ஜீவநதி 13ஆவது ஆண்டு மலர்ஜீவநதி ஆசிரியர் :  பரணீதரன்மகாகவி பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமி அவர்கள் தோன்றிய இலங்கையின் வடபுலத்தில் அல்வாய் பிரதேசம், பல கலை, இலக்கியவாதிகளையும் தமிழ் அறிஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவ்வூரிலிருந்து 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் வெளிவரத்தொடங்கிய ஜீவநதி கலை, இலக்கிய மாத இதழ் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது 136 ஆவது இதழை ஆண்டுமலராக வெளிக்கொணர்ந்துள்ளது. இதன் ஆசிரியர் கலாமணி பரணீதரன் ஈழத்து இலக்கிய உலகில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர். யாழ்குடா நாட்டிலிருந்து மறுமலர்ச்சி முதல் மல்லிகை வரையில் பல இதழ்கள் தோன்றி காலப்போக்கில் மறைந்துவிட்ட சூழலில் அங்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜீவநதியாக ஊற்றெடுத்து வந்தது இந்த இதழ். இலங்கையில் நீடித்த போர்க்காலம் முடிவுறாத காலப்பகுதியில் வடக்கிலிருந்து வெளிவரத்தொடங்கிய ஜீவநதி, ஈழத்து சிற்றிதழ் இலக்கிய வரலாற்றில் கூடுதலான சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கும் பெருமையும் பெற்றது. கடந்த பதின்மூன்று ஆண்டுகளுக்குள் இருபது சிறப்பிதழ்களையாவது ஜீவநதி வெளியிட்டிருக்கும் என்பது எமது கணிப்பு. ஜீவநதி அவுஸ்திரேலியா – கனடா சிறப்பிதழ்களையும் முன்னர் வெளியிட்டு இந்த நாடுகளிலிருந்து எழுதிவரும் படைப்பாளிகளையும் ஊக்கிவித்துள்ளது. அத்துடன் சில ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் எழுத்தாளர்கள் கே.எஸ். சிவகுமாரன், க. சட்டநாதன், செங்கைஆழியான், தெணியான், குழந்தை சண்முகலிங்கம் ஆகியோரை கௌரவிக்கும் வகையிலும் சிறப்பிதழ்களையும் வெளியிட்டிருக்கிறது. இவை தவிர, பெண்கள் சிறப்பிதழ் , கவிதைச் சிறப்பிதழ் , உளவியல் சிறப்பிதழ் , இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் , மலையக சிறப்பிதழ் , திருகோணமலை சிறப்பிதழ் , ஈழம்- கவிதை சிறப்பிதழ் , ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், சிறுவர் இலக்கிய சிறப்பிதழ், ஈழம் ஹைக்கூ கவிதைச் சிறப்பிதழ்   முதலானவற்றையும் வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஜீவநதி வெளியீடாக இதுவரையில் 90 இற்கும் மேற்பட்ட நூல்களும் வெளிவந்துள்ளன. ஜீவநதியின் ஆசிரியர் கலாமணி பரணீதரனும் படைப்பிலக்கியவாதி. இவரது தந்தையார் கலாமணியும் மூத்த எழுத்தாளர். கலாமணியின் தந்தையார் தம்பிஐயா வடபுலத்தில் கிராமங்கள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தடவை இசைநாடகங்களை அரங்கேற்றியிருப்பவர்.

பரணீதரனின் மனைவி விஷ்ணுவர்த்தினியும் படைப்பிலக்கியவாதியாவார். இவ்வாறு ஒரு கலை இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து ஜீவநதியை தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் பரணீதரனுடைய சில இலக்கிய நூல்களும் வரவாகியுள்ளன. ஜீவநதி சிற்றிதழ் சங்கத்தின் விருதையும் தமிழ்நாடு கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதையும் பெற்றுள்ளது. இந்தப்பின்னணிகளுடன்தான் எமக்கு கிடைத்துள்ள ஜீவநதி 13 ஆவது ஆண்டுமலரைப்பற்றிய எமது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்கின்றோம்.

இம்மலரின் ஆசிரியத்தலையங்கம், கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜீவநதி வரவாக்கிய இதழ்களில் இடம்பெற்ற எழுத்தாளர்களினதும் அவர்களது படைப்புகளின் எண்ணிக்கையையும் புள்ளிவிபரத்துடன் பதிவுசெய்கிறது.

13 ஆவது ஆண்டு மலரில் வழக்கம்போன்று கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள், குறுங்கதைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புச் சிறுகதை, நூல் அறிமுகம், அஞ்சலிக்குறிப்புகள், மூத்த எழுத்தாளர் தெணியான் எழுதிவரும் திரும்பிப்பார்க்கிறேன் தொடர், கொற்றை பி. கிருஷ்ணானந்தன் எழுதிவரும் குறுங்கதைகளும் இடம்பெற்றிருந்தாலும் இம்மலரும் எமது பார்வையில் ஒரு சிறுகதைச் சிறப்பிதழைப்போன்றதோர் தோற்றத்தையும் வழங்கத்தவறவில்லை.

தாட்சாயினி, க. சட்டநாதன், சிவ. அரூரன், குப்பிழான் ஐ சண்முகன், வி. ஜீவகுமாரன், மல்லிகை சி. குமார், மு. அநாதரட்சகன், கெகிராவ சுலைகா ( மொழிபெயர்ப்பு சிறுகதை) எம். எம். ஜெயசீலன், வதனரேகா அஜந்தகுமார், மலரன்னை, கோமகன், மா. சிவசோதி, மு. தயாளன், கீதா கணேஸ் அகியோரின் பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

மறைந்த மல்லிகை சி. குமார் எழுதியிருக்கும் கரண்ட் கட்டான நேரம் என்ற சிறுகதையை வாசித்தபோது, அவரைப்பற்றிய நினைவுகளும் மனதில் நிழலாடியது. அவர் எழுதிய கடைசிக்கதை இதுதானோ..? தெரியவில்லை. கல்வியின் முக்கியத்துவத்திற்கு முன்னால், கோயில்களில் உண்டியலில் சேரும் பணம் இரண்டாம் பட்சம்தான் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டு எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்.

தாட்சாயிணியின் வெண்சுவர் சிறுகதையை படித்துவிட்டு, அந்தக்கணத்தை கடந்துசெல்வதற்கு வெகுநேரமாகியது. மனதில் இனம்புரியாத பதட்டம் வந்தது. கர்ப்பிணித்தாய்மாரும் அவர்களை பராமரிப்போரும் அவசியம் படிக்கவேண்டிய சிறுகதை. இதனை யாராவது சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவது சமூகப்பயன்பாடு மிக்க செயல். இதனை வெறும் கதையாக பார்க்காமல் விழிப்புணர்வூட்டத்தக்க செய்தியாகவும் கவனத்தில் கொள்ளமுடியும்.

க. சட்டநாதன் , ஆண் – பெண் உறவின் மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தி கதைகள் எழுதுவதில் வல்லவர். அத்தகைய கதைகளை எழுதுவது அவருக்கு வெல்லம் சாப்பிடுவது போன்றது. இரண்டு காதலர்களின் மனவுணர்வுகளையும் அவர்களிடையே நீடித்த சில வருட இடைவெளிபற்றியும் அவரது கனவு மெய்ப்பட வேண்டும் சிறுகதை பேசுகிறது.

சிவ. அரூரனின் மௌனத்தின் சலனம் சிறுகதை நனவிடைதோய்தலாக வெளிப்பட்டுள்ளது. ஒரு பிஸ்கட்டை தன் பிள்ளைக்குக் கொடுத்துவிட்டு “ முகத்தில் காகம் கீறிவிடும் “ எனக்காவல் இருக்கும் தாயைக்கொண்டிருக்கும் எமது சமூகத்திலிருந்து வந்திருக்கும் ஒரு தாயின் மகனுடைய முகத்தில் ஆரம்பவகுப்பில் படிக்கும் மற்றும் ஒரு மாணவன் பென்சிலால் குத்தி காயப்படுத்தி நிரந்தர தழும்பை ஏற்படுத்திவிடுகிறான். அந்தக்குற்றவுணர்வோடு வாழும் அம்மாணவனை, பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் எந்த வெறுப்பும் காண்பிக்காமல் அரவணைத்து உபசரிக்கிறாள். சின்னப்பிள்ளைகளின் சண்டைகளுக்கு பெரியவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கவேண்டாம் என்ற செய்தியை சொல்லாமல் சொல்கிறது இச்சிறுகதை.

இருதயத்தில் தோன்றும் உபாதைகளை அனுபவிக்கும் ஒரு நோயாளித் தந்தை, மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள், தாதிகளிடத்தில் கழிக்கும் பொழுதுகள் பற்றிப்பேசுகிறது குப்பிழான் ஐ. சண்முகனின் சிறுகதை. எமக்கும் மிகவும் நெருக்கமான கதைதான் இது. ஒவ்வொரு இருதய நோயாளியும் எதிர்நோக்கும் அனுபவம்தான். சில சமயம் எம்மை பரிசோதிக்கும் மருத்துவர்கள் எம்மிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறார்களா? என்ற எண்ணத்தையும் வரவழைக்கும். சண்முகன் இக்கதையின் இறுதியில் சொல்லும் செய்தி உணர்வுபூர்வமானதும் வலிமையானதுமாகும். வடக்கின் ஒரு பெரியாஸ்பத்திரியில் இக்கதையின் நோயாளி நாயகனை பரிசோதிக்கும் ஒரு மருத்துவபீட மாணவி, “ வருத்தம் எல்லாம் சுகமாகும் “ என்று சொல்கிறாள். அவளது பேச்சு உச்சரிப்பிலிருந்து, அவளை அவர் விசாரிக்கிறார். அவள் தனது சொந்த ஊர் இருப்பது தென்னிலங்கையில் ஒரு சிற்றூர் என்கிறாள். “ எல்லாம் சுகமாகும் “ - நோய்க்கு இனம், மதம், மொழி, என்று ஏதும் இல்லை என்பதை பூடகமாக இச்சிறுகதை சொல்கிறது.

டென்மார்க் ஜீவகுமாரனின் அவளும் இவளும் சிறுகதையும் காதலின் மெல்லுணர்வுகளையே சித்திரிக்கிறது. விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் நடித்த 96 திரைப்படம் ஏற்படுத்திய அருட்டுணர்வின் வெளிப்பாடாக இச்சிறுகதையின் நாயகனின் ஏக்கம் சித்திரிக்கப்படுகிறது. காதலித்தவள் யாரோ ! கரம்பற்றியவள் யாரோ ! மற்றும் ஒருத்தியை கரம்பற்றியபின்னரும் முன்னாள் காதலி நினைவில் வந்துகொண்டேயிருப்பாள். காலம் கடந்து சென்றாலும் நினைவுகளை கடந்து செல்லமுடியாதுதானே..? கரம்பிடித்த மனைவியிடத்தில் கோபம் வரும்போதுதான் பெரும்பாலான கணவன்மாருக்கு முதல் காதலியின் அருமை பெருமை தெரியவருகிறது. அதனைத் தப்பித்தவறி மனைவியிடம் சொல்லி மாட்டிக்கொள்ளாதீர்கள். அப்படிச்சொன்னால், “ நானும் அவளைப்போல் உங்கள் காதலை புறக்கணித்து விட்டுப்போக மாட்டேன் “ என்று ஜீவகுமாரன் சித்திரிக்கும் மனைவி பாத்திரத்தின் சாட்டை அடி கிடைத்துவிடும். கவனம்! மெல்லிய புன்னகையுடன் இச்சிறுகதையை கடந்து செல்லலாம்!

வடபுலத்திலிருந்து தென்னிலங்கைக்கு ஆசிரிய நியமனம் பெற்று வரும் ஒருவருக்கும் அவருடன் பணியாற்றும் மற்றும் ஒரு இளம் ஆசிரியனுக்கும் இடையே தோன்றும் மாறுபட்ட இரசனை பற்றிய கதையை மு. அநாதரட்சகன் எழுதியிருக்கிறார். சிட்டுக்குருவி, மைனா, வால்குருவி, தேன் சிட்டு, வானம்பாடி, மஞ்சள் குருவி, காட்டுப்புறா, கிளி, குயில்… இப்படி ஏகப்பட்ட பறவையினங்களின் ஓசையில் லயித்துவிடும் வடபுலத்து ஆசிரியனின் இரசனையிலிருந்து முற்றாக வேறுபட்ட இளம் ஆசிரியன் மனோகரனுக்கு அந்த பறவையினங்களின் கீதம் வெறுப்பேற்படுத்துகிறது. ஆனால், அவனது ஊரின் சிங்களப்பெயர் கீ கியன கந்த. அதாவது கீதம் இசைக்கும் மலை. ( ஜீவநதியில் ஹீ ஹியன கந்த - என அச்சாகியிருப்பது தவறு ! )

அயோனா என்ற குதிரை வண்டிக்காரனின் புலம்பல் வாசகரை நெகிழச்செய்யலாம். துயர் பகிர்வு என்று நாளும்பொழுதும் பேசும் காலத்தில் நாம் வாழ்கின்றோம். சோவியத்தின் படைப்பாளுமை அன்டன் செக்கோவ் (1860-1904) காலத்திலும் ஒருவர் துயரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியாத துர்ப்பாக்கியத்தை இச்சிறுகதை கனிவோடு சித்திரிக்கிறது. தனது புதல்வனின் மரணத்தைப்பற்றி கேட்பதற்கும் நாதியற்ற ஏழை முதியவன், கடவுள் ஏன் தன்னை வாழவிட்டு விட்டு, தனது மகனை பறித்தார்..? என்று புலம்புகிறான். ஆனால், அந்தப்புலம்பலையும் அவனது வண்டியில் சவாரி வரும் பயணிகள் கேட்பதற்கு தயாரில்லை. இறுதியில் தனது துயரத்தை தனது குதிரையிடத்தில் சொல்லும்போது, “ உனக்கு ஒரு குட்டி இருந்து, அது இறந்துபோனால், உனக்கு எப்படி இருக்கும்..? துயரமாய் இருக்காதா..? எனக்கேட்டு, சமநிலைக்கு வர முயற்சிக்கின்றான். தொடர்ந்து தரமான மேலைத்தேய சிறுகதைகளை தமிழுக்கு வரவாக்கிவரும் கெக்கிராவ சுலைகா, இந்த ருஷ்யச் சிறுகதையையும் உருக்கமாக மொழிபெயர்த்துள்ளார்.

மலையகத்தில் தொன்றுதொட்டு நிலவிவரும் சிறுதெய்வ வழிபாட்டில் மாடாசாமி கடவுளும் முக்கியமானவர். இரண்டு தலைமுறையின் கதையை நம்பிக்கையின் அடிப்படையில் சொக்கஞ்சேர் என்ற தலைப்பில் எம்.எம். ஜெயசீலன் எழுதியுள்ளார். அம்மக்களின் குலதெய்வத்தின் அருவாள் கத்தியும் இக்கதையில் ஒரு பாத்திரம்தான். சிவன் – பிள்ளையார் – முருகன் – அம்மன் என்று ஒருவகையான வழிபாட்டு முறையும் , மாடாசாமியையே குலதெய்வமாக வழிபடும் முறையும் இன்றளவும் நீடித்துவருகிறது. அவற்றுக்கு பூசைசெய்பவர்களிடையே நிலவும் நிழல் யுத்தம் துல்லியமாக சொல்லப்படுகிறது. கூர்ந்து வாசித்தால் அந்த துல்லியம் புரியும்.

ஒன்றரைப்பக்கத்தில் மூன்று தலைமுறையின் கதையை எழுதிவிடமுடியுமா..? ஆம் முடியும்! என்று நிரூபித்துள்ளார் 'என்ர ஆச்சி' சிறுகதையை எழுதியிருக்கும் வதனரேகா அஜந்தகுமார். குழப்படி செய்து தாய் அடிக்கவந்தால், பாதுகாப்பும் அரவணைப்பும் தேடி ஆச்சியைச்சுற்றிவரும் குழந்தையும் ஒருநாள் தயாகிறாள். அவளது குழந்தையும் காய்ச்சல் வந்து குணமாகி தண்ணீரில் விளையாடுகிறது. அவள் அதனை அடிக்கத் தடி எடுத்ததும், அக்குழந்தை அவளது தாயிடம் ( ஆச்சியிடம் ) ஓடுகிறது. குழந்தையினதும் தாய் மற்றும் ஆச்சியினதும் உணர்வுகளை அழகாகவும் நேர்த்தியாகவும் இக்கதை சித்திரித்துள்ளது.

மலரன்னை எழுதியிருக்கும் உள்ளகத்தின் உசும்பல் சிறுகதையும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. ஆசிரியப்பணிக்குச்செல்லும் ஒரு சராசரி தமிழ்க்குடும்பத்தலைவி ஒருத்தியின் அன்றாடக்காலைப்பொழுதில், வீட்டில் அவள் எதிர்கொள்ளும் அவதியை பேசத்தொடங்கிய இச்சிறுகதை, தமிழரசன் என்ற மாணவனதும் அவனது வலதுகுறைந்த தாயினதும் வலிநிரம்பிய கதையாக வளர்கிறது. அந்த மாணவன் மூன்று வயது குழந்தைப்பருவத்தின்போது , போர்க்காலத்தில் சரணடைந்து காணாமல் போன ஒரு இளம் தந்தையின் பிள்ளை. கோயிலில் தரப்பட்ட விபூதி, சந்தனம், குங்குமத்தை தனது விதவைத்தாயின் நெற்றியில் பூசியதனால், தாயின் கோபத்துக்கும் அடிக்கும் ஆளாகிவிடுகிறான். தனது பிள்ளையின் கல்வி முன்னேற்றம் பற்றி அந்தத் தாய் அறியவந்தவிடத்தில்தான், அவளும் போரில் ஒரு கரத்தை இழந்திருப்பது ஆசிரியைக்குத் தெரிகிறது. அந்த மாணவனுக்கோ, வானத்தில் உலங்கு வானூர்த்தி பறக்கும் சத்தம் கேட்டாலே பயத்தில் சிறுநீர் கழிந்துவிடும். போரில் பாதிக்கப்பட்ட இளம் விதவைத்தாய்மாரின் அவல வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது, அனைத்து சுகமும் இருந்தும் ஒரு காலைப்பொழுதின் அவதியா பெரிய சுமை. “ உனக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு “ என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது.

முதல் தலைமுறை செய்த பாவபுண்ணியங்கள் அடுத்த தலைமுறையை பாதிக்கும் என்பதும் முன்னோர் வாக்கு. அதனையே முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றும் சொல்வார்கள். கோமகன் எழுதியிருக்கும் தெய்வானை சிறுகதை, ஒரு அழகிய நாற்சார் வீட்டை சுற்றிச்சுழலுகிறது. ஐந்தாவது தலைமுறைக்கதை. வசந்தமாளிகை திரைப்படம் வந்த காலத்தில் மலாயன் பென்ஷனியர் காசிநாதர், தனது மனைவியை புதிதாக வாங்கிய ஒஸ்ரின் சோமசெட் காரில் அழைத்துச்சென்று உல்லாசவாழ்க்கை வாழ்பவர். குழந்தைப்பாக்கியம் இல்லாவிட்டாலும், செல்வத்திற்கு குறைவில்லாதவர்கள். மனைவி தெய்வானை நினைவுமறதி நோய்க்கும் கணவன் காசிநாதர் புற்றுநோய்க்கும் ஆளாகின்றனர். அதற்கெல்லாம், முன்னைய தலைமுறை செய்த பாவங்கள்தானோ..? என்று ஊழ்வினையை நொந்துகொள்ளும் கதை. எல்லாம் இருந்தாலும், பாவங்கள் துரத்தும் என்று சொல்ல வருகிறார் கோமகன். புகலிடத்திலிருந்தவாறு, பிறந்த மண்ணின் கோலத்தை சித்திரிக்கிறார்.

ஆயுதம் ஏந்திய இயக்கத்திற்குப்போன தனது அண்ணன் திரும்பிவருவான் என்று காத்திருக்கும் ஒரு தம்பியின் மனவோட்டங்களுடன் நகரும் படையல் சிறுகதையை மா. சிவசோதி எழுதியிருக்கிறார். இதில் இடம்பெறும் தொடைப்புளு, தவப்படையல் முதலான சொற்களின் அர்த்தம் தெரியவில்லை. “ வடக்கிற்கு அப்பாலும் அதற்கும் அப்பாலும் வாழும் வாசகர்களுக்காக அடிக்குறிப்பு தாங்கோ “ எனக்கேட்டால் எழுத்தாளர் சிவசோதி கோபித்துக்கொள்ளலாகாது!

தன்னைச்சுற்றி நேரும் அவலங்களைக்கண்டு மனதிற்குள் குமுறியவாறு வாழும் ஒரு லண்டன் வாசியின் சித்திரத்தை ஒரு சாமானியனின் அழுகை யில் வரைந்துள்ளார் மு.தயாளன். இக்கதையின் நாயகனின் தர்மாவேசம் அழுகையாகவே வெளிப்படுகிறது. பிறர் ஈன நிலை கண்டு துள்ளும் துவலும் மனம் அவனுடையது. எது எதற்கோ அர்த்தமற்று அவன் அழுவதாக அவனைத்திட்டும், அவனைத்துரத்தியடிக்கும், புறக்கணிக்கும் சமூகத்தில் அழுதழுதே நடைபிணமாகி மயங்கி வீதியில் விழுந்து அம்பூலன்ஸால் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, வீடு திரும்புகையில், மனைவியின் பார்வை: “ எங்கள் குடும்பத்துக்காக அழமாட்டீர்களா..? “ என இறைஞ்சுகிறது. வித்தியாசமான கதை.

புரிதலற்ற கணவன், பரிவுள்ள குழந்தை இவற்றுக்கு மத்தியில் வேலைக்கும் சென்று வீட்டுப்பணிச்சுமையிலும் மூழ்கி கணவனின் அன்புக்கு ஏங்கி பரிதவிக்கும் இளம்தாயின் கதை வழி நீளம்… எழுதியவர் கீதா கணேஷ். அவள் கடக்கவிருக்கும் தூரம் நீளம்தான். அவளுடன் முரண்பட்டு கோபித்துக்கொண்டு அவன் சென்றிருப்பதும் அவனது தாய் வீடுதான். அவளும் ஒரு பெண்தானே! கீழைத்தேய நாடுகளில் மட்டுமல்ல, வேறு எங்கெல்லாமோ வாழும் எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் நேரும் கசப்பான அனுபவம்தான். “ உம்மா, நீங்க வாங்கித்தந்த தொப்பியை வெயில் சுடும்போது நா போட்டுக்கொள்ள உங்களைத்தான் நினைச்சுக்குவேன். – அதுபோல வாப்பாவும், நீங்க வாங்கிக்கொடுத்த மழைக்கோட்டை போடும்போது எங்களை நினைச்சுக்கலாம்தானே! “ என்கிறது குழந்தை. இச்சிறுகதையை படித்தபோது கனடா கறுப்பி சுமதியின் குறும்படம் மனுஷி மற்றும் அண்மையில் பார்த்த பெங்காளித்திரைப்படம் Bharja (The Wife) நினைவுக்கு வந்தன.

ஜீவநதியில், யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகத்துறை தி. செல்வமனோகரனின் நேர்காணலும் வெளியாகியிருக்கிறது. விரிவுரையாளராக பணியாற்றும் அவரிடம் கேள்விகளை முன்வைத்திருக்கும் இ.சு. முரளிதரனுக்கு அவர் தரும் பதில்கள் பல்வேறு கலை, இலக்கிய விடயங்களை அலசுகின்றன. இறுதிக்கேள்விக்கு அவர் தரும் பதில் கவனிப்புக்குரியது.

“ ஈழத்து இலக்கியச்சூழல் எப்போதும் போல குழுநிலை வாதமாகவே இருக்கின்றது “ என்ற பேருண்மையை சொல்கிறார். அங்கு மட்டுமல்ல புகலிடத்திலும் இதுதான் நிலை! எம்மவர் எங்கு சென்றாலும் தமது தனித்துவம் பேணுவார்கள். அத்துடன் நேற்றுப்பெய்த மழைக்கு முளைத்தவையெல்லாம், கண்ணுக்குத் தெரியும் விருட்சங்களையெல்லாம் எள்ளி நகையாடும் அவலத்தையும் செல்வமனோகரன் அழுத்தமாகச்சொல்லிச்செல்கிறார். செல்வமனோகரன் யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையில் விரிவுரையாளராக இருக்கவேண்டியவர். முன்னைய பொற்காலத்தை அவரால் அங்கே உருவாக்கமுடியும்!

1950 இற்கு முன் எழுந்த ஈழத்து சிறுகதைகள் பற்றிய விரிவான ஆய்வு, மற்றும் இ.சு. முரளிதரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தாட்சாயணி, குப்பிழான் ஐ. சண்முகன், ஏ.ஏ.ஹெச்.கே.கோரி ஆகியோரின் சிறுகதைகளைப்பற்றிய வாசிப்பு அனுபவங்களும் பதிவாகியிருப்பதனால், ஜீவநதியின் ஆசிரியருக்கிருக்கும் சிறுகதைத்துறை குறித்த அக்கறையும் மலரில் இடம்பெறவேண்டிய சிறுகதைகளை தேர்வுசெய்வதில் காண்பிக்கும் சிரத்தையும் புலப்படுகிறது. அதனால்தான் சிறந்த சிறுகதைகள் இடம்பெற்றுள்ள மலராக இதனை ஏனைய வாசகர்களுக்கு பரிந்துரைக்க விரும்பினோம். மேலும் பல சிறந்த ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. விரிவஞ்சி அவை பற்றிய அறிமுகத்தை தவிர்க்கின்றோம். வீடுகளில் முடங்கியிருக்கும் இக்காலப்பகுதியில் தேர்ந்த வாசகர்களுக்கு ஜீவநதி 13 ஆவது ஆண்டு மலர் பயன்தரும்.

கலாமணி பரணீதரனுக்கு எமது வாழ்த்துக்கள். ஜீவநதி மலரைப்பெற்றுக்கொள்ள: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R