-  ராகவன் தம்பி (யதார்த்தா கி.பென்னேஸ்வரன்) -- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர்  -


பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102
1. "டோபா டேக் சிங்' - உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ| ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன.இந்த முடிவு சரியானதா இல்லையா என்று சொல்வது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால் . இந்த முடிவுக்கு வருவதற்கு, இருநாடுகளின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் பல ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, பலமுறை கூடி மிகக் கடுமையாக ஆலோசித்தும், விவாதித்தும் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த முக்கியமான பரிமாற்றம் செயல்படுத்தப்படும் இறுதிநாள் மற்றும் பிற முக்கியமான விபரங்களும் மிகவும் கவனத்துடன் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் உறவினர்களைக் கொண்ட முஸ்லிம் பைத்தியங்களை எவ்விதத் தொந்தரவும் இன்றி அங்கேயே வசிக்க விடுவதென்றும், மற்ற பைத்தியங்களை பரிமாற்றத்துக்காக எல்லைக்குக் கொண்டு செல்வதென்றும் இந்திய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

பாகிஸ்தானிலோ, இந்து மற்றும் சீக்கியர்களின் மக்கள் தொகை முழுக்கவும் ஏற்கனவே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விட்டதனால், நிலைமை சற்று மாறுபட்டு இருந்தது. முஸ்லிம் அல்லாத பைத்தியங்களை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற சிக்கல் அங்கு எழவில்லை. இரு அரசுகளின் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவில் என்னவிதமான எதிர்வினை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் லாகூரின் பைத்தியக்கார விடுதிகளில் செய்தி பரவியதுமே அது மிகவும் பரபரப்பினைக் கிளப்பியது.

இத்தீர்மானம் குறித்து லாகூரின் அனைத்துப் பைத்தியக்கார விடுதிகளிலும் பரபரப்பான விவாதங்கள் சூடு கிளம்பின. லாகூரின் தீப்பொறி பறக்கும் "ஜமீன்தார்' தினசரியினை தவறாமல் வாசிக்கும் ஒரு பைத்தியத்திடம் கேட்கப்பட்டது þ ""பாகிஸ்தான்'' என்பது என்ன? அதற்கு அந்தப் பைத்தியம் சொன்ன பதில் þ ""இந்தியாவில், கழுத்தை அறுக்கும் கூர்மையான சவரக்கத்திகளைத் தயாரிக்கும் ஒரு இடத்தின் பெயர்''.இந்த ஆழமான கருத்து பலராலும் மிகவும் வெளிப் படையாக ஒருவகைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு சீக்கியப் பைத்தியம் இன்னொரு சீக்கியனைக் கேட்டது þ சர்தார்ஜி! நாம் ஏன் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறோம்? அங்கு என்ன பாஷை பேசுகிறார்கள் என்பது கூட நமக்குத் தெரியாதே!'' அதற்கு அந்த இன்னொரு சீக்கியர் புன்சிரிப்புடன் சொன்னது

"எனக்கு ஹிந்துஸ்தானியர்களின் மொழி தெரியும். அந்த ராட்சதர்கள் எப்போதும் தாங்கள்தான் இப்பூவுலகின் அதிபதிகள் என்பது போல எப்போதும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள்''.

ஒரு முஸ்லிம் பைத்தியம் குளித்துக் கொண்டிருக்கும்போது "பாகிஸ்தான் ஜிந்தாபாத்'' என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மிகுந்த உற்சாகத்துடன் முழக்கமிட்டது. உணர்ச்சி வேகத்தில் குளியல் அறையிலேயே கால்வழுக்கி விழுந்து பலமணிநேரம் நினைவு தவறிப்போய்க் கிடந்தது. அந்த விடுதியில் இருக்கும் அனைவருமே பைத்தியங்கள் கிடையாது. சிலர் மிகவும் தெளிவாக இருந்தார்கள். தெளிவான அந்தச் சிலரில் பலர் கொலைகாரர்கள். தூக்குமேடைக் கயிற்றுக்குப் பயந்து இப்படிப் பைத்தியங்கள் போல இந்த விடுதிகளில் தங்கியிருந்தார்கள். இதற்காக இந்தக் கொலைகாரர்களின் உறவினர்கள் மேலதிகாரிகளுக்கு நல்ல லஞ்சம் கொடுத்து இவர்களை பைத்தியங்களாக அங்கு தங்கச் செய்திருந்தார்கள். இவர்களுக்கு இந்தியா ஏன் இரண்டாகப் பிரிக்கப் பட்டது என்றும் பாகிஸ்தான் என்றால் என்னவென்றும் சூசகமாகத் தெரிந்திருந்தது. ஆனால் இவர்களுக்கும் அங்கு இருந்த நிலவரத்தைப் பற்றிய முழுமையான விபரங்கள் ஏதும் தெரிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.செய்தித் தாள்களும் அத்தனை உதவிகரமாக இல்லை. அந்த விடுதிகளின் காவலர்களும் ஒன்றும் அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு அத்தனை படிப்பறிவும் இல்லை. அதனால் இவர்களுடைய பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதனால் ஒன்றும் எதையும் அதிகமாகத் தெரிந்து கொள்ள முடியாது. முகமது அலி ஜின்னாவோ காய்த்þஏþஆஜம் என்பவேரா யாரோ ஒருத்தர், தனியாக ஒரு நாடு, "பாகிஸ்தான்' என்ற பெயரில் அமைத்திருப்பதாக யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்தப் பாகிஸ்தான் எங்கிருக்கிறது என்று லாகூரின் அந்த விடுதியில் இருக்கும் எந்தப் பைத்தியத்துக்கும் எதுவும் தெரியவில்லை. அதனால் அங்குள்ள முழுப்பைத்தியங்களுக்கும் அரைப் பைத்தியங்களுக்கும் தான் பாகிஸ்தானில் இருக்கிறோமா அல்லது இந்தியாவில் இருக்கிறோமா என்று எதுவும் தெளிவாக விளங்கவில்லை. தாங்கள் இந்தியாவில் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இழவு பாகிஸ்தான் எங்கு உள்ளது?

பாகிஸ்தானில் இருப்பதாக இருந்தால் நேற்று வரை அது இந்தியாவாக இருந்தது எப்படி? எந்தப் பைத்தியத்துக்கும் தெளிவாகவோ அரைகுறையாகவோ கூட அது விளங்கவில்லை. ஒரு பைத்தியம், இந்த இந்தியாþபாகிஸ்தான், பாகிஸ்தான்þஇந்தியா என்ற சுற்றி அடிக்கும் பேச்சுக்களால் கொஞ்சம் அதிகமாகப் பாதிப்படைந்து, ஒருநாள், தரையைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய உடைகளையெல்லாம் களைந்து ஒரு உயரமான மரத்தின் உச்சியில்
மிகவும் வசதியான ஒரு கிளையில் அமர்ந்து கொண்டது.

பாகிஸ்தான்þஇந்தியா பிரிவினை குறித்த அதி நுட்பமான பிரச்னை குறித்து தொடர்ச்சியாக இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமாக சொற்பொழிவாற்றியது. விடுதியின் காவலர்கள் அந்தப் பைத்தியத்தைக் கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பைத்தியம் மரத்தை விட்டுக் கீழே இறங்காமல் இன்னும் உயரமான மற்றொரு கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. காவலர்களின் மிரட்டல்கள் தண்டனையாக உருமாறியபோது, ""எனக்கு இந்தியாவும் வேண்டாம் þ பாகிஸ்தானிலும் வாழவேண்டாம். இந்த மரக்கிளையிலேயே நான் மிகவும் வசதியாக இருப்பேன்'' என்று அறிவித்தது. ஒருவழியாக கீழே இறக்கப்பட்டதும் தன்னுடைய இந்து மற்றும் சீக்கியத் தோழர்களை கண்ணீர் மல்க ஆரத் தழுவிக் கொண்டது. அவர்கள் தன்னை விட்டுப் போய்த்தான் ஆகவேண்டும் என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டது.

அந்த விடுதியில் எம்.எஸ்.சி பட்டம் பெற்ற ஒரு ரேடியோ இன்ஜினியர், யாருடனும் பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ளாது. மிக நீளமான ஒரு சாலையில் நடப்பதைப் போன்ற பாவனையில் எப்போதும் விடாது நடந்து கொண்டே இருக்கும். விடுதியில் இடைவிடாது நடந்து கொண்டிருக்கும் இந்தியா பாகிஸ்தான் விவாதங்களால் பாதிப்படைந்து ஒரு நாள் தன்னுடைய உடைகளையெல்லாம் கழற்றி விடுதியின் காவலனிடம் பெரிய பந்தாகச் சுருட்டிக் கொடுத்து விட்டு விடுதியின் தோட்டத்தில் முழுநிர்வாணமாக ஒடிக் கொண்டே இருந்தது.சானியத்திலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பைத்தியம் அந்த விடுதியில் தங்கியிருந்தது. பைத்தியமாவதற்கு முன் அகில இந்திய முஸ்லீம் லீகின் தீவிரமான தொண்டனாக இருந்திருக்கிறது. ஒரு நாளைக்குக் குறைந்தது பதினாறு முறையாவது குளிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தது. ஒரு நாள் திடீரென்று குளிப்பதையே நிறுத்திவிட்டு தன்னுடைய பெயர் ""முகமது அலி'' என்றும், தான்தான் காய்த்þஏþஆஜம் என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா என்றும் அறிவித்தது. இதைக் கேட்டதும் விடுதியின் இன்னொரு சீக்கிய
பைத்தியம் தன் பெயர் சீக்கியர்களின் தலைவர் ""மாஸ்டர் தாராசிங்'' என்று அறிவித்தது.

இவை போன்ற செயல்களால் அந்த விடுதியில் மிகவும் தீவிரமான மதக்கலவரங்கள் ஏற்படும் சூழல் நிலவுவதை உணர்ந்த விடுதி நிர்வாகம் இவர்கள் இருவரையும் தனித்தனி கொட்டடிகளில் அடைத்து வைத்து அந்த இருவரையும் மிகவும் ஆபத்தானவர்கள் என்று அறிவிப்பு வெளியிட்டது. காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்டு பைத்தியமான லாகூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞனும் அந்த விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தான். அவனுடைய காதலி அமிருதசரஸில் வசிக்கிறாள். அமிருதசரஸ் இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது என்று யாரோ சொன்னதும் உடனே அவன் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளானான். பைத்தியமான போதும், அவன் காதலி அமிருதசரஸில் இருக்கும் விஷயத்தை மட்டும் அவனால் மறக்க இயலவில்லை. அன்று அவன் இந்தியாவை இரண்டாகப் பிளந்து வைத்த அனைத்து இந்து, முஸ்லிம் தலைவர்களையும் வாய்க்கு வந்தபடித் திட்டினான்.

தன் அருமைக் காதலியை இந்தியப் பெண்ணாகவும், தன்னை பாகிஸ்தானியாகவும் பிரித்து வைத்த சண்டாளர்கள் அவர்கள் என்று ஏசினான். இருநாடுகளுக்கு இடையிலான பரிமாற்றத்தைப் பற்றிய செய்தி கிடைத்ததும் விடுதியிலுள்ள தோழர்கள் அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவன் தான் நேசிக்கும் இந்தியாவுக்கே அனுப்பப்படுவது குறித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஆனால் அமிருதசரஸில் தன்னுடைய வக்கீல் தொழில் அவ்வளவாகத் தழைக்காது என்பதால் தான் லாகூரை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அவன் அறிவித்தான். ஐரோப்பியர்களுக்கான வார்டுகளில் இரண்டு ஆங்கிலோ இந்திய பைத்தியங்கள் தங்கி இருந்தார்கள். அவர்களிடம், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்துவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்வதாகத் தெரிவித்ததும் மிகக் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்குக் கிடைக்கப் போகும் அந்தஸ்து குறித்து அவர்கள் கவலைப்பட ஆரம்பித்தார்கள். தொடர்ச்சியாக தங்களுக்குள் இதுகுறித்து மிகுந்த கவலையுடன் கிசுகிசுவென்று ஆலோசித்துக் கொண்டார்கள். இந்த விடுதியில் சுதந்திரத்துக்குப் பின் ஐரோப்பிய வார்டு தொடர்ந்து செயல்படுமா அல்லது கலைக்கப்படுமா? தங்களுக்கான ஐரோப்பிய காலை உணவு பறிமாறப்படுமா அல்லது கேவலமான இந்திய சப்பாத்திகள் பறிமாறப்படுமா என்பது குறித்து அவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்த விடுதியில் அடைக்கப்பட்ட இன்னொரு சீக்கிய பைத்தியம் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் அவன் பேசும் எந்த வார்த்தையும் யாருக்கும் புரியாது. தொடர்ச்சியாக ஒரே வாக்கியத்தை கடந்த பதினைந்து வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.

"உப்பேர் தி குர்குர் தி அனெக்ஸி தி பே த்யானா தி மூங் தி தால் ஆஃப் தி லால்டின்''

என்று ஒன்றும் புரியாத உளறலைக் கடந்த பதினைந்து வருடங்களாக அந்த விடுதியின் காவலர்கள் அவன் சொல்லக் கேட்டு வருகின்றனர். அவன் கடந்த பதினைந்து வருடங்களாக ஒரு நொடி கூட இமைகளை மூடித் தூங்கியதில்லை என்று அந்தக் காவலர்கள் கூறுவார்கள்.

எப்போதாவது ஒருமுறை விடுதியின் சுவற்றின் மீது சாய்ந்து கொள்வான். மீதி நேரமெல்லாம் எப்போதுமே நின்றுகொண்டுதான் இருப்பான். தொடர்ச்சியாக நின்று கொண்டே இருந்ததனால் இருகால்களும் நிரந்தரமாக வீங்கியே இருந்தன. இதனால் பாதிக்கப் பட்டதாக அவன் என்றும் காண்பித்துக் கொண்டதில்லை. இப்போதெல்லாம் அவன் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையே
பைத்தியங்களைப் பறிமாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தைப் பற்றி விடுதியில் யாராவது பேசிக் கொள்ளும்போது தீவிரமாகக் காது கொடுத்துக் கேட்கத் துவங்கினான். அதைப் பற்றி அவனுடைய அபிப்ராயத்தை யாராவது கேட்டபோது மிகவும் பணிவுடனும் பயபக்தியுடனும் சொன்னான்.

"உப்பேர் தி குர்குர் தி அனெக்ஸி தி பே த்யானா தி மூங் தி தால் ஆஃப் தி கவர்ன்மெண்ட் ஆஃப் பாகிஸ்தான்.''எப்படி இருந்தாலும் அவனைப் பொறுத்த அளவில் இப்போது பாகிஸ்தான் அரசு என்பது டோபா டேக் சிங் அரசாக பெயர் மாற்றம் அடைந்திருந்தது.

டோபா டேக் சிங் என்பது பஞ்சாப் மாநிலத்தின் ஒரு சின்னஞ்சிறிய கிராமம். அது அவனுடைய சொந்த ஊர். அவனும் இப்போதெல்லாம் இந்த டோபா டேக் சிங் எந்த நாட்டுடன் சேரும் என்று கேட்கத் துவங்கியிருந்தான். ஆனாலும் அது இந்தியாவில் இருக்கிறதா அல்லது பாகிஸ்தானிலா என்று அந்த விடுதியில் உள்ள யாரும் தெளிவாக அறிந்திருக்கவில்லை. இந்த மர்மத்தை விடுவிக்க முயற்சி செய்த சிலரும் மொத்தமாகக் குழம்பிப் போனார்கள். ஏனென்றால், பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் முன்பு இந்தியாவில் இருந்தது.

அது இப்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. இது அவர்களை வெகுவாகக் குழப்பியது. இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் எந்த நேரத்திலும் சரிந்து இந்தியா பக்கம் போய்விட வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த விடுதியில் இருந்தவர்கள் ஊகிக்கத் தொடங்கினார்கள். முழு இந்தியத் துணைக்கண்டமும் பாகிஸ்தானாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்தியாவும் பாகிஸ்தானும் என்றாவது ஒருநாள் உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போய்விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என்றும் பேசிக்கொண்டார்கள்.அந்த சீக்கியக் கிழவனுக்கு முடியெல்லாம் கொட்டிப் போயிருந்தது. இருந்த கொஞ்சமான முடியும் அவனுடைய தாடியின் ஒரு பகுதியாக மாறிப்போனது. இது மிகவும் விநோதமாகவும் சமயத்தில் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் அச்சம் தருவதாகவும் இருந்தது. இருந்தாலும் அவன் மிகச் சாதுவாகவும் யாருடனும் சண்டை போடாதவனுமாக இருந்து வந்தான். அவன் டோபா டேக் சிங் கிராமத்தின் வளமான நிலச்சுவான்தாராக இருந்தவன். திடீரென்று பைத்தியமாகிப் போனான். முன்பெல்லாம் மாதம் ஒருமுறை அவனைப் பார்க்க அவனுடைய உறவினர்கள் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். பஞ்சாபில் மதக்கலவரங்கள் தீவிரம் அடைந்தபிறகு உறவினர்கள் வருவது திடீரென்று நின்றுபோனது.
அவனுடைய நிஜப் பெயர் "பிஷன் சிங்'.

எல்லோரும் அவனை கேலியாக "டோபா டேக் சிங்' என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு அகவுலகில் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த விடுதியில் அடைத்ததில் இருந்து தான் இருப்பது எந்த இடம், என்ன தேதி, என்ன நேரம் என்பதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் அவனுக்கு கிடையாது. ஆனால் அவனுக்குள் ஒரு ஆறாவது அறிவை வளர்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்க விடுதிக்கு அவனுடைய உறவினர்கள் வருகை தரும் நாட்களில் மட்டும் அவன் மணக்க மணக்க சோப்பு தேய்த்துக்குளிப்பான். தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்வான்.

தலைமுடியையும் தாடியையும் படியப் படிய சீவித் தன்னை அலங்கரித்துக் கொள்வான். உறவினர்களின் வருகையின் போது அவர்களை சந்திக்கும் வேளையில் ஒன்றும் அதிகமாகப் பேசமாட்டான். அவனுடைய வழக்கமான ""உப்பர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பே த்யானா தெ மூங் தி தால் ஆஃப் தி லால்டின்'' மட்டும் தொடரும். அவனை இந்த விடுதியில் அடைக்கும்போது ஒரு சிறிய அழகான பெண்குழந்தையை கிராமத்தில் விட்டு வந்திருந்தான். அப்பெண் குழந்தை எப்போதாவது உறவினர்களுடன் இவனைப் பார்க்க வரும். இப்போது அப்பெண்ணுக்கு பதினைந்து வயது. இப்போதும் எப்போதாவது ஒருமுறை வருவாள். வரும்போதெல்லாம் அவன் முன் நெடுநேரம் அமர்ந்து கொண்டு கன்னங்களில் கண்ணீர் வடிய மெüனமான விசும்பல்களுடன் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவனுடைய விந்தையான உலகில் அவன் காணும் பல முகங்களில் தன் மகளின் முகமும் ஒன்றாக அவனுக்கு இருந்தது. இந்த இந்தியாþபாகிஸ்தான் பிரிவினை மற்றும் இருநாடுகளுக்கிடையிலான பைத்தியங்களின் பரிமாற்றம் குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்ததிலிருந்து "டோபா டேக் சிங்' இப்போது எங்கிருக்கிறது என்று விடுதியில் எதிரில் வந்தவர்களிடமெல்லாம் கேட்க ஆரம்பித்தான். யாரிடமிருந்தும் அவனுக்குத் திருப்தியான பதில் கிடைக்கவில்லை. ஏனென்றால் யாருக்கும் அது குறித்து ஒன்றும் தெரியவில்லை. அவனைப் பார்க்க வரும் உறவினர்களின் வருகையும் திடீரென நின்று போனது. நாளடைவில் அவனுடைய பதட்டம் அதிகரித்து வந்தது. அதற்கும் மேலாக அது குறித்து, அவனுடைய ஆர்வம் பிரம்மாண்டமாக வளர்ந்து வந்தது. உறவினர்கள் வருகை நாளன்று அவனை எச்சரிக்கை செய்யும் அவனுடைய ஆறாம் அறிவு சார்ந்த எச்சரிக்கை உணர்வும் மெல்ல மெல்ல பலமிழக்கத் துவங்கியது. குடும்பத்தின் பிரிவு அவனை மெதுவாக வாட்டத் துவங்கியது. வருகைகளின் போது உறவினர்கள் அவனுக்காகக் கொண்டு வந்த பரிசுப் பொருட்களையும், அவர்கள் பேச்சில் கனிந்திருந்த பரிவையும் நினைத்து கொஞ்ச நாட்களாக ஏங்கத் துவங்கியிருந்தான்.அவர்களையாவது கேட்டிருக்கலாம். "டோபா டேக் சிங்' இப்போது இருப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா என்று கேட்டிருக்கலாம். இந்த விடுதிக்குக் கொண்டு வருவதற்கு முன்பிருந்த டோபா டேக் சிங் கிராமத்திலிருந்து வருபவர்கள் தான் அவர்கள் என்ற ஒரு ஊகம் அவனுக்குள் மெல்ல உருவாகத் தொடங்கி இருந்தது. அந்த விடுதியில் இருந்த ஒரு பைத்தியம் தான் ஒரு கடவுள் என்று அறிவித்தது. பிஷன் சிங் அவனிடம் ஒருநாள் சென்று அது கடவுளாக இருக்கும் பட்சத்தில் அவனுடைய சொந்த ஊரான டோபா டேக் சிங் தற்போது இருப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா என்று மிகவும் பவ்யமாகக் கேட்டான். அதற்கு அந்தப் பைத்தியம்,

"உன் டோபா டேக் சிங் இப்போது இந்தியாவிலும் இல்லை þ பாகிஸ்தானிலும் இல்லை. ஏனென்றால் அதைப்பற்றிய ஆணையை இன்னும் நான் பிறப்பிக்க வில்லை என்று கொக்கரித்தது.

அவனுடைய பிரச்னைக்கு உடனடித் தீர்வாக, தேவையான ஆணையை உடனே பிறப்பிக்குமாறு "கடவுளை' மிகவும் பவ்யத்துடன் வேண்டினான் பிஷன் சிங். ஆனால் அவனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏனென்றால் அந்தக் "கடவுள்' கவனம் செலுத்துவதற்கு வேறு பல முக்கியமான பணிகள் இருந்ததால், டோபா டேக் சிங் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரம் கிடைக்கவில்லை. இறுதியில் பிஷன் சிங் அந்தக் கடவுளிடம் மிகவும் கோபத்துடன் ""உப்பர் தெ குர்குர் தெ மூங் தெ தால் ஆஃப் குருஜி தா கால்ஸô அண்ட் குருஜி கி ஃபதேஹ்... ஜோ போலே úஸô நிஹால்... ஸத் ஸ்ரீ அகால்...'' þ அவன் சொல்ல வந்தது என்னவென்றால், ""என்னுடைய பிரார்த்தனைகளுக்கு நீ பதில் சொல்ல வில்லை. ஏனென்றால் நீ ஒரு முஸ்லிம் கடவுள். நீ ஒரு சீக்கியக் கடவுளாக இருந்திருந்தால் எனக்கு சரியான விடை கிடைத்திருக்கும்''.

இருநாடுகளுக்கிடையயோன பைத்தியங்களைப் பரிமாற்றம் செய்யப் படுவதற்கு ஒரு நாளைக்கு முன் டோபா டேக் சிங் கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் நண்பர்களில் ஒருவன் இந்தப் பதினைந்து வருடங்களில் முதல் முறையாக பிஷன் சிங்கை சந்திக்க விடுதிக்கு வந்திருந்தான். பிஷன் சிங் அவனைப் பார்த்துவிட்டு சடாரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். விடுதியின் காவலன் அவனைக்
கூப்பிட்டு

"வந்திருப்பது உன்னுடைய சிறுவயதுத் தோழன் ஃபஸ÷ல் உத்தீன். அவ்வளவு தூரத்திலிருந்து உன்னைப் பார்க்க வந்திருக்கிறான். அவனைப் பார்த்து இப்படி முகம் திருப்பிக் கொண்டால் எப்படி?''

என்று உரிமையுடன் கடிந்து கொண்டான். பிஷன் சிங், மெல்ல ஃபஸ÷ல் உத்தீன் பக்கமாகத் திரும்பி எதையோ புரியாதவண்ணம் முணுமுணுக்க ஆரம்பித்தான். ஃபஸ÷ல் உத்தீன் அவனிடம், ""உனக்கு இந்த செய்தியைக் கொண்டு வரவேண்டும் என்று ரொம்ப நாட்களாக எண்ணிக் கொண்டு அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே போனது. உன்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் நலமாகவும் பாதுகாப்புடனும் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வித ஆபத்தும் இன்றி இந்தியா திரும்பி விட்டார்கள். ஒரு நண்பனாக உனக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து விட்டேன். உன்னுடைய மகள் ரூப் கவுர் மட்டும்... என்று தயங்கி, ரூப் கவுர் கூட இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள்'' என்று அவசரமாக முடித்தான். பிஷன் சிங் அமைதியாக இருந்தான். ஃபஸ÷ல் உத்தீன்
தொடர்ந்தான்.

"நீ நலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு உன் குடும்பத்தினர் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். மிக விரைவில் உன்னையும் இந்தியாவுக்கு அனுப்பி விடுவார்கள். சகோதரன் பல்பீர் சிங், சகோதரன் வதாவா சிங் மற்றும் சகோதரி அம்ரித் கவுருக்கும் இந்த ஏழை சகோதரனை நீ நினைவு படுத்தவேண்டும் என்பதைத் தவிர இப்போதைக்கு உனக்குச் சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை. அல்லாஹ்வின் அருளால் ஃபஸ÷ல் உத்தீன் நலமாக இருக்கிறான் என்று சகோதரன் பல்பீர் சிங்கிடம் போய் நீ சொல்லவேண்டும். அவர்கள் விட்டுப்போன பழுப்பு நிற எருமைகள் இரண்டும் நன்றாக இருக்கினறன. அவையிரண்டும் கன்றுகளை ஈன்றிருக்கின்றன. துரதிருஷ்டவசமாக அவற்றில் ஒன்று, ஆறு நாட்களுக்குப் பின் இறந்து போனது. அவர்களை நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன் என்று அவர்களிடம் சொல். இந்த ஏழை சகோதரனின் உதவி எதற்காவது தேவைப்பட்டால் உடனே கடிதம் எழுதச் சொல்'' என்றான்.

"இதோ உனக்காகக் கொஞ்சம் அரிசியும் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றான். பிஷன் சிங் ஒன்றும் பேசாது ஃபஸ÷ல் உத்தீன் கொண்டு வந்த சிறிய அரிசி மூட்டையை வாங்கி அங்கு நின்றிருந்த காவலனிடம் கொடுத்தான்.

"எல்லாம் சரி இப்போது டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது?''

என்று கேட்டான்.

"டோபா டேக் சிங்கா? ஏன்? அது அங்கேயேதான் அது எப்போதும் இருந்த இடத்திலேயேதான் இப்போதும் இருக்கிறது!''""இந்தியாவிலா?
பாகிஸ்தானிலா?"

இந்தியாவில்... இல்லை... பாகிஸ்தானில்...பிஷன் சிங்,

மறுவார்த்தை எதுவும் பேசாது முகத்தை உடனே திருப்பிக் கொண்டு

""உப்பேர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பி தெ மூங் தெ தால் ஆஃப் தி பாகிஸ்தான் அண்ட் ஹிந்துஸ்தான் துர் ஃபிட்டே''

என்று முணுமுணுத்துக் கொண்டே வேகமாக விடுதிக்குள் ஓடிப்போனான்.அதே நேரத்தில் ஏற்கனவே தீர்மானித்தபடி இருநாடுகளுக்கு இடையிலான பைத்தியங்களைப் பரிமாறிக் கொள்ளும் ஏற்பாடுகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தன. இரு நாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் அடைக்கப் பட்டிருக்கும் பைத்தியங்களின் பெயர்ப் பட்டியலும், பரிமாற்றத்துக்கான தேதியும் மற்ற விபரங்களையும் இருநாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. ஒரு கடுமையான குளிர்காலத்து மாலையில், இந்து பைத்தியங்களையும் மூத்த அரசு அதிகாரிகளையும் நிரப்பிக் கொண்டு பேருந்துகள், ஆயுதங்கள் ஏந்திய போலீஸ் காவலுடன், லாகூர் பைத்தியக்கார விடுதியை விட்டு, இந்தியாþபாகிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடான "வாகா' எல்லையை நோக்கிக் கிளம்பின.

இருநாடுகளின் தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு தரப்பிலிருந்தும் அந்தப் பைத்தியங்களை பேருந்து களிலிருந்து இறக்கி, மூத்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி சாதாரணமானதாக இல்லை. அதிகாரிகளுக்கு உயிர் போய் உயிர் வந்தது. சில பைத்தியங்கள் பேருந்தை விட்டு இறங்க மாட்டேன் என அடம் பிடித்தன. மிகவும் பிரயத்தனப் பட்டு இறக்கப்பட்ட பைத்தியங்கள் திசைக்கு ஒன்றாக பிய்த்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன. சிலர் உடைகளைக் கிழித்து எறிந்து முழு நிர்வாணமாக நின்றனர்.

அவர்களுடைய நிர்வாணத்தை மூட முயன்ற அதிகாரிகளின் முயற்சிகள் பலிக்கவில்லை. சில பைத்தியங்கள் அந்த அதிகாரிகளின் உடைகளையும் கிழித்தெறிந்து அவர்களையும் நிர்வாணப் படுத்தி நிறுத்தினர். சிலர் உரக்கப் பாடிக்கொண்டும் சிலர் மிகவும் உரக்க, மிகவும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் எல்லோரையும் திட்டிக் கொண்டும் இருந்தனர். சிலர் உரக்க அழுது கொண்டிருந்தனர். மற்ற பைத்தியங்களுடனும் அரசு அதிகாரிகளுடனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சுருங்கச் சொன்னால், அங்கு உச்சகட்ட குழப்பம் நிலவியது. பரிமாற்றம் செய்ய அழைத்து வரப்பட்டிருந்த பைத்தியங்களில் பெண்களும் இருந்தனர். அவர்களும் உச்சக்குரலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். பற்கள் கிட்டித்துப் போகும் அளவுக்கு இருந்த வெடவெடக்கும் குளிரிலும் யாரும் கூச்சல் போடுவதை நிறுத்த வில்லை. பெரும்பான்மையான பைத்தியங்கள் அந்தப் பரிமாற்றத்தினை மிகவும் கடுமையாக எதிர்த்தனர். இருந்த விடுதிகளிலிருந்து தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி எதுவும் புரியாத ஒரு புதிய இடத்தில் தங்களை அடைப்பதை அநேகமாக எல்லாப் பைத்தியங்களும் கடுமையாக எதிர்த்தனர். அங்கங்கு கோஷங்களும் எழத் தொடங்கின. சில பைத்தியங்கள், பாகிஸ்தான் ஒழிக எனக் கூச்சலிட்டன. சிலர் இந்தியா ஒழிக எனக் கோஷம் போட்டனர். இந்தக் கோஷங்களைத் தொடர்ந்து பைத்தியங்களுக்குள் அங்கங்கு மிகவும் கடுமையான சண்டைகளும் கிளம்பின. பிஷன் சிங் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டு அதிகாரிகளிடம் அழைத்து வரப்பட்டான். பேரேட்டில் அவனைக் கையெழுத்திடுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு அவன் அவர்களிடம் கேட்ட ஒரே கேள்விþ ""டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அந்த அதிகாரி மிகவும் அருவெருப்பான வகையில் உரக்க சிரித்து ""பாகிஸ்தானில்'' என்றான். பிஷன் சிங் தன்னை விடுவித்துக் கொண்டு மிக வேகமாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான். பாகிஸ்தான் போலீசார் அவனை விரட்டிப் பிடித்து குண்டுக்கட்டாகத் தூக்கி இந்தியாவின் எல்லைக் கோட்டுக்கு அப்பால் தூக்கி எறிய முயற்சித்தனர். பிஷன் சிங் அசைந்து கொடுக்க வில்லை. ""இதுதான் டோபா டேக் சிங்'' என்று கடுமையான பிடிவாதத்துடன் நகர மறுத்துப் போராடினான்.

பிறகு ""உப்பேர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பி தியானா மூங் தெ தால் ஆஃப் டோபா டேக் சிங் அண்ட் பாகிஸ்தான்'' என்று உரக்க அறிவிப்பது போல கூச்சலிட ஆரம்பித்தான். டோபா டேக் சிங் ஏற்கனவே இந்தியாவுக்குப் போய்விட்டது என்று அவனுக்குப் புரிய வைக்க அவர்கள் எடுத்த கடுமையான முயற்சிகள் அனைத்தும் பயனில்லாமல் போனது.

அந்த இடத்தை விட்டு அவனை நகர்த்த முடியவில்லை. இருநாட்டுக்கும் பொதுவான எல்லைக் கோட்டில் தனது வீங்கிய கால்களுடன், பிரம்மாண்டமான ராட்சத சிலையைப் போல அவன் நின்று கொண்டிருந்தான். அப்பாவியான கிழவனாக இருந்ததால் அவனை இந்தியாவின் பக்கம் நெட்டித் தள்ள அந்த அதிகாரிகள் முயற்சிக்க வில்லை. பைத்தியங்களின் பரிமாற்றம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவன் நின்று கொண்டிருந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்க அவனை அனுமதித்தனர். இரவு கரைந்து கொண்டிருந்தது.

சூரிய உதயத்துக்குச் சற்று முன், கடந்த பதினைந்து வருடங்களாக எப்போதும் நின்று கொண்டேயிருந்த அந்த மனிதன் பெரும் கூச்சலுடன் அலறினான். அதிகாரிகள் அவனை நோக்கி விரைந்தபோது தரையில் தலைகுப்புற சரிந்து விழுந்தான். தரையில் முகம் புதைந்திருக்க அசைவின்றிக் கிடந்தான். அங்கு, மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிக்கு அந்தப்பக்கம் இந்தியாவுக்கு அனுப்பப் பட்ட இந்தியாவின் பைத்தியங்கள் நின்று கொண்டிருந்தன. வலுவான மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளால் பாதுகாக்கப்பட்ட வேலிகளுக்கு வேறுபுறத்தில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட பாகிஸ்தான் பைத்தியங்களும் நின்று கொண்டிருந்தன. தலை இந்தியாவை நோக்கியும் பாதங்கள் பாகிஸ்தான் அமைந்த திசையிலும் அசையாது கிடந்தான் பிஷன் சிங். மிக வலுவாக அமைக்கப்பட்ட இரண்டு பாதுôப்பு வேலிகளுக்கு இடையில் அவன் முகம் புதைத்துச் சரிந்திருந்த சிறு துண்டு நிலத்துக்கு எந்தப் பெயரும் இல்லை. அது,

"டோபா டேக் சிங்''.


2. போர்நாய்! - உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ| ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி

-  ராகவன் தம்பி (யதார்த்தா கி.பென்னேஸ்வரன்) -பல வாரங்களாக வீரர்கள் பதுங்கு குழிகளில் தயார் நிலையில் காத்திருந்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. எந்த சண்டையும் நிகழவில்லை. யாரும் யாரையும் சுட்டு வீழ்த்தவில்லை. ஏதோ சடங்குக்காக செய்வது போல, சில ரவுண்டுகள் இருபுறமும் தினமும் பரஸ்பரம் வானத்தை நோக்கிச் சுட்டுக் காண்பித்துக் கொண்டார்கள்.

காட்டுப் பூக்களின் அடர்ந்த வாடையுடன் காற்று சற்றுக் கனமாக இருந்தது. அடர்ந்த புதர்களிலும் பதுங்கு குழிகளிலும் ஒளிந்து காத்துக் கொண்டிருந்த வீரர்களைப் பற்றி அந்தக் காற்று எதுவும் கவலைப்படவில்லை. எப்போதும் போலப் பறவைகள் கானம் பாடிக் கொண்டிருந்தன. மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்தன. வண்டுகள் ஒருவிதமான சோம்பேறித் தனத்துடன் ரீங்கரித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.

எப்போதாவது வெடிக்கும் துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் இசைக் கலைஞனின் வாசிப்பில் சடாரென்று ஏதோ அபஸ்வரம் தட்டியது போல பறவைகள் ஒருவிதமாகத் திடுக்கிட்டுக் கிளம்பி பிறகு அமைதியாகத் தங்கள் இடங்களில் அமர்ந்தன. அது செப்டம்பர் மாதம் முடிவடையும் நேரம். ஏதோ கோடையும் குளிர்காலமும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதைப் போல சூடாகவும் இல்லாமல் குளிரும் அடிக்காமல் ஒருவிதமான மந்த நிலையில் இருந்தது. நீலவானில், பருத்திக் குவியலைப்போன்ற மேகங்கள், தொங்கு பாலங்களைப் போல அங்கங்கு சோம்பேறித்தனத்துடன் மிதந்து கொண்டிருந்தன.

எந்த முடிவுக்கும் வராது, எதுவும் நடக்காது போய்க்கொண்டிருந்த அந்த முடிவிலாப் போர் தந்த அயர்ச்சியில் இரு தரப்பிலும் வீரர்கள் களைத்துப் போகத் துவங்கினார்கள். அவர்கள் பதுங்கியிருந்த இரு குன்றுகளும் ஒரே உயரத்திலும் ஒன்றையொன்று நேர் எதிர்ப்பார்வையில் நிமிர்ந்து பார்த்து நின்றிருந்தன. கீழே, பள்ளத்தாக்கில், ஒரு தெளிய நீரோடை நெளிந்து செல்லும் பாம்பினைப் போல, வளைந்து சுழித்துச் சென்றது.

இந்தச் சண்டையில் வான் படையை ஈடுபடுத்தவில்லை. இருபுறமும் மிகவும் கனரகமான ஆயுதங்களோ பீரங்கிகளோ இல்லை. இரவில் அவர்கள் பிரம்மாண்டமான தீயை மூட்டுவார்கள். இருபுறமும் சிப்பாய்கள் உரத்துப் பேசிக்கொள்வது இரவுகளில் இருபுறமும் குன்றுகளில் எதிரொலிக்கும்.

கடைசி வட்டம் தேனீரை அப்போதுதான் குடித்து முடித்திருந்தார்கள். தீ தணிந்திருந்தது. வானம் தெளிவாக இருந்தது. காற்றில் சிலிர்ப்பு கூடியிருந்தது. காற்றில் கதிர்ச் சருகுகள் கருகும் வாடை கூடியிருந்தது. இரவுப் பாதுகாப்பில் இருந்த ஹர்நாம் சிங்கைத் தவிர மற்ற வீரர்கள் எல்லோரும் ஏற்கனவே தூங்கிப் போயிருந்தார்கள். இரவு இரண்டு மணிக்கு அடுத்த ஆளாகப் பணியை ஏற்றுக் கொள்வதற்காக கண்டா சிங்கைத் தட்டி எழுப்பி விட்டு நெட்டி முறித்துவிட்டுக் கால் நீட்டிப் படுத்துக் கொண்டான் ஹர்நாம் சிங். ஆனால் தூரத்தில் தென்படும் நட்சத்திரங்களைப் போல, தூக்கம் அவனை விட்டு வெகுதொலைவில் விலகியிருந்தது. உறங்குவதற்கு முயற்சித்தான். ஒரு பஞ்சாபி நாடோடிப் பாடலை மெல்லிய குரலில் பாடத் துவங்கினான்.

எனக்கொரு ஜோடி செருப்பு வாங்குஎன் அன்பே நட்சத்திரங்கள் பதித்த ஒருஜோடி செருப்பைஎனக்காக வாங்கு என் அன்பே...உன் எருமையை விற்க வேண்டுமென்றாலும்எருமையை விற்றுநட்சத்திரங்கள் பதித்த ஒருஜோடி செருப்பைஎனக்காக வாங்கு என் அன்பேஅந்தப் பாட்டு இதமாக இருந்தது அவனுக்கு. அவனை சற்று உணர்ச்சி வசப்படவும் வைத்தது. எல்லோரையும் ஒவ்வொருவராக எழுப்பினான். எல்லோருக்கும் இளையவனான பன்டா சிங், ஹீர் ராஞ்சாவின் காதல் பாடலைப் பாடத் துவங்கினான். அது பஞ்சாபி மொழியின் அமரத்துவம் பெற்ற, சோகமும் காதலும் நிறைந்த அமரக் காவியம். அடர்ந்த சோகம் அனைவரையும் கவ்விக் கொண்டது. அந்தப் பாடல் சுமந்த சோகத்தின் பரப்பை அந்தக் குன்றும் உள்வாங்கி அமைதியாக நின்று கொண்டு இருந்தது போல இருந்தது.

அங்கு கவ்வியிருந்த சோகமானதொரு மனநிலையை ஒரு நாயின் குரைப்பு சிதற வைத்தது.

"இந்த நாய்க்குப் பொறந்தது எங்கிருந்து முளைச்சது''? என்று ஜமேதார் ஹர்நாம் சிங் உறுமினான்.

நாய் மீண்டும் குரைத்தது. அந்தக் குரைப்பு வெகு அருகிலிருந்து கேட்பது போல இருந்தது. புதர்கள் சலசலக்கும் ஓசை கேட்டது. பன்டா சிங் புதர்களுக்குள் தேடிக்கொண்டு சென்றான். சிறிது நேரத் தேடலுக்குப் பின் கையில் ஒரு நாய்க்குட்டியோடு வெளிவந்தான். அது மிகவும் பரபரப்பாக வாலை ஆட்டிக்கொண்டு இருந்தது.

"இவனை நான் அந்தப் புதருக்குப் பின்னால் கண்டுபிடிச்சேன். சார் தன்னோட பேரு ஜ÷ன்ஜ÷ன் னு சொல்றார்.'' எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள்.

நாய் ஹர்நாம் சிங்கை நோக்கி வாலை ஆட்டிக் கொண்டு சென்றது. அவன் தன்னுடைய பையிலிருந்து ஒரு பிஸ்கெட்டை எடுத்து அதனை நோக்கி வீசினான். நாய் முகர்ந்து பார்த்து உண்ணப் போகும் நேரம், குனிந்து வெடுக்கென்று பிஸ்கெட்டைப் பறித்துக் கொண்டான்.""இரு... நீ பாகிஸ்தானி நாயாக இருந்தாலும் இருக்கலாம்''

எல்லோரும் சிரித்தார்கள். பன்டா சிங் நாயைத் தடவிக் கொடுத்து ஹர்நாம் சிங்கிடம், ""ஜமேதார் சாஹிப், ஜ÷ன் ஜ÷ன் ஒரு இந்திய நாய். எங்கே உன் அடையாளத்தை நிரூபி?'' என்று நாய்க்கு ஆணையிட்டான். நாய் அவனை நோக்கி வாலை ஆட்டிக் கொண்டு நின்றிருந்தது.

""பாரு. இப்படி வாலை ஆட்டறதெல்லாம் அடையாளம் ஆகாது. எல்லா நாயாலேயும் வாலாட்ட முடியும்'' என்றான். நாயின் வாலுடன் விளையாடியபடியே பாவம். இது ஒரு ஏழை அகதியாக இருக்கலாம் என்றான் பன்டா சிங்.ஹர்நாம் சிங் தன் பையிலிருந்து இன்னொரு பிஸ்கட்டை எடுத்துத் தரையில் வீசினான்.
எல்லா பாகிஸ்தானிகளையும், நாய்கள் உட்பட எல்லோரையும் சுடப்போகிறேன்.''ஒரு சிப்பாய் உரக்கக் கூவினான், ""இந்தியா ஜிந்தாபாத்.''

பிஸ்கட்டில் வாய் வைக்கப்போன நாய் மிரண்டு போய் பின் வாங்கியது. வாலைத் தொடைக்குள் சொருகிக்கொண்டு மருண்ட பார்வையுடன் அதே இடத்தில் உறைந்து நின்றது.

""உன்னோட சொந்த நாட்டுக் காரங்ககிட்டேயே பயப்படுவியா? இந்தா... ஜ÷ன் ஜ÷ன் இன்னொரு பிஸ்கெட் சாப்பிடு.''இருட்டறையில் யாரோ சுவிட்சைத் தட்டி விட்டது போல, பளீரெனக் காலைப்பொழுது புலர்ந்தது. குன்றுகளிலும் தித்வால் பள்ளத்தாக்கிலும் வெளிச்சம் படர்ந்தது. அந்தப் பள்ளத்தாக்கு அப்படித்தான் அழைக்கப்பட்டது.மாதக்கணக்கில் போர் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இருதரப்பிலும் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் இருந்தது.

பைனாகுலர் வழியாக அந்தப் பகுதியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் ஹர்நாம் சிங். எதிர்த் தரப்பில் புகை எழும்புவதை அவனால் பார்க்க முடிந்தது. இவர்களைப் போலவே எதிரிகளும் காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் ஹிம்மத் கான் தன்னுடைய மிகப்பெரிய மீசையைத் திருகிக் கொண்டே தித்வால் பகுதியின் வரைபடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் வயர்லெஸ் ஆபரேட்டர் உட்கார்ந்து தங்கள் பிளாட்டூன் கமாண்டரிடம் ஆணைகளைப் பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான். சில அடிகள் தள்ளி, தனக்கு முன்னால் துப்பாக்கியை செங்குத்தாக நிறுத்தி வைத்துக் கொண்டு பாறையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் சிப்பாய் பஷீர். அவன் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.நேற்றிரவை எங்கே கழித்தாய்?என் அன்பே, என் நிலவேநேற்றிரவை எங்கே நீ கழித்தாய்?தனக்குத் தானே ரசித்து மிகவும் உரத்துப் பாடத் துவங்கினான். வரிகளை மீண்டும் மீண்டும் ரசித்துப் பாடினான்.

சுபேதார் ஹிம்மத் கான் உரக்கக் கூச்சலிடுவது சற்று தூரத்தில் கேட்டது.""நேத்து ராத்திரி எங்கே பொழுதைக் கழிச்சே''?ஆனால் இது பஷீரை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வியல்ல. ஒரு நாய்க்குட்டியைப் பார்த்து அப்படி சத்தம் போட்டுக்கொண்டிருந்தான் அவன். அந்த நாய்க்குட்டி சிலநாட்களுக்கு முன்பு எங்கிருந்தோ வந்து இவர்களுடன் ஒண்டிக்கொண்டது. பிறகு ஒருநாள் திடீரென்று எங்கோ காணாமல் போய் மீண்டும் இப்போது செல்லாக்காசு போல எங்கிருந்தோ திரும்பி வந்திருக்கிறது. பஷீர் புன்னகையுடன் நாயைப் பார்த்துப் பாடினான் -நேற்றிரவை எங்கே கழித்தாய்?என் அன்பே, என் நிலவேநேற்றிரவை எங்கே நீ கழித்தாய்?நாய் பதில் ஒன்றும் சொல்லாது வெகுவேகமாக வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. ஹிம்மத் கான் நாயை நோக்கி ஒரு கல்லை விட்டெறிந்தான். ""முட்டாள் நாயே''... வெறுமனே வாலாட்டிக்கிட்டு இருக்கத்தான் உன்னால முடியும்"".""அது கழுத்துலே என்ன மாட்டியிருக்கு?'' பஷீர் கேட்டான். ஒரு சிப்பாய் நாயைப் பிடித்து அதன் கழுத்தில் கட்டியிருந்த பட்டையைக் கழற்றினான். பட்டையில் ஒரு அட்டைத் துண்டு ஒன்று கட்டியிருந்தது. ""அதுலே என்ன எழுதியிருக்கு?'' அவ்வளவாகப் படிக்கத் தெரியாத சிப்பாய் ஒருவன் ஆர்வத்துடன் கேட்டான்.பஷீர் ஒரு எட்டு முன்னே சென்று அதில் எழுதியிருப்பதைப் படித்துக் காட்ட முயற்சி செய்தான். ""அதுலே... எழுதியிருக்கு... ஜ÷ன்ஜ÷ன்.''சுபேதார் ஹிம்மத் கான் அவனுடைய மீசையை ஒருமுறை திருகிவிட்டு ""இது ஏதாவது ஒரு சங்கேதமாக இருக்கணும். உனக்கு ஏதாவது புரியுதா பஷீர்?'' என்று கேட்டான்.""ஆமாம் சார். அது சொல்லுது... ""நான் ஒரு இந்திய நாய்.''""அப்படின்னா என்ன அர்த்தம்?'' சுபேதார் கேட்டான்.""ஒருவேளை ஏதாவது போர் ரகசியமாக இருக்கலாம்'' குசுகுசுவென்று சொன்னான் பஷீர்.""இதுலே ஏதாவது ரகசியம்னு இருந்தா... அந்த வார்த்தை ஜ÷ன்ஜ÷ன் லே தான் ஏதாவது ரகசியம் ஒளிஞ்சிருக்கணும்.''ஒரு சிப்பாய் குருட்டாம்போக்காக அடித்துப் பார்த்தான்.மிகுந்த
கடமையுணர்வுடன், முகத்தை மிகவும் தீவிரமாக வைத்துக்கொண்டு பஷீர் மீண்டும் உரக்கப் படித்தான். ""ஜ÷ன்ஜ÷ன்'' - இது ஒரு இந்திய நாய்.சுபேதார் ஹிம்மத் கான் உடனே வயர்லெஸ் சாதனத்தை எடுத்துத் தன்னுடைய பிளாட்டூன் கமாண்டரைத் தொடர்பு கொண்டு பரபரப்புடன் பேசத்துவங்கினான். ஒரு நாய் தங்கள் பதுங்கிடத்தில் திடீரெனப் பிரவேசித்ததையும் அதே போல இங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் இரவெல்லாம் எங்கோ சென்று மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி வந்ததைப் பற்றியும் சொல்லத் துவங்கினான்.""என்ன சொல்ல வர்றே?'' பிளாட்டூன் கமாண்டர் எரிச்சலுடன் கேட்டான்.சுபேதார் ஹிம்மத் கான் மீண்டும் வரைபடத்தை மிகவும் கவனமாகப் படிக்கத் துவங்கினான். பையிலிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதில் ஒன்றை எடுத்து பஷீரிடம் கொடுத்தான்.இப்போ இதுலே அந்த சீக்கியர்களோட பாஷையான குர்முகியிலே எழுது""என்ன எழுதட்டும் சார்'' பஷீருக்கு ஒருவகையான உத்வேகம் பிறந்தது. ஷ÷ன்ஷ÷ன்... ஆமாம்.. அதுதான் சரி. இந்தியாவின் ஜ÷ன்ஜ÷ன் னுக்கு இந்த ஷ÷ன் ஷ÷ன் தான் சரியான பதிலடியாக இருக்க முடியும்.""பிரமாதம்'' ஆமோதிப்பதைப்போல சொன்னான் சுபேதார் ஹிம்மத் கான். ""அப்புறம் இதையும் சேர்த்துக்கோ - இது ஒரு பாகிஸ்தான் நாய்.''சுபேதார் தானே அந்தக் காகிதத்தை ஒரு கயிற்றில் கோர்த்து நாயின் கழுத்துப் பட்டையில் கட்டிவிட்டான். ""இப்போ நீ உன் குடும்பத்தோட போய் சேர்ந்துக்கோ.''அந்த நாய்க்கு சிறிது சாப்பிடக் கொடுத்து விட்டு அதனைத் தடவிக்கொண்டே இது பாரு தோஸ்த்... துரோகம் மட்டும் கூடாது. இங்கே துரோகத்துக்குத் தண்டனை மரணம் மட்டுமே... தெரிஞ்சிக்கோ...

நாய் வாலாட்டிக்கொண்டே சாப்பிடுவதைத் தொடர்ந்தது. பிறகு சுபேதார் ஹிம்மத் கான் இந்தியப் படைகள் பதுங்கியிருந்த திசையைக் காண்பித்து உரக்கக் கத்தினான்...

""நம்முடைய எதிரிகளுக்கு இந்த செய்தியை எடுத்துப்போ. ஆனா திரும்பி வந்துடணும். இது உன்னுடைய படைத் தளபதியோட கட்டளை... போய் வா...''

நாய் வாலை ஆட்டிக்கொண்டே இரு குன்றுகளையும் பிரிக்கும் பள்ளத்தாக்கை நோக்கி பலத்த காற்று வீசும் அந்த மலைப் பாதையில் விரைந்து ஓடத் துவங்கியது. சுபேதார் ஹிம்மத் கான் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து திடீரென்று வானத்தை நோக்கி சுடத்துவங்கினான்.மறுபக்கம் பதுங்கியிருந்த இந்தியப் படை வீரர்கள் குழம்பிப்போனார்கள். எப்போதும் இல்லாது இன்று இத்தனை
காலையிலேயே இப்படி ஒன்று நடப்பது அவர்களைக் குழப்பியது. ஏற்கனவே அயர்ச்சி அடைந்திருந்த ஜமேதார் ஹர்நாம் சிங் உரக்கக் கூச்சலிட்டான் ""நாமும் திருப்பிக் கொடுப்போம்.''

இருதரப்பும் சுமார் அரைமணி நேரத்துக்கு தேவையற்ற குண்டு வீச்சைப் பரஸ்பரம் பறிமாறிக்கொண்டன. ஜமேதார் ஹர்நாம் சிங் ஓரு வழியாக எல்லாவற்றையும் முடித்துக் கொள்ள உத்தரவிட்டான். தன்னுடைய நீளமான முடியைக் கண்ணாடியைப் பார்த்து வாரிக் கொண்டான். ஞாபகம் வந்தது போல, பன்டா சிங்கைப் பார்த்துக் கேட்டான் ""அந்த ஜ÷ன் ஜ÷ன் நாய் எங்கே?''""ஒரு பழமொழி இருக்கே... இந்த நாய்களாலே வெண்ணெயை ஜீரணம் பண்ணிக்க முடியாது'' தத்துவார்த்தமாக பதிலளிக்க முயற்சித்தான் பன்டா சிங்.

காவல் பணியில் இருந்த சிப்பாய் ஒருவன் உரக்கக் கத்தினான். ""அதோ அங்கே வருது பாரு''""யாரு?''

அது பேரு என்ன? ஜ÷ன்ஜ÷ன்?

""அது இங்கே என்ன பண்ணுது'' என்றான் ஹர்னாம் சிங்.

பைனாகுலரில் நோட்டமிட்டுக் கொண்டே, ""நம்மைப் பார்த்து இங்கே வருது'' என்றான்.

சுபேதார் ஹர்னாம் சிங் அவனிடமிருந்து பைனாகுலரைப் பிடுங்கிக் கொண்டான். ஜ÷ன்ஜ÷ன்தான். சரி. அது கழுத்துலே ஏதோ பட்டை கட்டி இருக்கு. ஆனா... ஒரு நிமிஷம்... அது அந்த பாகிஸ்தான் பகுதியிலே இருந்து இல்லே வருது... மாதர்சோத்...

கோபத்துடன் துப்பாக்கியை எடுத்து குறி பார்த்து சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாய்க்கு மிக அருகில் உரசிச் சென்று ஒரு பாறையில் மோதியது. நாய் சடாரென்று நின்றது.

அந்தப் பக்கம் சுபேதார் ஹிம்மத் கான் வெடிச்சத்தம் கேட்டு தன்னுடைய பைனாகுலரை எடுத்து நோட்டம் விட்டான். நாய் இவர்கள் இருக்கும் பக்கம் நோக்கித் திரும்பி ஓடிவந்தது. ""வீரர்கள் எப்போதும் போர்க்களத்தை விட்டு ஓடுவதில்லை. முன்னேறிப்போய் உனக்குக் கொடுத்த வேலையை செய்து முடி'' என்று உரக்கக் கூச்சலிட்டான். நாயை பயமுறுத்துவதற்காக ஏதோ ஒரு திசையை நோக்கி சுட்டான். ஹர்னாம் சிங்கும் அதே நேரம் நாயை நோக்கி சுட்டான். மீண்டும் நாயை மிக நெருக்கமாக உரசிக்கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு. நாய் காதுகளை விறைப்பாகத் தூக்கி வைத்துக்கொண்டு பிடறியில் கால்பட ஓடத் துவங்கியது. இந்தப் பக்கம் சுபேதார் ஹிம்மத் கான் மீண்டும் சுடத் துவங்கினான். அவனுடைய துப்பாக்கிக் குண்டுகள் நாய் ஓடும் பாதையில் அங்கிருந்த பாறைகளைத் தாக்கிய வண்ணம் சிதறி வெடித்துத் துரத்தின.

இது மெல்ல, இருதரப்பு சிப்பாய்களுக்கும் இடையேயான விளையாட்டாக மாறத் துவங்கியது. நாய் மரண பீதியில் வட்டமடித்து ஓடிக்கொண்டிருந்தது. ஹிம்மத் கானும் ஹர்நாம் சிங்கும் இருதரப்பிலும் நின்றுகொண்டு இடிபோல சிரித்துக்கொண்டிருந்தார்கள். நாய் ஹர்நாம் சிங்கை நோக்கி ஓடத் துவங்கியது. அவன் மிகப் பெரிய வசவு ஒன்றை உரக்கக் கத்தி விட்டு நாயை நோக்கிச் சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாயின் காலைத் தாக்கியது. நாய் வலியில் ஊளையிட்டது. மரண வேதனையில் கத்திக்கொண்டே ஹிம்மத் கான்இருக்கும் திசை நோக்கி ஓடியது. அந்தத் தரப்பில் இருந்தும் குண்டு மழை பொழிந்தவாறு இருந்தது. ""தைரியமான ஆம்பளையா இருக்கணும். இந்தப் போரிலே காயம் பட்டா அது உன்னுடைய தைரியத்தை இழக்க வைக்கக் கூடாது. உன்னுடைய கடமைக்குக் குறுக்காலே எந்த மரண பயமும் இருக்கக் கூடாது. போ. இன்னும் முன்னேறிப் போ'' என்று கர்ஜித்துக் கொண்டே நாயை நோக்கி சுடத்துவங்கினான்.

நாய் ஓட்டத்தை நிறுத்தித் திரும்பியது. அதனுடைய ஒரு கால் செயலிழந்து போனது. ஹர்னாம் சிங் இருக்கும் திசை நோக்கித்தவழத் துவங்கியது.

ஹர்னாம் சிங் மிகக் கவனமாகக் குறி பார்த்து சுட்டான். நாய் செத்து மடிந்தது.

சுபேதார் ஹிம்மத் கான் வருத்தத்துடன் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டான். ""வீர மரணம் தழுவி நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது'' என்று வருத்தத்துடன் தெரிவித்தான்.

ஜமேதார் ஹர்னாம் சிங் இன்னும் சூடாக இருந்த அந்தத் துப்பாக்கியின் குழலைத் தடவிக் கொடுத்துக்கொண்டே, ""நாய்க்குப் பிறந்தது நாய்ப்பாடு பட்டு செத்துத் தொலைஞ்சது'' என்றான்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R