அத்தியாயம் பதினெட்டு

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 18கர்னல் க்ராஞ்போர்ட் ஒரு மேன்மை பொருந்திய கனவான், தெரியுமா! உண்மையாகவே அவர் ஒரு கனவான்தான். அவரின் குடும்பமும் அவரைப் போன்றே மேன்மையானது. கேள்விப்பட்டவரை அவர் நல்லகுடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று கூறுகிறார்கள். பந்தயக் குதிரையின் வளர்ப்பு எத்தனை மதிப்பு வாய்ந்ததோ அதே அளவு மதிப்பு நல்ல குடும்பத்தில் வளர்க்கப்பட்ட மனிதனுக்கு உண்டு என்று அந்த விதவை டக்லஸ் எப்போதுமே கூறுவாள். எங்கள் நகரிலேயே அவள் ஒரு மிகச்சிறந்த மேல்குடிவகையை சார்ந்த பெண்மணி என்பதை யாரும் ஒருபோதும் மறுக்கவே மாட்டார்கள். ஏன், மண்ணில் புரளும் கெளுத்திமீன் போன்ற வகைப் பரம்பரையைச் சார்ந்த என் அப்பா கூட அவ்வாறுதான் கூறுவார். கர்னல் க்ராஞ்போர்ட் நல்ல உயரத்துடன், ஒல்லியான தேகத்துடன் மாநிறத்துடன் தோற்றம் அளிப்பார். அவர் முகத்தில் எந்தப் பகுதியிலும் சிவப்புத் திட்டுக்களுக்கான அறிகுறி இருக்கவே இருக்காது. தினமும் காலை முகச்சவரம் செய்து அவரின் முகத்தைச் சுத்தமாக வைத்திருப்பார். மெல்லிய உதடுகள் மற்றும் மூக்குத் துவாரங்கள், உயர்ந்த நாசி, கெட்டியான புருவங்கள் இவற்றுடன் ஏதோ இருட்டுக் குகைக்குள் இருந்து உங்களை நோக்குவது போன்றே காணப்படும், மேல்நெற்றிக்குள் உள்ளடங்கி இடுங்கி இருக்கும் கறுத்த கண்கள் ஆகியவை அமையப் பெற்றவராக அவர் இருப்பார். அவரின் நெற்றி உயர்ந்திருக்கும். அவரின் தலைமுடி கருமை நிறத்துடன் நீண்டு அவரின் தோள்ப்பட்டைகளில் புரண்டு வீழும். அவரின் கைகள் சன்னமாக நீண்டு இருக்கும்.

தினமும் சுத்தமான மேல்சட்டையை அணிந்து அதன் மேல் முழுதும் மூடக் கூடிய லினன் துணியாலான சூட் உங்களின் கண்ணை உறுத்தும் தூய வெள்ளை நிறத்தில் அணிந்து இருப்பார். பித்தளை பொத்தான்களுடன் உள்ள, முன்புறம் குறைந்தும் பின்புறம் வால் போன்று இரண்டாகப் பிரிந்து இருக்கும் நீல நிற வால் கோட் ஞாயிற்றுக் கிழமைகளில் முறைப்படி அணிவார். வெள்ளிப் பூணுடன்கூடிய மஹோகனி மரத்தாலான தடி ஒன்றை கையில் பிடித்துச் செல்வார். ஒரு சிறுதுளி அளவு கூட அற்பத்தனமான விஷயங்களை அவரிடம் காண முடியாது. அவர் என்றுமே உரத்துப் பேசவே மாட்டார். மிகவும் அன்பான மனிதன் என்பதை நீங்கள் உணர முடிவதால் நீங்கள் அவரிடம் கொஞ்சம் நிம்மதியாகப் பழகமுடியும். சில சமயங்களில் அவரின் மெல்லிய புன்னகை பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஆனால் ஒரு சுதந்திரத் தூண் போன்று அவர் நிமிர்ந்து நின்று, அவரின் புருவங்களுக்குக் கீழிருந்து மின்னல் சுடர்விடுவது போன்ற கோபம் தெறித்தோடுகையில், முதலில் ஓடிப் போய் ஒரு மரத்தில் தொத்தி உங்களை முதலில் காத்துக்கொண்டு, பின்னர்தான் என்ன சேதி என்று கேட்க முடியும்.

யாருக்கும் அவர்களின் நல்லொழுக்க நடத்தையை அவர் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ஏனெனில் அவர் முன்னிலையில் அனைவரும் மிகவும் சிறப்பான அப்பழுக்கற்ற நடத்தையுடன் தென்படுவார்கள். அவர் தங்கள் அருகில் இருக்கவேண்டும் என்றும் அனைவரும் விரும்புவதுண்டு. அவர் எப்போதும் வெளிச்சத்துடனே இருப்பார். நான் என்ன குறிப்பிடுகிறேன் என்றால், அவர் இருந்தால் எப்போதுமே நல்ல வானிலை இருப்பது போன்றிருக்கும். புயலடிக்கும் மனப்பாங்கில் அவர் இருந்தால், அவரைச் சுற்றியுள்ள அனைத்துமே இருளடைந்து போகும். ஆனால் அவரின் மனப்பாங்கு சரியாகி விட்டால், திரும்பவும் ஒரு வாரத்திற்குள் அனைத்து விஷயங்களுமே சரியாக மாறிவிடும்.

அவரும் அவரது வயதான மனைவியும் மாடிப்படிகளில் காலை வேளைகளில் இறங்கி வரும்போது, குடும்பம் மொத்தமுமே தங்களின் இருக்கைகளை விட்டு எழுந்து நின்று அவர்களுக்கு காலை வாழ்த்து சொல்வார்கள். அவர்கள் கீழ் இறங்கி வந்து அவர்களின் இருக்கைகளில் அமரும் வரை யாருமே தங்கள் இருக்கைகளில் அமர மாட்டார்கள். பின்னர் புட்டிகள் வைத்திருக்கும் அலமாரியிலிருந்து மூலிகை பானம், விஸ்கி அல்லது பிராந்தி மற்றும் முட்டை ஆகியவை கலந்து செய்யப்பட்ட ஒரு வகையான சத்தான பானத்தை அவர் குடிப்பதற்காக டாம் மற்றும் பாப் இருவரும் கலந்து அவரிடம் கொடுப்பார்கள். டாம் மற்றும் பாப் ஆகிய இருவரும் அவர்களுக்காகவும் அந்த பானத்தைக் கலந்து கொண்டு வரும் வரை கர்னல் தனது கைகளில் அந்தக் கோப்பையை பிடித்துக் கொண்டு காத்திருப்பார். பின்னர் அனைவரும் ஒன்றாக தலை குனிந்து, கூறுவார்கள் "ஐயா மற்றும் அம்மா! இது எங்களின் கடமை" என்று. ஐயாவும், அம்மாவும் கொஞ்சமாக தலை குனிந்து மற்றவர்களுக்கு நன்றி தெரிவித்த பின் அம்மூவரும் அந்தப் பானங்களைப் பருகுவார்கள். பின்னர் ஒரு தேக்கரண்டி நீருடன் சிறிது சர்க்கரை மற்றும் அவர்களின் கோப்பையில் தேங்கி நிற்கும் சிறு அளவு விஸ்கி அல்லது ஆப்பிள் பிராந்தியுடன் கலந்து எனக்கும் பக்குக்கும் தருவார்கள். நாங்களும் அந்த பானத்தை அந்த வயதான தம்பதிக்கு அர்ப்பணித்து நன்றி கூறிவிட்டு பருகுவோம்.

பாப் அந்தக் குடும்பத்தின் மூத்த மகன். அடுத்தவன் டாம். அவர்கள் இருவருமே அகன்ற தோள்பட்டைகளுடன், லேசான பழுப்பு நிறத்துடன், கறுத்து நீண்ட தலைமுடியுடன், கறுப்புக் கண்களுடன் சௌந்தர்யமான வடிவம் கொண்ட உயரமான வாலிபர்கள். மேன்மை பொருந்திய கர்னலைப் போலவே அவர்களும் தலை முதல் கால் வரை வெள்ளை நிற லினன் உடை உடுத்து, எடை குறைவான நாகரீகமான பனாமா தொப்பி அணிந்திருப்பார்கள்.

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 18

அடுத்தது மிஸ். சார்லட். இருபத்தியைந்து வயது உடையஅவள் நல்ல உயரமான அதே சமயம் ஆடம்பரமும் கர்வமும் நிறைந்த ஒரு பெண். சாதாரணமாக இருக்கும்போது அவளைப் போன்று நல்லவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஏதேனும் அவளைக் கோபப்படுத்தி விட்டால், அவளின் அப்பாவைப் போன்றே, அவள் பார்க்கும் பார்வையிலே நீங்கள் அந்த இடத்திலேயே மண்ணோடு மண்ணாக மக்கிப் போவீர்கள். எனினும், அவள் மிகவும் அழகானவளும் கூட.

அவளின் சகோதரி மிஸ். சோபியாவும் மிகவும் அழகானவள். ஆனால் வேறு விதமான அழகு அவளிடம் தென்படும். ஒரு புறாவைப் போன்று மென்மையாகவும், இனிமையாகவும் இருக்கும் அவளுக்கு வயது இருபது மட்டுமே.

வீட்டில் இருந்த ஒவ்வொருவருக்கும், ஏன் பக்குக்கும் கூட அவர்களின் தனிப்பட்ட வேலைக்கு உதவி செய்யவென்று தனித்தனியாக நீக்ரோ பணியாளர்கள் இருந்தனர். யாரோ ஒருவர் என்னுடைய வேலைகளுக்கு உதவியாக இருந்து எனக்குப் பழக்கம் இல்லாததால், எனக்கென்று நியமித்த நீக்ரோ வேலையாளுக்கு எனக்கு உதவி செய்வது சுலபமாக இருந்தது. ஆனால் பக்கின் வேலையாளோ அங்குமிங்குமாக அவனுக்காக ஓடிக் கொண்டே இருக்கவேண்டும்.

இதுதான் அந்தக் குடும்பத்தைப் பற்றிய முழு விவரம். ஆனால் அந்தக் குடும்பத்தில் இன்னும் மூன்று மகன்கள் இருந்து கொல்லப்பட்டு இறந்திருக்கிறார்கள். அத்துடன் எம்மெலினும் நோயால் இறந்து போயிருக்கிறாள்.

வயதான அந்தக் கனவானுக்கு அதிக அளவில் பண்ணைத் தோட்டங்களும், அதில் வேலை செய்ய நூற்றுக்கணக்கான நீக்ரோக்களும் இருந்தனர். சில சமயங்களில் பத்து அல்லது பதினைந்து மைல் தொலைவிலிருந்து குதிரைச் சவாரி செய்து கூட்டம் கூட்டமாய் மக்கள் அந்த வீட்டுக்கு வந்து சேர்வார்கள். அங்கே ஐந்து அல்லது ஆறு நாட்கள் தங்கி வீட்டை சுற்றியும், ஆற்றுக்குள்ளும் குதித்து கும்மாளமிட்டு, கூச்சலிட்டு கொண்டிருப்பார்கள். நடனம் ஆடுவது மற்றும் பகல் பொழுதுகளில் காடுகளுக்கிடையே உலா போவது என்றும் இரவு வேளைகளில் விருந்து கொடுப்பது என்று ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அதில் பெரும்பான்மையோர் அந்தக் குடும்பத்தின் உறவுக்கார்கள்தான். அந்த ஆண்கள் தங்களுடன் துப்பாக்கியையும் கொண்டு வந்திருப்பார்கள். அவர்களும் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

அதே பகுதியில் உயர் குலத்தைச் சேர்ந்த - ஐந்து அல்லது ஆறு குடும்பங்களைக் கொண்ட செப்பேர்ட்சன் என்ற பெயரில் இன்னொரு கூட்டம் வசித்து வந்தது. க்ராஞ்போர்ட் குடும்பத்தைப் போலவே அவர்களும் உயர்குடிப் பிறப்பு, நல்ல வளர்ப்பு, செல்வம் மற்றும் ஆடம்பரத்திற்குப் பெயர் போனவர்கள். அந்த வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவில் நதிக்கு மேற்புறமாக இருந்த நீராவிப்படகுத் துறையை இந்த இரு குடும்பமும் பொதுவாகப் பயன்படுத்தி வந்தனர். எனவே சில சமயங்களில் எங்கள் குடும்பத்தாருடன் நான் அங்கு செல்லும்போது செப்பேர்ட்சன்னின் குடும்பத்தாரும் அவர்களின் உயர்சாதிக் குதிரைகளை ஒட்டிக் கொண்டு வருவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஒரு நாள் பக்கும் நானும் காட்டின் உள்பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் அங்குள்ள பாதையை கடக்கும்போது ஒரு குதிரை வரும் ஒலி கேட்டது. பக் அவசரமாககக் கூறினான்.

"சீக்கிரம் மரத்தின் பின் ஓடு."

அதே போல் மரத்தின் பின்னே மறைந்து கொண்டு இலைகளின் வழியாக என்ன நடக்கிறது என்று பார்த்தோம். வெகு சீக்கிரமே ஒரு அபாரமான தோற்றம் கொண்ட இளம் வாலிபன் குதிரையின் மீது அமர்ந்து ஒரு படைவீரனைப் போல் ஒயிலாக அந்தக் குதிரையை செலுத்திக் கொண்டு அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்தான். குதிரையின் சேணத்தில் அவனுடைய துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் அவனை முன்னமே பார்த்திருக்கிறேன். அவன் பெயர் ஹார்னி செப்பேர்ட்சன். அடுத்த நொடி பக்கின் கைத்துப்பாக்கியின் தோட்டா என் காதின் அருகே உரசிச் சென்றது. ஹார்னியின் தொப்பி அவன் தலையை விட்டுப் பறந்து விழுந்தது. தன் துப்பாக்கியை அவசரமாக எடுத்துக் கொண்டு அவன் நாங்கள் மறைந்திருந்த இடம் நோக்கி வந்தான். ஆனால் அங்கே நாங்கள் நின்றுகொண்டிருக்கவில்லை. மரங்களினூடே புகுந்து ஓடினோம். மரங்கள் அங்கே அடர்ந்து இருக்கவில்லை. எனவே தோட்டாவிலிருந்து தப்பிக்க நான் எனது தோளின் மேற்புறமாக என்ன நடக்கிறது என்று பார்த்தேன். இருமுறை பக்கை நோக்கி ஹார்னி அவன் துப்பாக்கியை குறி வைப்பதைக் கண்டேன். பின்னர் அவன் வந்த வழியே அவன் வீட்டுக்குத் திரும்பி விட்டான். அநேகமாக அவன் தன் தொப்பியை எடுக்கப் போயிருக்கலாம் என்று நான் நேரில் பார்க்க இயலாவிட்டாலும், யூகித்துப் புரிந்து கொண்டேன். வீடு வந்து சேரும்வரை நாங்கள் ஓடுவதை நிறுத்தவில்லை. வீட்டின் தலைவன் அந்த வயதான கனவானின் கண்கள் ஒரு நிமிடம் நாங்கள் கூறியதைக் கேட்டுப் பளிச்சிட்டது. அது அவருக்கு சந்தோசம் கொடுத்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். பிறகு அவர் முகம் சாந்தமடைந்தது. மிகவும் மென்மையாக அவர் அதன்பின் கூறினார்.

"புதரின் பின் நின்று நீ அவனைச் சுட்டது எனக்குப் பிடிக்கவில்லை. ஏன் நீ பாதையின் முன்னே வந்து நிற்கவில்லை, என் மகனே?"

"செப்பேர்ட்சன் குடும்பம் அப்படிச் செய்யாது அப்பா! தங்களுக்குக் கிடைக்கும் எந்த சந்தர்ப்பம் ஆனாலும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்."

பக் இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போது, மிஸ். சார்லட் ஒரு ராணியைப் போல் தன் தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள். அவளின் மூக்கு விடைத்து கண்கள் படபடவென்று கோபத்தில் அடித்துக் கொண்டன. அந்த இரண்டு இளம் வாலிபர்களும் உறுமினார்கள். ஆனால் ஏதும் சொல்லவில்லை. நிறம் வெளுத்துப் போன மிஸ். சோபியா அந்த வாலிபனுக்கு ஏதும் அடிபடவில்லை என்று தெரிந்ததும் பழைய நிறத்துக்கு மாறினாள்.

மக்காச்சோள தானியக் களஞ்சியம் அருகே மரத்தின் கீழ் நானும் பக்கும் தனித்திருக்கும் வேளை கிடைத்தவுடன் நான் கேட்டேன்.

"அவனை நீ கொல்ல விரும்பினாயா, பக்?"

"உன் மேல் சத்தியமாக, ஆமாம்."

"ஏன்? அவன் உனக்கு என்ன செய்தான்?"

"ஹ்ம்ம் . அவன் எனக்கு எதுவும் செய்ததில்லை."

"நல்லது. பிறகு எதற்காக அவனைக் கொல்லத் துணிந்தாய்?"

"காரணம் இல்லை. சும்மா ஒரு குடும்பப் பகையை முன்னிட்டு."

"என்ன குடும்பப் பகை?"

"என்ன? எங்கே வளர்ந்தாய் நீ? குடும்பப் பகை என்றால் என்னவென்று உனக்குத் தெரியாதா?"

"அது மாதிரி எதுவும் நான் என் வாழ்வில் கேள்விப்பட்டதே இல்லை.அதைப் பற்றி எனக்குக் கூறு."

"நல்லது" பக் விளக்கினான். "குடும்பப் பகை என்றால் என்னவென்று கூறுகிறேன். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் சண்டைக்குச் சென்று அவனை கொன்று விடுகிறான். பின் இறந்த மனிதனின் சகோதரன் கொலை செய்த மனிதனைக் கொல்கிறான். பிறகு இருபுறமும் மிச்சம் இருக்கும் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் துரத்திக் கொல்ல முயற்சிக்கிறார்கள். பின்னர் அவர்களது உறவினர்களும் இதில் சேர்ந்து கொள்கிறார்கள். வெகு விரைவில் அனைவரும் கொல்லப்பட்ட பின் பகை ஓய்ந்து விடும். இந்த விஷயம் மெதுவாக பல காலம் நடந்து கொண்டேயிருக்கும்."

"இதுவும் அப்படித்தான் வெகு காலமாக நடந்து கொண்டிருக்கிறதா, பக்?"

"ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னால் இது ஆரம்பித்திருக்கலாம் என்று நான் கூறுவேன். எதற்காகவோ ஏதோ சண்டை நடந்திருக்கிறது. பிறகு அதை சரி செய்ய வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு ஒரு மனிதனுக்குப் பாதகமாகத் தீர்ப்பாகி விட்டது. எனவே அவன் சென்று வழக்கில் வென்ற இன்னொரு மனிதனைச் சுட்டுவிட்டான். அப்படி அவன் செய்துதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. யாராக இருந்தாலும் அதைத்தான் செய்வார்கள்."

"சண்டை எதைப் பற்றியது பக்? ஏதேனும் நிலத் தகராறு காரணமா?"

"அப்படித்தான் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறன். சரியாக எனக்குத் தெரியவில்லை."

:சரி. யார் முதலில் துப்பாக்கியால் சுட்டது? க்ராஞ்போர்ட் குடும்ப மனிதனா? இல்லை செப்பேர்ட்சன் குடும்பத்தாரா?"

"கடவுளே! எனக்கு எப்படித் தெரியும்? அது வெகு காலம் முன்பு நடந்தது."

"வேறு யாருக்குமே தெரிந்திருக்காதா?"

"ஓ! கண்டிப்பாக. அப்பாவுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். அப்புறம் வீட்டில் இருக்கும் வயதான சில மனிதர்களுக்கும் என்றும் நான் நினைக்கிறேன். ஆனால் முதலில் எதற்காக சண்டை ஆரம்பித்தது என்பதை ஒருக்கால் அவர்கள் மறந்திருக்கக் கூடும்."

"அதிகமான மனிதர்கள் கொல்லப்பட்டார்களா, பக்?"

"ஆம். நிறைய இறுதிச் சடங்குகள் நடந்தன. ஆனால் எல்லாச்சமயமும் சுடப்பட்ட மனிதர்கள் அனைவரும் இறப்பதில்லை. என் அப்பாவுக்குக் கூட ஒரு ரவைத் தோட்டா அவர் உடலில் இன்னும் இருக்கிறது. அது பெரிதாக கனப்பதில்லை ஆதலால் அப்பா அது பற்றிப் பொருட்படுத்துவதில்லை. பாப் உடலில் கூட கத்தியால் கிழித்த காயம் இருக்கிறது. டாமும் அதே போல் ஒன்று அல்லது இரண்டு முறை அடிபட்டிருக்கிறான்."

"இந்த வருடம் யாரேனும் கொல்லப் பட்டிருக்கிறார்களா, பக்?"

"ஆம். நாங்கள் ஒருவனைக் கொன்றோம். அவர்கள் பதிலுக்கு ஒருவனைக் கொன்றார்கள். மூன்று மாதங்களுக்கு முன் பதினாலு வயதான என் மாமா மகன் பட் நதியின் அக்கரையில் காடுகளுக்கிடையே குதிரையில் சென்று கொண்டிருந்திருக்கிறான். முட்டாள்தனமாக கையில் எந்த ஆயுதமும் அவன் எடுத்துச் செல்லவில்லை. ஒரு இடத்தில் தனித்திருக்கும் போது அவனின் பின்புறமாக ஒரு குதிரை வரும் சத்தம் கேட்டிருக்கிறது. நரைத்த வெள்ளை முடி காற்றில் அலையாய் பறக்க வயதான பால்டி செப்பேர்ட்சன் வருவதைக் கண்டிருக்கிறான்.

குதிரையை விட்டுக் கீழிறங்கி புதரை நோக்கி ஓடுவதற்கு பதிலாக அவனைத் தாண்டி குதிரையில் வேகமாகச் செல்ல முடிவு செய்திருக்கிறான். அந்தக் கிழவன் அவனைப் பிடிக்க அருகில் வந்து துரத்த அவன் பிடிபடாமல் ஓட என்று அந்த வேட்டை ஐந்து மைல் தூரம் தொடர்ந்திருக்கிறது. கடைசியாக பட் இனி ஓடுவது சரிவராது என்று உணர்ந்திருக்கிறான். அப்படியே நின்று தன் முன்பக்க உடலில் தோட்டாக்கள் துளைக்கட்டும் என்று அவன் எண்ணி அந்தக் கிழவனை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறான், தெரியுமா! அந்தக் கிழவனும் அதேபோல் அவனைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறான். ஆனால் அந்த வெற்றியைக் கொண்டாட அவனுக்குச் சந்தர்ப்பம் இருக்கவில்லை. அடுத்த ஒரு வாரத்துக்குள் எங்கள் ஆட்கள் அந்தக் கிழவனைக் கொன்றுவிட்டனர்.”

"எனக்கு என்னவோ அந்தக் கிழவன் ஒரு கோழை என்று தோன்றுகிறது, பக்!"

"அவன் கோழை என்று நான் கூறமாட்டேன். தூரத்துப் பார்வையிலிருந்து அவ்வாறு கூறிவிடமுடியாது. அந்த செப்பேர்ட்சன் குடும்பத்தில் யாருமே கோழை அல்ல, ஒருத்தன் கூட அல்ல. அதே போல் க்ராஞ்போர்ட் குடும்பத்திலும் யாருமே அப்படிக் கிடையாது. ஏன், அந்தக் கிழவன் சாகும் முன் அரைமணிநேரம் க்ராஞ்போர்ட் ஆட்களிடம் சண்டை போட்டு வெற்றி பெறவும் செய்திருக்கிறான். அவர்கள் அனைவரும் குதிரையின் மேல் இருந்திருக்கிறார்கள். அந்தக் கிழவன் குதிரையில் இருந்து குதித்து அடுக்கி வைத்த சிறு மரக்கட்டைகளின் பின் மறைந்து அவனின் முன்பாக தோட்டாக்களைத் தடுக்க அவனின் குதிரையை நிறுத்தி வைத்திருக்கிறான்.

ஆனால் க்ராஞ்போர்ட் ஆட்கள் குதிரையை விட்டு இறங்காது அந்தக் கிழவனை வட்டமிட்டுச் சுட்டுக் தள்ளியிருக்கிறார்கள். கடைசி வரை அந்தக் கிழவனும் திரும்பச் சுட்டிருக்கிறான். அவர்கள் திரும்ப வீடு வந்து சேரும்போது அந்தக் கிழவனையும், குதிரையையும் சுட்டுத் தள்ளிவிட்டே வந்தார்கள். ஆனால் க்ராஞ்போர்ட் ஆட்களையும் வீட்டுக்கு எடுத்து வரும் நிலைமையில்தான் இருந்தார்கள். ஒருவனைப் பிணமாகக் கொண்டு வந்தார்கள். இன்னொருவனை பலத்த காயத்துடன் எடுத்து வந்தார்கள். அடுத்தநாள் அவனும் இறந்து விட்டான்.

இல்லையப்பா! கோழைகளை நீ பார்க்க நினைத்தால், செப்பேர்ட்சன் குடும்பத்தில் தேடுவது நேரத்தை விரயமாக்கும் . யாரையும் நீ காணவே முடியாது."

அடுத்த ஞாயிற்றுக் கிழமை, மூன்று மைல் தொலைவில் இருந்த தேவாலயத்துக்கு நாங்கள் அனைவரும் சென்றோம். அனைவரும் குதிரையின் முதுகில் சவாரி செய்து கொண்டிருந்தோம். பக் உள்பட அனைத்து ஆண்களும் கையில் துப்பாக்கி வைத்திருந்தனர். தேவாலயத்தில், எளிதாக தங்கள் துப்பாக்கியை எடுக்கும் வகையில் ஒன்று தங்கள் கால் முட்டிகளுக்கு இடையிலோ அல்லது சுவரை ஒட்டியோ அதை வைத்திருந்தார்கள். செப்பேர்ட்சன் குடும்பமும் அப்படியே செய்தார்கள். சகோதரத்துவம் பற்றியும் மற்றும் இன்னும் பல கிறுக்குத்தனமான விஷயங்களைப் பற்றியும் உரைத்த தேவாலயப் பிரசங்கமோ கேட்கக் கொடுமையாக இருந்தது. ஆனால் அனைவரும் அதை அருமையான பிரசங்கம் என்று புகழ்ந்து, வீடு திரும்பும் வழியெல்லாம் அதைப்பற்றியே பேசிக்கொண்டு வந்தார்கள். நம்பிக்கை, நல்ல செயல்கள், கருணை, முன்வினைப் பயன் என்றெல்லாம் ஏதேதோ அவர்கள் அதிகம் பேசிக்கொண்டு வந்தார்கள். எனக்குத்தான் அவையெல்லாம் என்ன என்று ஒன்றுமே புரிபடவில்லை. என்னை பொறுத்தவரை மிக மோசமான ஞாயிறுகளுள் அதுவும் ஒன்று என்று தோன்றியது.

உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குப் பின் அனைவரும் அப்படியே தூக்கக் கலக்கத்தில் சாய்ந்து விட்டார்கள். சிலர் அப்படியே நாற்காலிகள் மீதும் சிலர் தங்கள் அறையிலும் உறங்க ஆரம்பித்து விட்டார்கள். அனைத்து விஷயமும் எனக்கு மந்தமாகத் தோன்றியது. பக் அவனது நாயுடன் புல்தரையில் சூரியனின் சூடு மேலே படும்படி நீட்டிப் படுத்து உறங்கி விட்டான். சிறிய கோழித்தூக்கம் போடலாம் என்று முடிவு செய்து நானும் எங்கள் அறைக்குச் சென்றேன். எங்களது பக்கத்து அறையில் இருக்கும் இனிமையான மிஸ். சோபியா அவள் அறையின் கதவருகே நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அவள் என்னை அறைக்குள் அழைத்து, கதவை மூடினாள். எனக்கு அவளைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டாள் . நான் ஆம் என்றேன். பிறகு யாருக்கும் சொல்லாமல் அவளுக்காக நான் ஒன்று செய்யமுடியுமா என்று கேட்டாள். கண்டிப்பாகச் செய்வேன் என்றேன். அவளது பைபிளை ஞாபக மறதியாக தேவாலயத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகக் கூறினாள். அவள் அமர்ந்திருந்த இருக்கையில் இரண்டு புத்தகங்களுக்கு இடையே அது உள்ளது என்றாள். யாருக்கும் தெரியாது, யாரிடமும் கூறாது வெளியே சென்று அதை எடுத்து வர என்னால் முடியுமா என்று கேட்டாள். நான் செய்யமுடியும் என்று அவளுக்கு உறுதி அளித்தேன். சொல்லியது போலவே யாருக்கும் தெரியாது திருட்டுத்தனமாக வெளியேறி தேவாலயம் செல்லும் பாதை நோக்கி நடந்தேன்.

அங்கங்கே மேய்ந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு பன்றிகளைத் தவிர தேவாலயத்தில் வேறு யாருமே இல்லை. தேவாலயத்தின் கதவுகளுக்குத் தாழ்ப்பாள் இல்லை. கோடைகாலங்களில் பன்றிகள் தேவாலயத்தினுள்ளே குளிர்ந்திருக்கும் மரத் தரைகளில் படுக்க மிகவும் விருப்பமுடையவை. கட்டாயத்தின் பேரிலேயே நிறைய மனிதர்கள் தேவாலயம் வருகிறார்கள் என்பதும் இல்லையெனில் வர மாட்டார்கள் என்றும் நன்றாக கவனித்தீர்களானால் உங்களுக்குத் புரியும். ஆனால் பன்றிகள் அப்படி அல்லாது வித்தியாசமானவை.

ஏதோ விஷயம் உள்ளது. எனக்கு நானே கூறிக் கொண்டேன். ஒரு யுவதி பைபிள் பற்றி இத்தனை அக்கறை கொள்வது சாதாரணமான விஷயம் அல்ல. எனவே அந்த பைபிளை எடுத்தவுடன் கொஞ்சம் ஆட்டிப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு சிறிய காகிதத் துண்டு வெளியே விழுந்தது.

"இரண்டு அடித்து அரைமணிநேரம் கழித்து" என்று பென்சிலால் எழுதி இருந்தது.

பைபிளின் அனைத்துப்பக்கங்களையும் புரட்டிப் பார்த்தேன் வேறு எதுவும் காணப்படவில்லை. அந்த செய்தியின் அர்த்தம் என்னவென்று எனக்குப் புரியாததால், அந்த துண்டுக் காகிதத்தை பழையபடியே உள்ளே வைத்து, பைபிளை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தேன். அங்கே சென்றதும் மிஸ். சோபியா எனக்காக அவளின் அறையின் வாயிலில் ஆவலுடன் காத்திருந்தாள். என்னைக் கண்டதும் என்னை உள்ளே இழுத்துக் கொண்டு கதவைச் சாத்தினாள். பிறகு அந்த பைபிளை வாங்கி அதில் இருந்த துண்டுச் சீட்டைப் பார்த்தாள். அதைப் படிக்கும் வேளை அவள் மிகவும் சந்தோசமாகக் காணப்பட்டாள். என்ன நடக்கிறதென்று நான் உணரும் முன்பே, என்னை அன்புடன் மெதுவாக அழுத்தி உலகிலேயே சிறந்த சிறுவன் நான்தான் என்றாள். யாரிடமும் இதைப் பற்றிப் பேசக்கூடாது என்றும் மீண்டும் நினைவுபடுத்தினாள். அவளின் முகம் ஒரு மிமிட நேரம் குங்குமமாகச் சிவந்தது.

அவளின் அன்பினால் மூச்சுத் திணறிய நான் ஒருவாறு சமாளித்தபடி அந்தத் துண்டுச் சீட்டில் என்ன இருக்கிறது என்று அவளைக் கேட்டேன். நான் அதைப் படித்து விட்டேனா என்று வினவினாள். நான் இல்லை என்று மறுத்தேன். பின்னர் எனக்குப் எழுதப் படிக்கத் தெரியுமா என்று கேட்டாள். நான் சொன்னேன் கொஞ்சம் தப்பும் தவறுமாகத்தான் தெரியும் என்றேன். அந்தச் சீட்டு பைபிளில் எந்த இடத்தில் படித்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வைக்கும் அடையாளச்சீட்டுதான் என்றாள். பிறகு என்னை வெளியே சென்று விளையாடச் சொன்னாள்.

இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே நதியை நோக்கி கீழ் இறங்கினேன். விரைவிலேயே என்னுடைய வேலையாள் நீக்ரோ என்னைப் பின்தொடர்வதை நான் கண்டேன். வீட்டின் பார்வையிலிருந்து தள்ளி கொஞ்சம் தொலைவுக்குச் சென்ற பின் அவன் ஒரு நொடி சுற்றிப் பார்த்தான். பிறகு என்னிடம் ஓடி வந்து கூறினான். "மாஸ்டர் ஜார்ஜ்! என்னோடு நீங்கள் அந்த சதுப்பு நிலம் வரை வர முடியுமானால் உங்களுக்கு நான் ஒரு கூட்டமாய் இருக்கும் நீர்ப் பாம்புகளைக் காட்டுவேன்."

வழக்கத்திற்கு மாறாக இருந்தது என நான் நினைத்தேன். இதேதான் அவன் நேற்றும் கூறினான். யாருமே நீர்ப் பாம்புகளைப் பார்க்கவும், வேட்டையாடவும் விரும்ப மாட்டார்கள் என்று அவனுக்கு தெரிந்திருக்கும்தானே! பின் அவனின் எண்ணம்தான் என்ன என்று எனக்கு ஒன்றும் புரிபடாமல் யோசித்தேன். பிறகு கூறினேன் "சரி. வந்து வழி காட்டு."

ஒரு அரை மைல் தூரத்திற்கு அவனை நான் பின்தொடர்ந்தேன். அங்கிருந்த சதுப்பு நிலச் சேற்றை நோக்கி அவன் சென்றான். கணுக்கால் அளவு தேங்கியிருந்த நீரைக் கால்களால் அளைந்து கொண்டு அங்கிருந்து இன்னொரு அரைமைல் தூரம் ஒரு சிறிய சமவெளிப் பகுதி வரும்வரை சென்றோம். நன்கு காய்ந்து ஈரமற்று இருந்த அந்த இடம் அடர்ந்த மரங்கள், புதர்கள், செடி கொடிகள் ஆகியவற்றால் சூழ்ந்து இருந்தது.

"நேராக அதனுள்ளே இன்னும் சில அடிகள் செல்லுங்கள், மாஸ்டர் ஜார்ஜ்! அங்கேதான் அவைகள் இருக்கின்றன. நான் அவற்றை முன்பே பார்த்துவிட்டேன். இனிமேல் அதைப் பார்க்க எனக்கு எந்த அக்கறையும் இல்லை."

இவ்வாறு கூறிவிட்டு தூர நடக்க ஆரம்பித்து விரைவிலேயே மரங்களிடையே அவன் மறைந்து விட்டான். அவன் சுட்டிக் காட்டிய திசையை நோக்கி நடந்து ஒரு சிறு படுக்கை அறை போன்ற அளவு கொண்ட திறந்த வெளிக்கு நான் வந்து சேர்ந்தேன். மேலிருந்து தொங்கிக் கொண்டிருந்த கொடிகளால் அந்த இடம் முழுதும்

மறைக்கப்பட்டிருந்தது. அதனுள் ஒரு மனிதன் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அட, கடவுளே! அது என்னுடைய பழைய ஜிம் தான்.

நான் அவனை எழுப்பினேன். என்னைத் திரும்பவும் கண்டவுன் ஆச்சர்யத்தால் அவன் துள்ளிக் குதிப்பான் என்று நான் கற்பனை செய்தேன். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. மிகுந்த சந்தோஷத்தால் அவன் அழுக ஆரம்பித்தாலும், ஆச்சரியப் படவில்லை. அந்த இரவு நீராவிப் படகு எங்களை இடித்துத் தள்ளியதும் அவனும் என் பின்னாகவே நீந்திக் கொண்டு வந்ததாகக் கூறினான். அவனுக்காக நான் கூவியதை அவன் கேட்டாலும் திருப்பி பதில் கொடுத்தால் யாரேனும் அவனைக் கண்டு பிடித்து மீண்டும் அவனை அடிமைத்தனத்தில் தள்ளிவிடக்கூடும் என்ற பயத்தால் அவன் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றான்.

பிறகு அவன் கூறினான் "கொஞ்சம் காயம் உடலில் பட்டிருந்ததால் என்னால் வேகமாக நீந்த முடியாமல் போனது. எனவே உனக்கு மிகவும் பின்னால் தங்கி விட்டேன். கூப்பாடு போட்டு உன்னை அழைக்காமலேயே நீ கரை சேர்ந்ததும், கரையில் வந்து உன்னைப் பிடித்து விடலாம் என்று கணக்கிட்டேன். ஆனால் நீ அந்த வீட்டை நெருங்குவதைக் கண்டதும் நான் தயங்கி பின் நின்றேன். நாய்களைப் பார்த்து பயந்ததாலும், அவர்கள் உன்னிடம் என்ன கூறினார்கள் என்று கேட்க முடியாத தூரத்தில் நான் இருந்ததாலும் உன்னை வந்து சேர முடியவில்லை. திரும்ப அந்தச் சூழ்நிலை அமைதியாக மாறியதும் நீ அந்த வீட்டுக்குள் சென்று விட்டாய். நான் காட்டை அடைந்து ஒரு நாள் முழுதும் காத்துக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் அதிகாலை தோட்டத்தில் வேலை செய்வதற்காக சில நீக்ரோக்கள் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார்கள். இந்த இடத்தை எனக்கு காட்டிக் கொடுத்து இங்கே தங்குமாறு அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். சுற்றிலும் இங்கே நீர் அதிகமாக இருப்பதால் நாய்கள் இந்த இடத்தை கண்டுபிடிக்க இயலாது என்றும் தைரியம் சொன்னார்கள். ஒவ்வொரு நாள் இரவும் எனக்கு உணவு கொண்டு வந்து கொடுத்து உன்னுடைய நிலை பற்றியும் அவர்கள் எனக்குத் தகவல் அளித்தார்கள்.”

"ஏன் என்னுடைய நீக்ரோ ஜாக்கிடம் சீக்கிரம் என்னை இங்கே அழைத்துவரும்படி நீ கூறவில்லை?"

"நல்லது. ஏதேனும் சரியான வழி கண்டுபிடிக்கும்வரை, ஹக், உன்னைத் தொந்தரவு செய்வதில் எந்தப் பலனும் இல்லை என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது சரியான வழி கிடைத்து விட்டது. எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போது சில பாத்திரங்கள், வாணலிகள், உணவு எல்லாம் எடுத்து வைத்தேன். அத்துடன் நம்முடைய தோணியையும் இரவு நேரங்களில் பழுது பார்த்துக் கொண்டே நான் ........"

"எந்தத் தோணி, ஜிம்?"

"நம்முடைய பழைய தோணிதான்."

"அது சுக்கு சுக்காய் நொறுங்கிப் போகவில்லை என்றா நீ கூறுகிறாய்?"

"இல்லை. அப்படி அது ஆகவில்லை. உண்மையில் அது கொஞ்சம் மோசமாகத்தான் ஒரு பக்கம் கிழிந்து இருந்தது. அந்தப் பாதிப்பு சரி செய்து விடலாம் என்றாலும், அதனுள் நாம் வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் நாம் இழந்து விட்டோம்.

நீரின் அடிஆழத்தில் குதித்து மூழ்கி பின்னர் நீந்தி நாம் கரை சேர்ந்திருக்காவிட்டால், அந்த இரவு அதனை கும்மிருட்டாக இல்லாதிருந்திருந்தால், நமது மனதில் கடுமையான அச்சம் இல்லாதிருந்திருந்தால் அந்தத் தோணியை அங்கேயே நம்மால் பார்த்திருக்கக் கூடும். ஆனால் அதைப் பார்க்காதிருந்ததும் ஒரு வகையில் நல்லதுதான். இப்போது எல்லாம் சரி செய்யப்பட்டு அதைப் புதிது போல காண முடியும். தொலைந்து போன பழைய பொருட்களுக்குப் பதிலாக புதிதாக நிறைய பொருட்கள் நமக்குச் சேர்ந்துள்ளது."

"ஆனால் அந்தத் தோணி எப்படி உனக்குத் திரும்பக் கிடைத்தது, ஜிம்? நீ சென்று அதைப் பிடித்து வந்தாயா?"

"நான் இங்கே காட்டுக்குள் ஒளிந்திருக்கையில், அதை எப்படி நான் சென்று பிடிக்க இயலும்? இல்லை. நதியின் அந்த வளைவில் ஏதோ ஓன்றால் தடுக்கப்பட்டு கரை ஒதுங்கியிருந்த தோணியை யாரோ நீக்ரோக்கள் பார்த்திருக்கிறார்கள். வில்லோ மரங்களுக்குக்கிடையில் உள்ள கழிமுகத்தில் அதை அவர்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள். அந்தத் தோணிக்குச் சொந்தக்காரர்கள் யாராக இருக்கும் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை விரைவிலேயே நானும் கேட்க நேர்ந்தது. அது நமக்குச் சொந்தமானது என்பதால் அவர்கள் யாருக்கும் அது சொந்தமானது அல்ல என்று கூறி அந்த குழப்பத்தைத் தீர்த்து வைத்தேன். ஒரு வெள்ளைக்கார கனவானின் பொருளைத் திருடிய குற்றத்துக்காக அடி வாங்க விருப்பமா என்று அவர்களைக் கேட்டேன். பின்னர் அவர்கள் அனைவருக்கும் தலைக்கு பத்து சென்ட் நாணயங்கள் கொடுத்தேன். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இது போன்று இன்னும் பல தோணிகள் கரை ஒதுங்கி அவர்களைப் பணக்காரர்களாக மாற்றவேண்டும் என்ற தங்கள் விருப்பதைத் தெரிவித்தார்கள். அவர்கள் அனைவரும் என்னிடம் மிகவும் நல்லவகையில் நடந்து கொண்டார்கள். எனக்குத் தேவையானதை கொடுத்து உதவி செய்ய அந்த நீக்ரோக்களிடம் இரண்டாம் முறை கேட்கவேண்டிய அவசியமே இருக்காது , குழந்தாய்! உன்னுடைய பணியாள் நீக்ரோ நல்லவன் மட்டுமல்ல, மிகுந்த கெட்டிக்காரனும் கூட."

"ஆம். அவன் அப்படித்தான். நீ இங்கே இருக்கிறாய் என்ற ஒரு வார்த்தைக் கூட அவன் என்னிடம் கூறவில்லை. நீர்பாம்புகள் கூட்டம் காண்பிக்கப் போவதாகக் கூறி என்னை இங்கே அழைத்துக் கொண்டு வந்தான். அந்த வகையில், ஏதேனும் கெட்டது நடந்தால் கூட அவனுக்கு எந்த பிரச்சினையும் ஆகாது அல்லவா! அவன் மிகுந்த நேர்மையுடன் நம் இருவரையும் ஒன்றாகக் காணவே இல்லை என்று கூறிவிடுவான்."

அந்த நாளில் அடுத்து நடந்த நிகழ்வுகளைப் பற்றி நான் அதிகம் கூறப் போவதில்லை. அனைத்தையும் மொத்தமாகச் சுருக்கிச் சொல்லுகிறேன். அடுத்த நாள் அதிகாலை கண்விழித்துப் பார்த்த நான் எழ மனமில்லாது உருண்டு திரும்பிப் படுத்து மீண்டும் தூங்க எத்தனிக்கும் போதுதான் அந்த வீடு முழுதும் மயான அமைதி நிலவுவதை கவனித்தேன். யாருமே வீட்டில் நடமாடும் அல்லது பேசிக் கொள்ளும் ஓசை காதில் விழவேயில்லை. மிகவும் அசாதாரணமாக அது தென்பட்டது. பிறகுதான் பக்கும் அங்கே இல்லாது போயிருப்பதைக் கவனித்தேன். என்ன நடக்கிறது என்று வியப்புடன் எண்ணிக் கொண்டே நான் படுக்கையிலிருந்து எழுந்தேன். வீட்டில் யாருமே இல்லாததை, படிகளில் இறங்கிச் செல்லும்போது கண்ணுற்றேன். வளைக்குள் பதுங்கியிருக்கும் எலிகள் போல வீடு முழுதும் நிசப்தம் நிலவுவது புரிந்தது. வீட்டின் வெளிப்புறமும் அவ்வாறே இருந்தது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று வியந்தவாறே கீழே விறகுகள் அடுக்கியுள்ள இடத்தில் இருக்கும் என்னுடைய நீக்ரோ ஜாக்கை நோக்கி ஓடினேன்.

"என்ன நடக்கிறது." நான் கேட்டேன்

"உங்களுக்குத் தெரியாதா, மாஸ்டர் ஜார்ஜ்?" அவன் சொன்னான்

"இல்லை" நான் கூறினேன் "எனக்குத் தெரியாது."

"நல்லது. மிஸ், சோபியா ஓடிப் போய்விட்டாள். ஆம், சார்! நள்ளிரவு சமயமாக அவள் வீட்டிலிருந்து வெளியேறி விட்டாள். அவள் எங்கே சென்றாள் என்று யாருக்குமே தெரியாது. அவள் வீட்டை விட்டு ஓடி அந்த இளைஞன் ஹார்னி செப்பேர்ட்சன்னை திருமணம் செய்து கொள்ளப் போயிருக்கலாம் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஒரு அரைமணி நேரத்திற்கும் முன்னதாகத்தான் இந்த விஷயம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிய வந்தது. அதன் பின் ஒரு நொடி கூட தாமதிக்காமல் செயலில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்று நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டுமா? பயங்கரமான குண்டுமழை பொழியும் சப்தத்தையும், குதிரைகள் குளம்புச் சப்தத்தையும் நீங்கள் இதுவரை வேறு எங்கும் கண்டிருக்க மாட்டீர்கள். வீட்டிலுள்ள பெண்கள் ஆண்களுக்கு உதவுவதற்காக தங்களின் சொந்தங்களைத் திரட்டச் சென்றிருக்கிறார்கள். முதியவரும் அவரது மகன்களும் கையில் துப்பாக்கி எடுத்துக் கொண்டு நதியின் மேல்திசைக்கு சென்று மிஸ். சோபியாவுடன் அந்த இளைஞன் நதியின் அந்தக் கரைக்குத் தப்பிச் செல்லும் முன் அவனைப் பிடித்து கொல்லப் போயிருக்கிறார்கள். நிலைமை இன்னும் மோசமாகக் கூடும் என்று நான் கண்டிப்பாகச் சொல்கிறேன்."

"என்னைக் கூட தூக்கத்திலிருந்து எழுப்பாமல் பக் சென்று விட்டானா?"

"ஆம். அப்படித்தான் அவர் சென்று விட்டார். இந்தத் தகராறில் உங்களையும் சேர்த்துக் கொள்ள அந்தக் குடும்பம் விரும்பவில்லை. துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பிக் கொண்டு மாஸ்டர் பக் ஏதேனும் ஒரு செப்பேர்ட்சனை கொல்லாது விடமாட்டேன் அல்லது கொல்ல முயற்சித்து இறந்து போவேன் என்று சபதம் செய்து சென்றிருக்கிறார். அவர்கள் அதிகம் ஆட்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறன். பக்குக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் யாரேனும் ஒருவனை அவர் கொல்லுவார் என்றே நான் நம்புகிறேன்."

நதிக்குச் செல்லும் பாதையில் என்னால் முடிந்த அளவு வேகமாக ஓடினேன். விரைவிலேயே மரங்களுக்கிடையே இருந்து துப்பாக்கிக் குண்டுகள் முழங்கும் ஒலி எனக்குக் கேட்க ஆரம்பித்தது. நீராவிப் படகுத்துறையின் அருகே உள்ள விறகு மற்றும் மரக்கட்டைகள் விற்கும் கடை எனது பார்வையில் பட ஆரம்பிக்கும் போது, நான் மரங்களின் வரிசையில் புகுந்து மறைவான நல்ல இடம் கிடைக்கும் வரை ஓடினேன். ஒரு பஞ்சுப் பொதி மரத்தின் முன்பாக இருந்த நான்கடி உயரம் கொண்ட ஒரு மரப்பலகையின் பின் ஒளிந்து கொள்ள நான் முதலில் நினைத்தேன். ஆனால் அதற்குப் பதிலாக அந்த மரத்தில் ஏறிக் கொள்வது என்று முடிவு கட்டினேன். அதே போல் மரத்தின் உயரத்திற்கு ஏறிச் சென்று, அங்கே கவட்டி போல் பிரிந்திருந்த கிளைகளுக்கு இடையில் இருந்து என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தேன். உண்மையில் அப்படி நான் செய்தது மிகவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.

அந்த விறகுக்கடையின் முன்பாக உள்ள திறந்தவெளிக்கு நான்கு அல்லது ஐந்து ஆண்கள் குதிரையில் வந்தார்கள். அவர்கள் கத்திக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும், சபதம் செய்துகொண்டும் படகுத்துறையின் இன்னொரு விறகுக்கட்டைகள் குவிக்கப் பட்டிருந்த இடத்திற்குப் பின்னால் மறைந்திருந்த சில இளைஞர்களை கொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. நதியின் கரையில் உள்ள விறகுக் குவியலுக்குப் பின்னால் இருந்த கூட்டம் அவர்களை தலையைக் காட்ட விடாமல் சுட்டுக் கொண்டே இருந்தது. விறகுக் குவியலின் பின்னால் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த காரணத்தால் அந்த இரண்டு இளைஞர்களால் எல்லாத்திசைகளையும் கண்காணிக்க முடிந்தது.

கூடிய விரைவில், குதிரையில் வந்த மனிதர்கள் நின்று கூச்சலிட ஆரம்பித்தார்கள். அவர்கள் அந்த மரக்கடையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். விறகுக் குவியலுக்குப் பின் அமர்ந்திருந்த இளைஞர்களுள் ஒருவன் எழுந்து அந்தக் குவியலின் மேலாக குறி வைத்துச் சுட்டான். குதிரையின் மேல் இருந்த மனிதர்களுள் ஒருவன் காயம் பட்டு மேலிருந்து கீழே விழுந்தான். மற்ற மனிதர்கள் அனைவரும் குதிரையிலிருந்து குதித்து, காயம் பட்ட அந்த மனிதனை மீண்டும் குதிரையில் வைத்து மரக் கடைக்குள் எடுத்துச் செல்ல முயன்றனர்.

அந்தச் சமயத்தில் விறகுக் குவியலின் பின் இருந்த இரண்டு இளைஞர்களும் ஓட ஆரம்பித்தனர். நான் ஒளிந்து கொண்டிருக்கும் மரத்திற்கு அருகில் பாதி தூரம் அவர்கள் ஓடி வந்த நிலையில், அந்த குதிரை மனிதர்கள் இவர்களைக் கவனித்து விட்டனர். மீண்டும் குதிரையிலிருந்து குதித்த அவர்கள் அந்த இருவரையும் துரத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். அந்த இருவரைப் பிடிக்கும் அளவு அவர்கள் நெருங்கி வந்தாலும், அந்த இருவரும் தலைதெறிக்க ஓடிய காரணத்தால் அவர்களால் பிடிக்க இயலவில்லை. அந்த இரு இளைஞர்களும் நேராக நான் இருந்த மரத்தடியே ஓடி வந்து அங்குள்ள விறகுக் குவியலின் பின்பக்கமாக நழுவி உட்புறமாகச் சென்று விட்டார்கள். இந்த இடமும் அவர்களுக்கு நல்ல வலுவான நிலையைக் கொடுத்தது. அந்த இரு இளைஞர்களுள் ஒருவன் பக். இன்னொருவன் பத்தொன்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஒல்லியான இளைஞன்.

அந்த மனிதர்கள் இன்னும் சிறிது நேரம் குதிரையிலேயே சுற்றிப் பார்த்து விட்டு பிறகு சென்று விட்டார்கள். அவர்கள் கண்ணை விட்டு மறைந்ததும். நான் பக்கை அழைத்தேன். மரத்திலிருந்து வரும் என் குரல் மட்டும் கேட்டு என்னை அவன் காண முடியாததால் அதைப் பற்றி புரிந்து கொள்ள இயலாது அவன் மிகவும் வியப்படைந்தான். பிறகு அந்த உயரத்திலிருந்து கண்காணிக்கும்படியும், தூரத்தில் ஏதேனும் ஆட்கள் வருவது போல கண்ணுக்குத் தெரிந்தால் அவனிடம் எச்சரிக்கை செய்யுமாறும் என்னிடம் கூறினான். அவர்கள் ஏதோ ஒரு உபாயம் அங்கே செய்வதாயும் கூடிய விரைவில் திரும்பி விடுவான் என்றும் கூறினான்.

அந்த மரத்தில் நான் ஏறி இருக்கக் கூடாது என்று நொந்து கொண்டேன். ஆனால் அதே சமயம் கீழே இறங்கி வருவதில் உள்ள ஆபத்தும் புரிந்தது. பக் அழுதுகொண்டே சபிக்க ஆரம்பித்தான். அவனும் , அவனுடன் இருந்த இன்னொரு சிறுவன், அதாவது அவனின் உறவினன் ஜோ இருவருமாகச் சேர்ந்து கண்டிப்பாக அந்த எதிரிகளுக்கு அன்று நடந்த விசயத்திற்கு சரியான பாடம் கற்பிக்கப் போகிறோம் என்றான். அவன் அப்பாவும், அவனது இரு சகோதரர்களும் கொல்லப் பட்டுவிட்டனர் என்றும் அவர்களுடன் சேர்ந்து இரண்டு அல்லது மூன்று செப்பேர்ட்சன் ஆட்களும் மடிந்து விட்டனர் என்றும் கூறினான். செப்பேர்ட்சன் ஆட்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நிகழ்த்திவிட்டனர் என்று பக் கூறினான்.

செப்பேர்ட்சன் ஆட்கள் அவர்களை விட மிகவும் பலசாலிகள் என்பதால், அவன் இன்னும் கொஞ்சம் உறவினர்கள் வரும்வரை காத்திருந்திருக்கலாம் என்றும் அழுது கொண்டே கூறினான். ஹார்னிக்கும் மிஸ். சோபியாவுக்கும் என்ன நடந்தது என்று நான் கேட்டேன். அவர்கள் இருவரும் பத்திரமாக நதியைக் கடந்து அக்கரைக்குச் சென்று விட்டார்கள் என்றான். அதைக் கேட்டவுடன் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அன்று மரங்களுக்கிடையே ஹார்னியைக் கொல்லாமல் விட்டுவைத்தது பற்றி தன்னைத்தானே பக் சபித்துக் கொண்டது பார்த்து எனக்கு வேதனையாக இருந்ததுடன், இவ்வாறான எந்த ஒன்றையும் நான் அதுவரைக் கேள்விப்பட்டதில்லை என்று தோன்றியது.

திடீரென அங்கே பாங் பாங் பாங் சத்தம். மூன்று அல்லது நான்கு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. அந்த ஆட்கள் மரங்களின் பின்னே மறைந்து கொண்டு கள்ளத்தனமாக அந்த இரு இளைஞர்களின் பின்புறமாக நடந்து வந்து சுட்டார்கள். இரு இளைஞர்களுமே கடுமையாக காயம் பட்டுவிட்டார்கள். ஆயினும் நதியை நோக்கி அவர்கள் ஓடினார்கள். நதியின் விசையோடு சேர்ந்து கீழ்த்திசையில் அவர்கள் நீந்திச் செல்ல முயல்கையில், அந்த மனிதர்கள் கரையின் முனைக்கு ஓடிச் சென்று நீந்தும் அவர்களை நோக்கி "அவர்களைக் கொல்லுங்கள். அவர்களைக் கொல்லுங்கள்" என்று கத்தியவாறே சுட ஆரம்பித்தார்கள். அந்தக் காட்சி என்னை கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விடுவேன் போன்றதொரு நடுக்கத்தை உண்டாக்கியது.

 

அதன் பின் அங்கே நடந்த அனைத்தையும் சொல்வது என்னை மேலும் செயலற்றவனாக ஆக்கிவிடும். நடந்த அந்த கொடுமைகளைக் காணும்போது அந்த இடத்துக்கு நான் வந்த சேர்ந்த இரவு என் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அங்கு நான் கண்டது என்னால் என்றுமே மறக்க இயலாது. அது பற்றிய கனவுகள் எனக்கு பின்னாளில் அடிக்கடி வருவதுண்டு.

கடும் பீதியில் இருந்த நான் இருட்டு கவிழும்வரை அந்த மரத்திலிருந்து கீழே இறங்கவே இல்லை. சில சமயங்களில் தூரத்தே மரங்களுக்கு இடையில் துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சத்தத்தைக் கேட்டுக்கொண்டு அப்படியே அசைவற்று இருந்தேன். இரண்டு முறை துப்பாக்கி ஏந்திய ஆண்கள் கூட்டம் குதிரையில் அமர்ந்தவாறு அந்த மரக்கடையை கடந்து செல்வதைக் கண்டேன். எனவே சண்டை இன்னமும் நடந்து கொண்டேதான் இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். மனம் தளர்வுற்று சோர்ந்து போய் சோகத்தில் இருந்தேன்.

நானும் இந்த கொடுமைக்கு ஒரு வகையில் காரணம் என்பதை அறிந்த நான் எந்த காரணத்தைக் கொண்டும் இனி அந்த வீட்டின் அருகில் கூடச் செல்லக்கூடாது என்று என் மனதைத் தயார்படுத்திக் கொண்டேன். அந்த துண்டுச் சீட்டில் இருந்த இரண்டரை மணி என்பது மிஸ். சோபியா ஹார்னியை அந்த நேரத்திற்கு ஏதோ ஒரு இடத்தில் சந்தித்து இருவரும் சேர்ந்து ஓடி போகப் போட்ட திட்டம்தான் என்று அப்போதுதான் எனக்குப் புலப்பட்டது. அந்த துண்டுச் சீட்டு பற்றியும் அவளின் வித்தியாசமான செயலைப் பற்றியும் அவளது அப்பாவிடம் நான் அப்போதே சொல்லி இருக்கவேண்டும் என்று கருதினேன். அப்படிச் சொல்லி இருந்தால், அவளை அறையில் வைத்து பூட்டி இருப்பார்கள். அத்துடன் இவ்வாறான கொடுஞ்செயல்களும் நடந்திருக்கவே இருக்காது அல்லவா!

மரத்தை விட்டு கீழே இறங்கியதும் நதிக்கரையினூடே ஊர்ந்தவாறே சில அடிகள் சென்றேன். நீரின் விளிம்பில் கரையில் இரண்டு சடலங்கள் மிதப்பது கண்டேன். அவைகளை கரையில் இழுத்துப் போட்டேன். பிறகு அவைகளின் முகத்தை மூடி வைத்து விட்டு சத்தம் செய்யாமல் அங்கிருந்து வேகமாக நகர்ந்தேன். பக்கின் முகத்தை மூடும் வேளை என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அவன் என்னிடம் மிகுந்த அன்புடனும் நட்புடனும் இருந்த நண்பன் அல்லவா!

அப்போது இரவு கவிழ்ந்து விட்டது. நான் அந்த வீட்டினருகே செல்லவில்லை. மாறாக, அந்த சதுப்புநிலச் சேற்றை நோக்கி மரங்களின் இடையே புகுந்து சென்றேன். அதனுள்ளே இருந்த சிறிய தீவுத் திட்டில் ஜிம் இல்லை. எனவே கழிமுகத்தை நோக்கி அவசரப்பட்டு நான் ஓடினேன். அடர்ந்திருந்த வில்லோ மரங்களை விலக்கிக் கொண்டு தோணியைக் கண்டு பிடித்து, அதில் குதித்து அந்த கொடூரமான இடத்தை விட்டு அப்போதே ஓடிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஓடினேன். ஆனால், ஐயோ! அந்தத் தோணி அங்கிருந்து சென்று விட்டது. நான் கடும் பீதியுற்றேன். எனது மூச்சை சரியாக சுவாசிக்க எனக்கு ஒரு கணம் தேவைப் பட்டது. பின் நிலைமையை உணர்ந்து நான் கூச்சலிட ஆரம்பித்தேன். அந்த கணத்தில் இருபத்தியைந்து அடி தொலைவிலிருந்து ஒரு குரல் பேசியது.

"அட! இது நீதானா குழந்தை? இனி எந்த சப்தமும் போடாதே."

அது ஜிம்மின் குரல். இதற்குமுன் வேறு எந்தக்குரலும் இது போன்ற நன்மையை எனக்குச் செய்ததில்லை.

கரையை ஒட்டி சிறிது ஓடி பின் தோணியில் ஏறினேன். என்னைக் கண்டு மிகவும் குதூகலமடைந்த ஜிம் என்னை இறுகப் பற்றி கட்டியணைத்துக் கொண்டான். பிறகு கூறினான் " கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் குழந்தாய்! நீ இறந்திருப்பாய் என்று மீண்டும் ஒருமுறை நான் உறுதியாக நம்பினேன். நீக்ரோ ஜாக் இங்கே வந்தான். நீ வீட்டுக்குத் திரும்ப வராததால், நீயும் சுடப்பட்டு இறந்து போயிருப்பாய் என்று அவன் நம்புவதாக என்னிடம் கூறினான். எனவே இந்த நிமிடமே தோணியை எடுத்துக் கொண்டு இந்த கழிமுகத்தின் வெளியே சென்று விட எண்ணியிருந்தேன். நான் புறப்பட ஆயத்தமானபோது ஜாக் மறுபடியும் வந்து நீ இறந்து விட்டாய் என்பது உறுதியாகி விட்டது என்றான். ஆனால், இறைவா! நீ உயிருடன் திரும்ப வந்ததில் எனக்கு தாங்க முடியாத ஆனந்தம், குழந்தாய்!"

"ரொம்ப நல்லது. மிகச் சிறப்பு. அப்படியென்றால் என்னை அவர்கள் கண்டுபிடிக்கவே இயலாது. நான் கொல்லப்பட்டு ஆற்றில் மிதந்து சென்று விட்டதாக அவர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு விஷயம் உறுதிப்பட்டதின் விளைவாகத்தான் நான் இறந்து விட்டேன் என்று அவர்கள் முடிவுகட்டியிருக்க வேண்டும். எனவே ..... எனவே நேரத்தை வீணடிக்காதே, ஜிம்! பெரிய நதியை நோக்கி எத்தனை விரைவாகச் செலுத்த முடியுமோ அத்தனை விரைவாகச் செல்."

தோணி அந்த இடத்தைக் கடந்து இரண்டு மைல் தொலைவு சென்று வெளியே மிஸ்ஸிஸிபி நதியின் மத்திக்கு போய்ச் சேரும் வரை என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எங்களின் அடையாளமான லாந்தர் விளக்கை வெளியே ஏற்றி பிறகுதான் மீண்டும் நாங்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாக எங்களால் உணர முடிந்தது. முதல் நாளிலிருந்து ஒரு வாய் உணவு கூட நான் உண்ணவில்லை. எனவே வறுத்த மக்காச்சோள உணவு, மோர், பன்றி இறைச்சி, முட்டைகோஸ் மற்றும் கொஞ்சம் கீரைகள் ஜிம் எனக்கு உண்ணக் கொடுத்தான். உலகத்திலேயே சரியாகச் சமைக்கப்பட்டு சரியான நேரத்தில் பரிமாறப் படும் உணவு வகைகளைப் போல் சிறந்தது வேறு ஏதும் இல்லை. இரவு உணவை நான் உண்டுகொண்டே நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். எங்களது நேரம் நன்கு சந்தோசமாகக் கழிந்தது. பகைமை, சண்டை, கொலை இவற்றிலிருந்து தப்பித்த பெரு மகிழ்ச்சியுடன் நானும், அந்த சதுப்புநிலச் சேற்றிலிருந்து தப்பித்த நிம்மதியில் ஜிம்மும் இருந்தோம். எங்கள் தோணியை விட மிகச் சிறந்த வீடு எதுவுமே கிடையாது என்று இருவருமே ஒத்துக் கொண்டோம். கூரையுள்ள வீடுகளில் சிறையில் அடைந்திருப்பது போன்றதொரு பயம் ஏற்படும். ஆனால் தோணியில் அவ்வாறில்லை. ஒரு தோணியின் மேல் நீங்கள் நிம்மதியாக, சுதந்திரமாக மற்றும் மிகவும் வசதியாகவும் கூட உணரலாம்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R