ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இக்கட்டுரை சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகளின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். மார்க்சிய சமூகவிஞ்ஞானம் கண்டறிந்த சமூக முடிவுகள் மனிதகுல வரலாற்றில் முப்பெரும் பிரிவுகளாக அறியப்படுகின்றது.

1.    வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
2.    வர்க்கச் சமூகங்கள்
3.    எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற பொதுவுடைமை சமூகம்

1.வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
மனித மூதாதையர்கள் வாழ்ந்த வர்க்கங்கள் தோன்றாத சமூகம். அதாவது, தனிச்சொத்துடைமை தோன்றாத சமூகம். இதனை ஆதிப் பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமைச் சமூகம் என்பர். இக்காலக்கட்டத்தில் மனிதர்களுக்குள் வர்க்கப்பிரிவு தோன்றியிருக்கவில்லை. அதாவது, உழைப்பவர்கள், பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்கின்ற பிரிவு தோன்றியிருக்கவில்லை. தாய் தலைமையில் காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்து வாழ்ந்தார்கள். வேட்டை, கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியன கரு வடிவில் தோன்றியிருந்தன. பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் இத்தகைய வர்க்கமற்ற புராதன பொதுவுடைமை சமூகத்திலேயே வாழ்ந்தார்கள்.

புராதனப் பொதுவுடைமை சமூகம்
காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிக படிநிலையில் தோன்றிய சமூகம்.   கருத்துக்களையும் கருவிகளையும் உருவாக்கிக்கொண்டு சகமனிதர்களாகக் கூடி உழைத்து வாழ்கின்ற உயிரினமாக மனித இனம் புராதனப் பொதுவுடைமை சமூகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது.  புராதனப் பொதுவுடைமை சமூகத்தில் வர்க்கங்கள் தோன்றியிருக்கவில்லை. அதாவது, மனிதர்களிடையே உழைப்பவர்கள் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்ற பிரிவு தோன்றியிருக்கவில்லை.  புராதனப் பொதுவுடைமை சமூக மனிதர்கள் காடுகளில் வாழ்ந்தார்கள்.  நார், கூடை, முறம், கட்டை, எலும்பு, கல் ஆகியவற்றை கருவிகளாகக் கையாண்டார்கள். ஈட்டி, வேல் ஆகியன புராதன மனிதர்களின் மேன்மையான ஆயுதங்களாகத் திகழ்ந்தன. காய், கனி, கொட்டை, கிழங்கு, இலை போன்ற காட்டுப் பொருட்களைச் சேகரிப்பதை முதன்மையானத் தொழிலாளகக் கொண்டிருந்தார்கள். வேட்டைத் தொழிலில் ஈடுபட்டு படிப்படியாக வளர்ச்சியடைந்தார்கள்.  கால்நடை மந்தை வளர்ப்பும் விவசாயமும் கரு வடிவில் வளரத் தொடங்கின. தேவைக்கு அதிகமானப் பொருட்களைச் சேகரிக்க முடியாத வாழ்க்கையைப் புராதன மனிதர்கள் வாழ்ந்தார்கள்.  கூட்டத்தின் மூத்த தாய் புராதன மனிதர்களுக்கு வழிநடத்தும் தலைவராகத் திகழ்ந்தார்.

புராதன மனித சமூகத்தில் இரு வேறு .இனக்குழுக்கள் சந்திக்க நேர்ந்ததால் போர்கள் நிகழ்ந்தன. எதிரி குழு முற்றிலும் அழியும் வரையிலோ, தப்பித்து ஓடும் வரையிலோ போர்கள் நிகழ்ந்தன.  தேவைக்கு அதிகமான சொத்துக்கள் படிப்படியாக உருவாகத் தொடங்கியதன் விளைவாக இனக்குழு கலவர போர்களும், பாலுறவு உரிமையின் மாற்றமும், தந்தையதிகார ஆரம்பமும், தாய்தலைமையின் தடுமாற்றமும், வர்க்கச் சமூகம் உருவாக வழியமைத்தன.  ஆண்டான் அடிமை சமூகமே வர்க்கச் சமூகத்தின் தொடக்கமாக அமைந்தது.

2. வர்க்கச் சமூகங்கள்
மனிதர்களுக்குள் வர்க்கம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளே ஆகின்றன. தாய் தலைமையின் காடுசார்ந்த பொருட் சேகரிப்புமுறை முதன்மையிழந்தது. ஆண்களின் அதிகபட்ச உழைப்பில் புதிய கருவிகளின் வளர்ச்சியுடன் வேட்டைதொழிலும் கால்நடை மந்தை வளர்ப்பு தொழிலும் வளர்ச்சியடைந்தன. தேவைக்கதிகமான பொருட்கள் சொத்துக்களாகப் பெருகின. தாயின் பாரபட்சமற்ற தலைமையினால் சொத்துக்கள் சமச்சீர்நிலையில் இருந்தது. சொத்து உருவாக்கத்தில் ஆண்களின் அதிகப்பட்ச உழைப்பும், குழந்தை உருவாக்கத்தில் ஆண்களின் பங்கும் கண்டறியப்பட்டன. ஆண்களில் ஒருபகுதியினர்  தாய்தலைமையை எதிர்க்கத் தொடங்கினர். தாய்தலைமையிடமிருந்து சொத்துக்களின் பராமரிப்பை ஆண்கள் பறித்தனர். சொத்தின் மீதான தலைமைப் பண்பு அதிகாரமாக உருமாறியது. சொத்ததிகாரம் தோன்றியதால் தந்தை என்ற புதிய உறவு தோன்றியது. உழைப்பவர் உழைக்காதவர் என்ற வர்க்கப் பிரிவு தோன்றியது. சொத்ததிகாரம் தந்தை அதிகாரமாகச் செயல்படத் தொடங்கியது. பாலினச் சமத்துவத்தை அழித்து பெண்களை வெறும் சொத்துக்களாக உருமாற்றினர். ஆணதிகாரம் வர்க்கச் சமூகத்தின் அடையாளமாக நிலைப்பெற்றது. கீழ் வரும் நான்கு சமூகங்களும் வர்க்கச் சமூகங்களே.

1.ஆண்டான்களின் சுகங்களுக்காக அடிமைகள் துன்புறுகின்ற அடிமை உழைப்பு முறை அல்லது ஆண்டான் அடிமை சமூகம். இந்தச் சமூக அமைப்பிலிருந்து பொதுச்சொத்து முறை மாறி தனிச்சொத்துமுறை நிலைக்கத் தொடங்கியது.

2.நிலத்தின் எஜமானர்களுக்காகப் பண்ணை அடிமைகள் பாடுபடுகின்ற பண்ணை அடிமை உழைப்பு முறை அல்லது நிலப்பிரபுத்துவச் சமூகம்.

3.முதலாளிகளின் இலாபங்களுக்காகத் தொழிலாளர்கள் துயருறுகின்ற கூலி அடிமை உழைப்பு முறை அல்லது முதலாளித்துவச் சமூகம்.

4.உழைக்கும் மக்களின் அதிகார ஒற்றுமையால் சொகுசாக வாழ்ந்தவர்கள் சலிப்படைகின்ற மக்கள் தலைமை சமூகம் அல்லது சோசலிச சமூகம். தனிச்சொத்துடைமையைப் பாதுகாக்க உருவான அரசு இயந்திரத்தில் சொகுசாக வாழ்ந்தவர்களின் அதிகாரம் இந்தச் சமூக அமைப்பிலிருந்து உடைக்கப்பட்டது. மனிதத்தோல் போர்த்தியுள்ள மிருகங்களிடமிருந்து அரசு இயந்திரத்தை உழைக்கும் மக்கள் பறித்தெடுத்தார்கள். பொதுவுடைமை இலட்சியத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டு முளைத்த அதிகாரமே இவர்களைச் சாதிக்க வைத்தது. எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற சமூகத்திற்கு பாதையமைப்பதே மக்கள் தலைமைச் சமூகத்தின் நோக்கம். அதாவது, எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற சமூகமே சோசலிசச் சமூகத்தின் இலட்சிமாகும்.

ஆண்டான் அடிமை சமூகம்
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிக படிநிலையில் தோன்றிய சமூகம்.  ஆண்டான் அடிமை சமூகத்திலிருந்து வர்க்கங்கள் தோன்றிவிட்டன. அதாவது, மனித இனத்தில் உழைப்பவர்கள், உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்ற பிரிவு தோன்றிவிட்டது.       வர்க்க சமூகத்தில் ஆண்கள் உயர்ந்தவர்கள் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாலினப் பாகுபாடும் தோன்றிவிட்டது.       ஆண்களின் அதிகபட்ச உழைப்பால் தேவைக்கு அதிகமான சொத்துக்கள் உருவாகின.  கர்பக் காலங்களிலும் இரத்தப் போக்கு காலங்களிலும் பெண்களின் உழைப்பு குறைவாக இருந்தது.

சொத்துக்களைத் தாய் தலைமையிடமிருந்து ஆண்கள் பறித்தார்கள்.  தாய்தலைமையால் பராமரிக்கப்பட்ட பொதுச்சொத்துக்கள் ஆணின் தனிச்சொத்துக்களாக உருமாறின.  தனிச்சொத்தின் மீது அதிகாரம் பெற்ற ஆண் தந்தை எனப் போற்றப்பட்டான்.  தந்தையதிகாரம் வர்க்கச் சமூகத்தின் அடையாளமாக நிலைபெறத் தொடங்கியது.   சொத்துக்கள் மீது அதிகார உரிமை கொண்ட ஆண்களே ஆண்டான்கள். போர் கைதிகளும் சொத்துக்களை இழந்தவர்களும் அடிமைகளாக்கப்பட்டார்கள்.
ஆண்டான்களின் முதன்மை சொத்துக்களாக அடிமைகளே திகழ்ந்தார்கள்.  சொத்துக்கள் மீதான முழு உரிமைகளும் ஆண்டான் வர்க்கத்திடம் இருந்தது.

உழைக்கும் அடிமைகளும் வெண்கலம், செம்பு, பித்தளை போன்ற உலோகங்களும் வலிமையானக் கருவிகளாகத் திகழ்ந்தன. வில், அம்பு, கோல் ஆகியன ஆண்டான் அடிமை சமூகத்தின் மேன்மையான ஆயுதங்கள் ஆகும்.   வலிமையான வேட்டையும் மந்தை வளர்ப்பும் முதன்மைத் தொழில்களாக அமைந்தன. விவசாயம் சிறிய அளவில் வளர்ச்சி பெற்றது.   நாடோடி நிலை கடந்து ஓரிடத்தில் தங்கி வாழும் பண்பாடு உருவாகி வளர்ந்தது.   எந்த உரிமைகளும் சுதந்திரமும் இல்லாதவர்களாக அடிமைகள் வாழ்ந்தார்கள்.  ஆண்டான்களுக்கு வேலை செய்யும் இயந்திரங்களைப்போல அடிமைகளைப் பயன்படுத்தினார்கள்.

அடிமைகளை ஒடுக்கி ஆண்டான்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக “அரசு” என்ற சமூக நிறுவனம் முதன்முதலாக உருவெடுத்தது. இந்த அரசு அனைத்து வர்க்கச் சமூகங்களுக்கும் அச்சாணியாகத் திகழத் தொடங்கியது.  அரசின் மீதான முழு அதிகாரமும் ஆண்டான்களிடம் இருந்தது. ஆண்டான்களுக்கு இடையிலான அதிகாரப் போரும் ஆண்டான்களுக்கு எதிரான அடிமைகளின் போரும் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆண்டான்களின் அரசுகளைச் சிதைத்த அடிமைகளின் போர்கள் நிலப்பிரபுத்துவ சமூகம் உருவாக வழியமைத்தன.

நிலப்பிரபுத்துவ சமூகம்
விவசாய நாகரிகப் படிநிலையில் தோன்றிய சமூகம். நிலங்களே முதன்மையானச் சொத்துக்களாகத் திகழ்ந்தன. நிலத்தை ஆள்பவர்களே நிலபிரபுக்கள் ஆவர். நிலப்பிரபுக்களின் நிலங்களில் சிறிதளவு நில உரிமையுடன் அடிமைகளாக உழைத்து வாழ்பவர்களே பண்ணை அடிமைகள் ஆவர். முதன்மைக் கருவிகள் அனைத்தும் இரும்பு உலோகத்தால் உருப்பெற்றன. இரும்பினாலான வாள், வேல், வில் ஆகியன மேன்மையான ஆயுதங்களாகத் திகழ்ந்தன.

விவசாயமே முதன்மைத் தொழிலாகும். நீர்விசை ஆலை, காற்றுவிசை ஆலை, நவீன குதிரை சேணம் ஆகியன தொழில்நுட்ப மேம்பாடாகத் திகழ்கின்றன. பண்ணை அடிமைகள் ஓரளவு சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள். அரசின் மீதான முழு அதிகாரமும் நில பிரபுக்களிடம் இருக்கின்றது. பண்ணை அடிமைகளை ஒடுக்கி நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாப்பதே அரசின் அதிகாரப் பணியாகத் திகழ்ந்தது. ஓரிடத்தில் தங்கி வாழ்வது முதன்மையானப் பண்பாடாக உருப்பெற்றது. விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு கிளைத் தொழில்கள் வளர்ந்தன. வெவ்வேறு நிலப்பிரதேசங்களில் உற்பத்தியாகும் பொருட்களைப் பரிமாற்றுகின்ற வர்க்கமாக வணிகர்கள் தோன்றினார்கள்.

நாணய பயன்பாடும் அடிமை வாணிகமும் வளர்ந்தன. கடன், வட்டி முறைகள் தோன்றின. சொத்துக்கள் மீதான அதிகார உறவு நிலப்பிரபுக்களிடம் இருக்கின்றது. நிலப்பிரபுத்துவ அரசர்களுக்கு இடையிலான அதிகாரப் போரும், நிலப்பிரபுக்களுக்கு எதிரான பண்ணை அடிமைகளின் போரும் நிகழ்ந்துகொண்டிருந்தன. நிலப்பிரபுத்துவ அரசுகளைச் சிதைத்த பண்ணை அடிமைகளின் போர்கள் முதலாளித்துவ சமூகம் உருவாக வழியமைத்தன

முதலாளித்துவ சமூகம் வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் படிநிலையில் தோன்றிய சமூகம். இயந்திரங்களும் தொழிற்சாலைகளுமே முதலாளித்துவ சமூகத்தின் முதன்மையானச் சொத்துக்கள். முதலாளியின் தொழிற்சாலைகளில் உழைப்பை விற்பவர்களே தொழிலாளர்கள்.  இலாப வெறியைக் கூர்மைப்படுத்துகின்ற நவீன விஞ்ஞானக் கருவிகளே முதன்மையானக் கருவிகளாகத் திகழ்கின்றன.  துப்பாக்கி, வெடிகுண்டு, அணுஆயுதம், செயற்கை நுண் கிருமிகள், மனித இயந்திரங்கள் ஆகியன மேன்மையான ஆயுதங்களாகத் திகழ்கின்றன. நீராவி இயந்திரம், மின் இயந்திரம், மீப்பெரும் தகவல் மையம், செயற்கை நுண்ணறிவு கணினி, மனித இயந்திரம், அணுசக்தி ஆகியன தொழில் நுட்ப மேம்பாடாகத் திகழ்கின்றன. தொழிற்சாலையில் பணி செய்தலே முதன்மையானத் தொழிலாகும். கூலி அடிமைகள் என்ற பாட்டாளி வர்க்கம் தோன்றுகிறார்கள். அரசின் மீதான முழு அதிகாரமும் முதலாளிகளிடம் இருக்கின்றது. தொழிலாளிகளை ஒடுக்கி முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதே அரசின் அதிகாரப் பணியாகத் திகழ்கின்றது. தனிமனித உரிமை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன நடைமுறைக்கு பொருத்தமற்ற வெற்று முழக்கங்களாகத் திகழ்கின்றன.

மனிதர்களின் வாழ்க்கை தொழிற்சாலைகளை மையமிட்டதாக அமைகின்றது. அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வளர்ச்சியடைகின்றன. நடுத்தர வர்க்கங்கள், குட்டி முதலாளித்துவ வர்க்கங்கள் தோன்றுகின்றன. வட்டித் தொழிலே வங்கி நிறுவனமாக உருவெடுக்கின்றது. வணிகக் கடன்கள் வளர்ச்சியடைகின்றன. சொத்துக்கள் மீதான அதிகார உறவு முதலாளித்துவ வர்க்கத்திடம் இருக்கின்றது. முதலாளித்துவ வளர்ச்சியின் முதுமை பருவத்தில் அரசு, வங்கி, தொழில் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து ஏகாதிபத்தியமாக உருவெடுக்கின்றது. சரியான பொதுவுடைமை கட்சியின் தலைமையில் தொழிலாளர்களை முதன்மைப்படுத்தி சோசலிச சமூகத்தைப் படைப்பதற்கான திட்டமிட்ட அறிவியல்பூர்வமான நடவடிக்கைகள் வளர்ச்சியடைகின்றன. முதலாளித்துவ முதிர்ச்சிக்கும் சோசலிச முயற்சிகளுக்கும் இடையிலான உலகளாவிய போர்கள் நிகழ்கின்றன.  கருவிகள், ஆயுதங்கள் போன்ற உற்பத்தி சக்திகள் நவீனமடைதலில் பலவீனம் இருக்கும்வரை தேசிய இனவெறி, மதவெறி போன்ற பேரழிவு நடவடிக்கைகளைக் கையாள்வதன் வழியாக முதலாளித்துவம் உயிர் பிழைத்திருக்கும்.

முதலாளித்துவம் தனது உயிர் பிழைத்தல் நடவடிக்கைக்காக கையாள்கின்ற பேரழிவு நடவடிக்கைகளே பாசிசம் ஆகும். முசோலினியின் பாசிசம், ஹிட்லரின் நாசிசம், மோடியின் இந்துத்துவம் ஆகியன முதலாளித்துவம் கையாள்கின்ற பாசிச நடவடிக்கைகள் ஆகும். உற்பத்தி சக்தியின் வளர்ச்சியின் விளைவாக முதலாளித்துவத்தின் பாசிச நடவடிக்கைகள் முடக்கப்படும்.l முதலாளிகளுக்கு இடையிலான அதிகாரப் போர்களும், முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போர்களும் நிகழ்கின்றன. முதலாளித்துவ அரசுகளைச் சிதைக்கின்ற தொழிலாளர்களின் போர்கள் சோசலிச சமூகம் உருவாக வழியமைக்கும்

சோசலிச சமூகம்
மக்கள் தலைமை கட்டுப்பாட்டில் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல் படிநிலையில் தோன்றிய சமூகம். சோசலிச சமூகத்தில் நிலங்கள், தொழிற்சாலைகள், முதலாளிகளுக்கு வரையறுக்கப்பட்ட  தனிச்சொத்துக்கள் உட்பட அனைத்து வகையான உற்பத்தி சாதனங்களும் சோசலிச அரசுக்கு கட்டுப்பட்டதாக அமையும். அரசின் மீதான செல்வாக்கு பாட்டாளி வர்க்கத்துக்கே உண்டு. சொத்துக்கள் மீதான அதிகார உறவு பாட்டாளி வர்க்கத்திடம் இருக்கும். சோசலிச சமூகம் முதலாளித்துவ மீட்சியிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும், உலகளாவிய நிலையில் பொதுவுடைமை சமூகத்தை எட்டுவதற்கும் சோசலிச அரசு பொறுப்பேற்கும். உலகம் முழுதும் சோசலிச நாடுகளைக் கட்டமைக்க துணை செய்யும்.

முதலாளித்துவவாதிகள் மீது சர்வாதிகாரமும், பாட்டாளிவர்க்கம் சார்ந்த பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகமும் நடைமுறையில் இருக்கும். முதலாளித்துவத்தை ஒடுக்கி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதே சோசலிச அரசதிகாரத்தின் பணியாகத் திகழ்கின்றது. சமூகப் பொருளுற்பத்தியை மேன்மைப்படுத்துகின்ற நவீன விஞ்ஞானக் கருவிகளே முதன்மையானக் கருவிகளாகத் திகழ்கின்றன. மேன்படுகின்ற சமூகப் பொருளுற்பத்தியைத் தற்காக்கும் ஆற்றலுடைய ஆயுதங்களே மேன்மையான ஆயுதங்களாகத் திகழ்கின்றன. சமூகப் பொருளுற்பத்திற்குத் தேவையான மிகை உற்பத்திக்குப் பங்காற்றுகின்ற அனைத்து தொழில்களும் முதன்மையானத் தொழில்களே.

சோசலிச சமூகத்தில் வாழும் மனிதர்களுக்கு திறமைக்கேற்ற வேலையும் தகுதிக்கேற்ற கூலியும் கிடைக்கும். அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் சமூகத் தேவையின் அடிப்படையில் விரிவடைகின்றன. மனிதர்களின் ஆழ்மனம் முதல் கருத்துநிலைவரை பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை வீரியப்படுத்தும். இயற்கையின் நலன்களையும் சமூக மேன்மையையும் பொறுப்பேற்று பாதுகாக்கும். மனிதர்களின் தனித்துவமான வேற்றுமைகளுக்கு இடையிலான அனைத்துவிதமான கருத்தியல் ஏற்றத்தாழ்வுகளும் ஒழிக்கப்படும். பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான பாலினச் சமத்துவம் உறுதிசெய்யப்படும். உடல் உழைப்பாளர்களுக்கும் மூளை உழைப்பாளர்களுக்கும் இடையிலான உழைப்பின் சமத்துவம் உறுதிசெய்யப்படும். தாய்மொழிகளுக்கு இடையிலான சமத்துவம் உறுதி செய்யப்படும். அறிவியல் தத்துவத்தின் அடிப்படையில் வாழ்வதற்கான கல்விமுறை விரிவுபடுத்தப்படும்.

பொதுவுடைமை இலக்கை அடைவதற்கு ஏற்றவாறு, மனித உணர்வுகளில் சமூக மேன்மை விருப்பத்தை முதன்மைப்படுத்தி சுயநல விருப்பத்தைக் கீழ்மைப்படுத்துகின்ற உள்ளத்தியல் கட்டமைக்கப்படும். சோசலிச சமூக மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான நடைமுறைகள் உறுதிசெய்யப்படும். குழந்தைகள் வளர்வதற்கும் எதிர்காலத்தில் உழைப்பதற்கும் தேவையான கடமைகளைச் சோசலிச அரசு பொறுப்பேற்று செயல்படுத்தும். உழைப்பில் ஈடுபட முடியாத முதியவர்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பை சோசலிச அரசே ஏற்கும்.

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை பாதுகாக்கப்படும். சோசலிச நாடுகள் விரிவடைவதற்கும் ஏகாதிபத்தியம் நிலைபெறுவதற்கும் இடையிலான அதிகாரப் போர் நிகழும். சோசலிச அரசு உறுதிப்படுவதற்கும் முதலாளித்துவ அரசு மீட்சியடைவதற்கும் இடையிலான விடுதலை போர் நிகழும். உலக ஏகாதிபத்திய அரசுகளை வீழ்த்தும் சோசலிச நாடுகளின் போர்கள் பொதுவுடைமை சமூகம் உருவாக வழியமைக்கும்.

3.எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்றச் சமூகம்! பொதுவுடைமை சமூக (உடைமைப் பண்பற்றச் சமூகம்)  உற்பத்தி நிலை குறிப்புகள்!

புதிய சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப நவீன இயந்திரக் கருவிகள் மேன்மையடைந்திருத்தல்.
இரும்பு, செப்பு, பித்தளை, கல், எலும்பு, மரம், கட்டை, முறம்,  கூடை,  நார் ஆகியன முதன்மையற்ற கருவிகள்.
சமூக உற்பத்தி முறையின் மேன்மையை தற்காப்பதற்கும் இயற்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய  மேன்மையான ஆயுதங்கள் இயல்பாக இருத்தல்.  
உடைமை அதிகாரமின்றி உற்பத்தி சாதனங்கள் இயக்கப்படுதல் இயல்பாக இருத்தல்.
சமூகத் தேவையின் அடிப்படையில் திறமைக்கேற்ற வேலை இயல்பாக இருத்தல்.
சமூகத் தேவையின் அடிப்படையில் தேவைக்கேற்ற கூலி இயல்பாக இருத்தல்.
சொத்துடைமை பண்பற்ற வாழ்க்கை இயல்பாக இருத்தல்.
அரசு நிறுவனமற்ற சமூக வாழ்க்கை இயல்பாக இருத்தல்.
தொழில் நிறுவனங்களை மேன்மைப்படுத்தி வாழ்தல் இயல்பாக இருத்தல்.
வர்க்க உறவுகளின் அதிகாரமின்றி சமூக நிறுவனங்களின் தலைமையில் சமச்சீர் பண்புடன் சொத்துக்கள் இயல்பாக இருத்தல்
அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் இயல்பாக இருத்தல்
அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்துடன் வாழ்கின்ற பண்பு இயல்பாக இருத்தல்
பாட்டாளி வர்க்க பண்புகள் மட்டுமே மனித இயல்பாக இருத்தல்
மனித சமூக மேன்மைகள் இயற்கை சூழலின் அங்கமாக இயங்கும் நிலை இயல்பாக இருத்தல்   
வர்க்க முரண்களின் போர்களற்ற புதிய முரண்பாடுகளுடைய சமூகமாக இயங்கும் நிலை இயல்பாக இருத்தல்
புதிய சமூகத்தின் தேவைகளுக்கேற்ப புதிய பண்பாடுகளுடன் வாழும் நிலை இயல்பாக இருத்தல்
பழைய வர்க்கச் சமூகங்களின் சகிக்க முடியாத பண்புகளிலிருந்து விடுபட்டு, புதிய வர்க்கமற்றச் சமூகத்தின் மேன்மைமிக்க பண்புகளுடன் மனித வாழ்க்கை இயல்பாக இருத்தல்.

பொதுவுடைமைச் சமூகத்தின் உற்பத்தி நிலை குறிப்புகள் அனைத்தும் எமது அனுமானங்களே. எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற சமூகத்தின் மேன்மைக்கு சமூகவிஞ்ஞானம் நல்கும் உத்திரவாதத்தை இக்குறிப்புகளுக்கு நல்க முடியும் என்று எம்மால் உறுதியளிக்க முடியாது. இலாபவெறி பிடித்த முதலாளித்துவ உற்பத்தி என்பது ஒரு கொடூரமான மிருகம். தனியுடைமை சமூகத்தின் முதிர்ந்த பருவம். வயது முதிர்ந்த இந்தக் கிழட்டு மிருகம் மரணிக்கும்வரை உலகை கொல்லும். கொல்லப்படுவது மனிதகுலம் மட்டுமல்ல, உலக உயிர்களையும் இயற்கை வளங்களையும் இணைத்துதான். அந்த மிருகத்தின் இலக்கு என்பது தனது அழிவினை உலகையே கொல்லும் பேரழிவாக உறுதிப்படுத்துவதாகும்.

இந்த மிருகத்திற்குச் சவாலாக இருப்பதும் உலகின் வாழ்வை காப்பாற்றும் ஆற்றலும் பொதுவுடைமையை படைக்க முயல்கின்ற மார்க்சிய சமூகவிஞ்ஞானிகளுக்கு மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் இந்த மிருகத்தை கோடிக் கரங்களுடைய மக்கள் தேவதையைக் கொண்டு ஒரேயடியாக வீழ்த்தும் ஆற்றல் பொதுவுடைமைக்கு மட்டுமே உண்டு.

தனியுடைமை என்பது செயற்கையின் ஆக்கமாக மனிதகுலத்தை இயக்குகிறது. பொதுவுடைமை என்பது இயற்கையின் அங்கமாக மனிதகுலத்தை இயக்குகிறது. தனியுடைமைக்கும் பொதுவுடைமைக்கும் இடையிலான மனிதகுலத்தின் போர் ஒட்டுமொத்த உலகிற்கும் வாழ்வா? சாவா? பிரச்சனையாகும். தனியுடைமைக்கு உலகப் பெருமுதலாளிகளும், பொதுவுடைமைக்கு உலகின் மார்க்சிய சமூகவிஞ்ஞானிகளும் தலைமையேற்று போரிடுகிறார்கள். இந்தப் போரில் மார்க்சிய சமூகவிஞ்ஞானிகள் வென்றால் உலகும் இயற்கையின் அங்கமாக மனிதகுலமும் மேன்மையான வாழ்வை அடையும். தோற்றால் உலகம் முற்றிலும் அழிந்து வேறொரு இயக்க வடிவை எட்டும். இரண்டில் எந்த ஒன்றும் நிகழ வாய்ப்பிருக்கின்றது. எனினும் பொதுவுடைமை சமூகம் பற்றிய இத்தகைய முடிவுகள் மார்க்சிய சமூகவிஞ்ஞானிகளின் சிந்தனை வெளிச்சத்தில் தவிர்க்க முடியாதவை. ஆதிமனிதர்கள் வாழ்ந்த பொதுவுடைமைச் சமூகமே வர்க்கச் சமூகம் முளைப்பதற்குரிய விதையாக இருந்தது. எனவே இந்த விதை இயங்குதலின் நான்காம் தன்மையை அடையும். அதாவது, பொதுவுடைமை சமூகம் உயர்ந்த நிலையைச் சந்திப்பது உறுதி. எனவே மனிதகுலம் நீடித்தால் எதிர்காலத்தில் பொதுவுடைமை சமூகம் தவிர்க்க முடியாதபடி உறையும் என்பது எமது உறுதியான முடிவு.

துணை செய்தவை
ராகுல் சாங்கிருத்யாயன். 2003(1949). வால்காவிலிருந்து கங்கை வரை. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
ராகுல் சாங்கிருத்யாயன். 1999(1946). பொதுவுடைமைதான் என்ன?. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
எம் இலியீன் யா ஸெகால், 2012, மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான்?, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
ஜார்ஜ்தாம்சம். 2002. மனித சமூக சாரம். விழுப்புரம்: சரவணபாலு பதிப்பகம்.
ஜார்ஜ்தாம்சம். 2005. மனித சாரம். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
ஸ்டாலின்,ஜே.வி. 2017.மார்க்சியமும் மொழியியலும். சென்னை: புதுமை பதிப்பகம்.எங்கெல்ஸ், பிரெடெரிக். 2011(2008). குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.
எங்கெல்ஸ், பிரெடெரிக். 2012. மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம். சென்னை: பாரதி புத்தகாலயம்.
கணேசலிங்கன்.செ, குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள், குமரன் பதிப்பகம்.
கணேசலிங்கன்.செ, குமரனுக்குக் கடிதங்கள் அறிவுக் கடிதங்கள், குமரன் பதிப்பகம்.
சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். https://puthiyavansiva.blogspot.com/2016/10/blog-post_79.html
புதியவன். ஜுலை 2017. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள். புதியகோடாங்கி. பக்.30-33. https://puthiyavansiva.blogspot.com/2017/06/blog-post_89.html
புதியவன். 2014. நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம். கோயம்புத்தூர்: முகம் பதிப்பகம். https://puthiyavansiva.blogspot.com/2018/11/blog-post.html
புதியவன். மே 2016. காதல் வரலாறு. 'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 – 2991
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5456:2019-10-28-14-28-50&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
புதியவன். டிசம்பர் 2016. காதலிலிருந்து கடவுள்வரை. புதிய கோடாங்கி. பக். 29-37. https://puthiyavansiva.blogspot.com/2016/11/blog-post.html
புதியவன்.மார்ச் 2015. அறிவெனும் பெரும்பசி. ஊடாட்டம் சமூக பண்பாடு அரசியல் பொருளாதார ஆய்விதழ். பக்.40-49. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_4.html
புதியவன்.ஜுன் 2015. அறிவெனும் பெரும்பசி. புதிய கோடாங்கி. பக். 30-37. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_4.html
கைலாசபதி, க.2009(2002). சமூகவியலும் இலக்கியமும். சென்னை: குமரன் பப்ளிகேஷன்ஸ்.
கோபட்கந்தி. 2014. சுதந்திரமும் மக்கள் விடுதலையும். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
சிவத்தம்பி,கா. 1988. தமிழ் இலக்கிய வரலாறு வரலாறெழுதியல் ஆய்வு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
சிவத்தம்பி,கா. 2011. தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும். சென்னை: பாவை பதிப்பகம்.
சிவத்தம்பி,கா. 2011. இலக்கியமும் கருத்துநிலையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
ஷாலினி. செப்.2018. இன்றைய சூழலில் ஆண் குழந்தை வளர்ப்பு. https://www.youtube.com/watch?v=em7H68_2j-E
பக்தவத்சல பாரதி. 2003(1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. 2005. மானிடவியல் கோட்பாடுகள். புதுச்சேரி: வல்லினம் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. 2014. இலக்கிய மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. 2002. தமிழர் மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. 2013 (2007). தமிழகப் பழங்குடிகள். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
ஸ்டாலின்,ஜே.வி.2013. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல் வாதமும். சென்னை: கீழைக்காற்று.
மருதையன். நவ.2017. மூலதனம்150வது ஆண்டு சிறப்புரை. வினவு: https://www.youtube.com/watch?v=llzgMJLriVk&t=1169s
மருதையன். மார்ச்.2019. பாசிசத்தின் இயற்கை கூட்டாளிதான் பா.ஜ.க. வினவு: https://www.youtube.com/watch?v=F2G-tl27Nug
(அப்துல்.நவ.2017.தொழில்துறை முதலாளிகள் பிறந்த கதை. புதியஜனநாயகம். பக்.4-12)
துரைசண்முகம். ஏப்.2016. யாருக்கான அரசு லெனினோடு பேசு. வினவு: https://www.vinavu.com/2016/04/22/lenin-on-state/
தியாகு, மார்க்சியம் என்றால் என்ன?, https://www.youtube.com/watch?v=ZjkTOquBvFk
தேவிபிரசாத்சட்டோபாத்யாயா (தமிழில் எஸ்.தோதாத்ரி). 2010. உலகாயதம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
தி.கே.மித்ரோபோல்ஸ்கி, 2014. சமுதாய வரலாற்றுச் சுருக்கம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R