பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பதிவுகள் இணைய இதழ்

முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “! இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள் ?

E-mail Print PDF

ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரன் உரை( கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் நிகழ்த்திய மதிப்பீட்டுரை)

பாரதிதான் முதன்முதலில் சாதாரண மக்களின் சமூக வாழ்வை கவிதையில் பாடு பொருளாக்கியவன். அதற்கு முன்னர் கவிதை நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. சமயச் சார்புடையதாக இருந்தது.

பாரதிதான் அரசியல் சமூக வாழ்வைக் கவிதையில் கொண்டுவந்தவன். “ எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நம் தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோன் ஆகிறான் " என்று கூறியவன் பாரதி.

எனவே இலக்கியத்தில் நவீனத்தை புகுத்தியவன் பாரதி. அதாவது நவீனத்தை பாடு பொருளிலும் எடுத்துரைப்பு முறையிலும் புகுத்தி புதுமை செய்தவன் பாரதி. இலக்கியத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியவன் பாரதி. அவன் காட்டிய வழியில் புதிய யுகத்திற்குள் படைப்பாளிகள் புகுந்தனர்.

இந்தப்பின்னணிகளுடன் முருகபூபதி எழுதியிருக்கும் புதிய நூல் இலங்கையில் பாரதி. பாரதி ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது? பாரதியை இலங்கையர்களாகிய நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

பாரதி பற்றிய பல நூல்கள் ஈழத்திலே வெளிவந்துள்ளன. ந. இரவீந்திரன் எழுதிய பாரதியின் மெய்ஞ்ஞானம், இளங்கீரனின் பாரதிகண்ட சமுதாயம், அமிர்தநாதர் தொகுத்த பாரதி தரிசனம், பேராசிரியர் க. அருணாசலம் எழுதிய பாரதியார் சிந்தனைகள், எஸ். எம். ஹனிபா எழுதிய மகாகவி பாரதி, பேராசிரியர் கைலாசபதி எழுதிய இரு மகாகவிகள், பேராசிரியர் தில்லைநாதன் எழுதிய வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை, க.த. ஞானப்பிரகாசம் எழுதிய பாரதி பிள்ளைத்தமிழ், சொக்கன் எழுதிய பாரதியின் சக்திப் பாடல்கள், பேராசிரியை சித்திரலேகா எழுதிய பாரதியின் பெண்விடுதலை, அகளங்கள் எழுதிய பாரதியின் பாஞ்சாலி சபதம், மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப்பாட்டு, தாழை செல்வநாயகம் எழுதிய ஈழம் வருகிறான் பாரதி முதலான பல நூல்கள் இலங்கையில் ஏற்கனவே வந்துள்ளன.

நான் மேலே குறிப்பிட்ட நூல்கள் யாவும் பாரதியின் படைப்புகளை வெவ்வேறு கோணங்களில் அணுகியிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட நூல்களிலிருந்து முருகபூபதியின் இந்த நூல் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்ப்போமானால், பாரதி இலங்கையில் எவ்வாறு முக்கியப்படுத்தப்பட்டான்?, இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள்? பாரதியின் புகழ்பரப்புவதில் எவ்வாறு பங்களிப்புச் செய்தார்கள், பாரதியை இளந்தலை முறையினருக்கு எவ்வாறு கொண்டு சென்றார்கள் என்பது பற்றி இந்த நூல் ஆராய்கிறது.

உதாரணத்துக்குக் கூறுவதானால் இலங்கையில் பாரதி பெயரில் தலவாக்கலை, பதுளை ஆகிய இடங்களில் பாடசாலைகள் அமைந்துள்ளன. பாரதி பெயரில் சஞ்சிகைகள் வெளியாகியுள்ளன. பாரதி கழகங்கள் அமைந்துள்ளன. பாரதி பெயரில் விழாக்கள் இடம் பெற்றுள்ளன. பாரதி பெயரில் சிறப்பு மலர்கள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடுவதில் பங்களித்தன, திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் பாரதி எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டான்? பாரதியின் பாடல்கள் எங்கெல்லாம் இடம் பெறுகின்றன? பாரதியின் தமிழ்வாழ்த்து, விழாக்களிலே பாடப்படுவதன் முக்கியத்துவம். போன்ற பல்வேறு விடயங்களை இந்நூல் பதிவு செய்துள்ளது.

இந்த வெளியீட்டு அரங்கிலே எனது பணி, பத்திரிகைகளிலே - இதழியலியலிலே, பாரதியின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பது பற்றி இந்நூலில் காணப்படுகின்ற விடயங்கள் தொடர்பான கருத்துரையை பகிர்வதாக அமையும்.

முதலில் இலங்கைப் பத்திரிகைகள் எவ்வாறு பாரதி இயலை முன் னெடுத்தன எனப் பார்ப்போம்.

வ. ரா. --- இவர் 1935 இல் இலங்கை வந்து வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியவர். புதுச்சேரியில் பாரதியார் இருந்தபொழுது பாரதியாரைச் சந்தித்தவர். பாரதியாரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்டவர். 1911 முதல் 1914 ஜனவரி வரை புதுவையில் பாரதியாருடன் தங்கியிருந்தவர், அவருக்குச் சேவை செய்தவர். பாரதி பற்றிய சரிதத்தை எழுதியவர். 1930 இல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி சிறை சென்றவர். இவரும் ஒரு பார்ப்பனர். பாரதியின் சொற்படி சாதியின் அடையாளமான பூணூலை கழற்றிவிட்டவர். பாரதியாரால்

“ உரைநடைக்கு வ. ரா. “ என்று போற்றப்பட்டவர்.

இவர் வீரகேசரியில் இருந்த காலத்தில் பாரதியின் கருத்துக்களை வீரகேசரி பத்திகையூடாகப் பரப்பியவர். இவர் இலங்கையில் இருந்த காலத்தில் பல இடங்களிலும் விழாக்களில் பேசும் போதெல்லாம் பாரதி பற்றி பேசியுள்ளார். பாரதி புகழ் பரப்பியுள்ளார் என அறிய முடிகிறது. பாரதியின் நண்பர் வ. ரா வீரகேசரியில் ஆசிரியராக அமர்ந்த காலம் முதல் இன்று வரையில் பாரதி தொடர்பான படைப்புகளுக்கும் விவாதங்களுக்கும் வீரகேசரி களம் அமைத்து வருகிறது. பாரதி நூற்றாண்டு காலப்பகுதியிலும் வீரகேசரியில் பலர் பாரதி பற்றி கட்டுரைகள் கவிதைகள் எழுதியுள்ளனர்.

வீரகேசரி குழுமத்தின் மற்றும் ஒரு வெளியீடான மித்திரன், பாரதி நூற்றாண்டை முன்னிட்டு சம்பிரதாய பூர்வமான ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியிருக்கிறது. அந்தப் போட்டிக்கான தலைப்புகளாக சாதிகள் இல்லையடி பாப்பா, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை முதலிய பாரதியின் வரிகளே போட்டித் தலைப்புகளாக அமைந்தன.

அடுத்து தினகரன் பத்திரிகையை எடுத்துக் கொண்டால், அதன் ஆசிரியராக இருந்த சிவகுருநாதன், தினகரனில் பல சந்தர்ப்பங்கங்களில் பாரதி தொடர்பான ஆசிரியத் தலையங்கங்கள் எழுதியுள்ளார். தினகரன் வார மஞ்சரியும் காலத்துக்குக் காலம் பாரதி ஆய்வுகனை வெளியிட்டும் மறுபிரசுரம் செய்தும் வந்திருக்கிறது. பேராசிரியர் கைலாசபதி எழுதிய பாரதியின் புரட்சி என்ற கட்டுரை தினகரன் வாரமஞ்சரியில் அவர் மறைவதற்கு முதல்நாள் வெளிவரச் செய்தவர் சிவகுருநாதன்.

அடுத்து, பாத்திரிகை உலகில் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட எஸ். டி சிவநாயகம். சிந்தாமணியில் அவர் “ நான் கண்ட பாரதி" என்ற தொடரை எழுதினார். இதுவரையில் அந்தத்தொடர் நூல்வடிவம் பெறவில்லை என அறிய முடிகிறது.

1926 இல் ஈழகேசரி பத்திரிகை வெளிவந்தது. ஈழகேசரி இதழில் வெளியிடப்பட்ட பாரதி பாடல்களையும் ஏனைய செய்திகளையும் ஒருங்கு நோக்கினால், அதன் ஆசிரியர் நா. பொன்னையா, சுதந்திர இயக்கத்திலும் மகாத்மா காந்தியிலும் பாரதியிலும் பற்றுடையவரென்பதும் தரமான இலக்கிய வளர்ச்சியை விரும்பியவர் என்பதும் புலனாகும் என பேராசிரியர் சி. தில்லைநாதன் பாரதி பன்முகப்பார்வை என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

ஈழகேசரி பத்திரிகையில், பாரதி நூல்களை தனலக்குமி புத்தகசாலையில் பெறலாம் என்ற விளம்பரமும் இருந்தது என அறிய முடிகிறது. ஈழசேரியில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய நா. பொன்னையா, சோ. சிவபாதசுந்தரம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் 1930 -1958 காலப்பகுதியில் ஈழகேசரி பத்திரிகையூடாக பாரதியின் பாடல்களையும் சிந்தனைகளையும் இலங்கையில் குறிப்பாக வடபுலத்தில் பரவச் செய்த முன்னோடிகளாவார்கள். இவர்களில் ஒருவரான சோ. சிவபாதசுந்தரம் அவர்கள்தான் இன்றும் நாம் கேட்டு மகிழும் லண்டன் பி.பி.சி. ஒலிபரப்பிற்கு தமிழோசை என்ற பெயர் சூட்டியவர். பாரதியின் பாடல்வரிகளான “ தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் " என்ற பாடல்வரிகளிலிருந்து பிறந்ததுதான் இந்தத் தேமதுரத் தமிழோசை.

இந்த அரிய பல தகவல்களை முருகபூபதி, இந்த நூலில் வரிசைக்கிரமமாக தொகுத்துள்ளார்.

ஈழநாடு பத்திரிகை யாழ். மண்ணில் தோன்றியது முதல் அஸ்தமிக்கும் வரையில் பாரதியின் சிந்தனைத் தாக்கத்துடன் வெளிவந்தமைக்கு அங்கிருந்த சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளும் முக்கியமானவை. இலங்கை அரசியலில் தமிழ்த் தலைவர்களால் யாழ்ப்பாணத்தில் 1961ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பிட்ட சத்தியாக்கிரகத்தை உடனுக்குடன் மக்களிடம் எடுத்துச் சென்ற முக்கிய பத்திரிகையாக ஈழநாடு திகழ்ந்தது என்ற தகவலும் இந்நூலில் இடம்பெறுகிறது.

மலையகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய தேசபக்தன் நடேசையர், அவரது மனைவி மீனாட்சி அம்மாள் ஆகியோர் மலையகத் தோட்டப் புறமெங்கும் பாரதியின் எழுச்சிமிக்க பாடல்களை பாடியிருக்கிறார்கள். துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் தேசபக்தன் பத்திரிகை வாயிலாகவும் பாரதியின் விழிப்புணர்வுச் சிந்தனைகளைப் பரப்பியிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட இந்தச் செய்திகளையும் முருகபூபதி இந்நூலில் பதிவுசெய்கிறார்.

இலங்கையில் பாரதி புகழைப் பரப்பியவர்களில் முக்கியமானவர்கள் மூவர் பற்றியும் இந்நூலில் பேசப்படுகிறது. அதில் ஒருவர் சுவாமி விபுலானந்தர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதற் தமிழ்ப்பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர். 1931 முதல் 1933 வரை அங்கு பேராசிரியராக இருந்தவர். அக்காலத்தில் தமிழகத்தில் பாரதியை எவரும் கவிஞனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் பாரதி ஒரு பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாகும். அவன் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவன், அடிநிலைச் சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு பூணூல் அணிவித்து அவனை பிராமணன் என்று கூறும்படி செய்தவன். பிராமணன் மீசை வைப்பதில்லை. பாரதி பெரிய முறுக்கு மீசை வைத்திருந்தான். தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என சமதர்மம் பேசியவன். இவையெல்லாம் இருந்த போதிலும் பாரதி ஒரு பார்ப்பன குலத்தில் பிறந்தவன் என்ற காரணத்தினால் அவனை ஒதுக்கினார்கள். அவனைக் கண்டு கொள்ளாமல் விட்டார்கள்.

அந்தக் காலகட்டத்திலேதான், அந்தச் சூழ்நிலையிலேதான் சுவாமி விபுலானந்தர் அங்கு பேராசிரியராகச் சென்றார். அங்கு 1932 இல் Bharathi Study Circle என்னும் அமைப்பை பல்கலைக்கழகத்தில் நிறுவினார்.

அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடுகளிலும் பாரதிபற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார் என பெ.சு. மணி தான் எழுதிய சுவாமி விபுலானந்தர் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளதையும் முருகபூபதி சுட்டிக்காண்பிக்கின்றார்.

விபுலானந்தர் பணிபற்றி மேலும் சில தகவல்கள் உள்ளன. விபுலானந்தர் முத்தமிழ் வித்தகர். பாரதி கழகம் என்ற சங்கத்தை அண்ணாமலையில் தோற்றுவித்தவர் . பாரதியின் பெயரில் முதலாவது நிறுவன அமைப்பைத் தோற்றுவித்தவர் இவரே. இசை வல்லுனர்களைக் கொண்டு பாரதியின் பாடல்களுக்கு இசை அமைத்தார். அவற்றை எல்லா இடங்களிலும் இசையுடன் பாடச் செய்தார். அதன் பின்னர் பாரதியின் பாடல்களும் அவரது புகழும் தமிழகமெங்கும் பரவின. பாமரமக்களிடமும் சென்றடைந்தன.

அத்தோடு அவர் பேராசிரியராகவும் பரீட்சகராகவும் இருந்தபடியால் பல்கலைக் கழக மாணவர்களுக்கு பாரதி பாடல்களை ஆய்வுப் பொருளாக்கினார். இலங்கையில் அவர் பாடசாலைகளில் பாரதி பாடல்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை போதிக்க வழி செய்தார். முதன் முதலில் பாரதிக்கு ஒரு அங்கீகாரத்தை தமிழகத்தில் ஏற்படுத்திய பெருமை சுவாமி விபுலானந்தரையே சாரும். அதன்பின்னர் 1943 முதல் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது பேராசிரியரானார். இங்கும் பாரதி புகழ்பரப்புவதில் முன்னின்று செயற்பட்டார்.

முருகபூபதியின் இந்த ஆய்வு நூலின் தலைப்பு பற்றியும் கூறவேண்டும்.

நான் முன்னர் குறிப்பிட்ட நூல்களின் வரிசையில் , ஈழம் வருகிறான் பாரதி என்ற நூலை தாழை செல்வநாயகம் எழுதியதாகக் குறிப்பிட்டேன். முருகபூபதி இலங்கையில் பாரதி எனக் குறிப்பிடுகிறார். ஈழம், இலங்கை என இரண்டு வேறுபட்ட சொற்களால் தலைப்பிடப்பட்டதைப் பார்க்கிறோம்.

ஈழம் என்பதே முதலில் தோன்றிய சொல்லாக இருக்க வேண்டும். சங்க இலக்கியத்திலே ஈழத்து பூதந்தேவனாரைப் பார்க்கிறோம். முதற் சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில், ஈழத்துணவும் காழகத்தாக்கமும் என்று குறிப்பிடப்பட்டுள்து. சிலப்பதிகாரத்திலேதான் முதன் முதலில் இலங்கை என்ற சொல் வருவதைக்காண்கிறோம் . கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனைப் பார்க்கிறோம். எனவே இரண்டு சொற்பிரயோகங்களும் சரியானதுதான். ஆனால், ஈழம் என்ற சொல்லே பழமையானது. கிறிஸ்துவுக்கு முற்பட்டது. ஈழப்போர் இலங்கையில் ஏற்பட்டபின்னர் ஈழம் என்ற சொல்லை பாவிப்பதற்கு ஒரு மனத்தடையை பலரும் வகுத்துக்கொண்டார்கள்.

இனி, இந்த நூலில் சொல்லப்படும் சிற்றிதழ்களில் பாரதியின் தாக்கம் பற்றிப் பார்க்கலாம். 1946 ஜனவரியில் வெளியான பாரதி இதழ் தமிழ் மொழிக்குப் புதுமைப் போக்களித்த பாரதியின் பெயர் தாங்கி வந்தது. இதன் ஆசிரியர்களாக கே. கணேஷ், கே.ராமநாதன் ஆகியேர் விளங்கினர். இலங்கையின் முதன் முதலில் வெளிவந்த சிற்றிதழ் பாரதியின் பெயரைத் தாங்கி வந்தது கவனத்துக்கு உரியது.

அதே போன்று கிழக்கு இலங்கையில் இருந்தும் பாரதி என்ற பெயரில் ஒரு சிற்றிதழ் வெளியாகியுள்ளது. 1948 இல் வெளிவரத் தொடங்கிய இதழ் , 36 இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது. பண்டிதர் ம.நாகலிங்கம், கு. தட்சணாமூர்த்தி, த.சபரத்தினம் ஆகியோர் இதன் கூட்டாசிரியர்களாக இருந்துள்ளனர்.

கிழக்கு இலங்கையில் இருந்து தாரகை என்னும் இதழ் வெளியானது. பாரதி நூற்றாண்டு காலத்தில் தாரகை சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது.

1971 முதல் வெளிவந்த குமரன் இதழுக்கு செ. கணேசலிங்கன் ஆசிரியராக இருந்தார். கைலாசபதியின் பாரதி தொடர்பான பார்வைக்கும் கணேசலிங்கனின் பார்வைக்கும் மார்க்சிய வெளிச்சத்திலேயே வேறுபாடுகள் இருந்தன. அதன் எதிரொலியை குமரன் இதழ்களிலும் பார்க்க முடிந்தது. குமரன் 60 இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது. குமரன் இதழில் வெளியான ஆய்வுகள் பாரதியைக் கேள்விக்கு உட்படுத்தின. மறுவாசிப்புச் செய்யத்தூண்டின என்பதையும் முருகபூபதி இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிய தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்ட சிற்றேடு தாயகம். இதன் ஆசிரியர் க. தணிகாசலம். 1983 ஏப்ரல் இதழில் இருந்து தொடர்ச்சியாக பாரதி பற்றிய ஆய்வரங்குக் கட்டுரைகள் இதில் வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டில் “ பாரதி பன்முகப்பார்வை “ என்ற பெயரில் வெளிவந்தது.

1975 ஆம் ஆண்டு உருவான அலை இலக்கிய வட்டத்தின் காலாண்டு இதழ் அலை. ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று அதன் நிருவாக ஆசிரியராகவும் இருந்தவர் அ. யேசுராசா. பாரதி பற்றிய உண்மைகளைத் தெரிவிப்பதிலும் பாரதியை இனங்காண முயல்வோரை இனம் காண்பதிலும் அலை தீவிரம் காண்பித்தது.

அலையின் 22ஆவது இதழ் பீக்கிங்சார்பு பத்திரிகையான செம்பதாகை 11 ஆவது இதழில் பதிவு செய்திருந்த கட்டுரை ஒன்றை தேவை கருதி மறுபிரசுரம் செய்தது. அக்கட்டுரையின் தலைப்பு 'பாரதி பற்றிய சில மதிப்பீடுகள்" என்பதாகும். பாரதிபற்றி கற்க முனைபவர்கள் பாரதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் சரியானவையா? பிழையானவையா? என்பதை அறிய முனைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது என்ற குறிப்பும் முருகபூபதியின் நூலில் காணப்படுகிறது.

2007 ஓகஸ்ட் மாதம் முதல் ஜீவநதி கலை இலக்கிய இதழ், அல்வாயில் இருந்து வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியர் கலாமணி பரணிதரன். ஜீவநதியும் பாரதி தொடர்பான ஆய்வு களுக்குக் களம் வழங்கியிருக்கிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் பாரதியை இதில் விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். 1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க்கவிதை| என்னும் ஆய்வு குறிப்பிடத்தக்கது. பாரதி தன்னால் இயற்றப்பட்ட கவிதைகளால் தமிழுக்கு புதிய வளம் சேர்ந்ததென அவர் கூறியுள்ளர். இவ்வாறு பாரதியைப் போன்று ஈழத்திலும் கவிஞர்கள் தன்னம்பிக்கையுடன் எழுதவேண்டும் என்பதே அம்மன்கிளி முருகதாஸின் எண்ணம் என்பதையும் ஜீவநதியில் வெளியான ஆக்கம் கூறி நிற்கின்றது.

பாரதியின் கவிதை வரிகளை தாரக மந்திரமாகக் கொண்டும் சில இதழ்கள் இலங்கையில் வெளிவந்துள்ளன.

“ ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார். “

என்ற வரிகளைத் தாங்கிவந்த மல்லிகை இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா, 1966 ஆண்டிலிருந்து நீண்டகாலம் அதனை வெளியிட்டு, சாதனை படைத்தவர். 1966 முதல் மல்லிகையில் பாரதியியல் ஆக்கங்கள் ஏராளமாக வெளிவந்துள்ளன. இலங்கைப் படைப்பாளிகள் மட்டுமல்ல, தமிழகத்தவர்களும் அடிக்கடி பாரதிபற்றி மல்லிகையில் எழுதியுள்ளார்கள். சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வு| என்ற கட்டுரையை மல்லிகையில் பேராசிரியர் கைலாசபதி, பாரதி நூற்றாண்டு காலத்தில் எழுதியிருந்தார். பேராசிரியர் கைலாசபதி, மல்லிகையில் எழுதிய இலங்கை கண்ட பாரதி என்ற கட்டுரையை தமிழ் நாட்டின் தாமரை இதழ் மறுபிரசுரம் செய்தது.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, ப. ஜீவானந்தத்தின் கொள்கைகளால் ஆகர்ஷிக்கப்பட்டு டொமினிக் என்ற தனது பெயருடன் ஜீவா என்ற பெயரையும் இணைத்துக் கொண்டவர் இந்த ப.ஜீவானந்தம் பாரதியில் தோய்ந்தவர். பாரதியைப் பரப்பியவர். அவரது உரை மற்றும் கட்டுரைகள் ‘பாரதி வழி’ என்ற நூலாக வெளிவந்தது. 1958 ஆம் ஆண்டில் பாரதி தினத்தை யொட்டி ‘ஜனசக்தி’ யில் ஜீவா எழுதிய ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

‘பாரதியின் தத்துவ ஞானம்’ என்ற தலைப்பைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுதியில் பாரதியின் பன்முகப் பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறார். 1950 களில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது, ப. ஜீவானந்தம் இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்தார். இலங்கையில் கண்டியில் கே. கணேஷ் அவர்களது இல்லத்தில் தங்கியிருந்தவர் . அக்காலகட்டத்தில் மலையகத்திலும் பலகூட்டங்களில் கலந்து கொண்டவர். அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்திலும் பல கூட்டங்களில் கலந்து கொண்டவர். பாரதியின் கருத்துக்களைப் பரப்பியவர்.

“ வெள்ளத்தின் பெருக்கைப்போல்
கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர் "

என்ற பாரதியின் தாரக மந்திரத்துடன் 2000 ஆண்டு வெளிவரத் தொடங்கியது ஞானம் கலை இலக்கிய இதழ். ஞானம் இதழ் பாரதி ஆய்வுகளுக்குச் சிறந்த களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. பாலகிருஷ்ணன் சிவாகரன், பாரதியின் கவிதைகளில் பல்கோணப்பார்வை என்ற ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். பாரதியார் எழுதிய முதற் கவிதை , பாரதியார் எழுதிய முதற் சிறுகதை என்பவற்றை ஞானத்தில் பதிவுசெய்தவர் செங்கதிரோன் த. கோபால கிருஷ்ணன். பாரதியார் 1905 இல் சக்கரவர்த்தனி இதழில் எழுதிய துளசிபாய் என்ற சிறுகதையே தமிழின் முதற் சிறுகதை. வ.வே.சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் அல்ல என அவர் நிறுவுகிறார்.

தனிமையிரக்கம் என்ற கவிதையே பாரதியார் எழுதிய முதற்கவிதை. இது 1904 ஆம் ஆண்டில் விவேகபானு இதழில் வெளியானது. அச்சுவாகனம் ஏறிய முதற்கவிதை அதுதான் என்ற போதிலும், எட்டயபுர சமஸ்தான மன்னருக்கு பாரதி தனது படிப்புக்கு உதவிகேட்டு கவிதை வடிவில் எழுதிய கடிதமே அவர் எழுதிய முதற்கவிதை. அதனைப் பாரதியின் இளைய சகோதரன் பாதுகாத்து வைத்திருந்தார். அந்தக்கவிதை ஞானம் இதழில் முழுமையாகப் பிரசுரமாகியுள்ளது. இக்கவிதை தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுப் பதிப்பில் சேர்க்கப்பட்ட தகவலையும் கோபால கிருஷ்ணன் தந்துள்ளார். ஞானம் வெளியிட்ட ஈழத்துப் புலம் பெயர் தொகுப்பில் பாரதியின் தலைப்புக் கவிதை அமைந்துள்ளது. “ பற்பல தீவினும் பரவி இவ்வெளிய தமிழ்ச் சாதி “ என்று தொடங்கி இறுதியில் “ பெருமையும் இன்பமும் பெறுவார் " என அக்கவிதை முடிகிறது.

தமிழினம் குறித்து பாரதிக்கு இருந்த தீர்க்க தரிசனம் எத்தகையது என்பதை சமகால வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஈழத்துப் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தின் செல்நெறியையும் அதன் உள்ளடக்கத்தையும் ஆவணமாக்கும் பொருட்டு வெளியான குறிப்பிட்ட சிறப்பு மலரில், அக்கவிதை வரிகள் இடம்பெற்றமை மிகவும் பொருத்தமானதே எனக்குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். “ பாரதி ஒரு ஜுவாலை “ என்ற தலைப்பில் ஜீவகாருண்யன் எழுதிய கட்டுரை அமைந்துள்ளது. சுப்பிமணிய பாரதியின் பங்களிப்பு பல பக்கங்களைக் கொண்டது. செய்யுள் வடிவை நாட்டார் பாடல்களுடன் இணைத்து எளிமைப் படுத்தியமை, யமகம், திரிபு, மடக்கு போன்ற யாப்பிலக்கணங்களிலிருந்து விடுபட்ட இலகு கவிதைக்கு வழி சமைத்தமை - நவீன உரை நடையின் சிறுகதை, நாவல், நடைச்சித்திரம், உருவகக் கட்டுரை, வசன கவிதை போன்றவற்றின் முன்னோடி பாரதி என இக்கட்டுரை நிறுவுகிறது.

இவை தவிர பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்? என்ற சர்ச்சையும் வெளியாகியுள்ளது. அந்தச் சுவாமியார் தனது பரம்பரையில் வந்தவர் என்றும் அவர் தனது பேரனார் என்றும் நிரூபிக்கும் வகையில் செங்கை ஆழியான் வெளியிட்ட நூல் தொடர்பாகவும் , ஞானம் ஆசிரியர் எதிர்வினை ஆற்றியிருந்தார். அந்த எதிர்வினை விரிவாக இந்நூலில் பதிவாகியுள்ளது.

இனி பாரதி சிறப்புமலர்கள் வெளியிட்ட இதழ்கள் எவையெனப் பார்ப்போம்

சுதந்திரன் அலுவலகத்திலிருந்து சுடர் என்ற சிற்றிதழ் எட்டு வருடகாலம் வெளிவந்தது. இது, 1982ஆம் ஆண்டு சித்திரை மாதம் பாரதி நூற்றாண்டுச் சிறப்பிதழை வெளியிட்டது. கோவை மகேசன் இதற்கு ஆசிரியராக இருந்தார். 1977 இற்குப்பின் காசி ஆனந்தன் சுடரின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அவரும் 1980ஆம் ஆண்டில் சுடர் பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பின் 1981இல் கரிகாலன் ஆசிரியரானார். இச்சிறப்பிதழில் பாரதி தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் வெளியாகியிருந்தன. இச்சிறப்பிதழின் சிறப்பான அம்சம் என்று குறிப்பிடத்தக்க மூவர் முன் மொழிந்த கருத்துக்கள் என்ற பத்தி இடம் பெற்றிருந்தது. குறமகள் வழங்கிய நேர்காணல் பாரதியின் கருத்துக்களை அடியொற்றிய பெண்விடுதலை தொடர்பான சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தது.

சுடர் இதழ் பாரதி சிறப்புமலர் வெளியிட்டது போன்று கலைச் செல்வி இதழும் பாரதி சிறப்பிதழை வெளிக்கொணர்ந்தது. அது பற்றிய தகவல் இந்த நூலில் இடம்பெறவில்லை. இருப்பினும் முழுமை கருதி கலைச் செல்வி பாரதி பற்றி எடுத்த முன்னெடுப்புகள் பற்றி இங்கு குறிப்பிடுகிறேன். கலைச் செல்வி தனது மூன்றாவது இதழை பாரதி சிற்பிதழாக வெளிக் கொணர்ந்தது. இந்த இதழ் பாரதி மலராக 1958 புரட்டாதி மாதத்தில் வெளிவந்தது. அட்டைப்படம் பாரதியின் உருவம் தாங்கி வெளியிடப்பட்டது. அந்த இதழில் வ. அ. இராசரத்தினம், அ.செ. முருகானந்தன், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா ஆகியோர் எழுதியிருந்தனர். அழ. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர், பாரதி தொடர்பான கவிதையை எழுதியிருந்தார். வங்க எழுத்தாளர் கே. எஸ் . குப்தா எழுதிய சுதந்திரக் கொடி என்ற சிறுகதையை தமிழில் நீர்வைபொன்னையன் தந்திருந்தார். அ. செ. முருகானந்தன் ஒரு தடவை எட்டய புரத்துக்குச் சென்று, பாரதியின் மாமனார் முறையான சாம்பசிவ ஐயர் என்பவரைச் சந்தித்திருக்கிறார். “ பாரதியின் உள்ளத்தில் கனவுக்கும் உணர்ச்சிக்கும்தான் இடமிருந்தது. பசி, தாகம் போன்ற உடல் தேவைகளுக்கு இடமிருக்கவில்லை. அவனைச் சாப்பிடக் கூப்பிட்டால் இலகுவில் எழுந்திருக்கமாட்டான். அவன் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கிடந்தவன் என்பதெல்லாம் வீண்பேச்சு " என்று சாம்பசிவ ஐயரும் அவருடைய மனைவியும் சொன்னதையும் பாரதியாரின் புதுமைக் கருத்துகளின்படி வாழ்க்கையை நடத்துவதில் அவருடைய சந்ததியினரிடையே சில தயக்கங்கள் இருந்ததை தான் அவதானித்ததாயும் பாரதிக்குப்பின் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்

கலைச்செல்வி ஏழாவது இதழில் பாரதி வகுத்த பாதையைக் காட்டுவதாக கவிஞர் முருகையன் கவிதை எழுதியிருந்தார்.

தமிழ் மாணவர்களின் பேச்சாற்றலை ஊக்குவிக்கும் முகமாக கலைச்செல்வி பாரதி தினப்பேச்சுப் போட்டி ஒன்றையும் நடத்தியது. வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

யாழ்ப்பாணத்து தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாரதிவிழா ஒன்றிலே பாரதி வகுத்த பாதை என்ற தலைப்பிலும், சாவகச்சேரி சிவன் கோயிலில் தேமதுரத் தமிழோசை என்ற தலைப்பிலும் கவிஞர் முருகையன் பாடிய கவியரங்கக் கவிதைகளை கலைச்செல்வி எட்டுப்பக்கங்களில் முழுமையாக வெளியிட்டது

1966 கலைச் செல்வி இதழ் பாரதி கவிதைச் சிறப்பிதழாக வெளிவந்தது. அதில் அன்றைய 25 முன்னணிக் கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்திருந்தன. இப்படியாக அதிக அளவில் பாரதி தொடர்பான ஆக்கங்களை வெளியிடுவதில் கலைச் செல்வியின் பங்கும் விதந்து குறிப்பிடும்படியாக இருந்தது.

அக்கினிக்குஞ்சு என்பது பாரதியின் பாடல்வரி. இந்தப் பெயரில் யாழ்ப்பாணத்திலும் அவுஸ்திரேலியாவிலும் இரண்டு இலக்கிய இதழ்கள் வெளியாகியுள்ளன.

மொத்தத்தில் இலங்கையில் பாரதி என்ற இந்த ஆய்வு நூல், நல்ல பல தகவல்களைத் தந்துள்ளது. முன்னர் வெளிவந்த பாரதி பற்றிய நூல்களிலிருந்தும் வேறுபட்டு ஒரு புதிய கோணத்தில் பாரதி பற்றிய ஆய்வுகளைத் தந்துள்ளது. பத்திரிகைகள், நிறுவனங்கள் புத்திஜீவிகள் எப்படி அணுகியிருக்கிறார்கள்? என்பதை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளமை பாராட்டுக்குரியது.

 


நிகழ்வுக்காட்சிகள்:


Last Updated on Wednesday, 16 October 2019 09:42  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றம்/ நோக்கம்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்


பதிவுகள் - ISSN # 1481 - 2991

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


 

பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

Yes We Can
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

THANK YOU!

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

மதுரைத் திட்டம்

மதுரைத்திட்டம்

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

படிப்பகம்

உலக வானொலி