- மார்க் ட்வைன் - என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் பத்து

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 10முனைவர் ஆர்.தாரணிகாலை உணவுக்கப்புறம் இறந்த அந்த மனிதன் எப்படிக் கொல்லப்பட்டிருப்பான் என்று அவனைப்பற்றிப் பேச விரும்பினேன். ஆனால், ஜிம் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை. அது துரதிஷ்டத்தைக் கொண்டு சேர்க்கும் என்று அவன் கூறினான். அத்துடன், இறந்த மனிதன் ஆவியாக வந்து பயமுறுத்துவான் என்றான். நல்லபடியாக ஈமச்சடங்கு செய்யப்பட்டு மண்ணில் புதைக்கபப்ட்ட மனிதனை விட அவ்வாறு புதைக்கப்படாத மனிதன் கண்டிப்பாக ஆவியாக வந்து மற்றவர்களைப் பீதியிலாழ்த்துவான் என்றான். அவன் கூறியது நியாயமாகத் தென்பட்டதால் அதைப்பற்றி மேலே பேசாது அமைதியானேன். ஆயினும், அதைப்பற்றி நினைக்காமலிருக்க என்னால் இயலவில்லை. அவன் யாரால், எதற்காகச் சுடப்பட்டு இறந்தான் என்பதைத் தெரிந்து கொள்ள நான் நினைத்தேன்.

அங்கிருந்து எடுத்து வந்த துணிகளை நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில், ஒரு பழைய கனத்த கம்பளி போன்ற மேல்ச்சட்டையின் உள்பகுதியில் தைத்து வைக்கப்பட்ட பகுதியில் மறைந்திருந்த எட்டு டாலர் வெள்ளி நாணயங்களைக் கண்டெடுத்தோம். அந்த மேல்சட்டையை அந்த வீட்டில் இருந்தவர்கள் எங்கிருந்தாவது திருடித்தான் இருக்கவேண்டும் என்றும் அப்படி இல்லாவிடில், அதனுள் இருக்கும் அந்தப் பணத்தை அவர்கள் இவ்வாறு விட்டுவைத்திருக்க மாட்டார்கள் என்று ஜிம் தன் கருத்தை உரைத்தான். அந்த மனிதனைக் கூட அவர்கள் கொன்றுதான் இருக்கவேண்டும் என்றேன் நான். ஆனால் ஜிம் அதைப் பற்றி மட்டும் பேச மறுத்து விட்டான்.

நான் கூறினேன் "இப்போது இதை கெட்ட சகுனம் என்று நினைக்கிறாய். ஆனால் முந்தாநாள் விளிம்பின் மேற்பரப்பில் கிடந்த பாம்புத்தோலை நான் கொண்டு வந்தபோது நீ என்ன கூறினாய்? பாம்புத்தோலை என் கரங்களால் தொடுவது உலகிலேயே மிகவும் மோசமான பாவப்பட்ட விஷயம் என்று நீ கூறினாயல்லவா! நல்லது. இங்கே பார் உனது துரதிஷ்டத்தை! எத்தனை கொள்ளை பொருட்களை நாம் வாரிவழித்து கொண்டுவந்ததுடன், கூட எட்டு டாலர் வேறு அதிகப்படியாக கிடைத்திருக்கிறது. இப்படியான துரதிஷ்டம் நமக்கு ஒவ்வொரு நாளும் கிடைத்தால் தேவலை என்று நான் விரும்புகிறேன், ஜிம்!"

"அதெல்லாம் கண்டுக்காதே செல்லக்குட்டி, கண்டுக்கவே கண்டுக்காதே! எல்லாம் போட்டுக் குழப்பிக்காதே. துரதிஷ்டம் வரவேண்டும் என்று இருந்தால், நல்லாக் கேட்டுக் கொள். வந்தே தீரும்."

அதுவும் வந்தது. இந்த சம்பாஷணை செவ்வாய்க்கிழமை நடந்தது. வெள்ளிக்கிழமை இரவு உணவு முடித்தபின் நாங்கள் இருவரும் குகையின் மேற்பரப்பில் இருந்த புல்வெளியில் ஆயாசமாகச் சாய்ந்திருந்தோம். புகைப் பிடிக்க வேண்டிய புகையிலை தீர்ந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் எடுத்து வர நான் குகையின் உள்ளே சென்ற போது ஒரு நச்சு விரியன் பாம்பு கண்டேன். அதைக் கொன்று சுருட்டி எடுத்து ஜிம்மின் கம்பளியில் கால் வைக்கும் பகுதி அருகே போட்டு வைத்தேன். ஜிம் அதைப் பார்த்தால் எவ்வாறு அதிர்ச்சி அடைந்து குதிப்பான் என்று குறும்புத்தனமாக விளையாட நினைத்து. அது உயிரோடு இருப்பதைப்போல் அங்கே வைத்து விட்டு வந்து விட்டேன்.

நல்லது. நீண்ட நேரம் கழித்து உள்ளே உறங்க வரும் சமயம் நான் அந்தப் பாம்பைப் பற்றி சுத்தமாக மறந்து விட்டேன். குகையினுள் லாந்தரை நான் பற்றவைக்கும் சமயம், எதுவுமறியாத ஜிம் வேகத்துடனும் வன்மையுடனும் கம்பளியினுள் வீழ்ந்த போது, அதனுள் இறந்து போன தனது ஜோடியைத்தேடி வந்து பதுங்கியிருந்த இன்னொரு பாம்பு அவனைக் கடித்துவிட்டது.

அவன் கடுமையாக அலறியவாறே குதிக்க ஆரம்பித்தான். சுருண்டிருந்த அந்த நச்சுப்பாம்பு இன்னொருமுறை தாக்கத் தயாராக இருந்ததை விளக்கின் வெளிச்சம் காட்டிக் கொடுத்தது. அடுத்த ஒரு நொடியில், முதல் வேலையாக ஒரு குச்சியை வைத்து அதைத் தீர்த்துக் கட்டினேன். எனது அப்பாவின் விஸ்கி குப்பியை ஜிம் எடுத்து மடக் மடக் என்று அதை விழுங்கலானான்.

வெறும் காலில் ஜிம் இருந்ததால், பாம்பு அவனின் குதிகாலைப் பதம் பார்த்திருந்து. அத்தனையும் நடக்க எனது முட்டாள்தனமே காரணம். ஒரு பாம்பு இறந்தால் அதனின் இணையானது அதைத்தேடி வந்து அதனைச்சுற்றி சுருண்டு படுக்கும் என்பதைச் சுத்தமாக மறந்த அடிமுட்டாள் நான். இறந்த அந்தப் பாம்பின் தலையை வெட்டி எறிந்து விட்டு, தோலையும் சீவி விட்டு, அதன் உடலின் ஒரு பகுதியை வறுத்துத் தரும்படி ஜிம் கூறினான். அவனைச் சரி செய்யும் மருந்து அது என்றும் கூறினான். நானும் அப்படியே செய்தேன். அவன் அதைச் சாப்பிட்டான். அதன் வாலின் கொக்கி போன்ற பகுதியை எடுத்து அவனின் மணிக்கட்டைச் சுற்றி கட்டச்சொன்னான். அப்படிச் செய்வது அவனைக் காப்பாற்றும் என்றான். பின்னர், நான் குகையை விட்டு அமைதியாக வெளியேறி, இறந்திருந்த அந்த பாம்புகளை தூரத்தில் இருந்த புதரினுள்ளே தூக்கி எறிந்தேன். ஜிம்மின் அந்த நிலைக்கு நான்தான் காரணம் என்பதை ஜிம் கண்டுபிடிக்காமலிருக்க நான் அவனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தேன்.

மேலும் மேலும் அந்த குப்பியிலிருப்பதை ஜிம் குடித்துக் கொண்டே இருந்தான். அவ்வப்போது அவனின் புத்தி மாறி, உடல் வெட்டி இழுக்க தாறுமாறாகக் கத்திக்கொண்டிருந்தான். ஒவ்வொருமுறையும் சாதாரணமாக அவன் இருக்கும்போது, குப்பியில் இருப்பதைக் குடிக்க ஆரம்பித்தான். அவனது காலும் பாதமும் பெரிய அளவில் வீங்கிவிட்டன. ஆனாலும், அவன் அவ்வப்போது சரியாகி மது குடிப்பதைப் பார்த்தபின் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று தோன்றியது. எனினும், எனது அப்பனின் விஸ்கியைக் குடிக்கும் கொடுமைக்கு பாம்பு கடித்து வேதனைப்படுவதையே நான் சகித்துக் கொள்வேன் என்று நினைத்தேன்.

நான்கு பகல், நன்கு இரவுகள் ஜிம் உடல்நலம் குன்றி இருந்தான். பிறகு அந்த வீக்கம் மறைந்து, மீண்டும் எப்போதும் போலச் சுற்றித் திரிய ஆரம்பித்தான். இப்போது துரதிஷ்டம் எப்படி வந்து படுத்தியது என்பதை நானே கண்ணாரப் பார்த்து உணர்ந்து கொண்டேன். எனது வெறும் கைகளால் இனி ஒருபோதும் பாம்புத்தோலைதொட்டுக் கையாளப்போவது இல்லை என்று முடிவு கட்டினேன். அவன் சொல்லும் எதையும் அடுத்த முறை கண்டிப்பாக நான் நம்புவேன் என்று ஜிம் கூறினான். பாம்புத்தோலைக் கையாளுவது இன்னும் சில கெட்ட விஷயங்களை நமக்குக் கொடுக்கும் என்று ஜிம் கூறினான்.

 

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 10

அமாவாசையன்று தனது இடது தோள் வழியாக நிலவைப் பார்க்கும் மூடத்தனமான காரியம் தான் செய்யத்துணித்தாலும், பாம்புத்தோலை தனது கரத்தால் எடுப்பதை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று ஜிம் கூறினான். நல்லது. பலமுறைகள் என்னையும் அறியாமல் இடது தோள்பட்டை வழியாக புது நிலவை நான் பார்த்திருப்பது சாதாரணமாக எந்த ஒரு மனிதனும் தன்னையறியாமல் எதேச்சையாகவும், முட்டாள்தனமாகவும் செய்யும் காரியம்தான் என்றாலும் நானும் அக்கணம் அவ்வாறே யோசிக்க முற்பட்டேன்.

வயதான ஹாங்க் பங்கர் ஒருமுறை அப்படிச் செய்து விட்டு அது குறித்து அதிகமாகப் பெருமை பீற்றிக்கொண்டான். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் அதிகமான குடிகாரனாக மாறி, துப்பாக்கி சுட வைத்திருக்கும் கோபுரத்தின் மீதேறி விழுந்து செத்தான். தரையில் விழுந்த அவன் உடல் பூமியின் மீது தட்டையாகப் படரும் அளவு மோசமாகிவிட்டது என்றே கூறலாம். அவன் உடல் மிகவும் தட்டையாகப் போய் விட்டதால் சவப்பெட்டிக்குள் வைக்க இயலாது அவர்கள் இரண்டு தானியக்களஞ்சியங்களின் கதவுகளுக்கிடையேயான இடத்தில்தான் அவனை புதைக்க முடிந்தது. அப்படித்தான் அப்பா சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் நான் அதைப் பார்க்கவில்லை. நல்லது. அது எதுவாக இருந்தாலும், புது நிலவை முட்டாள்தனமாக அவன் பார்த்ததன் விளைவுதான் அப்படி ஒரு கோரமான முடிவுக்குக் காரணமாக இருக்க முடியும்.

நல்லது. நாட்கள் நகர ஆரம்பித்தன. வெள்ளம் வற்றி நதி பழைய நிலைக்குத் திரும்பியது. முதல் வேலையாக மீன் வலையை சரி செய்து, தூண்டில் இரையாக ஒரு தோள் உரிக்கப்பட்ட முயலை மாட்டிவைத்ததால், ஒரு மனிதனின் உயரத்திற்கு இருக்கும் கெளுத்திமீன் ஒன்றைப் பிடித்தோம். அது ஆறடி இரண்டு இன்ச் நீளமும், 200 பவுண்ட் எடையும் கொண்டிருந்தது. உண்மையில் அதைக் கையாள்வது கடினமாக இருந்தது - அது எங்களை இழுத்துக் கொண்டு இல்லினோய் வரை சென்று விடும் போல இருந்தது.

எனவே, நாங்கள் அங்கேயே அமர்ந்து அது மூர்க்கத்தனமாக பாறைகளில் மோதிக் கொண்டு சாகும் வரை பார்த்துக் கொண்டிருந்தோம். அவனை அறுத்துத் திறந்தோம். அதன் வயிற்றினுள்ளே ஒரு பித்தளைப் பொத்தான், ஒரு பந்து இன்னும் பல வேண்டாத குப்பைகள் இருந்தது. அந்த பந்தை எங்களின் சிறிய கோடரி கொண்டு திறந்தோம். அதில் ஒரு நூல்பந்து இருந்தது. அந்த நூல்பந்து வெகு நாட்களாய் அந்த மீனின் வயிற்றினுள்ளே இருந்து கடினமான உறைகள் போல மாறி இப்படி ஒரு பந்து போல் ஆகி இருக்க வேண்டும் என்று ஜிம் கூறினான். இப்படி ஒரு ராட்சத மீனை அவன் பார்த்ததே இல்லை என்றான். அந்த மிஸ்ஸிஸிப்பி நதியிலே இதுவரை பிடிக்கப்பட்டதில் இதுதான் மிகப்பெரிய மீனாக இருக்கக் கூடும் என்று நான் நினைத்தேன். ஊருக்குள் சந்தையில் மீன்களைக் கூறு போட்டு விற்கும் கடைகளில் இந்த மீன் அதிக.ப் பணம் பெற்றுத் தந்திருக்கும். அந்த மீனின் மாமிசம் பனி போன்ற வெண்மையாகக் காணப்படுவதால் அது நன்கு சுவைபட வறுபடும் என்று தீர்மானித்து அனைவரும் இந்த மீனைப் போட்டி போட்டுகொண்டு பங்கு போட்டு வாங்கியிருப்பார்கள்.

அடுத்த நாள் வாழ்க்கை மிகவும் சலிப்புத் தட்டுகிறது என்று உணர்ந்த நான் சுவாரஸ்யமாய் ஏதேனும் செய்யவேண்டும் என்று யோசித்தேன். அந்த நதியைக் கடந்து அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று கூறினேன். அந்த யோசனை ஜிம்முக்குப் பிடித்திருந்தாலும், இரவு வேளைகளில் கவனமாகப் போகவேண்டும் என்று அறிவுறுத்தினான். சிறிது நேரம் யோசித்த பிறகு நாங்கள் கண்டெடுத்த அந்த துணிகளை வைத்து என்னை ஒரு பெண்பிள்ளை போன்று ஆடை அணிந்து கொண்டு செல்ல யோசனை கூறினான். உண்மையில் அது ஒரு சிறந்த யோசனைதான். பெண்கள் அணியும் காலிகோ வகை உடையின் நீளத்தை எனக்கேற்றவாறு சரி செய்து எனது பாண்ட் அணியும் கால்களைப் புரட்டி பெண்ணின் உடைக்குள் என்னைத் திணித்துக் கொண்டேன்.

உடையின் பின்புறத்தில் கொக்கிகளை மாட்டிச் சரிசெய்தான் ஜிம். மிக அழகாக அது எனக்குப் பொருந்தியது. தலையையும், கழுத்தையும் மூடும் பெண்களின் உடையான பானட் அணிந்து தாடையின் கீழ் அதை முடிச்சு போட்டுக் கட்டிக் கொண்டேன். அது அணிந்த பின் அடுப்பின் மீது உள்ள ஒரு புகைபோக்கிக் கூண்டு போல என் முகம் மாறியது. பகல்பொழுதில் கூட அந்த கெட்டப்பில் என்னை யாரும் அடையாளம் காண முடியாதென்று ஜிம் அடித்துக் கூறினான். பெண்ணின் செயல்பாடுகள் எனக்கு முற்றிலும் பழக்கத்திற்கு வர நாள் முழுதும் பெண்பிள்ளை போலவே பேச, நடக்கப் பழகிக்கொண்டிருந்தேன். வெகு சீக்கிரமே அதை நான் நன்கு செய்ய ஆரம்பித்து விட்டேன். நடப்பது என்னவோ பெண்பிள்ளை போன்று இல்லை என்று கூறிய ஜிம் அடிக்கடி ஆடையைத் தூக்கி பாண்ட் பாக்கெட்டில் கைவிடும் செயலை நான் தவிர்க்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினான். அவனின் அறிவுரைகளைக் கேட்டு என்னை நான் இன்னும் மேம்படுத்திக் கொண்டேன். இருட்டிய பிறகு, தோணியை எடுத்துக் கொண்டு நான் இல்லினோய் கரைக்குச் சென்றேன்.

படகுக்கரைக்கு கீழ்ப்பக்கமாக இருந்த நீரில் ஊரை நோக்கி நான் சென்றேன். நீரின் விசை என்னை தெற்கு முனைக்கு எடுத்துச் சென்றது. தோணியைக் கரையில் கட்டி நிறுத்தி விட்டு, வெளியே வந்து நதிக்கரையை நோக்கி நடந்தேன். வெகு காலம் யாரும் வசிக்காமல் இருந்த ஒரு சிறிய அறையில் மெல்லியதாக ஒரு வெளிச்சம் தென்பட்டது. அங்கே யார் வந்து வசிக்கக்கூடும் என்று வியந்தவாறே, அந்த அறையை நோக்கி நடை போட்டேன். பதுங்கியவாறே அங்கிருந்த சன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தேன். நாற்பது வயது மிக்க பெண்ணொருத்தி உள்ளே பைன் மர மேசைமீது இருந்த மெழுகின் ஒளியில் தையல் வேலை செய்துகொண்டிருந்தாள். அந்த ஊரில் இருந்த அனைத்து மனிதர்களும் எனக்குப் பரிச்சயம் என்றாலும் அவள் ஒரு வேற்று மனுஷியாக இருந்ததால், என்னால் அவளை இனங்காண முடியவில்லை. மாட்டிவிடுவோமோ என்ற கிலியில் இருந்த எனக்கு உண்மையில் இது ஒரு அதிர்ஷ்டம்தான். யாராவது என் குரல் வைத்து என்னைக் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது என்று முட்டாள்தனமாக அங்கே வந்ததற்கு மிகவும் வருந்திக் கொண்டிருந்தேன். ஆனால், இந்தப் பெண்மணி கடந்த சில நாட்களாகத்தான் அந்த ஊரில் வசித்துக்கொண்டிருந்தாலும் கூட எனக்கு வேண்டிய விஷயங்களை எல்லாம் சொல்லக் கூடும். எனவே நான் ஒரு பெண் என்பதை மறந்துவிடக் கூடாது என்று எனக்கு நானே ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டு பின்னர் அந்த வீட்டின் கதவைத் தட்டினேன்.

 

[தொடரும்]


மொழிபெயர்ப்பாளர் பற்றி...

முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R