அறிஞர் அ.ந.கந்தசாமி- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் நினைவு தினம் பெப்ருவரி 14.  அதனையொட்டி இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. அறிஞர் அ.ந.க.வின் 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னுமிக் கட்டுரை ஏற்கனவே 'தேசாபிமானி', 'நுட்பம் (மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடு), பதிவுகள் ஆகியவற்றில் வெளிவந்த படைப்பு இக் கட்டுரை அ,ந,கந்தசாமியின் ஆளுமையை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. அவரது இலக்கியக்கோட்பாடுகளினூடு அவரது எழுத்துகளை அறிமுகப்படுத்துகின்றது. இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் அவரது ஆரம்ப காலக் கவிதையான 'சிந்தனையும் மின்னொளியும்' எனக்கு மிகவும் அவரது கவிதைகளிலொன்று. தமிழில் வெளியான சிறந்த மழைக் கவிதைகளிலிலொன்றும் கூட. அக்கவிதையில் வரும் "என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன். மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும். வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்" என்னும் வரிகள் இக்கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளென்பேன். .அக்கவிதையை முழுமையாகக் கட்டுரையின் முடிவில் இணைத்துள்ளேன். - வ.ந.கி -

அ.ந.க பற்றிய மேலதிக  விபரங்களுக்கு:

1. கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் - வாசிக்க
2. அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை - வ.ந.கிரிதரன் (இலக்கியபூக்கள் தொகுப்பு ஒன்று நூலில் வெளியான கட்டுரை. எழுத்தாளர் முல்லை அமுதன் வெளியிட்ட நூலிது.) -வாசிக்க -
3. நூலகம் தளத்தில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம் (நாடகம்), வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் நூல்) ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதற்கான இணைப்பு
4. பதிவுகள் இணைய இதழ் வெளியிட்ட அ.ந.கந்தசாமியின் கவிதைகள் மின்னூலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்
5. பதிவுகள் இணைய இதழ் வெளியிட்ட அ.ந.கந்தசாமியின்  'மனக்கண்' நாவல் மின்னூலையும் நூலகம் தளத்தில் வாசிக்கலாம்
6. 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்'  -அந்தனி ஜீவா - வாசிக்க
7. (சிறுகதைகள்.காம்) அ.ந.கந்தசாமி சிறுகதைகள் சில - வாசிக்க
8. அ.ந.கந்தசாமி பக்கம் (பதிவுகள்.காம்) - வாசிக்க


நான் ஏன் எழுதுகின்றேன்?  - அ.ந.கந்தசாமி -

அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம்.  மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். "சிந்தனையும் மின்னொளியும்" என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய 'ஈழகேசரி'யில் வெளிவந்தது. இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.

மனோதத்துவ அறிஞர் மனதை நனவிலி மனம், நனவு மனம் என்று இரு கூறுகளாகப் பிரிக்கின்றனர். ஆங்கிலத்தில் இவற்றை முறையே Sub Conscious Mind, Conscious Mind என்று குறிப்பார்கள். "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற கேள்விக்கு நனவு மனத்திடம் பதில்பெற முடியாது. ஏனெனில் நனவு மனத்தைவிட சக்திவாய்ந்தது நனவிலி மனம் என்பதே மன இயல் அறிந்தவர் முடிவு. கவிதை பெரும்பாலும் நனவிலி மனதில் உருவாகி நனவு மனத்தின் வழியாகப் பிரவாகிக்கும் ஒன்றாகும். பின்னால் நான் ஏற்றுக்கொண்ட கருத்துகள் இக்கவிதையை எழுதிய நாளில் என் நனவிலி மனதில் துளிர்த்திருந்தவை தாம் என்பதையே இக்கவிதையில் நான் வலியுறுத்தும் தத்துவங்கள் இன்று எனக்குணர்த்துகின்றன.

இக்கவிதை எனது முதலாவது கவிதையல்ல. இதற்கு முன்னரே கல்லூரிச் சஞ்சிகையில் ஒன்றிரண்டு கவிதைகளை நான் எழுதியிருந்தேன். இருந்தாலும் இது என் ஆரம்ப இலக்கிய முயற்சிகளில் ஒன்று.  எனவே "நான் ஏன் எழுதுகிறேன்?, எழுதினேன்?" என்பதற்கு இக்கவிதையில் பதில் காண முயற்சிப்பது பொருத்தமானதேயாகும்.

இக்கவிதையின் சில வரிகள் நினைவில் மிதந்து வருகின்றன.

"..கொட்டும் இடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான் வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே.
சிந்தனையின் தரங்கங்கள் ஊன்றி எழுந்தன.
இவ் ஒளி ம்ின்னல் செயல் என்னே!
வாழ்வோ கணநேரம்!
கணநேரந்தானும் உண்டோ?
சாவும் பிறப்பு அந்தக் கணநேரத்தடங்குமன்றோ?
....."
மின்னலின் வாழ்வு கணநேரம். ஆனால் அக்கண நேரத்தில்:

"..சூழம் இருள் நீங்கும்.
சுடர் விளக்குப் போலிங்கு
சோதி கொழுத்திச்
சோபிதததைச் செய்து விட்டு
ஓடி மறைகிறது...."

இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம்.

இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை,வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.

"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.

ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.

பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய  அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா?

எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான்.

பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச் சித்தன் பாட்டு 'வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன்.

ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.

இரண்டாவதாக எழுதும் கலை, பாடும் கலையைப் போல் எழுதுபவனுக்கு இன்பமூட்டும் கலை. எந்தவிதமான சிருஷ்டி வேலையிலுமே இயற்கை இன்பத்தைப் பொதித்து வைத்திருக்கிறது. அழகிய பதுமையைச் சிருஷ்டிப்பது தொடக்கம், தாயின் கருவில் ஒரு குழந்தையைச் சிருஷ்டிப்பது வரை எந்த சிருஷ்டி வேலையிலும் இன்பம் கிடைக்க வேண்டுமென்பது இயற்கையின் நியதிபோலும். எழுத்திலே உலகை மறக்கலாம். உள்ளக் கவலைகளை மறக்கலாம். அதனால்தான் உலகில் கவலைகளுக்கும், துன்பத்துக்கும் பெரிதும் ஆளாகிய எழுத்தாளர் பலர் புகழ்வாய்ந்த எழுத்தாளர்களாகி விடுகின்றனர்.

மூன்றாவதாக மனிதனுக்கு எதையாவது சாதிக்க வேண்டும். அதன் மூலம் மற்றவர்களின் மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும். தான் ஒருவன் உலகில் இருப்பது சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்ற ஆசை நனவிலி மனதில் என்றும் இருந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். குழந்தை கூட தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டுமென்பதற்காகக் கையைத் தட்டுகிறது. ஆரவாரங்கள் செய்கிறது. இந்த ஆசையை நாம் வெளியரங்கமாகப் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஆனால் இவ்வித உள்மன ஊக்கங்களில் இருந்து நமக்கு விடுதலையில்லை. ஏனென்றால் நாம் மனிதர்கள். மனித மனத்தின் இயல்பு அப்படி.

நன்றி: தேசாபிமானி, நுட்பம், பதிவுகள்


கவிதை: சிந்தனையும், மின்னொளியும்

சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ? -

- அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R