அன்பிற்கினிய நண்பர் பூபதி அவர்கட்கு , நீண்ட….. நீண்ட….. காலத்திற்குப் பின்னர் தங்கள் கடிதம் படித்து நேரில் கண்டு உரையாடிய மகிழ்வடைந்தேன். “  எனத் தொடங்கும்  05-08-1999 ஆம் திகதி  எழுதப்பட்ட  ஒரு கடிதம் எனக்கு தபாலில் வந்திருந்தது.  கனடாவிலிருந்து வந்திருந்த அக்கடிதத்தை எழுதியவர் எனது நீண்ட கால நண்பர் எஸ்.தி என எம்மால் அழைக்கப்படும் மூத்த  ஊடகவியலாளர் எஸ். திருச்செல்வம். இவருக்கும் எனக்குமிடையே நட்பு மலர்ந்த காலம் 1980 களாயிருக்கலாம். அவர் எனக்கு முன்பே ஊடகத்துறையில் பிரவேசித்தவர். அவரது பெயருடன் (By line) வெளிவந்த பல முக்கியமான தலைப்புச்செய்திகளுடன் அன்றைய தினகரன் நாளேட்டினை எனது பாடசாலைப்பருவத்திலேயே படித்திருக்கின்றேன். அவரது ஊடகப்பணிக்கு அரைநூற்றாண்டு காலம் வயதாகிவிட்டது. அதனை முன்னிட்டு கனடாவில் நடந்த சேவை நலன் பாராட்டுவிழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட  ஊடகத்திரு  ‘ எஸ்தி 50 + ‘ என்ற நூலும் கடிதங்கள் என்ற  2001 ஆம் ஆண்டு வெளிவந்த எனது நூலும் எனது மேசையில் கணினிக்கு அருகிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

‘ எஸ்தி 50 + ‘ மலர்,  எஸ்தியின் வாழ்வையும் பணிகளையும் பலரதும் கருத்துக்களுடன் ஆவணப்படுத்தியிருக்கிறது. இற்றைக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எஸ்தி எனக்கு எழுதிய கடிதம் அவரது திறந்த மனதை படம்பிடித்துக்காண்பிக்கிறது. கொழும்பில் 1980 காலப்பகுதியில் நாம் வாரம்தோறும் சந்திப்போம். அங்கு அவர் கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் என்ற அமைப்பை உருவாக்கி பல கலை, இலக்கிய ஊடகம் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். இச்சந்திப்புகளை பெரும்பாலும்  பம்பலப்பிட்டி கிறீண்லண்ட்ஸ் உணவு விடுதியிலும்  சாந்திவிஹார் உணவுவிடுதியிலும்  தமிழ்ச்சங்கத்திலும் நடத்துவார். ஆழிக்குமரன் ஆனந்தன் பாராட்டு நிகழ்வு, மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் பிரிவுபசார விழா, பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா, பாரதி நூற்றாண்டு விழா உட்பட பல நிகழ்ச்சிளை அழகாக ஒருங்கிணைத்திருப்பார். இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு  பாரதியார் சம்பந்தப்பட்ட பல அரிய ஒளிப்படங்களை தருவித்து காட்சிப்படுத்தி,  எஸ்தி நடத்திய பாரதி நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பானது!

பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அக்காலப்பகுதியில் தினகரன் பிரதம ஆசிரியராக பணியாற்றிய ( அமரர் ) இ. சிவகுருநாதன் தலைமை தாங்குவார். அவர் சுவாரசியமான மனிதர். அவர் தலைமை தாங்கினால் சபையில் சிரிப்பொலிக்கு குறைவிருக்காது. பேச்சாளர்களையும் சபையோரையும் அங்கதச்சுவையால் அரவணைத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். அவரையும் மறக்காமல்  ‘எஸ்தியின் குருநாதர்கள் வரிசையில் ‘ எஸ்தி 50 + ‘ மலரில் படத்துடன் நினைவூட்டியிருக்கிறார்கள் மலர்க்குழுவினர். ஏனையவர்கள்: கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சரவணபவன் – யாழ். ஈழநாடு ஆசிரியர் கே.பி ஹரன்.

‘ எஸ்தி 50 + ‘ மலரில் -  “  திருச்செல்வத்தை நினைக்கும்போதெல்லாம், இவருக்கு எப்படி தினமும் 24 மணிநேரத்திற்கும் மேல்,  மேலும் நேரம் கிடைக்கிறது? !  “ என்று ஆச்சரியப்படுகிறார் கனடாவிலிருக்கும் இலக்கிய நண்பர்   அ. முத்துலிங்கம். இந்த ஆச்சரியம் எனக்கு எஸ்தியுடன் உறவாடிய இலங்கைத் தலைநகர் வாழ்க்கையிலேயே வந்துவிட்டது. திட்டமிடல் எஸ்தியின் அடிப்படை அழகு. இவர் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது இப்படியும் One Man Army  போன்று ஒருவர் எம்மத்தியில் அன்றிருந்தையிட்டு நான் மட்டுமல்ல எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச்சேர்ந்த பிரேம்ஜி ஞானசுந்தரன், சோமகாந்தன், மல்லிகை ஜீவா, இளங்கீரன், ராஜஶ்ரீகாந்தன் உட்பட பலரும் வியப்படைந்திருக்கின்றோம். 1980 இற்குப்பின்னர் பாரதி நூற்றாண்டு காலத்தில் நாமிருவரும் நெருங்கிப்பழகினோம். அவை பசுமையான நினைவுகள்.

பேராசிரியர் க. கைலாசபதி தமது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான பக்கங்களை தமது கையினாலேயே எழுதியிருப்பவர். அவருடைய நூல்களின் எண்ணிக்கையிலிருந்தும், பத்திரிகைகள், இதழ்கள், சிறப்புமலர்கள் மற்றும் ஏனைய  படைப்பாளிகளின் நூல்களுக்கு அவர் எழுதியிருக்கும்  முன்னுரைகளிலுமிருந்தும் பல்லாயிரம் பக்கங்களை அவர்  தமது கையெழுத்தினாலேயே வரவாக்கியிருப்பதை அறிவோம்.
ஆனால், அவர் சொல்லச்சொல்ல எழுதப்பட்ட ஒரு முதல் உரை வெளிவந்த நூல் பற்றி அறிந்திருப்போமா...?

அவர் கொழும்பு அரச மருத்துவமனை படுக்கையிலிருந்தவாறே சொல்லச்சொல்ல எழுதப்பட்ட முதல் உரைதான் அவரது இறுதி உரையாகவே அமையும் என்று நாம் எதிர்பார்த்திருக்கவில்லை.  அந்த உரையை அவர் 27-11-1982 ஆம் திகதி எழுதத்தொடங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரைத்தாக்கிய நோயின் உபாதையினால் அவரால் தொடர்ந்தும் எழுத முடியாமல்போனது. எனினும் தான் எடுத்த எந்தக்கடமையிலிருந்தும் தவறாமல் சிறந்த நிருவாகி என்ற பெயரெடுத்த அந்த ஆளுமை எம்மிடத்தில் அந்தக்கடமையையும் நிறைவுசெய்து தந்துவிட்டே, 06-12-1982 ஆம் திகதி தமது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார். இந்தச்சம்பவம் இலங்கையில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே நடந்தது.

நாடுதழுவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு விழாக்கள் நடைபெற்றபோதிலும், காற்றில் கலந்த பேரோசையாகவே நிகழ்த்தப்பட்ட உரைகள் ஊடகங்களில்  செய்தி வடிவில் வெளியாகின. ஆனால், அக்காலகட்டத்தில் ஒரே ஒரு நூல்தான் தமிழில் இலங்கையில் அச்சிடப்பட்டு வெளியானது ஆச்சரியமானது. அதனை எழுதியவர்தான் எங்கள்  "எஸ்.தி." பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கையில் தமிழ்ப்பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளுக்கு தேவைப்பட்ட குறிப்புகளை மாணவர்கள் புரியும் வண்ணம் எளியமுறையில் எழுதப்பட்ட நூல்கள் இருக்கவில்லை என்ற பெருங்குறையை போக்கியவர்தான் எஸ்தி. குறிப்பிட்ட அந்த நூலின் முதல் உரையில் இறுதிப்பந்திகளை பேராசிரியர் கைலாசபதி படுக்கையிலிருந்து சொல்லச்சொல்ல எழுதி முடித்தார் எஸ்.தி.24 பக்கங்கள் கொண்ட இச்சிறுநூலுக்கு இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடாளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு விழாவை நடத்தியபோது தமிழகத்திலிருந்து மூத்த எழுத்தாளர்களும் பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரை அழைத்தபோது,  அவர்களுக்காக ஒரு வரவேற்பு  நிகழ்ச்சியையும்  கொழும்பில் ஒழுங்குசெய்திருந்த எஸ்தி, அக்காலப்பகுதியில் கொழும்பில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சிகளைப்பற்றியெல்லாம் தினகரனில் விரிவாக எழுதினார். தினகரன் வாரமஞ்சரியில் எஸ்தியின் இலக்கியப்பக்கமும் -வீரகேசரியில் எனது இலக்கியப்பலகணியும் - சிந்தாமணியில் எஸ்.டி. சிவநாயகம் அவர்களின் இலக்கியபீடமும் ஞாயிறு தினங்களில் வெளியானபோது அவற்றை ஈழத்து எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள் பெரிதும் விரும்பி வாசித்தனர்.

எஸ்தி, இலக்கிய உலகின் சர்ச்சைகளையும் இந்தப்பத்தியில் தவறாமல் எழுதியமையால் எதிர்வினைகளையும் சந்தித்தார். எனினும் இலக்கிய உலகில் துப்புத்துலக்கி எஸ்தி எழுதிய பாணி வித்தியாசமானது. 1983 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக களைகட்டியிருந்தன. எதிர்பாராமல் அந்த ஆண்டு நடுப்பகுதியில் தலைநகரை கலவர மேகங்கள் சூழ்ந்தைமையால் தமிழர்கள் அனைவரும் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது. எமக்கிடையிலான தொடர்பாடல்கள் குறைந்தன.

தமிழர்கள் தலைநகரில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடமாடவேண்டியிருந்தது. அல்லது அகதிமுகாம்களில் தஞ்சமடைய நேர்ந்தது. திருச்செல்வம் -றஞ்சி தம்பதியர் தமது ஒரே புதலவன் அகிலனுடன் வசித்த வீடும் தாக்கப்பட்டது. வீட்டினுள் புகுந்த இனவாதிகள் தொலைக்காட்சிப்பெட்டிக்கு மேல் இருந்த பாலகன் அகிலனின் படத்தை எட்டி உதைந்து  “ பொடி கொட்டியா  “ என்று கத்தினார்கள். அங்கிருந்து குடும்பத்தினருடன்  தப்பிவந்தவரை,  அதன்  பின்னர் யாழ்ப்பாணம் நல்லூரடியில் இராமலிங்கம் வீதியில் முடமாவடியில் அவரது இல்லத்தில்தான் மீண்டும் அதே வருடம் ஓகஸ்டில் சந்தித்தேன்.

நானும் எங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து, அதே இராமலிங்கம் வீதியில் வசித்த எமது குடும்ப நண்பர் வயலின் கலைஞர் வி.கே. குமாரசாமி அவர்களின் இல்லத்தில் தஞ்மடைந்தேன். அந்த இல்லத்திற்கு சமீபமாகத்தான் எஸ்தியின் வீடு. மாலைவேளைகளில் எனது முத்த குழந்தை பாரதியையும் அழைத்துக்கொண்டு அங்குசெல்வேன். அப்போது அவளுக்கு மூன்று வயது. நானும் எஸ்தியும் நாட்டுநடப்புகள் பற்றி பேசிக்கொண்டிருப்போம். எனது மகள் மடியில் உறங்கிவிடுவாள். எஸ்தியின் துணைவியார் றஞ்சி ஒரு தலையணையும் பெட்சீட்டும் எடுத்துவந்து குழந்தையை தூக்கிச்சென்று கட்டிலில் உறங்கவைப்பார். அச்சமயம் அவரது கனிவான கண்களைப்பார்ப்பேன். அவர்களுக்கு ஒரே ஒரு பிள்ளை. அதுவும் ஆண்பிள்ளை அகிலன் மாத்திரம்தான். பெண்குழந்தை மீதான ஏக்கம் அவர் கண்களில் ஒளிர்ந்திருக்கும். படுபாவிகள் அந்தப்பாலகனையும் யாழ்ப்பாணத்தில் விட்டுவைக்கவில்லை. தந்தையின் எழுத்தாயுதத்திற்கு பதில் சொல்லத்தெரியாத துப்பாக்கி ஆயுததாரிகள் அந்த ஏகபுத்திரனை பலியெடுத்தனர். மேற்கிலங்கை சிங்கள இனவாதிகளுக்கு அந்தப்பாலகன் பொடி கொட்டியா ( குட்டிப்புலி) ! ?  வடஇலங்கை தமிழ் ஆயுததாரிகளுக்கு அவன் என்னவாக இருந்தான்…..? இதற்குப்பதில் இருக்கிறதா!!!???
இந்த அதிர்ச்சியான செய்தி எனக்கு கிடைக்கும்போது நான் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுவிட்டேன். உடனடியாக ஆழ்ந்த துயரம் கலந்த எனது கடிதத்தை யாழ். பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் நண்பர் ஶ்ரீதரசிங்கின் முகவரிக்கு அனுப்பி, அதனை எஸ்தியிடம் சேர்ப்பிக்கச்சொல்லியிருந்தேன். அக்கடிதம் அவரைச்சென்றடைந்தது தெரியாது. ஆனால், சில மாதங்களில் அவரும் சகோதரி றஞ்சியும் கனடா சென்ற தகவலை அறிந்தேன்.

யாழ். ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி ஆகியவற்றிலும் கொழும்பில் தினகரனிலும் பணியாற்றியிருக்கும் எஸ். திருச்செல்வம்,  இலங்கைப்பத்திரிகை உலகில் சவால்களையும் சங்கடங்களையும் மட்டுமல்ல உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியவர். இந்தியாவிலிருந்து அமைதிகாக்க வந்தவர்களினால் தடுத்து வைக்கப்பட்டவர். அச்சமயம் மேஜர் ஹரிஹரன் இவரிடம்,  “ தனது உறவினர்தான் கி. இலக்‌ஷ்மண அய்யர்  “ என்று தெரிவிக்கின்றார். உடனே எஸ்தி  “அவர் உங்கள் உறவினர், ஆனால்,  எனது நல்ல  நண்பர்  “ என்று இரத்தினச்சுருக்கமாக பதில் சொல்லியிருக்கிறார்.

1987 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் தொடங்கிய இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட போரில் தந்தையை இழந்த சில ஏழைத்தமிழ் மாணவர்களின் படங்களுடன் ஒரு செய்தியை நண்பர் எழுத்தாளர் தெணியானுக்கு அனுப்பியிருந்தேன். அச்செய்தியை படங்களுடன் எஸ்தி, தனது முரசொலி பத்திரிகையில் வெளியிட்டிருந்தார். அதிலிருந்த எமது கல்வி நிதிய முகவரியை பார்த்த போரில் தமது  கணவனை இழந்த பல தாய்மார் எம்முடன் கடிதம் மூலம் தொடர்புகொண்டனர். அகதிகளாக இராமேஸ்வரம் மண்டபம் முகாமுக்குச்சென்றவர்களில் சிலரும் அந்தச்செய்தி வெளியான முரசொலியின் நறுக்குடன் எம்மை தொடர்புகொண்டனர். அவ்வாறு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கு உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஊடக ரீதியாக பாலம் அமைத்துக்கொடுத்தவர்தான்  நண்பர் எஸ்தி. எமது கல்வி நிதியம் அயற்சியின்றி இன்றும் இயங்கிவருகிறது. அன்று எஸ்தியின் முரசொலி பத்திரிகையில் மாணவர்களாக  தோன்றியவர்கள் பின்னாளில் பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து,  தொழில் வாய்ப்பும் பெற்று குடும்பஸ்தர்களாகிவிட்டனர். எமது கல்வி நிதியமும் முப்பது ஆண்டுகளை நிறைவுசெய்துகொண்டு தொடர்ந்தும் இயங்குகிறது.

“ உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள், தாங்கள் எங்குசென்று வாழ நேர்ந்தாலும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டே  இருப்பார்கள்  “ என்று எனது பதிவுகள் பலவற்றில் குறிப்பிட்டுள்ளேன். நண்பர் எஸ்தியும் அத்தகையவர்களில் ஒருவர்தான்.  அதனால்தான் அவரால் கனடாவில் புகலிடம் பெற்றபின்னரும் அயற்சியின்றி இயங்கமுடிகிறது.  தமிழர் தகவல் என்ற இதழையும் நீண்ட காலமாக நடத்திவருவதுடன், வருடாந்தம் ஆளுமைகளின் சேவைகளைப்பாராட்டி விருது வழங்கி கௌரவித்து வருபவர். 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல்  தொடர்ச்சியாக, தங்குதடையின்றி, மாதாந்தம் கனடாவில் வெளியாகிறது தமிழர் தகவல். ஒவ்வொரு பெப்ரவரி மாதமும் ஆண்டு மலர் வெளியீடும் விருது விழாவும் இடம்பெறுகிறது. இதுவரை 27  ஆண்டு மலர்கள் வெளியாகியுள்ளன. கனடா உட்பட தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலிருந்து பல்வேறு பணிகளுக்காக இருநூறுக்கும் மேற்பட்ட ஆளுமைகள் விருதுடன் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர்.

கனடியத் தமிழர் சமூகத்தில் விருது வழங்கலை முதன்முதலில் ஆரம்பித்து வைத்த (1992) பெருமை தமிழர் தகவலுக்குரியது. இலண்டன் பி.பி.சி. - தமிழோசை சோ. சிவபாதசுந்தரம், வீரகேசரி ஆசிரியர் க. சிவப்பிரகாசம், ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன், கவிஞர் அம்பி, மூத்த பத்திரிகையாளர் பொன். பாலசுந்தரம் (இலண்டன்), ஜேர்மனி வெற்றிமணி சிவகுமாரன், தொழிற்சங்கவாதி ஐ.தி. சம்பந்தன், பேராசிரியர் சேர். சபாரட்ணம் அருள்குமரன், விஞ்ஞானி சஞ்சயன் முத்துலிங்கம் (கலிபோர்னியா), பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் (மிக்சிகன்), பேராசிரியர் அஜித் யோகநாதன் (ஜோர்ஜியா), வியட்நாம் யுத்தத்தில் எரிகுண்டினால் காயப்பட்ட கிம் புக் ஆகியோர் கனடாவுக்கு வெளியிலிருந்து வந்து விருது பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

தமிழர் தகவல் -  மாதாந்த வெளியீட்டுக்கு அப்பால் பல்துறைசார்ந்தவர்களின் நூல்களை அவ்வப்போது வெளியிட்டுள்ளது. கவிஞர் அம்பி, இலண்டன் நூலகர் என். செல்வராஜா, அதிபர் கனகசபாபதி, கனகேஸ்வரி நடராஜா (சிட்னியில் வசிக்கும் பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களின் சகோதரி), தங்கம்மா அப்பாக்குட்டி, கவிஞர் வி.கந்தவனம், பண்டிதர் எம்.எஸ். அலெக்சாந்தர், லலிதா புரூடி, பிரெட் பாலசிங்கம் ஆகியோரினது உட்பட இருபதுக்கும் அதிகமான நூல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. எஸ்தி, யாழ்ப்பாணத்தில்   முரசொலி நாளிதழை அவரே முதலிட்டுத் தொடக்கியவர். பல இலக்கியப்படைப்புகளுக்கு களம் தந்து அவற்றை நூலுருவிலும் வெளியிட ஆவனசெய்தவர். தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் நாவலும் முரசொலியின் வெளியீடுதான்.

எஸ்தி, கனடாவுக்கு வந்தபின்னர் ஒருநாள் தொலைபேசியில் பேசும்போது, யாழ்ப்பாணத்தில் அவருக்கும் சகோதரி றஞ்சிக்கும் நேரந்த ஈடுசெய்யமுடியாத இழப்பிற்காக ஆறுதல் சொன்னபோது, அவர் சொன்னார்:   “ வாழ்க்கையில் எதிர்பாராமல் விழுந்துவிடலாம். அதற்காக விழுந்தே கிடக்கவேண்டுமா?  எழுந்து நிற்கமாட்டோமா?  “ ஆம்! அவர் எழுந்தே நிற்கிறார். அதற்கு சாட்சியாக மலர்ந்துள்ளது    “ ஊடகத்திரு எஸ்தி 50 +  “ கனடாவிலும் கனடாவுக்கு வெளியிலுமிருக்கும் பலர் , இந்த ஆவணத்தில் எஸ்தியின் குணவியல்புகளையும் ஆளுமைப்பண்புகளையும் தங்கள் வாழ்க்கைப்பயணத்தில் எஸ்தியுடனான நினைவுகளையும் பதிவுசெய்துள்ளனர். இம்மலரின் பின்புற அட்டையில், ஈழத்தமிழரின் அறிவுக்கோயில் எங்களின்  ‘ பீனிக்ஸ்  ‘ பறவை என்ற தலைப்புடன் யாழ். பொதுநூலகத்தின் படம் பதிவாகியுள்ளது. எங்கள் எஸ்தியும்  பீனிக்ஸ் பறவைதான்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R