- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -

தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்ஸில் வசிக்கின்றார். கவிதை, நாவல், புனைகதை என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்தது.. பிரெஞ்சு எழுத்தாளர் மார்கெரித் த்யூரா எழுதிய நாவலொன்று 'காதலன்' என்னும் பெயரில் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு இவ்விதம் கூறுகின்றது:

"இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் முதுகலை, பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில் வாணிபம். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். எழுபதுகளில் கவிதைகளில் இவரது இலக்கிய பயணம் தொடங்கிற்று. சிறுகதைகள் குமுயதம், விகடன், கல்கி எனத்தொடங்கித் தற்போது இணைய தளங்கள், சிற்றிதழ்களில் எழுதிவருகிறார். பிரான்சு நாட்டில் ' நிலா' என்கிற இருமாத இதழைத் தொடங்கிப் பின்னர் அதனை மாத இதழாகவும் மூன்றாண்டுகாலம் நடத்தினார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் இயங்கிவருபவர்.. முதல் நாவல் "நீலக்கடல்" தமிழக அரசின் பரிசினைனையும், இரண்டாவது நாவல் 'மாத்தா கரி' கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. ஓர் அறிவியல் சிறுகதை உட்பட இதுவரை ஐன்து சிறுகதை தொகுப்புகள்; ஐந்து நாவல்கள்; மூன்று பிரெஞ்சு நாவல்கள், மூன்று சிறுகதைதொகுப்புகள் உட்பட ஏழு மொழிபெயர்ப்புகள்; எட்டு கட்டுரை தொகுப்புகள், அம்பை சிறுகதைகளின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு ஆகியவை இவரது உழைப்பில் வந்துள்ளன. தவிர இவருடைய மாத்தாஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது. "


முழுமையான விக்கிபீடியாக் குறிப்புக்கான இணைய இணைப்பு: https://ta.wikipedia.org/s/tqe

'பதிவுகள்' இணைய இதழில் அன்று இவர் எழுதிய கவிதைகளிவை.


1.


பதிவுகள் சித்திரை 2001   இதழ்-16
எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்..

நேற்றைய கனவில் நீங்கா முகமும்
நெடு நாளாக தேடும் முகமும்
சோற்று வாழ்வில் சுகப்படும் முகமும்
சொந்தம் வேண்டாம் சொல்லிடும் முகமும்

ஏக்கக் கேணியில் இறங்கிய முகமும்
ஏப்பம் கண்களில் நிறுத்திய முகமும்
எல்லாம் எனக்கே என்றிடும் முகமும்
எல்லாம் தனக்குள் பேசிடும் முகமும்

கூடும் முகமும் குலவும் முகமும்
குறைகளை நிறைவாய் காட்டும் முகமும்
வாடும் முகமும் வணங்கும் முகமும்
வாழ்வுக்காக ஏங்கும் முகமும்

 

எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்

இன்றைக்கொன்று நாளைக்கொன்று
எந்த முகத்தைச் சொந்தம் இழக்கும்
முகத்தினைத் தேடி மொய்க்கும் கண்களை

உதறும் போது உள்ளம் சிலிர்க்கும்
மனத்தின் நிறத்தை முகத்தில் தெளிக்கும்
மந்திரத் தூரிகை மகிமையில் சிரிக்கும்.

எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்...



2.

பதிவுகள் மார்ச் 2003 இதழ் 39
பேசாதிரு மனமே!

இரத்தத்தின் இரத்தங்களும்
இரசவாத நடனமிட
கச்சைகள் கட்டிடுவர்
கலங்காதிரு மனமே!

காவிக்குப் பல்லிலளித்து
கருத்துக்கு முகம் சுளிக்கும்
பாவிகள் சாதகத்தைப்
படியாதிரு மனமே!

உள்ளத்தில் சிறுமைகளை
உரமிட்டு வளர்த்த்வர்கள்
கள்ளத்தால் கதையளப்பர்
கலங்காதிரு மனமே!

நட்பென்று வந்திடுவர்
நலங்கெட பொய்யுரைப்பர்
விலங்கினும் கீழினங்கள்
விலைபோகாதிருமனமே!

பிட்டுக்கு மண்சுமந்து
பிரம்படி பட்ட ஈசன்
கட்டைக்கும் நாட் குறிப்பர்
கலங்காதிரு மனமே!

எதிர்வீட்டுத் தமிழனை
எட்டியுதைத்துவிட்டு
பிறவி தமிழுக்கென்பர்
பேசாதிரு மனமே!

மனம்

நித்தமொரு பித்தமுடன் சித்தமதில் சீழ்பிடித்து
கத்தும் கடல்போல் வீணில் வாழும் - வாழ்வில்
சத்தமின்றி ஓய்ந்துமெள்ளச் சோரும் - மனம் சோரும்!

நத்தமென்றும் கொத்தமென்றும் நாள் முழுக்க ஏர் பிடித்து
சுத்த சன்மார்க்க நெறிபேசும் - பொய்மை
வித்தகங்கள் மறைந்த பின்னர் நோகும் - மனம் நோகும்!

நீதி நெறி வேதமென பாதிவிழிப் பார்வைகளில்
சோதியொளி முகம் முழுக்கக் காட்டும் - உள்ளே
சாதி மதச் சச்சரவில் ஊறும் - மனம் ஊறும்!

ஆதியென்றும் அந்தமென்றும் வீதிகளில் சேதமின்றி
பாதியுடல் தந்தவனைத் பாடும் - வீட்டில்
நாதியின்றி வாழ்பவளைச் சாடும் - மனம் சாடும்!

செறிகின்ற ஞானத்தில் சிறக்கின்ற கூர்மதியை
அறிகின்ற ஆற்றலின்றி வாழும்- பிறர்
எறிகின்ற சொற்களிலே வாடும் - மனம் வாடும்!

அறிவின்றி ஓலமிட்டு குறியின்றி கோலமிட்டு
சொறிகின்ற இச்சைகளில் வீழும்- விதித்த
நெறியென்று வெறும் கதைகள் பேசும் - மனம் பேசும்!


 

3.

பதிவுகள் பெப்ருவரி 2003 இதழ் 38
ஞாபகங்கள்

வாழ்வியல் கவித்துவத்தில்
குயிற்பாட்டாய் ஞாபகங்கள்
பெப்ருவரி 2003 இதழ் 38

இளவேனிற்காலத்து
இலைநீர்முத்தென
காற்றில் கலந்து மனத்தை விசிறிடும்!

பசித்த வாழ்க்கையில்
பழையமுது!

நினைவுப் பதிப்பில்
பிழை திருத்தப்படாமல்
பிரசுரமாவதில்
வருத்தமென்றில்லை.

சுட்டதும் சுடாததும்
ஞாபகத்திற்குமுண்டு
சுட்டது
அந்தரங்கமானது;
சுடாதது
அவைக்களிப்பது!

ஒருமழைநாளில்
எனக்காக அம்மா
இரவெலாம் அலைந்து
நாய்க்குட்டி நண்பனைத்
தேடித் துவட்டித்
திண்ணையில் விட்டதாய்
ஞாபகம்....

இப்போதும் எனக்குள்
நாய்க்குட்டிகளுண்டு.
அம்மா..?


4.

பதிவுகள் ஜூன் 2003 இதழ் 42
எப்படி? எப்படி...?

ஏரிக்கரை
இறைந்திட்ட பனைமரங்கள்!
பனைமரங்களிடை
பதுங்கி எழுவது
உறங்கப் போகுமுன்
ஒளிவிடும் சூரியன்
என்றிருந்தேன்.
நிலவாய் நீ..!
சில
நட்சத்திரங்களுடன்.
வேட்டியை இழுத்துச்
சட்டையைச் சரிசெய்து
சிற்சில சேட்டைகள்
செய்தேன் பெண்ணே!
நீ.. என்
பசித்த விழிகளைப்
பார்த்து ஒதுங்க
ஏக்கத்துடன்
ஏரியின் நீரில்
கடைசியாய் ஒருமுறை
கல்லை எறிந்தேன்!
'களுக்' கென்றது
தண்ணீரல்ல!
பெண் நீ(ர்)
என்றதால்
நெஞ்சம் நனைந்தது!
மிச்சம் வையுங்கள்
சொன்னவள் நீ!
நானோ
எச்சில் விழுங்கினேன்!
காதல் நஞ்சினால் -என்
கண்கள் சோர,
பச்சிலை விழியால்
பதமாய் முறித்தாய்!

ஊரில் திருவிழா
உலாவரும் அம்மன்!
ஆராதனைக்காக
அடைந்திடும் - உன்
வாசலை!
நாயனக்காரர்
நலம்தானா?
வாசிக்க
நடிகர் திலகமாய்
நான்.
ஒவ்வொரு நிமிடமும்
யுகமாய்க் கழியும்
உறக்கம் பதுக்கி
உறவில் பதுங்கி
இரவை விலக்கி
எழுந்து வருவாய்!
ஒவ்வோர் அடியிலும்
உனக்குள் அச்சம்
காரணம் அறிவேன்!
நீ
கால்களைப் பதிப்பது
என்
கண்களில் அல்லவா?
ஒட்டுத் திண்ணையில்
ஒதுங்கிய தூணில்
எட்டாய் வளைந்து
என்னைத் தேடுவாய்!
வளைக்கரம் கொண்டு
வார்த்தையாடுவாய்!

வாடிய பயிராய்
வருவேன் உன்னிடம்!
பார்த்தும் பாராமல்
ஆலம் விழுதில்,
ஆடிடும் ஊஞ்சலில்
தாழம் பூவைத்
தலையில் சூடிய
கரிய பின்னலைக்
கைகளில் ஏந்திக்
கோலமிடுவாய்
கொஞ்சும் கால்களால்!
உள்ளம் சுரக்கும்
உணர்வுக் காதலில்
மெள்ள வருவேன்,
உள்ளம் தொடுவேன்!
என் உஷ்ண மூச்சை
உணர்ந்தோ என்னவோ
நீ
ஓடி மறைவாய்!

அன்று
உடைந்த மதகில்
உன்றன் நினைவில்
ஊர்வலம் முடித்து
உட்கார்ந்திருந்தேன்!
மெல்லிய வாசம்
மெதுவாய் என்னிடம்
வளைக்கரமிரண்டு
வளைத்திட முயல,
உன்னையறிந்து
ஊமையாயிருந்தேன்.
எனக்குள்
ஒரு பொறி -
என்ன நேர்ந்தது?
வந்தேன் நின்றேன்!-உன்
வாசலில் கூட்டம்-
இறந்தாயாம் நீ
எப்படி? எப்படி?
ஆலுடன் விழுதும்
சூலுடன் ஏரியும்
ஊருடன் விழாவும்
ஒரு நாள் மறையலாம்
உள்ளமே நீ
எப்படி? எப்படி?



5.

பதிவுகள் ஏப்ரில் 2003 இதழ் 40
இறந்து வாழ்வோம்

வானத்தை உரசும்
தீக்குச்சி யுத்த விமானங்களின்
செந்தழற் பிடியில்
வெந்து மடிவது
நீயும் நானுமல்ல
மனிதம்

மொழியைக் கொள்ளியாகவும்
எழுத்தைச் இறுதிச் சாசனமாகவும்
மாற்றத் தெரிந்த
மனித வல்லூறுகளின் அலகில்
கிழிபடுவது
எல்லைக் கோடுகளல்ல
மானுடம்

இடிபாடுகளிக்கிடையே
சிக்குண்டிருப்பது
மனித உடல்களல்ல
அன்பும் அருளும்

சமாதான "இலவு"க்குக்
காத்திருந்த கிளிகள்
சண்டியர் பூனைகளுக்கு
இரையாகத்தானே வேண்டும்

கதவிடுக்கில் நுழையும்
காற்றும் இங்கே நஞ்சு
குண்டு மழை
துளைத்த பூமியில்
கொப்பளிப்பது
நீரல்ல குருதி

கலிகால யுகத்தில்
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்
யுத்தம் நடப்பதாகவோ
நடக்குமென்றோ
கதைகளேதுமில்லை
என்பதால்

குழந்தாய் எழுந்திரு

உலர்ந்த என்
முலைப்பற்றி
முனகியதுபோதும்

"இறந்து வாழ்வோம்".


6.

பதிவுகள் செப்டம்பர் 2003
'இன்றைய காலையில் இருப்பதென் பிராணம்....'

கன்றை நக்கும் பசுவாய்
காலையை நக்கும் கதிரவன்!
எச்சிற் பனியில் இளகும் மேகம்
கொச்சை மொழியிற் குலவும் காற்று!
சிறகை அலகாற் சொறியும் காகம்
இறகை விரித்து எழுந்து கரையும்!
குளித்து வேர்த்து நெளியும் கூந்தலைத்
துவட்டும் மனைவியின் துவட்டாச் சிரிப்பு- அவள்
காபி கொடுக்கையில் கை தவறிட
காட்டும் பதட்டம்!
கட்டிச் சோப்பை கரைத்த மகிழ்ச்சியில்
காதல் பரிசுகள்! அவற்றைத்
தொட்டு அணைத்திட எட்டி நடந்திடும்
மெட்டி சிணுங்கல்கள்!
மெல்லும் கண்களை மெல்ல வொதுக்கி
சில்லறை யொத்த சிரிப்பினைக் கொட்டிடும்-
நெஞ்சைக்
கிள்ளும் உபாயமாய் கதவில் ஒளிந்து
பிள்ளையை நிறுத்தி பேசி ஜெயித்திடும்!
நாளைய மாயை, பிரம்மம் அறியுமோ,
இன்றையை காலையி லிருப்பதென் பிராணம்!
நாளைய பீஷ்மனில் நம்பிக்கையற்று
இன்றைய யயாதியாய் இறக்க வாழ்கிறேன்!


 

7.

பதிவுகள் ஆகஸ்ட் 2003
அழுவதும் சுகமே!

அழுவதும் சுகமாம்
கவிஞன் சொன்னான்!
விழும்போதெல்லாம்
பழகிப் பார்க்கிறேன்!
பிறந்தபோது
பேய்க்குரலிட்டு அழுததாக
அத்தை ஒருத்தி
அடிக்கடி சொல்வாள்!
அழுத பிள்ளைதான்
பால்குடிக்கும் - என்ற
அட்சரம் தெரிந்து
பீச்சிய பாலின்
வீச்சம் சுவைத்து
வீங்கிய மார்பில்
தூங்கி அழுதவன்!

அம்மா அருகே
தூங்கும் வயதில்
பாதி ராத்திரியில்
பாயை நனைத்து
மீதி ராத்திரி
அழுது ஓய்ந்தவன்

பள்ளியில், வீட்டில்
கொல்லையில், கொடுக்காப்புளி
மரத்தின் அடியில்
கொடுக்கல் வாங்கல்
பிரச்சினைக்காகத்
தோற்றவன் நான்
துவண்டு அழுவேன்!

வளர்ந்த பிறகு
வாய்விட்டு அழுவது
மண்ணில் குமரர்க்கு
மரியாதையில்லையாம்!
கண்ணைத் துடைத்துக்
கலங்கியிருக்கிறேன்!
உள்ளத்துக்குள்ளே
உடைந்து இருக்கிறேன்!

கண்ணைக் கசக்கி
என்னுள் புதைந்து
பின்னும் வார்த்தையில்
பேசிடும் மனைவியின்
அழுகைக்குள்ளே
தொழுகை நடத்துவேன்!

அழுவதன் இலக்கணம்
அறிந்தவர் அழுதால்
பழுதில்லாமல் பரிவுகள் நீளும்!

அழுதபின் நெஞ்சில்
வழிகள் திறப்பதும்
குபுக்கெனவங்கே
குறைகள் சரிவதும்
உடைந்து உதிரும்
கண்ணீர் மருந்தில்
சோகக் காய்ச்சல்
சொஸ்தமாவதும்
அடடா!
சுகமே சுகமே!
அழுவதும் சுகமே!


8.

நவம்பர் 2005 இதழ் 71
கனவிடைத் தோயும் நாணல் வீடுகள்!

சருகுகளான 'நினைவுகளுக்கிடையில்':
பச்சையம் இழக்கா முதல் வீடு
தோட்டக்கால் மண்ணில் 'க(¡)ல்' அறுத்து
மூச்சுக்காற்றில் முகம் தேய
செங்கற் சூளைக்கு மரங்கள் தேடி
காய்த்துக்குலுங்கிய புளியமரமும்
களையெடுத்த பனைமரங்களும் சாம்பலானது.
சுபுமுகூர்த்தத்தில் சூளைபிரிக்கவும் மனைகோலவும்
சுத்த வாக்கிய தம்பிரான் மொழி.
உள்ளூரில் கிணறுகள் கட்டிப் பழகியிருந்த சின்னச்சாமி வகையறாக்கள்
உதவிக்கு வந்த ஒரிருமாதங்களில் தெருவைப்பார்த்த
முதல் வீடு -அப்பாவீடு.
அடுப்படியில் அம்மாவின் குரல்
தெருத் திண்ணையில் அப்பாவின் குரல், '
உச்சு'கொட்டும் அவர் சகாக்களின் குரல்
இடப்புற இருட்டறை இடைக்கிடைத் துப்பும் 'பாட்டி'யின் குரல்
பின்னிரவு பூனையின் குரல் முன்னே கிரீச்சிடும் எலியின் குரல்
தூண்களான தோட்டத்துமரங்களில் தொட்டால் உதிரும் புள்ளினக்குரல்கள்.
அம்மா: கோ(டி)ட்ட பால், மோர் கணக்கு அடுக்களை முதுகு,
மஞ்சள்குங்குமம் தின்று செரிக்காத நடுவீடு, முருங்கைகீரை சாம்பார் மணம்.
காலம்: கட்டிய சிலந்தி குளவிக் கூடுகள் பலியுண்ட
மூட்டை பூச்சிகள் உடலொட்டிக்கிடக்கும் உதிராதச் சிவப்பு சிந்திய
மஞ்சள் சளியின் முதிராத கறுப்பு.
அக்கா: தலைச்சன்பிள்ளைக்காக தூலத்திலிட்ட
கூறைப்புடவை தூளி, மூத்திரவாடை, முலைப்பால் கவிச்சை.
அப்பா அம்மா நிழல் விளையாட்டைக் கண்ட
விளிம்பு இரவின் விழிப்பு,
இருபாலரையும் அருவருத்த இரண்டாம் நாள்.
காரணம் சிலிர்க்க மறைவில் குறியை விறைத்து....
கனவுற்ற நாள்கள்.

நிழலும் 'நானு'மாய் பறந்து மாய்ந்து
இறக்கைகள் குறைத்து பூமிக்கு வீங்கி
ராஜஸ்தான் மார்பிள்,பிரெஞ்சு விண்டோஸ், கார் நிறுத்த போர்டிகோ,
குளிரூட்டிய அறை, அட்டாச்டு பாத்ரூம்...
மனைவி பிள்ளைகள் சூழ
மனையில் உட்கார்ந்து
கிரகப்பிரவேசம்
மறுநாள் தெருக்கதவில்
'வாடகைக்கு விடப்படும்'
பிறந்தமண்ணில் எனது வீடு.

கால மக்மாவில் கரியும் ஆயுள்
காதோரம் நரைக்கும்
அக்கரைப்பச்சைகள்
நிகழ்காலத்தில் தளும்பும்
கடந்த காலத்தின் கானல் நீர்
கால் இடற படிகள் ஏறவும்,
கை நடுங்கத் தீ மூட்டவும் - பால்காய்ச்சவும்
நாணல் வீடுகள்
கனவிடைத் தோயும்
அங்குமிங்குமாய் அலையும் 'இருப்பு'.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R