சில்லையூர் செல்வராசன்கமலினி செல்வராசன்இன்றுள்ளது போல் எம் பெண்கள் தொலைக்காட்சிச் 'சீரியல்'களில் மூழ்கிக் கிடக்காத காலகட்டம். தமிழ் வார இதழ்களில், மாதாந்த நாவல்களில் மூழ்கிக்கிடந்த காலகட்டம். அக்காலகட்டத்தில் ஒவ்வொரு வாரமும் ஒருநாள் அவர்கள் தவறாமல் இலங்கை வானொலியின் முன் கூடுவார்கள். அது 'பல்கலை வேந்தர்' சில்லையூர் செல்வராசனின் 'தணியாத தாகம்' வானொலி நாடகத்தைக் கேட்பதற்காகத்தான். என் உறவுக்கார அக்காமார் பலர் இவ்விதம் கூடிக் கேட்பார்கள். நான் அந்நாடகத்தைத் தொடர்ச்சியாகக் கேட்டு இரசித்தவன் அல்லன். ஆனால் எல்லோரும் இவ்வளவு ஆர்வத்துடன் அந்நாடகத்தைக் கேட்டதால் அந்நாடகம் என் கவனத்தையும் சிறிது ஈர்த்தது.

இலங்கை மக்கள் வங்கியின் ஆதரவுடன் ஒலிபரப்பாகிய அந்நாடகத்தின் இடையில் ஒலிக்கும் சில்லையூர் செல்வராசன் & கமலினி செல்வராசன் தம்பதியினர் இணைந்து பாடும் 'அத்தானே அத்தானே! எந்தன் ஆசை அத்தானே' பாடலை யார் மறப்பார்?

இந்நூலைச் சில்லையூர் செல்வராசன் ஒரு திரைப்படச் சுவடியாகவே எழுதியிருப்பதை நூலின் முதற் பதிப்புக்கான முன்னுரையின் மூலம் அறிய முடிகின்றது. அது 1971இல் வெளியாகியுள்ளது. இரண்டாவது பதிப்பை எழுத்தாளர்கள் புலோலியூர் ஆ.இரத்தினவேலோனும், எஸ்.ரஞ்சகுமாரும் இணைந்து 'மீரா பதிப்பகம்' மூலம் 1999இல் வெளியிட்டுள்ளார்கள். நூலைச் சில்லையூர் செல்வராசன் தனக்கேயுரிய பாணியில் தன் மனைவி கமலினி செல்வராசனுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். கவிஞரான அவர் 'தான்தோன்றிக்கவிஞர்' என்று அறியப்பட்டவர். தான் தோன்றித்தனமாக எழுதாமல் சமர்ப்பணத்தை விடுகதைப் பாணியில் ஒரு கவிதை மூலம் சமர்ப்பித்திருக்கின்றார். அக்கவிதை வருமாறு:

"எழுதுவித்தவளுக்கு!
மன்னி செகராச வல்லி என நாமத்துட்
பின்னி உயிர்க் குள்ளும் பிணைப்பாகி - முன்னின்று
எவள் எனை இக்காதை எழுதுவித் தாளோ
அவளுக் கிந் நூல் அர்ப் பணம்'


மன்னி செகராச வல்லி என்னும் பெயருக்குள் மறைந்துள்ளார் கமலினி செல்வராசன். வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த சமர்ப்பணம். இந்நூலினை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/27/2606/2606.pdf

இந்நூல் பற்றிய தனது முகவுரையில் கமலினி செல்வராசன் அவர்கள் பின்வருமாறு தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார்:

"அவர் என் மேல் வைத்த அன்பை இரை மீட்டிப்பார்க்கிறேன். தணியாத தாகம் திரைப்படச்சுவடி எழுதிய காலத்தில்தான் காதல் என்று நாமிணைந்தோம். அதனால் கமலி என்ற பாத்திரத்தில் என் இயல்பான குணங்களை அவர் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்.  அந்த நூலையும் அவர் எனக்கே அர்ப்பணித்தும் இருக்கிறார். இப்படி ஒரு அன்பான காதலரையே கணவனாகவும் பெற்ற நான் பாக்கியசாலிதான்"

'தணியாத தாகம்' வானொலி நாடகமாக வெளியாகிக்கொண்டிருந்தபோது அதனை ஒரு தடவையாவது முழுமையாகக் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். அத்தணியாத தாகத்தை நூலுருப்பெற்றுள்ள 'தணியாத தாகம்' திரைப்படச் சுவடி தீர்த்து வைத்துள்ளது.

இந்நாடகத்தைப்பற்றி இதில் சோமுவாக நடித்திருக்கும் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் தனது 'என்னைக்கவர்ந்தவர்கள்' வலைப்பதிவில் பதிவு செய்துள்ளார். அதனையும், அவர் அங்கு பிரசுரித்திருந்த 'தணியாத தாகம்' நாடகக் கலைஞர்களை உள்ளடக்கிய புகைப்படத்தையும் நன்றியுடன் இப்பதிவில் உள்வாங்கியுள்ளேன். கே.எஸ்.பாலச்சந்திரனின் 'தணியாத தாகம்' பற்றிய பதிவு வருமாறு:
தணியாத தாகம் திரைக்கதைச்சுவடி
"அவரது தயாரிப்பில் மக்கள் வங்கி விளம்பர நிகழ்ச்சியாக வந்து வெற்றி பெற்ற " கோமாளிகள் கும்மாளம்" ஏறக்குறைய இரண்டாண்டுகள் ஒலிபரப்பாகி முடிவடைந்த நேரம். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். அவரே எழுதிய "தணியாத தாகம் " என்ற திரைப்படச்சுவடி (Film Script) நூல்வடிவில் வெளிவந்திருந்தது. தற்செயலாக அந்த நூலை பம்பலப்பிட்டி கிறீன்லண்ட்ஸ் புத்தகக்கடையில், பார்த்த நான் ஆவலுடன் வாங்கி வாசித்த பிறகு, அதையே அடுத்த தொடர்நாடகமாகச் செய்யலாம் என்று அவருக்குசொன்னேன். ஒரு நகைச்சுவை நாடகத்துக்கு பிறகு, ஒரு சோகமயமான நாடகம், அதுவும் யாழ்ப்பாணத்தமிழில் எடுபடுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. நான் விடவில்லை. செய்து பார்ப்போம் என்று விடாப்பிடியாக நின்றேன். "கோமாளிகள் கும்மாளத்தில்" முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்கள் எவரும் இல்லாமல் புதிய நடிகர் குழாம் ஒன்று தெரிவாகியது.

கே.எஸ்.பாலச்சந்திரன்(சோமு), விஜயாள் பீற்றர்(யோகம்), கமலினி செல்வராஜன்(கமலி), கே.மார்க்கண்டன்(மாமா), செல்வநாயகி தியாகராஜா(மாமி), வாசுதேவன்(குமார்), ஷாமினி ஜெயசிங்கம்(சோமுவின் காதலி), எஸ்.கே. தர்மலிங்கம்(அப்பா), யோகா தில்லைநாதன்(அம்மா), எஸ். ஜேசுரட்னம், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், எஸ்.எழில்வேந்தன் என்ற புதுக்குழு களமிறங்கியது. தொடர் நாடகம் ஆரம்பித்து சில வாரங்களில், எராளமான நேயர்கள் வானொலி நிலையத்திறகும், மக்கள் வங்கி முகவரிக்குமாக பாராட்டுக்கடிதங்கள் எழுதத் தொடங்கினார்கள். சோமுவும், தங்கைகள் யோகம், கமலி இருவரும் தங்களின் உடன்பிறப்புகளாக நினைத்து, அவர்களின் துன்பங்களுக்காக கண்ணீர் விட்டு, சந்தோசங்களில் மகிழ்ச்சி அடைவதாக அந்தக்கடிதங்கள் வந்தன. நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் ஞாயிறு தோறும் நாலரை மணிக்கு வீடுகளில், தோட்டங்களில், வயல் வரப்புகளில், டிரான்ஸிஸ்டர் ரேடியோக்களோடு காத்திருக்கிறோம் என்றார்கள்.

யாழ்ப்பாணம் சென்ற கொண்டிருந்த இ.போ.ச பஸ் ஒன்று ஞாயிறு 4.30க்கு " அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே..கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே" என்று ஆரம்பப்பாடல் ஒலிக்க, பஸ்ஸில் இருந்த பிரயாணிகளின் ஏகோபித்த வேண்டுகோளுக்க இணங்க, திருநெல்வேலி தேனீர் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டு , தணியாத தாகம் கேட்கப்பட்டதாக யாரோ சொல்லக்கேட்டு ஆனந்தமடைந்தோம். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு அபிமான நேயர், "சோமு"வின் குடும்பகஷ்டத்தை பொறுக்கமுடியாமல் 100ரூபாவுக்கான காசோலையை அனுப்பியிருந்தார். தெல்லிப்பளையிலிருந்து மூன்று சகோதரிகள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை நீண்ட கடிதங்களில் எழுதி அனுப்பினார்கள். நாடகத்தை வானொலி ஏற்றவகையில் மாற்றி எழுதி வழங்கிய கே.எம்.வாசகர் , முடிவிலே இந்த சகோதரிகளின் விருப்பபடி சிறு மாற்றம் ஒன்றைச் செய்யும் அளவிற்கு அவர்களது பங்களிப்பு இருந்தது. இத்தொடர்நாடகத்தின் இறுதிக்காட்சி ஒலிப்பதிவு செய்யப்பட்டபொழுது, யோகத்தின் மரணஊர்வலக் காட்சியில் நாங்கள் எல்லோரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தடுமாறினோம். நீண்ட நாட்களாக அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடமுடியாமல் தவித்தோம். இப்படி ஒரு வானொலி நாடகம் நிறைவெய்தியது. "

இங்குள்ள 'தணியாத தாகம்' நாடகக்கலைஞர்கள் புகைப்படத்திலுள்ளவர்கள் விபரங்கள் வருமாறு:

தணியாத தாகம் நாடகக் கலைஞர்கள்

நிற்பவர்கள் (வலமிருந்து இடம்): வி.என்.மதியழகன், ஆர்.எஸ்.சோதிநாதன், கே.எம்.வாசகர், எஸ்.வாசுதேவன், கே.எஸ்.பாலச்சந்திரன், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், கே.மார்க்கண்டன், எம்.கே.ராகுலன், கே.சந்திரசேகரன், எஸ்.ஜேசுரட்னம், எஸ்.மயில்வாகனம், எஸ்.எழில்வேந்தன், எஸ்.சிவசுந்தரம், என்.கே.தர்மலிங்கம்.

இருப்பவர்கள் (வலமிருந்து இடம்): சசி பரம், யோகா தில்லைநாதன், சந்திரப்பிரபா மாதவன், கே.எஸ்.நடராஜா(வானொலி தமிழ் நிகழ்ச்சி தலைவர்), விஜயாள் பீற்றர், ஷாமினி ஜெயசிங்கம், செல்வநாயகி தியாகராஜா, மொறின் கனகராயர்" (கே.எஸ்.பாலச்சந்திரனின் 'என்னைக் கவர்ந்தவர்கள்' வலைப்பதிவிலிருந்து. - http://ksbcreations1.blogspot.com/2007/02/1.html)
நாடகத்தில் 'கமலி'யாக நடித்த கமலினி செல்வராசனை இப்புகைப்படத்தில் காணவில்லை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



இப்பதிவுக்கான முகநூல் எதிர்வினைகள்:


Maheshan Gajendran இதன் பின்னரா வரணியூரானின் நாடகம் ஒலிபரப்பாகியது. ..பெயரை மறந்துவிட்டேன்

Giritharan Navaratnam 'அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' ஒலிபரப்பாகியது நினைவிலிருக்கிறது.

Chelliah Vamathevan Giritharan Navaratnam 'இரைதேடும் பறவைகள்' என்பதாக ஞாபகம்.

Sreeno Sri Sreesu சில்லையின் "தணியாத தாகம்" பெரு மைல்கல்.

Raguvaran Balakrishnan அருமையான பதிவு

Arun Chellappah அந்த நாட்களில் தவறாமல் கேட்டு ரசித்தது;; விஜயாள் பீற்றரின் நெஞ்சை உருக்கி கண்களை கசிய வைத்த வார்த்தைகள் இன்றும் மனக் கண்ணின் முன்னால் >>> ????

Giritharan Navaratnam நூலின் முகவுரையில் கமலினி கூறியிருக்கின்றார் பல வாசகர்கள் கடிதங்கள் எழுதினார்களாம் யோகத்தை (விஜயாள் பீற்றர்) திருமணம் செய்வதாக. நாடகத்தில் அவர் இறந்து விடுகின்றார். கே.எஸ்.பாலச்சந்திரனை நான் அறிந்துகொண்டதும் அந்த நாடகத்தின் மூலம் தான். முழுமையாகக் கேட்காவிட்டாலும் சோமுவாக நடித்த அவரது குரல், விஜயாள் பீற்றர், கமலினி செல்வராசன் ஆகியோரின் குரல்கள் இன்னும் நினைவுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அந்த நாடகத்தின் வெற்றிக்கு அதற்கமைந்த நடிகர்களும் முக்கிய காரணம்.

V.N. Mathialagan Thank you Giritharan. Historical drama

Murugesu Karunagaran நாடக முடிவில் அவர் கூறும் சில்லையூர் செல்வராஜனின் தோழமையுள்ள வணக்கம்...இப்பொழுதும் மனதை விட்டு போகவில்லை. "மக்கள் வங்கியே நம் தோழன் வழி புரிவான் கண்ணே" பாடல் வரிகளும் கூட.....

Sriranjani Vijenthira அந்தச் சகோதரிகள் நாங்கள்தான் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுவதில் சற்றுப் பெருமையாகவும் இருக்கிறது. இது பற்றி வைகறையில் எங்களின் பெயர்களுடன் அருண் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தப் படத்தை பாலா அண்ணா முன்பு அனுப்பியிருந்தார். அது எங்கோ தவறிவிட்டது, இப்போது அதைப் பார்க்கக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

Elayathambi Thayanantha நன்றி கிரிதரன், வானொலியில் நகைச்சுவைக்கு மட்டுமே பயன்பட்ட யாழ்ப்பாண வட்டார வழக்கை மாற்றியமைத்த படைப்பு என்று தணியாத தாகத்தை சொல்லலாம்.

Thinagaran Velayutham Elayathambi Thayanantha இந்த ஒலிப்பேழைகள் இலங்கை வானொலி களஞ்சியத்தில் இன்னும் இருக்குமா?

Giritharan Navaratnam Thinagaran Velayutham நானும் அதையே அறிய ஆவலாகவுள்ளேன்.

Giritharan Navaratnam எழுபதுகள், எண்பதுகள் இலங்கை வானொலித் தமிழ்ச்சேவையின் பொற்காலம்.

Thinagaran Velayutham ஆம். எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறு களின் ஆரம்பம் என்பன நான் அறிந்த காலம். வரலாற்றை வாசித்தாலே இன்பம் மீளும்.

Elayathambi Thayanantha Giritharan Navaratnam ஆவணக் காப்பகத்தில் எந்தப் பதிவும் இல்லை. அது ஒரு தனிக் கதை

Giritharan Navaratnam Elayathambi Thayanantha ஏன்? என்ன நடந்தது? எழுத்தாளர்கள் பலர் வானொலிகளில் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்கள். அவையெல்லாம் அழிந்தவைதாமா?

Thambirajah Elangovan சில்லையூருடன் பழகிய காலங்கள் மறக்கமுடியாதவை.. என் மனதில் இடம்பிடித்த மறக்கமுடியாத இரு பெரும் இலக்கிய ஆளுமைகள் சில்லையூர் - டானியல்..

Elilventhan Sinnathurai படித்தேன்..மக்களுக்கு மறந்துவிட்டதா என்று மனங் கலங்கி நின்றதெல்லாம் மறக்கடிக்கும் பதிவு. நன்றி. அது ஒரு கனாக்காலம்...

Paavai Jeyapaalen நினைவில் உள்ள வானொலி நாடகம்.மிக சிறப்பானதும்கூட.அந்த கலைஞரின் மரணம்....,,வேதனைக்குரியது

Premraj Ollegasegrem Ithu oru Mikach Sirappana Vaanoli Naadakam.Marakkave Mudiyathu????????????

Kandiah Navarednam தினகரன் வாரமலரில் தான்தோன்றிக்கவிராயர் எழுதிய த லைவர்கள் வாழ்க மாதே கவிதைகள் யாரிடமாவது இருப்பின் மறு பிரசுரம் செய்ய தழ்மையுடன் வேண்டுகிறேன்

Giritharan Navaratnam சில்லையூர் செல்வராசனின் கவிதைகளின் முதற் தொகுதி நூலகம் தளத்திலுள்ளது :http://noolaham.net/project/668/66746/66746.pdf

Arunasalam Saththyanantham மிகவும் பயனுள்ள பதிவு. கற்றுக்கொண்டேன். தொடருங்கள்.

Kumaravelu Ganesan கமலினி சில வருடங்களுக்கு முன்பே காலமானார்

Lucas Thiruchelvam நல்ல பதிவு மறக்க முடியாத வானொலி நாடகம், யாழ் மண்ணின் வாசனையை நுகர்ந்த காலம். இன்றும் நினைவில்.

Sellam Ambalam பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசமான பதிவு

Ramalingam Raveendran இலங்கை வானொலி வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ஒரு காவியம் எனது பள்ளி பராயத்தில் வானொலியில் தவறாமல் கேட்ட ஒரு நாடகம் இன்றும் என் மனதில் பதிந்த நாடகம் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என்றென்றும் வாழ்த்துக்கள்

Ariyanayagam Manuelpillai சில்லையூர் செல்வராஜன் பல்கலைவேந்தன் என்றழைக்கப்படுவதில் நூற்றுக்கு நூறு பொருத்தமானவர் என்பதை அவரைஅறிந்தவர்கள் அனைவரும் அறிந்ததே.தமிழின் மூத்தகலையான கூத்துக்கலையிலும் ,அப்போதிருந்த புகழ் பெற்ற அண்ணாவியார்களுக்கு இணையாகத்திகழ்ந்தவர் என்பதைச் சிலர் அறியாதிருக்கலாம். எனது தலைமையில் இயங்கிய " யாழ் நவரசநாடகாலயம் " அரங்கேற்றிய கூத்திசை நாடகங்களில் " ஞானசவுந்தரி, மத்தேஸ் மவுறம்மா " ஆகிய இருநாடகங்களில் அரசபாத்திரமேற்று மக்கள் மனங்களைக் கௌள்ளைகொண்டவர் சில்லை. அந்தக்காலங்களில் பெண் பாத்திரங்களில் ஆண்களே பாடிவந்தார்கள். அதைமாற்றி "மவுறம்மா" பாத்திரத்திற்கு பெண் ஒருவரையே பாடவைக்கவேண்டும் என்று நானும் நண்பர் மன்றச்செயலாளர் கிறிஸ்ரியும் எடுத்தமுயற்சி வீண்போகவில்லை. கொழும்புத்துறையில் வாழ்ந்த அண்ணாவியார் அந்தோனிப்பிள்ளையின் மகள் திரேசம்மா துணிந்து முன்வந்தார். கூத்தரங்கில் முதல்தடவையாக பாடி நடித்த பெண்ணுடன் இணைந்து பாடிய கூத்திசைக்கலைஞர் என்ற பெருமைபெற்றவர் சில்லை. கூத்துக்கலைமீது அவர்கொண்டகாதல் அளப்பரியது. " அத்தானே அத்தானே.... திங்கள் எனவந்தாள் .." ஆகிய அவர் இசைத்த பாடல்கள் தென்மோடி இராகங்களிருந்து அவருக்குள் பிறந்ததே. அதை எங்களிடம் அவர் பாடியே காட்டினார்..

Sivashankar Sivapathasuntharam சிறுவயதில் அந்த நாடகத்தை தொடர்ந்து கேட்ட ஞாபகத்தை மனக் கண்ணில் கொண்டு வந்த பதிவு. நாடகத்தில் வந்த 'அண்ணை ரைட்' என்ற நகைச்சுவை பின்பு வெகு பிரபலமானது

Rajagopal Thambiah என் அபிமானக்கலைஞர்களின்.சாதனைப் படைப்பு தான்தோன்றிக்கவிராயர். வாத்தியென.செல்லமாக. நாமெல்லாம்.அழைக்கும் சில்லையூர்.செல்வராசனின் மூலக்கதைக்கு.சிறப்பான.வானொலி வடிவம்.கொடுத்து யாழ்ப்பாண மொழி வழக்கில்.பிரதி எழுதி.தயாரித்து.வழங்கிய இலங்கை வானொலி நாடகத் தயாரிப்பாளருக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும்.சிறப்பு வாழ்த்துக்கள் மறக்கமுடியாத.பதிவுக்கு நன்றி

Rajagopal Thambiah நாடகத்தை தயாரித்து வழங்கியவர் என் உடன்பிறவா சகோதரன் கே.எம்.வாசகர்

Ruban Mariarajan சில்லையூர் செல்வராசா,கமலினியுடன் உரையாடியதை மறக்கமுடியாது.

முல்லை நாச்சியார்:  இலங்கை வானொலியின் சிறப்பான காலம் 70' களும் 80' களும் எனச் சொல்லலாம். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றிப்போய் நடித்த நாடகம் "தணியாத தாகம்" அதனாலே அது உயிரோவியமாக அமைந்தது. அருமையான பதிவு.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R