கோமகனின் 'முரண்'வ.ந.கிரிதரன்எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் இணைய இதழ் 'நடு'. 'நடு' இதழின் ஆணி 2019 இதழில் கோமகனின் சிறுகதைத் தொகுதியான 'முரண்' பற்றிய எனது விமர்சனமொன்று வெளியாகியுள்ளது. அதனை இங்கு ஒரு பதிவுக்காகப் பகிர்ந்துகொள்கின்றேன். அண்மையில் வாசித்த புகலிடச் சிறுகதைகளில் சிறந்த சில சிறுகதைகளை உள்ளடக்கிய சிறுகதைத் தொகுப்பு 'முரண்'. குறிப்பாக 'மாதுமை' , 'ஏறு தழுவல்' என்னை மிகவும் பாதித்த சிறுகதைகள் என்பேன். வாழ்த்துகள் கோமகன். - வ.ந.கி -


எழுத்தாளரும், ‘நடு’ இணைய சிற்றிதழ் ஆசிரியருமான கோமகனின் மூன்றாவது வெளியீடான ‘முரண்’ சிறுகதைத்தொகுதியை அண்மையில் படித்தேன். எழுத்தாளர் கோமகன் என் முகநூல் நண்பர்களிலொருவர்.  அவரது எழுத்துகளை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது முகநூலில் ‘சுறுக்கர்’ என்ற பெயரில் அவர் போடும் பதிவுகள் மூலமே. சுறுக்கரின் பதிவுகளில் எப்பொழுதும் நகைச்சுவை பொங்கி வழியும். அவரது எழுத்துகளிலும் அவ்வுணர்வு நிறையவே இருக்குமென்று எண்ணியபடியே நூலை வாசிக்கத்தொடங்கினேன். முதலில் நூலின் அவரது ‘என்னுரை’யில் அவர் தொகுப்பின் கதைகளைப்பற்றிக் கூறியவை என் கவனத்தைச் சற்றே திசை திருப்பின. அதிலவர்:

“இத்தொகுப்புச் சிறுகதைகளில் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண் பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதைசொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன். எம்மவரிடையே காலங்காலமாகப் பேணப்பட்டு வரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கின்றேன். பேசாப் பொருட்களைப் பேசியிருக்கின்றேன். அவைகளில் நான் வெற்றி பெற்றிருக்கின்றேனா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன் என்பதை என்னால் உறுதிப்படச் சொல்ல முடியும். எனக்கு  இலக்கிய ஜாம்பவான்களைப்போல் சொல் கட்டத்தெரியாது. எல்லோருக்கும் வாலிப்பருவம் அதன் வசந்தத்தையும் ஊர் உறவு நண்பர்கள் என்று அள்ளிக்கொடுக்க, அதே வயதில் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் உபரி விளைவாக நான் அகதியாக அந்நிய தேசத்துக்குப் புலம் பெயர்ந்ததும் இந்தச் சொல் கட்டுக்குள் வராமைக்கு ஒரு காரணமாகின்றது.” என்று கூறியிருப்பார். அவரது இச்சுய விமர்சனத்தை மனத்திலிருத்தி நூலினை வாசித்தேன்.

இத்தொகுப்பின் கதைகள் ஒன்றைத்தவிர  இம்மாநிலத்தின் உயிரினங்களின் பல்வேறு ஆளுமைகளைப்பற்றி விபரிக்கும் விவரணச்சித்திரங்களாகவும் கொள்ளக்கூடியவை. ஏனெனில் மானுடர்களின், மிருகங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை என்பதால் அவ்விதம் கூறினேன். அந்த ஒன்று ‘மயானம்’ ஒன்று தன் கதையை, தன்னைப்பாவிக்கும் மானுடர்களுக்கிடையிலான முரண்பாடுகளைப்பற்றிக் கூறுகின்றது. இறுதியில் அம்மானுடர்களின் முரண்பாடுகளால்  அம்மயானம் மின்சார மயானமாக மாறுவதுடன் முடிவுக்கு வருகின்றது.

நூலாசிரியர் தன்னுரையில் ‘பேசாப் பொருட்களை பேசியிருக்கின்றேன்’ என்று கூறியுள்ளதை மெய்ப்பிக்கும் வகையிலான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. தொகுப்பின் தலைப்புக்கதையான ‘முரண்’ அவ்விதமான கதைகளிலொன்று. முகுந்தன், மிருதுளா என்னும் இலங்கைத்தமிழ்த் தம்பதியின் கதை, தமிழர்கள் மத்தில் அதிகம் பேசப்படாத பொருளாகிய ‘தன்னினச்சேர்க்கை’ பற்றிப்பேசுகின்றது. நாயகன் முகுந்தன் சிறுவயதிலேயே மச்சான் முறையான உறவினனுடன் தன்னினச்சேர்க்கையில் ஈடுபட்டவன். வம்ச விருத்தியைப் பிரதான காரணமாகக்கொண்டு மிருதுளாவைத் திருமணம் செய்தாலும்  அவனது விந்து குழந்தைகளை உருவாக்குவதற்குரிய வீரியமற்றது. இந்நிலையில் மனைவி மிருதுளாவுக்குச் செயற்கைக் கருக்கட்டல் தொழில் நுட்பத்தின் மூலமும் அவள் குழந்தை பெறுவதற்கான முயற்சி நடைபெறுகின்றது. இடையில் அவன் மீண்டும் புகலிடச் சூழலில் தன்னுடன் பணிபுரியும் கொலீக் (சகபணியாளன்)  ஒருவனுடன் மீண்டும் ஒருபாலுறவுத் தொடர்பில் ஈடுபடுகின்றான். தன்னினச் சேர்க்கையாளர்கள் செல்லும் கிளப்புகளுக்குச் செல்கின்றான். இதற்காக அவன் கிரடிட் கார்ட்டில் எடுக்கும் பண விபரத்தைக் கண்டு, அவன் ஒரு பாலுறவுக்காரனென்பதை அறிந்து, அவனிடம்  கூறாமலேயே அவனை விட்டுப்பிரிந்து செல்கின்றாள் மிருதுளா. இது பற்றிய ஆசிரியரின் விபரிப்பு பின்வருமாறிருக்கும்:

“இருவருக்கும் பொதுவான வங்கிக்கணக்கில் இனந்தெரியாத வகையில் 200யூரோக்கள் முகுந்தனது கிரெடிட் கார்ட்- ஆல் எடுக்கப்படுவது நினைவுக்கு வரவே போட்ட கோப்பியை எடுத்துக் கொண்டு வந்து செற்றியில் இருந்தவாறே மிருதுளா தனது மடிக்கணணியை விரைவாக இயக்கி அவர்களது வங்கிக்கணக்கில் புகுந்தாள். இந்த மாதமும் 200 யூரோ அவனது கிரெடிட் கார்ட் விழுங்கியிருந்தது. “

பொதுவாக வங்கிக் கணக்கில் டெபிட் கார்ட்டிலிருந்து பணம் எடுத்தால் மட்டுமே அது பற்றிய குறிப்பிருக்கும். கிறெடிக் கார்ட்டுக்கு வங்கிக் கணக்கிலிருந்து பணம் கட்டியிருந்தால் அது பற்றிய குறிப்பிருக்கும். ஆனால் கிறெடிக் கார்ட்டால் பணம் செலுத்தப்பட்டிருந்தால் அது பற்றிய விபரம் கிறெடிட் கார்ட்டுக்குரிய இணையத்தளத்திலல்லவா பதியப்பட்டிருக்கும். இதுவும் இக்கதையில் காணப்படுமொரு முரண்.

இக்கதையை வாசித்தபோது முகுந்தனின் ஒருபாலுறவு அவனது திருமண வாழ்வில் ஏற்படுத்தியிருக்கக் கூடிய உளவியல் தாக்கங்கள் விரிவாகக் காட்டப்படவில்லையென்றே தோன்றியது. கதையின் தொடக்கத்தில்:

“முகுந்தனும் மிருதுளாவும் திருமணம் செய்து ஐந்து வருடங்களைக் கடந்திருந்தாலும் அவர்களுக்கிடையிலான உறவுநிலைகளில் இடைவெளிகள் இல்லாது இறுக்கமாகவே இருந்தன. ” என்று அவர்களுக்கிடையிலான உறவு முறை விபரிக்கப்பட்டிருந்தது. பின்னுமோரிடத்தில் அவன் நடித்துக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.  இது போன்ற இன்னுமொரு முரணான விடயம் கவனத்தை ஈர்த்தது. கதையின் ஆரம்பம் காலகட்டம் 2010. அதில் மிருதுளா செயற்கைக் கருக்கட்டல் செய்வது பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

“மிருதுளா மிகவும் சோர்வாக அவனது தோளில் சாய்ந்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். சற்றுமுன்னரே அவளுக்கு மயக்கநிலையில் செயற்கை முறையில் கருக்கட்டப்பட்ட அவளது கருமுட்டை கருப்பையில் வைக்கப்பட்டிருந்தது. டொக்ரர் லு கென் எதுவும் முற்றாக சொல்லாத நிலையில் அவனது மனமோ இலைகளை உதிர்த்த பைன் மரம்போல இருந்தது. இந்த சந்தர்ப்பம் அரசாங்கம் அவர்களுக்குத் தந்திருந்த மூன்றாவது இலவச சலுகை.”

ஆனால் 2016 இல் நடைபெறுவதாகக் கூறப்படும் பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“முகுந்தனது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஒருநாள் அவர்கள்  டொக்ரர் லு கென் -இடம் பரிசோதனைகளுக்காக வந்திருந்தார்கள். அன்றைய திகதியில் அவரே பாரிஸில் பல உயிர்களை உருவாக்குகின்ற பிரம்மாவாக இருந்தார். மெடிக்கல் செக்அப் ரிப்போர்ட் ‘முகுந்தனுக்கு  உயிரணுக்களில் போதிய பலம் இல்லை’ என்று கருப்புக்கொடி காட்டியது. அவன்  மனத்தால் மிகவும்  உடைந்து விட்டான் . குற்ற உணர்வுகள் அவனைப் பலவிதங்களில் அலைக்கழித்தன. ஆனால் மிருதுளாவோ முகுந்தனுக்கு  இப்படியான தாழ்வுச்சிக்கல் இருப்பதை அறவே வெறுத்தாள். இருக்கும் வரை ஆண்டு அனுபவித்து வாழ்க்கையை சுவைப்போம் என்பது அவளது நிலைப்பாடு.”

அப்படியென்றால் ஆரம்பத்தில் 2010இல் மிருதுளாவுக்குச் செயற்கை முறையில் கருக்கட்டல் செய்யப்பட்டதாகக் குறிப்பிடுவது ஏன்? பொதுவாக இக்கதையினை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு இது முரணான விடயமாகத் தெரியும்.  கதையின் தலைப்பு ‘முரண்’ என்றிருப்பதால் இவ்விதம் ஆசிரியர் முரணாக்கி விட்டாரோ? அல்லது நான்தான் எனது வாசிப்பில் எதையாவது பகுதியைத் தவற விட்டு விட்டேனா?

இக்கதையில் முகுந்தன் , மிருதுளாவின் உறவு, உளவியல் பாதிப்பு ஏற்படுத்தும் உணர்வுகள் ஆகியன இன்னும் சிறப்பாக விபரிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. பேசாப் பொருளைப்பற்றிய கதையென்றாலும் அது மட்டும் கதையின் கனத்தைக் கூட்டுவதில்லையே. ‘முரண்’ தலைப்புக்கேற்ப முரண்கள் பலவற்றைக் கொண்ட கதைதான்.

அடுத்துத் தொகுதியின் முதலாவது கதையான ‘அகதி’. இக்கதையின் சாரம் இதுதான், புகலிடத்தில் தொடர்மாடியொன்றில் வசிக்கும் இலங்கைத்தமிழ்த் தம்பதி பல்கணியில் கூடுகட்டி வாழும் புறாக்களே தம் துன்பங்களுக்குக் காரணமென்று  நினைத்து  தொலைவிலுள்ள கிராமமொன்றில் வீடு வாங்கிச் செல்கின்றார்கள். அங்கும் அவர்களிருப்பிடம் நாடிக் கதை சொல்லியான புறா செல்கின்றது. அதனைக் கண்டு அதனை வெறுத்து இடம் மாறியதற்கு முக்கியமானவரான மனைவி நிலாமதி பின்வருமாறு ஆச்சரியம் ததும்பக் கத்துவாள்: “இஞ்சரப்பா ……………… ஒருக்கால் இங்கை வாங்கோப்பா ” என்று ஆச்சரியத்தில் சத்தியாவை அழைத்தது. வீட்டு கேற்றடியில் மரகதப்பச்சை நிறத்தில் இருந்த நான் தலையை ஒருபக்கத்தில் சாய்த்தவாறே குறுகுறுத்துக்கொண்டேயிருந்தேன்.”

எதற்காக நிலாமதி புறாவைக் கண்டு  ஆச்சரியத்தில் கத்த வேண்டும்? புறாவை வெறுக்கும் அவள், தமது வாழ்க்கைத் துயரங்களுக்குக் காரணமே ‘புறா’தான் எனக்கருதும் அவள் ஏன் ஆச்சரியப்பட வேண்டும். சென்ற புதிய இடத்திலும் தரித்திரத்தைக் கொண்டு வந்து விட்டதே என்று ஆத்திரமல்லவா அடைந்திருக்க வேண்டும். இது முக்கியமானதொரு முரணாக எனக்குத் தென்படுகின்றது. அடுத்துப் புறாவின் கூற்றில் கூறப்படும் கதையில் கூறப்படும் சில பகுதிகள் வருமாறு:

“இப்படியாக இந்த நகரத்தின் கதையை சொல்லிக்கொண்டு போகையில் பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல, எங்களுக்கு எப்படி வன்னி தடுப்பு முகாம்கள் ஒருகால கட்டத்தில் இருந்ததோ அப்படியே வரலாற்றில் கறைபடிந்த நகரான ட்ரான்ஸி (Drancy) நகர் போ செவ்ரனுக்கு பக்கத்தில் ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டாவது உலகமகாயுத்தத்தின் பொழுது இங்கிருந்த பாரிய திறந்தவெளிச்சிறைச்சாலையில் இருந்து( Camp de Drancy) பல  யூதர்கள் வகை தொகையின்றி நாஸிகளினால் ஓஸ்திரியாவில் இருந்த ஒஷ்விட்ஸ்(Auschwitz) சித்திரவதை கூடத்திற்கு புகையிரத வண்டிகளில் நாடு கடத்தப்பட்டார்கள். “

கதையைக் கூறுவது ஒரு புறா. பாரிஸ் நகரத்துப் புறா. ஆனால் மேலுள்ள ‘எங்களுக்கு எப்படி வன்னி தடுப்பு முகாம்கள் ஒருகால கட்டத்தில் இருந்ததோ (இருந்தனவோ என்றிருக்க வேண்டும். அச்சுப்பிழையாக இருக்க வேண்டும்.)’ என்னும் கூற்று பாரிஸ் புறாவின் கூற்றாகத் தெரியவில்லையே. இன்னுமோரிடத்திலும் இதுபோன்றதொரு விபரிப்பைக் காணலாம்:

“இந்த ஓர்லியன் நகரின் வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்தோமானால் ஏறத்தாழ (ஏறத்தாள) எமது சோகக்கதைகளை ஒத்ததாகவே இருக்கும். போரும் அதன் விளைச்சலும்ன் இந்த நகரத்தை விட்டு வைக்கவில்லை. …. வன்னிப்பெருநிலம் எப்படி சரத் பொன்செகாவின் தலைமையிலான படையணிகளால் மீட்கப்பட்டதோ அவ்வாறே இந்த ஓர்லியன் நகரை நாஸிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்த பெருமை ஜெனரல் பத்தோன் தலைமையிலான படையணியையே சார்ந்ததாக வரலாற்றுக் குறிப்பேடுகள் சொல்கின்றன.” இதுவும் ஆசிரியரின் கூற்றாகத்தான் தெரிகின்றது. புறாவின் கூற்றாக அல்ல.

ஆசிரியர் தனது ‘என்னுரை’யில் “போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால்  சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே.” என்று கூறியிருப்பதைப்போல் தன் எழுத்து தந்த போதையில் மயங்கித் தடுமாறி விட்டாரோ?

மேலும் கதை சொல்லியான புறாக்களின் கூற்றுகள் பலவற்றில் எனக்குச் சந்தேகங்கள் பலவுள்ளன. உதாரணத்துக்கு ஒன்று:

“இந்தப் பூங்காவும் அதனைச்சுற்றியுள்ள சூழலும் காலையில் எம்மாலும் மாலையில் குழந்தைகளினாலும் அமைதியைத்தொலைக்கும். இந்த நான்கு ரவர்களில் ஒன்றான ‘சி’ரவரின் ஐந்தாவது மாடியில் 54-ஆவது இலக்கக் கதவில் இருக்கின்ற வீட்டின் அகன்று நீண்ட பல்கணியில் நான் எனது மனைவி மற்றும் எமக்குப்பிறந்த 10 மக்கள்களும், ஒரு வரவேற்பறை ,சாப்பாட்டறை, நான்கு பரந்த அறைகள் மற்றும் அமெரிக்க பாணியில் அமைந்த பரந்த குசினியுடன் கூடிய வீட்டில், வீட்டின் சொந்தக்காரருமான சத்தியபாலன் மற்றும் நிலாமதி என்ற பெயர்களை வெள்ளைகளுக்காகச் சுருக்கிக்கொண்ட ‘சத்தியா’, ‘நிலா’ தம்பதிகளும் அவர்களது 03 பிள்ளைகளும் வசித்து வருகின்றோம்.”

புறாக்களின் குஞ்சுகள் பொரித்ததும் அவை பறந்து விடுகின்றன. பின்னர் மீண்டும் கூடு கட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இப்புறாவும் மீண்டும் கூடுகட்டி நான்கு முட்டைகளிட்டு அடை காக்கும் புறா. எவ்விதம் பத்துக் குழந்தைகளுடன் வாழ முடியும்? மேலும் பேச்சு வழக்கில் சில வேளை ‘மக்காள்’ என்று கூறுவதுண்டு.   ‘மக்கள்கள்’ என்று யாரும் கூறுவதில்லை. அதற்குப்பதில் குழந்தைகள் என்று கூறியிருக்கலாம். இவை போன்ற  தவறுகள் தவிர்க்கப்படக் கூடியவை.

தொகுப்பின் முக்கிய கதைகளாக ‘ஆக்காட்டி’, ‘சுந்தரி’, ‘மாதுமை’, ‘ஏறு தழுவல்’ மற்றும் ‘டிலிப் டிடியே’  ஆகியவற்றைக் கூறலாம். இவற்றில் தொகுப்பின் மிகச்சிறந்த கதையாக  புகலிடச் சூழலிலிருந்து உருவான நல்ல சிறுகதைகளிலொன்றாக ‘ஏறு தழுவல்’ சிறுகதையைக் கூறலாம். ‘ஆக்காட்டி’ கதையில் நண்பர்களிலொருவனாக இருந்து, இராணுவத்தின் தலையாட்டியாக மாறிய ஒருவன் ஒருமுறை கூடப்படித்த பெண்களைக் காட்டிக்கொடுப்பதன் மூலம் அவர்களின் மறைவுக்குக் காரணமாகின்றான். பல வருடங்கள் கழிந்து புகலிடம் நாடி வருமவனை, நண்பர்களிலொருவன் சுட்டுக்கொன்று விடுவதை இக்கதை விபரிக்கின்றது. கூறும் பொருள் காரணமாக முக்கியமான புகலிடச் சிறுகதைகளிலொன்றாகிவிடும் சிறுகதையிது.

தொகுப்பிலுள்ள ‘மாதுமை’யும் முக்கியமான சிறுகதை. புகலிடம் நாடி  மேற்குக்கு அகதிகளாகச் செல்லும் தமிழர்கள் அடையும் துன்பங்களை வெளிப்படுத்தும் கதை. மாதுமை என்னும் சிறுமியும், தாயார் மகேஸ்வரியும் முகவர் ஒருவர் உதவியுடன் பாரிஸ் நோக்கிப்பயணிப்பதை மையமாகக்கொண்ட கதையின் முடிவு துயரகரமானது. இக்கதையில் பல விடயங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. பாரிசில் மாதுமையின் அப்பாவான ராகவனின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை. அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கை முறை (சீட்டு பிடித்தல் போன்ற) , வழியில் அல்ஜீரியாவிலிருந்து றோலர் ஒன்றின் மூலம் பாரிஸ் செல்கின்றார்கள். இடையில் பெரும் புயலொன்றில் அகப்பட்டு றோலர் கடலுல் மூழ்குவதுடன் கதை முடிகின்றது. தொகுப்பிலுள்ள கதைகளில் சிறப்பான நடையில், மொழியில் கூறப்பட்டுள்ள கதையாக இதனைக் கூறலாம். குறிப்பாக அல்ஜீரியாவிலிருந்து றோலரின் மூலம் பயணிக்கும் இறுதிப்பகுதியினை அவ்விதம் குறிப்பிடலாம்.

கதையின் ஆரம்பத்தில் இலங்கையில் நிலவிய அபாயகரமான போர்ச்சூழல் விபரிக்கப்பட்டுள்ளது. அரச படைகளின் குண்டு வீச்சுகள், அதன் காரணமாகப் பங்கருக்குள் ஓடியொளியும் தமிழர்கள் இவற்றையெல்லாம் கதை ஆரம்பத்தில் எடுத்துக் கூறுகின்றது. இக்கதையினை வாசிக்கும் எவரும் கலங்கிப்போய் விடுவார்கள். இவர்களைப்போல் இலங்கைத் தமிழர்கள் பலர் புகலிடம் நாடிச் செல்கையில் வழியில் பல்வேறு இடர்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்களைப்பற்றி ஒரு கணம் நினைவு கூர்ந்திட வைக்கின்றது இக்கதை. கூடவே படகுகள் மூலம் அகதிகளைக் கொண்டு செல்லும் முகவர்களைப்பற்றியும் கதை பதிவு செய்கின்றது.

இக்கதையை வாசித்து முடித்ததும் நெஞ்சு கனக்கின்றது. அந்தக் குழந்தை மாதுமையின் குழந்தைக்குரிய குறும்புத்தனம் நிறைந்த சித்திரம் சிறப்பாக விபரிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைக்கும் ஏனையவர்களுக்கும் ஏற்பட்ட முடிவு நெஞ்சை வாட்டுகின்றது. எதற்காக அந்தக் குழந்தை இவ்விதம் மடிய வேண்டும். அதற்குக் காரணமான நாட்டுச்சூழல் மீது ஆத்திரம் பொங்கிப்படர்கின்றது. படித்து முடிந்ததும் மனத்தில் மறக்க முடியாத வகையில் பதிந்து விட்ட பாத்திரம் மாதுமை. ஒரு சிறுகதையின் வெற்றி முதல் வாசிப்பிலேயே இத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்துவதாகத்தானிருக்க வேண்டும். அண்மைக்காலத்தில்  வாசித்து நெஞ்சைப்பாதித்த சிறுகதை ‘மாதுமை’.

தொகுப்பின் இன்னுமொரு சிறுகதை ‘பருப்பு’. இதுவும் தொகுதியின் முக்கியமானதொரு சிறுகதை. பருப்பு என்னும் தமிழ் இளைஞன் ஒருவனின் கதை. இக்கதை பல விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது. பிரசைகள் குழுத்தலைவரான பருப்பின் தந்தையார் நன்கு ஆங்கில அறிவு மிகுந்தவராதலால் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்படும் தமிழர்களை அவர்களுடன் பேசி விடுவித்து வருதுண்டு. அவருக்கும் இந்தியப்படையினருக்குமிடையிலான தொடர்பு இயக்கத்தினரிடம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. முடிவில் இயக்கத்தால் கொல்லப்பட்டு ‘லைட் போஸ்ட்’டில் கட்டித்  தூக்கப்படுகின்றார்.

இந்தியப்படையினரால் கைது  செய்யப்பட்டுப் பலாலியில் வைக்கப்பட்டுள பருப்பு இந்தியப்படை அதிகாரி ஒருவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றான். அந்தப்பாதிப்பு அவன் வாழ்வில் தொடர்கிறது. பாரிசுக்குப் புலம்பெயர்ந்த பின்னும் அது தொடர்கின்றது. இறுதியில் நண்பர்களாலும் கை விடப்பட்டு, வீடற்றவனாக மெற்றோ ஒன்றுக்கருகிலுள்ள ஆற்றங்கரையோரம் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் பருப்பு. இவ்விதமாக வாழ்ந்துகொண்டிருந்த பருப்பை நோக்கி வசதியுள்ள தோற்றம் மிக்க காரில் வந்திறங்கிய பிரெஞ்சு இளைஞன் ஒருவன் வருகின்றான். அவனுடான உரையாடலின் இறுதியில் அவன் பருப்பைப்பார்த்துக் கூறுகின்றான்: “நீ அழகாக இருக்கிறாய்”. அதற்குப் பருப்பு  “உன்னை விடவா?” என்று கூறுவதுடன் பருப்பு என்னும் சிறுகதை முடிவுக்கு வருகின்றது.

இம்முடிவின் அர்த்தமென்ன? பருப்பு ஒருபால் உறவுக்குத் தன்னை மாற்றிக்கொள்கின்றானா? அப்போதுள்ள அவனது சூழலில் அவ்வெள்ளையின இளைஞனுடனான இவ்வகையான உறவு பருப்பின் வாழ்வை பொருளியல்ரீதியில் மேம்படுத்தப்போகின்றதா? இவ்விதமான பல்வகைக் கேள்விகளை வாசகர்களிடம் எழுப்பி, அவற்றுக்கான விடைகளையும் வாசகர்களிடமே விட்டு விடுகின்றார் கதாசிரியார்.  இவனைப்போன்ற சிலரை நான் ‘டொராண்டோ’ வீதிகளில் கண்டிருக்கின்றேன். பல்வகை உளப்பாதிப்புகளால் வீதி மனிதர்களாக மாறியவர்கள் அவர்கள். அவர்களில் ஒருவன் அவனது பெயரைக் கேட்டால் ‘மகிந்த ராஜபக்ச’ என்று கூறுவான். இன்னுமொருவன் ‘தன்னை உளவுத்துறைகள் எப்பொழுதும் கண்காணித்துக்கொண்டிருப்பதாகக் கூறுவான்.

‘பருப்பு’ என்னும் இச்சிறுகதை  இலங்கையில் போர்சூழலில் இயக்கத்தினால் சந்தேகத்தின்பேரில் துரோகியாக்கப்பட்ட ஒருவரைப்பற்றிய விமர்சனத்தை எழுப்புவதால், இலங்கைக்கு அமைதி காக்க வந்து அமைதி கொல்லும் படையினராக மாறிய இராணுவத்தின்  அதிகாரியொருவனால் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதி ஒருவன்மேல் புரியப்பட்ட பாலியல் வல்லுறவை வெளிப்படுத்துவதால், புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த சூழலிலும் அப்பாலியல் வல்லுறவு எவ்வளவு தூரம் அவனை உளவியல்ரீதியில் வாட்டுக்கின்றது என்பதை எடுத்துக்கூறுவதால் முக்கியத்துவம் பெறுகின்றது. முடிவில் பொருளியல்ரீதியில் தாழ்ந்த நிலையிலிருக்கும் நிலையில்  அவனை நாடி அவனிடம் பாலியல் உறவினை நாடி வருகின்றான் பிரெஞ்சு இளைஞனொருவன். அவனது அழைப்பினை இவன் ஏற்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியவாறு முடிவுக்கு வருகின்றது பருப்பு. ஒருவகையில் அப்போதிருந்த அவனது பொருளியல் நிலை காரணமாக பருப்பு அவ்வெள்ளையின இளைஞனை ஏற்றுக்கொள்கின்றானா? அல்லது ஏற்கனவே இலங்கையில் இந்திய அமைதிப்படைக் காலத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட உளவியல் பாதிப்பின் விளைவாக அவன் மாற்றமடைந்து விட்டானா? ஏற்கனவே அப்பாதிப்பின் விளைவாக பருப்பு வீடற்றவனாக மாறினான் என்பதை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். பின்னர் பருப்பு எதற்காக அவனைப்பாதிப்புக்குள்ளாக்கிய அவ்விதமான பால் உறவினை நாடிச்செல்ல வேண்டும். இவ்விதம் பல கேள்விகளை எழுப்பும் கதை அவற்றுக்கான விடைகளையும் அவர்களிடமே விட்டு விடுகின்றது. இருப்பினும் கூறும் பொருள்  காரணமாக முக்கியத்துவம் பெறும் கதையிது.

தொகுப்பின் முக்கியமான இன்னுமொரு சிறுகதை ‘சுந்தரி’. கனகசுந்தரியின் குடும்பம் வசதியான குடும்பம்தான். போர்ச்சூழலினால் வளங்களை இழந்து விடுகின்றது.  கனகசுந்தரிக்க்  நான்கு தம்பிகளும், மூன்று சகோதரிகளுமிருந்தார்கள். போதாததிற்கு அவளுக்குச் செவ்வாய்க்  குற்றம் வேறு அவளது திருமணத்தைத் தள்ளிப்பொடுகின்றது. இந்நிலையில் தாய் தெய்வானைப்பிள்ளை வேறு பாரிசவாதத்தால் பாதிக்கப்படுகின்றாள். இந்நிலையில் பிரான்சில் வதிக்கும் இரு குழந்தைகளுக்குத்  தந்தையான ஒருவருக்கு இரண்டாம் தாரமாக அங்கு செல்லும் குடும்பப்பொறுப்பை ஏற்றிருந்த கனகசுந்தரி  புகலிடத்தின் நெளிவு சுழிவுகளையெல்லாம் உள்வாங்கிச் ‘சீட்டுச் சுந்தரியாக’, புகழ்பெற்ற லாச்சப்பலில் அடியாட்களை வைத்துச் சீட்டு நடத்தும் ‘சண்டி ராணி’-யாக உருமாறுகின்றாள்.

இவ்விதமாகக் கதையின் நீண்ட முதற்பகுதி சீட்டுச் சுந்தரியைப்பற்றிய வர்ணனையாகவே விளங்குகின்றது. அதன்பிறகே கதை சொல்லி நேரடியாக வருகின்றார். தன் சகோதரியின் திருமணத்துக்குச் சீதனம் கொடுப்பதற்காக சீட்டுச் சுந்தரியிடம் பெரிய சீட்டொன்றைப் பிடிக்கின்றார் கதைசொல்லி. அடுத்தமுறை சீட்டுச் சுந்தரியிடம் சீட்டினைக் கழிவில் எடுப்பதற்காகச் செல்லும் கதைசொல்லியின் திட்டம் தவிடுபொடியாகின்றது. சுந்தரியின் வீடு போலிஸ் சோதனையிலுள்ள நிலையில் அங்கு செல்லும் கதை சொல்லியையும் போலிஸ் விசாரிப்பதுடன் கதை முடிவுக்கு வருகின்றது. இது பிறந்த நிலத்தையும், புகலிடத்தையும் களங்களாகக் கொண்ட கதை. பிறந்த இடத்தில் காணப்படும் சமுதாயச் சூழலையும் (சீதனம் , மூட நம்பிக்கைகள் போன்ற) , புலம்பெயர்ந்த தமிழரின் புகலிடச் சமுதாயச் சூழலையும் ( சீட்டுப்பிடித்தல் , லாச்சப்பலில் நடக்கும் அடிதடிகள் போன்றவை) கேள்விக்குள்ளாக்குகின்றது கதை. சாதாரண இளம் பெண்ணான சுந்தரியை நாட்டில் நிலவும் சமூக, பொருளியல் நிலை, புகலிடச் சமூக, பொருளியச் சூழல் போன்றவை எவ்வகையில் ‘சீட்டுச் சுந்தரி’யாக, ‘சண்டி ராணி’யாக மாற்றி விடுகின்றது என்பதை விபரிக்கும் கதை காரணமாகவே முக்கியத்துவமும் பெறுகின்றது.

கோமகன் என்னுரையில் கூறுவது போல் நம்மவர் மத்தியில் மட்டுமல்ல பொதுவாக ஏனையோர் மத்தியிலும் பேசாப்பொருளாக இருக்குமொரு விடயத்தைக் கூறும் கதை ‘டிலீப் டிடியே’ .  சிறப்பான மொழியில் எழுதப்பட்டுள்ள கதை. தம்பிப்பிள்ளை/ வசுமதி , டிடியே பிரான்சுவா / மைதிலி, டிலீப் டிடியே /மதுமிதா என  புகலிடத் தமிழர்களின் மூன்று  தலைமுறையினைரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை. வித்தியாசமான கதை. மைதிலியை டிடியே பிரான்சுவா துரத்தித்துரத்திக் காதலிக்கின்றான். இறுதியில் நிறைவேறிய காதல் இது. இதற்கு  மாறாக டிலீப் டிடியேயை மருத்துவர் மதுமிதா துரத்தித் துரத்திக் காதலிக்கின்றாள். நிறைவேறாத காதல் அது. முரண்பட்ட இருவகைக் காதல் அனுபவங்கள். முரண் என்னும் நூலின் தலைப்புக்கேற்ப இங்கு முரணை நூலாசிரியர் கையாண்டுள்ளார். இறுதியில் தற்செயலாக வீதியில் சிகரட் கேட்கும் ஒரு போதைப்பொருள் பாவிக்கும் ஒருவனால் சுட்டுக்கொல்லப்படுகின்றான் டிலீப் டிடியே.

வாழ்க்கை எவ்வளவு தற்செயலானது என்பதை அழகாக எடுத்துக்காட்டும் சம்பவம் இது. இவ்விதமான தற்செயல்கள் மானுடர் பலரின் இருப்பினையே மாற்றுவதை அவ்வப்போது கண்டிருக்கின்றோம். அவனுக்கு ஏற்பட்ட இந்நிலையை  அவன் மேல் தீவிர காதலில் இருக்கும் மதுமிதாவால் தாள முடியவில்லை. அவனது இறந்த உடல் மீது அவள் உடலுறவு கொள்வதுடன் கதை முடிகின்றது. இறந்த உடல் மீது உறவு கொள்வதை நெக்ரபீலியா (necrophilia) என்பார்கள். அது சட்டப்படி குற்றம். ஆனால் இங்கு மதுமிதாவின் செயல் குற்றமாகத் தெரியவில்லை. அவளது அந்தச்செய்கை அவன் மீதான தீவிர காதலின் வெளிப்பாடாகவே தெரிகின்றது. அவள் மீது அனுதாபமே ஏற்படுகின்றது. வித்தியாசமான கதை. கதையின் முடிவில்தான் இவ்விடயம் வெளிப்படுவதால் வாசிக்கும் வாசகருக்கு மிகுந்த அதிர்ச்சியைனைத் தருகின்றது. அவ்வதிர்ச்சியிலிருந்து சிறிது விடுபட்டு சிந்திக்கும்போது மதுமிதா மீது பரிதாபம் கலந்த உணர்வே ஏற்படுகின்றது.

இக்கதை இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்டுகின்றது. அது புகலிடத்தில் நம்மவர் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சூழல் ஏற்படுத்தும் தாக்கம். அதனைக் கீழுள்ள வரிகள் வெளிப்படுத்தும்:

“மைதிலியின் பிறெஞ் பள்ளிக்கூட வாழ்வில் சந்தித்த மாணவ மாணவிகள் எல்லோருமே எதோ ஒருவகையில் ஒவ்வாமையாக இருந்திருக்கின்றார்கள். அன்பையும் மற்றவர்களை மதிக்கின்ற பண்புகளையும் இரத்தத்தில் ஊட்டி வளர்த்த குடும்பத்தில் இருந்து வந்த அவளுக்கு, அவர்களது இரட்டை வசனக் கதைகளும் கட்டற்ற செக்ஸ் வேட்கைகளும் அருவருப்பாக இருந்தன. அவர்களுக்கும் கவலைகள் அன்புகள் இருந்தன. ஆனால் அவைகள் நீர்குமிழிகள் போல இருந்தன. அவர்கள் தங்கள் காதலர்களை மூக்குத்துடைக்கும் ரிஸ்யூ பேப்பர் போல் பாவித்துக்கொண்டிருந்தார்கள்.”

இவ்வகையிலும் முக்கியத்துவம் பெறும்  சிறுகதைகளிலொன்று இக்கதை. மேலும் இக்கதை பல பிற மொழிச் சொற்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. புகலிடச் சூழலில் பல புதிய சொற்களையும் தமிழ் உள் வாங்குகின்றது. இதுவும் புகலிடத்தமிழர் இலக்கியத்தின் முக்கியமான அம்சங்களிலொன்று. உதாரணத்துக்கு இக்கதையில் வரும் ‘மம்மோ’ (அம்மா), முத்தோன் குறி (ஆட்டுக்கறி), குப்பின் (பெண் நண்பிகள்) போன்ற சொற்களை  உதாரணத்துக்கு எடுத்துக் காட்டலாம்.

முரண் சிறுகதைத்தொகுப்பின் மிகச் சிறந்த கதையாக , புகலிடச் சிறுகதைகளில் முக்கியமானதொரு சிறுகதையாகக் கருதப்படக் கூடிய சிறுகதை ‘ஏறு தழுவல்’. சாமிக்கண்ணுவின் மாட்டுப்பட்டி ஊரில் பெரியது. காளை கறுப்பன் பேசுவதுடன் கதை ஆரம்பமாகின்றது. கறுப்பன் மூலம் மானிதர்கள் காளைகளுக்குப் புரியும் மிருக உரிமை மீறல்களைப்புரிந்துகொள்கின்றோம். சத்திர சிகிச்சையின்றி  சித்திரவதைப்படுத்தும் வகையில்  நலமடித்தல், மூக்கில் மூக்கணாங்கயிறிடுதல், கொதிக்கும் கம்பியினால் குறி வைத்தல் என்று எத்தனை மிருகவதை /உரிமை மீறல்கள். இதுபோல் கறுப்பனின் துணைவியான நந்தினி மூலம் பெண் பசுக்களுக்குப் புரியப்படும் மிருக உரிமை மீறல்களையும் புரிந்துகொள்கின்றோம். இறுதியில் அவை ஒரு முடிவுக்கு வருகின்றன. வழக்கம் போல் ஏறு தழுவலில் கறுப்பனே வெல்லப்போகின்றது. வெல்லும் கறுப்பன் மாடுகளுக்குத் தொல்லை புரியும் மானுடர்களுக்குப் பாடம் படிப்பிக்க  முடிவெடுக்கின்றது. அது கதையின் முடிவில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது:

“வலியினால் துடித்த கறுப்பன் அதன் பலமனைத்தையும் திரட்டி முன்னங்கால்களில் தனது பாரத்தை நிலைகுத்தி பின்னங்கால்களால் சாமிக்கண்ணுவின் வயிற்றைக் குறிவைத்து உதைத்தது. சாமிக்கண்ணு அலங்கமலங்க மல்லாந்து விழுந்தார். முதலமைச்சர் வாடிவாசலை திறக்க வெறியுடன் கிளம்பிய கறுப்பன் அருகே நின்ற முதலமைச்சரின் வயிற்றுக்கு நேராக இலக்கு வைத்து  தனது  கொம்புகளால்  ஒரே எத்தில் அவரை ஏற்ரி  தட்டமாலை சுற்றி கீழே போட்டு மிதித்து விட்டு மைதானத்தில் நுழைந்தது. கறுப்பனின்  பின்னால் ஓடியவர்களை அது அரைவட்டம் அடித்துப் மீண்டும் திரும்பி புழுதி கிளம்ப  அவர்களது வயிற்றை இலக்குவைத்துப் பாய்ந்தது. அதன் பாய்ச்சலில் குறி தப்பவில்லை. பின்னர் கறுப்பன் அருகே இருந்த காட்டை நோக்கிப் புழுதியைக் கிளப்பியவாறு ஓடி மறைந்தது.”

இச்சிறுகதையில் காளை கறுப்பன், பசு நந்தினி ஆகியோரின் கூற்றுகள் அங்கதச் சுவை மிக்கவை. மாடுகள்தம் குரல்களினூடு அவை விபரிக்கப்படுகின்றன. சுவையானவை. நான் எதிர்பார்த்த சுறுக்கரிடம் (கோமகனிடம்) எதிர்பார்த்தது இத்தகைய எழுத்தைத்தான். உதாரணத்துக்கு இக்கதையில் எனக்குப்பிடித்த சில பகுதிகளைத் தருகின்றேன்.

உதாரணத்துக்குக் கீழுளள பகுதிகளைப் பாருங்கள்:

“பட்டியின் சலசலப்புகள் அடங்கிய பின்னர் பட்டியின் அனுபவம் வாய்ந்த காளையான கறுப்பன் பேசத்தொடங்கியது. ‘தோழர்களே !!…. நாங்கள் இப்பொழுது ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றி பேசுவதற்குக் கூடி இருக்கின்றோம். நானும் இவ்வளவு காலமாய் பார்த்துக்  கொண்டுதான் இருக்கின்றேன். இந்த மனிதர்கள் எங்களுக்கு செய்கின்ற அநியாயங்கள் எல்லை கடந்து விட்டன. ஒருவரும் இவைகளை எதிர்த்து ஏன் என்று ஒர்  சின்ன கேள்வியைக் கேட்பது கூட இல்லை. இதனால் அவர்களுக்கு  குளிர் விட்டுப்போய் விட்டது. எங்களுக்கும் இந்த மனிதர்களுக்கும் இடையிலான  பிரச்சனைகள் அவர்களுடைய இந்து  சமயத்திலேயே ஆரம்பமாகின்றது. முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்கு நாங்கள் வாகனம் என்று  எங்களை வணங்குகின்றார்கள். எங்களைப் புனிதப்படுத்துகின்றார்கள். ஆனால் அதே மனிதர்கள் தான் நாங்கள் தங்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் பசுக்களைக் காதல் செய்துவிடுவோம் என்ற பயத்தினாலும் காளைகளாகிய எங்களுக்கு நலம் அடிக்கிறார்கள். ஒர்  சிறிய சத்திரசிகிச்சையினால் செய்கின்ற வேலையை எங்கள் பலத்துடன் நேரடியாக மோதாது எங்களின் கால்களைக் கயிற்றால் கட்டி விழுத்திவிட்டு மரத்தடிகளால் எங்கள் விதைகளை நசித்துக்  கூழாக்கின்றார்கள். அப்பொழுது எங்கள் உயிர்போய் வரும். அதிகரித்த வலியால் எமது  நாக்குத்தள்ளும். எனது குழந்தைக் காளைகளே! நாளை நீங்களும் இதற்குத் தயாராக இருங்கள்’

 

“சிறிய காளைக் கன்றுக்குட்டிகள் திகிலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டன. மற்றயவைகளும் பசுக்களும் உம்பா ……….. என்று ஆமோதித்தன. கறுப்பன் தொடர்ந்தது, ‘இதை மட்டுமா செய்கின்றார்கள்? நாங்கள் சிறிது துடியாட்டமாக இருந்தால் உடனேயே எங்களை கயிற்றினால் கட்டி விழுத்திப் விட்டு இரும்பு கம்பியை நெருப்பிலே நன்றாகப் பழுக்கக் காச்சிய பின்னர் எமது பின் பக்கத்திலே குறி சுடுகின்றார்கள். அப்பொழுது எமது தோல் எரிந்து அந்த இடமே மணக்கும். நாங்கள் வலியால்  கத்துவோம். யாருமே எங்களில் இரக்கப்படார்கள். அத்துடன் நின்றார்களா? எமது  மூக்கில் இரு பக்கத்தாலும் துளைகளைப்  போட்டு அதன் ஊடாக வலிமையான கயிற்றை நுழைத்துக் கட்டி அதை எப்பொழுதும் தங்கள் நாணயக்கயிறாக வைத்திருக்கின்றார்கள். இது நிரந்தரமான வலியுடன் கூடிய கொடுமையானது. நாங்கள் இவர்களை வண்டிலில்  வைத்து  இழுத்து கொண்டு செல்லும் பொழுதோ அல்லது  எம்மீது ஏரைப்பூட்டி வயலில் உழும் பொழுதோ இந்த நாணயக் கயிறுதான் அவர்களுக்கு பிறேக். ஏன் அவர்கள் எங்களுக்கு சொல்வது ஒன்றும் விளங்காதா என்ன?  எனதருமைப் பசுக்களே!! உங்களுக்கும் நடப்பது உலகறிந்த விடயமாச்சே? நீங்கள் பசுக்கன்றுகளை ஈன்று அவைகள் தப்பித்தவறி இறந்தால் இவர்கள் செய்வது அநியாயத்தின் உச்சக்கட்டம். இறந்த பசுக்கன்றை உங்களுக்கு காட்டாது பொம்மைக் கன்றுக்குட்டியை உங்களுக்கு அருகில் வைத்து நீங்கள் அன்பினால் சுரக்கும் பாலைக் களவெடுக்கின்றார்கள் அல்லவா? நீங்களும் பைத்தியங்கள் போல் அவர்களுக்குப்  பாலைக் கொடுக்கின்றீர்கள். உங்கள் நல்ல உள்ளத்தை அவர்கள் மதிக்கின்றார்களா? சொல்லுங்கள்…….!’

“பட்டியைத் தட்டியெழுப்பும் விதமாகப் பேசிக்கொண்டிருந்த கறுப்பனை கண்களினால் பொங்கி வழிந்த கண்ணீரை தனது நாவினால் தடவியவாறே ‘உம்பா …………’ என்று இடைவெட்டியது நந்தினி. ‘என்ன ‘என்பது போல நந்தினியைப் பார்த்தது கறுப்பன். ‘ஏறுகளாகிய நீங்கள் மட்டுமே பேசுகின்றீர்கள். பசுக்களாகிய நாங்கள் பேசுவதற்கு இடமில்லையா ? பட்டியில் கலந்துரையாடல் என்று சொல்கின்றீர்கள். ஓ ……… பேச்சில் மட்டும் தானா பசுவுரிமை மற்றும் பெண்ணியம்?”

ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப்பண்ணை’யை இச்சிறுகதை நினைவூட்டுகின்றது. மானுடரின் கொடுமைக்கெதிராக இரண்டிலும் மிருகங்கள் பொங்கி எழுகின்றன. ‘விலங்குப் பண்ணை’யைப்போல் ‘ஏறு தழுவ’லையும் அங்கதச் சுவை மிக்க குறியீட்டுக் கதையாகக் கருதலாம். மாடுகளுக்கு மட்டுமல்ல மானுடர்களுக்கும் பொருந்தக் கூடிய கதை. வாசிக்கும் எவருக்கும் கறுப்பன் மறக்க முடியாத பாத்திரம். இது போன்ற பல சிறுகதைகளை எதிர்காலத்தில் கோமகன் தருவார் என எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் கோமகனின் ‘முரண்’ புகலிடச் சூழலில் வெளிவந்துள்ள தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சிறந்த சிறுகதைத்தொகுதிகளிலொன்று. முரண் முரண்களிருப்பது இயல்பே. அம்முரண்களை மீறி முக்கியத்துவம் வாய்ந்த சிறுகதைத்தொகுதி ‘முரண்’.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R