயைக் கிண்டி அவர்கள் அண்ணனைப் பற்றிப் பேச வேண்டும்” என்றும் தீர்மானித்தாள்.

அதே நேரத்தில் கொலீஜ் ரோடு 30ம் இலக்கத் தோட்டத்திலிருந்த கமலநாதன் வீட்டில் ஒரு சம்பவம்.

விமலாவும் லோகாவும் அவர்கள் புத்தகங்களை அழகாக அடுக்குவதில் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“பார்த்தாயா, எனது புத்தகங்கள் தான் அழகு!” என்றாள் விமலா.

“போ, என் புத்தகங்கள் தான் அழகு. இதோ பார். உன் புத்தகத்தின் மட்டையில் எவ்வாறு மையைக் கொட்டி வைத்திருக்கிறாய்!” என்றாள் லோகா.

“அந்த மை நீ கொட்டியதுதானே!” என்று சீறினாள் விமலா.

கமலநாதன் “என்ன சண்டை?” என்று கொண்டே உள்ளே நுழைந்தவன் “உங்கள் டீச்சர், வாசிப்பதற்குப் புத்தகம் கேட்டதாகச் சொன்னாயல்லவா? நான் ஒரு புத்தகத்தைத் தருகிறேன். கொண்டு போய்க் கொடுங்கள்’ என்றான்.

“என்னிடம் கொடு, அண்ணா.” என்றாள் விமலா.

“என்னிடம் கொடு, அண்ணா. நான் தானே டீச்சருக்குப் புத்தகம் வேண்டுமென்று உன்னிடம் சொன்னேன்?” என்றாள் லோகா.

“சரி. இரண்டு புத்தகம் கொடுக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கொண்டு போங்கள். ஆனால் பத்திரமாகத் திருப்பி வாங்கித் தந்துவிட வேண்டும்.” என்றான் அண்ணன்.

அதன் பிறகு தன் புத்தக அலமாரியிலிருந்து இரு புத்தகங்களை எடுத்துக் கொடுத்தான் கமலநாதன். ஒன்று “கவலைகளைத் தீர்ப்பதெப்படி?” என்ற ஆங்கில மனோதத்துவ நூல். மற்றது தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட காதல் நவீனம்.

விமலாவும் லோகாவும் மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டார்கள். “எனது புத்தகம் தான் அழகானது” என்றாள் ஆங்கில புத்தகத்தைப் பெற்றா விமலா. “கதைப் புத்தகம் தான் டீச்சருக்குப் பிடிக்கும். பார்ப்போமா?” என்றாள் லோகா துள்ளிக்கொண்டு.

கமலநாதன் தங்கையின் பேச்சைக் கேட்டுத் தனக்குள்ளே சிரித்துக்கொண்டானாயினும் பஸ்ஸில் பத்மாவின் சந்திப்பால் ஏற்பட்ட மனச்சலனம் அவன் மனதில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியிருந்தது. “ பிறனொருவனால் நேசிக்கப்படும் ஒரு பெண் மீது நான் என் புலனைச் செலுத்துவது சரியா?” என்பதே அது.


6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்

தொடர் நாவல்: அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீரெனக் கோட்டைக்குப் போய் ஓவியம் வரைவதற்கு வேண்டிய சில பொருள்களை வாங்க வேண்டுமென்ற நினைவு வர, டாக்ஸி டிரைவரிடம் கோட்டைக்குப் போகும் படி உத்தரவிட்டான். ஏற்கனவே அவன் கொண்டு வந்திருந்த வண்ண மைகளும், ஓவியத் தாள்களும் தீர்ந்து போயிருந்ததால் அவன் அவற்றை இன்று சற்று அதிகமாகவே வாங்க வேண்டியிருந்தது. பொதுவாக ஸ்ரீதரின் பொழுதுபோக்குக் கலைகளில் சித்திரம் எழுதுவது முக்கியமான ஒன்றேயாயினும் இன்று அவன் அதில் இவ்வளவு நினைவாயிருந்ததற்குப் புதிய காரணம் ஒன்றும் இருக்கிறது.  தன் காதலி பத்மாவின் படமொன்றைத் தன் கையால் எழுத வேண்டுமென்று அவன் “ஐஸ்கிறீம் பார்லரி”ல் தனக்குள் முடிவு செய்திருந்ததே அது.

பத்மாவின் மது விழிகளும், அவற்றுக்கு மேலெல்லையாகக் கோதண்டம் போல் விளங்கிய அவளது வளைந்த புருவங்களும், அப்புருவங்களுக்கும் அவளது வண்டு விழிகளுக்குமிடையே துடிதுடித்துக் கொண்டிருந்த மயிரடர்ந்த பூவிதழ் போன்ற இமை மடல்களும் அன்று அவனை முன்னெப்போதுமில்லாத அளவுக்குக் கவர்ந்திருந்தன. காதல் வயபட்ட ஓர் ஆணின் கண்களிலே, ஒரு பெண்ணின் அழகு பார்க்குந்தோறும், புத்தெழில் பெற்றுப் பொலிகிறது. நல்ல கவிதையை வாசிக்க வாசிக்க, அதில் புதிய நயங்கள் தோன்றுவது போலக் காதற் கன்னியையும் பார்க்கப் பார்க்கப் புதிய அழகுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. “அவள் புறங்கை எவ்வளவு அழகாயிருக்கிறது! அவள் விரல்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன! அவள் நெற்றியில் காணப்படும் பூனை மயிர் கூட எவ்வளவு அழகு! நேற்று நான் அவற்றைக் காணாமல் கண்ணிருந்தும் குருடனாயிருந்ததற்குக் காரணம் என்ன? அவள் பால் எனக்குள்ள காதல் போதிய அளவு வளர்ச்சி பெறாததா?  அப்படியானால், நான் குற்றமுடையவனல்லவா?” என்று கூடக் காதலர்கள் தாபமடைவதுண்டு. பத்மாவைப் பொறுத்த அளவில் ஸ்ரீதரும் அவளிடத்துத் தினந்தோறும் ஒரு புதிய அழகைக் காணக் கூடிய காதற் பரவச நிலையிலேயே இருந்தான். “ஐஸ்கிறீம் பார்ல”ரில் வெகு அருகில் அமர்ந்து அவளது அழகைப் பல கோணங்களிலிருந்தும் அள்ளிப் பருகிய அவன், அவளைத் தெவிட்டாத பேரழகை ஓவியமாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். அந்த ஆசை தான் அதற்கு வேண்டிய பொருள்கள் யாவற்றையும் உடனே சித்தம் செய்யும்படி அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது. கோட்டைக்குப் போய் ஒன்றுக்குப் பதில் நாலு கடைகளில் ஏறி இறங்கி, அவற்றை வாங்கிக் கொண்டு அவன் வீடு வந்து சேர்ந்த பொழுது சரியாக மணி இரண்டாகி விட்டது. வேலைக்கார சுப்பையா கேட்டைத் திறந்து டாக்ஸியை பங்களா வளவுக்குள் அனுமதித்து, அதிலுள்ள சாமான்களை எடுக்க, ஸ்ரீதர் டாக்சிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, பங்களாவுக்குள் நுழைந்த பொழுது, அங்கே அவனை வரவேற்க, இன்பமான செய்தி ஒன்று காத்திருந்தது.

விறாந்தையில் நின்று கொண்டிருந்த சுரேஷ் “ஸ்ரீதர்! நான் பரீட்சையில் சித்தியடைந்துவிட்டேன். அதுவும் முதலாம் பிரிவில்!” என்றான் எக்களிப்போடு.

ஸ்ரீதருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தன் நண்பனின் வெற்றியைத் தனது வெற்றி போல் நினைத்து மகிழ்ந்த அவன் “அடி சக்கை! அப்படியானால் இந்த வெற்றியைக் கொண்டாட நாமிருவரும் இன்று படம் பார்க்கப் போக வேண்டும்” என்றான்.

“ஆகட்டும்” என்று தலை அசைத்தான் சுரேஷ். சுரேஷின் இப்பதில் ஸ்ரீதருக்கும் மிகுந்த களிப்பைத் தந்தது. படம் பார்க்கப் போகும் வழியிலும், திரும்பும் போதும் பத்மா சம்பந்தமான யாவற்றையும் சுரேஷிடம் பேசித் தீர்ந்துக் கொள்ளலாம் என்று அவன் நினைத்ததே அதற்குக் காரணம். ஸ்ரீதர் “சுரேஷ்! நீ பரீட்சையில் சித்தியடைந்து விட்டாய். ஆகவே இனி மேல் நான் உன்னைச் சும்மா சுரேஷ் என்று அழைக்கக்கூடாது. டாக்டர் சுரேஷ் என்று அழைக்க வேண்டும். கனம் டாக்டர் அவர்களே! இந்தச் சுப செய்தியைத் தாங்கள் தங்கள் அன்னையாருக்கும் அத்தை மகளுக்கும் அறிவித்துவிட்டீர்களா!” என்றான் கேலியாக.

“அதெல்லாம் காலையிலேயே தந்தி அடித்து விட்டேன். முதலில் மாமாவுக்கும் அத்தை மகளுக்குந்தான் தந்தி கொடுத்தேன். அவர்கள் என் விஷயத்தில் போட்ட முதலீடு நல்ல பங்குப் பணத்தைத் தந்துள்ளது என்பதை அறிவிக்க வேண்டியது என் கடனல்லவா? அம்மாவைப் பொறுத்தவரையில் நான் பாஸென்றாலும் பெயிலென்றாலும் நான் அவள் பிள்ளை. மாமாவுக்கோ நான் பாஸ் பண்ணினால் தானே டாக்டர் மாப்பிள்ளை! உண்மையில் நான் பரீட்சையில் தோற்றிருந்தேனானால் மாமாவின் பணத்தை மோசடி செய்தது போன்ற பெரிய குற்ற உணர்ச்சி எனக்கேற்பட்டிருக்கும்.” என்றான் சுரேஷ்.

“ஆனால் நிச்சயம் அவர் அப்படி எண்ணியிருக்க மாட்டார்.” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷ், “அதை எப்படி நாம் அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியும்? ஆனால் அந்தப் பிரச்சனைக்கே இப்போது இடமில்லை. நான் தான் முதலாம் பிரிவில் வெற்றி பெற்று விட்டேனே!” என்று கூறிவிட்டு, காதற் கதை கேட்கும் ருசியில் “ஸ்ரீதர்! பத்மாவை இன்று கண்டாயா? என்ன சொன்னாள்?”

ஸ்ரீதர், “அதெல்லாம் பெரிய கதை. இன்று நான் அவனைப் பம்பலப்பிட்டி ‘எஸ்கிமோ’வுக்குக் கூட அழைத்துச் சென்றேன். எல்லா விவரங்களும் பின்னர் சொல்லுகிறேன். நீயோ மூக்கு முட்டச் சாப்பிட்டிருக்கிறாய். எனக்கோ கடும் பசி என்று சொல்லிச் சாப்பாட்டு மேசைக்குத் தாவிச் சென்றுவிட்டான். காலையில் பத்மாவுடன் ஐஸ்கிறீம் அருந்திய பிறகு வேறொன்றும் உண்ணாததால் வயிற்றைக் காந்தும் கடும்பசி  அவனுக்கு!

சாப்பாட்டிற்குப் பிறகு நண்பர் இருவரும் விறாந்தையிலே மின்விசிறியின் கீழ் உண்ட களைப்புத் தீர இளைப்பாறினார்கள்.

“சுரேஷ்! நீ இங்கிலாந்துக்குப் போவதற்கு உனக்கு நல்ல “சூட்”டொன்றைப் பரிசளிக்க விரும்புகிறேன். எப்படிப்பட்ட சூட் வேண்டும்?”  என்றான் ஸ்ரீதர்.

“பரிசு எப்படி இருக்க வேண்டுமென்பது பரிசளிப்பவரின் மனதைப் பொறுத்தது. நானே எனக்கு இது வேண்டுமென்று கூறி, அதைத் தரும்படி உன்னிடம் கேட்டால், அது பரிசல்ல, பிச்சையாகும்.” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர், “அதுவும் சரிதான். அப்படியானால் நானாகவே உனது தோற்றத்துக்கு ஏற்ற சூட்டொன்றைத் தெரிந்தெடுத்துவிடுகிறேன். ரூபா எழுநூற்றைம்பது பெறுமதியான “டெர்லீன்” சூட்டொன்றையும் உயர்தரமான கைக் கடிகாரம் ஒன்றையும் வாங்கித் தருகிறேன்.” என்றான்.

சுரேஷ் திகைத்துவிட்டான். “எழுநூற்றைம்பது ரூபாவா? பணத்திற்கு எங்கே போவாய்? அப்பாவிடம் கேட்டு வாங்கப் போகிறாயா? எனக்குப் பரிசளிப்பதற்காக நீ அப்பாவிடம் பணம் கேட்கக்கூடாது” என்றான் அவன்.

ஸ்ரீதர், “அதற்கு அவசியமே இல்லை. என்னிடம் எனது சொந்தப் பணம் ஏராளமிருக்கிறது. உனக்குச் செலவுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேள். தருகிறேன்.” என்றான்.

“சொந்தப் பணமா!” என்றான் சுரேஷ் ஆச்சரியத்துடன்.

“ஆம். எங்களுக்குச் சொந்தமான தேயிலை, ரப்பர்த் தோட்டங்கள் கண்டியிலும் காலியிலும் இருக்கின்றனவல்லவா? அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை அப்பா ஹரிசன் கம்பெனியின் பொறுப்பில் விட்டிருக்கிறார். நிர்வாக வேலைகளுக்காக அவர்கள் வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்கிறார்கள். எஞ்சிய பணத்தில் மாதம் ஆயிரம் ரூபாவை எனது வங்கிக் கணக்குக்கும், இன்னோர் ஆயிரம் ரூபாவை அம்மாவின் கணக்குக்கும் எங்கள் கைச் செலவுக்காக அனுப்புகிறார்கள். அப்பாவின் உத்தரவு அது. மிச்சப் பணம் அப்பா கணக்குக்குப் போகிறது.” என்றான் ஸ்ரீதர்.

“அப்படியா விஷயம்? இது எனக்கு முன்னர் தெரியாது. நீ அப்பணத்தை என்ன செய்கிறாய்?” என்று கேட்டான் சுரேஷ்.

“என்ன செய்வது? அது தன் பாட்டில் கிடக்கிறது - இடையிடையே நான் எடுக்கும் இருநூறு முந்நூறு ரூபாய்களைத் தவிர்த்து, வேலைக்காரன் சம்பளம், டிரைவர் சம்பளம் தொடக்கம், வீட்டுச் செலவு, மின்சாரச் செலவு, பெட்ரோல் செலவு வரை அப்பா கட்டி விடுகிறார். ஆகவே எனது வங்கிக் கணக்கில் இப்பொழுது பல ஆயிரக் கணக்கான ரூபா இருக்க வேண்டும்.” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷ் சிரித்துக் கொண்டு “நீ செல்லப்பிள்ளை. ஆனால் ஒன்று நீ சிகரெட் குடிப்பதில்லை. மதுபானம் அருந்துவதில்லை. மற்றப் பணக்காரப் பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது நீ உயர்தரமானவன்” என்றான்.

ஸ்ரீதர், “என்ன, ஒருவன் மதுபானம் அருந்தாவிட்டால், சிகரெட் குடிக்காவிட்டால், உயர்ந்தவனாகி விடுவானா? நான் ஒரு மனிதன் உயர்ந்தவனாக வேண்டுமென்றால், சாக்ரட்டீஸ் போல் அல்லது மகாத்மா காந்தி போல ஏதாவது பெரிய காரியம், செய்ய வேண்டுமென்று எண்ணியிருந்தேன்.” என்றான்.

சுரேஷ், “அதுவும் சரிதான். ஆனால் நீ மற்றவர்கள் போல் மதுபானம் அருந்த நினையாததற்குக் காரணம் என்ன?” என்றான்.

“அதுவா? எந்த மதுபானமும் வாய்க்கு ருசியாக இல்லாதிருப்பதே அவற்றை நான் அருந்தாததற்குக் காரணம். சாராயம் தொடக்கம் விஸ்கி வரை எல்லாமே ஒரே கசப்பாகத்தானே இருக்கின்றன. சர்பத், பழரச பானங்கள், ஐஸ்கிறீம், பால் இவற்றின் சுவைதான் எனக்குப் பிடிக்கிறது. அதுதான் வேண்டிய நேரமெல்லாம் அவற்றைத் தாராளமாக அருந்துகிறேன்” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷிற்கு ஸ்ரீதரின் விளக்கம் பொருத்தமாகப் பட்ட போதிலும், விநோதமாக இருந்தது. அறிஞர் பெர்னாட்ஷா எங்கோ கூறியிருப்பது போல, இவ்வுலகில் உண்மையைப் போல விநோதமானதும் புதுமையானதும் வேறு இல்லை. பொய்மையின் நடுவே உண்மை விநோதப் பொருளாகத் தோன்றுவதில் என்ன ஆச்சரியம்?

“ஸ்ரீதர்! மதுபானம் அருந்தாததற்கு நீ சொன்ன விளக்கம் சரி. ஆனால் சிகரெட் குடிக்காததற்கு என்ன காரணம்?” என்றான் சுரேஷ்.

“மற்றவர்களின் சிகரெட் குடிப்பதற்கு என்ன காரணமோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் சிகரெட் குடிக்காததற்குக் காரணம், அது என் கையைச் சுட்டு விடுவதாகும். சில சமயம் சட்டையையும் சுட்டு விடுகிறது. இன்னும் அதன் சாம்பல் சட்டைகளைப் போட்ட உடனேயே அழுக்கடையச் செய்துவிடுகிறது. அதற்காக உடனே புதுச் சட்டையைப் போட்டுக் கொள்ளலாமென்றால் ஒரு நாளுக்கு எத்தனை தாம் சட்டையை மாற்றுவது? என் சோம்பல் அதற்கு இடமளிக்க வில்லை” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷிற்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. “ஏன் சிரிக்கிறாய்? நான் சொல்வது உண்மையில்லையா?” என்றான் ஸ்ரீதர்.

“உண்மைதான். ஆனால் பொய் நிறைந்த உலகத்தில் உண்மையைப் போல் பெரிய ஹாஸ்யம் வேறில்லை. அதுதான் சிரிக்கிறேன்” என்று மேலும் சிரித்தான் சுரேஷ்.

ஸ்ரீதர், “நான் சிகரெட் குடிக்காததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சிகரெட் பிடித்தால் புற்றுநோய் உண்டாகுமென்று பல நிபுணர்கள் கூறியிருப்பதாகப் பத்திரிகைகளில் வாசித்தேன்” என்றான்.

“அவை எல்லாம் சுத்தப் பொய். ஒரு சில டாக்டர்கள் அப்படிச் சொன்னால், இன்னும் பலர் புற்றுநோய்க்கும் சிகரெட்டுக்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள். உண்மையில் சிகரெட்டை ஒரு போதும் உபயோகியாத பல பெண்களுக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர், “இருக்கலாம். ஆனால் நீ கூறும் டாக்டர்களின் யார் சரி? அந்தப் பிரச்சினையைத் தீர்க்க எனக்குச் சக்தி போதாது. ஆகவே ஏன் ஆபத்தான வழியில் செல்ல வேண்டுமென்று சிகரெட் பிடிப்பதையே தவிர்த்துக் கொண்டேன். எனக்கு வாழ்வதில் ஆசை. அதனுடன் என் கைகளைச் சுட்டுக் கொள்ளவும் நான் விரும்பவில்லை.” என்றான்.

சுரேஷ், “ஸ்ரீதர்! ஆயிரம் ரூபா வருமானமுள்ள நீ சிகரெட் பிடிக்காமலும், மதுபானம் அருந்தாமலுமிருக்க, ஐம்பது அறுபது ரூபா வருமானமுள்ளவன் அவற்றை எவ்வளவு அவாவுடன் உபயோகிக்கிறான், பார்த்தாயா?” என்றான்.

ஸ்ரீதருக்குச் சுரேஷின் இவ்வார்த்தைகள் ஆச்சரியத்தை ஊட்டின.

“சுரேஷ்! நீ சொல்வது எனக்கொன்றுமே விளங்கவில்லை. பணமிருக்கிறதென்பதால் தனக்குப் பிடித்தமில்லாத பானங்களையும் சட்டையை அழுக்காக்கும் சிகரெட்டுகளையும் ஒருவன் உபயோகிக்க வேண்டுமா? பணத்துக்கும் இவற்றுக்கும் எதுவும் சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஒருவனது மூளைக்கும் இவற்றுக்கும் சம்பந்தமிருப்பதாகக் கூறினால் ஒரு வேளை ஒத்துக் கொள்வேன். முறையாக வேலை செய்யும் மூளை உள்ளவன் எவனும் இவற்றை உபயோகிக்கமாட்டான்” என்றான் ஸ்ரீதர்.

அதற்குச் சுரேஷ், “ஒருவனிடம் பணம் குறைவாயிருந்தால், மூளையும் குறைவாகத் தான் வேலை செய்யுமோ, என்னவோ? நீ பரம்பரைப் பணக்காரனாய்ப் பிறந்து பணத்திலே புரள்வதால் பணத்தின் நன்மைகள் உனக்குத் தெரியவில்லை. அதை உனக்கு எடுத்துச் சொல்வதும் கடினம்தான்.” என்று பதிலளித்தான்.

ஸ்ரீதர், “சிகரெட் பிடிப்பது பற்றிய இந்தத் தத்துவ ஆராய்ச்சியை வேறொரு நேரத்துக்கு வைத்துக் கொள்ளுவோம். இப்பொழுது கை மேலிருக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவோமோ? பரீட்சையில் சித்தி அடைந்ததற்காக நான் உனக்களிக்கும் பரிசு போக, நீ இங்கிலாந்துக்குப் போவதற்கு உனக்கேதாவது பணம் வேண்டுமா? எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்” என்றான்.

சுரேஷ், “ஸ்ரீதர்! பணம் என்பது இவ்வுலகில் ஒருவரிடமிருந்து ஒருவர் இனாமாகப் பெறும் பொருளல்ல. அதனால் கொடுப்பவனை விட வாங்குபவன் தன் கணிப்பிலேயே இழிந்த மனிதனாகி விடுகிறான். இவ்வுலகில் ஒருவனுக்கு அதை விடப்  பெரிய நஷ்டம் வேறென்ன? பணத்தை ஒவ்வொருவனும் தானே முயன்று சம்பாதிக்க வேண்டுமென்பதே உலக நியதி. சங்க நூலொன்றில் கூட இது பற்றி ஒரு பாட்டிருக்கிறது. நீ கேள்விப்பட்டதுண்டா?” என்று கேட்டான்.

ஸ்ரீதர் “இல்லை” என்று தலையாட்டினான்.

சுரேஷ் பாட்டை ஓதிக் காட்டினான்.

“ஈ என இரத்தல்
இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல்
அதனினும் இழிந்தன்று
கொள் எனக் கொடுத்தல்
உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல்
அதனினும் உயர்ந்தன்று”

“புறநானூற்”றில் வரும் இப்பாட்டின் பொருள் என்ன  தெரியுமா? தருவாய் என்று கேட்டல் இழிந்தது. அதற்குத் தர மாட்டேன் என்று பதில் கூறுதல் அதனினும் இழிந்தது. இதனைப் பெற்றுக்கொள் என்று வாரிக் கொடுத்தல் உயர்ந்தது. ஆனால் அதை வேண்டாமென்று மறுத்தல் அதனினும் உயர்ந்தது. அதாவது ஈ என்று இரத்தல் கூடாது. கொள் என்று தந்தாலும் வாங்கக் கூடாது. தனக்கு வேண்டிய பொருளைத் தானே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே பொருள்” என்று பாட்டை ஓதிப் பயனும் கூறினான் சுரேஷ்.

ஸ்ரீதர், “சுரேஷ்! நீ ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம். அரசியல் தொடக்கம் இலக்கியம் வரை இந்த உலகத்தையே கரைத்துக் குடித்திருக்கிறாய். இவை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள உனக்கு எப்படித்தான் அவகாசம் கிடைக்கிறதோ?” என்று ஆச்சரியத்தோடு கூறிவிட்டு, “படம் பார்க்கப் புறப்படுவோமா? பத்மாவதி புராணத்தை வழியிலே அவிழ்க்கிறேன்” என்று சொல்லி உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்துக் கொண்டே தன்னாசனத்தை விட்டெழும்பினான்.

சிறிது நேரத்தில் ஸ்ரீதரின் “பிளிமத்” கார் சுரேஷையும் ஏற்றிக் கொண்டு ரீகல் தியேட்டரை நோக்கிப் பறந்தது. டிரைவரின் ஆசனத்தில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்த ஸ்ரீதர் சுரேஷிடம் பத்மாவதி புராணத்தை அவிழ்த்துக்கொண்டிருந்தான்.

இது இங்கே நடந்து கொண்டிருக்க, கொட்டஞ்சேனை கொலீஜ் ரோட்டில் விமலாவுக்கும் லோகாவுக்கும் ஆங்கிலப் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தாள் பத்மா. ஆனால் குழம்பிப்போயிருந்த அவள் மன நிலையில் பாடம் சொல்லிக் கொடுப்பது அவ்வளவு இலேசாக இருக்கவிலை. எனவே மிக விரைவாகவே அதை முடித்துக்கொண்டு விமலாவையும் லோகாவையும் வீட்டுக்கனுப்பி விட்டு, மீண்டும் ஸ்ரீதரின் மோசடியைப் பற்றிக் கவலைப்படுவதற்காக ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தாள் அவள். ஸ்ரீதரின் மீது அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அழுகை பீறிட்டது! விமலாவும் லோகாவும் கொண்டு வந்து கொடுத்திருந்த கமலநாதனின் புத்தகங்களை அப்படியே மடியில் வைத்துக் கொண்டு மெல்ல அழத் தொடங்கினாள் அவள்.

இடையிலே மனம் அப்புத்தகங்களைப் பரிசீலிக்கும்படியும் தூண்டியது. “கவலைகள் தீர வழி” என்ற புத்தகத்தை முதலில் புரட்டினாள் அவள். இதை அவன் அனுப்பியதற்குக் காரணம் பஸ்ஸில் தான் கண்ணீர் உகுத்ததை அவன் கண்டது தான் என்பதை அவள் இலகுவாக உணர்ந்து கொண்டாள். “கமலநாதனுக்கு எனது கவலைகளைப் போக்க ஆசை. ஆனால் அவனுக்கு அந்த உரிமை ஏது? அவன் என்ன எனது காதலனா?” என்று சிந்தித்த பத்மா, “காலத்தின் சுழற்சியிலே அவன் என் காதலனாக முடியாது. என்று யார்தான் கூற முடியும்?” என்று  அதற்குப் பதிலளித்தும் கொண்டாள். பின் “இப்படிப்பட்ட நினைவுகள் என் மனத்தில் வருவது தப்பல்லவா?” என்று தன்னைத் தானே கடிந்து கொண்ட அவள், “ஸ்ரீதர் செய்த ஆள்மாறாட்ட மோசடிதானே இந்த நினைவுகளுக்குக் காரணம்” என்று குற்றத்தை அவன் தலையில் போட்டுவிட்டு, மீண்டும் கண்ணீர் உகுத்து அழ ஆரம்பித்தாள்.

இதற்கிடையில் தந்தை பரமானந்தர் தன் பிற்பகல் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து வந்தவர் பத்மா அழுது கொண்டிருப்பதைக் கண்டு பதைபதைத்து, “என்னம்மா, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார். அவள் திடுக்கிட்டெழுந்து முந்தானையால் கண்களைத் துடைத்த வண்ணம் “ஒன்றுமில்லை” என்று சொல்லிக் கொண்டே வீட்டின் பிற்புற வாசலை நோக்கி நடந்தாள்.

“என்ன, ஒன்றுமில்லையா? யாராவது ஒன்றுமில்லாமல் அழுவார்களா? பைத்தியக்காரி, என்ன விஷயமென்று சொல்லு” என்று வற்புறுத்தினார் தந்தை.

பத்மா முதலின் ஸ்ரீதரின் ஆள்மாறாட்ட மோசடி பற்றிப் பேசுவதற்குத் தயங்கினாள் என்றாலும், முடிவில் எப்பொழுதோ ஒரு நாள் இதை அப்பாவுக்குச் சொல்லித்தானே ஆக வேண்டும் என்று நினைவு வர, பஸ்தரிப்பில் தங்கமணி ஸ்ரீதரைப் பற்றித் தனக்குச் சொன்ன விவரங்கள் யாவற்றையும் தந்தையிடம் எடுத்துக் கூறினாள். சொல்லும் பொழுது நாத் தழுதழுத்தது என்றாலும், நிலைமையை ஒருவாறு சமாளித்துக் கொண்டு எல்லா விஷயங்களையும் கூறி விட்டாள் பத்மா. பரமானந்தர் மகள்  சொன்ன விவரங்களைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டாரானாலும், அதை வெளிக்குக் காட்டவில்லை.

“சுந்தரேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா சிவநேசர் இருக்கிறாரே, அவரது மகன் தான் ஸ்ரீதர். எங்களை உடுவில் சின்னப்பா வாத்தியார் மகன் தான் என்று ஏமாற்றியிருக்கிறார். தங்கமணியும் ஸ்ரீதரும் ஒரே ஊர். அவளுக்கெல்லா விஷயமும் தெரியும்” என்றாள் பத்மா.

“அவன் ஏன் இப்படிப் பொய் சொன்னான்? சரி, நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. நான் எல்லாவற்றையும் விசாரிக்கிறேன். நீ சும்மா அழுது கொண்டிராதே. முகத்தைக் கழுவிக் கொண்டு அன்னம்மா வீட்டுக்குப் போய் வா. பார் சேலையை! ஒரே கசங்கலாயிருக்கிறது. புதிய சட்டையோ சேலையோ உடுத்திக்  கொண்டு சிறிது வெளியே போய் வந்தால் மனக்கவலை தீரும். போய் வா, அம்மா” என்றார் பரமானந்தர் அனுதாபத்துடன்.

பத்மா அப்பா கூறிய பிரகாரமே முகத்தைக் கழுவிப் பொட்டிட்டுப் பூப்போட்ட கவுன் ஒன்றை அணிந்து கொண்டு வெளியே புறப்பட்டாள்.

சாதாரணமாக, பல்கலைக்கழகம் போகும் நேரம் தவிர, வீட்டில் இருக்கும் போது கவுன் அணிவதுதான் வழக்கம். வெளியே புறப்படு முன்னர்  கண்ணாடியில் தனைப் பார்த்த பத்மா தனது அழகைத் தானே மெச்சிக் கொள்ளத் தவறவில்லை. “கட்டான உடம்புள்ள  பெண்ணுக்குச் சேலை ஒருவகை அழகைக் கொடுக்கிறது. கவுன் இன்னொரு வகை அழகைக் கொடுக்கிறது” என்று தன்னுள் தானே கூறிக் கொண்டு வெளியே புறப்பட்ட அவள் அன்னம்மாவைக் காணச் செல்லவில்லை. தோட்டத்து மூலையிலே வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்த வேலாயுதக் கிழவனைப் பார்க்கச் சென்றாள்.

கரும்பச்சை வர்ணம் பூசப்பட்ட கள்ளிப் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்த அவனது கடையில்  அப்பொழுது வேறு யாரும் இல்லை. வேலாயுதக் கிழவன் ஒட்ட நறுக்கிவிடப்பட்டு, ஏறக்குறைய மொட்டைத் தலை போல் விளங்கிய தனது தலையைத் தடவிக் கொண்டு, தனியாக நின்றான். கிழவனுக்குக் கன்னங்கரேலென்ற ஒட்டல் உடம்பு. அப்பொழுதும் அகலச் சிரித்த முகம். சுத்தமாக இருப்பான். அவனது வெள்ளை மயிர் பணக்காரர் வீட்டுப் பங்களாக்களில் நன்றாகக் கத்தரித்து விடப்பட்ட மைதானத்துப் புல் போல் தலையோடு தலையாக ஒட்டிக் கொண்டிருந்தது. தோட்டத்து ஆட்களிலேயே பரமானந்தர் மீதும், பத்மா மீதும் அவனுக்கு விசேஷ மதிப்பு. ஆகவே, பத்மாவைக் கண்டதும் “என்ன தங்கச்சி! என்ன வேண்டும்? அப்பா புகையிலை வாங்கி வரச் சொன்னாரா?” என்று அன்போடு கேட்டான்.

பத்மாவுக்கு வேலாயுதத்தைத் தனியாகக் கண்டதில் திருப்தி. தான் வந்த விஷயத்தைத் தடங்கலில்லாமல் பேசி விரைவாகச் சென்றுவிடலாமல்லவா?

வேலாயுதத்தின் கேள்விக்குப் பத்மா “இல்லை” என்ற பாவனையில் தலையை ஆட்டிக் கொண்டு, “தாத்தா! உன்னிடம் நல்ல, ‘பெப்பர்மின்ட்’ இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“இதோ போத்தலில் இருப்பதுதான், எடுத்துக்கொள்” என்றான் வேலாயுதம்.

பத்மா பத்துச் சதத்துக்குப் ‘பெப்பர்மின்டை’ வாங்கி, வாயிலிட்டுக் கொண்டே, “தாத்தா! நாளைக்குப் பின்னேரம் ஐந்து மணிக்கு எங்கள் வீட்டுக்கு வருகிறாயா? எங்கே ராமன்? அவனைக் கடையில் வைத்து விட்டு வா. எங்கள் வீட்டிலேயே நாளை சாப்பாடு. வர வேண்டும், கட்டாயம்.” என்றாள்.

ராமன் வேலாயுதக் கிழவனுக்கு ஒத்தாசையாயிருக்கும் பதின்மூன்று வயது. பையன். மலைநாட்டுப் பகுதியில் பிறந்தவனாம். கிழவனுக்கு வாரிசாக வளர்ந்து கொண்டிருந்தான்.

வேலாயுதம் “நாளைக்கு என்ன விசேஷம்?” என்று கேட்டாள்.

“விசேஷமொன்றுமில்லை. ஆனால் முக்கியமான விஷயமொன்று உன்னிடம் பேச வேண்டும். நாளை வீட்டுக்கு வந்ததும் சொல்கிறேன்.” என்றாள் பத்மா.

“ஆகட்டும்” என்றான் வேலாயுதம்.

“வரும்பொழுது அப்பாவுக்கு ஒரு கட்டுச் சுருட்டு கொண்டு வர வேண்டும். மறந்து விடாதே!” என்று சொல்லிக் கொண்டே பத்மா புறப்பட்டாள்.

பத்மா கடையை விட்டுப் புறப்படும்போது, வேலாயுதக் கிழவன் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டுப்  போனாள். குடும்ப நண்பனாக நெருங்கிப் பழகிய கிழவனைக் கண்டால் அவளால் ஏதாவது சேஷ்டை செய்யாதிருக்க முடியாது. பத்மாவுக்கு அது வேடிக்கை. பத்மா மட்டுமல்ல, தோட்டத்திலுள்ள, ஆண், பெண் எல்லாருமே வேலாயுதக் கிழவனுடன் அப்படித் தான் கேலியாக நடந்து கொண்டனர். முக்கியமாகப் பெண்களே அவனுடன் அவ்வாறு தமாஷாக நடந்து கொண்டனர். கிழவனுக்கு அது மிக்க மகிழ்ச்சி. யார் தன் தலையில் குட்டினாலும் தலையைத் தடவிக் கொள்வானேயல்லாமல், வேறொன்றும் பேச மாட்டான். அதனால் அவனைப் போல் நல்ல மனிதன் இவ்வுலகில் இல்லை என்பதே தோட்டத்திலுள்ள சகலரது அபிப்பிராயமும்.

பத்மா கண்ணுக்கு மறையும் வரையில் சிரித்துக் கொண்டும், அவள் குட்டிய தலையைக் கைகளால் தடவிக்கொண்டும் நின்றான் கிழவன்!

ஸ்ரீதர் சிவநேசரின் மகன் என்பதை மறுக்க முடியாத அத்தாட்சியுடன் தங்கமணி கோட்டில் ஒரு வழக்கறிஞன் நிரூபிப்பது போல நிரூபித்திருந்த போதிலும், பத்மா அவ்விஷயத்தை மேலும் ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காகவே வேலாயுதத்தை அடுத்த நாள் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். வேலாயுதம் சிவநேசர் பங்களாவில் வேலை செய்தவன். இப்பொழுதும் ஆண்டுக்கொரு தடவையோ இரு தடவையோ நல்ல நாள் பெரிய நாட்களில் கொழும்பு சுந்தரேஸ்வரர்  கோவிலிலிருந்த பங்களாவில் சிவநேசர் வந்திருக்கும் சமயம் பார்த்து அவரைப் போய்க் கண்டு, பத்தோ ஐம்பதோ பரிசு பெற்று வருபவன். நிச்சயம் ஸ்ரீதரை அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வயதைக் கொண்டு பார்த்தால் ஒரு வேளை அவன் பங்களா வேலைக்காரனாயிருந்த போது ஸ்ரீதரைத் தன் கைகளால் தூக்கி வளர்த்தவனாயுமிருக்கக் கூடும். நாளை அவர்கள் இருவரையும் தனக்குள் வீட்டில் சந்திக்க வைத்து இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் கண்டு கொள்ளுகிறார்களா என்று பார்த்தால் விஷயம் முற்றிலும் தெளிவாகிவிடும். பின் ஐயத்துக்கே இடமிருக்காது. ஸ்ரீதர் சம்பந்தமக ஏற்பட்டிருந்த பிரச்சினை போன்ற பிரச்சினகளில், என்னதான் மற்றவர்கள் தகுந்த நிரூபணங்களைக் காட்டினாலும் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தானே விஷயங்களை நேரில் பரீட்சித்துக் கொள்ள விரும்புவதே உலக இயல்பு.  மனித இதயம் தோல்விகளை இலகுவில் ஏற்றுக் கொள்ள மறுப்பதே இதற்குக் காரணம்.

மேலும் தங்கமணி சொன்னவை ஏன் பொய்யாக இருக்கக் கூடாது? டிரைவரைக் கூட அவளே ஏற்பாடு செய்திருக்கலாம். ஸ்ரீதர் மீது எனக்கிருக்கும் அன்பைக் குலைத்து எங்கள் காதலை முறியடித்த பின்னர் அவனைத் தான் கொத்திக் கொண்டு போவதற்குத் தங்கமணி திட்டம் தீட்டியிருக்கிறாளோ, என்னவோ, யார் கண்டது? இந்தக் காலத்தில் யாரை நம்புவது? அதுவும் தங்கமணி போன்ற படாடோபப் பெண்களை நம்பவே கூடாது. ஸ்ரீதர் போன்ற கட்டழகனும் கெட்டிக்காரனும் கணவனாகக் கிடைத்தால் யாருக்குத்தான் கசக்கும்? இவ்வுலகில் ஒருவர் மீது நமக்கு அழுத்தமான பிடிப்பு ஏற்பட்டு விட்டால், அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் உள்ளம் நம்ப மறுக்கிறது. அவர் மீது சாட்டப்படும் குற்றங்களிலிருந்து அவரை விடுவிக்கவே மனம் எப்பொழுதும் முயல்கிறது. ஸ்ரீதர் விஷயமாகப் பத்மா அந்த நிலையிலேயே இருந்தாள்.

பத்மா தீட்டிய திட்டத்தின் பிரகாரம் அடுத்த நாட் காலை ஸ்ரீதரைப் பல்கலைக்கழகத்தில் வழமையான இடத்தில் சந்தித்து மாலை வீட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டும்; அப்பொழுது அவனிடம் வேறொன்றும் பேசக் கூடாது. மாலையில் வேலாயுதத்தையும் அப்பாவையும் வைத்துத் தான் விஷயங்களைப் பேசித் தீர்க்க வேண்டும். அப்பொழுது தங்கமணி கூறியவை பொய்யென்று நிரூபிக்கப்படுமானால் -- கவலை விட்டது! எங்கள் காதல் என்னும் சந்திரனைக் கெளவிய கரு நாகம் கழன்றதென்று சந்தோஷிக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக ஸ்ரீதர் மோசக்காரன் தான் என்பது ஊர்ஜிதப்படுமானால்...? பத்மாவின் உள்ளம் குழம்பியது. உண்மையிலேயே அவன் என்னைக் கைவிட்டு அகன்று விட்டால்...?

நாடகங்களில் நடிக்கும் நடிகர் நடிகையர்களுக்குக் கடைசி நேரத்தில் நடிக்க முடியாது போய்விட்டால், அவர்கள் பாகத்தை உடனடியாக ஏற்று நடிக்க வேண்டுமென்பதற்காகப் பதில் நடிகர் நடிகையர்களைப் பயிற்றி வைத்திருத்தல் நாடக மன்றங்களின் வழக்கமாகும்.  இந்த ஏற்பாடில்லாவிட்டால் நாடகத்தையே இரத்துச் செய்ய வேண்டுமல்லவா? இது போன்ற ஏற்பாடு வேலைத் தளங்களிலும் உண்டு. வழமையான தொழிலாளர்கள் வேலைக்கு வராவிட்டால், உடனடியாக அவ்வேலைகளை ஏற்றுச் செய்ய “ஸ்டான்ட் பை” தொழிலாளர்கள் இருக்கிறார்கள். உதை பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுக்களிலும் “ரிஸர்வ்” விளையாட்டுக்காரர்களை இதற்காகவே வைத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் இது போன்ற ஏற்பாட்டை நாம் செய்து கொள்ள முடியுமா? கலைகளிலும் விளையாட்டிலும் தொழிலிலும் செய்யும் இவ்வேற்பாடு அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்துமா?

பத்மா மனதில் இக்கேள்விக்குப் பளிச்சென்ற பதில் இருக்கத்தான் செய்தது. “எல்லாவற்றுக்கும் ஒரு “ஸ்டான்ட் பை” இருக்க முடியுமானால், காதலுக்கும் ஏன் ஒரு “ஸ்டான்ட் பை” இருக்கக் கூடாது? இன்றைய உலகின் காதல் அரசிகள் என்று போற்றப்படும் ஹோலிவூட் நடிகையர் பலர் ஒன்றுக்குப் பதில் பல காதல் “ஸ்டான்ட் பை”களை எப்பொழுதும் வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? கணவனை இழந்த விதவை புதிதாக ஒரு கணவனைத் தேடிக் கொள்வதும், விவகாரத்துச் செய்த பெண் புதிய கணவனைத் திருமணம் செய்வதும் இன்றைய உலகில் சகஜம். ஆகவே நானும் ஒரு காதலனை “ஸ்டான்ட் பை”யாக வைத்துக் கொண்டாலென்ன? கமலநாதன்தான் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறானே! இன்று நண்பகல் பஸ்ஸிலே என் மீது தன் காதற் பார்வையைப் படரவிட்ட அவன் பின்னேரமே என்னுடைய கவலையைப் போக்கப் புத்தகமும் அனுப்பிவிட்டானே! எனது வாழ்க்கை வாடி வதங்கிப் போகாதிருக்க அவன் உதவுவான் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் அவன் மீசையும் அவன் முகத்துக்கு அழகாய்த்தானே இருக்கிறது! காயமடைந்த அவன் கையை எனக்குக் காட்டினானே, அது எவ்வளவு பலங்கொண்டதாயும் திரட்சியாயும் காட்சியளித்தது!

அன்றிரவு பத்மா படுக்கைக்குப் போன போது, கமலநாதன் அனுப்பிய புத்தகத்தின் சில பக்கங்களை வாசிக்க மறக்கவில்லை. பல மணி  நேரம் தூக்கம் வராது படுக்கையில் புரண்ட அவள் ஆயிரம் விதமான பகற் கனவுகளைக் கண்டு கொண்டிருந்தாள். அக் கனவுகளில் ஸ்ரீதரும் கமலநாதனும் மாறி மாறி வந்து கொண்டிருந்தார்கள்.

*** *** ***

ஸ்ரீதரும் சுரேசும் படம் பார்த்த பின்னர் வீட்டுக்கு வந்து நீண்ட நேரம் பத்மா பற்றிப் பேசிக் கொண்டிருந்த பின்னர் சாப்பிட்டு விட்டுத் தங்கள் அறைக்குச் சென்றார்கள். தன் ஆள் மாறாட்ட நாடகத்துக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது, தான் ஒரு பொய்யன் என்பதை எப்படி நேரில் வெட்கமின்றிப் பத்மாவுக்கும் அவள் தந்தைக்கும் எடுத்துச் சொல்வது என்று ஸ்ரீதருக்குத் தெரியவில்லை.

“சுரேஷ்! நீ தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை மேலும் நீடிக்கக் கூடாது.” என்றான் ஸ்ரீதர்.

“நீ சொல்வது உண்மைதான். இப்படிப்பட்ட விஷயங்களை நேரில் பேச யாருக்கும் பதற்றமாகத்தானிருக்கும். அதனைத் தவிர்க்க ஒரே வழி எல்லாவற்றையும் விரிவாகக் கடிதத்தில் எழுதிவிடுவதுதான். நேரில் சொல்ல வெட்கப்படுவற்றையும் அஞ்சுபவற்றையும் எடுத்துக் கூறுதற்குக் கடிதம் போல் உற்ற துணை வேறில்லை” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதருக்குச் சுரேஷின் ஆலோசனை சரியாகவே பட்டது.

“சுரேஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் இவ்வுலகில் கண்டதேயில்லை. நீ சொன்ன இந்த ஆலோசனை, விஷயத்தை எவ்வளவு இலகுவாக்கிவிட்டது! உண்மையில் நீ இங்கிலாந்து போனால் அதனால் பெரிய நஷ்டம் எனக்குத்தான். நீ சொன்ன படி இப்பொழுதே கடிதம் எழுதுகிறேன். நாளைக்கே அதைப் பத்மாவுக்கும் பரமானந்தருக்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவிடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே மேசையண்டை போய் உட்கார்ந்தான்.

விடிந்தாலும் சரி. எப்படியும் கடிதத்தை எழுதிவிட்டுத்  தான் படுப்பது என்று முடிவு செய்து விட்டான் அவன். அந்தத்  தீர்மானத்துடன் அவன் சுவரில் மாட்டியிருந்த மணிக் கூட்டை நிமிர்ந்து பார்த்தான். நேரம் 12.10 ஆகியிருந்தது.  ‘திக் திக்’ என்ற மணிக்கூட்டின் சப்தம் அவன் நெஞ்சில் ‘திக் திக்’ என்ற சப்தத்தை எதிரொலிப்பது போலிருந்தது அவனுக்கு! என்னதான் இருந்தாலும் வாத்தியார் மகன் வேஷத்தை முற்றாகக் கலைந்து, பத்மா பரமானந்தரின் அங்கீகாரத்தைத் தனது சுய உருவத்துக்கு - சிவநேசர் மகன் ஸ்ரீதருக்குப் பெறும் வரையில் அவன் நெஞ்சில் பதற்றம் இருக்கத்தானே செய்யும்?


7-ம் அத்தியாயம்  ஸ்ரீதர் மோசக்காரனல்லன்!

7-ம் அத்தியாயம்  ஸ்ரீதர் மோசக்காரனல்லன்![ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்] மனித இதயத்தைத் தாக்கும் உணர்ச்சிகளிலே காதலைப் போன்ற சக்தி வேறில்லை என்றே சொல்ல வேண்டும். அதுவும் வாலிப இதயத்தை வாடவும் மலரவும் அங்கலாய்க்கவும் வைப்பதிலே, காதலுக்கு இணை காதலேதான். ஸ்ரீதர் இரவு நெடு நேரம் வரை கண் விழித்து பத்மாவுக்கும், பரமானந்தருக்கும் கடிதங்கள் எழுதி விட்டுப் படுக்கைக்குச் செல்லச் சற்றேறக் குறைய இரண்டு மணியாகிவிட்டது; இருப்பினும் விடியற் காலை வரை அவனுக்கு நித்திரை வரவேயில்லை. நித்திரை கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளை பகல் முழுவதும் உடம்பில் உற்சாகமாயிராதே” என்ற நினைவால் அவன் தனது கண்களை மூடித் துயிலுதற்கு எவ்வளவு தூரம் முயன்ற போதிலும், நித்திரை வர மறுத்துவிட்டது. பத்மாவின் நினைவால் ஏற்பட்ட தாபங்கள் அவன் மனதின் ஒவ்வொரு  பகுதியையும் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருந்ததே அதற்குக் காரணம்.

நாளைக் காலை பத்மாவைப் பல்கலைக் கழகத்தில் சந்தித்ததும் அவளிடம் “பத்மா, நான் உனக்கும் உன் தந்தையாருக்கும் -- இல்லை இல்லை மாமாவுக்கும் --அப்படித்தானே உன் அப்பாவை நான் அழைக்க வேண்டும், என்று அவர் என்னிடம் கூறினார்? -- இரு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். வாசித்துப் பார்த்து உடனே பதில் எழுத வேண்டும். தவறக் கூடாது என்று சொல்லுவேன். பத்மா ஆச்சரியத்துடன் “என்ன கடிதம்? என்ன எழுதியிருக்கிறீர்கள்?” என்று கேட்பாள். “ஓ! அது இரகசியம்! ஒருவரிடமும் சொல்ல மாட்டேன்!” என்று நான் சொல்ல, “நன்றாயிருக்கிறது உங்கள் கதை! கடிதம் எழுதப்பட்டவருக்கே கடிதத்தின் விஷயத்தைச் சொல்லக் கூடாதோ? இந்த இரகசியம் அப்பாடா, மிகப் புதுமையான இரகசியமாயிருக்கிறது! சும்மா விலை வைக்காமச் சொல்லக் கூடாதோ? இந்த இரகசியம் அப்பாடா, மிகப் புதுமையான இரகசியம் அப்பாடா, மிகப் புதுமையான இரகசியமாயிருக்கிறது! சும்மா விலை வைக்காமச் சொல்லுங்கள்” என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என் கையைப் பிடித்துக் கெஞ்சுவாள். ஆனால் நானா சொல்லுவேன்? எனது பிடிவாதம் அவளுக்குக் கோபத்தைக் ஊட்டும். “அப்படியானால் போங்கள். என்னோடு பேச வேண்டாம்” என்று முகத்தைச் சுளிப்பாள்.. அதற்குப் பிறகும் என்னால் விஷயத்தைச் சொல்லாமல் இருக்க முடியுமா? என் ஆசைப் பத்மா மனங் கோண, நான் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஆனாலும் நான் விஷயத்தைச் சொல்ல மாட்டேன். சொல்லவே மாட்டேன்! அவளுக்கு உண்மையில் கோபம் பொத்துக் கொண்டு வரும் என் கையைப் பிடித்துக் கிள்ளுவாள். சிவப்புச் சாயம் பூசிய அவளது பளபளக்கும் நகங்களால் அவள் கிள்ளுவது கூட எனக்கு இன்பமாய்த் தான் இருக்கும். ஆனால் நல்ல வேளை. மற்றப் பெண்கள் போல் அவள் தனது நகங்களை நீளமாக வளர்க்கவில்லை. அப்படி வளர்த்திருந்தால், அது மிக அழகாகத்தானிருந்திருக்கும். ஆனால் அழகான நகமும் நீள நகமாயிருந்தால் கிள்ளும் போது - மிகவும் உறைக்குமல்லவா? ஆகவே, நாளைக்கு அவள் நகங்கள் இப்போதிருப்பது போல் மொட்டை நகங்களாக இருப்பதே மேல்! வேண்டுமானால் பின்னர் தனது நகங்களை வளர்த்துக் கொள்ளட்டும்” என்று தனது ஆசைகளையும் கவலைகளையும் கனவுகளாகப் பின்னிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன்.

ஆனால் இச்சிந்தனைகளின் பயனாக ஸ்ரீதரின் மனதில் ஒரு புதிய பிரச்சினை தோன்றிவிட்டது. கடிதத்திலுள்ள விஷயத்தைப் பத்மாவிடம் முன்னரே கூறி விடலாமா அல்லது கடிதத்தைப் பார்த்துத் தான் அவள் விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று விட்டு விட வேண்டுமா என்பதே அது. அன்று மாலை சுரேஷிடம் பேசும் வரை தன் ஆள் மாறாட்ட நாடகத்தைப் பத்மாவிடம் எப்படி நேரில் எடுத்துச் சொல்வது என்று திக்குமுக்காடிய ஸ்ரீதர் அதற்காகத் தானே கடித மூலம் - தன் கபட நாடகத்தை வெளியிடத் தீர்மானித்தான்? ஆனால் கடிதத்தை எழுதி முடித்தப் பின்னர், மனம் வேறு விதமாக வேலை செய்கிறது. “சீச்சீ, மனதை இவ்வாறு அலைய விடக் கூடாது. தீர்மானித்தது தீர்மானித்ததுதான். விடிந்ததும் கடிதத்தைப் பதிவுத் தபால் மூலம் அனுப்புவேன். அவள் சகல விஷயங்களையும் கடித மூலமே தெரிந்து கொள்ளட்டும்” என்று முடிவு செய்த ஸ்ரீதர் மனதில் மற்றோர் அச்சமும் எழுந்தது. ஒரு வேளை கடிதத்தைப் படித்ததும் நான் பொய்யன் என்பதைத் தெரிந்து கொண்டு என் மீது பத்மா வெறுப்படைந்தாளானால்..?” என்ற பழைய அச்சமே அது. ஆனால் “ஒரு போதும் ஒரு பெண் இப்படிப்பட்ட காரியத்துக்காகத் தன் காதலனை வெறுக்கமாட்டாள்;  உண்மையில் இவ்விஷயம் தெரிந்ததும் என்னை அடைவதற்காகத்தானே என் காதலர் இப்படிப் பொய் சொன்னார்?” என்றெண்ணி அவள் தன் காதலன் மீது முன்னிலும் அதிகமான அன்பைப் பொழியவும் கூடும்” என்று சுரேஷ் கூறிய வார்த்தைகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. “ஆம் சுரேஷ் அறிவாளி. என் போலக் காதல் ‘கீதல்’ என்று அலையாமல் பெரிய புத்தகங்களை எந்நேரமும் வாசிப்பவன். அவன்தான் “கிஷ்கிந்தா”வின் சாக்ரட்டீஸ்! அவன் சொன்னது சரியாகவே நடக்கும்” என்று தனக்குத்தானே தேறுதலும் கூறிக்கொண்டான் அவன்.

“இருந்தாலும் அதை அவ்வளவு நிச்சயமாக நாம் எப்படிக் கூற முடியும். இந்த ஆள் மாறாட்ட நாடகத்தால் எவ்வித தீய பலனும் ஏற்படாதிருப்பதை எப்படிச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்துவது? அதற்கேதாவது வழியில்லையா?” என்று தன்னைத்தானன் வினாவிய ஸ்ரீதருக்கு உடனே ஒரு பதிலும் கிடைத்துவிட்டது.

“கொட்டாஞ்சேனை மாரியம்மனுக்கு ஐம்பது ருபாவுக்குக் கற்பூரம் கொளுத்துவேன். மாரியம்மன் கைவிட மாட்டாள்.  தீய பலன் எல்லாவற்றையும் தவிர்ப்பாள் என் தாய்” என்று தீர்மானித்த ஸ்ரீதர் சிறிது யோசித்தப் பின்னர் இப்படிப்பட்ட பெரிய வேலைக்கு ஐம்பது ரூபா போதாது. நூறு ரூபாவுக்குக் கற்பூரம் கொளுத்துவேன்.” என்று உடனடியாக நேர்த்திக்கடனின் பெறுமதியை உயர்த்தினான். உண்மையில் வங்கியில் இருந்த முழுப் பணத்தையுமே கற்பூரமாகக் கொளுத்த அவனது காதலுள்ளம் தயாராக இருந்ததென்றாலும் அவ்வளவு பெரிய தொகைக்கு எவரும் கற்பூரம் கொளுத்தியதாக அவன் முன்னொரு போதும் கேள்விப்பட்டிராததால், தான் அவ்வாறு பல ஆயிர ரூபாக்களுக்குக் கற்பூரம் கொளுத்துவதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா என்று அவன் அஞ்சியதே கற்பூரச் செலவை நூறு ரூபாவாகக் கட்டுப்படுத்தும்படி அவனை உந்தியது. பார்க்கப் போனால் நூறு ரூபா கூட மற்றவர்களின் கண்களில் சற்று அதிகமாகத் தான் படும். ஆனால் மாரியம்மனிடம் அவன் கோரிய சேவையின் முக்கியத்துவத்தோடு ஒப்பிட்டால் நூறு ரூபா எம்மாத்திரம்? ஆனால் அதைக் கண்டும் சிலர் சிரிக்கக் கூடும், என்றாலும் அதற்காக அதனை இன்னும் குறைப்பது நியாயமல்ல என்று ஸ்ரீதர் தீர்மானித்துக்கொண்டான். பார்க்கப் போனால், என்ன உலகமிது? ஒருவனுக்குத் தன்னிஷ்டப் பிரகாரம் கற்பூரம் கொளுத்துவதற்குக் கூடச் சுதந்திரமில்லா உலகம்!

இப்படிப் பலவாறாகச் சிந்தித்துப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ஸ்ரீதர் இடையிடையே துயிலுலகிற்கு  எழுவதும் மீளுவதுமாக இருந்து முடிவாகத் துயிலுலகிற் புகுந்த போது நேரம் நான்கரைக்கு மேலாகிவிட்டது.

அடுத்த நாட் காலை பத்து மணியளவில் காதலர்கள் “வழமையான இடத்”தில் சந்தித்தபோது இருவரும் தாம் தாம் வகுத்த திட்டங்களின் படி நடந்து கொண்டனர். பத்மா தன் மனதில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, ஸ்ரீதரிடம் “எனக்கு இன்று நிறைய வேலை இருக்கிறது. ஆகவே இப்பொழுது பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. நீங்கள் இன்று மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வாருங்கள். அப்பா உங்களிடம் ஏதோ பேச வேண்டுமாம்” என்றாள்.

“என்ன? மாமா மருமகனைக் காண விரும்புகிறாரா? மகளையும் மருமகனையும் ஒன்றாக வைத்து ஆசிர்வதிக்க விரும்புகிறார் போலும்!” என்றான் ஸ்ரீதர்.

வேறு நேரத்தில் என்றால் பத்மா ஸ்ரீதரின் இப்படிப்பட்ட கேலிப் பேச்சுக்களைக் கேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்திருப்பாள். அத்துடன் தானும் பதிலுக்கு ஏதாவது பகடிப் பேச்சுப் பேசியிருப்பாள். ஆனால் அப்போதிருந்த மன நிலையில் அவளால் அவ்வாறு பேச முடியவில்லை. இருந்த போதிலும் ஸ்ரீதர் கேலியாகவேனும் அப்பாவை மாமாவென்று உரிமையோடு அழைத்தது அவளுக்கு இன்பமாகவே இருந்தது. ஆகவே ஸ்ரீதரின் வேடிக்கைப் பேச்சில் அவளால் உளம் மறந்து சங்கமிக்க முடியவில்லை என்றாலும், ஒப்புக்காவது புன்னகை செய்ய முடிந்தது. ஆகவே சிரித்த முகம் காட்டினாள் அவள்.

ஸ்ரீதர் தான் இரவு தீட்டிய திட்டத்தின் பிரகாரம் “பத்மா, நான் உனக்கும் மாமாவுக்கும் இரு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நாளைக் காலையில் பதிவுத் தபாலில் அவை உங்களை வந்தடையும். வாசித்துவிட்டு உடனே பதிலெழுத வேண்டும். தவறக் கூடாது. தெரிந்ததா?” என்றான். இவ்வாறு சொல்லிக் கொண்டே சட்டைப் பையில்  இருந்த பதிவுச் சீட்டை எடுத்து பத்மாவுக்குக் காட்டினான்.

பத்மா ஆச்சரியத்துடன் “கடிதமா? எனக்கும் அப்பாவுக்குமா? எதற்கு? தினசரி நேரில் காணுபவர்களுக்கு எதற்காகக் கடிதம் எழுத வேண்டும்? பேச வேண்டியவற்றை  நேரே பேசிவிடலாமல்லவா?” என்றாள்.

ஸ்ரீதர், “சில விஷயங்களை நேரில் சொல்லுவதை விட கடிதம் மூலம் எழுதுவது இலகு. அதனால்தான் கடிதத்திலெழுதியிருக்கிறேன்.” என்றான்.

பத்மாவுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிலருக்கு  நாடி தளர்ந்து பேசச் சக்தியற்றுப் போய்விடுகிறது. பத்மா அன்று அந்த நிலையிலேயே இருந்தாள். ஏமாற்றம், துக்கம், கோபம், எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் என்ற நான்கு பேருணர்ச்சிகளின் பீடிப்பிலே அவள் இதயம் சிக்கித் தடுமாறிக் கொண்டிருந்தது. அதனால் வழக்கமாக அவள் பேச்சிலும் நடையிலும் அலைவீசும் உயிரும் உற்சாகமும் அன்று எங்கோ மறந்துவிட்டன. அத்துடன் இதயத்தில் குமுறல் கண்ணீர்க் குமுறலாக மாறிவிடுமோ என்ற அச்சம் வேறு. அதனால் அவளைச் சுற்றிலும் ஒரு வகை இருள் -- ஒரு வகை மந்தம் அல்லது மப்பு -- திரையிட்டிருந்தது.

ஆனால் ஸ்ரீதருக்கோ பத்மாவின் இம்மாற்றம் சற்றேனும் தெரியவில்லை. அவன் கண்கள் காதற் கண்கள். பத்மா அவன் கண்களுக்கு வழக்கம் போல் தான் தோன்றினாள். உண்மையில் அவன் கண்களில் அவள் இன்று சற்று அதிக கவர்ச்சியுடன் தோன்றினாள் என்று கூட சொல்லலாம். காதலன் கண்களிலே தினசரி அதிக சிறப்பைப் பெறாத காதலி யார்? வழமையான உற்சாகமில்லாத இன்றைய பத்மாவின் போக்கு, அவளுக்கு அமைதியின் சிறப்பை நல்கியது. உண்மையில் வழக்கத்திலே வெகு துடுக்காகப் பேசும் பத்மா இன்று மிக அடக்கமாகப் பேசிய முறையைக் கண்டு, “ஓகோ, அப்பா திருமணத்துக்கு அனுமதித்துவிட்டார். ஆகவே பத்மா மணப்பெண் அல்லவா? இந்து சமூகத்து மணப்பெண் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டியவளல்லவா? பத்தினிப் பண்புகள் அவளிடம் தோன்றுகின்றன. சரியாக அம்மாவிடம் காணும் அந்த அடக்கமும் அமைதியும் இவளிடம் தோன்றத் தொடங்கி விட்டனவே. நிச்சயம், என் பத்மாவின் அழகும் அமைதியும் இனிய பேச்சும் அம்மாவைக் கொள்ளை கொள்ளப் போகின்றன!” என்று சிந்தித்தான் ஸ்ரீதர். பத்மாவை மணப்பெண்ணாக எண்ணியதும், தலையில் மல்லிகைப்பூ அலங்காரத்துடனும் நெஞ்சு நிறைந்த தங்க வைர நகைகளுடனும் அவன் கிராமத்திலுள்ள தனது மாளிகையின் சலவைக்கல் பதித்த தரையில் தங்கச் சரிகையிட்ட கரு நீலக் காசிப் பட்டுக் கொடிச் சேலை சரசரக்க, இடுப்பில் தங்க ஒட்டியாணம் அணிந்து தன் கையைப் பற்றிக் கொண்டு, நிதானமாக நிமிர்ந்து தங்கப் பதுமை போல் நடந்து செல்வது போன்ற ஒரு பிரமை அவனுக்கு ஏற்பட்டது. அதில் மெய்மறந்த அவன் “பத்மா வாத்தியார் மகளாயிருந்தாலென்ன, அரசகுமாரனை மணந்து அரண்மனைக்கு ஒளியேற்றவல்ல அற்புதமான பெண். சீதையை மணந்த இராமன் தசரத மாளிகைக்குப் போன போது எப்படி இருந்திருப்பாளோ அப்படித் தோன்றுவாள் அவள். என்னுடன்  தோளோடு தோளாகத் தன் பூங்கையால் என் கை பற்றி நடந்து வரும் பொழுது” என்று ஒரு தெய்வ மகளைப் பற்றி எண்ணுவது போல எண்ணினான்.

ஆனால் ஸ்ரீதரின் இந்த அற்புதமான கற்பனை உலகத்துக்குத் தன்னை உயர்த்திச் செல்ல பத்மாவால் அன்று முடியவில்லை. அவள் பல்கலைக் கழகத்தின் சிமெந்துத் தரையில் நிற்க அவன் மின்னல்களிடையே நின்று பேசினான். ”பத்மா! இனிமேல் நாம் பிரிந்திருக்கக் கூடாது. சீக்கிரமே திருமணம் செய்துகொள்ள வேண்டும். பார், எவ்வளவு சீக்கிரமாக அம்மாவிடமும் அப்பாவிடமும் எங்கள் கல்யாணத்துக்கு அனுமதி பெற்று வருகிறேன்.” என்றான். பத்மா திடுக்கிட்டாள். கனவிலே நின்று பேசுவது போல் பேசிய ஸ்ரீதரின் அவ்வார்த்தைகளிலே தோய்ந்திருந்த கனிவும் திடமும் அவன் முகத்தின் படர்ந்திருந்த சாந்தமும் அவ்வார்த்தைகளை உண்மையிலும் உண்மையாகச் சத்தியத்தின் உறையுளாக அவளுக்குக் காட்டின. அவற்றை எவ்வாறு நம்பாதிருக்க முடியும்? காதலே உருவானவன் போல் காட்சி அளித்த அவன் முகத்தை அண்ணாந்து பார்த்து நின்ற பத்மா “சீ, ஸ்ரீதர் மோசக்காரனல்லன். அவன் என்னை விட வேறு யாரையும் எண்ணியதில்லை. எண்ணப் போவதுமில்லை. நான் தான் சலனமடைந்து விட்டேன். தங்கமணி சொன்னதெல்லாம் பொய்! ஸ்ரீதரைப் போன்ற உண்மையானவன் இவ்வுலகில் இல்லை. அவன் சிவநேசர் மகனல்லன். சின்னப்பா வாத்தியார் மகன்தான். எதற்கும் எல்லாம் இன்று தெரிந்து விடுமல்லவா? ஸ்ரீதரே என் காதலன்;  கமலநாதனல்லன்” என்ற எண்ணங்கள் அவள் மனத்தை ஊடுருவிச் செல்ல அவளது கள்ளமற்ற மனதின் எதிரொலி போல அவள் கண்கள் கலங்கின; கட்டுப்படுத்த முடியாத கண்ணீர்த் துளிகள் கன்னத்தின் வழியாகக் கொட்டத் தொடங்கின. உணர்ச்சிகளை மறப்பதற்காகச் சிரித்தவண்ணம் தன் கண்களைத் தனது வளைக்கைகளால் கசக்கிவிட்டாள் அவள். வளையல்கள் சப்தித்தன. கைகள் ஈரமாகின. இருந்த போதிலும் ‘ஹாண்ட் பாக்’கிலிருந்த கைக்குட்டையை எடுக்க அவள் மறந்து போனாள். சேலையில் முன்றானையை எடுத்து நாணத்தோடு கன்னங்களைத் துடைத்து நின்றாள் அவள்.

ஸ்ரீதர் “பத்மா! ஏன் அழுகிறாய்?” என்றான். அவன் மூளை குழம்பியது, “ஏதாவது துக்கமா?”

“இல்லை, ஆனந்தம்! எங்கள் திருமணம் சீக்கிரம் நடக்குமல்லவா?”

“ஆம் சீக்கிரம். வெகு சீக்கிரத்தில் நடக்கும், பத்மா”

ஸ்ரீதர் நடைசாலை நீளக் கண்ணைச் செலுத்திப் பார்த்தான். யாரையும் காணோம். இரு மாணவர்கள் புற முதுகுக் காட்டித் தூரத்தில் போய்க் கொண்டிருந்தனர். ஆகவே யாரும் தங்களைப் பார்க்கவில்லை என்ற உறுதியுடன் பத்மாவின் கண்களைத் தடவி அவளது பட்டுக் கன்னங்களைத் தன் கரங்களால் மெல்லத் தட்டினான் ஸ்ரீதர். மெல்லிய கண்ணாடி பாத்திரத்தைத் தடவுவது போல் அவள் வளவளப்பான கன்னங்களைத் தன் விரல்களால் சிறிது நேரம் தடவிக் கொண்டே நின்றான்.

பத்மா திருப்தியுடன் புன்னகை செய்தாள். கூம்பிய தாமரை மீண்டும் விரிவது போல் அவள் அன்பு மீண்டும் மலர்ந்தது.

“சரி நான் வரட்டுமா ஸ்ரீதர்? கட்டாயம் பின்னேரம் வர வேண்டும். தவறக்கூடாது” என்றாள் பத்மா.

“வருவேன். என் கடிதத்துக்கும் நீ கட்டாயம் பதிலெழுத வேண்டும். தெரிந்ததா?” என்றான் ஸ்ரீதர்.

“எழுதுகிறேன். சரி. வருகிறேன் டார்லிங்”

பத்மா அங்கிருந்து போகு முன்னர் சுற்று முற்றும் பார்த்து விட்டு அவனது சிவந்த திரண்ட கரங்களைத் தன் கைகளால் கிள்ளி விட்டு விரைந்து நடந்து சென்றாள். செஞ்சாயம் பூசிய பள பளக்கும் அவள் நகங்கள் நீளமில்லாவிட்டாலும் அவன் எதிர்பார்த்தது போல அவ்வளவு மொட்டையாக இருக்கவில்லை. ஆகவே அவளது கிள்ளு சற்று உறைக்கவே செய்தது! அவனுக்கு மிக மிக ஆனந்தம்!

ஸ்ரீதர் இரவு கண்ட கனவு பலித்து விட்டது. அவன் தன் மனதில் பின்னியிருந்த சித்திரத்தின் போலவே பத்மா அவனைக் கிள்ளிவிட்டுப் போய்விட்டாள். உண்மையில் அவள் அன்று கிள்ளாது போயிருந்தால் அது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். மேலும் அவளது கண்ணீர், உணர்ச்சி நிறைந்த அவளது கண்ணீர் அவள் நேசத்தின் கின்னம். “நிச்சயம் எனது பொய்க்காக அவள் என்னை வெறுக்க மாட்டாள். மாரியம்மன் என் காதலைக் கட்டாயம் காப்பாற்றுவாள்.” என்று சொல்லிக் கொண்ட ஸ்ரீதர் தன் விரல்களைல் படிந்திருந்த அவளது கண்ணீரின் ஈரத்தை மறு கரத்தால் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அவன் கண்ணிலும் கண்ணீர் பிறந்தது. தனது கைகளால் துடைக்கும் பொழுது அவனது விரல்களில் பட்டிருந்த பத்மாவின் கண்ணீரும் அவன் கண்ணீரும் ஒன்று சேர்ந்தன. அதில் அவனுக்கு அளவு மீறிய திருப்தி!

அன்று பிற்பகல் ஸ்ரீதர் வழக்கம்போலத் தனது பிளிமத் காரைக் கொலீஜ் ரோட்டிற்குச் சற்றுத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி வருபவன் போல் 48ம் இலக்கத் தோட்டத்தை வந்தடைந்த போது, அங்கே பரமானந்தர் அவனுக்காக ஆவலுடன் காத்திருந்தார். இன்று அவனிடம் விஷயத்தைப் பேசித் தீர்த்து விட வேண்டுமென்பது அவர் தீர்மானம். எதற்காக அவன் பொய் சொல்ல வேண்டும்? உண்மையில் அவன் சிவநேசர் மகன் தானா? அப்படியானால் இந்தத் திருமணம் நடக்கக் கூடியதா? -- இவ்வாறு அவர் யோசித்துக் கொண்டிருக்க ஸ்ரீதர் சிரித்த முகத்தோடு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் “வா தம்பி” என்று வழக்கம் போலவே அழைத்த பரமானந்தர் உள்ளே விமலாவுக்கும் லோகாவுக்கும் ஆங்கில பாடம் சொல்லிக் கொண்டிருந்த மகளை நோக்கி “பத்மா, பத்மா” என்று சப்தமிட்டார்.

உண்மையில் பரமானந்தருக்கு ஸ்ரீதர் மீது கடுமையான கோபம் இருந்தது இருந்தாலும் கள்ளங்கபடமற்ற அவனது புன்முறுவல் பூத்த முகத்தைக் கண்டதும் அக்கோபம் எங்கேயோ மறைந்துவிட்டது. இவனா பொய் சொல்லியிருப்பான். ஏன் - அவரால் அவன் தீய எண்ணத்துடன் எதையும் செய்யக் கூடியவன் என்ற நம்ப முடியவில்லை. இருந்தாலும் இது சாதாரண விஷயமில்லவே, பேசாது விடுவதற்கு. இன்னும் தன் ஒரே மகள் பத்மாவின் முழு வாழ்க்கையையுமே பாதிக்கத்தகக பெரிய விஷயம் இது. ஆகவே எப்படியும் அதனை வெளியாகப் பேசித் தீர்த்துவிட வேண்டியதுதான். அப்படிப் பேசி, அவன் உண்மையிலேயே குற்றவாளியாகக் காணப்பட்டால், விஷயத்தைப் பெரிதுபடுத்திக் குழப்பிக்  கொண்டிராமல், “போ சனியன்” என்று முடித்துவிட்டுத் தனக்கு நன்கு தெரிந்த ஓர் இடத்தில் பத்மாவுக்கு வேறு மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டியதுதான். தாயில்லாத ஒண்டி பெண். நான் திடீரெனக் கண்ணை மூடி விட்டால் என்ன செய்யும்? கல்யாணம் ஒன்று தான் அவனைக் கரை சேர்த்துப் பாதுகாப்பளிக்கவல்லது. ஆகவே அதைத் தட்டில் கழிக்கவோ, ஒத்தி போடவோ முடியாது.

பத்மா வெளியே சிரித்த முகத்துடன் வந்து ஸ்ரீதரை வரவேற்றாள். ஸ்ரீதரும் புன்னகை செய்து கொண்டே ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். அவன் நாற்காலியில் அமர்ந்ததும் பத்மா விமலாவைக் கூப்பிட்டு, அவள் கன்னத்தைத் தடவிக் காதோடு காதாக, “விமலா! ஓடிப் போய் மூலைக் கடை வேலாயுதக் கிழவனை நான் கையோடு வரச் சொன்னதாக அழைத்து வா” என்று கூறி விட்டு, தகப்பனாரைத் தனியே அழைத்து “அப்பா நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம். நான் சில ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். எல்லாவற்றையும் நான் கவனிக்கிறேன்” என்றாள். பரமானந்தரும் “சரி” என்று சொல்லி விட்டு ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். விமலா வேலாயுதக் கிழவனை அழைக்கத் துள்ளிக் கொண்டு ஓடி விட்டாள். லோகாவும் அவளுக்குப் பின்னாலே குதித்துக் கொண்டு ஓடினாள்.

பரமானந்தர் ஸ்ரீதரோடு ஏதாவது பேச எண்ணி, “தம்பி, உன்னுடைய தந்தையார் சின்னப்பாவை நான் காண வேண்டும். நீ அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவரால் இங்கு வர முடியுமானால், நல்லது. அவரால் வர முடியாவிட்டால், எனக்குக் கூட உடுவில்லுக்குப் போக  ஆசைதான். பத்மாவையும் அழைத்துக் கொண்டு போய்விட்டு வரலாம்” என்றார்.

ஸ்ரீதருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இருந்த போதிலும் சமாளித்துக் கொண்டு, “ஆம் அது நல்ல யோசனைதான். நாங்கள் மூவருமே இம்மாத முடிவில் ஊருக்குப் போவோம். வீட்டுக்குக் கடிதம் எழுதி எல்லா ஏற்பாடுகளும் செய்கிறேன்” என்றான்.

இதற்கிடையில் பத்மா ஸ்ரீதருக்குச் சூடான் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் அதை மெல்லக் குடித்துக் கொண்டே பரமானந்தர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்க, வேலாயுதக் கிழவன் தனது தலையைத் தடவிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். அவன் பின்னாலே விமலாவும் லோகாவும் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டு வந்தார்கள். கிழவன் அவர்களுக்கு இனாமாகக் கொடுத்த ‘அம்ப்ரெல்லா’க் காயை அவர்கள் கடித்துத் தின்று கொண்டிருந்தார்கள்.

பரமானந்தர் வீட்டுக்குள் புகுந்து வேலாயுதக் கிழவன் திடுக்கிட்டு விட்டான். தனது பழைய எஜமானர் சிவநேசரே அங்கு உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு. “என்ன? தம்பி ஸ்ரீதரல்லவா -- சிவநேசப் பிரபுவின் மகனல்லவா இங்கிருப்பது?” என்று தன்னுள் தானே கூறிக் கொண்ட வேலாயுதம், “ஸ்ரீதர் ஐயா, நீங்கள் எப்போது வந்தீர்கள்?” என்று கூனிக் குறுகி நின்று கேட்டான். ஸ்ரீதரும் திடுக்கிட்டு விட்டான் என்றாலும் சமாளித்துக் கொண்டு “யாரது வேலாயுதமா? நீ இங்கேயா இருக்கிறாய்?” என்றான்.

“ஆம் ஐயா! தோட்டத்திலே ஒரு வெற்றிலை பாக்குக் கடை வைத்திருக்கிறேன். வீட்டிலே சிவநேசப் பிரபு சுகமாயிருக்கிறாரா?” என்றான் வேலாயுதக் கிழவன்.

இதைக் கண்ட பரமானந்தர் “என்ன ஸ்ரீதரை உனக்குத் தெரியுமா, வேலாயுதம்?” என்று கேட்டார். அவருக்கும் இது திடுக்கிடும் செய்திதான்.

“என்ன, என்னை அப்படிக் கேட்கிறீர்கள்? அவர்கள்  வீட்டிலே பிழைத்தவன் யான். இவருடைய தகப்பனாரைப் பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே! இலங்கையிலே பெரிய, பணக்காரர், படித்தவர், சிவநேசப் பிரபு” என்றான் வேலாயுதம் விநயமாக.

“உண்மைதானா? நீங்கள் சிவநேசர் மகனா? பார்த்தால் உங்கள் முகம் அவரைப் போல் தான் இருக்கிறது” என்றார் பரமானந்தர். வெறுப்பாலும் கோபத்தாலும் அவர் முகம் விகாரமடைந்தது. “ஆம், ஸ்ரீதர் பொய்காரன் தான். ஏமாற்றுக்காரன். மோசக்காரன்.” என்றது அவர் மனம்.

பத்மா இவற்றை எல்லாம் தொலைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள். “ஆம், தங்கமணி வெற்றி பெற்றுவிட்டாள்.” அவள் சொன்னது முற்றிலும் உண்மை. ஸ்ரீதர் மோசக்காரன், பொய்யன், அயோக்கியன்” என்று நினைத்தவன்ணமே வேலாயுதத்தை உள்ளே வரும்படி அழைத்தாள். “வேலாயுதம்! நான் எதற்கு உன்னை அழைத்தேன், தெரியுமா? இன்று உனக்கு இங்கே எட்டு மணிக்குச் சாப்பாடு, கட்டாயம் வர வேண்டுமென்று சொல்வதற்குத் தான். இப்பொழுது வேலையிருந்தால் போய்விட்டு நேரத்துக்கு வந்துவிடு” என்றாள். வேலாயுதக் கிழவனும் அப்படியே செய்வதாகப் புறப்பட்டான். ஆனால் வெளியே போகு முன் ஸ்ரீதர் முன்னிலையில் சென்று இரு கரங்களையும் கூப்பி, அவனைக் கும்பிடக் கிழவன் மறக்கவில்லை.

ஸ்ரீதர், “சரி போய் வா” என்று கூறினானாயினும், வேலாயுதத்தின் சந்திப்பு அவனை திகைக்க வைத்திருந்தது! தலையில் ஒரு குண்டு விழுந்தது போலிருந்தது அவனுக்கு!

வேலாயுதக் கிழவன் போன பின்னர் பரமானந்தரும் பத்மாவும் ஏக காலத்தில் ஸ்ரீதர் மீது பாய்ந்தார்கள். அவர்கள் பேச்சிலே ஆத்திரமும் ஆவேசமும் தொனித்தன.

“தம்பி ஸ்ரீதர்! உன் நாடகம் நன்றாயிருக்கிறது! இது பல்கலைக் கழகத்தில் நீ நடித்த ஈடிப்பஸ் நாடகத்தை விட எவ்வளவோ மேல்! ஆனால், இந்த நாடகத்தின் அர்த்தம் தான் எனக்கு விளங்கவில்லை.” என்றார் பரமானந்தர். அவர் குரல் வழக்கத்துக்கு மாறான உச்ச ஸ்தாயியில் ஒலித்தது.

“என்ன அர்த்தம்? எல்லாம் பொய் சொல்லி எங்களை ஏமாற்றி, மெல்ல நழுவும் திட்டம் தான் அப்பா. இல்லாவிட்டால் அவர் பொய் விலாசம் கொடுக்க வேண்டிய காரணமென்ன?” பத்மா இவ்வாறு கூறும்போது கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அவள் அடக்க முயன்ற அழுகை விம்மலாக வெடித்து வெளி வந்தது. கோபமும் ஆத்திரமும் ஏமாற்றமும் அவள் குரலை நடுங்க வைத்தன.

ஸ்ரீதருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தான் மோசக்காரனல்லன் என்பதை நிரூபித்தே தீர்வது என்று முடிவு கட்டி விட்டான் அவன்.

“பத்மா! வெறுமனே கூச்சலிட்டு அழாமல் நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பேசு! எனக்குப் பேசச் சந்தர்ப்பம் கொடுங்கள். என் நிலையை எடுத்துச் சொல்ல இடமளியுங்கள்” என்று உரத்த குரலில் சப்தமிட்டான் ஸ்ரீதர். “ஈடிப்பஸ்” நாடகத்தில் அவன் செய்த முழக்கம் பத்மாவுக்கு ஞாபகம் வந்தது. அப்பொழுது பரமானாந்தர் “இதிலென்ன தம்பி பேச இருக்கிறது? நீ சொன்னது பொய்தானே? நீ சின்னப்பா மகனல்ல. சிவநேசர் மகனென்பது மெய் தானே?” என்றார்.

ஸ்ரீதர் “அது மெய்தான். ஆனால் என்ன காரணத்துக்காக நான் பொய் சொன்னேன் என்பது தெரிந்தால் நீங்கள் என்னை ஒரு போதும் மோசக்காரனென்று கூற மாட்டீர்கள். மேலும், பத்மாவை ஏமாற்றி ஓடும் கீழ்த்தர எண்ணம் எனக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை” என்றான், அழுத்தம் திருத்தமாக.

“அப்படியானால் பொய் சொல்ல வேண்டிய காரணம்?” பத்மாவின் கேள்விப் பானம் இது.

“சொல்லுகிறேன். முதலில் இருவரும் அமைதியாக உட்காருங்கள்” என்று கூறிக் கொண்டே தன் கதையைக் கூற ஆரம்பித்தான் ஸ்ரீதர்.

“உண்மைதான். நான் சிவநேசரின் மகனே. இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர் எங்கள் குடும்பந்தான் என்று தான் எல்லோரும் சொல்லுகிறார்கள். அத்துடன் அவர் படித்தவர். உயர்ந்த ஜாதிக்காரர். இவை எல்லாம் சேர்ந்து எங்களை மற்றவர் கண்களில் அபூர்வப் பிறவிகளாக்கிவிட்டன. அவர்கள் ஒன்றில் எங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள், அல்லது எங்கள் முன் தாழ்மை உணர்ச்சியால் பதறுகிறார்கள். இதனால் பல்கலைக் கழகத்தில் கூட என்னுடன் பழகுபவர்கள் மிகக் குறைவு. இந்த நிலையில் நான் பத்மாவைக் கண்டு அவளை என் மனைவியாக்க வேண்டுமென்று தீர்மானித்தபோது, என் முன் ஒரு பிரச்சினை எழுந்தது. சாதாரண குடும்பத்தில் பிறந்த பத்மா நான் சிவநேசரின் மகன் என்று தெரிந்ததும் மிரண்டு போய் விடுவாள் என்று அஞ்சினேன். அப்படி அவள் மிரண்டு சென்றால் எப்படி அவள் அன்பை நான் பெற முடியும்? ஆகவே பத்மா மிரளாமலிருக்க வேண்டுமென்றே நான் வாத்தியார் சின்னப்பா என்று ஒருவரைக் கற்பனை செய்து அவரது மகன் நான் என்று கூறிக் கொண்டேன். ஆனால் எவரையும் ஏமாற்றும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. சமயம் வந்ததும் உண்மையைச் சொல்லி, பத்மாவை என் மனைவியாக்க வேண்டுமென்பதே என் திட்டம். ஆனால் அதற்கிடையில் வேலைக்கார வேலாயுதத்தால் இந்தக் குழப்பமேற்பட்டுவிட்டது.”

ஸ்ரீதரின் கதையை முற்றிலும் கேட்ட பரமானந்தர் “ஆனால் நீ சொல்லும் இக்கதை வெறும் கட்டுக் கதையல்ல என்று எப்படி நாம் நம்புவது? உன் திட்டம் எங்களை ஏமாற்றுவதாகவே இருந்திருக்கலாம். இப்பொழுது அகஸ்மாத்தாகப் பிடிபட்டுக் கொண்டதும் தப்பித்துக் கொள்வதற்காக நீ இக் கதையைச் சோடித்திருக்கலாம்!” என்றார்.

ஸ்ரீதர், “நான் சொல்வதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும்!” என்றான்.

“காட்டுங்களேன்,” என்றாள் பத்மா.

ஸ்ரீதர், “நாளை உங்கள் இருவருக்கும் இரண்டு கடிதங்கள் வரும். இன்று காலையில் கட்டில் சேர்த்த பதிவுத் தபால்கள். அவற்றில் நான் சொன்ன இக்கதை முழுவதும் இருக்கும். அவை நேற்றிரவு நான் எழுதிய கடிதங்கள். அக் கடிதங்கள் இன்று இப்பொழுது நடை பெற்றவைகளை எதிர்பார்த்து எழுதப்பட்ட மோசடிக் கடிதங்களாக இருக்க முடியாதல்லவா? மேலும் அவை இன்று காலை தபாலில் சேர்க்கப்பட்டன என்பதற்கு இதோ அத்தாட்சி!” என்று கூறிக் கொண்டே தனது சட்டைப் பையிலிருந்த பதிவு ரசீதுகளை எடுத்து, பரமானந்தர் கையில் கொடுத்தான்.

பரமானந்தர் அவற்றை வாங்கிக் கொண்டு மெளனமானார். பத்மா முகத்தில் மலர்ச்சி. அது திடீர்ப் புன்னகையாகிப் பின்னர் சிரிப்பாக விகசித்தது. ஸ்ரீதரும் சிரித்தான். ஆம் ஸ்ரீதர் மோசக்காரனல்லன்! பத்மா முகம் நாணியது. இடம் விட்டு இடமோடிய அவள் கன்னச் சுழியை இரசித்தான் ஸ்ரீதர்!

பரமானந்தர் உள்ளத்திலும் திருப்தி. இருவரையும் பார்த்துப் புன்னகை செய்தார். “சரி, நாளைக்குக் கடிதத்தை வாசித்துப் பார்ப்போம்” என்றார் அவர். ஆனால் கடிதத்தை வாசிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஸ்ரீதர் மோசக்காரனல்லன் என்பதை அவர் நன்குணர்ந்து கொண்டார்.

அன்று இரவு சுரேஷிடம் கொட்டாஞ்சேனைச் சம்பவங்கள் யாவற்றையும் நவ ரசங்களும் ததும்ப விவரித்த ஸ்ரீதர், “எல்லாம் மாரியம்மனின் அருள். நாளைக்கு நான் மாரியம்மன் கோவிலில் நூறு ரூபாவுக்குக் கற்பூரம் கொளுத்தப் போகிறேன்” என்றான்.

“எதற்காக? உன்னைக் காப்பாற்றியவை அக்கடிதங்கள். அவற்றை எழுதச் சொன்னது நான்.  ஆகவே நீ அதற்காக ஏதாவது ‘பீஸ்’ செலுத்த விரும்பினால் அதை எனக்குத் தான் செலுத்த வேண்டும்.” என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் சுரேஷின் பேச்சை இலட்சியம் செய்யாமல் ஏதோ பாட்டொன்றைப் பாடிக் கொண்டிருந்தான். அப்போது கூரையில் பல்லி சொல்லுவது கேட்டது. “சுரேஷ்! பல்லி சொல்வதைக் கேட்டாயா? பல்லி என்ன சொல்கிறது?” என்றான் ஸ்ரீதர்.

“பல்லியக் கூரைச் சாஸ்திரியாராக எண்ணிக் கொண்டு நீ இக் கேள்வியைக் கேட்கிறாய். நான் அறிந்துள்ள மிருகவியலின் படி எந்தப் பல்லியும் சோதிடம் கற்றுக் கொண்டதாக எனக்குத் தெரியாது!” என்றான் சுரேஷ்.

“பல்லி சொல்வது என்ன என்பது எனக்குத் தெரியும். பத்மாவும் நானும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வோம் என்று பல்லி சொல்லிற்று” என்றான் ஸ்ரீதர் மன மகிழ்ச்சியால் சுரேஷோடு குழந்தை போல் கொஞ்சினான் அவன் .

ஸ்ரீதரின் மனதில் இருந்த பெரிய பாரம் - எப்படித் தன் ஆள் மாறாட்ட நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற பிரச்சினை - இப்பொழுது தீர்ந்துவிட்டதால், அவன் மனம் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது! அவனைப் போன்ற சந்தோஷமான மனிதன் இவ்வுலகில் வேறு யாரும் அன்றிருக்கவில்லை. தங்கள் காதலென்னும் முழுமதியைப் பீடித்த இராகு நீங்கியதே என்று மகிழ்ந்து கொண்டிருந்தான் அவன்.


8-ம் அத்தியாயம் சுய உருவில் ஸ்ரீதர்

அறிஞர் அ.ந.கந்தசாமி -

பாரதக் கதையிலே பாண்டவர்கள் யாவரும் ஒரு வருஷம் அஞ்ஞாதவாசம் சென்றதாகவும், அக்காலத்திலே அவர்கள் தமது பெயரையும் உருவையும் மாற்றி விராட தேசத்திலே மறைந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. துரியோதனாதியரிடம் சூதிலே தோற்ற பாண்டவர்களில் மூத்தவராகிய தர்மபுத்திரன், தானும் தம்பியரும் மனைவி திரெளபதியுடன் பன்னிரண்டு வருட காலம் வன வாசமும், பதின்மூன்றாம் வருடம் அஞ்ஞாதவாசமும் செய்ய ஒப்புக் கொண்டு அவ்வொப்பத்திற்குச் சிறிதும் பிழையில்லாமல் நிறைவேற்றியதாகவும் பாரதக் கதை கூறுகிறது. பதின்மூன்றாம் வருடத்தின் கடைசி நாளும் கழிந்து பதினான்காம் வருடத் தொடக்க நாளில் பாண்டவர்கள் என்ன நிலையில் இருந்திருப்பார்கள்? பத்மா வீட்டில் தான் யாரென்பதைப் பத்மா முன்னிலையிலும் பரமானந்தர் முன்னிலையிலும் ஒப்புக் கொண்டு, அதன் மூலம் தன் சுய உருவத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீதர் அன்று அந்த நிலையில் தான் இருந்தான். ஆள் மாறாட்ட நாடகத்தால் ஏற்பட்ட மனப்பாரமும், எங்கே பிடிபட்டு விடுகிறோமோ என்ற அச்சமும் முற்றாக ஒழிந்து விட, ஒரே ஆனந்தத்தில் மூழ்கிக் கிடந்தான் அவன்.

அதிகாலையில் நித்திரை நீங்கி விழித்துக் கொண்டதும் சின்ன வயதில் தான் கேட்ட பாண்டவர்களின் அஞ்ஞாதவாசக் கதைதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. “ஒரு வருட காலம் தருமர் உள்ளிட்ட எல்லாப் பாண்டவர்களும் பொய்ப் பெயரும் பொய்யுருவும் தாங்கி விராட தேசத்து மன்னனை ஏமாற்றி வந்தது போலத் தானே, நானும் பத்மாவையும் பரமானந்தரையும் ஏமாற்றி வந்தேன்? சிவநேசர் மகன் ஸ்ரீதர் என்பதை சின்னப்பா மகன் ஸ்ரீதர் என்ற பெயரை மாற்றியதோடு மட்டும் நான் நிற்கவில்லை. என்னிடமருந்த உயர் தர ஆடைகளை உடுத்தாது, நடுத்தரமான ஆடைகளை உடுத்தி, ஒரு வகை மாறு வேடமும் பூண்டேன். ஏன், நீண்ட காலமாக நான் வழக்கமாக அணியும் என் பாட்டனார் சர் நமசிவாயத்தின் வைர மோதிரத்தைக் கூட அணியாது விட்டேன். அத்துடன் கொலீஜ் ரோட்டுக்குப் போகும்போது  எனது ‘பிளிமத்’ காரை வேறொரு வீதியில் நிறுத்தி விட்டும் கால் நடையாகப் பத்மா வீட்டுக்குப் போனேன்.

இன்னும் பல்கலைக் கழக்த்திலும் எனது கார் பத்மாவின் கன்ணில் பட்டு விடாதிருக்க வேண்டுமென்பதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எல்லாமெடுத்துக் கொண்டேன். அப்பப்பா, இனி மேல் இந்தத் தொல்லைகள் இல்லை. என் சுயரூபத்தில், சிவநேசர் மகன் ஸ்ரீதர் உருவத்தில், நான் என் பத்மாவுடன் பழகப் போகிறேன்!” என்று மகிழ்ச்சிக் கடலில் நீந்தினான் ஸ்ரீதர்.

அன்று காதலரிருவரும் பல்கலைக் கழகத்தில் தமது “வழமையான இடத்”தில் சந்தித்த போது அவர்கள் தம்மிடமிருந்த, மிகவும் அழகான உடைகளை அணிந்து வெகு அலங்காரமாக “மேக்கப்” செய்து வந்திருந்தார்கள்.

ஸ்ரீதர் நீல நிறக் காற்சட்டையும் “பிக்காசோ” சித்திரங்களிட்ட ஒரு புஷ் ஷேர்ட்டும் அணிந்திருந்தான். கண்களை அழகிய பிரேமுடன் கூடிய கறுப்புக் கண்ணாடி அலங்கரித்தது. கையில் பதினைந்து வைரக்கற்கள் பதித்த பாட்டனாரின் பழைய மோஸ்தர் தங்க மோதிரம், கால்களில் நவீன முறையில் அமைந்த செவ்வர்ண வெல்வெட் பாதரட்சைகள். தனது பிளிமத் காரைத் தானே ஓட்டி வந்து, நூல் நிலையத்துக்குச் சற்றுத் தொலைவில் இருந்த பெரிய நிழல் வாடி மரத்தின் கீழ் விட்டிருந்தான் அவன். குளித்து மூழ்கித் தலைக்கு வாசப் பசையிட்டுருந்த அவனது “ஓடிக் கொலோன்” நறுமணத்துடன் கூடிய வழுவழுப்பான மேனியைப் போலவே, அவனது பிளிமத் காரும் நன்கு கழுவி மினுக்கி விடப்பட்டிருந்தது. வேலைக்காரச் சுப்பையாவும் டிரைவர் சங்கரனும் அவன் முதல் நாளிரவு படுக்கைக்குச் செல்லுமுன் இட்டிருந்த கட்டளையை சரியாக நிறைவேற்றியிருந்தார்கள். காலையில் பூவைப் போன்ற புனிதத்தோடு பளபளப்பாகக் காணப்பட்ட காரைப் பார்த்ததும் ஸ்ரீதருக்குச் சொல்லொணா மகிழ்ச்சி. இருவருக்கும் ஐந்து ரூபா ‘டிப் ‘ கொடுத்ததோடு, டிரைவருக்கு முழு நாள் லீவும் கொடுத்து விட்டான். பத்மாவை ஏற்றிக் கொண்டு உல்லாசமாக எங்காவது போய் வர வேண்டுமென்பது அவனது திட்டம். காதலியோடு காரில் போகும்பொழுது அவர்களது தனிமைக்கு இடைஞ்சலாயிருக்குமென்பது தான் அவனுக்கு லீவுக் கொடுக்கக் காரணம்.

ஸ்ரீதரைப் போலவே “வழமையான இடத்”துக்கு வரும் போது, பத்மாவும் ஒரு திட்டத்தைத் தீட்டி வந்திருந்தாள். “எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரு’க்குப் போய் ஐஸ்கிறீம் அருந்த வேண்டுமென்பதே அது. நாவுக்கு ருசியான ஐஸ்கிறீம் உண்ணும் ஆசையில் மட்டும் அவள் இத்திட்டத்தை வகுத்திருந்தாள் என்று கூற முடியாது. தனிமையான இடத்தில் தன் காதலனுடன் சேர்ந்திருக்கும் ஆசையும், அவனுடைய காதல் மழலையைக் கேட்டு மகிழ வேண்டுமென்ற எண்ணமுமே அவளை இத்திட்டத்தை வகுக்கத் தூண்டின.

பத்மா அன்று மணிந்திருந்த சேலையும் சோளியும் அவளை ஸ்ரீதருக்கேற்ற ஜோடியாகவே காட்டின. அன்று காலை கொழும்பு நகரிலேயே மிகவும் அழகாக உடை அணிந்திருந்த நாகரிக யுவதி யார் என்று ஒரு போட்டி வைப்பதற்காக, நடுவர் சிலர் புறப்பட்டிருந்தால், அவர்கள் நிச்சயம் பல்கலைக்கழகத்து நூல் நிலையத்தை அடுத்திருந்த நடை சாலையில் தன் காதலன் ஸ்ரீதருடன் கொஞ்சு மொழி பேசிக் கொண்டிருந்த பத்மாவையும் அப்போட்டியில் பங்கு பற்றத் தகுதி  பெற்றவளாகத் தெரிந்தெடுத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் அவர்களின் நல்ல காலம், அன்று அவ்விதமான போட்டி எதுவும் இல்லாததால் பத்மா அவ்வாறு தெரியப்படவில்லை. அதனால் காதலர்கள் தமக்குள் தனித்துப் பேசி மகிழ்வதற்கும் எவ்வித பங்கமும் ஏற்படவில்லை!

பத்மா வெண்ணீலப் பட்டில் வெள்ளிப் பொட்டுகளிட்ட ஒரு பட்டுச் சேலையை அணிந்து அதற்கேற்ற வெண் சரிகைக் கரையிட்ட வெண்ணீலச் சோளி ஒன்றையும் தரித்திருந்தாள். தொளதொளவென்று பின்னி விடப்பட்ட கூந்தலை ஒரேயொரு சிவந்த ‘கார்னேஷன்’ மலர் அலங்கரித்தது. கைகளில் கலகலவென்று கூத்திட்ட பல வர்ணக் கண்ணாடி வளையல்கள். காதில் நவீன முறையில் அமைந்திருந்த காதணிகள். கால்களில் வெள்ளி வர்ணப் பாதரட்சைகள். உன்மையில் அன்று பத்மா சாதாரணப் பெண்ணாகத் தோன்றவில்லை. தேவ மாது போல் தோன்றினான். ஆனால் அவள் அணிந்திருந்த எல்லாவற்றிலும் அவளுக்கு அழகூட்டியது அவள் முகத்தில் அவள் என்றும் அணிந்திருந்த அவளது புன்னகையே. கன்னத்தைக் குழி விழச் செய்த அவளது புன்னகையும், ‘ஐ’ பென்சிலின் உதவியால் காதளவு நீண்ட அவளது புருவங்களும், லிப்ஸ்டிக்கால் செம்மையோட்டப்பட்டு சிறிய ரோஜா மொட்டுப் போல் விளங்கிய அவளது கனிந்த அதரங்களும் அவளது முகத்தின் கவர்ச்சியை மிகவும் அதிகரித்தன. ஸ்ரீதரையும் பத்மாவையும் அப்போது பார்த்தவர்கள் அவர்களைப் போன்றபொருத்தமான ஜோடி இவ்வுலகில் இல்லையென்றே கூறியிருப்பார்கள்.

பத்மாவைக் கண்டதும் ஸ்ரீதர் “பத்மா எனது கடிதம் கிடைத்ததா?” என்று கேட்டான் ஆவலுடன்.

“கிடைத்தது. இதோ...” என்று கூறிக் கொண்டே தனது “ஹாண்ட் பாக்”கைத் திறந்து அங்கிருந்த ஸ்ரீதரின் கடிதத்தை வெளியே  எடுத்தாள் பத்மா.

“அப்பா கடிதங்கள் இரண்டையும் மிகவும் இரசித்தார். நல்ல வேளை, எனக்கெழுதிய கடிதத்தில் கூட கிளியே, குயிலே என்ற காதல் மொழிகளை அள்ளித் தெளிக்காமல் நாகரிகமாக எழுதியிருந்தீர்கள். மாமாவுக்கு மருமகனை நிரம்பப் பிடித்து விட்டது” என்றாள் பத்மா சிரித்த முகத்துடன்.

“அப்படியா! அப்படி மாமா மெச்சும்படி நான் என்ன எழுதியிருந்தேன்? கடிதத்தில் எந்தப் பகுதி அவருக்குப் பிடித்தது” என்று கேட்டான் ஸ்ரீதர்.

“இந்தப் பகுதி” என்று கூறிக் கொண்டே பத்மா தன்னிடமிருந்த கடிதத்தை எடுத்து வாசிக்கலானாள்.

“நான் பொய்யன் தான். ஆனால் இப்படிப்பட்ட  சூழ்நிலைகளில் மாமன்னன் துஷ்யந்தன் கூடப் பொய் சொல்லியிருக்கிறான். நான் மன்னன் என்பதை அறிந்தால் வன மங்கை சகுந்தலை அதிக மரியாதை செய்து, தன்னை விட்டு நீங்கி விடுவாள் என்ற பயந்த காளிதாசனின் கதாநாயகன் தான் ஒரு சாதாரண அரச ஊழியன் எனப் பொய் சொன்னான். நான் சொன்ன பொய்யும் அத்தகையதே...” என்று வாசித்து வந்த பத்மா தன்னைப் பற்றி நேரடியாக எழுதப்பட்ட இடம் வந்ததும் நாணத்தால் முகம் சிவந்து மேலே வாசிக்க முடியாது நிறுத்திவிட்டாள்.

ஸ்ரீதர் அவள் கையிலிருந்த கடிதத்தைத் தானெடுத்து வாசிக்கலானான்:

“பத்மாவை என் வாழ்க்கைத் துணையாகப் பெற வேண்டுமென்ற ஆசையால் தான் நான் பொய் சொன்னேன். என்னுடன் பழக அவள் அஞ்சி விடுவாளோ என்று நான் பயந்ததே எனது பொய்க்குக் காரணம்...”

பத்மா, “உங்கள் மாமா இந்தப் பகுதியைத்தான் மிகவும் இரசித்தார். “என்ன அருமையான எடுத்துக்காட்டு! துஷ்யந்தன் செய்ததைத்தானே நானும் செய்தேன்” என்ற பேச்சுக்கு நாங்கள் என்ன எதிர்ப் பேச்சுக் கூற முடியும்?” என்று பல தடவை கூறிவிட்டார் அவர். இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? அப்பாவும் துஷ்யந்தன் வேஷம் போட்டு நடித்திருக்கிறாராம் சின்ன வயதில்” என்றாள்.

“என்ன, மாமா துஷ்யந்தனாக நடித்தாரா? அப்படியானால் சகுந்தலை யார்? உனக்குத் தெரியாம்லே உன்னைச் சகுந்தலையாக்கி நான் ஆடிய நாடகம் போன்ற ஒரு நாடகமா? அல்லது மேடை நாடகமா? ஒரு வேளை நான் உன்னிடம் பொய் சொன்னது போல் அவரும் மாமியிடம் பொய்கள் சொல்லி இருப்பாரோ, என்னவோ?” என்றான் ஸ்ரீதர்.

பத்மா சிணுங்கிக் கொண்டு, “எனக்கு அது தெரியாது. வாருங்கள், ஐஸ்கிறீம் பார்லருக்குப் போவோம்” என்றாள் ஆவலுடன். அன்று தன் முன் இருந்த முழு நேரத்தையும் ஒரு நிமிஷம் கூட வீணாகாமல் ஸ்ரீதருடன் தனியே இன்பமாகக் கழிக்க வேண்டுமென்பது அவள் ஆசை.

இப்படி நடைசாலையில் அர்த்தமில்லமல் பேசிக் கொண்டே நின்றால் இன்பப் பொழுதைத் தொடங்குவது எப்படி? -- இந்த எண்ணம் தான் பத்மாவை அவ்வாறு அவசரப்படுத்தத் தூண்டியது.

தான் துஷ்யந்தனை எடுத்துக்காட்டாகக் கூறியதற்கு இவ்வளவு பாராட்டா என்று அதிசயித்த ஸ்ரீதர், அப்பாராட்டுக்கு உண்மையில் உரியவன் டாக்டர் சுரேஷ் அல்லவா என்று எண்ணினான். அவனுக்குத்தான் எல்லாம் தெரியும். வைத்தியம், அரசியல், இலக்கியம், உலகியல், உளவியல் - அவனுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை! “அவன் தானே துஷ்யந்தனின் கதையைக் கூறி எனது குற்ற உணர்ச்சியைப் பெரிதும் குறைத்தவன்?” என்று நினைத்த ஸ்ரீதர் அவன் சீமைக்குப் போக இருப்பதை எண்ணிக் கவலையடைந்தான்.

“அவன் போய் விட்டால் சந்தர்ப்பங்களுக்குரிய ஆலோசனைகள் கூற எனக்கு யார் இருக்கிறார்கள். அர்ச்சுனனுக்குக் கண்ணன் இருந்தது போல பக்கத்திலிருந்து ஆலோசனை சொல்ல அவனில்லாமல் நான் என்ன செய்வேன்?” என்று பயந்தான் ஸ்ரீதர். உண்மையில் ஸ்ரீதர் தன்னால் இழக்க முடியாத இருவரே இவ்வுலகில் இருப்பதாகக் கருதினால், ஒன்று அவனது காதலி பத்மா, மற்றது நண்பன் சுரேஷ்.

ஆனால் அவன் சுரேஷைப் பற்றிய சிந்தனைகளில் சிக்கிக் கொண்டிருக்கப் பத்மா விட வில்லை. நடைசாலையையும், பல்கலைக் கழக வளவையும் சுற்று முற்றும் பார்த்து விட்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படாது போகவே, துணிவோடு தனது தளிர்க்கரங்களால்  அவனது கரங்களைப் பற்றிக் கொண்டு “வாருங்களேன் போவோம்” என்று மீண்டும் சிணுங்கினாள் அவள்.

ஸ்ரீதர் சிரித்துக்  கொண்டே நிழல்வாடியின் கீழ் நின்ற காரை நோக்கிப் போனான். “இன்று டாக்சி வேண்டியதில்லை. எனது சொந்தக் காரிலேயே ஊர் சுற்றுவோம்” என்றான். பத்மாவும் பின் தொடர்ந்து ஏறிக் கொண்டாள். சாதாரணமாக ஒரு மாணவனின் காரில் ஒரு மாணவி பல்கலைக்கழக வளவிலேயே ஏறிக் கொண்டு செல்வதற்குச் சிறிது கூச்சமடையவே செய்வாளென்றாலும், அந்த வேளையில் பல்கலைக்கழகத்தின் அப்பகுதியில் மாணவர் நடமாட்டம் சற்றும் இல்லாதிருந்தது பத்மாவுக்குத் துணையாயிருந்தது.

இருந்த போதிலும் அப்பொழுது கூட இரு நீண்ட பெண் விழிகள் காதலர் இருவரையும் அவர்களறியாது கவனித்துக் கொண்டு தான் இருந்தன. அவை தங்கமணியின் விழிகள். மை தீட்டிய அவளது இரு விழிகளும் அவளது புருவங்களுக்கு இடையே நெற்றியில்தீட்டப்பட்டிருந்த அவளது ஆச்சரியக்குறி போன்ற திலகத்தின் தாக்கத்தாலோ என்னவோ ஒரே ஆச்சரிய உணர்ச்சியையே பிரதிபலித்துக்கொண்டிருந்தன. “என்ன இது? நேற்று முன் தினம் தான் பத்மா தனது கர்வம் அடங்கிக் கண்ணீர் விட்டாள். இன்று மீண்டும் என்ன மிடுக்கு! சினிமாகாரி போல் சிங்காரித்துக் கொண்டு ஸ்ரீதருடன் காரில் பவனி, தலையைப் பார்! கெட்ட கேட்டுக்குக் கார்னேஷன் பூ வேறு” என்று கூறிக் கொண்ட அவளது மார்பு ஒரு பெருமூச்சால், கடலலை போல் ஏறி இறங்கியது!

பல்கலைக்கழகத்து வாயிலுக்குச் சமீபமாக இருந்த இரசாயன ஆய்வு கூடத்தில் ஜன்னலுக்குச் சமீபமாக நின்று கொண்டு ஒரு திரவ பரிசோதனையை நடத்திக் கொண்டிருந்த தங்கமணி காரொன்று செல்வதன் ஓசையைக் கேட்டு நிமிர்ந்து நோக்கிய பொழுதுதான் பத்மாவும் ஸ்ரீதரும் காரில் செல்வதைப் பார்த்தாள். சிறிது நேரம் தனது மேலிதழைக் கீழ்ப் பற்களால் கடித்துக் கொண்டு, ஏதோ யோசித்த அவள் திடீரென மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் தனது பரிசோதனையில் ஈடுபட்டாள். இருந்த போதிலும் சற்று நேரத்தில் அங்கே வந்த அவளது தோழி கலாவிடம், “பார்த்தாயா.. பல்கலைக்கழகத்துப் புதிய ஜோடியை. ஸ்ரீதருடன் பத்மா காரில் போகிறாள். இவர்கள் இங்கே வருவது படிக்கவல்ல - காதற் கலை பயில. இவர்களின் போக்கு, தமிழர்களுக்கே அவமானம். இந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கூட எவ்வளவோ மேல்” என்றாள்.

கலா அதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ பதிலளிக்கவில்லை. ஏனென்றால் அவளுக்கும் பல்கலைக்கழகத்தில் ஒரு காதலன் உருவாகிக் கொண்டிருந்தாள். பத்மா போலவே அவளுக்கும் காதலன் ஒருவன் இல்லாவிட்டால், நிச்சயம் தங்கமணியின் கருத்து அவளுக்குச் சரியாகவே பட்டிருக்கும். இந்த உலகில் பெரும்பாலோரின் பொதுக் கருத்துகள் கூட அவர்கள் அறியாமலே அவர்களது சொந்த விவகாரங்களின் அடிப்படையிலேயேதான் உருவாகின்றன.

கலா பதிலொன்றும் கூறாமல் வெறுமனே புன்னகை செய்து விட்டுச் செல்லவே, “இதுவும் ஒரு கழிசடைதான் போல” என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் தங்கமணி.

பத்மா காரில் ஏறிக் கொண்டதும் ஸ்ரீதரிடம் “இப்போது எங்கே போகிறோம் ஸ்ரீதர்? எஸ்கிமோவுக்குத் தானே?” என்றான்.

“இல்லை நண்பர் இருவரைப் பார்க்க,  தெகிவளைக்கு. அவர்களும் என்னைப் போலவே காதலர்கள். போய் வருவோம்?” என்றான் ஸ்ரீதர்.

காதலர் என்று சொன்னதும் “ஆம்” என்ற ஆவலுடன் பதிலளித்தாள் பத்மா. காதல் வயப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உலகமே காதல்மயமாகத்  தோன்றுகிறது. காதலைப் போல் விரும்பத்தக்கது வேறு எதுவுமே இல்லை என்று எண்ணும் அவர்களை அந்த வார்த்தை வசீகரிப்பது போல வேறெவ் வார்த்தையும் வசீகரிப்பதில்லை.

கார் புல்லர்ஸ் வீதி வழியாகச் சென்று காலி வீதியை அடைந்த பொழுது ஸ்ரீதருக்கு “பத்மாவுக்கு ஐஸ்கிறீமில் மிகவும் ஆசை” என்பது ஞாபகத்துக்கு வர, ஓர் ஐஸ்கிறீம் பார்லருக்கு முன்னால் காரை நிறுத்தி அவளுக்கு ஓர் ஐஸ்கிறீமையும் தனக்கு ஒரு பாற் கலவை அல்லது ‘மில்க் ஷேக்’கையும் கொண்டு வரும்படி உத்தரவிட்டான். காதலர் இருவரும் அவற்றை அருந்தி முடித்ததும் கார் காலி வீதியின் அகன்ற தளத்திலே தெகிவளையை நோக்கிப் பறந்தது.

பத்மா, பட்டப்பகல் நேரமாயிருந்ததால் ஸ்ரீதருடன் அதிகம் நெருங்கி உட்காராமல் அவனோடு தன்னுடல் பட்டும் படாமலே உட்கார்ந்திருந்தாள் என்றாலும் அவளது வலது கரமோ அவனது  தோள் மீது நீண்டுக் கிடந்தது.; ஸ்ரீதர் தன் காதலன் என்ற உரிமையை ஸ்தாபிப்பது போலிருந்தது அவளது செயல். உண்மையில் அவ்வாறு அவனது தோளிலே தனது கரத்தை வைத்திருந்தது அவளுக்கு வெது வெதுப்பான உடலின்பத்தை மட்டும் தர வில்லை -- உள்ளத்திற்கும் ஒரு பேராசை நிறைவேறுவது போன்ற இதமும் திருப்தியும் ஏற்பட்டன. சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவள் கண்ட ஒரு பூங்கனவு அப்பொழுது நிறைவேறிக் கொண்டிருந்ததே அவளுக்கு அவ்வித மனநிறைவு ஏற்படுவதற்குக் காரணம்.

சுமார் பதினாறு பதினைந்து வயதிலிருந்தே பத்மா கண்ட இரகசியக் கனவுகளிலொன்று தனக்குப் பிடித்த மணவாளனுடன்  அழகான காரொன்றில் அதன் முன்னாசனத்தில் ஜோடியாக அமர்ந்து, அவனோடு காதல் மொழிகள் பேசி இன்பக் குறும்புகள் செய்து கொண்டு போக வேண்டுமென்பதாகும். இப்படிப்பட்ட காதல் ஜோடிகள் பலரை அவள் கொழும்பில் பல இடங்களில் கண்டிருக்கிறாள்.  ஏன் அவள் வசித்த கொலீஜ் ரோட் 48ம் இலக்கத் தோட்டத்தைக் கூட இது போன்ற காதல் ஜோடிகள் பல தடவைகள் கடந்து சென்றிருக்கிறார்கள். அவர்களைக் காணும் போது அவளை அறியாம்லே அவள் உள்ளம் துள்ளூம்; வாய் பாட்டிசைக்கும்.

அவளது இதயத்தில் புகுந்திருந்த மற்றொரு கனவு தன் காதலன் ஏறிச் செல்லும் ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பின்னால் அவனை இறுகப் பற்றிக் கொண்டு தானும் அவனோடு சவாரி போக வேண்டுமென்பதாகும். பல பறங்கிப் பெண்களும் அவளது காதலர்களும் இவ்வாறு போவதை அவள் பார்த்திருக்கிறாள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர்களல்லவோ வாழ்க்கையின் இனிமையை அனுபவிக்கப் பிறந்தவர்கள்” என்று அவளுக்குத் தோன்றுவதுண்டு.

அவள் கண்ட இன்னொரு கனவு, தான் நீச்சலுடையில் சமுத்திரக் கரையிலே தன் காதலனோடு இன்பப் பேச்சுகள் பேசிக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும் என்பதாகும். சினிமாப் படமொன்றைப் பார்க்கும் போதே அவளுக்கு இந்த  நினைவு முதலில் உண்டாயிற்று.

இருந்தாலும் அதுவும் ஒரு தாங்கொணாத ஆசையாக அவள் மனதில் குடி கொண்டது. உள்ளக் குகையில் ஒரு மூலையில் அந்த ஆசையும் சுருண்டு கிடந்தது.

ஸ்ரீதருடன் காரில் சென்று கொண்டிருந்த பத்மாவின் மனத்திரையில் இவ்வாசைகெளெல்லாம் புத்துருக்கொண்டு தோன்றின. கார் ஆசை நிறைவேறிக் கொண்டிருந்தது. ஆனால் ஸ்கூட்டர் ஆசை? காரில் இருந்த போதிலும் திடீரென அவள் மனம் இனந் தெரியாத ஒரு காதலனுடன் ஸ்கூட்டரின் பின்னால் சென்றது. போதாதற்கு வீதியில் அவர்களது காருக்கு முன்னாலே ஒரு வாலிப ஜோடி ஸ்கூட்டரில் கண்ணுக்கு எதிரே போய்க் கொண்டிருந்தது. நாகரிகமான “ஷிப்ட்” என்னும் புது மோஸ்தர் கவுன் அணிந்த ஒரு பெண் அவளது பொன்னிறக் கூந்தல் காரிலே பறக்க உல்லாசமாகத் தனது காதலனை இறுகக் கட்டிக் கொண்டு ஸ்கூட்டரின் பின்னால் போய்க் கொண்டிருந்தாள்.

ஸ்கூட்டரின் நினைவு வந்ததும், கூடவே கமலநாதனின் நினவும் சேர்ந்து வந்தது. அதை மறக்க விரும்பிய பத்மா ஸ்ரீதரின் தோள்களைத் தடவி அவனுக்கு ஸ்பரிச சுகம் கொடுத்ததோடு, தானும் அதை அனுபவிக்கலானாள். ஆனால் கமலநாதனையோ அவனது அரும்பு மீசையையோ மறப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. ஆகவே ஸ்ரீதருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள் அவள். பேச்சில் சுவையேறியதும் மற்ற நினைவுகள் மறந்து போகுமல்லவா?

“ஸ்ரீதர்! நாங்கள் தேடிச் செல்லும் உங்கள் நண்பரின் பெயரென்ன?” என்று கேட்டாள் பத்மா.

“மிஸ்டர் டி.எம். ராஜ்” என்றான் ஸ்ரீதர். அதன் பின் ஸ்ரீதர் பத்மாவிடம் டாக்டர் சுரேஷைப் பற்றி விவரித்தான்.

“எனதுயிருக்கு உயிரான ஒரே நண்பன் சுரேஷ் தான். அவன் இன்னும் இரண்டு வாரத்தில் இங்கிலாந்து போகிறான். அதற்கு முன்னர் உன்னை நான் அவனுக்குக் கட்டாயம் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.”

“அதற்கென்ன? நானும் உங்கள் நண்பரைக் காணவே விரும்புகிறென்.”

“அவன் இங்கிலாந்து புறப்பட்டதும், நான் யாழ்ப்பாணம் போவேன். எங்கள் திருமண விஷயத்தைக் கவனிக்க வேண்டுமல்லவா?” என்றான் ஸ்ரீதர்.

பத்மாவுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. தன் கரங்களால் அவன் தோள்களை இறுக அனைத்துக் கொண்டாள்.

ஸ்ரீதர் என்னதான் காதலனென்றாலும், காரை ஓட்டிக் கொண்டு காதல் புரிவது ஆபத்து என்பதை அறியாதவனல்லன். எனவே பத்மா தன் காதல் நாடகத்தை மேலும் தொடர்வதற்கு அவன் இடமளிக்கவில்லை. பத்மாவுக்குக் கோபம். என்றாலும் என்ன செய்வது? வேறு வழியின்றி ஜன்னலண்டை சாய்ந்து வீதிக் காட்சிகளை இரசிக்க முயன்றாள்.

ஓடும் காரின் வேகத்தினால் காற்று முகத்தின் எதிர்ப்புறமாக வீசியது. அது முகத்தின் இரத்த ஓட்டத்தைத் துரிதப் படுத்தி, சரும நரம்புகளுக்கு ஓர் இன்ப உணர்ச்சியை நல்கியது. தலை மயிர் பஞ்சு போல் மிதந்து, பின்னால் பறந்தது. நித்திரை செய்வது போல் பாசாங்கு செய்தாள் அவள். ஸ்ரீதர் “பத்மா!” என்று இரண்டு மூன்று தடவை கூப்பிட்டும், அவள் பதிலளிக்க வில்லை.

கார் தெகிவளையில் ஒரு சந்தியில் திரும்பி அங்கிருந்த மிருகக்காட்சிசாலையின் வாசலில் திடீரென ‘பிரேக்’ போட்டு அவளை அதிர வைத்த பொழுது தான் பத்மா கண் விழித்தாள். மிருகக்காட்சிசாலையின் வாசலில் பெரிய எழுத்துகளில் “மிருகக்காட்சிசாலை” என்று எழுதப்பட்டிருந்தது.

“என்ன? மிஸ்டர் டி. எம். ராஜைக் காணப் புறப்பட்டு, இங்கு வந்து நிற்கிறீர்கள்?” என்றாள் பத்மா.

“இங்குதான் மிஸ்டர் ராஜ் இருக்கிறார்!”

“ஓகோ! இங்கு வேலை செய்பவரா அவர்?” என்றாள் பத்மா, பலவும் தெரிந்தவள் போல.

ஸ்ரீதர் பதிலெதுவும் பேசாமல் காரை வீதியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, இரண்டு பிரவேசச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு பத்மாவுடன் காட்சி சாலையுள் நுழைந்தான். அங்கே குருவிகளூம் வரிக்குதிரைகளும் வரவேற்றன!

பத்மாவின் தோள்களைப் பற்றிக் கொண்டு உல்லாசமாக நடந்த ஸ்ரீதர் “முதலில் நான் சொன்ன காதலர்களைப் பார்த்துவிட்டு, பிறகு மிருகங்களையும் குருவிகளையும் பார்ப்போம்” என்றான்.

“ஆகட்டும் சுவாமி” என்று கொஞ்சலாய் பதிலளித்தாள் பத்மா. ஸ்ரீதர் தன்னைத் தொட்டு நடந்தது அவளுக்குப் புதிய உற்சாகத்தைத் தந்தது.

ஸ்ரீதர் பத்மாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தவன் வழியில் மர்க்கட வனத்தில் சிறிது தாமதித்தான். செங்குரங்கு, கருங்குரங்கு, ஆபிரிகக் குரங்கு, இந்தியக் குரங்கு, வாலில்லாக் குரங்கு, ஒரன்குட்டான், கொரில்லா என்று குரங்குகளில்தான் எத்தனை வகை!

மனிதர்களிலும் பார்க்கக் குழந்தைகளே அதிக கவர்ச்சியுள்ளனவாய் இருப்பது போலக் குரங்குகளிலும் அவற்றின் குட்டிகளே அதிக கவர்ச்சியுள்ளனவாய் இருந்தன. குரங்குகளில் மட்டுமென்ன, எல்லா மிருகங்களிலும் இதுவே நியதி போலும்! நாய், பூனை என்பவற்றில் கூட அவற்றின்  குட்டிகள்தானே மிக அழுகுள்ளவையாய் இருக்கின்றன! மர்க்கட வனத்தில் ஏறாளமான குரங்குக் குட்டிகள் கூடுகளுள் தொங்கிப் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. பார்வையாளர்கள் பலர், முக்கியமாகக் குழந்தைகள், தாமும் கூட்டுக்கு வெளியே நின்று அவற்றோடு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆகச் சிறிய குழந்தைகள் புதுமை நிறந்த தனது கணகளை அதிக அகல விரித்து, அவற்றை ஆச்சரியத்துடன் பார்த்து நின்ற் காட்சியே காட்சி!

பத்மா அவன் சுட்டிய திசையை நோக்கினாள். அங்கே ஒரு பெரிய இரும்புக் கூட்டுள்  ஒரு குரங்கு இன்னொரு குரங்குக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தது.

ஸ்ரீதர் பத்மாவிடம் திடீரென “அதோ நாங்கள் பார்க்க வந்த ஜோடி!” என்றான் அமைதியாக.

பத்மா அவன் சுட்டிய திசையை நோக்கினாள். அங்கே ஒரு பெரிய இரும்புக் கூட்டுள்  ஒரு குரங்கு இன்னொரு குரங்குக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தது.

“பேனெடுக்கும் குரங்கு தான் டி.எம். ராஜ். பேனெடுக்கப்படும் குரங்கு அதன் காதலி டி.எம். ராணி!” என்றான் ஸ்ரீதர்.

“உங்களுக்கு எப்பொழுதும் பெயர் மாறாட்டம்தானே? சிவநேசர் சின்னப்பா ஆன மாதிரி” என்றாள் பத்மா குறும்பாக.

ஸ்ரீதர், “இந்த விஷயத்தில் நான் பொய் சொல்லவில்லை. உண்மைதான் சொன்னேன். ஆண் குரங்கின் பெயர் தெகிவளை மர்க்கட ராஜ். பெண் குரங்கின் பெயர் தெகிவளை மர்க்கட ராணி. மர்க்கடமென்றால் குரங்கு. தெரிந்ததா மட்டிப் பெண்ணே?” என்றான்.

இதற்கிடையில் காதலன் குரங்கு அவர்களைப் பார்த்து விட்டது. காதலியின் தலைப் பேனொன்றை எடுத்து வாயிற்  போட்டு மென்று கொண்டே அவர்களைப் பார்த்துப் பல்லை இளித்து மூக்கைச் சொறிந்தது குரங்கு!

“அந்தக் காதலன் போல எனக்கும் உனக்குப் பேன்  பார்க்க ஆசை. உட்கார், பேன் பார்க்கிறேன்” என்றான் ஸ்ரீதர்.

அதற்குப் பத்மா சாதுரியமாக “ஓகோ, பேன் பார்ப்பதால் குரங்கு இரண்டு பிரச்சினைகளைத் தீர்க்கிறது. ஒன்று பெண் குரங்கின் பேன் தொல்லை தீருகிறது. அதே சமயம் ஆண் குரங்கின் வயிற்றுப் பசியும் தீர்கிறது. உங்களுக்கு இப்பொழுது வயிற்றுப் பசி அதிகமாயிருக்கிறதோ?” என்றாள் சிரித்துக் கொண்டு.

“உனக்குப் பேன் பார்த்தால் வயிற்றுப்பசி தீர்ந்தாற் போலத்தான். நீதான் உலகத்திலுள்ள ‘ஷம்பூ’ எல்லாவற்றையும் உபயோகித்துத் தலையை இப்படிச் சுத்தமாய் வைத்திருக்கிறாயே. பேன் எப்படிக் கிடைக்கும்” என்றான் ஸ்ரீதர்.

“அப்படியானால் பேனுள்ள பெண்ணொருத்தியைப் பாருங்களேன், போங்கள்” என்றாள் பத்மா.

இப்படியாக ஆரம்பித்த இன்பப் பேச்சுகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. பல மணி நேரம் ஒய்யாரமாகச் சுற்றிக் கொண்டேயிருந்தார்கள்.

பறவை வனத்தில் ஒன்றுடன் ஒன்று கொஞ்சிக் குலாவிய பல வர்ணப் பறவைகளைப் பார்த்ததும் தாமும் அப்படியே கொஞ்ச வேண்டுமென்று காதலர் விரும்பினார்கள். ஆனால் சுற்றிலும் ஆணும் பெண்ணும் சிறுவரும் மொய்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் அவ்வாறு கொஞ்சிக் கொள்ள முடியுமா என்ன? ஆகவே கண்களால் பேசிக் கருத்தால் கொஞ்சினார்கள். செடி விளிம்புடன், ஓங்கி வளர்ந்த பொன்னிற மூங்கில் மரங்களைக் கரையில் கொண்டு விளங்கிய பச்சைப் படிகத் தெண்ணீர்க் குளத்தின் கரையில் நின்று, அலை வளையங்களின் நடுவே ஆடி அசைந்து சென்ற ஆஸ்திரேலிய அன்னங்களைப் பார்த்த போது ஸ்ரீதர் “பார்த்தாயா பத்மா, இவை தான் அன்னங்கள். நளன் தமயந்தியிடம் காதல் தூது விட்டது அன்னங்களைத்தான்” என்றான். தோகை விரித்துப் பசுந்தரையில் நடந்த மயில்களைக் கண்ட போது, “பார்த்தாயா பத்மா, எவ்வளவு ஒய்யாரம்! அவை போல பொற்காசுப் பொட்டமைந்த கரும்பச்சை வண்ண உடைகளைத் தயாரித்தணிய மானிட மங்கையரால் கூட முடியவில்லையே!” என்றான் ஸ்ரீதர். “ஏன் பெண்களைக் கூறுகிறீர்கள்?

மயில்களில் ஆண் தானே அழகான தோகையுடன் விளங்குகிறது! ஆகவே மனிதர்களிலும் ஆண்களல்லவா அவ்வாறு பொன்னும் நீலமும் பசுமையும் சேர்த்த வர்ண உடைகளை அணிய வேண்டும்?” என்றாள் பத்மா. இவ்வாறு இளங் காதலர்கள் ஒருவர் தோளை ஒருவர் தழுவிக் குழந்தைகள் போலவும் கவிஞர்கள் போலவும் உரையாடிக் கொண்டார்கள். இடையிடையே தனித்த இடங்களில் பூஞ்செடி மறைவுகளில் நிலத்தில் கிடந்து கற்களின் மீது கரங்களைக் கோத்து மெய் மறந்து உட்கார்ந்திருந்தார்கள். மிகவும் தனித்த இடங்களில் ஒருவரை ஒருவர் இறுக அணைத்து முத்தமிட்டுக் கொண்டார்கள். கூந்தல் ‘டானிஷ்’கின் இனிய சந்தன வாசம் வீசிய பத்மாவின் தலை மயிரைக் கையால் நீவி, அவளது பொன்னிற உச்சியைப் பல தடவை மோந்தான் ஸ்ரீதர். பத்மாவும் வாளா இருக்கவில்லை. ஸ்ரீதரின் கரங்களைத் தன் சின்னஞ்சிறு உதடுகளால் தொட்டு எச்சிற்படுத்தி வேடிக்கைகாக அதில் தன் “லிப்ஸ்டிக்”கின் செஞ்சாயத்தையும் பதிய வைத்தாள். பத்மா கண்களை மூடி உலகை மறந்த பொது அவள் பொன் முகத்தைத் தன் கையில் ஏந்தி, அவள் கண் மடலையும் இமைகளையும் புருவங்களையும் முத்தமிட்டான் ஸ்ரீதர். காதலின் இவ்வித சைகைகளோ ஏராளம். கற்பனைக்குத் தோன்றிய சகல காதற் சைகைகளையும் புதியன புதியனவாகச் செய்து மகிழ்ந்தார்கள் காதலர்கள்.

மிருக வனத்துக்குத் தாம் விஜயம் செய்த இந்த நாளைப் புகைப்படத்தில் நிரந்தரமாக்க வேண்டுமென்ற ஆசை ஸ்ரீதருக்கு ஏற்பட்டது.

ஆனால் கையிலே புகைப்படக் கருவி இல்லை. இருந்தாலும் மிருக வனத்தின் நடுவிலேயிருந்த சிற்றுண்டிச்சாலியில் எப்பொழுதோ புகைப்படக் கருவிகள் விற்பனைக்கிருந்தமை அவனுக்கு ஞாபகம் வந்தது. அவை அவனுக்கேற்ற ரகமானவை அல்ல என்றாலும், அப்போதைய தேவைக்கு உதவக் கூடியவைதான். எனவே பத்மாவுடன் அங்கே சென்று சில கேக்குகளை அருந்திக் குளிர்பானங்களும்பருகிவிட்டு, ரூபா இருநூறு செலுத்தி ஒரு புகைப்படக் கருவியையும் புகைப்படச் சுருள்கள் சிலவற்றையும் வாங்கிக் கொண்டான். அன்று

பத்மா பணத்தை வீணாக்க வேண்டாமென்று ஸ்ரீதருக்குப் புத்தி சொல்லவில்லை. எவ்வளவு பணத்தைச் செலவழித்தாலும் வறியவராக முடியாத பெரும் பணக்காரர் சிவநேசரின் ஏகபுத்திரன் ஸ்ரீதர் என்பது இப்பொழுது அவளுக்குத் தெரியுமல்லவா?

பத்மாவை யானை மீதேற்றி வலம் வரச் செய்து படம் பிடித்தான் ஸ்ரீதர். முதலில் அவள் பயந்து கீச்சுக் குரலில் கூச்சலிட்ட போதிலும் சிறிது நேரத்தில் பயம் தெளிந்து விட, யானையின் முதுகில் கையை ஊன்றி இராணி போல் வீற்றிருந்தாள் அவள். இன்னொரு படத்தில் அவளைத் தன் முன்னே வைத்து தான் பின்னிருந்து ஜோடியாகப் படம் பிடித்துக் கொண்டான் ஸ்ரீதர். பார்வையாளர் ஒருவர் அப்படத்தை எடுத்து உதவியானார். இவை தவிர சிங்கக் கூட்டின் முன்னால் ஒரு படம், மர்க்கட வனத்தில் டி. எம். ராஜ் - டி. எம். ராணி கூட்டின் முன்னொரு படம், அன்னம் தவழ்ந்த குளத்தின் முன்னொரு படம், புலிக் கூட்டின் முன்னொரு படம், பறவை வனத்தில் ஒரு படம், ஆடும் மயிலுடன் கூட ஒரு படம், பூம்பந்தரொன்றின் கீழ் ஒரு படம், நிலத்தில் உட்கார்ந்து ஒரு படம், குளக்கரையில் இருந்து சிமெந்து ஆசனத்தில் நீளச் சாய்ந்த ஒய்யார நிலையில் ஒரு படம் -- இப்படி இரண்டு படச் சுருளகளைப் பத்மாவின் படங்களால் நிறைத்து விட்டான் அவன்.

இவை எல்லாம் ஒருவாறு முடியப் பிற்பகல் இரண்டு மணியாகி விட்டது; சிற்றுண்டிகளையும் குளிர்பானங்களையும் அருந்தியதால் வயிற்றின் நேர அறிவிப்பு கிட்டாவிட்டாலும், கையில் கட்டியிருந்த கடிகாரங்கள் நேரத்தைக் காட்டவே செய்தன.

பத்மா பதைபதைத்து “ஸ்ரீதர்! நான் வீட்டுக்குப் போக வேண்டாமா? அப்பா ஏதாவது நினைத்துக் கொள்ளூவார். வழக்கத்தில் இதற்கு முன்னரே வீட்டுக்குப் போய் விடுவேன். இன்று போய்ச் சேர நாலு மணியாகிவிடும். இன்னும் தாமதித்தால் வீடு போக இருட்டி விடும். அப்பா பயந்து போய் விடுவார். அத்தோடு வாயாடி விமலாவும் லோகாவும் படிக்க வருங்கள். வாய்த் துடுக்கான குழந்தைகள் என்னைப் பற்றித் தங்கள் வீட்டுக்குப் போய்த் தங்கள் தாயாரிடம் ஏதாவது உளறி வைக்குங்கள்!” என்றாள் அச்சத்துடன்.

ஸ்ரீதர் அதற்கு மேலும் அவளைத் தாமதிக்க வைக்க விரும்ப வில்லை. “சரி” என்று சொல்லிப் புறப்பட்டான். கார் கர்லி வீதி வழியாகக் கொட்டாஞ்சேனையை நோக்கி பறந்தது!

வழியில் தங்கள் அடுத்த சந்திப்பைப் பற்றித் திட்டமிட்டான் ஸ்ரீதர். “நாளை கழித்து மறுநாள் ‘வழமையான இடத்’தில் காலை ஒன்பது மணிக்குச் சந்திப்போம். நான் ஒரு சைத்திரிகன் என்பது உனக்குத் தெரியுமல்லவா? உன்னைக் கல்கிசைக் கடற்கரையில் நீலத் திரைக்கடலின் பின்னணியில் வன்ணப்படமாக எழுதப் போகிறேன்” என்றான் ஸ்ரீதர்.

பத்மாவுக்கு ஒரே ஆனந்தம். அவன் தோள்களைத் தன் கரங்களால் அழுத்தமாகப் பற்றித் தன் பலங் கொண்ட மட்டும் பிசைந்தாள் அவள்.

“சரி வருகிறேன்” என்றாள் புன்னைகையுடன்.

கார் கொட்டாஞ்சேனைப் பாதையில் ஆர்மர் வீதியை அடைந்தது. அதற்கு மேலும்  காரைக் கொண்டு செல்ல ஸ்ரீதர் விரும்பவில்லை.

பத்மாவும் அவ்வளவு பென்னாம்பெரிய காரில் வீட்டில் நேரே சென்றிறங்க விரும்ப வில்லை. அப்போதிருந்த நிலையில் தந்தை பரமானந்தர் அதை ஆட்சேபிக்க மாட்டார் என்றாலும், அக்கப்பக்கத்து வீட்டுக்காரர்கள் - அன்னம்மா போன்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற அச்சமே அவளை அவ்வாறு செய்யாது தடுத்தது. எனவே ஸ்ரீதர் பத்மாவை ஆர்மர் வீதியில் இறக்கி விட, அவள் கால் நடையாகவே கொலீஜ் ரோட்டை நோக்கி நடந்தாள். ஸ்ரீதரோ காரை வீதி ஓரத்தில் நிறுத்தி விட்டு, பத்மாவின் உருவம் கண் பார்வைக்கு மறையும் வரை அவள் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் காரிலிருந்து இறங்கியதும் பத்மா கண்ட காட்சி! கமலநாதன் தனது மோட்டார் சைக்கிளில் இறுக்கமான கறுப்புக் காற்சட்டையணிந்து கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து சென்று கொண்டிருந்தான். அவன் கண்களை “கொகிள்ஸ்” என்னும் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்கள் அணியும் புகைக் கண்ணாடி அலங்கரித்தது. உதடுகளை வழக்கம் போல் அவனது கவர்ச்சிகரமான அரும்பு மீசை அலங்கரித்தது.

ஆளில்லாது வெறிச்சென்றிருந்த மோட்டார் சைக்கிளின் பின்னாசனம் - ஐயோ வீணாகிறதே என்ற உணர்ச்சி பத்மாவுக்குத் தன்னையறியாமலேயே ஏற்பட்டது. மேலும் என்ன தான் முயன்ற போதிலும் கமலநாதனின் பின்னழகை இரசிக்காதிருக்கவும் அவளால் முடியவில்லை!


 

9-ம் அத்தியாயம்  அதிகார் அம்பலவாணர்

அறிஞர் அ.ந.கந்தசாமி -

காதலுக்கு இருக்கும் புதுமையான பண்புகளில் ஒன்று, அது ஆண்களைப் பெண்மை நிறைந்தவர்களாகவும், பெண்களை ஆண்மை நிறைந்தவர்களாகவும் ஆக்கிவிடுவது தான். காதலின் வயப்பட்ட ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் சிறு விஷயங்களைப் பற்றிக் கூட அதிகமாக எண்ணி எண்ணிக் கலங்குபவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். பெண்களோ காதலின் உச்சத்திலே சத்தியவானை நேசித்த சாவித்திரியைப் போல் எமனையும் எதிர்த்துப் போராடத் துணிந்து விடுகிறார்கள். கல்கிசை என்னும் இலங்கையின் மிகப் பிரசித்தி பெற்ற மவுண்ட் லவீனியாக் கடற்கரையில்லே தன்  காதற்கிளி பத்மாவைப் படமாக வரைய விரும்பிய ஸ்ரீதர் அடுத்த நாள் முழுவதும் அது பற்றிச் சிந்தப்பதிலேயே செலவிட்டான். அவளை எப்படி உட்கார வைக்க வேண்டும், என்ன உடையை அணியச் செய்ய வேண்டும்.

அமைதியான உயர்குல யாழ்ப்பாணக் குடும்பப் பெண்ணைப் போலச் சேலையால் உடம்பை நன்கு போர்த்தச் செய்து, தலையில் பூவுடனும், நெற்றியில் செஞ்சாந்துத் திலகத்துடனும் தங்கள் வீட்டிலே மாட்டியிருக்கும் அம்மாவின் படத்தைப் போல எழுதுவோமா, அல்லது அவளது அலையலையாக அவிழும் மேகக் கூந்தலை, ஒரு புறத் தோள் வழியாக அவள் எடுப்பான மார்பில் ஏறி இறங்க வைத்து, சினிமா நடிகை போல சிங்காரமாக எழுதுவோமா என்பது போன்ற பல பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன்.

இளமையில் கனவிலே மிதக்கும் ஓர் ஆடவனுக்குத் தன் காதலி கண்ணகி போல் பத்தினியாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மாதவி போல் மனதுக்குக் கிளர்ச்சி தரும் மாயக்காரியாகவும் இருக்க வேண்டும். இது இன்றைய நேற்றைய கனவல்ல. முற்காலத்திற் கூட இலட்சிய மாது, அன்னை தயையும், அடியாள் பணியும் கொண்ட பத்தினிப் பெண்ணாக இருந்தால் மட்டும் போதாது. “வள்ள முலை மாது” போல் பஞ்சனையில் இன்பத் துயில் தருபவளாகவும் இருக்க வேண்டுமென்றே கருதப்பட்டது. அதனால் தான் ஸ்ரீதரும் பத்மாவை வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து பார்த்தான் அன்று.

பத்மாவைப் பொறுத்த வரையில் கொடி போன்ற பெண்மையும்  சித்திரப்பாவை போன்ற கட்டும் கொண்ட அவளது வண்ண உடல் எந்தப் “போசி”ற்கும் பொருத்தமானதே. நீச்சலுடையில் கூட நேர்த்தியாகத் தானிருப்பாள். மேல் நாட்டு நடிகையர் கூட அவளிடம் தோற்கும்படி ஏற்படும். ஆனால் இந்த விதமான செயற்கைப் ‘போஸ்’களை விட்டு விட்டு வேறு விதமாகவும் அவளை எழுதலாம். பல்கலைக் கழக மாணவி என்ற அவளது  தினசரி கோலத்தில் கூட அவள் அழகாய்த் தான் இருப்பாள். ஏன் சில சமயம் அவள் வீட்டிலிருப்பது போல் அவள் சிற்றிடையை அழுத்திக் காட்டும் அவளது பெரிய பூவிட்ட ‘கவுனை’யோ, பாவாடை சட்டையையோ அணியச் செய்து, அந்தத் தோற்றத்தில் கூட அவளைத் தீட்டலாம். இன்னும் குற்றமற்ற மலர் போல் அவள் தோன்ற வேண்டுமாயின் தாவணி அணியச் செய்து அந்தத் தோற்றத்தில் நாலைந்து வர்ணங்களில் அவளை வானவில் போல் கூட வரைந்து விடலாம். ஏன், காலோடு காலாக ஜட்டி, உடம்பின் மேடு பள்ளங்களையும், வளவு நெளிவுகளையும் கவினுறக் காட்டும் ‘ஜீன்ஸ்’ என்னும் மெல்லியலார்  காற்சட்டையை அணியச் செய்தும் அவளை எழுதலாம். “ஆனால் இவற்றில் எவ்வாறு நான் அவளைத் தீட்டப் போகிறேன்? அவளுக்கு எல்லம் அழகாய்த் தானிருக்கும். என்னால் இதில் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லையே! என்ன செய்வேன்?” என்று சிறிய பிரச்சினைகளை எல்லாம் பெரிதுபடுத்திக் கொண்டு, சிறு பெண் போல் கவலைப் பட்டான் அவன். இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகள் எழும்போது, அவன் கலந்தாலோசிக்கும் அவனது நண்பன் சுரேஷிடம் இதைப் பற்றிக் கலந்தாலோசிக்கலாமென்றாலோ, சில காலமாகச் சுரேஷைச் சந்திப்பதே அரிதாகிவிட்டது. சீமைக்கு மேல் படிப்பிற்காகப் போவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த அவன் விசா கந்தோருக்கும் தானாதிபதி காரியாலயங்களுக்கும் வெள்ளவத்தையிலிருந்த அவனது உறவினர் கடைக்குமிடையே பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தான். அத்துடன் இது போன்ற சின்ன விஷயத்தை அவனிடம் பேச ஸ்ரீதருக்கு முன்னில்லாத வெட்கங் கூட இப்பொழுது பிறந்திருந்தது!

இவ்வாறு ஸ்ரீதர் கலங்கிக் கொண்டிருக்க, பத்மாவோ தான் அண்மையில் சில விஷயங்களில் எவ்வளவு துணிவாக நடந்து கொண்டாள் என்பதை நினைந்து நினைந்து வியந்து கொண்டிருந்தாள். பெண்களுக்கு இயல்பாயில்லாத ஆண்மையுணர்ச்சியுடன் தான் காரியங்களைச் செய்து வருவதாக அவளுக்குப்பட்டது. உதாரணமாக அவள் ஸ்ரீதருடன் இரண்டு தடவைகள் தந்தைக்குத் தெரியாமல் கள்ளமாக வெளியே போய்விட்டு வந்தமை அவளுக்கே அளவிட முடியாத ஆச்சரியத்தைத் தந்திருந்தது. ஒன்று ஐஸ்கிறீம் பார்லருக்குப் போய் வந்தமை, மற்றது தெகிவளை மிருக வனத்துக்குப் போய் வந்தமை. “அதுவும் சும்மா போய் விட்டு வந்தேனா? பார்ப்பவர்கள் புதிதாக மண முடித்த இளம் ஜோடிகள் என்று எண்ணும்படி உடலோடு உடல் உராய, மிருக வனத்தில் என்னென்னவெல்லாம் செய்து, எதை எதை எல்லாம் பேசி, எப்படி எப்படி எல்லம் நடந்துகொண்டோம்!” என்று சிந்திந்தாள் அவள். “ஆனால் நான் இப்படி அப்பாவுக்குத் தெரியாமல் நடந்தது சரியா? அது அவரை ஏமாற்றியது போலத்தானே? என்றாலும் காதல் விஷயங்களைப் பெற்றோரறியும்படியாகச் செய்ய முடியுமா? இந்தச் சிக்கலால் தான் பல பெண்களும் ஆண்களும் காதல் புரிவதற்கே அஞ்சிக் காதல் புரியாமலே இருந்து விடுகிறார்கள். ஆனால் அதுவும் தப்புத்தான். வாழ்க்கையின் முக்கியமான அனுபவமொன்றைப் பெறாவிட்டால் அந்த வாழ்க்கையின் பயன் தான் என்ன? அதனால் தான் அந்தக் காலத்திலிருந்தே காதலருக்குக் களவு முறைகளை அனுமதித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். பழைய காலத்திலும் களவு காதலில் ஈடுபட்ட தலைவி தன் பெற்றோரை ஏமாற்றத் தானே செய்தாள்? இன்று நான் அப்பாவை ஏமாற்றுகிறேன். நிச்சயம் எனக்குப் பிறக்கும் மகனும் மகளும் கூட எனக்குத் தெரியாமலே இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யத்தான் செய்வார்கள். அவர்கள் என்னை ஏமாற்றுவார்கள். இதுதான் உலக நியதி போலும்” என்று கூட நினைத்தாள் அவள்.

ஆனால் ஸ்ரீதருடன் படமெழுதுவதற்காகக் கடற்கரைக்கு மேற்கொள்ளவிருந்த பிரயாணத்தையும் மிருகவனத்துக்குச் சென்றது போலவே கள்ளத்தனமாகத் தந்தைக்குத் தெரியாமல் செய்வது சரியா? -  தற்செயலாக அப்பாவுக்குத் தெரிந்த யாராவது தன்னை ஸ்ரீதருடன் அங்கே கண்டுவிட்டு, அதை அப்பாவிடம் வந்து சொன்னால் நிலைமை என்ன? விஷயங்கள் எவ்வளவு குளறுபடியாகி விடும்? உண்மையில் அப்பா நான் ஸ்ரீதருடன் அளவாக ஊர் சுற்றுவதையோ, நெருங்கிப் பழகுவதையோ ஆட்சேபிக்கா மாட்டாரென்றாலும், இன்னும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் படிப்பென்ன ஆகும் அன்று அஞ்சமாட்டாரா? மேலும் மண முடிக்காது ஆணோடு நெருங்கிப் பழகும் பெண் தன்னைப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாக்கிக் கொள்ளவும் கூடும். நெருங்கிப் பழகும் ஆண் பெண்கள் எவ்வளவு நாட்களுக்குக் களவொழுக்கத்தில் ஈடுபடாமல் இருக்க முடியும்? அவ்வித விஷப் பரீட்சைகளினால் முடிவில் பெண் தாய்மை நிலையை அடைந்து விட்டால், அதனால் ஏற்படும் சமுதாய அபவாதத்தையும் சிறுமையும் எப்படிச் சமாளிப்பதென்ற கவலையும் பொறுப்புள்ள தந்தை என்ற முறையில் அப்பாவுக்கு இருக்குமல்லவா? - இவ்விதம் பலவாறு சிந்தித்த பத்மாவுக்கு நிலைமையைச் சமாளிக்க ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. அடுத்த வீட்டு அன்னம்மாவைத் துணைக் கொண்டு பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டுமென்பதே அது.

அன்னம்மா அடுத்த வீட்டு அன்னம்மா என்றே பரமானந்தர் வீட்டிலும், அன்னம்மா வீட்டுக்கு அந்தப் புறமிருந்த அவிஸ் நோனா வீட்டிலும் அழைக்கப்பட்ட போதிலும் பரமானந்தர் வீட்டைப் பொறுத்த வரையில் அவள் உண்மையில் ஓர் உள் வீட்டு உறவுக்காரியாகவே இருந்தாள். நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் பத்துத் தடவைகளாவது பின்புற வாயில் வழியாகப் பரமானந்தர் வீட்டுக்கு வந்து போகும் பழக்கத்தையுடைய அன்னம்மா புருஷனை இழந்து விதவையான காலம் தொட்டு, அந்த முழுத் தோட்டத்துக்கும் கொலீஜ் ரோட் தபால் கந்தோருக்குப்  பக்கத்தேயிருந்த அந்தோணியார் போசன சாலைக்கும் உருசியான தோசைகளைச் சுட்டுக் கொடுத்துத் தனக்கென்று பெரும் புகழ் சம்பாதித்துக் கொண்டவள். அது மட்டுமல்ல, பரமானந்தர் வீட்டுக்கும், 48/33ம் இலக்க வீட்டிலிருந்த பாடசாலை வாத்தியார் மூவருக்கும் வெற்றிலைக் கடை வேலாயுதக் கிழவனுக்கும் அவள் தான் மத்தியான உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள். இவற்றால் கிடைக்கும் வருமானத்தை வைத்தே அவளது செலவுகளும், அவளது வேலையில்லாத் ஒரே மகனான ‘திராவிடதாசன்’ என்று தன் பெயரை ‘ரிப்பெயர்’ செய்திருந்த சிங்கார வேலுவின் சினிமாச் செலவுகளும் தடங்கலில்லாமல் நடைபெறக் கூடியதாயிருந்தன.

பத்மா அன்னம்மா வீட்டுக்குப் பின்புற வாசல் வழியாகப் போன போது அன்னம்மா அடுப்பு வெக்கையில் உட்கார்ந்து தோசைகளைத் தடவைக்கு இவ்விரண்டாகச் சுட்டு அடுக்கிக் கொண்டிருந்தாள். புகைக்கும் நல்லெண்ணெய்த் துணியால் தோசைக் கல்லை அழுத்தித் துடைத்து, அகப்பையால் அதில் தோசை மாவை ஊற்றிச் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தபோதிலும், வாய்க்கு ஓய்வு கொடுக்காமல் அடுப்புக்குப் பக்கத்தில் ஒரு பலகையில் உட்கார்ந்திருந்த அவிஸ் நோனாவுடன் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். அந்தோணியார் போசன சலைக்கு அனுப்ப வேண்டியதை நன்றாக விடியு முன்னரே அவள் சுட்டு அனுப்பி விடுவது வழக்கம்.

இப்போது அவள் சுட்டுக் கொண்டிருந்தது தோட்டத்து “ஓடர்”களுக்காகவும் மகன் திராவிடதாசன் உண்பதற்காகவும் தான். தோசைக் கல்லில் ‘சொய்’யென்று சுடுபட்டுக் கொண்டிருந்த அன்னம்மாவின் இரட்டைத் தோசைகளின் வாசம் தோட்டத்திற் பாதி தூரமாவது வியாபித்துக் கொண்டிருக்க, அரட்டைக்கார அவிஸ், தோட்டத்துப் புதினங்களைப் பற்றித் தனது காலை விமர்சனத்தை அப்பொழுது நடத்திக் கொண்டிருந்தாள்.

அன்னம்மாவின் சூடான தோசைகளின் உருசிக்கு எவ்விதத்திலும் அவிசின் சூடான விமர்சனக் குறிப்புகளின் உருசி குறைந்ததென்று சொல்ல முடியாது. அவள் தனக்குத் தெரிந்த சிங்களத் தமிழில் தனது பேச்சுகளை நிகத்திக் கொண்டிருக்க, அன்னம்மாவும் தனக்குத் தெரிந்த தமிழ்ச் சிங்களத்தில் தன் கருத்துகளை இடையிடையே கூறிக் கொண்டிருந்தாள். அவர்கள் உண்மையில் அங்கே ஒருவர் மொழியை ஒருவர் கொலை செய்து கொண்டிருந்தார்கள். ஒருத்தியின் மொழிக் கொலையை மற்றவள் பழிவாங்குவது போல இருந்தது அவர்கள் பேசிக் கொண்டிருந்த தோரணை. அன்னம்மா தனக்குச் சிங்களம் தெரியுமென்பதைப் பிரகடனம் செய்யவும், அவிஸ் தனக்குத் தமிழ் தெரியும் என்பதை அறிவிக்கவும் அவ்வாறு ஒருத்தி மொழியில் மற்றவள் பேசிக் கொண்டாள் போலும்!

குசுமா வீட்டுக்கு எதிர் வீட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் ஓர் இ. போ. ச. பஸ்கண்டக்டர் குசுமாவுக்கு வலை வீசுவதாகக் கூறிய அவிஸ், “பாவம், அவனுக்குக் குசுமாவுக்கு ஒரு கள்ளப் பிள்ளை இருப்பது இன்னும் தெரியாது போல” என்று குறிப்பிட்டாள். “ஆனால் அந்த இளந்தாரி தான் என்ன செய்வான்? குசுமா தங்கள் வீட்டு வாசலிலே எந்த நேரமும் நின்று கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தால் ஆண் பிள்ளையால் சும்மா இருக்க முடியுமா?” என்று கேட்டாள் அவிஸ். அன்னம்மா அவிஸ் காதில் குனிந்து “குசுமாவுக்குச் சரியான மோகினிப் பிசாசுதான் பிடித்திருக்கிறது. முந்தா நாள் சிங்காரம் குளிக்காம்பரைக்குக் குளிக்கப் போன போது, வழியிலே இரண்டு பேரும் ஏதோ சிரித்துச் சிரித்துப் பேசுவதை நான் இங்கே வாசலிலே இருந்தே பார்த்து விட்டேன். அவர் குளிச்சிட்டு வந்ததும் “உனக்கென்னாடா குசுமாவோடு பேச்சு! மற்றவன் பிள்ளையை வளர்க்கப் போகிறாயா?” என்று சரியாகக் கொடுத்தேன். “ஆள் இப்போது பயந்து போய் விட்டார். அடங்கிப் போயிருக்கிறார்” என்று இரகசியமாகக் குசுகுசுத்தாள்.

பத்மா அன்னம்மாவின் வீட்டின் உட்புறத்தில் திராவிடதாசன் இருக்கிறானா என்று பார்த்த போது முன்னாள் இரவு எம்.ஜி.ஆர். படம் இரண்டாம் காட்சி பார்த்த களைப்பால் அவன் அங்கே இருந்த ஒரு சாக்குக் கட்டிலில் இன்னும் நீண்டு படுத்துக் குறட்டை விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாள். இதற்கிடையில் அவிஸ் பிற்காளில் தோசையோடு புறப்படத் தயாராகிவிட்டாள். அவள் அங்கிருந்து போகு முன்னர் பத்மாவின் கன்னத்தைத் தன் கைகளால் கிள்ளி, “பெம்ப்பிளை பெரிய பெம்பிளையா வளர்ந்திட்டா, எப்போ கலியாணம்” என்று வேடிக்கையாகக் கூறி விட்டுப் போனாள். பத்மா பதிலுக்கு அவளைத் தன் கைகளால் குட்ட்ப் போவது போல் பாசாங்கு செய்தாள்.

அன்னம்மாவுடன் தனிமையில் விடப்பட்டதும் பத்மா “அன்னம்மாக்கா நீங்கள் ஒரு பெரிய உதவி எனக்குச் செய்ய வேண்டும். செய்வீர்கலா?” என்றாள்.

“என்ன உதவி தங்கச்சி! சொல்லு, செய்கிறேன்.” என்றாள்.

“எனக்குச் சொல்ல வெட்கமாயிருக்கிறது!”

"அப்படியானால் எனக்கு விஷயம் என்னவென்று தெரியும். ஸ்ரீதரைப் பற்றி அப்படித்தானே?”

“முற்றிலும் சரி. உங்களுக்குச் சாஸ்திரம் கூடத் தெரியும் போல்!”

“தெரியும். தோசைச் சாஸ்திரம். தோசை ‘சொய்’யென்று சப்தம் போட்டால் அது ஸ்ரீதரைப் பற்றி என்று அர்த்தம்.”

தோட்டத்திலே அன்னம்மா ஒருத்திக்குத் தான் ஸ்ரீதர்-பத்மா பற்றிய விஷயங்கள் முற்றிலும் தெரியும். பரமானந்தரும் பத்மாவும் அவற்றை அவளுக்கு மறைக்க முயற்சி செய்யாமல், எல்லாவற்றையும் கூறியிருந்தார்கள். ஒரு நாள் அன்னம்மா ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு “மாப்பிள்ளை என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்! சினிமா நடிகன் தோற்றுப் போவான் உன் ஸ்ரீதரிடம்.” என்று கூடக் கூறியிருக்கிறாள். அன்று தொடக்கம் பத்மாவுக்கு அன்னம்மா மீதுள்ள அன்பும் மதிப்பும் பல நூறு மடங்கு அதிகரித்துவிட்டன!

பத்மா அன்னம்மாவிடம் “அக்கா! நாளை என்னைத் தன்னோடு கடற்கரைக்குப் ‘பிக்னிக்’ போக அழைத்திருக்கிறார் ஸ்ரீதர். எப்படியும் போக வேண்டும். நான் நினைத்தால் அப்பாவுக்குத் தெரியாமல் போய் விடலாம். ஆனால் அது சரியில்லை. அப்பாவைக் கேட்டால் நிச்சயம் மறுக்க மாட்டார். ஆனால் எப்படியக்கா வெட்கமில்லாமல் நான் இது பற்றி அப்பாவிடம் பேசுவேன்? நீ சொல்லி விடுகிறாயா?” என்றாள்.

“ஆ, இது தானா? நீ போ. தோசை சுட்டு முடித்ததும் நான் வந்து பேசுகிறேன். எப்படியாவது நாளைக்கு ஸ்ரீதரோடு உன்னை ஊர் சுற்ற அனுப்பினால் சரிதானே?”

பத்மா திருப்தியோடு புன்னகை செய்து “ஆம்” என்று தலை அசைத்தாள்.

“ஆனால் ஒன்று. குசுமா போல் தெரியாத்தனமாக நடந்து கொள்ளாதே. கல்யாணம் ஆகும் வரை ஆண் பிள்ளைகளோடு பழகுவதே ஆபத்து. ஆனால் இப்போதெல்லாம் புது மாதிரி. என்றாலும் புத்திசாலித் தனமாக நடந்து கொள்.” என்றாள் அன்னம்மா.

பத்மா அங்கிருந்த சூடான தோசை ஒன்றில் ஒரு துண்டைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு “வருகிறேன்” என்று புறப்பட்டாள்.

அன்று மத்தியானம் வழக்கம் போல் பத்மா வீட்டுக்கு உணவு கொண்டு வந்த அன்னம்மா சுருட்டுப் பிடித்துப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த பரமானந்தரிடம் விஷயத்தை மெல்ல ஆரம்பித்தாள்.

“ஸ்ரீதர் பத்மாவை நாளைக்கு எங்கோ ‘பிக்னிக்’ போக அழைத்திருக்கிறானாம். அதை உங்களிடம் பேச பத்மாவுக்கு வெட்கம். தாயில்லாத பிள்ளை. என்ன செய்யும்.? என்னிடம் வந்து சொல்லிற்று. நான் உங்களிடம் பேசி நாளைக்கு எப்படியும் அவளை ஸ்ரீதருடன் அனுப்பி வைப்பதாகச் சொன்னேன்.”

“ஓ, அப்படியா? தாயில்லாத பிள்ளைக்கு நீதான் அப்போ தாய். சரி, போகச் சொல்லு. ஆனால் ஓர் ஆண் பிள்ளையோடு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று புத்தி சொல்லிக் கொடுக்க மட்டும் மறக்க வேண்டாம். ஸ்ரீதர் யோக்கியமான பையன். ஆகவே இதில் நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்றார் பரமானந்தர்.

அன்னம்மா “நான் பத்மாவுக்கு இந்த விஷயங்களை பற்றி எவ்வளவோ புத்திமதிகள் முன்னரே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அத்துடன் நல்ல பெண். இல்லாவிட்டால் உங்களுக்குத் தெரியாமலே பள்ளிக்குப் போவது போல் கள்ளத்தனமாகப் போயிருக்கலாமல்லவா? அப்படித்தானே இந்தக் காலத்தில் ஆணென்ன, பெண்ணென்ன,  பிள்ளைகள் செய்கின்றன?” என்றாள்.

பரமானந்தர் “அது எனக்குத் தெரியும் அன்னம்மா. இல்லாவிட்டால் நான் ஒரு பெரிய குழந்தைக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருப்பேனா என்ன? பத்மாவுக்கு மிகவும் நிதான புத்தி” என்றார்.

அன்னம்மா போனதும் பரமானந்தர் பத்மாவின் புத்திசாலித்தனத்தையும் களவின்மையையும் வியந்து கொண்டார். மற்றப் பெண்கள் போல் சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, ஊர் சுற்றாமல் பத்மா எவ்வளவு அடக்கமாக நடந்து கொள்கிறாள் என்று அவர் மெச்சினார்! பாவம் பரமானந்தர், இளமையின் சூழ்ச்சிகள் அவருக்கு என்ன தெரியும்? ஐஸ்கிறீம் பார்லரிலும், மிருக வனத்திலும் பத்மாவும் ஸ்ரீதரும் செய்து கொண்ட காதற் செய்கைகளை அவர் கண்டிருந்தால், அவர் அப்படி நினைத்திருப்பாரா, என்ன?

அடுத்த நாட் காலை பத்மா குளித்து முழுகி அரம்பை போல் அலங்காரம் செய்து கொண்டு அப்பாவிடம் வந்து “அப்பா! நான் போய் வருகிறேன். மூன்று மணிக்கு வந்து விடுவேன்” என்ற பொழுது அவர் தாராளமான மனதோடு “இருட்டு முன் வந்தால் போதும். ஸ்ரீதரிடம் நேரமிருக்கும்போது இங்கு வரச் சொல்” என்று குறிப்பிட்டார்.

பத்மா துள்ளூம் நெஞ்சுடன் வீதியின் இறங்கி நடக்க, மலர்ந்து மணம் வீசும் சிவந்த ரோஜா போல் விளங்கும் தன் பருவ மகளின் இன்றைய நிலையைக் காண அவளது  அன்புத் தாய் இப்பொழுது தன் அருகில் இருக்க, தான் கொடுத்து வைக்கவில்லையே என்று கவலையடைந்த பரமானந்தர், ஈரமாகி வந்த தன் கண்களிரண்டையும் தனது விரல்களால் கசக்கிக் கொண்டார்.

ஸ்ரீதரும் பத்மாவும் ஏறக்குறையப் பத்து மணிக்குச் சூரிய ஒளியில் பளிச்சென்று விளங்கிய கல்கிசைக் கடற்கரையை அடைந்த போது, ஸ்ரீதர் அங்கே காணப்பட்ட திரளான ஜனங்களைக் கண்டு திகைத்து விட்டாள். அவனுக்கு அங்குள்ள ஹோட்டல் நன்கு பழக்கப்பட்ட இடமாதலால், நேரே காரை ஹோட்டல் வளவுக்குள் கொண்டு போய் அங்கு நின்ற பெருந் தொகையான கார்களுக்கு நடுவே எப்படியோ ஓரிடத்தைப் பிடித்து நிறுத்தி விட்டு, பத்மாவைத் தன் ஒரு கரத்தால் அணைத்த வன்ணம், ஹோட்டல் நந்தவனத்தில் மெத்தென்ற மரகதப் புற்றரையில் தென்னை மரங்களுக்கு இடையே இடப்பட்டிருந்த மேசைகளை நோக்கி நடந்தான். கடலில் நீந்துவதில் பிரியமுள்ள ஸ்ரீதர் வாரத்துக்கு ஒரு தடவையோ, இரு தடவையோ ஹோட்டலிலிருந்த ஸ்நான மண்டபத்துக்கு வருவது வழக்கமானதால், அங்குள்ள ஊழியர் பலருக்கு அவனை நன்கு தெரிந்திருந்தது. ஸ்ரீதரையும் பத்மாவையும் கண்டதும் அவர்களிலே மிகவும் வயோதியனான அல்பேர்ட் ஸ்ரீதரை நோக்கி வந்து, பெரிய பூக்குடை ஒன்று பொருத்தப்பட்டிருந்த ஒரு மேசைக்கு அவனை வழிகாட்டிச் சென்றான். பத்மாவுக்கோ இவை எல்லாம் புதிய அனுபவங்கள். உண்மையில் இப்படிப்பட்ட பெரிய ஹோட்டலுக்கு அவள் போனது இதுவே முதல் தடவை. இருந்த போதிலும், எந்த இடத்துக்கும் ஏற்பப் புத்திசாலித்தனமாகவும் சலனமில்லாமலும் நடக்கும் நாகரிகப் பண்பு என்றுமே அவளுக்கு இயற்கையாக அமைந்திருந்ததால், அவள் மிக நாசுக்காகவே நடந்து கொண்டாள். இன்னும் அவளது பேரெழில் அவள் நாகரிகமாக நடக்காவிட்டால் கூட நாகரிகமாக நடப்பது போன்ற பிரமையை யாருக்கும் ஏற்படுத்தவே செய்யும். இந்த வகையில் தேக வனப்பு ஆணுக்கென்ன பெண்ணுக்கென்ன, பல இடங்களில் பல செளகரியங்களைத் தரத் தான் செய்கிறது.

பத்மா கம்பீரமாக உயர்ந்து தோன்றிய ஹோட்டலையும் , அதைச் சுற்றியிருந்த தென்னைகள் நிறைந்த சோலையையும், சிமெந்தினால் அழகுற அமைக்கப்பட்டு, நிலத்துக்குத் தக்கபடி உயர்ந்தும் தாழ்ந்தும் சில இடங்களில் படிக்கட்டுகளுடனும் விளங்கிய நடைபாதைகளையும், அவற்றின் ஓரங்களை அலங்கரித்த மலர்ப் பாத்திகளையும் ஹோட்டலுக்குப் பின்னே மல்லிகை மலர் போன்ற நுரையோடு கரை நோக்கித் திரண்டு வந்து வெடித்துக் குமுறிய அலைகளினால் உயிரோட்டம் கொண்டு விளங்கிய நீலக் கடற் படுதாவையும் பார்த்துப் பார்த்துப் புளங்காகிதமடைந்தாள். போதாதற்குக் கடற்காற்று வேகமாக வீசி வந்து உடல் முழுவதையும் தழுவி,

தலை மயிரை முன்னும் பின்னும் அலைய வைத்து, உள்ளத்துக்கும் உடம்புக்கும் தென்பையும் இன்பச் சிலிர்ப்பையும் அளித்து இது பூலோகமோ அன்றிச் சுவர்க்க பூமியோ என்ற ஐயப்பட்டை அவளுக்கு ஏற்படுத்தியது.

ஆனால் இயற்கையும் செயற்கையுமான இந்தக் காட்சிகளை விட அந்த ஹோட்டலில் அப்பொழுது காணப்பட்ட மனிதர்களும் அவர்களது நவ நாகரிகப் போக்கும் தான் அவளை அதிகமாக கவர்ந்து ஒருவித மயக்கத்தை அவளுக்குக் கொடுத்தன. பல நூற்றுக் கணக்கான கவலையேயற்ற கந்தர்வர், கின்னர்கள், கிம்புருடர் போல் அங்கு திரிந்து கொண்டிருந்தார்கள். பல ஆண்களும் பெண்களும் குறுகிய நீச்சலுடைகளை அணிந்து சிரித்துப் பேசிக் குறும்புகள் செய்து குதூகலித்த காட்சி, தான் இருப்பது இலங்கையா அல்லது ‘மியாமி’ அல்லது ‘பிரைட்டன்’ கடற்கரையா என்று அவளை எண்ண வைத்தது. உண்மையில் இப்படிப்பட்ட காட்சிகளை மேற்சொன்ன கடற்கரைகள் பறிய ஆங்கில சினிமாப் படங்களில் தான் அவள் இதுவரை கண்டிருக்கிறாள். இலங்கையிலேயே அவை போன்ற இடங்கள் இருக்கின்றன என்பது அவளுக்கு இது வரை தெரியாது. பார்க்கப் போனால் கொட்டாஞ்சேனைக்கும் கல்கிசைக்கும் வெகு தொலைவில்லை. இருந்த போதிலும் இவற்றை எல்லாம் இதுவரை அறியாது, கொழும்பிலேயே ஓர் அசல் பட்டிக்காடு மாதிரித் தானே நான் இருந்திருக்கிறேன் என்று வெட்கமும் அதிசயமும் அடைந்தாள் அவள். ஸ்ரீதரிடம் “இந்த இடம் எந்த நாளும் இப்படிக் கோலாகலமாகத்தான் இருக்குமோ?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் அவள். ஸ்ரீதர் புன்னகையோடு, “இல்லை, இன்று இங்கே ஒரு கார்னிவல் அல்லது களியாட்டு நடக்கிறது. கடற்கரைக் களியாட்டு எனது அதற்குப் பெயர். அதனால் தான் இவ்வளவு ஜனங்கள். இல்லாவிட்டால் குறைவுதான்” என்றான்.

பத்மா இப்பொழுது கண்களை நாலு புறமும் செதுக்கி நீச்சலுடையிற் சென்ற ஆண்களையும் பெண்களையும் அவர்களறியாமலே நன்கு அவதானிக்கலானாள். அவர்களில் சிலர் ஐரோப்பியர், சிலர் பறங்கியர், சிலர் சிங்களவர்கள், சிலர் மலாயர்கள். தமிழர்கள், தென்னிந்தியரும் சரி, இலங்கையரும் சரி அங்கு இருக்கிறார்களா என்பதை அவள் ஆவலுடன் அவதானித்தபோது ஒரு சிலர் மட்டும் அங்குமிங்கும் காணப்படவே செய்தார்கள். ஓர் இளம் ஜோடி அவளுக்கும் சமீபமாகச் சென்ற போது அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்களை மிகவும் கவனமாக அவதானித்தாள் பத்மா. அவர்களில் ஆண் கம்பீரமாகவும் மா நிறமாகவும் காணப்பட்டான் என்றாலும் அவனால் ஸ்ரீதருக்குக் கிட்ட வர முடியாது. பகட்டான பச்சை நிற ஸ்நான உடையும், கண்களில் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தால் அவனுக்குப் பக்கத்திற் சென்ற பெண்ணோ மிகவும் கறுப்பு. ஓரளவு பத்மாவின்  தோழி தங்கமணியைப் போலத் தோன்றிய அவளது விட்டுப் போன்ற உடலை ஒரு மஞ்சள் நிற நீச்சலுடை இறுகப் பற்றியிருந்தது. அது அவளுக்கு ஒரு சொகுசான தோற்றத்தைத் தந்த போதிலும் அவள் மட்டும் சிவப்பாகவும் அழகாகவும் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசித்தாள் பத்மா.

அந்த யோசனையைத் தொடர்ந்து தானும் தனது கட்டழகன் ஸ்ரீதரும் நீச்சலுடை அணிந்து கடல் மண்ணில் துள்ளி விளையாடித் திரிவது போன்ற கவின் மிக்க கனவொன்றும் அவள் மனதில் மிதந்து வந்தது!

ஹோட்டல் நந்தவனத்தில் பல இடங்களில் ‘டைகர் கிளப் பீச் கார்னிவல்’ என்ற சிவப்புக் கொட்டை எழுத்துகளில் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிச் சீலைகள் மரங்களுக்கு இடையே உயரமான இடங்களில் இறுக இழுத்துப் பாதைகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்தன.

அவற்றையும் கவனித்தாள் பத்மா. சில சோப்புக் கம்பெனிகளும், குளிர்பானக் கம்பெனிகளும் அங்குமிங்கும் தமது விளம்பரங்களையும் கொடிச் சீலைகளிலே பொறித்துக் கட்டியிருந்தன.

பத்மாவுக்கு அவள் கண்ட காட்சிகள் பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. அவளது மறைந்த கிடந்த ஆசைக் கனவுகள் பல உயிர்க் கொண்டு மனதில் கூத்தாடத் தொடங்கியிருந்தன! ஆனால் ஸ்ரீதருக்கோ அவ்வித அனுபவம் ஏற்படவில்லை. அவன் அடிக்கடி இப்படிப்பட்ட களியாட்டுகளில் கலந்து அனுபவப்பட்டவனாதலால், அவன் உணர்ச்சிகள் கட்டுக்குள்ளேயே இருந்தன. அவனுக்கு அப்போதிருந்த கவலை ஒன்றே ஒன்றுதான். இந்தச் சந்தடியில் எப்படிப் பத்மாவைப் படம் எழுதும் தனது திட்டத்தை நிறைவேற்றுவது என்பதே அது. கிழவன் அல்பேர்டிடம் உண்பதற்குச் சில காரமான சிற்றுண்டிகள். ஐஸ்கிறீம், கொக்கோக் கோலா ஆகியவற்றைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டு, பத்மாவின் செங்காந்தள் விரல்களைத் தன் விரல்களால் வருடியவாறு “பத்மா! என்ன கனவு காண்கிறாய்” என்றான் புன்னகையோடு.

ஸ்ரீதரும் பத்மாவும் வீற்றிருந்த மேசை மேட்டுப் பாங்கான ஓர் இடத்தில் இருந்தது. அங்கிருந்தவாறு அவர்களால் மக்கள் திரண்டு குதூகலித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த கடல் ஓரத்தை நன்கு கவனிக்கக் கூடியதாயிருந்தது. ஸ்ரீதர் நீலக் கல் போல் வீசிய கடலைப் பத்மாவுக்குச் சுட்டிக் காட்டினான். அங்கே பெரிய ஒலிபரப்பிகள் ஆங்கில படப் பாப் பாட்டுகளை முழங்கிக் கொண்டிருந்தன. அதில் திருப்தியுறாதவர்கள் போன்று சில இளைஞர்கள் கையில் வாத்தியங்கள் ஏந்திப் பாட்டுகள் பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர்  ஸ்நான  உடைகளிலும் மற்றும் சிலர் அழகான புஷ் ஷேர்ட்டுகளிலும் காணப்பட்டார்கள். ஒரு யெளவனப் பெண் ‘ஜீன்ஸ்’ அணிந்து கொண்டு ஓர் ஆடவனுடன் ஜோடியாக ‘டுவிஸ்ட்’ என்னும் நடனத்தை ஆடிக் கொண்டிருந்தாள். சிலர் கடலில் குளித்து விட்டு ‘பாத்’ கவுன் அல்லது பெரிய வர்ணக் கோடுகளிட்ட  துவாய்களால் உடல்களைப் போர்த்திக் கொண்டு ஸ்நான மண்டபத்துப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள். நீச்சலுடை அணிந்த ஒரு சில ஆண்களும் பெண்களும் வெண்மணலில் நீண்ட வர்ணத் துவாய்களை விரித்துக் கண்களைக் கறுப்புக் கண்ணாடியாலோ, கைக் குட்டைகளாலோ மறைந்துக் கொண்டு சூரிய ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சிவப்பு, பச்சை, மஞ்சள் என்ற வர்ணங்களுடன் கூடிய பெரிய குடைகளை விரித்து, அவற்றின் கீழே நிழலில் படுத்துக் கிடந்தார்கள்.  பிஞ்சுக் குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் கடற்கரை மணலில் வீடு கட்டியும் வண்ண வண்ண வாளிகளில் மணலையும் கடல் நீரையும் அள்ளித் தெளித்தும் விளையாடிக் கொண்டிருக்க, ஏராளமான ஆண், பெண்கள், குமிறி நிமிர்ந்து குதிரைகள் போல் வந்து கொண்டிருந்த அலைகளுக்கிடையே துள்ளி எழுவதும் நீந்துவதும் நீந்த முயல்வதுமாகக் காணப்பட்டார்கள்.

பத்மா தன் முன் விரிந்து கிடந்த இவ்வின்ப உலகத்தின் மாயையில் தன்னை மறந்து சொக்கிக் கிடந்தாளாயினும், அவள் முன்னே நடந்து சென்ற பெண்களும் ஆண்களும் அணிந்திருந்த நீச்சலுடைகளின் ரகங்களை கவனிக்கத் தவறவில்லை. ஒரு சில பெண்கள் ‘உவன் பீஸ்’ - ஒற்றை ஆடை நீச்சலுடைகளை அணிந்திருந்தார்கள். மற்றவர்களோ  மார்புக்கு வேறு, இடைக்கு வேறென்று ‘டூ பீஸ்’ - இரட்டை ஆடை நீச்சலுடைகளை அணிந்திருந்தார்கள். இந்த இரட்டை ஆடை நீச்சலுடைகளில் சில மிகவும் குறுகியனவாகவும்  சிறியனவாகவும், இறுக்கமாகவும் காணப்பட்டன. இவற்றை அவள் பத்திரிகைகளில் வெளியிடப்படும் பெண்களின் கவர்ச்சிப் படங்களில் தான் முன்னர் பார்த்திருக்கிறாள். அவற்றின் பெயர் கூட அவளுக்கு நன்கு தெரியும். மூன்று நான்கங்குல அகலமே கொண்டன போல் காட்சி தரும் அவற்றின் பெயர் ‘பிக்கினி’- அவ்வித உடையணிந்து ஈரக் கடல் மண்ணில் உற்சாகமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பருவப் பெண்ணை அவள் ஸ்ரீதருக்குச் சுட்டிக் காட்டி “அதோ ஒரு பிக்கினி அணிந்த பெண்” என்றாள், சிரிப்போடு. ஸ்ரீதருக்கு அவளது குறிப்பு வேடிக்கையாயிருந்தது. அவன் புன்னகையோடு “இன்று உன்னை ஒரு பிக்கினி நீச்சலுடையில் தான் நான் படமெழுதப் போகிறேன்” என்றான் அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு.

பத்மா திடுக்கிட்டு விட்டாள். “என்ன நீச்சலுடையா? என்னால் முடியாது. நான் ஒரு போதும் அணியாத உடையை அணிய எனக்கு வெட்கமாயிருக்காதா? அத்துடன், நீச்சலுடை எங்கேயிருக்கிறது?” என்றாள் வியப்போடு.

இதற்கிடையில் அல்பேர்ட் உணவு வகைகளை மேசையில் கொண்டு வந்து வைக்க இருவரும் அவற்றை உண்டு கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்கள்.

“உடை கிடைக்குமா என்ற கவலை உனக்கு வேண்டாம். அவசிய்மானால் இங்கேயே எனது பத்மாவுக்கு நான் ஒரு நீச்சலுடையை தைத்துக் கொடுக்க மாட்டேனா, என்ன?” என்றான் ஸ்ரீதர் குறும்பாக.

பத்மா அவனது பகடி தனக்குப் பிடிக்கவில்லை என்பது போல் தன் முகத்தால் அழகு காட்டினாள். ஸ்ரீதரோ ஹோட்டலில் தங்களுக்கு வேண்டிய நீச்சலுடைகளை விலைக்கோ வாடகைக்கோ பெறலாம் என்று விளக்கினான். பத்மா ஆச்சர்யத்தோடு  “அப்படியா!” என்று வினவினாளானாலும், “நான் அவற்றை அணிய மாட்டேன்” என்று அடம் பிடித்தாள். வாய் தான் அடம் பிடித்தது. மனமோ தனக்கு முன்னே விரிந்து வரும் சந்தர்ப்பத்தை வரவேற்கவே செய்தது. என்றாலும் நீச்சலுடையை அணிந்து கொண்டு எவ்வாறு நாணமின்றி இவ்வளவு ஆட்களிடையே நடமாடுவது என்ற அச்சமும் அவளுக்கு இருக்கவே செய்தது. இருந்த போதிலும் நீச்சலுடையை அணிய ஆசை இருந்தால் எப்போதோ ஒரு நாள் நாணத்தைக் கட்டுப்படுத்தி அதை அணிந்து பார்க்கத்தானே வேண்டும்? அதற்கு இன்று ஒரு நல்ல ஆரம்ப நாளாகவே அவளுக்குத் தோன்றியது. இவ்வளவு பேர் அணிந்திருக்கும் ஓர் உடையைத் தானே நாம் அணியப் போகிறோம் என்ற எண்ணம் ஒரு புறமும், தனக்கு முன்னே பல பெண்கள் தங்கள் பெற்றோர் அண்ணன் தம்பிமார் முன்னிலேயிலேயே அணிந்து கொண்டு நடமாடுகின்ற ஓர் உடையாக அது காட்சியளித்ததும், அவளுக்கு தனது இயற்கையான நாணத்தைத் தான் வென்று விடலாமென்ற தைரியத்தைக் கொடுத்தது. இன்னும் இவ்வளவு கூட்டத்தில் நான் நீச்சலுடையில் செல்வதை மட்டும் யார் விசேஷமாகக் கவனிக்கப் போகிறார்கள் என்ற எண்ணமும், அப்படிக் கவனிப்பவர்களும் அதை அங்கீகரிப்பவர்களே  அல்லாமல் வெறுத்துக் கண்டிப்பவர்களல்லவே என்ற நினைவும் அவளது அச்சத்தைப் படிப்படியாகப் போக்கின. மேலும் ஸ்ரீதர் போன்று ஓர் ஆள் பக்கத்திலிருந்து வற்புறுத்தினாலொழியத் தான் ஆசையோடு விரும்பிய காரியந்தான் என்றாலும் நீச்சலுடையைத் தானே அணியும் தைரியம் தனக்கு ஒரு போதும் வராது என்பதும் அவளுக்குத் தெரியும். ஆகவே ஸ்ரீதர் இன்னும் இரண்டோர் தடவை வற்புறுத்தியதும் சந்தர்ப்பத்தை நழுவ விடாது நீச்சலுடையை அணியச் சம்மதிப்பதென்று தனக்குள்ளே தான் தீர்மானித்துக் கொண்டாள் அவள்.

இதற்கிடையில் ஸ்ரீதர் “பத்மா! இந்தச் சந்தை இரைச்சலில் வைத்து உன்னைப் படமெழுதுவது முடியாத காரியம். நாங்கள் கடற்கரை ஓரமாக நடந்து சென்றால் ரெயில் பாதைக்கருகில் ஒரு தென்னை மரக் கூட்டத்துக்குப் போகலாம். ஸ்நான உடை வாங்கிக் கொண்டு அங்கு புறப்படுவோமா?” என்றாள்.

பத்மா ஒரு பதிலும் சொல்லாமல் பேசாமலிருந்தாள். அது சம்மதத்தின் அறிகுறியே என்பது ஸ்ரீதருக்கு நன்கு தெரியும். ஆகவே அல்பேர்டிடம் ‘பில்’ பணத்தையும் மேலதிகமாக ரூபா ஐந்தைப் பரிசாகவும் வழங்கி விட்டு, ஹோட்டலில் இருந்த காளிதாஸ் துணிக் கடைக்குப் பத்மாவை இழுத்துக் கொண்டு சென்றான் அவன்.

துணிக் கடையிலிருந்த வட இந்திய விற்பனையாளன் ஸ்ரீதர்-பத்மா ஜோடியை மிகவும் மரியாதையுடன் வரவேற்று “என்ன வேண்டும் சார்” என்று விநயமாகக் கேட்டான்.

“இதோ என் பெண்மணிக்கு ஒரு நீச்சலுடை வேண்டுமாம்” என்றான் ஸ்ரீதர்.

பத்மாவுக்கு அவன் பேச்சு வெட்கத்தை உண்டு பண்ணியதாயினும், ஒருவாறு சமாளித்துக் கொண்டாள்.

விற்பனையாளன் உடனே கடையிலிருந்த பல ரகமான நீச்சலுடைகளையும் காட்சிப் பெட்டிக் கண்ணாடி மீது பரப்பினான். பல நாகரிகமான ஒற்றை ஆடை, இரட்டை ஆடை நீச்சலுடைகளை எடுத்ததுப் பத்மா முன்னர் போடுவிட்டுக் குறும்பாக “மற்ற ஆடைகளைப் போலல்ல நீச்சலுடை விஷயம். அவை எவ்வளவுக்குச் சிறிதாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவற்றின் விலை அதிகம்” என்று குறிப்பிட்டான்.

ஸ்ரீதர் சிரித்தான்.

விற்பனையாளன் மேலும் தொடர்ந்து பேசினான்: “இதோ இது மொத்தம் இரண்டவுன்ஸ் எடைதான். விலை ரூபா எழுபத்தைந்து. இதோ இது ஆறு அவுன்ஸ் எடை, விலை ரூபா இருபது..”

“அப்படியானால் இது ஒன்றுமே நமக்குச் சரிப்படாது. அரை அவுன்ஸ், முக்கால் அவுன்சில் ஏதாவது இல்லையா? ரூபா நூற்றைம்பது என்றாலும் பரவாயில்லை” என்றான் ஸ்ரீதர்.

விற்பனையாளனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே பத்மாவைப் பார்த்தான். அவள் முகம் இரத்தமேறி ரோஜா மலர் போல் குப்பென்று சிவந்து கிடந்தது. “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று ஸ்ரீதரைப் பார்த்துச் சிணுங்கினாள் அவள். ஆண்களின் இந்த நகைச்சுவை அவளுக்கு உண்மையாகவே பிடிக்கவில்லை. விவேகமான விற்பனையாளனுக்கு நிலைமை தெரிந்து விட்டது. ஆகவே மிகுந்த பணிவோடு “இதோ இந்தத் தங்க நிற ‘உவன் பீஸ்’ நீச்சலுடைதான் இங்குள்ளவற்றிலேயே  ஆக உயர்ந்தது” என்று கூறிக்கொண்டடு அதனைக் காட்சிப் பெட்டியின் கண்ணாடி மீறிட்டான்.

பின்னர் ஏதோ நினைத்துக் கொண்டவன் போல் “சரியான ‘வைட்டல் ஸ்டாட்டிக்ஸ்டிக்ஸ்’களைக் கூறினால் அளவும் பொருத்தத்தில் எவ்வித குறைபாடுமில்லாத உடையை உடனேயே எடுத்துத் தந்து விடுவேன்” என்றான் அவன்.

பெண்களைப் பொறுத்தவரையில் ‘வைட்டல் ஸ்டாட்டிக்ஸ்டிக்ஸ்’ அல்லது ‘ஜீவாதாரப் புள்ளிகள்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு மேல்-இடை-கீழ் உடலளவுகள் என்று அர்த்தம்.

பத்மாவுக்கு இவ்வார்த்தைகளின் பொருள் நன்கு தெரியும். ஆகவே பளிச்சென்று “எனது அளவுப் புள்ளிகள் 36:24:38” என்று பதிலளித்தாள்.

விற்பனையாளன் அதைக் கேட்டதும் அசந்து போய்விட்டால், அவனால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. “உண்மையாகவா சொல்லுகிறீர்கள்? இவை இந்த ஆண்டு உலக அழகியின் புள்ளிகளல்லவா?” என்றான் ஆச்சரியத்துடன்.

பத்மாவுக்கோ பெருமை தாங்க முடியவில்லை. ஸ்ரீதருக்கோ அதை விட மேலே.

விற்பனையாளன் பணிவோடு “நான் சொன்னால் தப்பர்த்தம் செய்ய மாட்டீர்களென்றால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்,” என்றான்.

ஸ்ரீதர் “சொல்லு” என்றான். பத்மா “அவன் என்ன சொல்லப் போகிறான்” என்று ஆவலுடன் காத்து நின்றாள். “அடுத்த வருடம் உலக அழகிப் போட்டியில் நீங்கள் கட்டாயம் பங்குபற்ற வேண்டும். நிச்சயம் முதலிடம் கிடைத்தே தீரும்” என்றான் அவன். ஸ்ரீதரும் பத்மாவும் சிரித்தார்கள்.

முடிவாக எழுபத்தைந்து ரூபாவுக்கு இளம் பச்சை வர்ணத்தில் ஓர் ஒற்றை ஆடை நீச்சலுடையைத் தெரிந்தெடுத்துக் கொண்டாள் பத்மா. எடுத்த எடுப்பில் ‘பிக்கினி’யை அணிய அவளுக்குத் துணிவு பிறக்கவில்லை!

சரியாகப் பதினொன்றே கால் மணியளவில் ஸ்ரீதர் கடற்கரை ஓரத்தில் தென்னை மர நிழலில் பத்மாவைப் படத் தீட்ட ஆரம்பித்தான். அதற்கென உள்ள ஒரு ‘ஸ்டாண்டி’ல் பெரிய சித்திரக் காகிதத்தை விரித்து வண்ண மைகளால் படத்தைத் தீட்ட தொடங்கினான் அவன். பத்மா நீலத்தில் விழ்ந்து கிடந்த ஒரு தென்னங் குற்றியில் தன் நீச்சலுடையில் ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தாள். பத்மாவுக்கோ இந்தப் படம் எழுதும் விஷயமே பெரும் வேடிக்கை போலிருந்தது. மெளனமாக ஓர் இடத்தில் பொம்மை போல் ஆடாது அசையாது வீற்றிருப்பது அவ்வளவு இலேசாகவோ இன்பமாகவோ தோன்றவில்லை அவளுக்கு. ஒரு சில நிமிடங்கள் கழிவதற்குள்ளேயே “ஸ்ரீதர்! முடிந்துவிட்டதா?” “இது என்ன கரைச்சல்” இப்போது முடியாதா?” “எப்போது முடியும்?” “கடலிலே போய்க் குளிப்போம். நீங்களும் ஸ்நான  உடையை அணிந்து கொண்டு கிளம்புங்கள்.” “ஐயோ தென்னங் குற்றியில் எறும்பிருக்கிறது” “ஆ... கடித்துவிட்டது!” என்று ஏதாவது பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். ஸ்ரீதர் வாயில் கையை வைத்து, “பேசாதே!” என்று கூறிக் கூறிப் பத்மாவை நன்கு அவதானித்து, படத்தை வரைந்து கொண்டிருந்தான்.

பத்மாவுக்கோ இந்தப் படம் எழுதும் விஷயமே பெரும் வேடிக்கை போலிருந்தது. மெளனமாக ஓர் இடத்தில் பொம்மை போல் ஆடாது அசையாது வீற்றிருப்பது அவ்வளவு இலேசாகவோ இன்பமாகவோ தோன்றவில்லை அவளுக்கு. ஒரு சில நிமிடங்கள் கழிவதற்குள்ளேயே “ஸ்ரீதர்! முடிந்துவிட்டதா?” “இது என்ன கரைச்சல்” இப்போது முடியாதா?” “எப்போது முடியும்?” “கடலிலே போய்க் குளிப்போம். நீங்களும் ஸ்நான  உடையை அணிந்து கொண்டு கிளம்புங்கள்.” “ஐயோ தென்னங் குற்றியில் எறும்பிருக்கிறது” “ஆ... கடித்துவிட்டது!” என்று ஏதாவது பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். ஸ்ரீதர் வாயில் கையை வைத்து, “பேசாதே!” என்று கூறிக் கூறிப் பத்மாவை நன்கு அவதானித்து, படத்தை வரைந்து கொண்டிருந்தான்.

பத்மாவுக்கோ இந்தப் படம் எழுதும் விஷயமே பெரும் வேடிக்கை போலிருந்தது. மெளனமாக ஓர் இடத்தில் பொம்மை போல் ஆடாது அசையாது வீற்றிருப்பது அவ்வளவு இலேசாகவோ இன்பமாகவோ தோன்றவில்லை அவளுக்கு. ஒரு சில நிமிடங்கள் கழிவதற்குள்ளேயே “ஸ்ரீதர்! முடிந்துவிட்டதா?” “இது என்ன கரைச்சல்” இப்போது முடியாதா?” “எப்போது முடியும்?” “கடலிலே போய்க் குளிப்போம். நீங்களும் ஸ்நான  உடையை அணிந்து கொண்டு கிளம்புங்கள்.” “ஐயோ தென்னங் குற்றியில் எறும்பிருக்கிறது” “ஆ... கடித்துவிட்டது!” என்று ஏதாவது பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். ஸ்ரீதர் வாயில் கையை வைத்து, “பேசாதே!” என்று கூறிக் கூறிப் பத்மாவை நன்கு அவதானித்து, படத்தை வரைந்து கொண்டிருந்தான்.

இவ்வாறு அவர்கள் படம் வரைவதில் ஒத்துழைப்பதும் போராடுவதுமாக இருந்த போது தான், அங்கு வந்து சேர்ந்தார் அதிகார் அம்பலவாணர். தலையில் வெள்ளைத் தலைப்பகை, வெள்ளைக் குளோஸ் கோட், நீண்ட வெள்ளைக் காற்சட்டை ஆகியவற்றுடன் அதிக பருமனும் உயரமும் இல்லாமல் காட்சியளித்த அவர், இப்பொழுது யாழ்ப்பாணத்தில் முற்றாக மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் கடைசிப் பிரதிநிதிகளில் ஒருவராக விளங்கினார். நெற்றியில் சந்தனப் பொட்டு ஒளி வீசக் கம்பீரமாக நடந்து வந்த அவரது பக்கத்தில் அவரது தர்ம பத்தினி வள்ளியாச்சி பின் கொப்பகம் வைத்த சேலையுடனும் நீண்ட கை வைந்த இரவிக்கையுடனும், நெஞ்சினிலே பெரிய பதக்கம், கழுத்தை நெரித்தாற் போன்ற தங்க அட்டிகை, கையில் பெரிய தங்க கொலுசுகள் ஆகியவற்றுடனும் வந்து கொண்டிருந்தாள். சேவலின் வாலைப் போன்று அவளுக்குப் பின்னால் துள்ளி எழுந்த காட்சியளித்த அவளது சேலையின் முகதலை இன்றைய பரம்பரையினருக்கு  விநோதப் பொருளாகத் தோன்றினாலும், அதிலும் ஓர் அழகும் கம்பீரமும் இருக்கத்தான் செய்தன!

தற்செயலாகக் கடலோரத்தைப் பார்த்த ஸ்ரீதர் அதிகார் அம்பலவாணரையும் அவர் மனைவியையும் கண்டதும் அதிர்ச்சியடைந்து விட்டான். உண்மையில் அவர்கள் ஸ்ரீதர் இருக்கும் திசையை நோக்கியே வந்து கொண்டிருந்தார்கள். ஸ்நான உடையில் ஒரு பெண் தென்னங்குற்றியில் வீற்றிருப்பதும் அவளை ஓர் ஓவியன் படமாகத் தீட்டிக் கொண்டிருப்பதும்தான் அவர்களைஅங்கே அழைத்து வந்தன.

அதிகார் முக மலர்ச்சியோடு மனைவியிடம் ஏதோ பகடியாகச் சொல்ல அவள் பின்னால் தனது ஸ்தூல சரீரத்தை இழுக்க முடியாமல் கால்களால் இழுத்து வந்த காட்சி வேறு நேரங்களில் என்றால் ஸ்ரீதருக்கு நல்ல வேடிக்கையாய்த் தோன்றிருக்கும். ஆனால் இப்போது அவ்வாறு தோன்ற வில்லை. தனது தந்தை சிவநேசருக்கு மிகவும் நெருங்கிய நண்பரான அதிகாரை எவ்வாறு சமாளிப்பதென்ற நினைவு ஒன்றே அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தது. என்றாலும் அதை வெளிக்காட்டாது படம் தீட்டுவதில் தன்னை முற்றாக மறந்தவன் போல் நடிக்க ஆரம்பித்தான் அவன்.

பத்மாவோ அதிகார் மனைவி வள்ளியாச்சி வால் வைத்த சேலைக் கட்டைச் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் ஓர் எறும்பு அவள் காலில் ஏறி விட்டதால், “எறும்பு, எறும்பு” என்றும் சப்தமிட்டாள் அவள். பின்னர், “ஸ்ரீதர், அதோ பாருங்கள்! எங்களை நோக்கி வால் முளைத்த பெண்பிள்ளை ஒன்று வந்துக் கொண்டிருக்கிறது” என்றும் சிரிப்பு முழக்கத்தோடு கும்மாளம் போட்டாள். பத்மா கடற் காற்றும் நீச்சலுடையுமாக அவளுக்கு ஒரு வெறியின்பத்தைத் தந்திருந்ததே, அவளது அசாதாரண கலகலப்புக்குக் காரணம். இன்னும் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்திருந்த பத்மாவுக்கு, பின் கொப்பகம் வைத்த அந்த யாழ்ப்பாணச் சேலைக்கட்டு உண்மையில் புதுமையாகத்தான் தோன்றியது. ஸ்ரீதரோ வாயில் வைத்து, “பேசாதே” என்று சைகை செய்தான் பத்மாவைப் பார்த்து.

அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.


10-ம் அத்தியாயம்: நீச்சல் அழகி

அறிஞர் அ.ந.கந்தசாமி -

அழகான யுவதி ஒருத்தி கண்ணைக் கவரும் பகட்டான நீச்சலுடையில் இளமையின் பூரிப்புடனும், சதைப் பிடிப்புடனும் விளங்கும் தனது பெரும்பகுதியை வெளிக்காட்டியவண்ணம், சோவென்றும் காற்று வீசும் தென்றல் கூடலிலே கடற்கரை மணலில் தென்னங்குற்றி ஒன்றில் ஒயிலாக வீற்றிருக்க, அவளை நாகரிகமான காற்சட்டையும் பல வர்ண புஷ் சேர்ட்டும் அணிந்த இளமை ததும்பும் ஆடவனொருவன் கூர்ந்து கவனித்து வண்ண ஓவியமாக வரைந்து கொண்டிருப்பதைக் கண்ட யாருக்குத்தான் அதை நெருங்கிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்படாது? ஆனால் ஸ்ரீதரும் பத்மாவும் படமெழுதுவதற்காகத் தெரிந்தெடுத்திருந்த தென்னங்கூடல், கடற்கரைக் களியாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்த கல்கிசை ஹோட்டல் பிரதேசத்துக்கு ஏறக்குறைய அரை மைல் தூரத்தில் இருந்ததால், அவ்வளவு அதிகமான பேர் அன்று அக் காட்சியைப் பார்ப்பதற்காக மொய்க்கவில்லை. கடற்கரைக்கு வந்திருந்தவர்களில் பெரும்பகுதியினர் களியாட்டப் பிரதேசத்துள் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததே இதற்குக் காரணம். பாட்டும் கூத்தும், குதூகலப் பேச்சும் ஆரவாரமாய்ப் பிரவகித்துக் கொண்டிருந்த களியாட்டு விழா அவர்களை முற்றாக ஆட்கொண்டிருந்தது. ஓரிருவர் மட்டுமே இதற்கு விதி விலக்காகக் கடற்கரையோரமாக உல்லாச நடை போட்டுக் கொண்டிருந்தனர். நீண்ட நேர ஆரவாரத்தாலும் ஜன சந்தடியாலும் ஏற்படும் அமுக்கத்திலிருந்து விடுபட்டு, பரந்த கடற்கரையில் வெண் மணல் விரிவிலே சுத்தமான பிராண வாயுவை உட்கொண்டு, ஓரளவு தனிமையை அனுபவித்தவண்னம் நீலக்கடலின் ஓங்கார கீதத்தை அமைதியாக செவிமெடுக்க விரும்பிய கலையுள்ளம் படைத்த மிகச் சிலரே அவ்வாறு கிளம்பி வந்தனர்.

அவ்வாறு கிளம்பி வந்தவர்களும் நீண்ட விழி நீச்சலுடை மோகினியையும், அவளைத் தூரிகையால் தீட்டிக் கொண்டிருந்த ஓவியனையும் தூரத்திலிருந்தவாறு பார்த்தார்களேயல்லாமால் நெருங்கி வந்து தொல்லை கொடுக்கவில்லை. இதற்குக் காரணம் அவர்களது பண்பு அல்லது நாசுக்கு மட்டுமல்ல. இப்படிப்பட்ட காட்சிகளைத் தாமாகத் தனித்துச் சென்று பார்க்கப் பலருக்கு இயற்கையாகவே ஒரு வெட்கம் இருக்கிறது. கூட்டத்தோடு கூட்டமாகத்தான் இவர்களால் இத்தகைய காட்சிகளைக் கூசாது பார்க்க முடியும். இன்னும் சிலருக்கோ பயம்.

படமெழுதிக் கொண்டிருக்கும் ஆஜானுபாகு அல்லது ‘தடியன்’ "என்ன ஏதோ கண்டறியாததைக் கண்ட மாதிரி வாயைப் பிளந்து கொண்டு நிற்கிறாய்?" என்று கேட்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சம். மற்றும் சிலருக்கோ அந்தத் தடியன் தங்களை அடிக்கக்கூட வந்து விடலாம். வம்பில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம். இக் காரணங்களில் ஒன்றோ பலவோ எல்லாமோ சேர்ந்து, ஸ்ரீதர் பத்மா ஜோடிக்கு அன்று ஓரளவு சுதந்திரத்தை அக்கடற்கரையில் அளித்திருந்தது. இதனால் அவர்கள் இஷ்டம் போல் பேசவும் சிரிக்கவும்,

ஆறுதலாகத் தாம் நினைத்தது போல் படத்தை எழுதவும் வசதியாயிருந்தது. இருந்த போதிலும் ஒரு சில வேலையற்ற இளைஞர்கள் வாலிபத்தின் குறு குறுப்பால் உந்தப்பட்டு அங்குமிங்கும் நின்றும் நடந்தும் தாங்கள் அவதானிக்கப்படாமல் தாம் அவர்களை, முக்கியமாக ஸ்நான உடையணிந்து காற்றில் அலைந்து கொண்டிருந்த கேசத்தை கைகளால் அடிக்கடி ஒதுக்கி விட்டுக் கொண்டு சிரித்துப் பேசி நின்ற சிற்றிடைச் சிங்காரி பத்மாவை அவதானிக்கவே செய்தார்கள்.

அதிகார் அம்பலவாணரைப் பொறுத்தவரையில் அவர் எப்பொழுதுமே நாசுக்குக்குப் பெயர் பெற்றவர். சில சமயங்களில் சற்றும் நாகரிகமற்றவர் என்று மற்றவர்கள் சொல்லும்படியாகக் கூட அவர் நடந்துக் கொள்வதுண்டு. அவர் மனதில் ஓர் எண்ணம் தோன்றி விட்டால், அதை வெளியில் பேசுவது அழகா அல்லவா, என்பது பற்றி யோசிப்பதில் காலம் கடத்தாமல் படாரென்று அதை வெளியிலே பேசி விடுவது அவர் வழக்கம். பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் அவர் அப்படித்தான். விருந்துகளுக்குப் போனால், தமக்கு விருப்பமான பதார்த்தம் என்றால் நாகரிகம் பாராமல் அதை அப்படியே எடுத்து வாயில் போட்டு மென்று விடுவார். அப்படிப்பட்டவர், பத்மாவையும் ஸ்ரீதரையும் முன்னே கூறிய நிலையில் கண்டதும் அடக்க முடியாத அவாவுடன் அவர்களை நெருங்கிப் பார்க்க விரைந்து சென்றதில் ஆச்சரியமில்லையல்லவா?

அம்பலவாணர் அவர் மனைவி வள்ளியாச்சியுடன் களியாட்டுப் பிரதேசத்தில் கன்னியரும் காளையரும் கடலாடிக் களிப்பதைக் காலையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பின்னர் "வா டார்லிங்! கடற்கரையில் சிறிது நேரம் நடந்து விட்டு வருவோம். பிராண வாயு உடம்புக்கு நல்லது. அத்துடன், சிறிது நடப்பது உமது கொழுப்பையும் கொஞ்சம் கரைக்கும்" என்று கூறிக் கிளம்பி வந்த போதே ஸ்ரீதர்-பத்மா ஜோடியை அவர் கழுகுக் கண்கள் கண்டு பிடித்தன. அதிகாரி அவர்கள் தமது அன்பு மனைவியைத் தனித்திருக்கும் நேரங்களில் எப்போதும் "டார்லிங்" என்ற ஆங்கில வார்த்தையால் அழைக்கத் தவறுவதேயில்லை. அந்த வார்த்தையில் தம்பதிகள் இருவருக்கும் தனியின்பம்! அதிகாருக்கு வயது அறுபத்தைந்து. ஆனால் என்ன தான் வயதானவராயிருந்தாலும் இன்னும் அவருக்கு அழகுச் சுவை அதிகமாகத்தானிருந்தது. அதிலும் அழகான பெண்களைக் கண்டுவிட்டால் இன்றும் அவரால் திக்குமுக்காடாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர் பத்மாவின் பேரழகைக் கண்டு பரபரப்படைந்ததைப் பற்றி யார் தான் வியப்படைவர்? இன்னும், இன்று பத்மா தன் முழு எழிற் கோலத்தில் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து பங்கையும் சற்றும் மறையாது வெளிக் காட்டிக் கொண்டல்லவா நிற்கிறாள்?

அதிகாரி தமது சட்டைப் பைகளிலிருந்த வெள்ளி பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியை எடுத்து அதைத் துடைப்பதற்கென வைத்திருந்த விசேஷ கைக்குட்டையால் அதனைத் துடைத்து, தமது கண்களில் அணிந்து கொண்டார் மனைவி பக்கத்திலிருந்தாற் கூட, தாம் பார்க்க விரும்பிய ‘பொருளை’ அவர் சரிவர அவதானித்துப் பார்க்க நினைத்து விட்டாரானால் அவரை அவளாலும் தடுத்துவிட முடியாது. இளம் வயதில் அவர் மனைவி வள்ளியாச்சி இதற்காக அவருடன் பல தடவை சண்டை போட்டிருந்தாலும், இப்பொழுது இது பழம் பாடமாகி விட்டது. எந்தப் பெண்ணை எப்படி மூக்குக் கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் முடிவில் தான் கிழித்த கோட்டை அவர் மீற மாட்டார் என்பது அவளுக்கு நன்கு தெரியும்.

மூக்குக் கண்ணாடியைத் துடைத்து மாட்டிக் கொண்ட அம்பலவாணரின் கண்களுக்கு நல்ல விருந்து காத்துக் கிடந்தது. பத்மா அணிந்திருந்த இளம் பச்சை நிற நீச்சலுடை அவள் உடலோடு ஒட்டிக் கொண்டு அவளது மறைந்திருந்த அழகை எல்லாம் வெளியே வழிந்தெடுத்து ஒரு வட்டிலிலே கொட்டிக் காட்டுவது போல் காட்டிக் கொண்டிருந்தது. அந்தப் பேரழகை கண்டு அவ்வழகுக்குப் பழக்கப் பட்டுப்போன அவள் காதலனான ஸ்ரீதரனே அன்று திகைத்துப் போயிருந்தான். இவ்வளவு அழகும் அவளது ஆடைகளுக்குள்ளே எப்படி ஒளிந்திருந்ததோ என்று அதிர்ச்சியும் வியப்பும் அடைந்திருந்தான் அவன். இந்நிலையில்அப்பேரெழில், அதிகார் அம்பலவாணரை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டதில் ஆச்சரியமென்ன?

நாம் அழகிகள் என்று நினைக்கும் பெண்களில் பலர், உண்மையில் பொருத்தமான ஆடைகளால் நமது அவலட்சணத்தை மறைப்பதில் சாமர்த்தியம் வாய்ந்தவர்கள மட்டும் தான், அவர்களின் உண்மையழகு எவ்வளவு என்பதை அவர்களை ஒரு நீச்சலுடையில் போட்டுப் பார்த்தால் தான் தெரியும்! பத்மாவோ அப்படிப்பட்ட அழகி அல்ல. உடைகள் அவள் அழகை வெளிக் காட்டுவதற்குத் தடையாக இருந்தனவே அல்லாமல், துணை புரியவில்லை. அவற்றைக் குறைக்கக் குறைக்க வளவளப்பான அவளது இயற்கை மேனி வெளியே தெரிய, அவள் அழகும் அதிகரித்தது.

பத்மா தன் ஒளி மயமான நீச்சலுடையில் ஒரு தங்கப் பதுமை போல் பிரகாசித்தாள். அவளது சிற்றிடை உருக்குப் போல் ஒடுங்கித் தோன்ற, அவளது எலுமிச்சம் பழ நிறக் கால்களும், வாளிப்பான பொற்றோள்களும் பரிசுத்தமாக விளங்கிய கழுத்தும் வெறுமையாகத் தோன்றிக் காண்பவர் கண்களைப் பறித்தன. அவளது முகிற் கூந்த தோள் வழி தவழ்ந்து வந்து, அவளது கீற்றுப் போல் விளங்கிய அவளது சின்னஞ் சிறு செந்துவர் வாய்க்கருகாமையில் அவளது மாம்பழக் கன்னங்களில் அவளது வழமையான புன்னகைச் சுழி உயிர் பெற்று விளையாடியது. பளபளவென்று ஒளி வீசிய அவள் நீண்ட கண்களோ மின்வெட்டுப் போல் வெட்டிக் கொண்டிருந்தன.

உண்மையில், அதிகார் அம்பலவாணர் அவளைப் பார்த்ததும் அவளை மட்டுமே தான் பார்க்கலானார். பக்கத்திலிருந்த ஆடவன் நினைவு அவருக்கு அற்றுப் போயிற்று. அவர் மனதில் முதலில் எழுந்த நினைவு அவள் சிங்களப் பெண்ணா அல்லது தமிழ்ப் பெண்ணா என்பதுதான். அந்தப் பிரச்சினயை அவளைப் பார்த்துத் தீர்த்துக் கொள்ள முடியாது போகவே, படம் வரைந்துக் கொண்டிருந்த அவளது தோழனைப் பார்த்தாவது அதனைத் தீர்க்க முயல்வோம் என்று அவர் தன் கண்களை ஸ்ரீதர் மீதிட்டதும், "ஆ! இது சிவநேசர் மகன் ஸ்ரீதரல்லவா?" என்று திகைத்து விட்டார் அவர்.

ஸ்ரீதரோ அதிகாரி அம்பலவாணரைக் கண்டதும் கூடிய வரை முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு படத்தைத் தீட்டுவதில் தன்னை முற்றாக மறந்தவன் போல் நடித்துக் கொண்டிருந்தான். பத்மாவுக்கோ என்ன செய்வதென்றே தோன்றவில்லை. தன்னைச் சிறிதும் கூச்சமின்றி அங்கமங்கமாய்ப் பிய்த்துப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த தலைப்பாகைக் கிழவனின் பரந்த பொட்டு வைத்த முகத்தையும், கொழுத்த உடலோடு அவருக்கு பக்கத்தில் பூதாகாரமாகக் காட்சியளித்த அவர் மனைவியின் வால் வைத்த "கொர நாட்டுச்" சேலையையும் அவளது கழுத்தை இறுக்கிய தங்க அட்டிகையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு மெளனமாக உட்கார்ந்திருந்தாள் அவள். இடையிடையே செல்லமாகத் தன் செவ்விதழ்களைக் குவிப்பதும் விரிப்பதுமாக அவள் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அம்பலவாணர் ஸ்ரீதரை யாரென்று அடையாளம் கண்டு கொண்டதும் படாரென்று "தம்பி ஸ்ரீதர்! என்ன எங்களை அடையாளம் தெரியவில்லையா? எப்படிச் சுகம்?" என்று முக மலர்ச்சியோடு கேட்டார். வள்ளியாச்சியும் "ஓ எங்களுடைய சேர் நமசிவாயத்தின் பேரன் ஸ்ரீதரல்லவா இது? சிவநேசரின் மகன்" என்று ஆச்சரியந் தாங்காமல் கூறினாள்.

ஆனால் ஸ்ரீதரோ அவர்கள் பேச்சுத் தனக்குப் புரியாதது போல "என்ன? என்னை உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய ஊர் உடுவில். நான் சிவநேசர் மகனல்ல. சின்னப்பா வாத்தியாரின் மகன்" என்று சாவதானமாகக் குறிப்பிட்டான்.

பத்மா திகைத்துப் போய் விட்டாள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்றாலும் சிரிப்பு வந்தது. ஆனால் அதனை ஒருவாறு அடக்கிக் கொண்டாள். அம்பலவாணரோ அப்படியே அசந்து போய் விட்டார். மூக்குக் கண்ணாடியை மீண்டும் ஒரு முறை துடைத்து மாட்டிக் கொண்டு ஸ்ரீதரை உற்றுப் பார்த்தார். வள்ளியாச்சி புன்னகையோடு, "என்ன தம்பி, பொய் சொல்கிறீர்கள்! நீங்கள் வந்து... பயப்படுகிறீர்கள் போலே" என்றாள்.

ஸ்ரீதர் வள்ளியாச்சியை முகத்தை நிமிர்த்தி ஒரு தரம் பார்த்துவிட்டு, "என்ன? நீங்கள் சொல்வது விளங்கவில்லையே! நான் எதற்குப் பயப்பட வேண்டும்? யாருக்கு? இங்கு சிங்கம், புலி, கரடி போன்ற மிருகங்கள் எதையும் நான் காணவில்லையே. நடுப் பகல் நேரமானால் பேய், பிசாசு, பூதங்களைக் கூட இங்கு காணவில்லையே!" என்றான்.

"வந்து... வந்து... நாங்கள், தம்பி இங்கே செய்கிறதை அப்பாவிடம் சொல்லி விடுவோமோ என்று பயப்படுகிறீர்கள்."

"நான் என்ன அப்படிப் பயப்படும்படியான காரியத்தைச் செய்கிறேன்? கொலை, களவு எதையும் நான் இங்கு செய்யவில்லையே! படம் வரைந்து கொண்டிருக்கிறேன். படம் வரைவதற்கு யாரும் பயப்பட வேண்டுமா?" என்றான்.

"இல்லை வந்து.. வந்து.." என்று மேலும் இழுத்தாள் வள்ளியாச்சி.

"நான் படம் வரைவது அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். உண்மையில் அவரது படத்தைக் கூட அவர் இருப்பதிலும் பார்க்க அதிகம் அழகாகவே அவரது பெரிய தலைப்பாகையுடன் நான் வரைந்திருக்கிறேன். நீங்கள் கூட அதை வீட்டில் பார்த்திருப்பீர்கள். இது "என் மகன் வரைந்த படம்" என்று வாறவர் போறவர் எல்லாருக்கும் அதை அவர் காட்டுவது வழக்கம்." என்று ஸ்ரீதர் பதிலளித்தான். அவர்களிடம் பொய் சொல்வதில் பலனில்லை என்று அவனுக்குத் தெரிந்து விட்டது.

அதிகார் அம்பலவாணர் பத்மாவின் மேல் வைத்த தம் கண்களை வலிந்திழுத்து அவற்றைச் ஸ்ரீதர் மீது செலுத்திய வண்ணம், "அப்போது நீங்கள் சிவநேசரின் மகன் தான். தம்பி சரியான பகடிக்காரன் போல் தெரிகிறது!" என்று கூறிச் சிரித்தார். அவன் தோள்களைத் தம் கைகளால் பிடித்துத் தட்டினார்.

இதற்கிடையில் வள்ளியாச்சி பெரிய கேள்வி ஒன்றைத் தூக்கிப் போட்டுவிட்டாள். "தங்கச்சி யார்?" என்பதே அது. அப்படி அவள் கேட்டதும் சமாளித்துக் கொண்டு "உண்மையில் எனக்கு இந்தத் தங்கச்சி யாரென்பது தெரியாது. ஒரு "வட இந்தியப் பெண்ணாம்.

பணக்காரி. தன்னைப் படமெழுதிக் கொடுத்தால் ஆயிரம் ரூபா தருவதாகப் பேசி என்னைப் படம் எழுதும் படி கேட்டாள். அது தான் படமெழுதிக் கொண்டிருக்கிறேன். அவள் பெயர் "பத்மா பரமானந்த்." அவள் தகப்பனார் கொழும்பிலே பெரிய ஜவுளிக் கடை வைத்திருக்கிறாராம். என்றாலும் துணி விலை அதிகம் என்பதாலே தனது மகளுக்கு மிகவும் குறைவாகவும் சிக்கனமாகவும் தான் உடைகளை உடுக்க வேண்டுமென்று அவர் புத்திமதி சொல்லிக் கொடுத்திருக்கிறாராம். பெண்ணும் புத்திசாலிதான். அதனாலேதான் இந்தச் சின்னஞ் சிறு ஸ்நான உடையை அவள் அணிந்திருக்கிறாள்!" என்று வேடிக்கையாகக் கூறினான் அவன்.

அதிகாரும் வள்ளியாச்சியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பத்மாவுக்கும் அடக்க முடியாத சிரிப்பு. ஆனால் ஸ்ரீதரோ அவளைப் பார்த்து, "சிரிக்காதே" என்று மிகவும் கண்டிப்பாகத் தனது கண்ணால் ஜாடை காட்டிக் கொண்டிருந்தான் என்றாலும் அவளால் சிரிக்காதிருக்க முடியவில்லை. இடையைக் கைகளால் தாங்கிக் கொண்டு துடி துடித்துச் சிரித்தாள் அவள். "ஐயோ... ஐயோ..." என்று பெருமூச்சு வாங்கவும் செய்தாள்.

இப்படி அவர்கள் அவிட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்க, கடற்காற்றில் அவர்களது நகையொளியின் கிண்கிணி நாதம் கலந்து கொண்டிருக்க, மேலே வானத்திலே இடியேறு போல் ஓவென்று சீறி முழங்கிக் கொண்டு பதிவாகப் பறந்தது ஓர் "ஏயர் சிலோன்" விமானம். விநாடிக்கு விநாடி அதிகரிக்கும் ஓசையோடு மின்னல் வேகத்தில் "விர்"ரென்று பறந்து, மறைந்து, மீண்டும் தோன்றிப் பறந்த இவ்விமானத்தைக் கண்டதும் சிரிப்பை நிறுத்தி எல்லோரும் ஆகாயத்தைப் பார்க்கலானார்கள். முழுக் கல்கிசைக் கடற்கரையும் ஆகாயத்தை நோக்கியது. களியாட்டக்காரர்களெல்லரும் வானத்தை நோக்கினர். கடலில் நீந்திக் கொண்டிருந்தவர்களும் நீச்சலை நிறுத்தி அண்ணாந்து பார்த்தனர். அதிகார் அம்பலவாணர் கூட பத்மாவின் அழகுடலைப் பார்ப்பதை நிறுத்தித் தமது மூக்குக் கண்ணாடிக் கூடாக விண்வெளியைப் நோக்கலானார்.

அப்பொழுது விமானத்திலிருந்து பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்ற வர்ணங்களில் நோடீசுகள் மழைபோல் பொழிய ஆரம்பித்தன. ஒரு புறம் ஒரு சப்பாத்துக் கம்பெனியின் விளம்பரத்தைத் தாங்கிய அந்த நோட்டீசுகளின் மறுபுறத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது.


நீச்சலழகிப் போட்டி
களியாட்ட வீரர்களே! இப்பொழுது மணி சரியாக மு.ப. 11.30. நண்பகல் 12 மணிக்கு நீச்சலழகியைத் தெரிந்தெடுக்கும் நடுவர்கள் அழகிகளைப் பொறுக்க அலையோரம் வருவார்கள். அவர்களுடன் ஒத்துழைக்கும்படி எல்லாக் கணவான்களையும் சீமாட்டிகளையும் நாம் கேட்டுக் கொள்ளுகிறோம். 2 மணிக்கு நீச்சலழகிப் போட்டி கல்கிசை ஹோட்டல் நந்தவனத்தில் நடைபெறும். முதலிடம் பெறும் நீச்சல் ராணிக்கு ரூபா 1000 பரிசு வழங்கப்படும். -இப்படிக்கு-கொழும்பில் டைகர் கிளப்

ஸ்ரீதர் ஓடிச் சென்று இந்த நோட்டீசுகளில் ஒன்றைக் கைப்பற்றினான். ஆனால் அதற்கு முன்னரே அதிகார் அம்பலவாணர் ஒரு நோட்டீசைப் பிடித்துவிட்டதோடு, அதில் சொல்லப்பட்ட நேரம் சரியா என்பதைத் தமது கைக் கடிகாரத்துடன் ஒப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அதன்பின் பத்மாவை நெருங்கி "உண்மைதான். சரியாக 11.30 மணி தான் இப்போது" என்று குறிப்பிட்டார். பத்மா பதிலுக்கு ஒன்றும் பேசாது தன் அரிசிப் பல் வரிசையை இலேசாகக் காட்டிச் சிரித்து விட்டு "ஸ்ரீதர்! வாருங்கள். படத்தை இவ்வளவுடன் நிறுத்திக் கடலில் குளிக்கப் போவோம்" என்று கூறினாள். ஸ்ரீதரும் "ஆகட்டும்" என்று கிளம்பினான்.

பத்மா தென்னங் குற்றியிலிருந்து துள்ளி எழுந்து தன் தலைமயிரைச் சரி செய்தாள். மண்ணில் கால்களை அகல ஊன்றிக் கொண்டு கீழே குனிந்து தன் இடக் காலில் முழந்தாளுக்குச் சமீபமாக மெல்ல ஊர்ந்து மேலேறிக் கொண்டிருந்த எறும்பொன்றைத் தன் செவ்விரல்களால் பிடித்தெடுத்த ஸ்ரீதரிடம் "இதை உங்களைக் கடிக்க விடவா?" என்று சிரித்துக் கொண்டு கேட்டாள்.

அதன் பின் பின்புறமாகத் திரும்பி நின்று கொண்டு தென்னங்குற்றியில் வீற்றிருந்ததால் நீச்சலுடையின் பின்புறத்தில் ஒட்டிக் கொண்டிருந்த மணலைத் தன் இரு கரங்களாலும் மெல்லத் தட்டினாள். பின்னர் தனது கழுத்தை உயர்த்தித் தலையைத் திருப்பிப் புருவங்களை உயர்த்திக் கண்களை இயன்ற வரை கீழ் நோக்காகப் பின்னால் செலுத்தி இன்னும் மணல் ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு மேலும் ஓரிரு தடவை மணல் முற்றிலும் போகும்படியாகக் கையால் மணல் படிந்திருந்த இடத்தைத் தடவி விட்டாள். மணல் சொரசொரவென்று கொட்டியதும் மணல் படிந்திருந்ததால் ஒளி குன்றியிருந்த அவளது இளம்பச்சை நீச்சலுடையின் அப்பாகம் மீண்டும் ஒளி வீசியது!

ஸ்ரீதரோ அவள் செயலெதையும் இலட்சியம் செய்யாது படத்தில் பிரஷால் ஏதோ செய்து கொண்டிருந்தாள். ஆனால் அதிகார் அம்பலவாணரோ கண்ணாடியை நன்கு அணிந்துகொண்டு அவள் பின்னழகை இரசிப்பதில் மூழ்கியிருந்தார். அப்போது அவரது கழுகுக் கண்களுக்கு அவள் முதுகில் ஓர் எறும்பு ஏறிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே "அதோ அதோ எறும்பு-முதுகில்" என்றார் பதைபதைத்து. பத்மா அவளது முகிற் கூந்தல் குதிரையின் பிடரி மயிர் போல் துள்ளி அசையப் படக்கென்று தன் தலையைப் பின்னே திருப்பினாள். அவர் எறும்பைத் தட்டி விடுவதற்கு முன்னர் அவளாகவே அதைத் தட்டிவிட்டுக் கொண்டாள்.

வள்ளியாச்சி அதிகாரை ஒரு முறை தன் கண்களால் முறைத்துப் பார்த்தாள். ஆனால் அதிகாரா அதை இலட்சியம் செய்பவர்? பத்மாவின் உடலில் இன்னும் எறும்புகளிருந்து அவளது மெல்லுடலைக் கடித்துவிட்டால் என்ன செய்வது என்றஞ்சி அவர் தம் மூக்குக் கண்ணாடியால் மேலும் எறும்புகள் அவள் உடலிலோ நீச்சலுடையிலோ நடமாடுகின்றனவா என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீதர் படத்தில் தான் செய்து கொண்டிருந்த வேலையை முடித்ததும் அதிகார் அம்பலவாணரிடமும் வள்ளியாச்சியிடமும் "ஹோட்டலில் இரண்டு மணிக்கு உங்களைச் சந்திக்கிறேன்" என்றான். அவ்வாறு கூறிக் கொண்டே பத்மாவிடமும் ஓவியப் பொருள்களை எல்லாம் எடுத்துக் காருக்குக் கொண்டு போகும்படி சொன்னான். அத்துடன் தானும் சில பொருள்களைத் தூக்கிக் கொண்டு கடற்கரை ரெயில் பாதையின் மறு புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் காரை நோக்கி நடந்தான் அவன். சில நிமிஷங்களில் அவன் அங்கிருந்து தனது செந்நிற ஸ்நான உடையில் பத்மாவுடன் கடலை நோக்கி மீண்டும் வந்த பொழுது பத்மா இவ்வுலகில் இல்லை. முதன் முதலாக ஸ்ரீதரை வெறும் மேலுடன் அவள் கண்டது இதுவே முதல் தடவை. பொன் போன்ற அவன் பூரித்த தேகமும், கன்னங்கரேலென்ற அவன் நெஞ்சின் அடர் மயிரும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டன. தன் காதலனின் கட்டழகிலே அவளுக்குத் தாங்கொணாத பெருமை.

அர்ச்சுன ராஜன் பக்கத்தில் நின்ற அல்லிராணி கூட அவ்வளவு பெருமைப்பட்டிருப்பாளோ என்னவோ? கடற்கரையில் இவ்வளவு ஆட்கள் மட்டுமில்லாவிட்டால் ஸ்ரீதரின் பரந்த நெஞ்சைத் தன் இரு கரங்களாலும் ஆசை தீரத் தடவி மகிழ்ந்திருக்கலாமே என்று எண்ணினாள் அவள். அவன் நெஞ்சின் மயிர்களுள் தனது விரல்களை மறைக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. கடலில் குளிக்க வேண்டுமென்று பத்மா வெறுமனே மனதால் ஆசைபட்டாளே தவிர, கடலலைகளுக்குச் சமீபமாகச் சென்றதும், கடலில் இறங்க அச்சமேற்பட்டு விட்டது அவளுக்கு. உண்மையில் அவள் கடலில் இறங்கி நீராடிச் சுமார் பத்து வருடங்களாவது இருக்கும்.

கொலீஜ் ரோட்டிலிருந்து சுமார் ஒன்றரை மைல் துரத்திலிருந்த முகத் துவாரம் சங்கமுகக் கடலில் அவள் தந்து சிறு வயதில் சில தோழிகளுடன் நீராடி இருக்கிறாள். அப்போது அவளுக்கு நீச்சலுடை என்று ஒன்று இருப்பது கூடத் தெரியாது. மேற்சட்டையைக் கழற்றிவிட்டுத் தொள தொளவென்ற பாவாடையை நெஞ்சுக்கு மேல் உயர்த்திக் குறுக்குக் கட்டாகக் கட்டிக் கொண்டு அன்று நீராடியதற்கும், இன்றைய கல்கிசை நீராட்டத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்? உடலை இதமாக இறுக்கிக் கொண்டிருக்கும் நீச்சலுடையில் மேல்நாட்டு நங்கையர் போல ஆணழகன் ஒருவனுடன் ஒரு நாள் இப்படி உல்லாசமாகக் கடலாடும் வாய்ப்புத் தனக்கு வரும் என்று கூட அப்பொழுது அவள் எண்ணியிருக்க முடியுமா? அவள் பெரிய பிள்ளையாகி ஒரு சில மாதங்களில் ஒரு சினிமா படத்திற்குப் போன போது தான் முதன் முதலாக நீச்சலுடைச் சிங்காரிகளை அவள் அப்படத்தில் பார்த்தாள். அதன் பயனாக அன்றிரவு வெகு நேரம் வரை அவளுக்கு நித்திரை வரவில்லை. தானும் நீச்சலுடை அணிந்துக் கொண்டு எங்கெங்கோ போய் வருவது போலவும் பல ஆடவர்கள் தன்னைத் தொடர்ந்து திரிந்து மொய்த்துக் கொண்டிருப்பது போலவும் மனத் திரையில் பகற் கனவுகள் தோன்றித் தோன்றி வந்து கொண்டிருந்தன. அவர்களில் ஒரு சிலருடன் தான் உல்லாசமாகப் பேசி மகிழ்வது போலவும் மற்றும் சிலரை ஏசி விரட்டுவது போலவும் காட்சிகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்தப் பகற் கனவு அனுபவம் அன்றிரவோடு முடிவடைந்து விடவில்லை. அன்று ஆரம்பித்த இக்கனவுகள் பின்னர் அடிக்கடி அவள் நேரத்தைப் பிடிக்க ஆரம்பித்தன. ஓய்வு நேரங்களிலெல்லாம் கட்டிலிலே படுத்துக் கண்ணை மூடிக் கொண்டு தானாகவே வலிந்து பகற் கனவு காணும் பழக்கத்தை மேற் கொண்டாள் அவள். இந்தப் பழக்கம் ஒரு நாள் கொள்ளுப்பிட்டிக் கடற்கரையில் அவள் நேரில் சில பெண்கள் நீச்சலுடையில் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டதால் மேலும் வலுப்பெற்றது. உள்மனதின் ஆசையில் பிறந்த இக்கனவு எவ்வளவு சீக்கிரமாகவும் இலகுவாகவும் இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் வெறும் கனவாகவே முடியும் என்று தான் அவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவை இப்பொழுது உண்மையாகவல்லவா நடந்து கொண்டிருக்கின்றன? பத்மாவால் அன்று காலையிலிருந்து நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளை உண்மை என்றே நம்ப முடியவில்லை. ஏதோ சினிமாப் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமைதான் அவளுக்கு ஏற்பட்டது. வாழ்க்கை இவ்வளவு இனிமையானதா என்று ஆச்சரியப்பட்டாள் அவள்.

தண்ணீரில் இறங்க அஞ்சிய பத்மாவை ஸ்ரீதர் "பயப்படாதே பத்மா! நான் உனக்கு நீந்தப் பழக்குகிறேன். இறங்கு" என்று பல தடவை சொல்லியும் அவள் கேட்காமல் போகவே, ஸ்ரீதர் அவளை முரட்டுத்தனமாகத் தன் கரத்தால் பற்றித் தண்ணீருள் இழுத்துச் சென்று விட்டான். முதலில் பத்மா இதனை எதிர்த்துச் சிணுங்கிக் கூச்சலிட்ட போதிலும், பின்னால் சிரித்த முகத்துடன் அவன் தோள்களைப் பற்றிக் கொண்டு, "எனக்குப் பயமாயிருக்கிறது! நீந்தச் சொல்லித் தாருங்கள்" என்று உற்சாகமாகச் சப்தமிட்டாள்.தண்ணீரில் இறங்க அஞ்சிய பத்மாவை ஸ்ரீதர் "பயப்படாதே பத்மா! நான் உனக்கு நீந்தப் பழக்குகிறேன். இறங்கு" என்று பல தடவை சொல்லியும் அவள் கேட்காமல் போகவே, ஸ்ரீதர் அவளை முரட்டுத்தனமாகத் தன் கரத்தால் பற்றித் தண்ணீருள் இழுத்துச் சென்று விட்டான். முதலில் பத்மா இதனை எதிர்த்துச் சிணுங்கிக் கூச்சலிட்ட போதிலும், பின்னால் சிரித்த முகத்துடன் அவன் தோள்களைப் பற்றிக் கொண்டு, "எனக்குப் பயமாயிருக்கிறது! நீந்தச் சொல்லித் தாருங்கள்" என்று உற்சாகமாகச் சப்தமிட்டாள்.

ஸ்ரீதரும் அவளுக்கு நீச்சற் கலையைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினான். பத்மாவும் வெகு விரைவாகவும் கவனமாகவும் அவன் சொல்லிக் கொடுத்தபடி நீந்தும் கலையைக் கற்க ஆரம்பித்தாள். ஸ்ரீதர் நீந்துவதை முறையாக ஒரு நீச்சல் வாத்தியாரிடம் கற்றிருந்தபடியால் பத்மாவுக்கு நீந்தச் சொல்லிக் கொடுப்பது அவனுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. பத்மாவோ வெகு விரைவில் நீந்தத் தொடங்கி விட்டாள். எவரும் தான் ஆசைப்படும் எதையும் மிகவும் விரைவில் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அவள் நீந்தக் கற்ற வேகம் நல்ல நிரூபணமாய் இருந்தது.

"பத்மா, நீ மிகவும் கெட்டிக்காரி. நீ நீச்சலை விரைவாகக் கற்கும் வேகத்தைப் பார்த்தால் சில நாட்களில் நீ மீன்களை விட நன்றாக நீந்தத் தொடங்கி விடுவாய்!" என்றான் ஸ்ரீதர்.

"அப்படித்தான் என் வேலை எல்லாம்! என்ன நீனைத்தீர்கள் பத்மாவைப் பற்றி? எதில் ஈடுபட்டாலும், அதை விரைவில் பயின்று விடுவேன். அப்பா கூட என்னை அப்படிச் சொல்லி மெச்சியிருக்கிறார்." என்றாள் பத்மா பெருமையாக.

"நிறுத்து. நீ நீந்தப் பழகியது உன்னுடைய கெட்டித்தனமல்ல. வாத்தியார் ஸ்ரீதர் நன்றாகச் சொல்லிக் கொடுத்தார். அதுதான் மாணவி இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டாள்" என்றான் ஸ்ரீதர்.

"ஆனால் மாணவி மக்காய் இருந்தால் எப்படிக் கற்றுக் கொள்ளுவாளாம்" என்றாள் பத்மா. இவ்வாறு கூறிக் கொண்டே கைகளையும் கால்களையும் ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்த பிரகாரம் முறையாக அசைந்து நீரின் மேல் மிதந்தாள் பத்மா. பின்னர் நீச்சலை நிறுத்தி விட்டு அவன் தோள்களை ஆசையோடு கட்டிக் கொண்டாள் அவள்.

அதிகார் அம்பலவாணரும் வள்ளியாச்சியும் அவர்களின் உல்லாசக் கோலத்தைத் தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வள்ளியாச்சிக்கு ஸ்ரீதர் - பத்மாவின் போக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. "பாருங்கள் ஸ்ரீதராவது பரவாயில்லை. அந்தப் பெண்ணுக்குத் தான் கொஞ்சமும் வெட்கமேயில்லை. தேகமெல்லாம் தெரியும் நீச்சலுடை. அவனும் அப்படி. இந்த நிலையில் அந்த முத்தின குமரி எப்படி அவனைக் கட்டிப் பிடித்துக் கொட்டம் போடுகிறாள். பாருங்கள்!" என்றாள் எரிச்சலுடன்.

அம்பலவாணர் புன்னகை பூத்தார். சமீப காலமாக அவர் தமிழிலக்கியப் படிப்பில் ஈடுபட்டிருந்ததால் பழைய காலத்து நீர் விளையாட்டைப் பற்றியும் புகார் நகரத்து இந்திர விழாவைப் பற்றியும் கூற ஆரம்பித்தார் அவர்.

"உனக்குத் தெரியுமா டார்லிங். சிலப்பதிகாரத்திலே இந்திர விழா என்று ஒன்று வருகிறது! இந்திர விழாவென்றால் என்ன? - ’பீச் கார்னிவல்’, கடற்கரைக் களியாட்டு. இந்த டைகர் கிளப் இன்று நடத்துகிற களியாட்டு மாதிரி. அன்று அரசர்கள் ஆதரவில் நடந்த பீச் கார்னிவல் அது. அதில் முக்கிய வைபவம் இன்று இங்கு நடப்பது போலக் கன்னியரும் காளையரும் கடலாடுவதுதான். கடலாடு காதையில் கோவலனும் மாதவியும் இந்திர விழாவுக்குப் போனது சொல்லப்பட்டிருக்கிறது. எங்களுடைய ஸ்ரீதரையும் இந்தப் பெட்டையையும் போல அன்றைக்கும் எத்தனை ஜோடிகள் இப்படிக் கும்மாளமடித்ததோ யாருக்குத் தெரியும்?"

"ஆம் கழிசடை வேலைகளுக்கு இந்தக் காலம் அந்தக் காலமென்று இருக்குதா? நடந்திருக்கும்" என்றாள் வள்ளியாச்சி.

"என்ன அப்படிச் சொல்கிறாய் டார்லிங்! நீ மறந்திட்டாயா, நாங்கள் இங்கிலாந்துக்குப் போனபோது அங்கே பிரைட்டன் கடற்கரையில், ஈர மணலில், ஸ்நான உடையில்..."

வள்ளியாச்சி அதிகாரைக் கடைக் கண்னால் பார்த்துவிட்டுச் சிரித்தாள். "அதை ஏன் இப்போது ஞாபகமூட்டுகிறீர்கள்? அப்படியானால் வாருங்கள். நாங்களும் ஜோடியாக தண்ணீரில் இறங்குவோம்"

அம்பலவாணருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. புன்னகை செய்து கொண்டே கம்ப ராமாயணத்திலிருந்து நீர் விளையாட்டைப் பற்றிய ஒரு பாட்டை எடுத்து விட்டார்.

"தாளையே கமலத்தாளின் மார்புறத் தழுவுவாரும்
தோளையே பற்றி வெற்றித் திருவெனத் தோன்றுவாரும்
பாளையே விரிந்ததென்னப் பாந்தநீர் உந்துவாரும் 
வாளைமீன் உகள அஞ்சி மைந்தரைத் தழுவுவாரும்"

என்று இப்படிப் போகிறது பாட்டு. பொருளென்ன தெரியமா? சில பெண்கள் தமது தலைவர்களின் மார்பைத் தழுவுகிறார்களாம். இன்னும் சிலர் தோள்களைத் தழுவுகிறார்கள். மற்றும் சிலர் தண்ணீரைக் கமுகம் பாளை போல் விரியும்படி எற்றி விளையாடுகிறார்கள். ஒரு சில பெண்கள் வாளை மீன்களைக் கண்டு பயந்து தம் காதலரைக் கட்டிக் கொள்கிறார்களாம். தோளையே பற்றி வெற்றித் திருவெனத் தோன்றுவாரும்- என்பது இப்பொழுது நீ கண்ட காட்சியைத் தான். அதாவது அந்தப் பெட்டை ஸ்ரீதரின் தோளைப் பிடித்துக் கொண்டு ஆடிய ஆட்டத்தைத் தான் குறிக்கிறது. தோளைப் பற்றிக் கொண்டு இலட்சுமி போல் தோன்றினார்களாம். பல பெண்கள், நீர் விளையாட்டின் போது, நீர் விளையாட்டுப் படலத்தில் வருகிறது. கம்பர் பாடியிருக்கிறார்" என்று பேசிக் கொண்டே போனார் அதிகார்.

இதற்கிடையில் பத்மாவும் ஸ்ரீதரும் கடலாடிய அலுப்பு நீங்க, கடற்கரை மணலுக்கு ஓடி வந்து மணலில் சிறிது சாய்ந்தனர். நிலத்தோடு நிலமாக மணலில் வீழ்ந்து கிடந்தமை பத்மாவுக்கு மிருகங்கள் அனுபவிப்பது போன்ற ஒரு புதுமையான உடலின்பத்தைத் தந்தது. அதில் மெய் மறந்த பத்மா, "ஸ்ரீதர் டார்லிங்! நாங்கள் என்றுமே இப்படி இன்பக் கடலிலே திளைத்திருப்போமா?" என்று போதை நிறைந்த குரலில் கேட்டாள்.

"சந்தேகமா? நாம் எப்பொழுதும் இப்படித்தான் இருப்போம்" என்று முனகினான் ஸ்ரீதர்.

இவ்வாறு அவர்கள் தம்மை மறந்து இருந்த வேளையில் விமானத்திலிருந்த வீசப்பட்ட நோட்டீசில் கூறப்பட்ட பிரகாரம் நீச்சலழகி ஆரம்பத் தேர்வு நீதிபதிகள் கிளம்பி வந்து கொண்டிருந்தார்கள். ‘புல் சூட்’ அணிந்திருந்த அவர்களின் கோட்டில் காகிதத்தில் அச்சிடப்பட்ட புலிப் படமும் ‘டைகர் கிளப்’ என்ற ஆங்கில வார்த்தைகளும் காணப்பட்டன.

அவர்கள் ஸ்ரீதர் - பத்மா ஜோடியைக் கண்டதும் தம் முன் ஏதோ பேசிவிட்டு அவர்களை நோக்கி வந்தார்கள். அந்த நடுவர்களில் ஒருவர் ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு "எவ்வளவு அழகான ஜோடி! உம்முடைய தோழி நிச்சயம் முதற் பரிசைப் பெறுவார். அவர் கட்டாயம் நீச்சலழகிப் போட்டியில் பங்குபற்ற வேண்டும். உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்." என்றார்.

ஸ்ரீதர் திடுக்கிட்டுவிட்டான். பத்மாவும் அப்படியே. என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்த போதிலும் பத்மாவைப் பொறுத்த வரையில் அவள் எதற்கும் தயாராகவே இருந்தாள். சிறு வயதிலிருந்தே எந்தப் புதிய நாகரிகச் செய்கையையும் செய்து பார்ப்பதில் அவளுக்கு ஆசை. தலை மயிரைக் கூடக் குட்டையாக வெட்டி "பொப்’ செய்து கொள்ள வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். ஆனால் சந்தர்ப்ப சூழல்கள் சரியாக வாய்க்க வேண்டுமே? நீச்சலுடைகளைப் பொறுத்த வரையில் சந்தர்ப்ப சூழல்கள் சரியாக வாய்த்துவிட்டன. இப்பொழுது அதைத் தொடர்ந்து அழகு ராணிப் போட்டிக்கும் சந்தர்ப்பம் வந்து வாசலில் தட்டுகிறது. இருந்தாலும் பெண்மைக்கு இயற்கையான நாணமும், ஸ்திரீகளுக்கே இயற்கையான சாகசமும் அவளை அவளது சம்மதத்தை உடனடியாகத் தெரிவிக்கக் கூடாதென்று தடுக்கின்றன. ஆகவே தனக்கு அப்போட்டியில் பங்குபற்றச் சிறிது கூடவிருப்பமில்லை என்பது போன்ற ஒரு குறிப்பை முகத்தில் படர விட்டு, மெளனமாயிருந்தாள் அவள்.

நடுவர்களில் ஒருவர் மீண்டும் ஸ்ரீதரைப் பார்த்து "உண்மையில் உங்கள் தோழி முதலிடம் பெறுவது நிச்சயம். நீங்கள் தான் அவரைப் போட்டியில் பங்குபற்ற வற்புறுத்த வேண்டும்" என்றார்.

ஸ்ரீதர் பத்மாவை நோக்கி "பத்மா! நீ என்ன சொல்கிறாய்" என்று கேட்டான். அவளோ பதிலுக்கு "முடியாது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டாள். அவள் பேசிய தோரணையில் பத்மாவுக்குப் போட்டியில் பங்குபற்ற ஆசைதான் என்பது ஸ்ரீதருக்குப் புரியவில்லை.

என்றாலும் ஸ்ரீதர் சிறிது நேரம் யோசித்துவிட்டு நடுவர்களிடம் "போட்டி இரண்டு மணிக்குத்தானே? அதற்கிடையி எங்கள் முடிவை அறிவிக்கிறோம். சிறிது யோசிக்க அவகாசம் தாருங்கள்." என்றான். அவர்களோ "இதில் என்ன யோசிக்க இருக்கிறது. கட்டாயம் பங்குபற்ற வேண்டும்." என்று கூறிவிட்டுச் சென்றார்கள். போகு முன்னர், பத்மா பரமானந்த் என்று அவளது பெயரை ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டார்கள்.

ஸ்ரீதருக்கு தலை சுற்றியது. பத்மாவிடம் "பொதுவாகத் தமிழ்ப் பெண்கள் இப்படிப்பட்ட அழகு ராணிப் போட்டிகளில் பங்குபற்றுவது குறைவு. மேலும், அவர்கள் நீச்சலுடையை அணியலமா, அது தமிழ்ப் பண்பா என்பது பற்றி இன்று பத்திரிகைகளில் கூட விவாதம் நடக்கிறது. அதுதான் நான் யோசிக்கிறேன். எதற்கும் சுரேஷிற்கு டெலிபோன் செய்து, வீட்டிலிருந்தால் அவனை உடனே வரவழைத்து, விஷயத்தை அவனுடன் கலந்தாலோசிப்போம்," என்று சொல்லிக் கொண்டே அவளையும் அழைத்துக் கொண்டு ஹோட்டலை நோக்கி நடந்தான் அவள்.

அதிர்ஷ்டவசமாக சுரேஷ் "கிஷ்கிஷ்ந்தா"வில் இருந்தான். "சுரேஷ்! உடனே டாக்சி எடுத்துக் கொண்டு கல்கிசை ஹோட்டலுக்கு வா. அவசரமான விஷயம்." என்றான் ஸ்ரீதர்.

"என்ன அவ்வளவு அவசரம்?"

"வா சொல்லுகிறேன். உடனே கிளம்பு"

இவ்வாறு சொல்லி டெலிபோனை வைத்துவிட்டு மத்தியான உணவருந்துவதற்காக ஹோட்டல் நந்தவனத்தில் தென்னை மரங்களின் கீழ் இடப்பட்டிருந்த மேசைகளை நாடிச் சென்றான் ஸ்ரீதர். அல்பேர்ட் கிழவன் ஓடோடி வந்து மத்தியான உணவுக்கு ஏற்பாடு செய்யலானான்.

பத்மாவும் ஸ்ரீதரும் ஹோட்டல் ஸ்நான மண்டபத்துக்குப் போய் உப்புத் தண்ணீரின் பிசுபிசுப்பைக் கழுவ அங்கிருந்த சுத்த நீர் ‘ஷவர் பாத்’தில் குளித்த பின்னர், துவாய்களால் உடம்பைத் துடைத்து விட்டுக் கொண்டே, ஈர ஸ்நான உடைகளை மாற்றிக் கொள்ளாமலேயே மேசையில் வந்து உட்கார்ந்தார்கள் கடலாடிய ஆடவர் அரிவையரில் பலர் அவ்வாறு ஈர உடையிலேயே பானங்களையும் உணவையும் அருந்திக் கொண்டிருந்தார்கள்.

பத்மா கழுவிவிடப்பட்ட ஒரு தந்தப் பொம்மை போல நாற்காலியில் செளகரியமாகச் சாய்ந்து கொண்டு வானத்தை நோக்கியவண்ணம் அன்றைய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக இரை மீட்க ஆரம்பித்தாள். "எத்தகைய இன்பமான நாள்! ஸ்ரீதரும் நானும் எவ்வளவு களிப்பாகக் காலத்தைக் கழித்தோம்! நீச்சலுடை அணிந்து கொண்டதுடன் நீந்தவுமல்லவா கற்றுக் கொண்டேன்? இனி ஒவ்வொரு நாளுமே இப்படிச் செய்ய வேண்டும் போலிருக்கிறது. ஸ்ரீதரும் நானும் என்றென்றும் நீச்சலுடையில் கடற்கரை மணலில் புரள்வதும், அம்மணலைக் கழுவக் கடலில் நீந்துவதும், உப்பு நீரின் பிசுபிசுப்பைப் போக்க ஷவர் பாத்தில் குளிப்பதும், வாய்க்கினிய உணவுகளை உன்பதும் கடற்காற்று உடல் முழுவதையும் தழுவிச் செல்ல இப்படி வீற்றிருப்பதுமாகா... ஆகா இப்படியே காலம் போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? என் இன்பத்துக்கு ஓர் எல்லையே இல்லை போலிருக்கிறது. காளிதாஸ் கடை விற்பனையாளன் என்னை உலக அழகி ராணியோடு ஒப்பிட்டான். இப்பொழுது நீச்சல் ராணிப் போட்டிக்கே அழைக்கப்பட்டு விட்டேன். ஆனால் ஒன்று நான் இதில் பங்குபற்றினால் அச்செய்தி பத்திரிகைகளில் கட்டாயம் வெளிவரும். அவ்விதம் வெளி வந்தால் நான் அது பற்றி அப்பாவுக்கு என்ன சொல்வது? தோட்டம் முழுக்க எனது நீச்சலுடைக்காக என்னைக் கண்டிக்கும். அன்னம்மாக்கா கூடக் கண்டிப்பாளோ? என்னவோ? அப்பாவை எப்ப்டியோ சமாளித்துவிடலாம். ‘ஸ்ரீதர் சொன்னான் நான் செய்தேன்’ - என்றால் அவர் அதற்கு மேல் ஒன்றும் பேசமாட்டார்.  நமது தமிழர்கள் தமிழ்ப் பண்பு, தமிழ்ப் பண்பு என்று ஏதோ பேசுகிறார்கள். அவர்களைப் போன்ற புதுமையான சமுதாயத்தினர் வேறு எவருமே இவ்வுலகில் இல்லை. தங்கள் வீட்டுப் பெண்ணிடம் அப்படி உடுத்தாதே, இப்படி உடுத்தாதே, கழுத்தைத் தாழ்த்தி வெட்டாதே, இடையை இவ்வளவுக்கு மேல் காட்டாதே என்றெல்லாம் கூறும் அவர்கள் தங்கள் சினிமாக் கதா நாயகிகள் மட்டும் எப்படி உடுத்தினாலும் மெச்சிக் கொள்ளூகிறார்கள். தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் சினிமா நடிகையரின் கவர்ச்சிப் படங்களில் அவர்கள் எப்படி எப்படி எல்லாம் நீச்சலுடைகளில் பாம்பு போல் நெளிந்து கொண்டு நிற்கிறார்கள். வீட்டிலுள்ள இளம்பெண் இதில் நூறில் ஒரு பகுதி செய்துவிட்டால் போதும். கோபித்துக் கொள்கிறார்கள்" என்றெல்லாம் யோசித்தாள்.

ஸ்ரீதர் எதிர்பார்த்திருக்கும் அவனது நண்பனான டாக்டர் சுரேசைப் பற்றி அவன் எப்படிப்பட்டவனோ, என்ன ஆலோசனை கூறுவானோ என்று கூடப் பத்மா பயப்பட்டாள். "ஒரு வேளை வாழ்க்கையைச் சுவைக்கத் தெரியாத இன்றைய இலட்சிய இளைஞர்கள் பலரைப் போல அவனும் பெண்களைப் பிற்போக்கான நிலையில் வைத்திருக்க விரும்பும் ஒரு மடையனாய் இருந்தால் என்ன செய்வது?" என்று கூட அவள் எண்ணினாள். இருந்தாலும் தனது சிந்தனைகள வெளிக் காட்டாமல் ஸ்ரீதரின் அழகிய முகத்தைப் பார்த்து அதன் கவர்ச்சியைத் தன் மனதால் பருகிக் கொண்டிருந்தாள் அவள்.

ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவன் கண்களை மூடிக் கொண்டு காற்றில் அலையாடிய தென்னங் கீற்றுகளின் ‘உர்’ரென்ற சப்தத்தையும், களியாட்டக்காரர்கள் எழுப்பிய பல்வேறு ஓசைகளையும், கடலின் ஓங்கார நாதத்தையும் மனமார அனுபவித்துக் கொண்டிருந்தான். சுரேஷ் வரும் வரை அப்படியே இருப்பதென்று முடிவு கட்டிவிட்டான் அவன்.

பத்மா திடீரென, "ஸ்ரீதர்! இதோ பாருங்கள் தென்னங் குற்றியிலிருந்த எறும்புகள் செய்த வேலையை!" என்று கொண்டே எறும்புக் கடியால் தன்னுடம்பில் இரண்டு இடங்களில் ஏற்பட்டிருந்த சிவந்த தழும்புகளைத் தன் கால்கால் ஸ்ரீதருக்குத் தொட்டுக் காட்டினாள்.

ஸ்ரீதர் "பேசாமலிரு பத்மா. இல்லாவிட்டால் இன்னும் சில எறும்புகளைக் கொண்டு வந்து கடிக்க விட்டுவிடுவேன்" என்றான். தன் அமைதியை அவள் குலைப்பது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. "தென்னங்குற்றியிலிருந்த எறும்புகள் சிறியவை. நான் கட்டெறும்புகளைக் கொண்டு வந்து கடிக்க விடுவேன்" என்றான் அவன்.

பத்மாவுக்கு ஸ்ரீதர் தன் எறும்புக் கடித் தழும்புகளைப் பார்க்க மறுத்ததும், கோபத்தை உண்டு பண்ணியது. தன் காதலிக்குச் சிறிது நோவென்றால் கூடத் துள்ளி எழுந்து பார்ப்பவனல்லவா உண்மைக் காதலன் என்று நினைத்துக் கொண்டே அவள் பேசாது மெளனமாயிருந்தாள்.

அவள் இவ்வாறு அமைதியுற்றதைக் கண்ட ஸ்ரீதருக்கு அவள் மீது அனுதாபம் ஏற்பட்டது. கண்ணை விழித்துக் கொண்டு "எறும்பு எங்கே கடித்தது?" என்று கேட்டுக் கொண்டு அவள் சுட்டிக் காட்டிய இடங்களை எல்லாம் தன் கரங்களால் தடவி விட்டான். அவளுக்குத் தாங்க முடியாத கூச்சம். என்றாலும் ஸ்பரிச சுக அனுபவத்தினால், மேலும் மேலும் கடிக்காத இடங்களையும் கடித்ததாகக் காட்டிக் கொண்டிருந்தாள். ஸ்ரீதர் அவளது பொய்யைப் புரிந்து கொண்டானாயினும் ஒன்றுமறியாதவன் போல் அவள் காட்டிய இடங்களை மேலும் மேலும் தடவி கொண்டேயிருந்தான். இடையிடையே அவளை மெல்ல துள்ளவும் அவன். "கட்டெறும்பு கடிகிறது" என்று செல்லமாக வாயைக் குவித்து முனகினான் அவன்.


10-ம் அத்தியாயம்: நீச்சல் அழகி  (தொடர்ச்சி)

ஒரு சில நிமிஷ நேரத்தில் பத்மா தன் முகத்தையும் தலையையும் சரி செய்து கொண்டு புதிய நீச்சலுடையில் போட்டி நடக்கும் இடத்துக்கு ஸ்ரீதருடன் சென்ற போது, உண்மையில் ஒரு மாய மோகினியாக, அதிசய கவச்சிப் பாவையாகக் காட்சியளித்தாள். அவள் இப்போது அணிந்திருந்த நீச்சலுடை ‘பிக்கினி’ அல்லாவிட்டாலும் பார்க்க மிகக் குறைந்த துணியில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். சற்று மேலேறிய கால்களுடனும், முன்னால் இன்னும் அதிகமாகத் தாழ்த்திறங்கிய கழுத்துடனும் பின்னால் முதுகுப் புறத்தின் பெரும் பகுதியை நன்கு காட்டுவதாகவும் மிகவும் நாகரிகமாகவும் அழகாகவும் அமைந்திருந்தன. அதிகார் அம்பலவாணர் முன் வரிசை ஆசனத்தில் தமது வெள்ளி மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்து மாட்டிக் கொண்டு நடுவர்களுக்கு நாயகமாக வீற்றிருந்தார். ஒவ்வோர் அழகியும் தனியாகப் பவனி வந்த காட்சியைப் பார்த்து, தம்மிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தில் புள்ளி போட்டுக் கொண்டிருந்த அவர் ஐந்தாவது அழகி பத்மாவைக் கண்டதும் "ஓஹோ! ஸ்ரீதரின் சரக்கு! இவள்தான் மிக அழகாயிருக்கிறாள்" என்று புள்ளிகளை மிகவும் அதிகமாகவே அவளுக்குக் கொடுத்துவிட்டார். உண்மையில் கடற்கரையில் பார்த்ததை விட இப்பொழுது அவளது எழில் இன்னும் பல மடங்காகவே அவருக்குத் தெரிந்ததுஇதற்கிடையில் அல்பேர்ட் புகை கிளம்பிக் கொண்டிருந்த சூடான நண்டுணவை மேசை மீது கொண்டு வந்து பரப்பினான். இருவரும் ஆசையோடு அதனை உண்ண ஆரம்பித்தனர். அவர்கள் சாப்பாட்டை முடித்துப் பழக்கலவையை அருந்திக் கொண்டிருந்த போது, சுரேஷ் அங்கு திடீரெனத் தோன்றினான். "வா சுரேஷ்! இது தான் என் காதலி பத்மா. உனக்குத் தெரிந்த என் சகுந்தலை! இது தான் டாக்டர் சுரேஷ். நான் உன்னிடம் அடிக்கடி குறிப்பிட்டுப் பேசுவேனே அந்த நண்பன்!" என்று சுரேஷையும் பத்மாவையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் பண்ணி வைத்தான் ஸ்ரீதர்.

இருவரும் ஒருவர் கையை ஒருவர் குலுக்கிக் கொண்டார்கள்.

பின் சுரேஷிடம் நீச்சல் அழகிப் போட்டி விவரங்களையும் தன் முன்னிருந்த பிரச்சினையையும் கூறினான் ஸ்ரீதர். சுரேஷ் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"தமிழ்ப் பெண்கள் நீச்சலுடையை அணிவது தமிழ்ப் பண்புக்கு இழுக்கென்கிறார்களே, அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றான் ஸ்ரீதர்.

"என்னைப் பொறுத்த வரையில் இந்தத் தமிழ்ப் பண்பு என்ற சொற்கள் இருக்கின்றனவே அவை மிகவும் ஆச்சரியமான வார்த்தைகள் என்று நான் கருதுகிறேன். என்னுடைய பாட்டனார் சிங்கப்பூருக்குப் போய்விட்டு வந்த போது, தன் குடுமியை வெட்டிவிட்டு வந்ததால் அவர் தமிழ்ப் பண்பை முற்றாகாக் கொன்றுவிட்டார் என்று கருதிய அவரது தகப்பனார் அதன் பின், சாகும்வரை அவருடன் பேசியதே இல்லையாம். அதன்படி இச்சந்தர்ப்பத்தில் தமிழ்ப் பண்பென்பது தலைமயிர் விவகாரம். ஒருவனது குடுமிக்குள் அடங்கும் விவகாரம். ஆனால் நீயோ அதை இப்பொழுது ஒரு நீச்சலுடை விவ்காரமாக்கப் பார்க்கிறாய்! சொல்லப் போனால் குடுமி இல்லாத எங்களுக்குத் தமிழ்ப் பண்பைப் பற்றிப் பேசக் கூட அருகதையுண்டா? என்னுடைய பூட்டனார் கருத்துப்படி தலைமயிர் வெட்டியவன் "முழிவியழத்து"க்குக் கூட அருகதையற்றவன்" என்றான் சுரேஷ் சிரித்துக் கொண்டு.

"உன் பகடிப் பேச்சை விட்டுவிட்டு இப்போது கைமேலுள்ள பிரச்சினைக்குப் பதில் சொல்லு" என்றான் ஸ்ரீதர்.

"அதுதான் சொல்லுகிறேன். இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. இன்று தலைமயிர் வெட்டுவதும் தமிழ்ப் பண்பாகிவிட்டது - ஆண்கள் விஷயத்திலாவது! கொஞ்ச நாளில் பெண்கள் விஷயத்திலும் அது சரியாய்ப் போய்விடும். அது போல் தான் நீச்சலுடையும்! இப்பொழுது நீச்சலுடை அணிவது தமிழ்ப் பண்பல்ல. ஆனால் கொஞ்ச நாள் போனதும் அது தமிழ்ப் பண்பாகிவிடும். அதாவது எல்லோரும் அணிய ஆரம்பித்ததும்!" என்றான் சுரேஷ்.

ஸ்ரீதருக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. ஆகவே சுரேஷை மேலும் பேசும்படி ஊக்கிக் கொண்டேயிருந்தான்.

"என்னைப் பொறுத்தவரையில் உடைகள் உடம்பின் எந்தப் பாகத்தையும் மற்றவர்கள் பார்க்காமல் இருக்க வேண்டுமென்பதற்காக மட்டும் அணிபவையல்ல. குளிர், வெப்பம் என்பவற்றிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கே உடைகள். இதில் நாம் பார்க்க வேண்டியது தமிழ்ப் பண்பல்ல. சுகாதாரப் பண்பு. நீச்சலுடையைப் பொறுத்தவரையில், அது நீந்தும்போது அணியப்படுகிறது. நீந்தும் போது நீச்சலுடையை அணிய வேண்டாமென்பவர்கள் ஒன்றுமே அணிய வேண்டாமென்றால், அது பொருத்தமே. ஏனெனில் குளிக்கும்போது ஒன்றுமணியாமல் குளிப்பது உடம்பை நன்கு சுத்தம் செய்து கொள்வதற்கு உதவியாயிருக்கும். ஆனால் நீச்சலுடையை அணிய வேண்டாம், பதினாறு முழச் சேலையைதான் நீந்தும்போது அணிய வேண்டும் என்பவர்கள் என்ன பண்பு பேசினாலும் சுகாதாரப் பண்புக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்" என்றான் சுரேஷ்.

பத்மா, சுரேஷின் வார்த்தைகளைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"சிலர் இந்தத் தொல்லையான பிரச்சினையைத் தீர்ப்பது கடினமாயிருப்பதால் பெண்கள் நீந்தவே கூடாது என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் அப்படி மனித இனத்தின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துவது, அவர்களது சுதந்திரத்தை மறுப்பதாகும்."

ஸ்ரீதர், "நீ சொல்வது நியாயமாகத்தான் படுகிறது. ஆனால் பெண்கள் நீச்சலுடையை அணிந்து கொண்டு நீந்தப் போவதற்குப் பதிலாக மேடைகளில் ஆண்களின் முன் தம் அங்கங்களைக் காட்டுவதற்காகப் போவது சரியா? அது தவறுதானே?" என்றான்.

சுரேஷ் அதனை ஒப்புக் கொண்டான். "பெண்கள் தங்கள் அங்கங்களைக் காட்டி ஆண்களைக் கவர முயல்வது தப்புத்தான். ஆனால் வேறு கவர்ச்சிக்கரமான பண்புகளில்லாதவர்கள் அந்தக் காரியங்களில் ஈடுபடுவார்கள். சிந்தனா சக்தியோ, பேச்சுத் திறனோ, அறிவாற்றலோ, கலைத் திறனோ உள்ள பெண் அவற்றால் தான் ஆணையோ பெண்ணையோ கவரப் பார்ப்பாள்" என்றான்.

ஸ்ரீதர், "நீ சொல்வதெல்லாம் சரி சுரேஷ். ஆனால் போட்டிக்குரிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பத்மா என்ன செய்ய வேண்டும்? நீச்சலுடையை அணியலாமா" என்று கேட்டான், அவசரமாக.  சுரேஷ், பத்மாவை ஒரு தரம் ஏற இறங்கப் பார்த்து அவள் அழகை இரசித்தவண்ணமே, "இது என்ன கேள்வி ஸ்ரீதர்! பத்மா ஏற்கனவே நீச்சலுடையில்தானே இருக்கிறாள்?" என்றான்.

ஸ்ரீதருக்குக் கோபம் வந்தது. "நீ என்ன சொல்கிறாய் சுரேஷ்? அவள் இது வரை நீச்சலுடை அணிந்தது நீந்துவதற்கு. இப்பொழுது அழகுப்

போட்டிக்கு அதை அணியலாமா என்பதுதான் கேள்வி?" என்றான்.

"அதற்கு நான் ஏற்கனவே பதிலளித்துவிட்டேன். கூடாது. ஆனாலும் அது உலகில் ஒரு நாகரிகமாகப் பரவிவிட்டபடியால் அதைச் செய்வதில் பிழையுமில்லை. ஊர் செய்வதை நாமும் செய்யலாம். இன்னும் இந்த விஷயத்தைப் பத்மாவும் நீயும் தீர்ப்பதுதான் சரி"என்றான் சுரேஷ்.

"அது கஷ்டமாயிருப்பதனால் தானே உன்னை அழைத்தேன். உன் தீர்ப்பே முடிவானது. சொல்லு" என்றான் ஸ்ரீதர்.

சுரேசுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்கு மகா அலெக்ஸாந்தரின் ஞாபகம் வந்தது.

"ஸ்ரீதர்! நான் ஒரு கதை சொல்லட்டுமா? இந்தியாவை வெற்றிக் கொண்ட கிரேக்க மன்னனான மகா அலெக்ஸாந்தர் தன் பிரயாணங்களின் போது கோர்டியஸ் என்ற மன்னனைச் சந்தித்தானாம். அவள் அலெக்ஸாந்தருக்கு முன் ஒரு பெரிய கயிற்று முடிச்சை வைத்து ‘இந்த முடிச்சை உன்னால் நீக்க முடியுமா?’ என்றானாம். அலெக்ஸாந்தர் "ஏன் முடியாது? இதோ பாருங்கள்" என்று சொல்லி முடிச்சைத் தன் கரங்களால் விடுவிக்க முயன்றான். முடியவில்லை. உடனே தன் வாளை உறையிலிருந்து நீக்கிக் கயிற்றை அதனால் ஒரே வெட்டாக வெட்டி முடிச்சை அவிழித்தான். இதே முடிச்சு முன்னரும் பல பேரிடம் இதே மன்னனால் அவிழ்ப்பதற்காகக் கொடுக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் முடிச்சை முறையாக அவிழ்க்க முயன்று தோல்வி அடைந்தார்களேயல்லாமல், ஒருத்தராவது அலெக்ஸாந்தர் கையாண்ட குறுக்கு வழியை அனுஷ்டிக்கவில்லை. அலெக்ஸாந்தரின் துரித முடிவுக்காகவும் செயல் திறமைக்காகவும் எல்லோரும் அவனைப் பாராட்டினர். பார்த்தாயா, ஆளப் பிறந்தவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசத்தை? அலெக்ஸாந்தரின் செயல் அவன் ஆளப் பிறந்தவன் என்பதைக் காட்டுகிறது. இதை நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா?"

"தெரிகிறது. நாமும் ஏதாவது குறுக்கு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்கிறாய்."

"சரி. நான் ஒரு வழி சொல்லட்டுமா?"

பத்மா, சுரேஷின் வக்கணை நிறைந்த பேச்சை மிக்க சுவையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் கூறிய அலெக்ஸாந்தரின் கதை அவளுக்கு மிகவும் பிடித்தது. சுரேஷ் நேரத்துக்கும் இடத்துக்கும் தக்கவாறு எவ்வளவு அழகாகக் கதை சொல்லுகிறான் என்றும், மிகவும் தர்க்க ரீதியாகப் பேசுகிறானே என்றும் தனக்குள் தானே அவனை மெச்சிக் கொண்டாள். அவள் தன் பாராட்டைத் தன் கண்களின் மூலமும் புன்னகை பூத்த அதரங்களின் மூலமும் அவள் வெளியிட்டுக் கொண்டிருந்தாள். அவள் கரங்கள் மேசையைத் தட்டிக் கொண்டிருக்க, அவன் என்ன ஆலோசனை கூறப் போகின்றான் என்றறியத் தன் காதுகளைத் தீட்டிக் கொண்டிருந்தாள், அவள்.

சுரேஷ் தன் ஆலோசனையைச் சொல்ல ஆரம்பித்தான்.

"இதோ என்னிடம் இருக்கும் காசைப் பூவா தலையா போட்டுப் பார்ப்போம். தலை கிடைத்தால் பத்மா போட்டியில் பங்கு பற்றட்டும். பூ கிடைத்தால் வேண்டாம்."

"இது பிரச்சினைக்கு நாம் அளிக்கும் தீர்ப்பாகாதே! குருட்டுச் சம்பவமொன்றுக்கு நாம் அடிபணிவதாக அல்லவா முடியும்?"

"அது சரிதான். என்றாலும் இப்பொழுதே ஒரு மணியாகிவிட்டது. பிரச்சினையை நாம் முறையாக அலசித் தீர்ப்பெடுக்க நேரம் போதாது. அதனால் தான் இந்தக் குறுக்கு வழியை நான் சொன்னேன். செய்து பார்ப்போமா?"

ஸ்ரீதர் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான். சுரேஷ் காசை மேலே சுண்டிப் புல் தரையில் விழச் செய்தான். தலை விழுந்தது. ஸ்ரீதர் உடனே "அப்படியானால் போட்டியில் பங்கு பற்ற வேண்டியது தான். மாரியம்மனின் விருப்பமது!" என்று கூறிக் கொண்டே எழுந்தான். பின்னர் பத்மாவைப் பார்த்து, "காலையில் வாங்கிய நீச்சலுடையை எவ்வளவு கசக்கி விட்டாய், பார். பரவாயில்லை. காளிதாஸ் கடைக்குப் போய் புதிய நீச்சலுடையொன்று வேண்டுவோம்." என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். அல்பேர்ட்டைக் கூப்பிட்டு "இதோ இந்தத் துரைக்கு வேண்டியதெல்லாம் கொண்டு வந்து கொடு. சுரேஷ்! நன்றாய்ச் சாப்பிடு" என்று சொல்லி விட்டுப் பத்மாவுடன் ஹோட்டலை நோக்கி நடந்தான். பத்மாவின் நீண்ட கால்கள் அவளுக்கு தனி அழகைக் கொடுக்க அவள் ஒய்யார நடை போட்டுச் சென்றதைப் பின்னாலிருந்த பார்த்த அல்பேர்ட் சுரேஷிடம், "நோனா மிச்சம் அழகு. இன்று அவர் தான் வெற்றி எடுப்பார்" என்று கூறினான். சுரேசும் "ஆம்" என்று தலையை அசைத்துப் புன்னகை செய்தான்.

ஒரு சில நிமிஷ நேரத்தில் பத்மா தன் முகத்தையும் தலையையும் சரி செய்து கொண்டு புதிய நீச்சலுடையில் போட்டி நடக்கும் இடத்துக்கு ஸ்ரீதருடன் சென்ற போது, உண்மையில் ஒரு மாய மோகினியாக, அதிசய கவச்சிப் பாவையாகக் காட்சியளித்தாள். அவள் இப்போது அணிந்திருந்த நீச்சலுடை ‘பிக்கினி’ அல்லாவிட்டாலும் பார்க்க மிகக் குறைந்த துணியில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். சற்று மேலேறிய கால்களுடனும், முன்னால் இன்னும் அதிகமாகத் தாழ்த்திறங்கிய கழுத்துடனும் பின்னால் முதுகுப் புறத்தின் பெரும் பகுதியை நன்கு காட்டுவதாகவும் மிகவும் நாகரிகமாகவும் அழகாகவும் அமைந்திருந்தன. செம்மை கலந்த பொன் வர்ணத்தில் அமைந்திருந்த அந்த உடையில் அவள் போட்டி நடக்க வேண்டிய இடத்துக்கு அன்னம் போல் ஒயிலாக நடந்து சென்ற பொழுது, ஆண் பெண் சகலரது கண்களும் அவளையே மொய்த்தன. பத்மாவைப் பொறுத்த வரையில் காலையில் முதன் முதலாக நீச்சலுடையை அணிந்ததும், மற்றவர்கள் அவளை உற்றுப் பார்த்த பொழுது, அவளுக்குச் சிறிது வெட்கமாகத்தானிருந்தது. ஆனால், அவள் அதை எதிர்த்துப் போரடித் தொடர்ந்தாற் போல பல மணி நேரம் நீச்சலுடையிலேயே இருந்துக் கொண்டிருந்ததால் அந்த வெட்கம் இப்பொழுது எப்படியோ மறைந்துபோய்விட்டது. உண்மையில் அவள் மனது அப்போது ஆனந்தத்தில் மிதந்தது. வேகமாக ஸ்நான உடையில் ஏறு போல் வீசிய கடற்காற்று உடம்பில் சகல இடங்களிலும் பட்டு, இன்பச் சிலிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, இன்னமும் இன்பத்தால் சிலிர்த்துக் கொண்டிருந்தது. தன் பக்கத்தில் நிமிர்ந்து பெருமையோடு நடந்து வந்து கொண்டிருந்த ஸ்ரீதரைப் பார்த்துப் புளகித்துக் கொண்டிருந்தது, அவள் நெஞ்சம். உணவை முடித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற சுரேஷின் முகத்தில் இலேசான குறும்புப் புன்னகை ஒன்று தவழ்ந்து கொண்டிருந்தது. தூரத்திலிருந்து அதனைக் கவனித்த ஸ்ரீதருக்கு அதன் பொருள் என்ன என்பது சற்றும் விளங்கவில்லை. போட்டியிலே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளில் ஒருவர், கடைசி நிமிஷத்தில் தம்மால் வர முடியவில்லை என்று தந்தி அடித்துவிட்டதால் புதிய நீதிபதி ஒருவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ‘டைகர் கிளப்’ தலைவர் திரு. ஜயசிங்காவின் கண்களில் தமது அசாதாரண உடையில் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த அதிகார் அம்பலவாணரின் உருவம் அகப்பட்டது! திரு. ஜயசிங்கா அவரை அணுகி, "நீங்கள் யார்? பார்ப்பதற்கு மிகக் கம்பீரமாகத் தோன்றுகிறீர்களே!" என்று விநயமாகக் கேட்டதும், தாம் தான் அதிகார் அம்பலவாணர் என்று உண்மையை மிக்க பெருமையோடு வெளியிட்டார் அவர். தலைப்பாகைக்காரர் ஒரு முக்கியமான பிரமுகரே என்று தெரிந்து கொண்ட திரு. ஜயசிங்கா அவரை நீச்சலழகியைத் தெரிந்தெடுக்கும் நீதிபதிகளின் தலைவராக இருக்க வேண்டுமென்று தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார். அதிகாரின் வெள்ளைத் தலைப்பாகை களியாட்டச் சூழலின் விநோதத்தையும் வேடிக்கையையும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது திரு. ஜயசிங்கா கருதியதே அவரை அவ்வளவு விரும்பிகப்பதவியை ஏற்கும்படி அவர்  கேட்டுக் கொண்டதற்குக் காரணம்.

சரியாக இரண்டு மணிக்கு நீச்சல் மோகினிகள் தென்னை மரங்களிடையே மலர்ப்பாத்திகளின் நடுவில் புல் தரையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்குச் சமீபமாக வந்தார்கள். பல மேசைகளை ஒன்றுடன் ஒன்று பொருந்திச் சிவப்புக் கம்பளம் விரித்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் நீராமகளிர் போல் விளங்கிய நீச்சலழகிகள் ஒன்று, இரண்டு, மூன்று என்று இலக்கங்கள் எழுதப்பட்ட அட்டைகள் குத்திய நீச்சலுடைகளுடன் ஒவ்வொருவராக ஏறி நடக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஏற்பாடுகளை ‘டைகர் கிளப்’ தலைவர் திரு. ஜயசிங்கா அழகிகளுக்கு எடுத்துக் கூறினார்.

பத்மா அவற்றைக் கேட்டு விட்டு ஸ்ரீதரின் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள். அவளுக்கு இப்பொழுது ஒரு பயம் ஏற்பட்டிருந்தது. என்ன தான் மற்றவர்கள் தன்னை அழகி, அழகி என்று போற்றியபோதிலும் தான் உண்மையில் அழகிதானா என்பதே அப்பயம். "ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அவ்வாறு போற்றப்படுகிறேனா அல்லது அது நூற்றுக்கு நூறு முற்றிலும் உண்மைதானா?" என்று தன்னைத்தானே வினவிக் கொண்ட அவன் ஸ்ரீதரிடம் இரகசியமாக "நான் உண்மையில் அழகாயிருக்கிறேனா? எனக்கு வெற்றி கிடைக்குமா?" என்று கேட்டாள். ஸ்ரீதர் அவள் தோள்களைப் பற்றி அவள் முகத்தை அன்போடு பார்த்து, "நிச்சயமாக உனக்குத்தான் வெற்றி. உன்னைப் போன்ற அழகி இந்த உலகிலேயே இல்லை. காலையில் காளிதாஸ் கடைக்காரன் சொன்னது ஞாபகமில்லையா?" என்றான். இவ்வார்த்தைகள் அவளுக்கு ஊக்கத்தை அளித்த போதிலும் ஆங்காங்கு காணப்பட்ட மற்ற அழகிகளின் மதர்த்த உடலங்கங்களையும், அழகு முகங்களையும் பார்த்தபோது அவன் மனதில் "நான் தோற்றுக் கடைசியாகக் கூட வந்து விடலாம்" என்ற அச்சம் ஏற்படவே செய்தது. அப்பொழுதுதான் அவளுக்குத் திடீரென கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலில், காமாட்சி சமேதரராக வீற்றிருக்கும் மணவாள சுந்தரேஸ்வரர் மூர்த்தியின் நினைவு வந்தது. "அப்பனே சுந்தரேசா! நான் வெல்ல வேண்டும். வென்றால் ஸ்ரீதருடன் உன்னை வந்து வணங்குவேன். காணிக்கை தருவேன்" என்று மனதுள் சொல்லிக் கொண்டு ஸ்ரீதரிடம் "ஸ்ரீதர்! நான் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு நேர்த்திக்க்டன் வைத்துவிட்டேன். ஆகவே நிச்சயம் வெல்லுவேன். நான் தான் ‘பேதிஸ் பியூட்டி!’ நீச்சல் ராணி!" என்றாள் முகமலர்ச்சியுடன்.

ஸ்ரீதர் புன்னகையுடன் "என்ன, நீச்சலழகிப் போட்டியில் வெற்றி பெற சுந்தரேஸ்வரருக்கு நேர்த்திக் கடனா? பார்ப்போம். சுந்தரேஸ்வரர் கோவில் எங்கள் பரம்பரைக் கோவில். அப்பாவுக்குப் பின்னால் அது என்னுடைய கோவில் என்பது உனக்குத் தெரியுமல்லவா?" என்று கேட்டான்.

"தெரியும், நன்றாய்த் தெரியும்" என்று தலையை ஆட்டினாள் பத்மா.

"எனக்கென்னவோ சுந்தரேஸ்வரரிலும் பார்க்க, கொட்டாஞ்சேனையில் சிறிய முடுக்குக் கோவிலில் இருக்கும் மாரியம்மன் மீதுதான் நம்பிக்கை. அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்" என்றான் ஸ்ரீதர்.

பத்மா, "உங்களுக்குத் தெரியாது. சுந்தரேஸ்வரர் தான் சக்தி வாய்ந்தவர். நான் பல்கலைகழக 'என்ரன்ஸ்' பரீட்சையில் வெற்றி பெற்றதற்கும் நான் அங்கு உடைத்த தேங்காய்களே காரணம். அடுத்த வீட்டு அன்னம்மா அக்காவைக் கேட்டால் தெரியும் சுந்தரேஸ்வரரின் பெருமை!" என்று சொல்லிக் கொண்டே போனாள்.

ஸ்ரீதர் "யார், நீ சொல்வாயே, ஒரு திராவிடதாசனைப் பற்றி. அவனுடைய தாய் அன்னம்மாதானே!" என்றான்.

பத்மா "ஆம். திராவிடதாசன் நாஸ்திகன்." அவள் கூறிக் கொண்டிருக்க, ஒலிபெருக்கியில் வாத்திய சங்கீதம் முழக்க ஆரம்பித்தது. திடீரென அது நிற்க, ‘டைகர் கிளப்’ தலைவர் பேசத் தொடங்கினார்.

"சகோதர டைகர்களே, அன்பர்களே, நீச்சலழகிகளே, நீச்சல் போட்டி நீதிபதிகள்! வாழ்த்துகள். இப்பொழுது நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நீச்சல் ராணிப் போட்டி நடைபெறப் போகிறது. நீச்சல் ராணிகள் உடனே மேடைக்கருகில் வீற்றிருக்கும் அழகுப் போட்டி அமைப்பாளர் ஸ்ரீமதி சீதா ஜயசிங்காவை வந்து காணும்படி கோரப்படுகிறார்கள். நீச்சலுக்கு நீதிபதிகள் மேடைக்கு முன்னாலுள்ள நாற்காலிகளில் வந்து அமரும்படி அழைக்கப்படுகிறார்கள் எங்கே கைதட்டுங்கள் பார்க்கலாம்!"

‘டைகர் கிளப்’ தலைவரின் இப்பேச்சு நின்றதும் சீன வெடி போல் கைதட்டல் நாலா திசையிலிருந்து வெடித்துக் கிளம்பியது. மெல்லிய வாத்திய இசை பின்னால் இசைந்துக் கொண்டிருக்க, அழகிகளின் மேடைப் பவனி ஆரம்பித்தது. தேவகன்னிகைகள் போல் அவர்கள் இரத்தினக் கம்பளத்தில் நடந்து செல்லத் தொடங்கினார்கள். போட்டியில் மொத்தம் பதினோரு அழகிகள் பங்குபற்றினார்கள். ஒவ்வோர் அழகியும் மேடை மீதேறித் தனியாக அதன் எல்லை வரை மெல்ல நடந்து சென்று, பின்னர் திரும்பி வர வேண்டும். இது நடுவர்களுக்கு அழகிகளைப் பல் கோணங்களிலிருந்தும் அவதானிப்பதற்கு வாய்ப்பளித்தது. இவ்வாறு ஒவ்வொருவராக அழகிகள் மேடையில் ஏறி இறங்கிய பின்னர் எல்லோரும் ஒரு தடவை வரிசையாக மேடையில் கூட்டாகக் காட்சியளிப்பர். அதன்பின் அவர்கள் மேடையில் நின்று கொண்டிருக்கும் பொழுதே நடுவர்களின் தீர்ப்பு ஒலி பெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப்பட, நீச்சல் ராணிக்கு முடி சூட்டு விழா நடைபெறும். மற்ற அழகிகள் பின்னணியில் நிற்க முதலாம் இடம் பெற்ற நீச்சல் ராணியும் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற அழகிகளும் முன்னணியில் காட்சியளிப்பர். இவைதாம் ஏற்பாடுகள்.

அதிகார் அம்பலவாணர் முன் வரிசை ஆசனத்தில் தமது வெள்ளி மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்து மாட்டிக் கொண்டு நடுவர்களுக்கு நாயகமாக வீற்றிருந்தார். ஒவ்வோர் அழகியும் தனியாகப் பவனி வந்த காட்சியைப் பார்த்து, தம்மிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தில் புள்ளி போட்டுக் கொண்டிருந்த அவர் ஐந்தாவது அழகி பத்மாவைக் கண்டதும் "ஓஹோ! ஸ்ரீதரின் சரக்கு! இவள்தான் மிக அழகாயிருக்கிறாள்" என்று புள்ளிகளை மிகவும் அதிகமாகவே அவளுக்குக் கொடுத்துவிட்டார். உண்மையில் கடற்கரையில் பார்த்ததை விட இப்பொழுது அவளது எழில் இன்னும் பல மடங்காகவே அவருக்குத் தெரிந்தது.

அரை மணி நேரத்தில் வைபவங்கள் முடிந்தன. நடுவர்களின் நாயகமான அதிகார் அம்பலவாணர் ஒலி பெருக்கியில் தீர்ப்பை அறிவிக்கலானார். களியாட்ட விநோதர்களிடையே ஒரே ஆரவாரம். அதிகாரின் தலைப்பாகை அவர்களுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஒரே கைதட்டல், ஒரே கூச்சல், சிலர் சீழ்க்கை அடித்தார்கள். அதிகாரைப் பற்றித் திரு. ஜயசிங்கா மூலம் தெரிந்து கொண்ட ஒருவர் "கம் ஓன் அதிகார்!" என்று சப்தமிட்டார். அதிகாருக்கு ஒரே ஆனந்தம். வள்ளியாச்சிக்கும் அப்படியே. அவளுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. ஆனால் ஒரே ஓர் அபசுரம். யாரோ ஒருவன் ‘பனங்கொட்டை’ என்று சப்தமிட்டான். அதிகாரின் தலைப்பாகை அவனுக்கு யாழ்ப்பாணத்தின் பனை வடலிகளை ஞாபகப்படுத்திவிட்டது. ஆனால் இந்த அவமரியாதைப் பேச்சு அதிகாரை ஒன்றும் செய்துவிடவில்லை. அவர் ஒலி பெருக்கியில் கம்பீரமாய் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.

"இந்த நீச்சல் ராணித் தெரிவுக்கு என்னை நீதிபதியாகத் தெரிந்தெடுத்த பிரபல டைகர் திரு. ஜயசிங்காவுக்கு எனது நன்றி உரியது. நான் ஒரு கடலாடு விழாவில் பங்குபற்றுவது இதுவல்ல முதற் தடவை. பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து சென்றிருந்த போது அங்குள்ள பிரைட்டன் கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடற்கரைக் கார்னிவலில் நான் கலந்து கொண்டுள்ளேன் . இப்பொழுது பெண்கள் நீச்சலுடை அணியலாமா கூடாதா என்பது பற்றி இங்கு பேசப்படுகிறது. சுமார் இருபத்தைந்து வருடங்களின் முன்னர் நான் என்னுடன் இங்கு வந்திருக்கும் எனது மனைவியுடன் பிரைட்டன் கடற்கரை விழாவில் கலந்து கொண்ட பொழுது என் மனைவியார் உண்மையில் நீச்சலுடை அணிந்து கொண்டார் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இதோ, இங்கே இருக்கும் அவர் அதற்குச் சாட்சி சொல்லுவார்."

இவ்வாறு அவர் கூறியதும் எல்லார் கண்களும் ஸ்ரீமதி வள்ளியாச்சி அமர்ந்திருந்த திக்கை நோக்கின. அழகிகள் உட்பட யாவரும் பழைய நீச்சலழகியின் இன்றைய உருவைக் கண்டதும் கலகலவென்று சிரித்துவிட்டார்கள். வள்ளியாச்சியோ இளம் பெண் போல் வெட்கப்பட ஆரம்பித்தாள்! சபையோரின் சிரிப்போசை அடங்கியதும் அதிகார் தமது பேச்சை மேலும் தொடர்ந்தார்.

"இதிலிருந்து அந்தக் காலத்திலிருந்தே நீச்சலழகிகளின் மேல் எனக்கு எவ்வளவு அக்கறை இருந்ததென்பதையும், அவர்களோடு எத்தகைய தொடர்பு எனக்கு இருந்தது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்விர்கள் என்று நினைக்கிறேன். அந்த அக்கறைதான் இன்று என்னை இக்கடற்கரை விழாவுக்கு எனது அன்புக்குரிய மாஜி பிரைட்டன் நீச்சலழகியோடு வரும்படி செய்தது. துரதிர்ஷ்டவசமாக பிரைட்டன் கடற்கரை மாஜி நீச்சலழகி இங்கு தனது நீச்சலுடையைக் கொண்டு வராததாலும் இவ்விடத்தில் அவரது ஜீவாதாரப் புள்ளிகளுக்குத் தக்க நீச்சலுடை கிடையாததாலும் அவர் இந்தப் போட்டியில் பங்குபற்ற முடியாது போய்விட்டது. அவரது ஜீவாதாரப் புள்ளிகள் உண்மையில் உங்களைத் திகைக்க வைக்கவே செய்யும். 55-42-33 என்பனவே அவை. பிரபல சினிமா நடிகையான சா-சா-கபோர் என்பவர் தமது மேலிடப் புள்ளி 40-க்கு மேல் என்று பெருமையுடன் கூறியுள்ளதாக நான் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறென். நீங்களே சொல்லுங்கள்! ஸ்ரீமதி வள்ளியாச்சியின் 55க்கு முன் சா-சா-கபோரின் 40 எம்மாத்திரம்!"

(சபையில் ஒரே ஆரவாரம்! சிரிப்பு! ‘டைகர் கிளப்’ தலைவர் தலைப்பாகையாரைத் தான் நீதிபதியாகத் தெரிந்தெடுத்ததற்காகத் தன்னைத் தானே மெச்சிக் கொள்கிறார்.)

"சரி. இப்பொழுது இன்றைய விஷயத்துக்கு வருவோம். நீச்சல் ராணியாக நீதிபதிகளால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டவர் ஐந்தாம் இலக்க அழகி பத்மா பரமானந்த். (இவ்வாறு அவர் சொல்ல, பத்மா பதைபதைத்து அழகிகள் வரிசையை விட்டுப் பிரிந்து தனியாக முன்னால் வந்து சபையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். ஒரே கைதட்டல்.)

"இரண்டாவது இடம் மூன்றாம் இலக்க அழகி விமலா ஹேட்டியாராச்சிக்கு அளிக்கப்படுகிறது. மூன்றாம் இடம் நாலாம் இலக்க அழகி நந்தனி ஸ்ரீ நிசங்காவுக்கு அளிக்கப்படுகிறது. (அவர்கள் இருவரும் பத்மாவின் இருபுறமும் வந்து நிற்கிறார்கள். கைதட்டல் கடல் முழக்கத்தையும் மீறி ஒலிக்கிறது.)

களியாட்ட விநோதர்களுக்கு முக்கியமாக அங்கிருந்த ஆண்களுக்கு ஒரே உல்லாசம். பதினொரு பேரழகிகளின் பூரித்த எழிலுடங்களை ஒன்றாகக் காண யாருக்குத் தான் உல்லாசமாக இருக்காது?

சுரேசும் ஸ்ரீதரும் ஒருவருக்கொருவர் சமீபமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். "பத்மா வெற்றி பெற்றுவிட்டாள். பலே" என்று சொல்லி சுரேஷ் ஸ்ரீதரின் கையைப் பிடித்துக் குலுக்கினான். முதுகில் தட்டினான். ஸ்ரீதரோ வாயைப் பிளந்து கொண்டு நின்றான்!

"நீச்சலுடை எவ்வளவு அழகென்றாலும் அதற்குள் இடப்படும் பொருளின் அழகுதான் அதன் உண்மையழகை நிர்ணயிக்கிறது. அதிகார் அம்பலவாணர் மனைவியைப் பத்மாவின் நீச்சலுடைக்குள் போட்டால் எப்படியிருக்கும்?" என்று சொல்லிச் சிரித்தான் சுரேஷ்.

சுரேஷின் நகைச்சுவையை அப்போது ஸ்ரீதர் இரசிக்கவில்லை. அவனுள்ளத்தில் ஒரே பரபரப்பு! மேடையில் நின்றவாறு பத்மா அவனை நோக்க, ஸ்ரீதரும் அவளை நோக்கினான். இருவர் கண்களும் ஒன்றையொன்று தழுவ உள்ளங்களும் இறுகத் தழுவிக் கொண்டன. போட்டியைத் தொடர்ந்து பரிசளிப்பு வைபவம் ஆரம்பித்தது. பலர் மேடை மீது பாய்ந்து அழகிகளின் கைகளைக் குலுக்க ஆரம்பித்தனர். அவர்களைக் கீழே இறக்குவது அழகுப் போட்டி அமைப்பாளர் திருமதி ஜயசிங்காவுக்குப் பெரிய பாடாய்ப் போய்விட்டது!

பத்மாவுக்குத் திருமதி ஜயசிங்கா நீச்சல் ராணிக்குரிய முடியைச் சூட்டிக் கையில் ஒரு செங்கோலையும் கொடுத்தார். ‘டைகர் கிளப்’ தலைவர் ஆயிரம் ரூபா ‘செக்’கையளித்தார். அதன் பின் சப்பாத்துக் கம்பெனிகள், சோப்புக் கம்பெனிகள், நகை வியாபாரிகள், உடுதுணி வியாபாரிகள் என்போர் பாதரட்சைகளையும், வாசனைப் பொருளகளையும் நகைகளையும் சேலைகளையும் பரிசாக அளித்தார்கள். சபை முழுவதும் ஒரே கரகோஷம்! ஆரவாரம்! அதைத் தொடர்ந்து ஆட்டம், பாட்டு, வாத்திய சங்கீதம் எழுந்தது. பைலா நடனம், டுவிஸ்ட், ரொக் அண்ட் ரோல் எல்லாம் அல்லோலகல்லோலப்பட்டன. களியாட்டக்காரர்கள் தம்மை மறந்து வெறியாட்டம் போட்டார்கள். உலகமே இன்பமயமாகிவிட்டது. பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் அங்குமிங்கும் நின்றிருந்த அழகு மோகினிகளை முக்கியமாகப் பத்மாவைப் படம் பிடித்துக் கொண்டு நின்றார்கள். பத்மா, யாரோ அவள் கையில் கொண்டு வந்து திணித்த சொக்கலேட்டுகளைச் சுவைத்துக் கொண்டு நின்றாள். வாழ்க்கையே கரும்பாகச் சுவைத்தது அவளுக்கு!

சரியாக நாலு மணிக்கு ஸ்ரீதரும் பத்மாவும் தங்கள் நீச்சலுடைகளைக் களைந்து சாதாரண உடைகளை உடுத்துக் கொண்டு ஜனசந்தடியற்ற ஹோட்டல் மேல்மாடி நிலா முற்றமொன்றில் டாக்டர் சுரேசுடன் தேநீர் அருந்த உட்கார்ந்தார்கள். அல்பேர்ட் கிழவன் சிற்றுண்டி பரிமாறி விட்டு, பத்மாவுக்குக் கிடைத்த பரிசுகளை ஸ்ரீதரின் காரில் கொண்டு போய் ஏற்றினாள்.

அவ்வேளையில் அங்கு அழையா விருந்தாக வந்து சேர்ந்தனர் அதிகார் அம்பலவாணரும் மாஜி பிரைட்டன் நீச்சலழகி வள்ளியாச்சியும். அதிகார், "தம்பி ஸ்ரீதர்! பத்மாவுக்கு எப்படியும் முதலிடம் கொடுக்க வேண்டுமென்று அவளைப் பார்த்ததும் நான் தீர்மானித்துவிட்டேன் . அப்படியே கொடுத்தும் விட்டேன். பார்த்தாயா?" என்றார் பெருமையோடு. "அவள் தானே எல்லோரிலும் அழகி. ஆகவே நீர் அப்படிச் செய்ததில் தப்பில்லை. உங்களது அழகுச் சுவையை யாரும் குறைத்துக் கூற முடியாது." என்றான் சுரேஷ் சிறிது விஷமமாக. அதிகார் சுரேஷைப் பார்த்து "நீர் யார்?" என்று கேட்டு விட்டு "ஸ்ரீதருக்காக நான் செய்தது இது!" என்றார்.

"இல்லவே இல்லை. பத்மாவைத் தெரிந்தெடுக்காமல் நீங்கள் வேறு யாரையாவது தெரிந்திருந்தால் எல்லோரும் உங்களைப் பரிகாசம் செய்திருப்பார்கள். "உங்கள் கண் பொட்டையா?" என்று கூடக் கேட்டிருப்பார்கள். நீங்கள் முறையாக நடந்து உங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொண்டீர்கள்," என்றான் ஸ்ரீதர். பக்கத்திலிருந்த பத்மாவுக்கு இவற்றைக் கேட்கக் கேட்கப் பெருமையாக இருந்த போதிலும் சிறிது வெட்கமாகவும் இருந்தது. அதிகாரால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. பத்மா, ஸ்ரீதர் கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வள்ளியாச்சியுடன் வெளியேறினார்.

ஏறக்குறைய நாலரை மணியளவில் பத்மாவும் ஸ்ரீதரும் நண்பன் சுரேசுடன் தங்கள் காரை நோக்கிச் சென்றார்கள். களியாட்ட விநோதர்களின் கூட்டம் பெரிதும் கலைந்து போய் விட்டதென்றாலும் ஒரு சிலர் மட்டும் அங்குமிங்கும் இன்னும் நீச்சலுடைகளில் திரிந்து கொண்டே இருந்தார்கள்.

சுரேஷ் அப்பொழுது திடீரென்று, "பத்மா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு நான் தான் காரணம். பூவா தலையா போட்டுப் பார்த்தபோது தலை விழுந்திருக்காவிட்டால், பத்மா போட்டியில் கலந்து கொண்டிருக்கா மாட்டாளல்லவா?" என்றான்.

ஸ்ரீதர் "தலை விழுந்ததற்கு நீ எப்படிக் காரணம்? அதிர்ஷ்ட நிலையின் படி அது விழுந்தது." என்றான்.

சுரேஷ் "அது தான் இல்லை. இதோ பார் நான் நினைத்த நேரமெல்லாம் தலையையே விழச் செய்கிறேன்." என்று சொல்லிவிட்டுத் தன்னிடமிருந்த காசை மேலே சுண்டினான். கீழே புல்லில் அது விழுந்தது. தலையே வீழ்ந்திருந்தது. சுரேஷ் அதை எடுத்து மீண்டும் மேலே சுண்டினான். தலையே மீண்டும் விழுந்தது.

"இது என்ன ஆச்சரியம். உங்கள் நண்பர் சுரேஷ் மிகவும் கெட்டிக்காரர்!" என்றாள் பத்மா.

சுரேஷ் "அதுதான் இல்லை. இதோ காசைக் கையிலெடுத்துப் பாருங்கள்." என்று சொல்லிக் காசைப் பத்மாவின் கையில் கொடுத்தான். காசின் இரண்டு பக்கமும் தலை! அவள் "ஓ! அப்படியா சங்கதி" என்று சொல்வதற்கிடையில் மற்றொரு காசை எடுத்து ஸ்ரீதரின் கையில் கொடுத்தான் சுரேஷ். அதன் இரண்டு புறமும் பூ! ஸ்ரீதருக்கு ஒரே வியப்பு.

"இவை இரண்டையும் நீங்கள் என் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள். நான் இப்பொழுது எனது ஓய்வு நேரத்தில் மந்திர விந்தை படிக்கிறேன். ஜயசேகர் மாயாஜாலப் பள்ளியில். அங்கு நான் கற்ற வித்தைகளில் இது ஒன்று" என்றான் சுரேஷ். பிற்பகல் முழுதும் சுரேஷ் ஏன் சிரித்துக் கொண்டேயிருந்தான் என்று இப்பொழுதுதான் ஸ்ரீதருக்குப் புரிந்தது.

ஸ்ரீதரின் கார் காலி ரோட்டில் ஏறிக் கொட்டாஞ்சேனையை நோக்கிப் பிய்த்துக் கொண்டு போக ஆரம்பித்த போது பத்மாவின் மனதில் புதிய பயங்கள் பிறந்தன. அப்பாவுக்கு நீச்சலழகிப் போட்டியைப் பற்றி எப்படி விளக்கம் தருவது என்பதே அது. ஸ்ரீதரிடம் " நீங்கள் இன்று என்னுடன் வீட்டுக்கு வர வேண்டும். இந்தப் போட்டி பற்றி நீங்கள் தான் அப்பாவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னை கோபித்துக் கொள்வார்" என்றாள் பத்மா. "ஆகட்டும்" என்றான் ஸ்ரீதர். சுரேஷை கூடவே தங்கள் வீட்டுக்கு வர வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள் அவள். அதன் பின் அன்றைய நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட உடற் களைப்புத் தீர "அம்மாடி" என்று கார் ஜன்னலோடு சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் அவள். அதே நேரத்தில் பம்பலம்பிட்டிக்குத் தாம் தங்கியிருந்த தமது மருமகள் வீட்டுக்கு ‘டாக்சி’யில் போய்க் கொண்டிருந்த அதிகார் அம்பலவாணர், வள்ளியாச்சியிடம் "டார்லிங் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் சிவநேசரைக் கண்டு இந்த ஸ்ரீதரின் விஷயத்தை அவரோடு பேச வேண்டும். அவன் இங்கே பெண் பிள்ளைகளுக்குப் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறான் போல் தெரிகிறது." என்றார்.

"பணக்கார ஆண்பிள்ளை. கொழும்பிலே எடுபட்ட பெட்டைகளுக்கும் குறைவில்லை பொலிருக்கிறது. உங்களுக்கேன் இந்த வம்பு! பேசாமலிருங்கள்" என்றாள் வள்ளியாச்சி.

அதிகார் அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை.


11-ம் அத்தியாயம்: சுந்தரேஸ்வரர் சந்நிதியில்

பத்மா நீச்சல் ராணிப் போட்டியில் கலந்து கொண்டது பற்றி பரமானந்தர் எவ்விதக் கவலையோ கோபமோ கொள்ளாதபடி ஸ்ரீதரும் சுரேசும் பார்த்துக் கொண்டனர். ஸ்ரீதர் பத்மாவை அன்று வழக்கத்துக்கு மாறாகத் தனது ‘பிளிமத்’ காரில் கொலீஜ் ரோட்டிலுள்ள அவள் வீட்டிலேயே கொண்டு போய் இறங்கி விட்டான். பரமானந்தர் கூட அன்று தான் அவன் காரை முதன் முதல் பார்த்தார். சிவநேசரின் மகன் என்பதை மூடு மந்திரமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் முற்றிலும் தீர்ந்து விட்டதும், பத்மாவுக்கும் தனக்குமுள்ள காதல், திருமணக் கட்டத்தை அடைந்து விட்டது, இனி யாருக்கும் தான் அஞ்சாமல் காரியங்களைச் செய்யலாம் என்று அவன் நம்பியதுமே அவன் இவ்வாறு பகிரங்கமாகத் தன் படாடோபக் காரில் பத்மா வீட்டுக்குப் போகும் துணிவைப் பெற ஏதுவாயிருந்தது. பத்மா - ஸ்ரீதர் திருமணத்தை விரைவில் செய்து முடிக்க இன்னும் ஒரே ஒரு நடவடிக்கைதான் எடுக்கப்பட வேண்டியிருந்தது. தந்தை சிவநேசரதும் தாய் பாக்கியத்தினதும் ஆசியைப் பெறுவதே அது. ஸ்ரீதருக்கு அது மிகவும் அற்ப விஷயமாகவே பட்டது.

டாக்டர் சுரேஷ் அடுத்த வாரம் இங்கிலாந்துக்குப் புறப்பட்டதும், அவனை வழியனுப்பிய அடுத்த நாளே தான் ஊருக்குப் போய், அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் கூறித் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் - கல்யாணத்தைத் தங்கள் பரம்பரைக் கோவிலான சுந்தரேஸ்வரர் கோவிலிலேயே நடத்தி விட்டு, திருமண வரவேற்பு வைபவத்தையும் விருந்தையும் ஹோர்ட்டன் பிளேசிலுள்ள தங்கள் இல்லத்திலோ அல்லது கால் பேஸ் ஹோட்டல் போன்ற ஒரு பெரிய ஹோட்டலிலோ நடத்திக் கொள்ளலாம் என்பது அவன் முடிவு. அதன் பின் பத்மாவும் தானும் ஜோடியாகக் கிராமத்திலுள்ள தங்கள் மாளிகைக்குப் போய் ஒரு வார காலமாவது உல்லாசமாகத் தங்கி விட்டு கொழும்புக்கு வந்து ஹோட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’வில் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று அவன் திட்டமிட்டிருந்தான். இதுவரை அந்தப் பெரிய வீட்டில் சுரேஷ் அவனுக்குத் தோழனாயிருந்தான். இனி மேல் பத்மா அந்த இடத்தைப் பெற்றுக் கொள்வாள். வாழ்க்கை சலிப்பின்றிப் போகும் ஆனால் கல்யாணம் செய்து கொண்டோமென்பதற்காக படிப்பை விட்டு விடக் கூடாது. குறைந்தபட்சம் பி.ஏ. பரீட்சையையாவது பத்மாவும் நானும் ‘பாஸ்' பண்ணி விட வேண்டும் - என்றெல்லாம் திட்டம் தீட்டியிருந்தான் அவன். இந்தத் திட்டங்களுடன் இன்று புதியதொரு கனவும் சேர்ந்து கொண்டது. நீச்சலுடை அணிந்து அலைகளிடையே நீண்டு கொழுத்த ஒரு சுறா மீன் போல பத்மா தன் ஈரக் கால்கள் மீது புரண்டு ஆர்வத்துடனும் விரைவாகவும் நீந்தக் கற்றுக் கொண்டது அவனுக்கு அதிக இன்பத்தைக் கொடுத்திருந்தது. ஸ்ரீதருக்குக் கடல் ஸ்நானமென்றால் எப்பொழுதுமே பிரியம். பத்மாவுக்கும் அதே பிரியம் இருப்பதால் இருவரும் வாரத்துக்கொரு தடவையாவது கடற்கரைக்கு வந்து கடலிலும் கரையிலும் கும்மாளம் போடலாம். ஒரு வேலைக்காரனையோ வேலைக்காரியையோ வைத்துக் கொண்டால் கடற்கரையிலேயே சாப்பாட்டைக் கூட வைத்துக் கொள்ளலாம் என்றெலலாம் மனக் கோட்டை கட்டினான் அவன்.

ஸ்ரீதர் பத்மா வீட்டுக்குப் போன பொழுது சுரேசும் அவர்கள் கூடப் போனான். அவள் காரின் பின்னாசனத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கு குவிந்து கிடந்த பரிசுப் பொருள்களைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நீச்சல் ராணிக்குக் கிடைத்த பரிசுப் பொருள்கள் காரின் ‘டிக்கி’யை நிறைத்து, பின்னாசனத்தையும் நிறைத்துவிட்டன. அப்பப்பா, அப்பரிசுகள் தான் எப்படிப்பட்டவை? சேலை தொடக்கம் செருப்பு வரை, மார்புக் கச்சிலிருந்து மணிக் கூடு வரை ஒரு பெண்ணுக்குத் தேவையான சகலப் பொருள்களும் பரிசாகக் கிடைத்திருந்தன. எதிர் காலத்தைப் பற்றி அதிக யோசனையுள்ள ஒருவர் குழந்தைகளுக்குப் பால் பருக்கச் ‘சூப்பி’யுடன் கூடிய கண்ணாடி பாலூட்டி ஒன்றைப் பரிசாக அளித்திருந்தார். ஆனால் இப்பரிசை ஆட்சேபிப்பது போல, தேச நலனிலும் குடும்பக் கட்டுப்பாட்டிலும் அக்கறையுள்ள இன்னொருவர் ஒரு டசின் ரப்பர்க் கர்ப்பத் தடைக் கருவிகளைப் பரிசாக வழங்கியிருந்தார்! சுரேஷ் இவற்றைப் பிரித்துப் பார்த்து விட்டு "அழகுராணி கூட அதிகம் பிள்ளகள் பெறக் கூடாது என்பது இதைத் தந்தவர் எண்ணம். உன் எண்ணம் என்னப்பா?" என்றான் ஸ்ரீதரைப் பார்த்து. ஸ்ரீதர் சிரித்து விட்டு "பத்மாவைக் கேள்!" என்றான். பத்மாவோ நாணத்தோடு பொய்க் கோபம் காட்டி முகத்தைச் சுளித்துக் கொண்டாள்!

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்க, கார் பத்மா வீட்டை அடைந்து விட்டது. ஸ்ரீதரும் சுரேசும் பரிசுப் பொருள்களை இறக்க, பத்மா துள்ளிக் குதித்து வீட்டுக்குள் போய்விட்டாள். அதன் பின், பரமானந்தரிடம் உரையாடுகையில் ஸ்ரீதர் தாங்கள் இருவரும் கல்கிசைக்குப் ‘பிக்னிக்’ போனதையும், அங்கு எதிர்பாராத விதமாக நீச்சலழகிப் போட்டியில் பத்மா பங்கு பற்ற வேண்டிய சூழ் நிலையும் ஏற்பட்டதையும் விளக்கிக் கூறினான்.

பரமானந்தர் அவனது பேச்சைச் சுவாரஸ்யமாகக் கேட்டுச் சிறிது நேரம் பேசாதிருந்து விட்டுப் பின் சிரித்தார்.

"பத்மா உன்னுடையவள். நீயும் அவளோடு இனி என்ன செய்தாலும் உங்களிஷ்டம். இதற்காக எனக்கேன் குற்றாவாளிகள் போல் இவ்வளவு பெரிய விளக்கம் தர வேண்டும்? இன்னும் இது நாகரிக காலம். இப்படிப்பட்ட விஷயங்களை ஆட்சேபிப்பதால் பிரயோசனமில்லை. மேலும், இன்று இது போன்ற போட்டிகள் உலகெல்லாம் நடக்கின்றன. என் மகளும் அதில் கலந்து கொண்டாலென்ன? இவற்றை எதிர்த்து இயக்கம் நடந்த நான் அவ்வளவு கர்நாடகமானவனல்ல" என்று விஷயத்தை மிகவும் சுருக்கமாகவே முடித்துவிட்டார் அவர். பத்மாவுக்குப் பெரிய நிம்மதி. "எங்கப்பாவைப்போல் யார் இருக்கிறார்கள்? எவ்வளவு நாசுக்காகவும் நாகரிகமாகவும் விஷயத்தை முடித்து விட்டார்! அவருக்கு வயதுதான் அதிகமேயொழிய, மனோபாவத்தில், இளைஞர். என் தங்க அப்பா அவர்!" என்று பெருமையோடு எண்ணிக் கொண்டாள் அவள்.

பரமானந்தர் சுரேஷிடம் பேசிக் கொண்டிருந்த பொது, "என் மகள் அழகி என்றால் எனக்குப் பெருமை இல்லையா? நீங்கள் அவள் அம்மாவைப் பார்த்திருக்க வேண்டும். பத்மா சரியாக அவள் அம்மாவைப் போல. அதனால் தான் அவள் அழகாயிருக்கிறாள். நல்ல வேளை, அவள் என்னைப் போல் இருந்திருந்தால் நிச்சயம் போட்டியில் தெரியப்பட்டிருக்க மாட்டாள்!" என்றார் தமக்கே இயல்பான நகைச்சுவையோடு. பத்மாவுக்கு இதைக் கேட்டதும் மேலும் அதிக ஆனந்தம்.

ஸ்ரீதரும் சுரேசும் வீட்டை விட்டுப் போனதும், பத்மா தனது அறைக்குள் போய்க் கதவைப் பூட்டிக் கொண்டு கண்ணாடி முன் நின்ற படி தன்னுடைகளைக் களைந்து வீசி விட்டுத் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஆடை ஆபரணங்களை ஒவ்வொன்றாய் அணிந்து பார்க்க ஆரம்பித்தாள்.

"அப்பப்பா என்னுடன் போட்டி போட்ட அந்தப் பத்துப் பெண்களும் எவ்வளவு அழகு! தங்கம் போன்ற மேனி, தளிர் போன்ற இடை, உருண்டு திரண்ட வாளிப்பான உடம்பு, முத்துப் பல் வரிசை, அழகாக் கத்தரித்து விசித்திரமாகச் செய்யப்பட்டிருந்த கூந்தல் அலங்காரங்கள், சிவந்து திரண்ட கால்கள், பூரித்துக் குடம் போல் விளங்கிய பின்னழகு - இப்படி அல்லவா அவர்கள் இருந்தார்கள்? அவர்கள் எல்லாரையும் விட நான் அழகா? நம்ப முடியவில்லையே! மேலும் கண்ணாடிக்குள் பார்த்தால் என்னழகு அவ்வளவு ஒன்றும் பிரமாதமாகத் தெரியவில்லையே! ஆனால் எனக்குத் தெரியாவிட்டலும் நான் பேரழகியாகத்தானிருக்க வேண்டும். எல்லோரும் என்னிடம் எனது அழகைப் பற்றித் தானே பேசுகிறார்கள்! விமலாவும் லோகாவும் கூட நான் அந்தச் சினிமா நட்சத்திரத்திலும் பார்க்க அழகு, இந்தச் சினிமா நட்சத்திரம் போலிருக்கிறேன், டீச்சரின் கையைப் பிடிக்க ஆசையாயிருக்கிறது. டீச்சரின் கைகள் மிகவும் அழகு என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறார்கள்" என்று தன்னோடு தான் பேசிக் கொண்டே பரிசாகக் கிடைத்த ஆடைகளை ஒன்று மாறி ஒன்றாக அணிந்து கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளுக்குப் பரிசாகக் கிடைத்திருந்த பொருள்களோ ஏராளம். சேலைகள் எட்டு, நீச்சலுடைகள் மூன்று, மார்புக் கச்சைகள் பதினேழு, செருப்புகள் நான்கு சொடி, கறுப்புக் கண்ணாடி இரண்டு, ஜீன்ஸ் என்னும் நீண்ட காற்சட்டைகள் இரண்டு, சுவெட்டர் ஒன்று, டென்னிஸ் விளையாடுவதற்கேற்ற கட்டைக் காற் சட்டைகள் இரண்டு, தங்கச் சங்கிலி ஒன்று, ரங்கூன் வைர மாலை ஒன்று, காதணிகள் மூன்று சோடி, வெள்ளி வளையல்கள் மூன்று சோடி, ஒரு கைக் கடிகாரம், தங்க வளையல்கள் இரண்டு, பொதுவாக ஒரு பெண்ணுக்குச் சீதனம் கொடுப்பதற்கே அவளுக்குக் கிடைத்த பொருள்கள் போதும் போலிருந்தன. இவற்றில் ஒரு சிலவற்றை அணிந்து பார்த்ததுமே அவளுக்குக் களைப்பேற்பட்டு விட்டது. முடிவில் ‘ஜீன்சை’ அணிந்து அறையில் அங்குமிங்கும் நடந்து அழகு பார்த்துக் கொண்டிருந்த போது களைப்பு மிகவும் அதிகமாகவே கட்டிலில் படுத்து ஒரு தலையணையை நெஞ்சுடன் அணைத்தவாறு நித்திரையாகி விட்டாள் அவள். கடலாடியதால் ஏற்பட்ட ஆயாசம் அத்து மீறி வந்து, ஆழ்ந்த துயிலுலகிற்கு அழைத்துச் சென்று விட்டது அவளை!

சற்றேறக் குறைய ஐந்தரை மணியளவில் துயில் சிறிது கலைந்து வரவும் விமலாவும் லோகாவும் கதவில் தட்டவும் சரியாக இருந்தது. பத்மா தான் ஜீன்ஸ் அணிந்திருந்ததை மறந்து படாரென்றெழுந்து கதவைத் திறந்து விட விமாலும் லோகாவும் வியப்போடு "அம்மாடி, டீச்சரைப் பார்! ஜீன்ஸ் அணிந்திருக்கிறா! மிகவும் அழகாயிருக்கிறது!" என்று கூச்சலிட்டார்கள். அந்தச் சப்தத்தைக் கேட்டு திரும்பிய பரமானந்தர் பத்மாவின் அழகுக் கோலத்தைக் கண்டு திகைத்துவிட்டார். பத்மா வெட்க மேலிட்டால் விமலாவையும் லோகாவையும் அறைக்குள் அனுமதித்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். பரமானந்தர் என்ன செய்வார்? பத்மாவுக்குத் தான் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று கருதித் தமது கைப்பிரம்பை எடுத்துக் கொண்டு வெளியே போகக் கிளம்பினார். போகுமுன் பலத்த குரலில் "பத்மா பத்மா’ எனக் கூவி "நான் வர எட்டு மணியாகும்" என்று கூறி விட்டுச் சென்றார் அவர்.

அதன் பின் குழந்தைகளோடு சேர்ந்து கும்மாளமிட்டாள் பத்மா. தான் நீச்சல் ராணியாகத் தெரியப்பட்ட விஷயத்தை விவரமாகச் சொல்லி "நாளைக் காலைப் பேப்பரிலே எனது படங்கள் நிறைய வரும், பாருங்களேன்!" என்று பெருமையாகக் கூறினாள் அவள். அதற்கு விமலா "அப்படியானால் அண்ணாவிடம் சொல்லி எல்லாப் பேப்பரையும் வாங்கி டீச்சரின் படங்கள் எல்லாவற்றையும் வெட்டி வைத்துக் கொள்ளப் போகிறேன்" என்று பளிச்சென்று பதிலளிதாள்

அண்ணா! அந்த வார்த்கைளைக் கேட்டதும் பத்மாவின் மனம் கமலநாதனைச் சுற்றிப் படர ஆரம்பித்தது. கமலநாதன் தன்னைப் பற்றியும் தன்னழகைப் பற்றியும் என்ன நினைக்கிறான்? அழகான பெண்ணைக் கண்டால் ஆண்கள் யாருக்குமே ஆசையும் சபலமும் ஏற்படுமென்பது அவளுக்குத் தெரியுமென்றாலும், தான் ஒரு பேரழகி என்பது இப்பொழுதுதான் உண்மையில் திட்டவட்டமாகவும் சந்தேகமில்லாமலும் அவளுக்குத் தெரிந்திருந்தது. கமலநாதனுக்கு முன்னால் தன் பேரழகு முழுவதையும் ஒரு முறை காட்டி, அவன் அதன் தாக்கத்துக்கு முன்னால் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. எனவே விமலாவிடம், "சீ, அண்ணாவிடம் போய், நான் நீச்சல் ராணியாகத் தெரியப்பட்டதைப் பற்றிப் பேசக் கூடாது. தெரியுமா?" என்றாள். இவ்வாறு சொன்னால் அவள் கட்டாயம் கமலநாதனிடம் தன்னைப் பற்றிப் பேசுவாளென்பதும், உடனேயே அது சம்பந்தமாக ஒரு வாக்குறுதியைத் தனக்கு அளிப்பாள் என்பதும் பத்மாவுக்குத் தெரியும். அவள் நம்பிக்கை வீண் போகவில்லை. ஏனெனில் விமலா உடனேயே "அதெப்படி முடியும்? வீடு போனதும் எல்லோருக்கும் இதைச் சொல்லிவிட்டுத் தான் மறு வேலை. முதற் சொல்லுவது அண்ணாவுக்குத்தான்" என்று கூறி விட்டாள்!

அடுத்த நாட் காலை கொழும்பு முழுவதும் நீச்சல் ராணி பத்மா பரமானந்தைப் பற்றித் தான் பேச்சு.. கொழும்பு மட்டுமல்ல, இலங்கை முழுவதுமே அவளைப் பற்றியே பேசியது. வெள்ளவத்தையிலிருந்த கல்யாணமாகாத எழுது வினைஞர் 'கிளபிங்'குகள் தொடக்கம், செட்டியார் தெருவிலுள்ள சைவக் கடை, ஜவுளிக் கடை வீறாக எங்கும் பத்மாவின் பெயரே அடிபட்டது. ஒரு சிலர் "சிச்சீ, தமிழ்ப் பெண்கள் கூட இப்படியாகி விட்டார்களே!" என்று நாலு பேர் மத்தியில் முகம் சுளித்த போதிலும், ஆட்களில்லாத நேரமாகப் பார்த்து, பத்திரிகையில் வந்திருந்த பத்மாவின் ஒய்யாரப் படங்களை ‘லென்ஸ்’ என்ற பூதக் கண்னாடியால் கூடப் பார்த்தார்கள்! ‘வளவளப்பான’ காகிதத்தில் அச்சடித்திருந்தார்களானால் இந்த ‘லென்ஸி’ல் அவள் கால்கள் எவ்வளவு ஜோராக இருக்கும்" என்று தம்முள் இரகசியமாகக் கூறிக் கொண்ட இவர்களில் பலர், "என்ன கண்ணராவி, நீச்சலுடையாம் நீச்சலுடை! எவ்வளவு அவலட்சணமாயிருக்கிறது!" என்று நண்பர்களிடம் பகிரங்கமாகக் கூறிக்கொண்டார்கள். ஹோட்டல்களில் தேநீர்ப் பட்டறையில் வேலை செய்யும் ‘டீ மேக்கர்’களும், ‘குசினி’யில் வேலை செய்த சமையற்காரர்களும் மட்டுமே இவ்வாறு இரட்டை வேஷம் போடவில்லை. பத்மாவின் படங்களை வெட்டி எடுத்துச் சுவர்களில் ஒட்டி வைத்துக் கொண்டார்கள் அவர்கள்! அடுத்த நாள் மட்டுமல்ல, அடுத்து இரண்டு மூன்று நாட்களாகவே அவள் பேச்சாகவே இருந்தது எங்கும். கொலீஜ் ரோட் 48ம் இலக்கத் தோட்டத்தைப் பொறுத்த வரையில், அந்த இரண்டு மூன்று நாட்களில் ஒரு பெரிய பூகம்பமே நடந்து முடிந்து விட்டது. அன்னம்மா அனுதாபத்துடன் பேசினாள். திராவிட தாசனோ தனது அபிமான சினிமா நட்சத்திரமான எம்.ஜி.ஆருடன் பத்மா கடற்கரைக் காதற் காட்சிகளில் தோன்றினால் எவ்வளவு கவர்ச்சியாயிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாள். குசுமாவோ பரமானந்தர் வீட்டிலில்லாத சமயம் வந்து பத்மாவை அவள் வெற்றிக்காகப் பாராட்டினாள். மூன்றாம் வீட்டு அவிஸ் நோனா முழுத் தோட்டத்திலும் செய்தியை இடை வீடின்றிப் பரப்பி விட, ஒரு சிலர் பத்மாவைப் பாராட்ட, இன்னும் சிலர் கிண்டலாகப் பேசவும் செய்தார்கள். தோட்டத்தில் வட்டிக்குப் பணம் கொடுத்து பிழைத்த கடைசி வீட்டுப் பூவுலிங்கத்தின் பொறாமைக்கார மகள் "ஆமாம் அங்கு வந்த பத்துப் பேரில் அவ அழகி. அதிலென்னாவாம்? இன்னும் நாங்கள் மரியாதையானவர்கள். இப்படி வெட்கமில்லாமல் நீச்சலுடை உடுத்துவோமா?" என்று கேட்டாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவளது தம்பி "ஆமாம், நீ நீச்சலுடை உடுத்தி உன் முகத்தில் முன்னே தள்ளிக் கொண்டிருக்கிற பல்லுகளில் இரண்டை சீனாக்காரன் கடையிலே போய்ப் புடுங்கிக் கொண்டு போயிருந்தால் உனக்குத்தான் பரிசு கிடைத்திருக்கும்! போக்கா, ஏன் அப்படிப் பேசுகிறாய்? பத்மா அக்கா நல்ல அழகு. நல்லவ கூட. காசு வாங்காமல் எத்தனை நாள் எனக்குப் பள்ளிப் பாடம் சொல்லித் தந்திருக்கிறா" என்று குறிப்பிட்டான். அதற்கு "போடா மடையா!" என்று சீறினாள் அக்கா. வெற்றிலைக் கடை வேலாயுதக் கிழவனுக்கு அவிஸ் நோனா செய்தியைச் சொல்லிப் பத்திரிகையில் கிடந்த பத்மாவின் படத்தைக் காட்டிய போது அவன் தன் மொட்டந் தலையைத் தடவி விட்டுக் கொண்டு "அப்படியா?" என்று கூறி அமைதியாகி விட்டான். அவன் மட்டும் தான், தான் கேட்ட செய்தியால் பாதிக்கப்படாதவன். "பத்மா நல்ல பெண், தமாஷ்காரி என்னோடு விளையாடுவதிலும் தலையில் குறும்பாகக் குட்டுவதிலும் அவளுக்குப் பிரியம்" என்ற நினைவைத் தவிர வேறொன்றுமே அவனுக்கு வரவில்லை. தோட்டத்தின் வாலிபர்களும் இளம் பெண்களும் பத்மாவை மீண்டும் மீண்டும் பார்க்க ஆசைப்பட்டார்கள். "ஆமாம், அந்தப் பெண் அழகுதான். அவள் நீச்சல் ராணியாகத் தெரியப்பட்டது நமது தோட்டத்துக்கே பெருமைதான்" என்று வஞ்சனையில்லாமல் ஜம்பமடித்துக் கொண்டார்கள் அவர்கள்.

பல்கலைக் கழகத்தைப் பொறுத்தமட்டில் பத்மா பெயர் பேசப்படாத இடமேயில்லை. இளம் பேராசிரியர், விரிவுரையாளர்கள் தொடக்கம் மாணவர்கள் வரை, எல்லோரும் பத்மாவைப் பார்க்கத் தவம் கிடந்தார்கள். பல தமிழ் மாணவர்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் நீச்சலழகியாகத் தெரியப்பட்டது ஒரு வித இனத் திருப்தியைக் கூடக் கொடுத்தது. "அது தமிழ்ப் பெண் குலத்துக்கே ஒரு பெருமை!" என்று குறிப்பிட்டான், அவர்களில் ஒருவன், சிற்றுண்டிச் சாலையில். "நல்ல பெருமை! என்னைப் பொறுத்த வரையில் அதை இழிவென்று நான் கருதுகிறேன்." என்று அதற்குப் பதிலளித்தான் இன்னொரு மாணவன். அது அவன் மனதிலிருந்து வந்த வார்த்தைகளல்ல. பெருமை பேசியவனின் அரசியல் பின்னவனுக்குப் பிடிக்காது. ஆகவே அவனுக்குச் சூடு கொடுக்கச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. ஒரு சில மாணவர்கள் "பத்மாவைத் திருமணம் செய்தாலோ" என்று கூட இரகசியமாகக் கற்பனை செய்து பார்த்தார்கள். வேறு சில மாணவர்கள் பத்மாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான கதைகளைக் கட்டி விட்டார்கள். அவதூறுக் கதைகளைப் பரப்புவதிலும் பேசுவதிலும் அவ்வளவு திருப்தி சிலருக்கு!

பெண் மாணவிகள் பலர் பத்மாவைப் பார்ப்பதற்காக அவள் போகுமிடங்களுக்குப் படை எடுத்தார்கள். ஒரு பல்கலைக் கழக மாணவி போட்டியில் வெற்றி பெற்றது, பொதுவாக அவர்களுக்குத் திருப்தியையே தந்தது என்றாலும் ஒரு சிலருக்குப் பொறாமையும் ஏற்படவே செய்தது. சில அழகான பெண்கள் "நானும் இப்படிப்பட்ட போட்டிகளில் பங்கு பற்ற வேண்டும், அழகை அதிகரிக்கவோ வேண்டும், எனது உடம்பின் இந்தப் பகுதி மிகவும் கொழுத்திருக்கிறது. அதைத் தேகாப்பியாசத்தால் குறைக்க வேண்டும். இந்தப் பகுதி மிகவும் சிறுத்திருக்கிறது. அப்பகுதியைப் பெரிதாக்க முயற்சி எடுக்க வேண்டும்" என்ற தோரணையில் சிந்தித்துக் கொண்டார்கள். தங்கமணியைப் பொறுத்த வரையில் அவளுக்குத் தாங்கொணாத ஆத்திரம். "இந்தப் பத்மா ஆச்சரியமான பெண். பார்ப்பதற்குப் பசுப் போல! மிகவும் வெட்கமுள்ளவள் போலவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளுகிறாள். ஆனால் காதல், நீச்சலுடைப் போட்டி, இவற்றுக்கெல்லாம் துணிந்து விடுகிறாள். இவளை எவ்வளவு காலத்துக்குப் பொறுப்பது!" என்று சினந்து கொண்டாள் அவள். அவளை ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது தங்கமணிக்கு.

கமலநாதன் வீட்டிலோ பத்மாவைப் பற்றி ஒரே அமர்க்களம். விமலாவும் லோகாவும் பத்திரிகைகளை எடுத்து அதிலிருந்த பத்மாவின் படங்கள் எல்லாவற்றையும் வெட்டி ஒரு பழைய வரைதற்கொப்பியில் ஒட்டி வைத்துக் கொண்டு, "எங்கள் டீச்சரின் படங்கள்" என்று வருவோர் போவோருக்கெல்லாம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கமலநாதனிடம் அடிக்கடி காட்டி "அண்ணா, டீச்சர் மிகவும் அழகுதானே!" என்று கேட்டார்கள். கமலநாதனோ தனக்கு அதில் அக்கறை இல்லை என்பது போல் காட்டிக் கொண்டாலும், உண்மையில் தனது படுக்கை அறையில் தனியாக இருந்த போது இரவு வெகு நேரம் வரை பத்மாவின் படங்களைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். "அந்த ஸ்ரீதர் கொடுத்து வைத்தவன். மிகவும் அதிர்ஷ்டசாலி." என்று பொறாமைப்பட்டான் அவன். பத்மாவைப் போன்ற அழகும் அறிவும் படைத்தவள் ஒருவனுக்கு மனைவியாகக் கிடைத்தால் அவனுக்கு அதை விட உலகில் வேறென்ன வேண்டும் என்று சிந்தித்தான் அவன். தன் கறுத்தடர்ந்த மீசையைத் தன் விரல்களால் தடவி விட்ட வண்ணமே அவன் "என் வாழ்க்கையில் பத்மா எனக்குக் கிடைப்பதற்கு வழியேயில்லை. அவள் ஏற்கனவே இன்னொருவன் காதலி. அவனது ஆலிங்கனங்களுக்கும் அவள் ஆளாகியிருக்கலாம். யாருக்குத் தெரியும்? சில சமயம் அதற்கு ஒரு படி மேலே கூட அவர்கள் போயிருக்கலாம். அப்படியானால் அவள் எச்சிற்படுத்தப்பட்ட மாங்கனி. இருந்தாலும் கூட அவள் எனக்குக் கிடைத்தால் நான் அவளை ஏற்றுக் கொள்ளவே செய்வேன்...! ஆனால் இது நடக்கக் கூடிய காரியமா? எச்சிற்படுத்தப்பட்ட மாங்கனி ருசியிலே குறைவதில்லை. ஆனால் சுகாதாரத்துக்குக் கேடுதான். முனிசிப்பல் சுகாதார பரிசோதகனான எனக்கு இது தெரியாததல்ல. ஆனால் எச்சிற்படுத்தியவன் சுகதேகியாய் இருந்தால் கிருமிகள் இருக்க இடமில்லை. அப்படிப்பட்ட நிலையில் எச்சிற்கனியால் கூட ஆபத்தில்லை. ஏன் நான் எச்சிற்படுத்திய உணவை எனது தங்கைகளும் அவர்கள் எச்சிற்படுத்தியதை நானும் வீட்டில் சாப்பிடுவதில்லையா? நேற்றுக் கூட லோகா தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த இனிப்பு மிட்டாயிற் பாதியை தன் வாயாற் கடித்து என்னை அண்னாந்து பார்க்கும் படி சொல்லி என் வாயில் இடவில்லையா? நான் நாளைக்கு வேலைக்குப் போகும் வழியில் அவள் வீட்டிற்குப் போய் அவள் நீச்சலழகியாகத் தெரியப்பட்டதற்கு என் நல்வாழ்த்தைத் தெரிவிக்கவே வேண்டும். உண்மையில் பத்திரிகைகளில் வெளி வந்த படங்களைக் கொண்டு பார்த்தால், நீச்சலுடையில் அவளது அழகு வியப்பூட்டவதாகவோ இருக்கிறது. உடுக்குப் போன்ற அவளது உருவ அமைப்பு சேலைக் கூடாக இவ்வளவு அழகாகத் தெரிவதில்லை. பத்மாவின் அழகு பாராட்டுக்குரியது தான் என்று பலவாறு சிந்தித்தான் அவன்.

அடுத்த நாள் கமலநாதன் தனது மோட்டார் சைக்கிளில் பத்மா வீட்டுக்குச் சென்ற போது, அவனது அதிர்ஷ்டம் போலும், பரமானந்தர் அங்கிருக்கவில்லை. பத்மாவின் செங்கரங்களை அவன் தன் கரங்களால் இறுகப் பற்றிக் குலுக்கி விட்டு, "அழகு ராணிக்கு என் நல்வாழ்த்துகள்!" என்று அவன் கூறிய போது பத்மா அடைந்த போது பெருமை கொஞ்சமல்ல. அவன் மீசை அவளைக் கவர்ந்திழுக்க, அவள், "என்னை எல்லோரும் அழகி அழகி என்று பாராட்டுவது உண்மையில் எனக்கு வெட்கமாயிருக்கிறது. நான் என்ன அவ்வளவு அழகியா? ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் தெரியப்பட்டு விட்டேன்!" என்றாள். "சே, அப்படிச் சொல்லிவிட முடியாது! நான் உங்களை விட அழகான பெண்ணை என் வாழ்க்கையிலேயே கண்டதில்லை" என்றான் கமலநாதன்.

அதைக் கேட்ட பத்மாவின் மனம் இன்பத்தால் நிறைந்தது. அவனோடு நீண்ட நேரம் உரையாடி மகிழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனால் கமலநாதனுக்கோ வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் "பத்மா உன்னை நான் வேறு நேரத்தில் ஆறுதலாகக் காணுவேன்" என்று கூறிவிட்டு, பின் திடீரென, "எங்கள் முனிசிப்பல் விளையாட்டுச் சங்கத்தின் வருடாந்த நடன விருந்து சீக்கிரம் நடைபெறும். கட்டாயம் நீங்கள் அதற்கு வர வேண்டும். நான் தான் சங்கத்தின் காரியதரிசி!" என்றாள்.

பத்மா, "பார்ப்போம் வசதியிருந்தால் வருகிறேன்." என்று கூற, கமலநாதன் அவள் கரங்களை மீண்டும் ஒரு தடவை குலுக்கிவிட்டுத் தனது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டான்.

மோட்டார் சைக்கில் பேரிரைச்சலுடன் காற்றைக் கிழித்துச் செல்ல, பத்மா கமலநாதனின் பின்னழகைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றாள். சைக்கிளின் வெறுமையான பின்னாசனம் அவள் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதிலிருந்து மோட்டார் சைக்கிளின் பின்னாசனத்தில் தன் காதலனோடு வீதியில் பவனி வர வேண்டுமென்று அவன் கண்டு வந்த ஆசைக் கனவு ஒரு கணம் உயிர்த்தெழுந்தது அப்போது.

இவை நடந்து இரண்டு மூன்று தினங்கள் கழித்து, பத்மாவும் ஸ்ரீதரும் பலகலைக் கழகத்தில் சந்தித்த ‘எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரு’க்கு ஐஸ்கிறீம் அருந்தச் சென்ற பொழுது அங்கே சுரேசும் எதிர்ப்பட, எல்லோரும் ஐஸ்கிறீம் அருந்த ஒரு மேசையில் உட்கார்ந்தார்கள். மணவாள சுந்தரேஸ்வரருக்குப் பத்மா செய்துகொண்ட நேர்த்திக் கடன் பற்றிப் பேச்சு எழும்பியது.

"இன்று மாலை நான் எப்படியும் சுந்தரேஸ்வரர் கோவிலுக்குப் போக வேண்டும். நேர்த்திக் கடனை முடிக்க வேண்டும். ஸ்ரீதர், நீங்களும் என்னுடன் வரவேண்டும், தெரிந்ததா? என்றாள் பத்மா.

சுரேஷ் கேலியாக, "காரியந்தான் முடிந்து விட்டதே. சுந்தரேஸ்வரர் நீ கோரிய வெற்றியைத் தந்துவிடார். இனியேன் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பேசாது எங்கள் அலுவலைப் பார்க்க வேண்டியது தானே?" என்றான்.

பத்மா முகத்தைச் சுளித்துக் கொண்டு, "நன்றாயிருக்கிறது உங்கள் பேச்சு! கடவுளைக் கூட ஏமாற்றப் பார்க்கிறீர்களே? வைத்த நேர்த்திக் கடனை செய்யாது விட்டால், அதனால் பல விபரீதங்கள் ஏற்படும். தெரிந்ததா?" என்றாள்.

சுரேஷ் சிரித்துக் கொண்டு "கடவுளை ஏமாற்றிய இடையன் மனைவியின் கதை உங்களுக்குத் தெரியாதா? அவள் மிகவும் புத்திசாலி என்பதே என் கருத்து." என்றான்.

பத்மா, "அப்படி ஒரு கதை இருக்கிறதா? சரிதான். அப்படியானால் அந்தப் புத்திசாலியின் கதையைச் சொல்லுங்கள் கேட்போம்!" என்றாள். ஸ்ரீதரும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க ஆரம்பித்தான். சுரேசுக்கோ கதை சொல்வதில் ஆசை. அவர்களுக்கோ கேட்பதில் ஆசை. கதை படலம் ஆரம்பமாயிற்று.

"ஓர் இடையன் நோய்வாய்ப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தான். இடையன் மனைவி பக்கத்திலிருந்து பணிவிடை செய்து கொண்டிருந்தான். திடீரென அவள் கடவுளுக்கு ஒரு நேர்த்திக் கடன் வைத்தாள். ‘கடவுளே!! வைரவரே! என் கணவரைக் காப்பாற்று. காப்பாற்றினால், எங்களிடமுள்ள நூறு ஆடுகளையும் உனக்குப் பலி அளிப்பேன்," என்றாள். அதைக் கேட்ட இடையன் "பைத்தியக்காரி. எங்களிடமுள்ளதே நூறு ஆடுகள். அவை யாவற்றையும் வைரவருக்குக் கொடுத்துவிட்டால் நாங்கள் சீவிப்பது எப்படி?" என்று கேட்டான். உடனே இடையன் மனைவி இடையன் காதுள் குனிந்து ‘எனக்குப் பைத்தியமில்லை. அது நான் சும்மா சொன்னனான். எதையாவது சொல்லி உங்களைச் சுகமாக்க வேண்டுமென்பதற்காக என்றாளாம்!"

பத்மாவும் ஸ்ரீதரும் சிரித்தார்கள். "சுரேசுக்கு ஆண்டவன் மீது என்ன கோபம்? எந்த நேரமும் கிண்டல் செய்கிறார்" என்றாள் பத்மா. அதன் பின் சுந்தரேஸ்வரர் செய்த உதவிக்குக் கைம்மாறாகப் பத்மாவும் ஸ்ரீதரும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிப் பேச்செழுந்தது.

ஸ்ரீதர், "அம்மனுக்குப் பத்மாவும் நானும் ஒரு தங்கப் பதக்கம் வாங்கி அளிக்கப் போகிறோம். எல்லோருமாகச் செட்டியார் தெருவுக்குப் போய் ஒரு பதக்கம் வாங்குவோம் வருகிறீர்களா?" என்றான்.

வழியில் காரிலே ஸ்ரீதர் தனது அன்றைய வேலைத் திட்டத்தைப் பற்றிப் பத்மாவிடம் விவரித்தான். "சுந்தரேஸ்வரர் கோவிலில் ஐயர் தொடக்கம் கோவில் மேளம் வரை எல்லோரும் என்னை நன்கு அறிந்தவர்கள். ஆகவே இன்று உன்னோடு ஜோடியாக நான் அங்கு செல்ல விரும்பவில்லை. நீ இரவு ஆறு மணியளவில் அங்கு வந்து காணிக்கையை ஐயரிடம் கொடுத்துப் பூசையை முடித்துக் கொண்டு மெல்லச் சண்டேசுரர் சந்நிதிக்கு வா. அங்கே நாம் சந்தித்துக் கொள்வோம். அப்புறம் நான் அங்கிருந்து உன்னை வீட்டுக்குக் கொண்டு போய் விடுகிறேன்." என்றான். பத்மா "ஆகட்டும்" என்று தலையை அசைத்தாள். ஆனால் சண்டேசுரர் சந்நிதி என்றால் என்ன என்பது பத்மாவுக்கு விளங்க வில்லை. கொழும்பிலே பிறந்து வளர்ந்த அவள் கோயிலுக்கு இடையிடையே போய் வந்த போதிலும், முறையாக இந்து மதப் பயிற்சியைப் பெறாதிருந்ததே இதற்குக் காரணம். "சண்டேசுரர் சந்நிதியா, அது எங்கே?" என்றாள் பத்மா. ஸ்ரீதர் திடுக்கிட்டு விட்டான். "என்ன, இது கூடத் தெரியாதா? ஓர் இந்துப் பெண்ணுக்கு இது வெட்கமில்லையா?" என்றான் ஆச்சரியத்துடன்.

பின்னர் சண்டேசுரரைப் பற்றி விவரமாகச் சொல்ல ஆரம்பித்தான் அவன். "கோவிலிலே கடைசியாக நாம் கும்பிட வேண்டிய மூர்த்தி சண்டேசுர மூர்த்திதான். இவர் பொதுவாகக் கோவிலின் மூல ஸ்தானத்துக்குப் பின்னே இருப்பார். இன்னும் அவரைக் கும்பிடுவதற்குக் கூடத் தனி முறை இருக்கிறது. அவர் எப்பொழுதும் யோக நித்திரையிலிருப்பதால் அவரை விழித்தெழச் செய்த பின்பே நாம் அவரைக் கும்பிட வேண்டும். அவரை விழிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டுமென்று தெரியுமா?" என்று பத்மாவை வினவினான்.

தனக்குத் தெரியாது என்று பதிலளித்தாள் அவள். "மூன்று முறை சண்டேசுரர் காதுக்குச் சமீபமாக கை தட்ட வேண்டும்" என்றான் ஸ்ரீதர். அதன் பின் "எங்கள் அம்மாவுக்கு இதெல்லாம் நன்றாய் தெரியும். எனக்கு அம்மாதான் இவற்றைச் சொல்லிக் கொடுத்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும்போது நீ இவற்றை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும், பத்மா" என்றான் ஆர்வத்துடன்.

பத்மா "கட்டாயம் நான் இவற்றைக் கற்றுக் கொள்வேன்" என்றாள்.

சுரேஷோ அவர்களின் பேச்சைப் பின்னாசனத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தான். "யாழ்ப்பாணப் பெண்கள் வேறெந்தப் பரீட்சையில் சித்தி எய்தினாலும் எய்தாவிட்டாலும் இப்படிப்பட்ட விஷயங்களில் பரீட்சை வைத்தால், நிச்சயம் சித்தி அடையவே செய்வார்கள்" என்றான் அவன். "என்னைப் பொறுத்த வரையில் சண்டேசுரரின் யோக நித்திரையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் சிறுவனாயிருந்த போது சண்டேசுரரின் காதுகளில் நானும் கை தட்டி இருக்கிறேன். அவருக்குக் காது மந்தமென்றும் சற்றுப் பலமாக கை தட்டினால்தான் அவர் கண்ணை விழித்துப் பார்ப்பாரென்றும் மற்றப் பிள்ளைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்" என்றும் கூறினான் அவன். சுரேசுக்கு எவ்வளவு உலக விஷயங்களும் இலக்கிய விஷயங்களும் தெரிந்திருந்தாலும் கோவில் சம்பந்தமான விஷயங்களில் ஸ்ரீதருக்கு இருந்த அறிவு அவனுக்கில்லை. எந்தப் பக்கத்தைப் பார்த்துக் கும்பிட வேண்டும், எந்தத் தெய்வத்தை முதலில் கும்பிட வேண்டும், எவரை அடுத்தபடி கும்பிட வேண்டுமென்பது போன்ற பிரச்சினைகளை அவன் விடுவிப்பது போல் சுரேஷால் இலகுவில் விடுவிக்க முடியாது. ஸ்ரீதர் கோவிற் சொந்தக்காரனல்லவா, ஆகவே சண்டேசுரரைப் பற்றித் தனக்கிருந்த ஐயங்கள் சிலவற்றை ஸ்ரீதரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினான் சுரேஷ்.

"சண்டேசுரர் யார்? ஒரு தெய்வமா? அப்படியானால் சிவ பெருமானுக்கு என்ன முறை? அதாவது உமை மனைவி, குமரக் கடவுள் மகன், விஷ்ணு மைத்துனன் என்பது போல!" இப்படிச் சில முக்கியமான கேள்விகளைத் தூக்கிப் போட்டான் சுரேஷ். ஸ்ரீதர் அவற்றுக்கெல்லாம் டக் டக் என்று பதிலளித்து வந்ததைக் கண்டு பத்மா பெரிது வியப்படைந்தாள். பார்க்கப் போனால் "சுரேஷ் எவ்வளவுதான் பெரிய ‘புரொபசர்’ போலப் பேசிக் கொண்டாலும், ஸ்ரீதரும் அவனுக்குக் குறைந்தவனல்ல" என்று மகிழ்ச்சியடைந்தாள் அவள்.

"சண்டேசுரர் ஒரு தெய்வமல்ல. அவர் ஒரு நாயனார். அவரது பக்தியை மெச்சிப் பரம சிவன் அவரைத் தொண்டர் நாயகனக நியமனம் செய்திருக்கிறார். உண்மையில் சிவ பெருமானுக்கும் உமா தேவிக்கும் அளிக்கும் பொருள்கள் யாவும் முடிவில் சண்டேசுரருக்கே உரியன" என்று விளக்கினான் ஸ்ரீதர். இந்த ருசிகரமான தகவல்களைக் கேட்கக் கேட்கத் தானும் புராணங்களைப் படித்தும் பெரியவர்களுடன் பேசியும் இவ்விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள் பத்மா.

இதற்கிடையில் செட்டியார் தெரு வந்து விடவே, பத்மாவும் ஸ்ரீதரும் அங்கே இருந்த ஒரு நகைக் கடைக்குப் போய் அன்று மாலை அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதற்காக ஒரு தங்கப் பதக்கத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். பத்மா அதனை வீட்டுக் எடுத்துச் சென்று, ஐந்தரை மணியளவில் கோவிலுக்கு வரும் போது, அதனை இதர நைவேத்தியப் பொருள்களுடன் எடுத்து வர வேண்டுமென்பது ஸ்ரீதரின் ஏற்பாடு.

11-ம் அத்தியாயம்: சுந்தரேஸ்வரர் சந்நிதியில் (தொடர்ச்சி)

அன்று மாலை கோவிலுக்குப் போவதற்காக ஸ்ரீதர் குளித்து முழுகிச் சந்தனப் பொட்டிட்டு அதற்கு மேல் ஒரு குங்குமப் பொட்டுமிட்டுக் கொண்டிருந்த போது, அறையுள் அழைத்து சுரேஷ் ஸ்ரீதரின் பக்திக் கோலத்தைக் கண்டு "அடி சக்கை! கோவிலுக்கு ‘ரெடி’யாகிறாய் போலிருக்கிறது! நல்ல வேஷப் பொருத்தம். அசல் பக்தனாகக் காட்சியளிக்கிறாய்" என்றான்.

அதற்கு ஸ்ரீதர், "சுரேஷ்! நீயும் வா! ஏதாவது சிரிப்பாய்ப் பேசிக் கொண்டிருப்பாயல்லவா! நீயிருந்தால் நேரம் போவதே தெரியாது. புறப்படு. ஆனால் குளிக்காமல் வரக் கூடாது." என்றான்.

சுரேஷ், "ஓகோ கோவிலுக்கு எப்படிப் போக வேண்டுமென்று எனக்குச் சொல்லிக் கொடுக்கிறாய் போலிருக்கிறது. நீ வர வரப் பெரிய ஆளாகி வருகிறாய்!" என்றாள்.

ஸ்ரீதர், "ஆம் கோவிலுக்கு எப்படிப் போக வேண்டுமென்பது சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயம் தானே! இதெல்லாம் எனக்கு மனப்பாடம். சின்ன வயதில் எங்கள் வீட்டுப் பண்டிதர் சின்னையா பாரதியார் எனக்கு ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையைப் படிப்பித்து வைத்தார். அதில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா?" என்றாள்.

"சொல்லு!" என்றான் சுரேஷ்.

"ஸ்நானம் செய்து, தோய்த்துலர்ந்து வஸ்திரம் தரித்து, சந்தியா வந்தனம் முதலியன முடித்துக் கொண்டு, தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, கர்ப்பூரம், முதலியன வைக்கப்பட்ட பாத்திரத்தைத் தாமே எடுத்துக் கொண்டேனும் சுரேஷைக் கொண்டேனும் வாகனாதிகளின்றி நடந்து போதல் வேண்டும்."

"சுரேஷ் என்று சொல்லாதே. பத்மா என்று சொல்லு!"

நண்பர்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள். ஸ்ரீதர் திடீரென சுரேஷை நோக்கி "அது சரி. உன்னிடம் நானொன்று கேட்க விரும்புகிறேன். பத்மாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான்.

"நான் என்ன நினைப்பது? அது தான் அதிகார் அம்பலவாணர் உட்படப் பென்னாம் பெரிய மனுஷர்களே தீர்மானித்து விட்டார்களே, பத்மா பேரழகி என்று!" என்றான் சுரேஷ்.

"நான் அதைக் கேட்கவில்லை. அவள் அழகு கிடக்கட்டும். மற்ற விஷயங்களில்?"

"பத்மா புத்திசாலி, படித்திருக்கிறாள். உன்னைப் போலவே கடவுளிலும் பக்தி! எப்போதும் உற்சாகமாயிருக்கிறாள். உனக்கேற்ற ஜோடிதான் பத்மா. சந்தேகமேயில்லை."

"அப்படிச் சொல்லு. அதைத் தான் நான் கேட்டேன்." இவ்வாறு சொல்லிக் கொண்டு பெரிய சரிகைக் கரை விட்ட வேட்டியை எடுத்து உடுக்க ஆரம்பித்தான் ஸ்ரீதர். சுரேஷ் அவனைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு "வேஷம் நன்றாக இருக்கிறது. அசல் பணக்காரப் பக்தன். பார்க்கப் போனால் வாழ்க்கையே ஒரு நாடகந்தானே? வேஷம் போடுவதே எல்லோர் வேலையுமாயிருக்கிறது" என்றான்.

"ஏன் அப்படிச் சொல்லுகிறாய்!" என்றான் ஸ்ரீதர்.

"ஏனா? உண்மையைச் சொன்னேன். இப்போது கோவிலுக்குப் புறப்படுகிறாய். அதனால் பக்தன் வேஷம். காலையில் பள்ளிக் கூடம் சென்றாய் - மாணவ வேஷத்தில்! சிறிது சுகமிலாவிட்டால் தொள தொளப்பாக உடுத்திக் கொண்டு நோயாளி வேஷம் போடுகிறோம். கல்யாணத்தன்று மாப்பிள்ளை வேஷம். அடுத்த வாரம் நான் இங்கிலாந்துக்குப் புறப்படுகிறேன் - பிரயாணி வேஷம் போட்டுக் கொண்டு. இப்படி நேரத்துக்கும் இடத்துக்கும் தக்கபடி உடைகளை மாற்றிக் கொண்டிருப்பது தானே எல்லோர் வேலையுமாயிருக்கிறது! இப்பொழுது உன்னுடைய மேக்கப்பையே பாரேன் . நெற்றியில் சந்தனம், குங்குமம் - எல்லாம் வேஷம் தானே? இன்னும் வாத்தியார், வாத்தியார் வேஷம் போடுகிறார். கிளார்க், கிளார்க் வேஷம் போடுகிறான். போலீஸ்காரன், போலீஸ்காரன் வேஷம் போடுகிறான். ஆகவே வேஷம் போடுவது நாடகத்துக்கோ சினிமாவுக்கோதான் என்று நினைத்து விடாதே. சாதாரண வாழ்க்கையே வேஷங்களால் தான் நடைபெறுகிறது. ஏன் அதிகார் அம்பலவாணரைப் பாரேன்! தலைப்பாகையும் ஆளுமாகப் பார்த்தவர் பயந்து மரியாதை செய்யும்படியாக ஒரு வேஷம்!" என்று ஒரு குட்டிப் பிரசங்கமே பண்ணிவிட்டான் சுரேஷ்.

"அது சரி, என்னைப் பார்த்தால் பணக்காரப் பக்தன் போலிருக்கிறது என்றாய். பிச்சைக்காரப் பக்தன் எப்படியிருப்பான்?" என்றான் ஸ்ரீதர்.

"அவனுக்கேது உன் போல் பல நூறு ரூபா பெறுமதியான பட்டு வேட்டி, வைர மோதிரம்! இவற்றுடன் உன்னைப் பார்த்தால் பளிச்சென்று பணக்காரனென்ற நினைவு வரத்தானே செய்கிறது? இன்னும் ஒன்றை யோசித்தாயா? நீ சாதாரணமாக அணியும் காற்சட்டை சேர்ட்டை விட இந்தப் பட்டு வேட்டியும் சாங்கையும் அதிக விலையல்லவா? பார்க்கப் போனால் பணக்காரர்கள் கோவிலுக்குப் போகும்போது, தமது மத நூல்களில் கூறியுள்ளதற்கு மாறாக மிக்க படாடோபமாக அல்லவா உடுத்தி செல்லுகிறார்கள்?" என்றான்.

ஸ்ரீதர் தன் தலைமயிரை மீண்டும் மீண்டும் அழகாக வாரி விட்ட வண்ணமே சுரேஷின் பேச்சை ‘உம்’ கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"இன்றைய உலகில் கோவில் கூடப் பணக்காரருக்குத்தான். அர்ச்சனைக்குக் கூட டிக்கெட் எடுக்க வேண்டும். அதிலும் ‘கிரேட்’ இருக்கிறது. ஒரு ரூபாவுக்கும் பூசை செய்யலாம். ஒன்பது ரூபாவுக்கும் செய்யலாம். அதிக காசு செலவழிப்பவனுக்குக் கடவுள் அதிகக் கருணை காட்டுவாரோ என்னவோ? இன்னும் காலையிலிருந்து மாலை வரை தொழிலும் வீட்டு வேலையுமாக இருக்கும் ஒருவன், அவற்றை விடுத்துக் கோவிலுக்குப் போய் வரும் போது, அவனுக்குப் பண நஷ்டம் ஏற்படுவதோடு, பஸ் செலவு முதலியனவும் உண்டு. ஆகவே பக்திக்குக் கூடப் பணம் தேவை!"

"சுரேஷ், நீ இதில் பிழை விடுகிறாய். பணக்காரன் ஐம்பது ரூபாவுக்குப் பூசை செய்தால் ஏழை ஐம்பது சதத்திலேயே அதை முடிக்கலாம். கடவுள் இருவருக்கும் ஒரே விதமாகத்தான் அருள் செய்வார் என்று அம்மா சொல்லுவாள். சின்னையா பாரதியார் கூட அப்படித்தான் சொல்லுவார். கடவுளுக்கு வேண்டியது காசல்ல, பூவல்ல, நைவேத்தியமுமல்ல. உனக்குத் தெரியுமா சுவாமி விபுலானந்தரின் "வெள்ளை நிறப் பூ" என்ற பாட்டு"

"தெரியாது, சொல்லு..."
"வெள்ளை நிறப் பூவுமல்ல
வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது!
- இப்படிப் பாடியிருக்கிறார் அவர்"

"கருத்தை நான் ஏற்றால் என்ன, ஏற்காவிட்டால் என்ன, இது அழகான பாட்டு. நானும் அதைப் பாடம் பண்ணிக் கொள்ள விரும்புகிறேன்."

சுரேஷின் இவ்வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீதர், "சுரேஷ் நீ என்னை விட்டு இங்கிலாந்துக்குப் போகப் போகிறாய். நீ பக்கத்திலில்லாமல் நான் என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை" என்றான்.

"உனக்குத்தான் இப்பொழுது பத்மா இருக்கிறாளே! அவளைச் சீக்கிரம் கல்யாணம் செய்து ‘கிஷ்கிந்தா’வில் இதே அறையில் குடியேற்றி விடு. அப்பொழுது அறையும் இப்படியிருக்காது. மிகவும் அழகாய் வைத்திருப்பாள். மேலும் இப்பொழுது ‘கிஷ்கிந்தா’ தன் பெயருக்கேற்ற படி பிரமச்சாரிக் குரங்குகளின் வீடாகத்தானே இருக்கிறது? நான் அனுமான், நீ சுக்கிரீவன்! வேலைக்காரர்கள் வானரங்கள்! உங்க அப்பா பொருத்தமாகத்தான் வானரங்களின் ஊர்ப் பெயரை இவ்வீட்டுக்கு வைத்திருக்கிறார். ஆனால் பத்மா வந்ததும் இந்த வீடு கிஷ்கிந்தாவாக இருக்காது. அயோத்தியாவாக மாறிவிடும். இராமன் இருக்குமிடம் ‘அயோத்தியா’ என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இராமன் இருக்குமிடம் அயோத்தியாவல்ல. சீதையோடு அவனிருக்குமிடம் தான் அயோத்தியா! ஸ்ரீதர், ஓர் ஆச்சரியமான விஷயத்தைப் பார்த்தாயா, உனக்கும் பத்மாவுக்கும் இருக்கும் பெயர் பொருத்தம். ஸ்ரீதர் என்றால் விஷ்ணு, பத்மா என்றால் இலட்சுமி! விஷ்ணு, இலட்சுமி ஆகியவர்களின் மானிட உருவங்கள் தானே இராமரும் சீதையும்! அவர்களின் வீட்டுக்கு ‘அயோத்தியா’ என்பது தான் பொருத்தமான பெயர். பெயரை மாற்றி விடு."

"பெயரை மாற்றுவது கூடாது. அப்பாவுக்கு அது பிடிக்குமோ என்னவோ? உனக்குத் தெரியுமா. சிலருக்கு இராமனை விட அனுமானில் தான் மதிப்பு அதிகம். அப்பாவுக்கும் அப்படியிருக்கலாம். ஆகவே ஒரு புதிய விட்டைக் கட்டி அதற்கு ‘அயோத்தியா’ என்று பெயர் வைத்து விட்டால் போகிறது. பத்மாவும் நானும் அங்கே வசிப்போம். நீ இங்கிலாந்திலிருந்து வந்ததும் நேரே அங்கு வந்து எங்களைக் காண்.’

ஸ்ரீதர் இவ்வாறு பேசி முடிப்பதற்கும் உடைகள் முழுவதையும் உடுத்தி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவன் சுரேஷின் முன்னால் கம்பீரமாகத் திரும்பி நின்று கொண்டு "சுரேஷ், என்னைப் பார், பக்தன் வேஷம் நன்றாயிருக்கிறதா? நான் அழகாயிருக்கிறேனா?" என்று கேட்டான்.

"பக்தன் வேஷமா? நான் வேடிக்கைக்காக அல்லவா பக்த வேஷம் என்று சொன்னேன். உண்மையில் நீ மாப்பிள்ளை போலல்லவா இருக்கிறாய்? ஆனால் உன் அழகைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். பத்மாவிடம் கேள்" என்றான் சுரேஷ்.

"பத்மாவிடம் கேட்பதா? என்னைப் போல் அழகானவன் உலகிலேயே இல்லையென்று என்னிடம் ஆயிரம் தடவை சொல்லி விட்டாள்!" என்று பெருமையாக முகத்தை நிமிர்த்திச் சொன்னான் ஸ்ரீதர்.

"அப்படியா? அப்படியானால் அனுமானாகிய நீ கிஷ்கிந்தாவின் இந்தச் சுக்கிரீவனை விட அழகென்கிறாய்! சரி. இருந்து விட்டுப் போகட்டும்" என்றான் சுரேஷ்.

"இல்லை நீயும் அழகுதான்" என்றான் ஸ்ரீதர், சுரேஷைத் தேற்றுவதற்காக. சுரேஷ் சிரித்தான். ஸ்ரீதரை அவன் தன் நண்பனாகக் கருதிய போதிலும் ஏனோ அவனை ஒரு குழந்தையாகக் கருதுவதையும் அவனால் விட்டு விட முடிவதில்லை.

"சரி நேரமாகிறது போ. பத்மா உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்" என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் சுந்தரேஸ்வரர் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே பத்மா கோபுர வாசலில் ஒரு பித்தளைத் தட்டில் தேங்காய், வாழைப்பழம், புஷ்பம் முதலியவற்றை ஏந்திய தட்டுடன் நின்று கொண்டிருந்தாள். நெற்றியில் குங்குமப் பொட்டுடன் தனியே ஒரு மல்லிகை மலர் போல், அவள் அங்கே நின்று கொண்டிருந்த காட்சி அவனை அப்படியே மெய் மறக்கச் செய்துவிட்டது! வெள்ளை நிறச் சேலையுடுத்தித் தூய்மையின் மறு உருவமாகக் காட்சியளித்த பத்மா அவன் மனதில் அப்பொழுது தான் காதலிக்கும் ஒரு பெண்ணாகத் தோன்றவில்லை. வணங்குதற்குரிய தெய்வத் திருமகள் ஒருத்தி தனக்கு அருள் புரிவதற்காக அங்கே நின்று கொண்டிருப்பது போன்ற மயக்கம் ஏற்பட்டது அவனுக்கு. அவளது வெள்ளைப் பாதங்களைத் தொட்டு வணங்கலாம் போலிருந்தது. அந்த நினைவின் உந்தலிலே அவன் கண்கள் பாதங்களிற் சஞ்சரித்த போது, அவற்றை அழகிய வெள்ளிப் பாதசரங்கள் அவள் தரித்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தான் அவன். பத்மாவுக்கு எத்தகைய அழகுணர்ச்சி என்று வியப்படைந்தான். பாதசரங்களை அவள் எங்கே வாங்கினாள் என்று கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

நீச்சலுடை மோகினியாகத் தெரியப்பட்ட அவள் உண்மையில் நீச்சலுடையிலும் பார்க்க இந்த உடையில் அல்லவா மிகவும் அழகாயிருக்கிறாள் என்று எண்ணினான் அவன். நீச்சலுடையில், தெரியும் மலைப் பாம்பு போன்ற ஒரு மிருக அழகு அவளிடம் காணப்பட்டது. விஷம் தோய்ந்த அவ்வழகு அவளை ஒரு விளையாட்டுப் பொம்மை போலத் தோன்ற செய்ததல்லாமல், புனிதமான பூப்போலத் தோன்றும் படி செய்யவில்லை. இப்பொழுதோ அவள் தலையிலணியத்தக்க ஒரு மலர் போலக் காட்சியளிக்கிறாள். அவள் பார்வையிலும் உடலிலுமிருந்து விஷம் பிரவகிக்க வில்லை. அமிர்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.

என்றாலும் பத்மா மீது அவனுக்கு ஒரு கோபமும் ஏற்படச் செய்தது. அவள் வெள்ளை உடுத்திருந்ததே, அதற்குக் காரணம், கன்னிப் பெண்களும், சுமங்கலிகளும் வெள்ளை கறுப்புச் சேலைகளை அணியக் கூடாது என்பது சிவநேசரின் கொள்கை. உண்மையில் அவள் தாயார் ஒரு போதும் வெள்ளை உடுத்தி அவன் கண்டதேயில்லை. வெள்ளை விதவைகளுக்கும் கருமை சோகத்துக்கும் உரியது என்ற கொள்கை அவர்கள் வீட்டில் என்றும் நிலை பெற்றிருந்த ஒன்றாகும். ஆனால் "பாவம், பத்மாவுக்கு இவை ஒன்றும் தெரியாது. அவளுக்கு இவற்றைச் சொல்லித் தர யார் இருக்கிறார்கள்? தருணம் வரும்போது நான்தான் இவற்றை அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்!" என்று தனக்குள் தானே கூறிக் கொண்டான் அவன்.

இக் கருத்தை ஸ்ரீதர் சுரேஷிடம் கூறியிருந்தால், அவன் என்ன சொல்லியிருப்பான்? "ஓகோ மூட நம்பிக்கைகளில் பத்மாவுக்கு ஒரு ‘கோர்ஸ்’ கொடுக்கப் போகிறாயா என்ன?" என்று கேட்டிருப்பானல்லவா? ஒருவருக்கு அவசியமான அறிவாகப்படுவது இன்னொருவனுக்கு மூட நம்பிக்கையாகத் தெரியும் விசித்திரத்தை எண்ணி ஸ்ரீதர் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான்.

ஸ்ரீதர் கோபுர வாசலில் பத்மாவிடம் அதிகம் பேச விரும்ப வில்லை. கோவிலிலிருந்த கணக்கப்பிள்ளை, தவசிப்பிள்ளை தொடக்கம் ஐயர் குடும்பம் - எல்லோரும் அவனை நன்கறிந்தவர்களாயிருந்ததே இதற்குக் காரணம். ஆகவே சற்று எட்ட நின்ற படியே "பத்மா, போய்ப் பூசையை முடித்துக் கொண்டு நான் சொன்னது போல் சண்டேசுரர் சந்நிதிக்கு வா" என்று கூறிவிட்டுத் தான் தனியாகக் கோவிலுக்குள் சென்றான் அவன். பத்மாவும் தனியே மறு பக்கம் திரும்பிக் கொண்டு நடந்தாள். ஸ்ரீதர் அவளை ஒரு தரம் பார்த்துப் புன்னகை பரிமாறிக் கொள்ள விரும்பி, அவள் முகத்தை நோக்கினான். ஆனால் அவளோ தான் தன் முழு ஜன்மத்திலேயும் ஸ்ரீதரைக் கண்டது கூட இல்லை என்பது போல் வேண்டுமென்றே அலட்சியமாக வேறு புறமாகப் பார்த்து நடந்தாள். அவளது இக்குறும்பு ஸ்ரீதரின் உள்ளத்தைக் கிளுகிளுக்க வைத்தது!

சுந்தரேஸ்வரர் சந்நிதியில் ஸ்ரீதருக்குத் தனிக் கெளரவம் காட்டினார் ஐயர். அவனைக் கண்டதும் முதலில் அவன் பெயரில் பூசை செய்து திருநீறு, தீர்த்தம் கொடுத்த பின்னரே மற்றவர்கள் பக்கம் திரும்பினார் அவர். பத்மா எல்லாவற்றையும் ஒன்றுமறியாதவள் போல் கவனித்துக் கொண்டு நின்றாள். ஸ்ரீதரைக் கண்ட கோவில் ஊழியர்கள் அவனுக்கு விலகி இடங் கொடுத்த விதத்திலிருந்தே அவனிடம் அவர்களுக்கு எவ்வளவு மதிப்பிருந்தது என்பதை அவள் கண்டு கொண்டாள்.

திருநீற்றை கொடுத்த ஐயர், ஸ்ரீதரிடம் மிக விநயமாக "அப்பா நேற்றுக் கடிதம் எழுதியிருந்தார். இவ்வருடம் முடிவதற்குள் தெற்குக் கோபுரத்தைக் கட்டி விடத் திட்டம் ஒன்று போட்டிருக்கிறார் அவர்" என்றார். "ஓ! அப்படியா? நல்ல செய்தி" என்றான் ஸ்ரீதர்.

பூசை முடிந்ததும் ஸ்ரீதர் அங்கிருந்து கிளம்பி, சண்டேசுரர் சந்நிதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் வாய் ‘கூற்றாயினவாறு’ என்ற தேவாரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. இடையிடையே கோவிலை அங்குமிங்கும் உற்றுப் பார்த்த அவன் "சீ, கோவிலை இன்னும் எவ்வளவு அழகாய் வைத்திருக்கலாம்? இனி நானும் இந்த விஷயங்களில் அக்கறை எடுக்க வேண்டும். அம்மா எத்தனை தரம் கோவில் வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்று எனக்குச் சொல்லியிருக்கிறாள்? சரி கல்யாணம் முடியட்டும். அதன் பிறகு கோவிலைச் சுத்தமாவும் அழகாகவும் வைக்கும் பொறுப்பை நிச்சயமாக நான் கவனிக்கத்தான் போகிறேன். பத்மாவிடம் அதை விட்டு விட்டால் எல்லாவற்றையும் நேர்த்தியாகப் பார்த்துக் கொள்வாள்" என்று தனக்குள் தானே கூறிக்கொண்டாள். இப்படி அவன் தேவாரம் பாடியும் சிந்தனைகளில் ஆழ்ந்தும் சென்று கொண்டிருந்த போது "தம்பி" என்று ஓர் அழுத்தமான குரல் பின்னாலிருந்து கேட்க "யாரது பழக்கமான குரல்?" என்று திரும்பிப் பார்த்தான் அவன்.

"ஓ! வேணுகோபாலா?"

ஆம். அங்கே நின்று கொண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் பிரபல நாதசுர வித்துவான் வேணுகோபால். ஸ்ரீதருக்கு சிறு வயதிலிருந்தே அறிமுகமானவன். வைரக் கடுக்கன் அணிந்து நெஞ்சில் தங்கச் சங்கிலியொடும் வாழைப்பூக் குடுமியோடும் விளங்கிய அவன் இசைக் கலையில் இணயற்றவன் என்று பெயரெடுத்திருந்தான். அதனால் சிவநேசருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவனுக்கு இருந்தது. செக்கச் செவேலென்ற சிவந்த உடலமைப்போடு விளங்கிய அவனுக்குச் சுமார் ஐம்பது வயதிருக்கும். அவனது ஆரோக்கியமான உடலமைப்பு காட்ட மறுத்த அவன் வயதை அவன் குடுமியில் தலையாட்டிக் கொண்டிருந்த வெள்ளை மயிர்கள்தான் ஓரளவு வெளிக்காட்டின. வேணுகோபால் ஸ்ரீதரைப் நெருங்கி "எங்களுக்கெல்லாம் உங்கள் வீட்டில் பெரிய விசேஷம் காத்திருக்கிறது சீக்கிரம்! இன்னும் நாள் வைக்கவில்லையா? எப்பொழுது வைக்க உத்தேசம்?" என்று கேட்டான். ஸ்ரீதருக்கு இக்கேள்வி ஒரு புதிராக இருந்தது. என்றாலும் சமாளித்துக் கொண்டு, "வேணு என்ன புதிர் போடுகிறாய்? ஒன்றும் விளங்க வில்லையே!" என்றான்.

"என்ன, தம்பியின் கல்யாணத்தைப் பற்றித்தான் பேசுகிறேன். அப்பாவைப் போன கிழமை கீரி மலையில் சக்கிடுத்தார் மடத்துக்குக் கிட்ட சிவன் கோவில் வீதியில் சந்தித்தேன். அப்பொழுதுதான் விஷயத்தைச் சொன்னார்" என்றான் வேணு கோபால்.

"என்ன விஷயம்? எனக்கொன்னும் தெரியாது வேணு. சொல்லு!"

"இல்லை. சக்கிடுத்தார் மடக்காரர் சுழிபுரம் கந்தப்பர் இருக்கிறாரல்லவா. அவரது மகளை உனக்கு முடிவு செய்திருக்கிறாராம். அம்பிக்கு இன்னும் அறிவிக்கவில்லையா?"

"இல்லையே"

"ஆனால் ஒன்று. உங்கள் வீட்டில் சம்பந்தம் செய்யும் அந்தஸ்து சுழிபுரம் கந்தப்பரைத் தவிர வேறு யாருக்கு இந்த இலங்கையில் இருக்கிறது? பணத்தைப் பொறுத்த வரையில் உங்கள் அப்பாவின் சொத்தில் பாதியாவது அவருக்கிருக்கிறது. உனது பாட்டனார் சேர். நமசிவாயமென்றால் பெண்ணின் பாட்டனார் கதிர்காமம் சேர் பாலசிங்கம். நீ இந்தக் கோவிலின் சொந்தக்காரனென்றால் கீரிமலை சக்கிடுத்தார் மடமும், கதிர்காமம் சேர் பாலசிங்கம் மடமும் அவர்களுக்கிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் நான் இரண்டு குடும்பத்துக்கும் சேவகம். இன்னொன்று நீ உங்கள் குடும்பத்துக்கு ஒரே வாரிசு. பெண் அவர்கள் குடும்பத்துக்கு ஒரே வாரிசு. அது மட்டுமல்ல, அவள் சீமை எல்லாம் சுற்றி டாக்டர் பட்டமும் பெற்று வந்திருக்கிறாள். போதாதா?" என்றான் வேணு கோபால்.

ஸ்ரீதர் பதிலொன்றும் பேசாமல் வேணுவை மேலும் பேசும்படி தூண்டிக் கொண்டிருந்தான்.

"இன்னும் தம்பிக்கு அப்பாவைத் தெரியும்தானே? இலங்கையில் கல்யாணம் செய்வதானால் கந்தப்பர் வீடொன்று தான் இருக்கிறதென்றும் இதை விட்டால் சேர் நமசிவாயத்தின் தம்பியார் செய்த மாதிரி, ஒரு வெள்ளைக்காரியைத்தான் தம்பி கல்யாணம் செய்ய வேண்டி வருமென்றும் அப்பா சொன்னார். மற்ற இடங்கள் எதுவுமே உங்கள் அந்தஸ்துக்குப் பொருத்தமில்லை என்பது அவர் முடிவு" என்று வேணு மேலும் பேசிக் கொண்டு போனான். ஸ்ரீதர் இப்பொழுது கதையை வேறு பக்கம் திருப்ப எண்ணி, "வேணு, கொழும்புக்கு ஏன் வந்தாய்? என்ன விசேஷம்?" என்று கேட்டான்.

"ஒன்றுமில்லை. நாளைக்கு வெள்ளவத்தை சிறாப்பர் ராசதுரை வீட்டில் கல்யாணம். அதற்கு வந்தேன். ஆனால் கொழும்புக்கு வருகிற நேரத்தில் எங்களுடைய கோவிலை விட, எனக்குத் தங்குவதற்கு இடமேது? அது தான் இங்கே வந்திருக்கிறேன்" என்றான் வேணு.

அவன் இவ்வாறு பேசிக் கொண்டு நிற்க, பத்மா சண்டேசுரர் சந்நிதியை நோக்கிச் செல்வது தெரியவே வேணுவிடம் விடை பெற்றுக் கொண்டு அந்தத் திசையை நோக்கிச் சென்றான் ஸ்ரீதர்.

அங்கே காதலர்கள் சண்டேசுரர் காதில் பலமாகக் கைகளால் தட்டி நமஸ்காரம் செய்து விட்டுத் தனித் தனியாகப் புறப்பட்டுக் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கிச் சென்றார்கள். பத்மா சண்டேசுரர் காதில் கைகளால் தட்டி வணங்கியது இதுவே முதல் தடவை. அது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. இன்னும் ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொண்டோமே என்ற திருப்தியும் அவளுக்கு ஏற்பட்டது.

கார் புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றதும் பத்மா ஸ்ரீதருடன் ஒட்டி உட்கார்ந்து கொண்டாள். "பதக்கத்தை அம்மனுக்குக் கொடுத்துவிட்டேன். இதோ ஐயர் கொடுத்த பூசைப் பொருள்கள். வாழைப்பழத்தில் பாதியைச் சாப்பிடுங்கள்" என்று கூறி வாழைப்பழத்தை உரித்து அவன் வாயண்டை பிடித்தாள். ஸ்ரீதர் வாழைப்பழத்தை முழுக்கச் சாப்பிடப் பார்த்தான். "முழுக்கச் சாப்பிட்டு விடாதீர்கள். எச்சில் துண்டு எனக்கு" என்று கூறிப் பாதியைத் தான் சாப்பிட்டாள் பத்மா.

அதன் பின் கன்னிப் பெண்களும், சுமங்கலிகளும் வெள்ளை, கறுப்பு துணிகளை உடுத்தக் கூடாது என்ற சிவ நேசரின் கருத்தைப் பத்மாவுக்கு எடுத்துக் கூறினான் ஸ்ரீதர்.

"அப்படியானால் பெளத்த பெண்கள் கோவிலுக்குப் போகும்போது வெள்ளைதானே உடுத்துகிறார்கள்?" என்றாள் பத்மா.

"அது அவர்கள் கலாசாரம். எங்கள் கலாசாரம் வேறு. அதை நீ எங்கம்மாவிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும்" என்றான் ஸ்ரீதர்.

அதன் பின் நீண்ட நேரம் வரை அவன் பேசவில்லை. வேணு கூறிய விவரங்கள் அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருந்ததே அதற்குக் காரணம்.

பத்மாவோ தான் வெள்ளை உடுத்தியதுதான் ஸ்ரீதருக்கு கோபத்தை உண்டு பண்ணியிருக்கிறது. அதுதான் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டு பேசாமலிருந்தாள்.  [தொடரும்]


மனக்கண் நாவலுக்கான இணைய இணைப்புகள் வருமாறு.

அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' (1 -11)  http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4758:2018-10-30-22-42-07&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47
அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' (12 - 22)  http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4764:-12-22&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47
அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' (23 - 32 & முடிவுரை)  http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4765:-23-32&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47

 

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R